ஏப்ரல்-1

ஏப்ரல்-1

“ஹே யாரோபோல்
நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்

நானே இல்லாத
ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே
காண்கின்ற எல்லாமும்
நான் ஆகிறேன்”

என்று அந்த அறை முழுதும் ஸ்பாட்டிஃபை உபயத்தால் இசை மிதந்திருக்க

“ஹே வாழா என் வாழ்வை வாழவே!! ஹே தாளாமல் மேலே போகிறேன்!!

ஹே வாழா என் வாழ்வை வாழவே!! ஹே தாளாமல் மேலே போகிறேன்!!

ஹே டண்டணக்கன ஹே டணக்குணக்குன..” என்று ஆழ்ந்து பாட வேண்டிய பாடலை அடாவடியாய் பாடிக்கொண்டே இடுப்பில் கட்டியிருந்த துண்டுடன் வெளியேறிய வெற்றி அதை அதே பீட்டில் மின்னல் வேகத்தில் உருவி எரிந்துவிட்டு ட்ராக்பேண்டிற்கு மாறினான்.

“ஹே என்னாச.. ஹே மேலே போகிறேன்..

ஹே மைதிலியே.. ஹே வாழாய் வாழவே..” என்று யாருமற்ற அறையில் நாக்கை மடித்துக்கொண்டு ஆடிக்கொண்டே தன் கப்போர்டை அலசியவன் அதிலிருந்து ஒரு பேண்ட்டை எடுத்துக்கொண்டு

“ஹே மைதிலியே.. ஹே மைதிலியே.. ஹே காதலியே.. ஹே காதலியே..” என்றாடிக்கொண்டே அதிகாலையில் அவன் அலாரம் வைத்து எழுந்து இஸ்திரி போட்டு அந்த ஸ்டேண்டுலேயே அலங்காரமாய் பரத்தி வைத்திருந்த சட்டையின் புறம் கவனத்தைத் திருப்பியதுதான் தாமதம்! அவனது சர்வமும் நின்றுபோனது! கையிலிருந்த பேண்ட் நழுவியதில் உறைந்து நின்றவன் உயிர் பெற்றான்.

“மைதிலி.. மைதிலி.. என் மைதிலி!!” நிஜ காதலியை தொலைத்தவனாட்டம் அவன் நெஞ்சில் அடித்துக்கொள்ளாத குறையாய் அரற்றிக்கொண்டே அறை முழுதும் சுற்றி வந்தான். எங்குத் தேடியும் காணவில்லை! போச்சு! எல்லாம் போச்சு! அவன் பிரம்ம முகூர்த்தத்தில் அலாரம் வைத்து அயர்ன் செய்தது எல்லாம் போச்சு! எல்லாம் எதுக்காக? அவனுக்காகவா? இல்லை! அவன் கடைக்கு வரும் கன்னியரின் கண்கள் குளிர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவன் செய்த தியாகங்கள் அனைத்தும் ஆத்தோடு அடித்துச் சென்றுவிட்டது! தேடிக் கிடைக்காத கடுப்பில் கட்டிலில் சரிந்தவன் சரிந்த அதே வேகத்தில் எழுந்தமர்ந்தான்.

அவனது கண்கள் கூர்மையாகின, “கொரங்கு” என்ற வார்த்தை அவன் வாயில் அரைபட, விருட்டென எழுந்தவன் அவன் அறைக் கதவை படாரென திறந்துகொண்டு வெளியேறினான்.

அவன் கதவைத் திறந்த வேகத்தில் எழுந்த படார் சத்தத்தில் என்னவோ ஏதோவென பதறியடித்துகொண்டு அவனுக்கு ஒரு அறை தள்ளயிருந்த அறையில் இருந்து சில்க் பைஜாமாவும் குருவிக்கூடாய் கலைந்த கூந்தலும் நெற்றியில் ஏற்றிவிடப்பட்டிருந்த ஐபேடுமாய் கண்களைக் கசக்கிக் கொண்டு வந்து நின்றாள் அதிதி.

“தூங்க விடுங்களேன்டா..” என்று ஆயாசமாய் உடலை முறுக்கியவள் தன்னை பார்வையாலேயே முறுக்கிப் பிழிந்து ஜூஸ் போட்டுக்கொண்டு நின்றவன் பட இன்னும் எரிச்சல் ஏறியது.

“உனக்கிப்ப என்னதான் பிரச்சனை? என்னமோ உங்கப்பன் வீட்டு கதவு மாதிரி அடிச்சு ஒடச்சிட்டு கிடக்க!” என்று எடுத்ததும் எகிறினாள்.

“ப்ச்! தேவயில்லாம என் நைனாவ இழுக்காத காலைலயே! என் புது சட்டை எங்க?” என்றான் கறாராய்

“நாளைக்கு ஹௌஸ் ஓனர் பொடனில போடுவாரு அப்ப சொல்லு இத..” என்று அலுப்பாய் சொன்னவளின் பார்வையில் அத்தனை தூக்கத்திலும் சிறு கூர்மை வந்தது,”எந்த புது சட்டை?”

“புதுசுனா.. புதுசு மாதிரி..” என்றிழுத்தவன் அவள் கேலிப்பார்வையை கண்டுவிட்டவனாய் கைவிட்டான், “அதெல்லாம் எதுக்கு உனக்கு? நான் இஸ்திரி போட்டு வச்ச சட்டை எங்க?” என்றான் அதட்டலாய்.

“ஆமா.. இவர் லூயி வுட்டான் சட்டைய நாங்க பொறாமைல தூக்கிட்டோம் போவியா! அவ அவ நைட் ஷிஃப்ட்ல செத்துட்டு வந்துருக்கா.. சட்டைய காணோம் மட்டைய காணோம்னு..” என்று முணுமுணுத்துக்கொண்டே அவள் திரும்பி உள்ளே சென்றவள் மைக்ரோ வினாடிகளில் திரும்பி வந்தாள்.

“என்ன காணோம் சொன்ன?” என்றவளின் குரலில் தூக்கம் சுத்தமாய் போயிருந்தது.

“ஏன்? என் சட்டைய..” என்று புருவச் சுழிப்புடன் அவளையே சந்தேகமாய் பார்த்து நின்றவனுக்கும் அவனையே பார்த்து நின்ற அவளது பார்வையும் எதையோ கணக்கிட்டுக் கண்டுபிடித்துவிட்ட தினுசில் விழிகள் விரிந்து உதடுகள் “ஓ” போட, இருவரின் பார்வையும் அவர்களது அறைகளுக்கு நடுவில் இருந்த அறையையே அர்த்தமாய் பார்த்தன.

“குட்டி கொரங்கு” என்று விடையறிந்த உணர்வில் மெல்ல வாய்க்குள் முணுமுணுத்தவன் அக்கதவில் கை வைக்க அது எந்தவித அலட்டலுமின்றி அம்சமாய் திறந்துகொண்டது. அறை கிடந்த கிடப்பே அதன் சொந்தக்காரி எப்பொழுதோ பறந்துவிட்டதைப் பறைசாற்ற இங்கு வெற்றியின் பற்கள் நரநரத்தன.

“எப்படி?” என்றவனது பார்வையைக் கவனித்த அதிதி, “என் ஷார்ட்ஸையும் தூக்கிட்டா” என்றதில்

“இன்னைக்கு அந்த அவிச்ச முட்ட வரட்டும் பாத்துக்கறேன்!” என்றவனது வீராவேச குரல் பக்கத்தில் நின்றவளின் கேலிப் பார்வையில் தடைப்பட்டது.

வெற்றி,”ஏன்? ஏன்? அட்டகத்தி ஏன் நெளியிது?”

“இன்னொரு வாட்டி அட்டக்கத்தின மூஞ்சுல பூரான் விட்றுவேண்டா வெண்ண மவனே” என்று ஒரு குட்டி ஜம்ப் செய்து அவன் பொடனியில் தட்டினாள் அதிதி.

அதில் கடுப்பானவனோ தலையைத் தேய்த்துக்கொண்டே,”அப்படித்தான் சொல்லுவேன் அத்தி என் அட்டக்கத்தி” என்று தன் புறங்கையால் அவள் நெற்றியில் அடித்து சண்டையை டையில் முடித்தான் வெற்றி.

“நீதான்டா வெட்டி ஈயச்சட்டி!” என்று எதுவுமே தோன்றாததால் வாய்க்கு வந்த எதையோ சொல்லிவிட்டு அவள் அறைக் கதவை படாரென அடைத்துச் சாத்திக்கொள்ள, முதல் சில நொடிகள் வெற்றி களிப்பில் இருந்தவனுக்கு மெல்ல மெல்லச் சண்டையின் காரணம் ஞாபகம் வர, “ஏ-ப்-ர-ல்!” என்று பெயரையே கடித்துத் துப்பினான் வெற்றி.

“ஐயோ! உங்களுக்கு புரியலையா? என்னால முடியாது! முடியாது! முடியாது! முடியவே… முடியாது!” அந்த மஞ்சள் நிற ஷெர்வானியில் இருந்தவன் அவனுக்கு எதிரில் நின்றுகொண்டிருந்த நடுத்தர வயது மனிதருக்குப் புரிய வைத்துவிடும் நோக்கில் சற்றே குரலை உயர்த்த அதில் பட்டென அவன் வாயைப் பொத்தியவர் பார்வையைக் கவனமாய் சுற்றுமுற்றும் சுழலவிட்டார். கண்ணுக்கெட்டிய தொலைவில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டவர் கையை விலக்கிக்கொண்டு பின்னால் நகர அவர் கண்களில் இண்ஸ்டென்டாய் ஒரு கனிவும் கரிசனமும்!

“அப்படியெல்லாம் எடுத்தெறிஞ்சு சொல்லக்கூடாது தம்பி.. கல்யாணங்கறது ஆயிரங்காலத்து பயிறு” என்று அவர் மறுபடியும் அதையே ஆரம்பிக்க அதை ஆயிரம் முறை கேட்டு அலுத்தவனோ கையை அவர் பிடியில் இருந்து உதறிக்கொண்டான்

“அடப்போங்கண்ண கல்யாணமாவது..” என்றவன் இழுக்க அதில் பதறிப்போன மனிதரோ அவன் முடிப்பதற்குள், “தம்பி! தம்பி!” என்று எச்சரிக்க அதற்குள் அவன் “மண்ணாவது!” என்று முடித்தே விட்டிருந்தான். அதில் ஆசுவாசமடைந்தவரோ வெளிப்படையாகவே ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவாறே நெஞ்சை நீவிக்கொண்டார்.

“என்னாச்சுணா? எதாவது பண்ணுதா? கல்யாணத்த நிறுத்திரலாமா?” என்றவன் பதற அவன் கையை ஆதூரமாய் பிடித்தவரோ அதில் லேசாய் தட்டிக்கொடுத்தார்.

“தம்பி! தம்பி! உன் கல்யாணம் நிக்கதுக்காகலாம் நான் சாவ முடியாதுபா..” என்றவர் பிறகு அவனையே ஒரு நொடி ஆசையாய் பார்த்து நின்றார்.

“என்னாச்சுணா?” என்றவனின் குரலில் மீண்டவர் சிறு முறுவல் ஒன்றுடன் அவன் தோளைத் தட்டிக்கொடுத்தார்.

“எங்க என் மருமவன மாதிரி தண்ட தறுதலையா போயிருவியோனு பயந்தேன்பா.. ப்ச்! ஆனா உன்ன இப்படி பாக்கறப்ப கண்ணும் மனசும் நெறஞ்சு போகுது” என்றவரிடம் அதற்கு மேல் அவன் வாய் திறக்கவில்லை. அவரும் தன் வாதத் திறமையால் வென்றுவிட்டோம் என்றெண்ணி நிம்மதியுர அடுத்த சில மணி நேரங்களில் அவன் அவர் பயந்த அதே தண்ட தறுதலையின் உதவியுடன் சுவரேறிக் குதிக்க ஆயத்தமானான்.

அவன் ஏறுவதற்கு வாகாய் குனிந்திருந்த, தன் தாய்மாமனால் தண்ட தறுதலை என அழைக்கப்பட்ட அஸ்வின் சரியாய் அவன் கால் வைக்கும் சமயத்தில் பத்தாவது முறையாக நிமிர்ந்தான்.

“இப்ப என்னடா..?” என்று அலுத்தவனுக்கு முடிந்தால் அந்த அஸ்வினை அடித்து காற்றில் பறக்க விடுமளவு கற்பனை விரிந்தது.

அவனது அலுப்பையெல்லாம் அலட்சியம் செய்த அஸ்வினோ,”ஏன் அக்கி.. நீ போய்ட்டனா உன் வாட்ச்ல இரண்ட நான் எடுத்துக்கவா” எனவும் மற்றவனுக்கு அங்கு வந்த அத்தனை பேர் செருப்பையும் கழட்டி வாங்கி அடித்துக்கொள்ள வேண்டும்போல இருந்தது. இத்துடன் எத்தனையாவது முறையாகவோ பேரத்தைத் தொடங்குகிறான்.

மவனே! என் ரூம்ல துரும்ப அசைச்சு பாரு என் மாதர்குலம் எப்படிப்பட்ட ஆளுனு உனக்கு தெரியும்.. சிக்கி சாவ்டா சைடு ஷைத்தான்!

என்றவன் அத்தனை வருஷத்தது வன்மத்தையும் ஒரேயடியாய் முடிக்க இருந்தவன் அஸ்வினுக்கு அழகாய் சிரித்தான், “உனக்கில்லாததாடா அஸ்வினு..” என்று கண்களில் கனிவைக் கூட்டி கவிழ்த்தியவன், “இப்ப இந்த அண்ணன காப்பாத்தி உட்ருடா!” என்றவனை அப்படியே குனிய வைத்து சுவரில் ஏறியவன், “எப்படியாது பாடி கார்ட்ஸ டைவர்ட் பண்ணிரு அஸ்வினு” என்க அவனோ,”எனக்கு நீ அண்ணனா?” என்று பேரம் மறந்து வழமைபோல வம்புக்கு வந்தவனை “நீ திருந்தமாட்ட!” என்பதுபோல பார்த்தவன் அப்படியே மறுபுறம் குதித்துத் திரும்பியும் பாராமல் ஓடத்தொடங்கினான்.

நீண்ட தூரம் மூச்சிரைக்க ஓடியவன் மெயின்ரோட்டிற்கே வந்துவிட்டான். அவனுக்கு வெகு தொலைவில் சிக்னல் ஒன்று சிவப்பில் இருப்பது தெரிந்தது. வாகனங்கள் வரிசையாய் நின்றன. பெரிய பெரிய மூச்சுக்களை இழுத்துவிட்டவன் மெல்லத் திரும்பத் தொலைவில் சிலர் விடுவிடுவென தேடிக்கொண்டு வருவது கண்ணில் பட்டது. சந்தேகமேயின்றி தெரிந்தது அவர்கள் தேடுவது இவனைத்தான் என.

செய்வதறியாது முழித்தவன் அங்குமிங்கும் தலையைத் திருப்பிவிட்டு பிறகு ஒரு முடிவெடுத்தவனாய் சிக்னலை நோக்கி ஓடினான். அவர்கள் அவனை இன்னும் பார்த்துவிடவில்லை. ஆனால் சிக்னல் விழ இன்னும் சில நொடிகளே இருந்தன. அரக்கப் பரக்க ஓடியவனின் பார்வையில் விழுந்தது ஒரு சைக்கிள்! அதில் அமர்ந்திருந்த பதின் வயது சிறுவன்! என்ன ஏது என்றெல்லாம் சிந்திக்கவில்லை. கிளம்பத் தயாராய் இருந்த சைக்கிளின் பின்னால் இவன் தாவி அமர சைக்கிள் ஆட்டம் கொண்டது. அதில் அந்த பையன் பதறித் திரும்ப எத்தனிக்க இவனோ, “ஐயோ!!!நிறுத்தாதீங்க! போங்க! போங்க! போய்க்கிட்டே இருங்க!” என்று காதுக்குள் உயிர் போவதுபோல் அலற, அதிலேயே அதிகம் பயந்து பதறி ஜெர்க்கான சைக்கிள் ஒரு கணம் நின்றது. அதில் இவன் விடாமல் “போங்க! போங்க!” என்று முதுகைப் பிடித்துத் தட்டி தள்ளச் சைக்கிள் மின்னல் வேகத்தில் பறந்தது.

ஒரு கட்டத்தில் அவன் துரிதப்படுத்துவதை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கத்தொடங்கிவிட, எதிர்காற்று முகத்தில் வீச பறப்பதுபோலொரு பயணத்தில் மூழ்கியவன் ஆழ மூச்சிழுத்தான்.

வெற்றி! வெற்றி! வெற்றி! இனி அவன் விதவிதமாய் யோசித்து வில்லத்தனம் செய்ய வேண்டியதில்லை! கலர் கலராய் கதைசொல்ல வேண்டியதில்லை! இதற்குமேலும் அவனை யாரும் கட்டாயப்படுத்த துணியப்போவதில்லை! இனி எல்லாம் சுக-

“டமால்” என்றொரு சத்தத்துடன் டயர் வெடித்து அவனது கனவு நிலையைக் கலைத்திருந்தது. வெடித்த சத்தத்தில் பதறியவன் பயத்தில் மற்றவனது இடுப்பை இறுக அணைத்து பிடித்துக்கொள்ள சில நிமிடங்கள் பிடித்தன இவனுக்குச் சைக்கிள் ஓரமாய் நின்றுவிட்டதென உரைக்கவே.

தான் இடுப்பை அணைத்திருந்தவன் கைகளை முன்னால் கட்டிக்கொண்டு அப்படியே நிற்பது உரைக்கச் சட்டென தன் அணைப்பை விலக்கிக்கொண்டான். அவன் தான் பயந்ததால் தன் கையை பிடித்துத் தள்ளிவிடாமல் இருந்தது புரிய மெல்ல இறங்கியவன் அவனுக்கு முன்னால் வந்து நன்றி சொல்ல விழைய இவன் விழிகளோ விசிறியாய் விரிந்தன. கால்களில் ஸ்லிப்பான்ஸ், முட்டி வரை நீண்ட டெனிம் ஷார்ட்ஸ், அதற்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு தொள தொளப்பான ஃபார்மல் சட்டை, முதல் இரண்டு பித்தான்கள் சுதந்திரம் பெற்றிருந்ததால் தெரிந்த டேங்க் டாப், தாறுமாறாய் குதறப்பட்ட கூந்தல் அதை உச்சியில் ஒரு குடும்பியாய் முடிந்திருந்த விதம், செவிகளில் இயற்ஃபோன்ஸ் என அது சிறுவனே அல்ல! சட்டென பார்த்ததில் சிறுவன் எனத் தோன்றியதோ? ஆனால் இப்பொழுது தெளிவாய் பார்க்கையில்தான் உரைக்கிறது தான் இத்தனை நேரம் ஒரு இளம்பெண்ணைச் சிறுவனென நினைத்திருந்தது. அதெல்லாம் தாண்டி என்ன அது? அவள் முகத்தில்.. கோபமா அது? ஆனால்.. அவள் முகம் மெல்ல மெல்ல ஸூம் ஔட் ஆக பின்னால் தெரிந்த சூப்பர் மார்க்கெட் பேனரில் அட்ரஸை கண்டவனுக்கு சட்டென ஆக்ஸிஜன் பற்றாக்குறை!

“பத்து கிலோமீட்டாரா!!!” என்று வாயைப் பிளந்தவனையே வெறித்துப் பார்த்திருந்தவளோ பொரிந்து தள்ளிவிட்டாள். “நீ படுத்தின அவசரத்துக்கு டயர் மட்டும் வெடிக்கலனா நான் பாடர தாண்டிருப்பேன்!” என்றவள் இனி உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதைப்போலச் சைக்கிளை ஓரமாக நிறுத்திப் பூட்டிவிட்டு சூப்பர்மார்க்கெட்டினுள் நுழைந்தாள்.