ஏன் பெண்ணென்று பிறந்தேன் 7

IMG-20211007-WA0009-567d88be

ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 7

 

இதற்கிடையில், ‘சரித்திரன்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த சந்தோஷத்தில் படக்குழுவினர் அனைவருக்கும் கௌதம் சார்பில் விஜயன் பார்ட்டி வைத்திருக்க, அந்த கொண்டாட்டத்தில் கௌதம் கைலாஷ் மட்டும் கலந்து கொள்ளவில்லை. ஏனோ மறுத்துவிட்டான்.

 

கௌதம் தன் அலுவலக அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனால் முழுமையாக எந்த வேலையிலும் கவனம் செலுத்த இயலவில்லை. கங்காவின் அந்த நிமிர்ந்த தோற்றமே மறுபடி மறுபடி தோன்றி அவனை உசுப்பேற்றியது.

 

அவனுக்கும் தங்கள் படம் வெற்றி பாதையை நோக்கி அடியெடுத்து வைத்ததில் சந்தோசம் தான், அதை தாண்டி படம் வெற்றியடையும் என்ற நிம்மதியும் கூட. முன்பு தயங்கிய விநியோகஸ்தர்கள் இப்போது படத்தை வாங்க முன் வந்ததில், அவன் மனநிலையும் சற்று தெளிந்து தான் இருந்தது.

 

ஆனாலும், கங்காவை பார்க்க நேர்ந்தது ஏனோ பானக துரும்பாய் அவனை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

 

தன்னை பார்த்ததும் அவளின் அசையாத பார்வைக்கு என்ன அர்த்தம்? அவன் பார்க்கவென்றே அவள் தோரணையில் தோன்றிய மிடுக்கு… நிமிர்வு… அதை நினைக்க நினைக்க அவனுக்குள் சீற்றம் ஏறியது.

 

அவளின் பயந்த சுபாவத்திற்கு எங்கோ வீட்டின் மூலையில் முடங்கி கிடப்பாள் என்று தான் முன்பு எண்ணி இருந்தான். அல்லது எவனோ ஒரு கூன் குருடனுக்கு மனைவியாகி இருப்பாள் என்று ஏளனமாக யோசித்தும் இருக்கிறான். ஆனால் இப்படி நிமிர்ந்த நடையாய் தன் முன்னால் வந்து நிற்பாள் என்று அவன் கனவில் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.

 

தான் ஒரு நாள் இல்லை ஒரு நாள் கங்காவை பார்க்க வேண்டி வந்தால், அவளை குத்தி கிழிக்கும் ஏளன பார்வையோடு கடக்க வேண்டும் எனவும், அதில் அவள் நொந்து அவன் முன்னால் கதறி துடிக்க வேண்டுமென்றும் எண்ணி இருக்கிறான். ஆனால், நிஜத்தில் அவ்வாறு நடவாததில் அவனின் ஈகோ அதிகமாக அடிபட்டு இருந்தது.

 

தன்னை பார்த்ததும் அவள் அதிர்ந்து இருந்தாலோ அல்லது மிரண்டு இருந்தாலும் கூட, அவன் மன கொதிப்பு ஓரளவு ஆறியிருக்குமோ என்னவோ? குறைந்தது அவள் கலங்கி, அழுது, கதறி இருந்தால் கூட அவன் சமாதானமாகி இருப்பானோ என்னவோ?

 

அவனது அரக்க மனம் அவளை இப்போதே கதற விட துடிக்க, அவனின் ஆழ் மனமோ அவளை கண்டுகொள்ளாமல் விலகி போக சொன்னது. அவனுக்கான அடுத்தடுத்த வேலைகளைப் பார்த்து முன்னேற சொன்னது.

 

“திமிரெடுத்தவ… அவளை நினச்சாலே பாவம் சுத்திக்கும் ச்சே” என்று கசப்பாக சொல்லிக்கொண்டவன் தலையில் வின்வின்னென்று வலி தெறித்தது.

 

அதேநேரம் தீப்தி அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தாள். 

 

“ஹலோ கௌதம்…” மறுமுனையில் அவளின் உற்சாக குரலுக்கு மாறாக,

 

இவன், “எஸ் டா” என்று பதில் தந்தான்.

 

“என்ன மேன் வாய்ஸ் டல்லடிக்குது?” அவள் வழக்கமான துள்ளல் குரலில் கேட்க,

 

“ப்ச் மைண்ட் டிஸ்டர்ப்பா இருக்குடா அதான்…” அவன் சலிப்பாக பதில் சொன்னான்.

 

“ஓ எனி பிராப்ளம்? என்கிட்ட ஷேர் பண்ணிக்கலாம் இல்ல” தீப்தி அக்கறையாக கேட்க,

 

“எனக்கும் ஆசை தான்டா உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு. பட் அதுக்கு நீ… இன்னும் கொஞ்சம் வளரணுமே” அவன் நிறுத்திச் சொன்னதும், 

 

“போ கௌதம்… உனக்கு என்மேல லவ்வே இல்ல” அவள் முறுக்கிக் கொண்டாள்.

 

“ஆமா லவ் இல்ல தான்” இப்போது அவளுடன் வார்த்தையாடும் மனநிலையில் அவன் இருக்கவில்லை. சட்டென சொல்லி விட்டான்.

 

“…” மறுமுனை மௌனமானது.

 

கௌதம் தலையை அழுத்த கோதிவிட்டு கொண்டான். தீப்தியை வருத்தப்பட வைப்பதில் அவனுக்கு உடன்பாடில்லை.

 

எனவே, “ஹேய், ரியலி சாரி பேபி. அதான் நான் மூட்அவுட்னு சொன்னேயில்ல” அவளுக்கு சமாதானம் சொல்ல,

 

“ஓகே, என்னை ஃபீல் பண்ண வச்சதுக்கு இப்ப நீ என்கூட ஷாப்பிங் வர” என்று தீப்தி சொல்லவும், இவனுக்கு மேலும் கோபமாகியது. 

 

“திஸ் இஸ் டூ மச் தீப்தி, எப்பவும் போல உன்னோட ஃப்ரெண்ட்ஸோட ஷாப்பிங் போக வேண்டியதுதானே, வோர்க் டைம்ல என்னை ஏன் இப்படி டிஸ்டர்ப் பண்ற?” கௌதம் சலித்தபடி அவளை கடிந்தான்.

 

“போ… உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு கூப்பிட்டா, நீ என்னை ரொம்ப திட்டுற” அவள் வளர்ந்த குழந்தையாக சிணுங்க, இவனுக்கு அய்யோ என்றானது.  

 

“சரி இப்பவே சொல்லு, என்ன விசயம்?”

 

“அது… மகேஷ் இல்ல… நேத்து எனக்கு ப்ரொபோஸ் பண்ணிட்டான்!” என்றாள் தயங்கியபடி.

 

கௌதமிடம் எந்த மாற்றமும் இல்லை. “இது சாதாரண மேட்டர், நீ கமிட்டட்னு சொல்லிடு” என்றான்.

 

“சொன்னேன், அந்த லூசு நம்ப மாட்டேன்கிறான். நான் பொய் சொல்றேன்னு சொல்றான்…” அவள் இழுக்க,

 

“இப்ப அவனை நம்ப வைக்க நான் என்ன செய்யணும்?” கௌதமின் கேள்வி நேராக வந்தது.

 

“ஒரு சின்ன கெட் டு கெதர்… என் எல்லா ஃப்ரண்ஸோடவும் ப்ளீஸ்…” தீப்தி கெஞ்சலாக கேட்க, கௌதம் நெற்றியை தேய்த்துவிட்டு கண்களை அழுத்தமாக மூடி திறந்தான்.

 

“ஓகே, எப்ப? எங்க வரணும்னு மெஸேஜ் பண்ணு.”

 

“இன்னைக்கே… ஓட்டல் மெர்லி… ஈவ்னிங் செவனோ கிளாக்… உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன்” என்று அவள் வேக வேகமாக சொல்ல, 

 

“எல்லாத்தையும் பிளான் பண்ணிட்டு தான் என்கிட்ட கேட்டியா” அவன் பற்களை நறநறத்தான்.

 

“அது…” என்று இழுத்தவள், “பிளீஸ் ப்ளீஸ் என் செல்ல கௌதம் இல்ல, கரெக்டா வந்துடுவியாம்” தீப்தி குழைவாக கேட்க, மறுக்க முடியாமல் அவனும் சரி என்றான்.

 

***

 

வார நாட்கள் என்பதால் வேதா பெண்கள் அழகு நிலையம் ஓரிரு வாடிக்கையாளர்களுடன் பரபரப்பின்றி மந்தமாக சென்று கொண்டிருந்தது. அதை விட கங்கா மந்தமாக காணப்பட்டாள். 

 

கௌதமை சந்திக்க நேர்ந்ததில் இருந்து பழைய நினைவுகளின் தாக்கம் அவளை அதிகமாகவே வாட்டியது. அதிலிருந்து விடுபட முயன்றும் முடியாமல் தனக்கு விதித்ததை எண்ணி தனக்குள் கலங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

 

“கங்கா புள்ள, உனக்கு மேலுக்கு எதுவும் முடியலயா? ஏன் வாட்டமா கிடக்க?” பாக்கியம்மா அவளை கவனித்து விசாரிக்க, அங்கே ஒப்பனை வேலையில் இருந்த சாயாவும் பிரேமாவும் திரும்பி பார்த்தனர்.

 

“அதெல்லாம் ஒன்னுமில்ல பாக்கியம்மா, நான் நல்லா தான் இருக்கேன்” என்றாள் கங்கா சிறிதாய் புன்னகைக்க முயன்று. 

 

“கண்ணாடிய பார்த்து நல்லாயிருக்கேன்னு நீங்களே சொல்லிக்கீங்க க்கா” அவர்களிடம் வந்த ரேவதி ஆதங்கமாக பதில் பேசவும்,

 

அவளின் துடுக்கு பேச்சில் கங்காவின் இதழ்கள் சற்றே விரிய, அவளின் பார்வை ரேவதியை செல்லமாய் கடிந்தன.

 

“லுக்குக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல க்கா உனக்கு, என்ன ஏதுனா நாங்க பார்க்க மாட்டோமா…? எல்லாத்தையும் மனசுலயே போட்டு உளப்பிக்கிறது” ரேவதி கங்காவை முறைத்து பார்க்க,

 

“அதான… எங்களுக்கு ஒன்னுனா எல்லாத்தையும் நீ பார்த்து செய்யற இல்ல புள்ள, உனக்கு ஒன்னுனா நாங்க கேக்க மாட்டோமா?” பாக்கியம்மாவும் சேர்ந்து கேட்டார்.

 

சட்டென கங்காவின் மன பாரம் இறங்கியதைப் போல உணர்ந்தாள். ‘உனக்காக நான் இருக்கிறேன்’ என்ற மந்திர வார்த்தைகள், தனிமையில் வாடும் மனங்களுக்கு சடுதியில் எத்தனை ஆறுதலைத் தந்து விடுகிறது!

 

‘உற்ற உறவுகள் தன்னை தாங்காது போனாலும்… தனக்கென அன்பை தர சில நல்ல உள்ளங்களையாவது பெற்று இருக்கிறேனே!’ என்று எண்ணி அவள் அமைதி கொண்டாள்.

 

கண்களை மூடி இதழ் மடித்து புன்னகைத்துக் கொண்டவள் அவர்களிடம், “பாக்யம்மா, நிஜமாவே எனக்கு ஒன்னுமில்ல. ஏய் வாயாடி, என்னை வம்பிழுக்கிறதை விட்டுட்டு உள்ள வேலைய பாரு போ” என்று சிரிப்புடனே சொன்னாள்.

 

“இப்படி சிரிச்ச முகமா இருந்தா எப்படி இருக்கு. அதைவிட்டு உம்முன்னு மூஞ்சிய வச்சிகிட்டா நல்லாவா இருக்கு” ரேவதி மேலும் பேச,

 

“ஏய், நீ இன்னும் போகலையா?” கங்கா அதட்டலில் அவள் உள்ளே ஓடவும், அங்கே சிரிப்பலை பரவியது.

 

அந்த இதமான சூழலில் சில பெண்கள் உள்ளே நுழைந்தனர்.

 

அவர்களிடம் கவனம் திரும்பிய கங்கா, “வாங்க சௌமியா… டுடே ஸ்பெஷல் மேக்கப் உங்களுக்கு தான். ஸ்டார்ட் பண்ணலாமா?” என்றபடி எழுந்து வந்தாள்.

 

சம்மதமாய் தலையசைத்து முன்னே வந்த சௌமியாவை தடுத்து தன்புறம் இழுத்துக் கொண்ட உடன் வந்த பெண்மணி, “நீங்களா அலங்காரம் பண்ண போறீங்க?” என்று கேட்டார்.

 

“ஆமா மா, உங்களுக்கு எந்த மாதிரி மேக்கப் போடணும்னு சொல்லுங்க, அப்படியே செஞ்சிடலாம்” புன்னகை முகத்துடனே கங்கா விவரம் சொன்னாள்.

 

“அதில்ல மா, முதல்ல நான் இப்படி பேசுறேன்னு தப்பா நினச்சுக்காத… எங்க வீட்டு பொண்ணுக்கு என்கேஜ்மென்ட் மேக்கப் இது. அவளோட முக்கியமான விஷேசம் இது. அதனால…” அவர் தயங்கி நிறுத்த,

 

“பரவால்ல மா,‌ என்னன்னு சொல்லுங்க, நீங்க சொல்றதை வச்சு தான நாங்க அதுக்கேத்த மாதிரி செய்ய முடியும்” கங்கா இதமாகவே கேட்டாள்.

 

“எங்க‌ பொண்ணுக்கு நீங்க மேக்கப் போட வேண்டியது இல்லமா, என்ன இருந்தாலும் அவ வாழ்க்கையில நல்ல காரியம் இது. இதுல ராசியில்லாத உங்க கையால மேக்கப் போட வேணாம்… அது எங்களுக்கு மனசு ஒப்பல” என்றதும், அங்கிருந்த அனைவரின் கவனமும் அங்கே திரும்பியது.

 

“சித்தி… என்ன பேசுறீங்க?” சௌமியா அவரை கடிந்து கொண்டிருக்க, கங்கா தன் முகம் மாறாமல் தன் புன்னகையை இழுத்து பிடிக்க, மிகவும் சிரமப்பட்டாள்.

 

“நீ சும்மா இரு, உனக்கு இதெல்லாம் புரியாது” என்று சௌமியாவை அடக்கியவர், “உங்களை தவிர வேற யாரையாவது எங்க பொண்ணுக்கு மேக்கப் போட சொல்லுங்க, இல்லனா வேற பியூட்டி பார்லர் பார்த்துக்கிறோம்” என்றார் முடிவாக அந்த பெண்மணி.

 

உடனே, “ஏம்மா, எங்க வந்து யார பத்தி என்ன பேசுற?” பாக்யம்மா சீறிக்கொண்டு வர,

 

“வாயிருக்குனா எதை வேணா பேசுவீங்களா?” என்று பிரேமாவும்,

 

“எங்க கங்காவ பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று சாயாவும் கூட மனம் பொறாமல் அவரிடம் வந்து ஒன்றாக குரல் கொடுத்தனர்.

 

“எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க” என்று அங்கே எழுந்த சலசலப்பை அடக்கிய கங்கா, “சாயா, பிரேமா, கஸ்டமர்ஸ்ஸ அங்க வெயிட் பண்ண வச்சிட்டு இங்க என்ன பேச்சு? போய் வேலையை கவனிங்க” என்று அவர்களை விரட்டினாள்.

 

“இல்ல க்கா அவங்க…” சாயா மேலும் பேச வர, 

 

“உன்ன போக சொன்னேன் சாயா” கங்கா அழுத்தி சொல்லவும், அவளும் பிரேமாவும் தயக்கமாக நகர்ந்தனர். 

 

பாக்கியம்மா நகராமல் அவர்களை முறைத்துக்கொண்டு நின்றிருக்க, “போய் எல்லாருக்கும் காஃபி வாங்கிட்டு வாங்க” என்று அவரையும் விரட்டினாள். 

 

பாக்யம்மா முகம் கசங்க நகர்ந்ததும், இவர்களிடம் திரும்பியவள், “உங்க விருப்பம் போலவே உங்க பொண்ணுக்கு… ரேவதி மேக்கப் பண்ணுவாங்க” என்றவள் அவர்களை அமர சொல்லிவிட்டு வந்தாள்.  

 

ரேவதி, “உங்கள அவமானப்படுத்தி பேசுறவங்களுக்கு நான் எதுவும் பண்ண மாட்டேன் க்கா” என்று கோபமாக மறுத்தாள்.

 

“நம்ம பார்லர் தேடி வந்திருக்காங்க. நம்ம தொழிலை நாம சரியா செய்யணும். அவங்க எல்லாரும் அசந்து போற மாதிரி உன் திறமைய காட்டு போ” கங்கா அவளுக்கு கட்டளையாக அறிவுறுத்த,

 

“இல்ல க்கா, அவங்க பேசனது…” ரேவதி வருத்தமாக மறுத்துவிட்டு நகராமல் நின்றாள்.

 

“அதெல்லாம் பெரிய விசயமில்ல, எனக்கும் இது புதுசு இல்ல… என்ன, எல்லாரும் பின்னாடி பேசுவாங்க, இவங்க நேரா சொல்லிட்டாங்க, அவ்வளோதான் வித்தியாசம்… எல்லாத்துக்கும் மேல நம்ம கஸ்டமர் சேடிஸ்பேக்ஷன் தான் நமக்கு முக்கியம்” என்று சொன்ன கங்கா, மேலும் அங்கே நிற்காமல் உள்ளே சென்றுவிட்டாள்.

 

ரேவதி வேறுவழியின்றி சௌமியாவிற்கு ஒப்பனையை ஆரம்பித்தாள். அங்கே சங்கடமான மனதுடன் மற்ற பெண்களும் தங்கள் ஒப்பனை கைவேலையில் கவனமாகினர்.

 

பார்லரின் உட்பகுதியில், அலங்கார பூச்சின் பின் முகம், கைகள் கழுவவும், கேசம் சுத்தம் செய்யவும் என, நீண்ட மேடை அமைக்கப்பட்ட ஓய்வறையில் ஒரு நெகிழி இருக்கையில் தலைசாய்த்து அமர்ந்து கொண்டாள் கங்கா. அங்கே  அலங்காரத்திற்கு தேவையான பலவகை பொருட்கள் அடுக்கியும் அடுக்காமலும் விரவிக்கிடந்தன.

 

அதிசயமாக அவளின் கண்கள் கலங்கவில்லை. இதுபோன்ற ஒதுக்கங்களை பலமுறை அனுபவித்து அவளுக்கு பழகி போய்விட்டிருந்தாலும் கூட அந்த பெண்மணியின், ‘நீ ராசி கெட்டவ’ என்ற வார்த்தை அவள் மனதை அழுத்தி வலி கொடுக்கத்தான் செய்தது.

 

‘அவங்க சொன்னது நிஜந்தானே, ஒருவேளை எனக்கு ராசி இல்லாததனால தான் இதெல்லாம் நடந்து இருக்குமோ?’ அவளுக்குள் வேதனை எண்ணங்கள் ஓடின.

 

அடுத்தவாரம் திருமணம் என்ற நிலையில் அவளுக்கு விபத்து நேர்ந்ததிற்கும் அவள் ராசி தான் காரணமோ? என்னவோ?

 

அவளுக்கு ஏற்பட்ட விபத்தை அபசகுணமாக கொண்டு மாப்பிள்ளை வீட்டார், அப்போதே திருமணத்தை நிறுத்த தான் முயன்றனர். ஆனால் அவன் தான் திடமாக மறுத்தான். அவன் அன்று பேசிய வார்த்தைகள் அட்சரம் பிறழாமல் இன்னும் அவள் நினைவில் பதிந்து தான் இருந்தது.

 

‘தவறுதலா நடந்த ஆக்ஸிடன்ட்க்கு கங்கா மேல எப்படி பழி போடுவீங்க நீங்கல்லாம்? ராங் ரூட்ல வேகமா வந்ததது அந்த கார் காரனோட தப்பு தானே தவிர, கங்கா மேல எந்த தப்பும் இல்ல. இதுல அவளோட ராசியை இழுத்தீங்கன்னா, எனக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்.

 

ஒருவேளை அவளோட ராசி சரியில்லாம இருந்திருந்தா, எனக்கு தான ஏதாவது ஆகி இருக்கணும். நான் நல்லா தான‌ இருக்கேன். ‌இப்ப அவ தான் காலொடஞ்சி கிடக்கிறா… அப்ப என் ராசி தான சரியில்லனு கணக்காகுது! ஆணுக்கு ஒரு நியாயம் பொண்ணுக்கு ஒரு நியாயமா ம்ம்?

 

எல்லாரும் நல்லா கேட்டுக்கங்க, கல்யாணத்தை நிறுத்தற பேச்சிக்கே இடமில்ல. இப்போதைக்கு கல்யாணம் தள்ளி தான் போகுது. கங்கா உடம்பு குணமாகி வந்ததும் இந்த கல்யாணம் நடக்கும்…! இதுக்கு மேல யாராவது ஏதாவது பேசினீங்க நல்லா இருக்காது சொல்லிட்டேன்.’

 

அன்று அத்தனை உத்தமன் போல வீரவசனம் பேசியவன், எப்படி தலைகீழாக மாறி போனான்? 

இங்கே எல்லாருமே சுயநல பிண்டங்கள் தான் இல்லயா? 

இதில் அவள் யாரையென்று நொந்து கொள்வது? 

தன்னை தான் நொந்து கொள்ள வேண்டும். தன் விதியை நொந்து கொண்டாள்.

 

***

 

அந்த நட்சத்திர ஓட்டலில் தங்களுகாக தனி விழா அரங்கை எடுத்திருந்தாள் தீப்தி.

 

அவளோடு கைகோர்த்து பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்தவனின் புருவங்கள் சுருங்கி விரிந்தன.

 

“ஹேய் தீப்தி, ஜஸ்ட் கெட் டூ கெதர்னு தான என்கிட்ட சொன்ன, இங்க பெரிய பார்ட்டி ஹால் புக் பண்ணியிருக்க?” கௌதம் கைலாஷ் அவள் காதருகில் குனிந்து சலிப்பாக கேட்டான்.

 

“போ கைலாஷ், நீ எல்லாத்துக்குமே இப்படிதான் சலிச்சிக்கிற” தீப்தி முகம் திருப்பி கொள்ள, 

 

அவன், “நீ செய்யறதெல்லாம் அப்படிதான இருக்கு” என்று கடிந்தான்.

 

“அய்யோ, ஏன் தான் டியூஷன் மாஸ்டர் மாதிரி சும்மா ரூல்ஸ் பேசிட்டு இருக்கியோ நீ? லவ்வர் பாய் மாதிரி கியூட்டா கூலா இரேன் ப்ளீஸ்…” தன் நீள் விரல்களால் அவன் கன்னத்தை வருடி கொஞ்சினாள்.

 

அவள் கரத்தை இயல்பாக விலக்கியவன், “லைப்ல எல்லா விஷயமும் ஈஸியா இருக்கிறதில்ல தீப்தி, எல்லாத்தையும் ஜாலியா மட்டும் இல்ல கொஞ்சம் சீரியஸாவும் திங்க் பண்ண பழகிக்க” தன் மாமன் மகளுக்கு புரிய வைக்க முயன்றான்.

 

“டுடே நோ அட்வைஸ், நோ பிளா பிளா பிளா, ஒன்லி என்ஜாய்மெண்ட்… லெட்ஸ் ஸ்டார்ட்…” என்று உற்சாகமாக கத்தியவள் அவனை இழுத்துக்கொண்டு, சத்தமிட்டு ஒலித்த துள்ளிசைக்கேற்ப குதித்துக் கொண்டு நடந்தாள்.

 

அந்த இடம் ஆண்கள், பெண்களென இளமை பட்டாளங்களினால் சூழ்ந்திருந்தது. உணவு, மது, உற்சாக துள்ளாட்டம் என இருந்த அனைவரும் கௌதம் கைலாஷை கண்டதும் அவனை சூழ்ந்து‌ கொண்டனர்.

 

“ஹேய் ஃபிலிம் புரொடியூசர் கௌதம் கைலாஷ் தானே அது”

 

“ஹாய் சார்…”

 

“ஹலோ சார்…”

 

“நைஸ் டு‌ மீட் யூ சார்…” என்று ஆர்வமாக அவனிடம் முந்தி கொண்டு தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர் அவர்கள்.

 

“உங்க சரித்திரன் டீசர் ஜஸ்ட் அமேசிங்…”

 

“யா ஃபிலிம் ரிலீஸ்காக நாங்க வெயிட்டிங்…”

 

அவர்களுக்கு  சிறு புன்னகையோடு தலையசைப்பை பதிலாக தந்தான் கைலாஷ். தன்னவனின் பேரும் புகழையும் பார்க்க பார்க்க தீப்திக்கு பெருமை தாளவில்லை.

 

“மாம்ஸ், இந்த பக்கிங்க எல்லாம் உங்க நெக்ஸ்ட் ஃபிலிம்ல நடிக்க சான்ஸ் கிடைக்குமானு பிட்ட போடுதுங்க. நீ கண்டுக்காம வா…” என்று அவன் காதருகில் கிசுகிசுத்து அவனை இழுத்துக்கொண்டு நகர்ந்தாள்.

 

அவளின் நெருங்கிய நண்பர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினாள். அவர்களே இருபது பேருக்கு மேல் இருந்தனர். ஆண்களும் பெண்களுமாக தீப்தியை போல கவலையற்று வளவளவென வாயடித்துக் கொண்டிருந்தனர். அதில் மகேஷும் இருந்தான். அவனும் முக வாட்டத்துடன் கைலாஷுக்கு கைகுலுக்கினான்.

 

வகைவகையான உணவுகள், மதுக்கோப்பைகள், துள்ளிசை ஆட்டமென அந்த இடம் களைக்கட்டியது. கௌதமால் தான் அங்கே ஒன்ற முடியவில்லை. அவன் முன்பு கூத்தாடிய இடங்கள் தான் இவையெல்லாம். ஆனாலும் இப்போது எதிலும் மனம் செல்வதில்லை.

 

அவன் கையில் திணிக்கப்பட்ட மதுக்கோப்பையை சில நொடிகள் பார்த்தவன், மறுத்து தலையசைத்து விட்டான்.

 

“கௌதம் எனக்காக ப்ளீஸ்…” தீப்தி அவனிடம் கண்களால் கெஞ்ச,

 

“நாட் இன்ட்ரெஸ்டட்” என்று மறுத்தவன், “நீயும் அதிகமா எடுத்துக்காத ஓகே” என்றான்.

 

தீப்தி அவனை முறைத்து விட்டு, தன் வானரங்களோடு சேர்ந்து உணவு, மது, ஆட்டம் என கலந்துகட்டி அடித்தாள்.

 

இந்த இளமை கொண்டாட்டங்களைப் பார்க்க கௌதம் மனதும் இளகியது. கவலையற்று இப்படி ஆடி களித்திருந்த அவன் நாட்கள் சுகமாக நினைவிலாடின. 

 

தீப்தி அவனையும் ஆட்டத்தில் இழுத்துக்கொண்டாள். அவளுடன் ஆட அவனுக்கும் பிடித்திருந்தது. அவனுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ள அவளோடு இணைந்து ஆடினான். 

 

அந்த சூழலும் மதுவின் மயக்கமும் தீப்தியை கிறங்க செய்திருக்க, தன்னவன் என்ற உரிமையில் கௌதமுடன் இன்னும் நெருங்கி ஆடினாள். அதை உணர்ந்தவன் போல் அவளிடமிருந்து விலக முயன்றான்.

 

“நோ கௌதம்… இப்படி நீ என்னைவிட்டு விலகி போகத்தான் உன்ன இன்னும் நெருங்க தோனுது… லவ் யூ டா…” என்று உளறியவள் தள்ளாட்டமாக அவன் சட்டையை இழுத்து அவன் இதழோடு இதழொற்றிக் கொண்டாள்.

 

கௌதம் முதலில் அதிர்ந்து பின் சங்கடத்துடன் வாளாவிருந்தான். ஏனோ அவனுக்கு பிடித்தமில்லை. அத்தனை பேர் முன்னிலையில் அவளை விலக்கி அவமானப்படுத்தவும் மனம் வரவில்லை. சகித்துக் கொண்டு நின்றிருந்தான்.

 

இனிமையாக கடக்க வேண்டிய அந்த நிமிடத்தை, மிகவும் சிரமப்பட்டு கடக்க முயன்றான் அவன். 

 

***

 

பெண் வருவாள்…