ஏப்ரல்-2

IMG_20230114_162140

ஏப்ரல்-2

பெங்களூர் வாகன நெரிசலில் லாவகமாய் வளைந்து கலந்தது அந்த குட்டி பைசைக்கிள். விடிந்து சில மணி நேரங்கள் கடந்திருந்தாலும் குளிர் குத்தூசியாய் எலும்புக்கூடுவரை சில்லிட செய்ய ‘ஊஃப்’ என்றொரு முறை இதழ் குவித்து சில்லிட்டிருந்த இடக்கையை ஊதினாள் ஏப்ரல். ஒரு கையை விட்டு ஓட்டிக்கொண்டிருந்தவளை அதிவேகமாய் கடந்து சென்ற வண்டியின் அதிர்வில் சற்று தடுமாறி பிறகு சமநிலை அடைந்தவள் சைக்கிளை இரண்டு முழு நிமிடங்கள் நடைபாதை ஓரமாய் நிறுத்திவிட்டு பிறகு மீண்டும் தொடர்ந்தாள். அதிகாலையில் கிளம்பியவள் முதல் சுற்று பேப்பரும் அதற்கு அடுத்த சுற்று பால் பாக்கெட்களும் என போட்டு முடித்திருக்க காலியாகியிருந்த பையை பாஸ்கெட்டினுள் திணித்துவிட்டு அவளது வழமையான காலை நேர ஊர் சுற்றலுக்கு வந்திருந்தாள்.

இப்பொழுது நன்றாக கதிரவனின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்திருக்க வெதுவெதுப்பான எதிர்காற்று முகத்தில் வீச ஆழ மூச்சிழுத்து சுவாசப்பையினுள் அடைத்துக்கொண்டிருந்தவளின் கவனத்தை கலைத்தது அடுத்த கார்!

பார்த்த உடன் சர்ச் ஹிஸ்ட்ரியையே அழித்துவிடும் அளவு சற்றே விவகாரமான பாடல்வரிகளை கொண்ட ஆங்கில பாடல் ஒன்றை சற்றே அலறவிட்டபடி கடந்து சென்ற காரின் மெட்டுக்கள் இவளையும் ஒட்டிக்கொள்ள சட்டென முடிவெடுத்தவளாய் அவ்வாகனத்தை பின்தொடர்ந்தாள், பாடல் சத்தம் அவளுக்கு கேட்கும் தொலைவில். கடைசி சில நொடிகள்தான் இருந்தன அப்பாட்டு முடிவதற்கு, ஆனால் அதுதான் இவளுக்கு பிடித்தமான பகுதியே! சில சமயங்களில் அர்த்தமற்ற வரிகள் தான் அழுத்தமற்ற வாழ்க்கைக்கு தேவைப்படுகின்றன. பாட்டின் அர்த்தம் ஏடாகூடமாய் இருந்தாலும் அதை கேட்டாலே இவளுக்குள் ஒருவித கிலுகிலுப்பு வந்துவிடத்தான் செய்கிறது.

எத்தனை தூரம் அப்படியே சென்றாளோ! கடைசியில் வண்டி ஓரிடத்தில் நிற்கவும் பாடல் மாறவும் சரியாய் இருக்க அவள் நின்றிருந்தது ஏதோ ஒரு சிக்னல். ஏதோவல்ல.. அவள் வீட்டிலிருந்து சில கிலோமீட்டர்கள் எதிர் திசையில் இருந்த ஒரு சிக்னல். அதை அடையாளம் கண்டுக்கொண்டவளோ காதில் தனது இயற்ஃபோன்களை மாட்டிக்கொண்டாள், இந்த நெரிசலில் பச்சை விழுந்தாலும் ஊர்ந்து போக பல நிமிடங்கள் பிடிக்குமே!

சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டிக்கொண்டிருந்தவளின் கவனம் விளம்பரம் முடிந்து தொடங்கிய பாடலில் முழுதாய் முழுகியது.

“என் ஜோடி மஞ்சக் குருவி
சாஞ்சாடு நெஞ்ச தழுவி
ஆட்டம் போடடி! ஹோ.. ஹோ..
பாட்டு பாடடி! ஹோ.. ஹோ..

சூடான பொட்டல் காடு
ஜோராக கத்திப் பாடு
ஒன்னப் பாரு மண்ணப் பாரு
ஹோ
பொன்னப் போல
மின்னும் பாரு..
என் ஜோடி மஞ்சக்குருவி..” என தாளத்துக்கேற்ப தலையாட்டியபடி மெல்ல முணுமுணுத்துக் கொண்டிருந்தவளிடம் திடீர் பெரு மூச்சு!

“ஹ்ம்… நம்ம மஞ்ச குருவி எங்க இருக்கோ! எப்படி கிடக்கோ!” என்று போலியாய் அலுத்துக்கொண்டவளின் பார்வை சட்டென கூர்மையானது! அவள் சைக்கிள் கண்ணாடி வழியாய் பின்னால் தெரிந்த காட்சியில்! மஞ்சல் நிற ஷெர்வானியில் கிட்டத்தட்ட மாப்பிள்ளை கோலத்தில் ஒரு இளைஞன் மறைந்து மறைந்து ஓடி வந்துக்கொண்டிருந்தான்.

“ஸோ ஸூன்?” என்று வாய்விட்டு அதிர்ந்தவள் அவனையே கூர்ந்து கவனித்தாள். அதுவும் அவன் நெருங்க நெருங்க அவளை நோக்கி வருவதுபோல் வேறு இருக்க இவனை எங்காவது பார்த்திருக்கிறோமா இதற்கு முன் என்ற தீவிர சிந்தனை ஏப்ரலை ஆட்கொண்டது. இல்லவே இல்லை! அவனையே வெறித்திருந்தவளுக்கு சற்று தொலைவில் கும்பலாய் சிலர் யாரையோ தேடுவதும் இவன் அவர்களை கண்டு அதிர்ந்தே துரிதமாவதும்பட, அடியாத்தீ! குருவி கூட்டமால வில்லங்கத்த கூட்டுவருது! ம்ஹூம்! மெல்ல சைக்கிளை இரண்டடி முன்னால் நகர்த்தி சற்றே மறைந்தார்போல நின்றுகொண்டாள்.

தெரிஞ்சவனோ தெரியாதவனோ! நம்மள தேடறான்னா நாம எஸ்ஸாயிடனும்! இதுல அவனையே யாரோ தேடறாங்கன்னா அப்ஸ்காண்ட் ஆகறதுல அணு அளவும் தயக்கமிருக்க கூடாது! நம்ம வாழ்க்கையே நாரசமா போறப்போ அடுத்தவன் நாளன்னைக்கு என்ன பண்ண போறான்னா பாத்துட்டிருக்கவா முடியும்? இன்னும் அரை மணி நேரத்துல அடுத்த வேலைல இருக்கனும்! இரண்டு நிமிஷம் லேட்டானாலும் லேபரடாரா பாயும் அந்த சூபர்வைஸர் சுப்பி! வேணாம்டா ஏப்ரலு கொஞ்ச நாளைக்கு இருக்க இடம் தெரியாம இருந்துட்டு போயிடுவோம்! நமக்கு இந்த மஞ்சக் குருவியும் வேணாம் நெஞ்ச தழுவியும் வேணாம்! என்று ஆகப்பெரிய தியாகம் எதையோ செய்பவள் போலவள் வலக்கையால் இட நெஞ்சை லேசாய் தட்டியபடி சொல்லிக்கொண்டிருக்க அவளது ராஜ தந்திரங்கள் அனைத்தையும் முறியடிப்பவனாய் அந்த மஞ்சக்குருவி பின்னிருக்கையில் தாவியமர்ந்து அவள் தவத்தை கலைத்தது.

ஒரு கணம் அதிர்ந்தவள் கண்ணாடியில் பின்னால் இருந்தவனை கண்டுவிட்டு எதையோ சொல்ல வரவும் அவன் அவள் காதுக்குள் கிடந்து “போங்க போங்க” என்று அலறவும் சரியாய் இருக்க, அவன் கத்திய கத்தலில் அவள் கண்களில் பூச்சி பறக்காத குறை! காது ‘கொய்ங்’ என்றது. குருவியாட்டம் பேசுவான்னு பார்த்தா காட்ஸில்லாபய கண்டமேனிக்கு கத்தி தொலையறான்! என்று தலையை உலுக்கி கொண்டவள் முதலில் அவனை அப்படியே இறக்கிவிடத்தான் நினைத்தாள். ஒரு கணம் கண்ணாடி வழியாய் பின்னால் தெரிந்த முகத்தையே பார்த்தாள். என்ன தோன்றியதோ தன் முழு பலத்துடன் சைக்கிளை அழுத்தத் தொடங்கிவிட்டாள்.

சற்று நேரத்திலெல்லாம் அவனது படுத்தல் நின்றுபோக கண்ணாடி வழி கண்டவளுக்கு அவன் கண்களை மூடி மூச்சிழுப்பது ரசனை நரம்பை தீண்டிவிட இதழோரம் உதித்த மெல்லிய வளைவொன்றுடன் நிறுத்தாமல் பயணத்தை நீடித்துக்கொண்டே சென்றாள். வண்டி சக்கரம் வெடித்து அலறும்வரையிலுமே அவளும் தூரத்தை கணக்கிட்டிருக்கவில்லைதான்!

அதிலும் பத்து கிலோமீட்டர் வந்துவிட்டது உரைத்தது இது அடுத்த வேலையை தேடிக்கொள்ளவேண்டிய பொழுது வந்துவிட்டதை உணர்ந்தவளுக்கு அய்யோ என்றானது! இனி அந்த சுப்பி இவளை சப்பிப்போட்ட சாக்லெட்டாய் ஆக்கப்போகிறாள். இரண்டே மாதங்களில் அடுத்த வேலை என்றால்.. அந்த அட்டக்கத்தி அதிதியைக்கூட சமாளித்துவிடலாம்.. ஆனால் அந்த வெட்டிப்பய வெற்றியை எப்படி சமாளிப்பது? யார் சமாளிப்பது? அட்வைஸ் எனும் பேரில் ரம்பமாய் அறுத்து தள்ளிவிடுவானே! இத்தனைக்கும் அய்யா வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்தவன்! ஆனால் என்னவோ கோல்ட் மெடல் வாங்கியவன்போல பக்கம் பக்கமாய் பேசி பேசியே இவளை கொன்றுவிடுவான்! என் தகப்பருக்கு கூட நான் இவ்வளவு பயந்ததில்லடா! என்று மனசுக்குள் புலம்பிக்கொண்டிருந்தவளை “பத்து கிலோமீட்டரா?” என்றவன் வாயை பிளந்து அதிர்ந்த விதம் ஆத்திரத்தை அதிகரித்திருக்க பொரிந்து தள்ளிவிட்டாள்.

“எனக்குனு வரானுங்க பாரு.. அளவெடுத்த அணுகுண்டா! எல்லாம் இந்த மானங்கெட்ட மனச சொல்லனும்.. கடைசில சைட்டடிக்க போய் சன்யாசி ஆன கதையா ஆகப்போது..” என்று வாய்க்குள்ளயே முணுமுணுத்தபடி அந்த சூப்பர் மார்க்கெட்டினுள் நுழைந்தாள் ஏப்ரல்.

அக்கிக்கு சில நொடிகள் பிடித்தன நடந்ததை கிரகித்துகொள்ள. அதுவும் அவள் பொரிந்து தள்ளிய விதமெல்லாம் உரைக்கவே பல தடவை அவன் விழிகளை சிமிட்டிக்கொண்டான். அவனுக்கு விவரம் தெரிந்த பிறகு அவனை தெரிந்த யாரும் அவனிடம் இப்படியெல்லாம் பேசியதில்லை. அப்படியே உறைந்துவிட்டவன் அவள் அவனை விட்டுவிட்டு உள்ளே செல்வது பார்வையில் பட சுதாரித்தவனாய் விடுவிடுவென அவளை பின்தொடர்ந்தான்.

“ஏங்க! எதுக்குங்க திட்டுனீங்க?” என்று வீராவேசமாய் கேட்பதுபோல வந்து நின்றவனை மேலும் கீழுமாய் பார்த்தவள், யார்ரா நீங்களாம்? எங்கருந்துடா வர்ரீங்க? என்பதுபோல பார்த்துவிட்டு பதிலின்றி அகல அவனோ விடுவதாய் இல்லை.

“இங்க பாருங்க நான் பேசிட்டே இருக்கேன் நீங்க இப்படி பேஸிக் எட்டிகெட்ஸ் இல்லாம போனா என்ன அர்த்தம்?” என்று வார்த்தையை விட சரேலென திரும்பியவளோ அகல புன்னகைத்து

“ஏனுங்க சாமி இந்த சாரி, தாங்க்ஸ்லாம் உங்க பேஸிக் எட்டிகெட்ஸ்ல வராதுங்களா?” என்று அப்பட்டமாய் ஒரு போலித்தனத்துடன் பேசுவதிலேயே அவளது நக்கல் புரிந்துவிட எதையோ சொல்ல வந்தவன் பிறகு அவள் கேட்டதும் நியாயம் என்றுபடவே மன்னிப்பு கேட்க வாயை திறக்கையில் எதிரில் நின்றவளோ சடாரென்று தரையில் அமர்ந்தாள்.

பார்க்க என்னவோ அவள் மயங்கி சரிந்தது போல அவனுக்கு தெரிய, “அய்யோ! என்னாச்சு? என்ன பண்ணுது?” என்று பதறியவனின் கையையும் பிடித்திழுத்து அருகில் அமர்த்தியவள் “உஷ்!” என்க, அவள் சட்டென கீழே இழுத்ததில் நிலை தடுமாறி தொம்மென விழுந்திருந்தவனுக்கோ வலி விண்ணென்றது.

“ஸ்ஸ்” என இடுப்பை தேய்த்துக்கொண்டவனோ, “ஏங்க உங்களுக்கு என்ன தாங்க பிரச்சினை?” என்று அலுத்த குரலில் கேட்க

“மூச்!” என்று ஏதோ சிறுபிள்ளையை மிரட்டுவதுபோல அதட்டியவள் மறுபடியும் தலையை மட்டும் உயர்த்தி எதையோ பார்த்துவிட்டு இவனிடம் திரும்பியவள் உதட்டுக்கு மேல் விரலை வைத்து, “உஷ்! சத்தம் வரக்கூடாது! அப்படி வந்துச்சு.. குருவி! ரெக்கைய புடுங்கி அடுப்புல வச்சுருவேன்!” என்று மிரட்டியவள் குருவி போலவே அப்படியே மெல்ல நகர்ந்தாள்.

“குருவியா..” என்று பார்த்திருந்தவன் அவள் குருவிபோல் ஒளிந்து குனிந்து செல்வதை காணவும் தன்னை போல அவளும் யாரிடமிருந்தோ ஒளிந்து செல்வது புரிந்தது. அவள் அவன் கண் பார்வையில் இருந்து மறையும்வரை ஏதோ சிந்தனையில் இருந்தவன் அவள் மறைந்த பிறகே சுதாரித்தான்.

இங்கு ஓசைபடாமல் மெல்ல நகர்ந்துகொண்டிருந்தவளின் முன் இரு ஷூ கால்கள் தென்பட மெல்ல உயர்ந்தது அவள் பார்வையும் தலையும். கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்திருப்பவளையே கேள்வியாய் பார்த்து நிற்பவன்பட சட்டென எழுந்துகொண்டாள் ஏப்ரல். எவன் பார்வையில் படாமல் வெளியேறிவிட வேண்டும் என்று எண்ணினாளோ அவன் காலடியிலேயே வந்து விழுந்தாயிற்று! ச்சே!

உணர்வுகள் எதையும் முகத்தில் காட்டாது எதுவுமே நடவாததுபோல எழுந்து நின்றவளை நம்ப மாட்டாமல் பார்த்து நின்றான் மற்றவன்.

“நீ மாறவே இல்லல?” என்றவனது கேள்விக்கு எந்தவித பதிலும் பாவமுமின்றி அப்படியே நின்றாள் அவள்.

“ச்சே!” என்று அலுத்துக்கொண்டவனோ,”இன்னும் எத்தன நாளுக்கு இப்படியே இருக்கறதா உத்தேசம்? வாழ்க்கைல உருப்படற ஐடியாவே இல்லையா?” என்றவன் வார்த்தைகளை கடித்து துப்பிக்கொண்டிருக்க அதற்குள் அதை தடுப்பதுபோல பெண்ணொருத்தி வந்து நின்றாள் “அந்த பக்கமில்ல..” என்று எதையோ பேசியபடி வந்தவளின் வார்த்தைகள் இவளை பார்த்து தடைப்பட்டன.

கண்கள் இரண்டும் லேசாய் பளபளக்க ஒருவித வெற்றி களிப்புடன் இவளை பார்த்தவனோ அருகில் நின்றவளை தோளோடு சேர்த்தணைத்தான்.

“பேப்! மீட் ஏப்ரல். ஏப்ரல் இது என் கர்ள்ஃப்ரெண்ட் நித்தி” என்று அறிமுகம் செய்தவன் நித்தியிடம் திரும்பினான்.

“நித்தி ஏப்ரல ஞாபகம் இருக்கா? நான் சொல்லிருக்கேன்ல..” எனவும் அவளிடமும் ஒருவித தர்மசங்கடமான முறுவல் ஒன்று திணறி வந்தது.

“ம்ம்.. உங்க எக்ஸ் கர்ள்ஃப்ரெண்ட்..” என

ஏப்ரலுக்கோ ஏகத்துக்கும் எரிச்சல். இன்னும் இவனிடம் இந்த சைக்கோத்தனம் மட்டும் போகவேயில்லை போலும்! அந்த நித்தியை பார்க்க சற்று பரிதாபமாயும் இருந்தது.

“ம்ம்.. மை பிக்கஸ்ட் மிஸ்டேக்! காட்ஸ் க்ரேஸ் விழிச்சிட்டேன்.. நீயும் கிடைச்சிட்ட!” என்றவன் இருவரையுமே அசாத்திய மௌனத்தில் ஆழ்த்தினான்.

அவளையே பின்தொடர்ந்து வந்திருந்த அக்கி அவள் இன்னொருவனுடன் நிற்கவுமே சற்று ஒதுங்கி நின்றுதான் கவனித்துக்கொண்டிருந்தான். முழுதாய் எதுவும் தெரிந்திராவிட்டாலும் அந்த அவன் முதலில் இருந்து இவளிடம் பேசிய முறையோ நடந்துக்கொண்ட விதமோ எதுவுமே சரியாய்படவில்லை! விஷயம் இன்னதுதான் என ஓரளவு புரிந்தாலும் அவளது சொந்த விஷயத்திற்குள் தான் செல்வதா என்று ஒதுங்கி இருந்தவன் மற்றவனின் பேச்சில் ‘அட சைக்கோவே’ என்றுதான் பார்த்திருந்தான். அதிலும் அவனது கடைசி சில வார்த்தைகள் சற்றும் சம்பந்தமில்லாத அவனுக்கே அதிகப்படியாய் தோன்றி ஏதோவொரு விதத்தில் மனதை தைக்க அதற்கு மேலும் வேடிக்கை பார்க்க மனமற்றவனாய் இறங்கிவிட்டான்.

அருகில் இருந்த அடுக்கில் இருந்து ஒரு ஸ்குவாஷ் பாட்டிலை எடுத்துக்கொண்டவன் அதிலேயே பார்வையை பதித்தவனாய்,”அப்புமா இந்த ஃப்ளேவர் ஓகேவானு பாருங்க” என்றிவள் அருகில் வந்து நின்று பாட்டிலை நீட்ட எதிரில் நின்றவனின் அதிர்விக்கு கொஞ்சமும் குறையாத விதத்தில் விரிந்தது ஏப்ரலின் விழிகள் இரண்டும். ‘அப்புமாவா?’ என

அவள் விழிகளையே அர்த்தமாய் பார்த்தவனோ, “என்ன ஆரெஞ்ச் தான் வேணுமா?” என்று என்னவோ அந்த ஸ்குவாஷை வாங்கவென்றே அத்தனை கிலோமீட்டர் வந்தவன்போல அதிலேயே கவனமாய் இருக்க அவன் என்ன செய்ய விளைகிறான் என்பதை நொடியில் புரிந்துகொண்டாலும் முதல் சில கணங்கள் அசையாமல் நின்றாள் ஏப்ரல்.

அதை அப்பொழுதே கவனித்தது போலொரு பாவனையுடன் எதிரில் நின்றவனை ஆச்சர்யம் பொங்க பார்த்தவனோ அந்த பாவனை சற்றும் மாறாமல் ஏப்ரலிடம், “சார் யாரு அப்புமா.. சித்தப்பாவா?” என்றுவிட அதில் அத்தனை நேரம் மௌனியாய் நின்றிருந்தவளுக்கோ சட்டென சிரிப்பு வந்துவிட அதை அப்படியே இதழ்வளைவில் அழுத்தி மறைக்க முயன்றாள். என்னயா பொசுக்குனு ஏஜ் ஷேமிங் பண்ணிட்ட என்பதுபோல் அவள் பார்க்க அவனோ அவனது சைக்கோத்தனத்திற்கு இது ஒன்றுமேயில்லை என்பதுபோல் பார்த்து வைத்தான். இவர்கள் இருவரையும் தாண்டி ‘களூக்’ என சிறு சிரிப்பொலி வந்து பிறகு தேய அதில் இருவரின் கவனமும் அங்கு செல்ல நித்திதான் அடக்க இயலாமல் சிரித்துவிட்டு பிறகு மற்றவனது முறைப்பில் அதை கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருந்தாள். அதில் இன்னுமின்னும் அவனுக்கு ஆத்திரம் கூட அதையும் ஏப்ரலிடமே காட்ட திரும்பியவன் முன்னாலோ அகல சிரித்தபடி கைகளை கூப்பி நின்றிருந்தான் அக்கி, “வணக்கம்ங்க! உங்கள பத்தி அப்புமா நிறைய சொல்லிருக்காங்க.. என்னதான் அங்கிளா இருந்தாலும் நீங்க ஒரு சித்தப்பா மாதிரினு.. பாருங்க! இருந்திருந்து இன்னைக்குனு பார்த்து வீட்ல விசேஷம்! இன்னொரு நாள் மீட் பண்ணலாம்..” என்று சரளமாய் பேசிக்கொண்டே போக மற்றவனின் தாடை இறுகியது.

“ஏப்ரல்” என்றவன் அவள் பெயரை கடித்து துப்ப அவளோ அசையாது நின்றாள். அவளையே அவன் வெறித்தபடி நிற்க அக்கியோ,”அப்புமா என்ன நீங்க இப்படி மரியாதை இல்லாம நிக்கறீங்க? அங்கிள்ட்ட சொல்லிட்டு வாங்க லேட் ஆச்சு” எனவும் அதற்கு மேல் தாங்காதவனாய்

“நான் அங்கிள் இல்ல” என்றான் அடிக்குரலில்.

“ஓ..” என்று சிறு தயக்கத்துடன் தேய்ந்த அக்கியின் குரல் மீண்டும் உற்சாகமாய், “ஓ! அப்போ நீங்கதான் அப்புமாவோட டீச்சரா?” எனவும் அவனது பற்கள் கடிபடும் சத்தம் அவர்களுக்கும் கேட்டது. இம்முறை அதிசயமாய் ஏப்ரல் வாயை திறந்தாள்.

“இல்லைபா. இவங்க என் எக்ஸ் பாய்ஃப்ரெண்ட்..” என்றவள் “சொல்லிருக்கேன்ல” என்று அவர்கள் இருவருக்கு மட்டும் தெரிந்த எதையோ குறிப்பிடுவதுபோல பேச அக்கியோ அவளை நம்பாதவனைபோல ஒரு ஆச்சர்ய பார்வை பார்த்துவிட்டு,”நோ வே!” என்றுவிட, அந்த நோ வேயில் மற்றவனுக்குதான் அத்தனை கோபம்!

வலக்கையால் பின்னங்கழுத்தை தேய்த்துக்கொண்டவன்,” ஏன்? ஏன் நோ வே?” என்றான் எரிச்சலாய்.

அதில்,”ஹே சில் சில்! உங்கள இன்சல்ட் பண்ணல.. அப்புமா சொன்னதெல்லாம் வச்சு வேற மாதிரி நினைச்சிருந்தேன்.. யு நோ! அவங்க டேஸ்ட் வேற லெவல்ல இருக்குமேனு” என்றவன் சிறு அசட்டு புன்னகையுடன் அவன் ஷெர்வானி காலரை இழுத்துவிட்டுக்கொள்ள மற்றவனுக்கோ இவன் இவனையே புகழ்ந்துகொள்கிறானா இல்லை தன்னை அசிங்கப்படுத்துகிறானா என்ற சந்தேகமெழுந்தது. குழப்பமாய் பார்த்து நின்றவன் நொடியில் சுதாரித்தவனாய்,”அதான் அவங்க டேஸ்ட் எப்படினு தெரியுதே!” என்று சற்றே இளக்காரமாய் சொல்லிவிட அத்தனை நேரம் அமைதியாய் நின்ற ஏப்ரல் சட்டென அந்த ஸ்குவாஷ் பாட்டிலை அவன் காலிலேயே போட்டாள். அது கீழே விழுந்து தெறிக்கவும் வலி விண்ணெனவும் “ஆ!” என்றவன் குனிய நொடி பொழுதில் குனிந்தவன் தலையில் நங்கென ஓங்கி ஒரு குட்டு குட்டிவிட்டு, அருகில் நின்றவன் கையையும் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினாள்.

நொடிப்பொழுதில் நடந்துவிட்ட சம்பவத்தை அதிர்ந்து பார்த்திருந்த அக்கி அதை கிரகித்துகொள்ளவே சில நொடிகள் பிடித்தாலும் அவள் இழுத்த இழுப்பிற்கு அசைந்தவனாய் ஓடிக்கொண்டிருந்தவன் சட்டென நின்றுவிட அதில் தடுமாறியவள், என்ன என்பதுபோல் மூச்சு வாங்க அவனை ஏறிட அவனோ, “சைக்கிள்?” என்றான் உண்மையான பரிதவிப்புடன்.

இரண்டெட்டில் அவனை நெருங்கியவளோ மறுபடியும் அவன் கரத்தை பற்றிக்கொண்டாள்,”பூட்டியாச்சு!” என்று.

சற்று தூரம் ஓடியவர்கள் கடைசியாய் அந்த அம்யூஸ்மெண்ட் பார்க் வாயிலில் வந்து நின்றனர்.

முட்டியை பிடித்துக்கொண்டு வேர்வை வழிய மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தனர் இருவரும்.

“ஹ.. அன்டர்டேக்கருக்கு அத்த பையன் மாதிரி இருக்கான்.. அவன்ட்ட போய் வாய் வளக்கற.. சிக்கிருந்த ஜின்ஜர் ரசம்தான்! ஹா.. ஹா..” வயிற்றை பிடித்துக்கொண்டு ஏப்ரல் வாய்விட்டு சிரிக்க அவனோ,

“பின்ன என்னங்க.. அப்புமாவ உப்புமா ரேஞ்சுக்கு இன்சல்ட் பண்றான்.. ப்ளடி சித்தப்ஸ்” என்றவனும் மனமாற சிரித்தான்.

ஏப்ரல்,”ஆமா.. அதென்ன அப்புமா?”

அக்கி,”அதுவா.. இந்த அப்புமா அம்முமாலாம் காம்மன் நேம்ஸ்! எந்த பேருக்கும் செட் ஆகும்.. அதுவும் உங்க பேர் ஏப்ரல்னு தெரியவும் என்னவோ உங்கள பார்த்தா சட்டுனு அதுதான் வந்துச்சு வாய்ல” என்றுவிட

அடுத்து வந்த சில நிமிடங்களுக்கு அவ்விடமே அவர்கள் இருவரது சிரிப்பொலியில் நிறைந்திருந்தது.

மெல்ல நிதானத்திற்கு வந்த ஏப்ரல் சட்டென சிரிப்பதை நிறுத்திவிட்டு நிமிரிந்து நின்றாள்.

“ஓகே! நான் ஒரு ஹெல்ப் பண்ணேன் நீ ஒரு ஹெல்ப் பண்ண.. ஈக்வல் ஈக்வல்! இப்போ பை பை” என்றுவிட்டு வாயிலை கடந்து உள்ளே நுழைய அவள் சொன்ன செய்தியில் அதிர்ந்தவனோ, “அதெப்படி?” என்றவாரே மௌனமாய் அவளை பின்தொடர்ந்தான். அவன் தன்னை பின்தொடர்கிறான் என்பதை அறிந்தவள் பட்டென பார்வையை திருப்ப அவனும் தலையை திருப்பிக்கொள்ளவும் அவள் பார்வையை அகற்றியதும் மறுபடியும் பின்தொடர்வதுமாய் இருக்க, பொறுத்து பொறுத்து பார்த்த ஏப்ரல் ஒரு கட்டத்தில் அவன் எதிர்பாராத சமயம் திடுதிப்பென ஓடத் தொடங்கிவிட அதில் அதிர்ந்தவனோ ஏன் எதற்கென்று தெரியாவிட்டாலும் அவளை பின்பற்றி ஓடினான். ஒரு கட்டத்தில் பஞ்சு மிட்டாய் வண்டி ஒன்றின் அருகில் சென்று நின்றவள் பின்னால் வந்து நின்றவனை முறைத்தாள்.

“எதுக்கு இப்ப என்ன தொரத்தர நீ?” என்று அதட்டவும் அவனோ,

“நான் எங்க தொரத்தினேன்! நானே நீங்க ஓடவும் பயந்து ஓடி வந்தேன்” எனவும் அவள் வெளிப்படையாகவே தலையில் அடித்துக்கொண்டாள்.

ஒரு டெடிபேர் பஞ்சு மிட்டாய் வாங்கியவள் அருகில் நின்றவனை கண்டுவிட்டு அவனுக்கும் சேர்த்து ஒன்று சொல்லிவிட்டு தன்னதை வாங்கிச் சென்று கல் பெஞ்ச் ஒன்றில் அமர அவனும் தன்னுடையதை வாங்கிக்கொண்டு அவளருகில் வந்து அமர்ந்தான்.

லேசாக அவனை முறைத்தவள் திரும்பிக்கொள்ள அவனோ என்ன என்பது போல் பார்வையாலே கேட்டான்.

மொத்த பஞ்சு மிட்டாயையும் ஒரே வாயில் அடைத்தவள் எழுந்துக்கொள்ள அவன் எழ முயல்வது புரிந்து அவன் தோள்களை பற்றி அழுத்தி அமர வைத்தவளோ, “ஹே குருவி! இனி என்ன ஃபாலோ பண்ண! அவ்ளோதான்” என்று மிரட்ட அவனோ, “ஆமா.. ஆமா.. இந்த மிரட்டலெல்லாம் என்ட்டதான்” என்று முணுமுணுக்கவும் அவன் தோள்களில் இருந்த கைகளை எடுத்துக்கொண்டவள் நிமிர்ந்து நின்றாள்.

“ஒருத்தர்ட்ட இருந்து ஒளியறோம்னா அது அவங்கட்ட பயந்துதான்னு இல்ல.. நம்ம மூட காப்பாத்திக்கவும் இருக்கலாம்” என்று அமைதிக் குரலில் அமர்த்தலாய் சொன்னவள் அங்கிருந்த ரைடிற்கு வரிசையில் நிற்க சென்றுவிட, செல்பவளையே பார்த்திருந்தவனோ அவள் பின்தொடராதே என்று சொல்லியது நினைவில் வந்தும் ஒரு தோள் குலுக்கலுடன் வரிசையில் அவள் பின்னால் சென்று நின்றுகொண்டான். அவள் ‘நினைத்தேன்’ என்பதுபோல பார்த்துவிட்டு திரும்பிக்கொள்ள அவனோ வரத்துடித்த புன்னகையுடன் வேடிக்கை பார்த்து நின்றான். இந்த மாதிரி இடங்களுக்கெல்லாம் அவன் கடைசியாய் எப்பொழுது வந்தான்? ம்ஹூம்! நினைவில்கூட இல்லை. ஏன் அவனுக்கு இங்கெல்லாம் வரத் தோன்றிருக்கவில்லை? என்னவோ! இனி இங்கு அடிக்கடி வர வேண்டும்.. என்றவன் எண்ணங்கள் வரிசைக்கட்டி ஓடிக்கொண்டிருக்க பார்வையில் எதுவோ இடறியது. அவள்தான்! வரிசைக்காய் போடப்பட்டிருந்த இரும்பு சட்டத்தின் குறுகிய இடைவெளி வழியாய் நுழைந்து வெளியேறியவள் அங்கிருந்து மெல்ல நழுவினாள்.

“ஏங்க!” என்றிவனின் குரலில் திரும்பியவள் இவன் பார்த்துவிட்டதை உணர்ந்தவளாய் விடுவிடுவென கூட்டத்தோடு கலந்து விலக இவனும் பல “எக்ஸ்க்யூஸ்மீ”க்களுடன் வரிசையில் இருந்து விலகினான்.

அவள் சென்ற திசையிலேயே ஓடி வந்தவனின் பார்வையில்.. அதோ! தூரத்தில் அவள் தெரிந்தாள்! ஆனால் அவளுக்கு முன்னால் முறைத்தபடி மூவர்! மூன்று ஆண்களும், அவர்களுக்கு முன்னால் இவளும் தரையில் கிடந்த ஐஸ்கிரீமுமே நடந்தது என்ன என்பதை சொல்லிவிட வரத்துடித்த சிரிப்பை அடக்கியவனாய் முன்னேறினான் இவன். இவனை பார்த்துவிட்டவளோ இவனது சிரிப்பில் இன்னும் கடுப்பாகிப்போனாள். இவன! என்றவள் பற்கள் கடிபட முன்னால் நின்றிருந்தவர்களிடம் திரும்பினாள்.

“என்ன தனியா இருக்கேனு ரொம்பதான் சீன் போடறீங்களா! நான் யார் தெரியுமா? என் பாய்ஃப்ரெண்ட் யார் தெரியுமா? அவன் எவ்ளோ பெரிய பாக்ஸர்னு தெரியுமா?” என்றிவள் அள்ளி விடுவது அருகில் நெருங்கியதுமே சுதாரித்துவிட்டவனுக்கோ பகீரென்றானது. அடிப்பாவீ! ஒரேடியா க்ளோஸ் பண்ண ப்ளான் பண்றாளே! என்றவன் மனது அடித்துக்கொண்டாலும் கால்கள் நெருங்கிவிட்டிருக்க அவளோ அவன் முதுகுக்கு பின்னால் வந்து நின்றுக்கொண்டாள்,” தைரியம் இருந்தா இப்ப வந்து பேசி பாருங்கடா பத்து ரூபா பக்கோடாஸ்!” என்று ஏத்திவிட்டது மட்டுமில்லாமல் சட்டென இவனை அப்படியே ஒரு இன்ச் அவர்கள் புறம் தள்ளிவிட்டு பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடிவிட்டாள். வேர்வை தொப்பலாய் நனைத்திருக்க மெல்ல திரும்பியவனுக்கு அப்படி ஒருத்தி இருந்ததற்கான தடயம்கூட தெரியாது போக எச்சிலை விழுங்கிக்கொண்டு எதிரில் இருப்பவர்களை பார்த்தான். அவர்கள் மூச்சுக்காற்றின் உஷ்ணம் இங்கு வரை அடித்தது. அவெனல்லாம் படத்தில்கூட அடிதடிக்களை அவாய்ட் செய்யும் ரகம்! குட்டி சாத்தான்! எப்படி மாட்டிவிட்டிருக்கிறாள்!

சட்டென எதையோ கணக்கிட்டவன்,”சார்!” என்று அவர்களுக்கு பின்னால் யாரையோ பார்த்து கத்தி கையசைக்க அதில் தன்னிச்சையாக முவரும் திரும்பிட ஜெட் வேகத்தில் எதிர் திசையில் ஓடினான்.

அங்கு தொடங்கியவனின் ஓட்டம் அந்த சூப்பர்மார்க்கெட்டில்தான் வந்து நின்றது. வாசலில் அவள் சைக்கிள் இல்லாததே அவனுக்கான பதிலை தந்துவிட காரணமின்றி எழுந்த ஏமாற்றத்துடன் மெல்ல நடந்தான் அவன். அவன் மனமோ “ஏப்ரல்!” என்று ஏகத்தும் எகிறிக் கொண்டிருந்தது. கூடவே சம்பந்தமின்றி சிறு முறுவல் ஒன்று இழையோட.