ஏன் பெண்ணென்று பிறந்தேன் 6

images (2)-056f8222

பெண் 6

 

எப்போதும் போல வெகு சாதாரண நாளாக தான் விடிந்து இருந்தது அந்த நாளும் அவனுக்கு. 

 

நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டம் என நேற்று இரவு முழுவதும், மது, ஆட்டம், பாட்டம் என ஆடி களித்து விட்டு, அன்று காலை தாமதமாக எழுந்து இருந்தான் கௌதம் கைலாஷ். 

 

தயாராகி கீழே வந்தவன் தினப்படி வழக்கமாய் தந்தைக்கு, “குட்மார்னிங் டேட்” என்றவன் அம்மாவிடம், “லவ் யூ மாம்” என்று அவரை அன்பாய் அணைத்துவிட்டு காலை உணவு உண்ண அமர்ந்தான்.

 

“இன்னைக்கு நீ லேட், கண்ணெல்லாம் எவ்வளோ சிவந்து இருக்கு பாரு” திலோத்தமா மகனை கடிந்துக்கொள்ள,

 

“நோ வொர்ரீஸ் மாம், நைட் பார்ட்டில டிரிங்க்ஸ் கொஞ்சம் ஓவர் ஆகிடுச்சு. நௌ ஐ அம் ஆல் ரைட்” என்றவனை அவர் இன்னுமே முறைத்து பார்த்தார். அம்மாவின் அந்த முறைப்பும் அவனுக்கு பழக்கம் தான். 

 

எனவே, “சாரி மாம், இனி கண்ட்ரோலா இருந்துக்கிறேன்” என்று தோள் குலுக்கி கண்சிமிட்டினான். தங்கள் ஒற்றை செல்ல மகனை சாப்பிடும் நேரத்தில் அதற்கு மேல் கண்டிக்க முடியாமல் அமைதியானார் திலோத்தமா. 

 

மனோகர், “நேரமாச்சு நான் கிளம்புறேன் கௌதம், நீ வேளச்சேரி ஷோ ரூம் வந்திடு ஓகே” என்றதும்,

 

“ஓகே டேட்” என்றான் கௌதம் பூரி குர்மாவை வாய்க்குள் அடக்கியபடி.

 

மனைவியிடம் தலையசைத்துவிட்டு மனோகர் கிளம்பி விட, சாப்பிட்டு முடித்து சற்று நேரத்தில் கௌதமும் விடைபெற்றான். 

 

“இன்னைக்கு டல்லா இருக்கடா, நீ டிரைவ் பண்ண வேணாம், டிரைவரை கூட்டிக்கோ” என்ற திலோத்தமாவின் அறிவுறுத்தலை காற்றில் விட்டு, தானே காரை செலுத்திக்கொண்டு பறந்தான் கௌதம்.

 

அவன் கைகளில் சர்ரென்று வேகம் பிடித்து சாலையில் வழுக்கிக்கொண்டு பறந்தது அவன் கார்.

 

வேகம் எப்போதுமே அவனுக்கு பெரும்போதை ஏற்றும் விசயம். அன்றும் அதே வேகத்தில் தான் பறந்து கொண்டிருந்தான். எஃப்எம்மில் துடிப்பான பாடல் ஒலிக்க, அதற்கேற்ற அசைவுகளுடன் காரை செலுத்திக் கொண்டிருந்தான்.

 

அதேநேரம், அவன் மொபைல் ஒலிக்க, புளூடூத் ஆன் செய்துவிட்டு, “ஹலோ…” என்றவன் கைகளில் கார் தடுமாறி கிரீச்சிட்டு நின்றது.

 

ஒரு நிமிடம் அவன் உணர்வுகள் உறைந்து மீண்டன. அந்த ஏசி காருக்குள் அவன் உடல் மொத்தமாய் வியர்த்து கொட்டியது.

 

புளூடூத் மறுமுனையில், “ஹலோ ஹலோ கௌதம், ஆர் யூ தேர்?” கேட்ட குரலை தாண்டி, தன் கார் மோதி வீரிட்டு வீழ்ந்த பெண்ணின் அலறல்… அவனை உச்சக்கட்ட பயத்திற்கு கொண்டு சென்றிருந்தது. சட்டென காரிலிருந்து இறங்கி வெளியே வந்தான்.

 

அவன் காருக்கடியில், இரத்த வெள்ளத்தில் ஒரு பெண் துடித்து மயங்கி கிடந்தாள். 

 

அவளை போல அவள் கொண்டு வந்திருந்த கல்யாண பத்திரிக்கைகளும் சிதறிக் கிடந்தன. அதில் அவன் பார்வை பட்டு மீள, மணப்பெண் கங்கா என்று கொட்டை எழுத்தில் தெரிந்தது. மணமகன் பெயர் அவளின் இரத்தம் பட்டு மறைந்திருந்தது.

 

ஒரு பெண் மீது தான் கார் ஏற்றி விட்டோம் என்பதை உணரவே அவன் உடலெல்லாம் நடுங்கியது. என்ன செய்வது என்ற செயலற்ற நிலையில் விழுந்து கிடந்த அந்த பெண்ணையே வெறித்து நின்றிருந்தான் கௌதம்.

 

அதற்குள் அங்கே ஆட்கள் கூடிவிட்டனர். யாரோ சிலர் அவனை ஓங்கி அடித்தனர். யாரோ சிலர் அவனை அடிக்கவிடாமல் தடுத்தனர். 

 

யாரோ, “யப்பா, பொண்ணுக்கு உசுரு இருக்கு, ஆம்புலன்ஸ்க்கு போன் போடு” என்கவும், அவன் அதிர்ச்சியில் இருந்து மீண்டு உணர்வு பெற்று அவர்களை பார்த்தான்.

 

கலங்கி இருந்த தன் கண்களை அழுத்த துடைத்துகொண்டு, “நான்… நான்…” தொண்டை அடைக்க ஆழ மூச்செடுத்தவன், “என் கார்லயே ஹாஸ்பிடல் தூக்கிட்டு போகலாம், ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க” என்றான்.

 

அவனை பார்த்தவர்கள் அந்த பெண்ணை இழுத்து தூக்கி காரின் பின் இருக்கையில் கிடத்தினர்.

 

காரை ஸ்டார்ட் செய்ய முடியாமல் நடுங்கிய தன் கைகளை அழுத்தி பிடித்து, காரை செலுத்தினான் கௌதம்.

 

‘எப்படியாவது அந்த பெண் உயிர் பிழைத்துவிட வேண்டும்’ என்ற வேண்டுதலை மறுபடி மறுபடி தனக்குள் ஜபித்தபடி அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தான்.

 

கங்கா உயிர் பிழைத்து விட்டாள் தான், ஆனால் இனி அவளால் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டிருந்தனர்.

 

அவன் மறக்க முயலும் அந்த நாளின் கொடுமையான நினைவுகள், இன்று கங்காவை பார்த்ததும் மீண்டும் அவனை அலைகழிக்க ஆரம்பித்தது.

 

தலையை அழுத்த கோதிவிட்டு கொண்டவனின், வெளுத்த முகத்தில் இறுக்கம் அதிகமாகவே பரவி இருக்க, இமைகளை அழுத்த மூடி திறந்தவன், ‘அன்னைக்கே அப்பவே செத்து தொலைஞ்சு போன்னு‌ அவளை சாக விட்டிருந்தா… இன்னைக்கு நான் கொஞ்சமாவது நிம்மதியா இருந்திருப்பேனோ என்னவோ’ என்று லட்சத்து நூறாவது முறையாக தனக்குள் எண்ணி நொந்து கொண்டான் கௌதம் கைலாஷ்.

 

***

 

அன்று,

 

தன் பள்ளி தோழிக்கு திருமண அழைப்பிதழ் வைக்க அம்மாவிடம் சொல்லிவிட்டு சாலையில் இறங்கி நடந்தாள் கங்கா. பாவாடை, தாவணி தான் அணிந்திருந்தாள். திருமண நாள் நெருங்கி வருவதால் புது பெண்ணுக்குரிய முகப்பொலிவு கூடி இயல்பை விட அன்று அழகாய் தெரிந்தாள். வெறிச்சோடி இருந்த அந்த சாலையைக் கூட இருபுறமும் பார்த்து கவனமாக தான் கடக்க முயன்றாள்… அவளால் கடக்க முடியவில்லை.

 

சாலையின் பள்ளத்தில் தவறி கால்வைத்து அவள் சற்றே தடுமாற, எங்கோ இருந்து காற்றை கிழித்துக்கொண்டு வந்த கார் அவளை மோதி வீழ்த்தியிருந்தது.

 

என்னவென்று அவள் சுதாரிக்கும் முன்னே, உயிர்வலியில் துடிதுடித்து அலறியவள், சில நிமிட போராட்டத்திற்குள் ஆழ்ந்த இருளுக்குள் அமிழ்த்தப்பட்டு நினைவிழந்தாள்.

 

அவள் இமைகள் அடைத்துக்கொள்ளும் முன், அதிர்ந்து பயந்த அவன் முகம் தான் அவள் பார்வையில் இறுதியாக பதிந்தது.

 

அவள் நினைவுகள் மொத்தமும் கடந்த அந்த நாளிலேயே சிக்கிச்சிதறி கொண்டிருக்க, ‘அந்த விபத்தில் தன் காலோடு சேர்த்து உயிரும் போயிருந்தால்… அந்த ஒரே வலியோடு நிம்மதியாக போயிருந்திருப்பேனே ஆண்டவா…!’ கோடி முறை தாண்டி மீண்டும் ஒருமுறை எண்ணி நொந்து கொண்டாள் கங்கா.

 

அடர்ந்த இருளில் ஊரும் நாடும் உறங்கிப்போய் இருக்க, விழிப்பு தட்டி புரண்டு படுத்த மகா, தன்னருகில் கங்கா இல்லாததை பார்த்து எழுந்து அமர்ந்தாள்.

 

விடி விளக்கின் ஒளியில் அறை வெறிச்சோடி கிடந்தது. மகாவின் தூக்கம் கலைந்து போக, போர்வையை விலக்கிவிட்டு எழுந்து வீட்டின் பின்புறம் வந்தாள்.

 

அங்கே துணி துவைக்கும் கிணற்றடி கல்லின்மேல் கங்கா உட்கார்ந்திருந்தாள். அவளின் இருளை வெறித்த தோற்றம் மகாவின் மனதை பிசைவதாய்.

 

தன்னை சமாளித்துக் குரலில் அழுத்தம் கொடுத்து, “கங்கா…” என்றழைக்க,

 

தங்கையின் அழைப்பில் விதிர்த்து திரும்பியவள், ஈரம் தோய்ந்திருந்த கண்களை அவசரமாய் துடைத்துவிட்டு எழுந்து நின்றாள்.

 

கலங்கி துவண்டு தெரிந்த கங்காவின் முகம் மகாவையும் கவலையுறச் செய்தது.

 

“புத்தனுக்கு போதி மரத்தடியில ஞானம் கிடைச்சமாதிரி, உனக்கு இந்த கிணத்தடில தான் ஞானம் கிடைக்கும்னு எவனாவது முட்டாள் ஜோசியன் சொன்னானா?” மகா காட்டமாக கேட்க, தங்கையின் கடுப்பில் கங்காவின் முகத்தில் மென்மை பரவியது.

 

“நான் எப்ப ஜோசியம் எல்லாம் பார்த்து இருக்கேன், பாதி தூக்கத்துல வந்து எதையாவது உளறாத, போய் மீதி தூக்கத்தை கன்டினியூ பண்ணு போ” கங்கா அவளை விரட்ட, மகாவின் துறுதுறு முகத்தில் அப்பட்டமாய் எரிச்சல் பரவியது. 

 

“நீயும் வா, வந்து படுத்து தூங்கு” என்று கங்காவின் கை பற்றி தங்கள் அறைக்கு இழுத்து வந்தாள்.

 

“ஏய் மகா, எனக்கு தூக்கம் வரலமா” கங்கா கலங்கிய குரலில் சொல்ல, மகா அவளை முறைத்து பார்த்தாள்.

 

இது கங்காவின் வழக்கம்தான். அவள் தன் எதிர்காலத்தின் மீது முழுவதுமாய் நம்பிக்கை இழந்து இங்கு அழைத்து வரப்பட்டபோது கங்காவிற்கு ஆதரவாக இருந்தவர் சதாசிவம் தாத்தா தான்.

 

வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த தன் பேத்தியை அழகுக்கலை பயிற்சி என வெளியே அனுப்பி வைத்தார். ஆனால், கணவனால் கைவிடப்பட்டவள் என்ற மற்றவர்களின் பேச்சுக்கு ஆளாகி துவண்டு ஒடுங்கி போவாள் கங்கா. 

 

கலங்கி நிற்கும் போது தன் பேத்தியை ஆறுதலாய் தலை வருடி தைரியமூட்டும் சொற்களை சொல்லி அவளை தாங்கி வழி நடத்தியவரும் அவர்தான்.

 

கங்கா தன் காலில் நிற்க முயன்ற சில மாதங்களிலேயே சதாசிவம் தாத்தா இவ்வுலக வாழ்வை விட்டு பிரிந்திட, கங்கா முழுவதுமே உடைந்து போனாள். 

 

அவரின் வீட்டையும் நிலங்களையும் கங்காவின் பெயருக்கு மாற்றி எழுதி வைத்திருந்ததை அறிந்ததும் அவள் குடும்பத்தினர் கங்காவின் மீது வெறுப்பு கொள்ள காரணமாக அமைந்துவிட்டது. அதிலும் அவளது தந்தை மாடசாமி பெற்ற மகளை எதிரியாகவே எண்ணி வெறுக்க தொடங்கி இருந்தார்.

 

தாத்தாவின் ஆறுதலும் இன்றி, குடும்பத்தின் அரவணைப்பும் இன்றி, தனித்து விடப்பட்ட அவளுக்கு துன்பம் என்று சொல்லி அழவும் யாரும் வாய்த்திருக்கவில்லை. அவளும் வெளியாட்கள் யாரிடமும் தோழமை பாராட்டியதில்லை. சூடுபட்ட பூனையாக மறுபடி யாரையும் நம்பி ஏமாற அவள் தயாராக இல்லை.

 

தன் செல்ல தங்கையிடம் தன் மனபாரங்களை கொட்டி அவளை வருந்த செய்யவும் பெரியவளுக்கு மனம் வருவதில்லை. பாரம் தாங்காத மௌன இரவுகளில், கண்ணீர் கரைகளில் தன் கவலைகளை தொலைக்க முயல்வாள்.

 

இதோ இப்போது இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவே கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து, ஏன் அவன் தன் கண்ணில் பட வேண்டும் என்ற எண்ணம் ஓட குலைந்து போயிருந்தாள் அவள்.

 

‘இவ மறுபடியும் ஆரம்பிச்சுட்டாளா? கடவுளே! அக்காவுக்கு கொஞ்சமே கொஞ்சமாவது தைரியத்தையும் துணிச்சலையும் கொடுத்திருக்கக் கூடாதா! இப்படி கோழையா படைச்சு வச்சிருக்கியே… உன்ன என்ன செஞ்சா தகும்!” அந்த கடவுளையும் சேர்த்து மனதுக்குள் வறுத்தெடுத்தபடியே மகா அக்காவின் அருகில் அமர்ந்து ஆதரவாக அவள் கை பற்றி கொண்டாள்.

 

“உன்கிட்ட பிடிக்காததே இதுதான் க்கா, எல்லாத்தையும் மனசுக்குள்ளயே அழுத்திக்கற, உனக்காக நான் இருக்கேன், என்கிட்ட ஷேர் பண்ணு, உன்னவிட நான் வயசுல சின்னவ தான் ஆனா உன்னவிட எனக்கு விவரமும் தைரியமும் ஜாஸ்தி”  

 

மகாவிடம் என்னவென்று சொல்வது என்று புரியாமல் கங்கா தயங்கினாள்.

 

“அப்பா உன்ன ஏதாவது சொன்னாரா? அதான் தூங்காம கவலப்பட்டுட்டு இருக்கியா?” தந்தையின் குணம் தெரிந்து மகா கேட்க, அதற்கும் பெரியவள் அமைதியாக இருந்தாள்.

 

“நீ சரிப்பட்டு வரமாட்ட, நான் போய் என்னனு கேக்குறேன்” என்று எழுந்தவளை பிடித்து நிறுத்தியவள், “என்னை யாரும் எதுவும் சொல்லல மகா, அப்படி சொன்னாலும் நான் அதையெல்லாம் கண்டுக்கறது இல்ல” 

 

“அப்ப வேறென்னனு சொன்னாதான தெரியும்”

 

“நான்… கௌதம பார்த்தேன் மகா…” கங்கா தயங்கி மொழிய,

 

கண்களை சுருக்கி, “எந்த கௌதம்? யாரைப் பத்தி சொல்ற நீ?” என்ற மகாவின் கேள்வியில், அவள் தங்கையை வெறுமையாய் பார்த்தாள்.

 

“மகா?”

 

“என்னக்கா அந்த கேடுகெட்டவன் பேரை இன்னுமா நீ ஞாபகத்தில் வச்சிருக்க?” மஹாவின் வார்த்தைகள் வேகம் பிடித்தன.

 

“நான் கூட அவனை என்னமோ நினைச்சேன். உனக்கு இப்படி ஒரு நம்பிக்கை துரோகத்தை செய்வான்னு நான் நினைக்கவே இல்ல.

 

அவனைப் பார்த்தும் சும்மா விட்டு வந்து இங்க அழுதுட்டு இருக்கியே, அந்த ராஸ்கல் மட்டும் என் கண்ணில் பட்டு இருந்தால் செருப்பை கழட்டி அவன் முகத்தில் அடிச்சு இருப்பேன்” மகா படபடவென்று ஆத்திரமாய் பேசிக்கொண்டே போனாள்.

 

“வேணா மஹா, ஏதோ ஆபத்துல மனிதாபிமானத்தோடு உதவி செஞ்சார். என்ன நானும் தான் அவரை நம்பிட்டேன். துஷ்டனை கண்டால் தூர விலகுன்னு சொல்லுவாங்க. பணக்காரர்களை பார்த்தாலும் என்னை மாதிரி வசதி இல்லாதவங்க தூர விலகி நிக்கணும்ற பாடத்தை அவர் ரொம்ப கடுமையா எனக்கு சொல்லி புரிய வச்சிட்டார்” கங்கா ஆழ்ந்து சொல்லவும்,

 

“என்னவோ போக்கா, மறுபடி அந்த கௌதம் ஏதாவது உன்ன தொந்தரவு செஞ்சா என்கிட்ட சொல்லு அவனை நான் பார்த்துக்கிறேன்” மகா ஆத்திரமாய் சொன்னதைக் கேட்டு கங்காவின் இதழில் மெல்லிய புன்னகை விரிந்தது. 

 

“நீ எனக்கு தங்கச்சி இல்லடி அக்கா” என்று அவள் கன்னம் பிடித்து ஆட்டியவள், “இப்ப அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லா கணக்கும் முன்னமே தீர்ந்து போச்சு. இந்த நொண்டி பொம்பள கூட, பழைய பகையை வளர்த்துக்கிற அளவுக்கு அவங்களோட தகுதி தாழ்ந்து போகல… இத்தனை வருஷம் கழிச்சி அவரை பார்த்ததும் பழசெல்லாம் ஞாபகம் வந்துடுச்சு. மனசு தாங்கலை அதான்… உன் தூக்கத்தையும் கெடுத்துட்டேன், சாரி மஹா” என்றாள்.

 

“ம்ம் இந்த ஒரு முறை மன்னிச்சு விடறேன். மறுபடியும் நீ அழுறத பார்த்தேன். அவ்ளோ தான் சொல்லிட்டேன்” என்று மகா மிரட்டலாக சொல்ல, கங்கா சிரித்து விட்டாள்.

 

“குட் இனிமே எப்பவுமே என் அக்கா இப்படித்தான் சிரிச்ச முகமா இருக்கணும்” என்றாள்.

 

விளக்கணைத்து படுத்துக்கொண்ட மகாலட்சுமியின் மனம் கொதி நிலையில் இருந்தது. ‘கௌதமுக்கு இந்த ஊர்ல என்ன வேலை? இங்க ஏன் வந்தான்னு தெரியலையே! மவனே நீ என் கண்ணுல மாட்டுடா, உனக்கு அன்னிக்கு இருக்கு பூஜை” என்று கறுவிக் கொண்டாள்.

 

‘கடவுளே, வேணாம். தவறி ஒருமுறை அவரை சந்திச்சதுல என் வாழ்க்கைய மொத்தமா ஒன்னுமில்லாம அழிச்சிட்டு போயிட்டாரு, இப்ப இழக்கறதுக்கு என்கிட்ட எதுவும் மிச்சமில்லை. அவர் என் கண்ணுல படாம இருந்தா அதுவே நான் செஞ்ச புண்ணியம்!’ என்று கங்கா மனதில் வேண்டிக்கொண்டாள்.

 

முன்பு அவனால் அவள்பட்ட அவமானமும் வலியும் இப்போதும் அவளுக்குள் பயத்தை ஏற்படுத்துவதாக, அவளின் நெஞ்சை நடுங்கச் செய்தது.

 

***

 

பெண் வருவாள்…