ஏப்ரல்-3

ஏப்ரல்-3

ஏப்ரல்-3

ஒரு வருடத்திற்கு பிறகு…

அப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் லாட்டில் தனது சைக்கிளில் வந்து இறங்கிய ஏப்ரல் வழக்கத்திற்கு மாறாய் கணுக்கால்வரை நீண்ட நீல நிற ஜீன்ஸும் அதற்கு பொருத்தமாய் மஞ்சள் நிறத்தில் முழங்கை வரை நீண்டிருந்த குர்தாவிலுமாக வந்திறங்கினாள். அவளது கோரை கூந்தல் எண்ணையை அப்பி இழுத்து வாரப்பட்டு சில பல க்ளிப்புகளுடன் முடிந்தளவு சேர்த்து முடியப்பட்டிருந்தது.

பொறுமையாய் படியேறியவள் அதே தளத்தின் இன்னொரு மூலையில் இருந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு அமைதியே திருவுருவாய் நின்றாள். கதவை திறந்தது ஒரு நடுத்தர வயது மனிதர். கையில் இருந்த கடிகாரத்தையும் அவளையும் பார்த்தவரின் முகத்தில் அப்படியொரு ஆச்சர்யம்!

“அட! வாங்க வாங்க! சரியா ஒம்போது அம்பத்தொம்பதுக்கு வந்திருக்கீங்களே!” என்று வெளிப்படையாய் ஆச்சர்யப்பட மெலிதாய் புன்னகைத்தவளோ,

“எங்க வீட்ல எல்லாருமே கொஞ்சம் ரொம்பவே பன்ச்சுவாலிட்டி பாப்போம்.. ஏன் சார் தொந்தரவு செய்துட்டேனா?” என்றாள் ஏப்ரல்.

“நோ நோ! இல்லமா.. எனக்கும் பன்ச்சுவாலிட்டினா ரொம்ப முக்கியம்! உங்களுக்குதான் வெய்ட் பண்ணிட்டிருந்தேன்.. வீட்ட இன்னொருவாட்டி பாத்துரலாமா?” என கேட்டவர் ஏப்ரல் அதற்கு தலையசைக்கவும் “ஒரு நிமிஷம்” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

திரும்பி வருகையில் அவர் கையில் வீட்டுச் சாவி இருந்தது. இருவரும் வீட்டை பார்க்க மெல்ல நடந்தனர். அவள் ஏற்கனவே பார்த்த வீடுதான், ஆனால் இன்று சாவி வாங்க வந்திருப்பதால் இன்னொரு தரம் பார்த்துவிடலாம் என்ற எண்ணம். அந்த ஃப்ளாட் கதவை திறந்தவர் அவளிடம், “முதல்ல நீங்க உள்ள போங்க” என்றுவிட்டு பின்தொடர்ந்தார். பழைய வீட்டைவிட நல்ல விஸ்தாராமான ஃப்ளாட்தான்! வீட்டு உரிமையாளர் கூட வெளிநாட்டில்தான் இருக்கிறாராம். ஆனால்..

“உங்க நாத்தனார் வரலையா?” இதோ ஆரம்பிச்சிட்டாருல! என்று லேசாய் அலுத்துக்கொண்டே அவர் புறம் திரும்பினாள் ஏப்ரல்.

“அவங்களுக்கு ப்ராஜெக்ட் டெட்லைன் வருது. நைட் ஷிஃப்ட், ஓவர் டைம்னு பாதி நேரம் ஆஃபிஸ்ல தான். இப்போதான் அதிகாலைல வீட்டுக்கு வந்து தூங்கறாங்க.. அதான் நான் மட்டும்” என்று மெல்லிய முறுவலொன்றால் மீதியை நிரப்பிவிட்டு அவள் திரும்ப நினைக்க அவரோ,

“ஓ.. உங்க தம்பிய கூட்டி வந்துருக்கலாமே! அவர் போன தடவையும் வரல..” என்றவர் இழுத்த விதத்தில் இவளுக்கு பகீரென்றானது. அய்யயோ இவர் சாவிய திருப்பி புடுங்கிருவாரு போலருக்கே! மெல்ல விழுங்கிக் கொண்டவள்

“அவன் அதுக்குமேல சார். பேக்கரிய விட்டு நகர மாட்டான். என்ன தான் நாம பாஸா இருந்தாலும் அங்க நின்னாதான் எல்லாம் சரியா வரும்னு சொல்லுவான்.. அவன் அப்படியே எங்கப்பாவ மாதிரி” என்றவளின் மனக்கண்ணில்

“நான் எதுக்கு தெனமும் தூக்கத்த தொலைச்சிட்டு விதவிதமா ட்ரெஸ் பண்ணிட்டு ஷார்பா போய் நிக்கறேன் நினைக்கற? பேக்கிங் வர்ல்ட்ல புரட்சி பண்ணவா? போவியா அங்குட்டு! நானே காலைல டைம்ல காலேஜ் ஸ்டூடன்ட்ஸ், வேலை பாக்கறவங்கனு வர பெண்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியா பல குல்ஃபியாட்டம் நான் இருத்து அவங்க நாள எனர்ஜைஸ் பண்ணிவிடத்தான்! இன்ஃபாக்ட் பேக்கிங் ப்ரஃபஷன்னா இத ஒரு சேவையாவே செய்துட்டிருக்கேன்.. இவ ஒருத்தி கடமை கண்ணியம்னுட்டு போவியா” என்றிவள் பொடனியில் தட்டிவிட்டு கிளம்பியது வந்துபோக மனசாட்சி காரித்துப்பியது. அதை அப்படியே அடக்கி உள்ளே வைத்தவள் அவரிடம் கவனத்தை திருப்பினாள்.

சில நிமிடங்களுக்கு அவர் பேசுவது ஒன்றுமே புரியவில்லை. கவனித்திருந்தால்தானே புரிவதற்கு! கடைசியில் அவர் கேட்ட “சைக்கிள்லயா வந்தீங்க?” என்பது மட்டும் விளங்க, அவர் தான் வரும்பொழுது பால்கனியில் நின்று கவனித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது புரிந்தது.

ஒரு மனுசனுக்கு எத்தனை கேள்வியா வரும்! ச்சை!

“ஆமா சார். இருக்கற பெட்ரோல் விலைக்கு சைக்கிள்தான் பெஸ்ட்னு அவர் அடிக்கடி சொல்லுவாரு.. நானும் மோஸ்ட்லி சைக்கிள் தான் யூஸ் பண்றது” என்று பச்சையாய் புளுகியவளின் முகம் காட்டிய சிறு பூரிப்பிலேயே திருப்தியடைந்தவரோ

“அதுதான்மா சரி! இருக்கற விலைவாசிக்கு சைக்கிள் தான் பெஸ்ட்! எங்க? எங்க வீட்லயும் ஒன்னு இருக்கே! பக்கத்து தெருக்கு போனாலும் பைக்க தூக்கிட்டு போகறது.. என்னவோமா! அவன் வயசுல உன் வீட்டுகாரர் அத்தன பொருப்பையும் எடுத்துக்கிட்டாரு.. ஹ்ம்..” என்றவர் பெருமூச்சொன்றை வெளியேற்ற ஏப்ரலுக்கு போங்களேன் சார்! என்றானது.

அந்த தளத்தில் வரப்போகும் முதல் தமிழ் குடும்பம் இவர்களதுதான் அது பாதியே அவருக்கு ஒருவித உற்சாகத்தை கொடுத்திருந்தது. நம்மூர் மக்கள் என. அதனாலையே அவர் விடாமல் கேள்வி மேல் கேள்வியாய் கேட்டுத்தள்ள இங்கு இவளுக்கு தான் முழி பிதுங்கியது.

“உன் வீட்டுக்காரர் எப்ப வரார் மா?” என்றொரு வித ஆர்வத்துடன் அவர் கேட்க

“அன்னைக்கு சொன்னேன்ல சார்.. ஆன் சைட்னு.. போன வாரம்தான் கிளம்பினாரு. அக்சுவலா அவரும் இருந்து ஷிஃப்டிங்கு ஹெல்ப் பண்றதா இருந்தது.. ஆனா வீடு கிடைக்க லேட்டாகிட்டு..” என்றொரு விரக்தி புன்னகையை வீசினாள் இவள்.

“சரிமா! நீங்க வீட்ட பாருங்க நான் கிளம்பறேன். எதாவது வேணும்னா கேளுங்க” என்றுவிட்டு வெளியேறிவிட அப்பொழுதுதான் ஏப்ரலுக்கு மூச்சே வந்தது.

அவர் தலை மறைவது தெரிந்தது. வீட்டை பார்வையால் அளந்தாள். வாவ்!

கால்கள் மெல்ல மெல்ல தாளமிட தொடங்கின.

“சலோமியா…
சலோமியா…
சுண்டக்கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாளமீனு காலுடா வர்ற Style’ஹ பாருடா
சலோமியா…
சலோமியா…”

வாய்விட்டு பாடிக்கொண்டே வீட்டை சுற்றியவள் சட்டென ஒரு கார்ட் வீல் செய்துவிட்டு கால்கள் தரையில் பதிந்ததும் தன் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டுக்கொண்டாள்.

“வெட்டிப்பய வெற்றிடா
வத்திப்பெட்டி அத்திடா
தேங்கா பன்னு டாப்புடா எங்க புது வீட பாருடா
வீட்டுக்கு வரியா.. யா.. யா..
வீட்டுக்கு வரியா.. யா.. யா..

என் வூட்டுக்குவரியா.. யா.. யா..” மெல்ல ஆடிக்கொண்டே ஒவ்வொரு அறையாய் பார்த்து வந்தவளின் கவனத்தை கலைக்குமாறு ஃபோன் அடிக்க தன் ஆட்டத்தை நிறுத்தாது அழைப்பை ஏற்று காதில் வைத்தவளோ,”இப்ப டெம்போவ புட்றா என் வீரபாகு!” எனவும் அங்கு அடிக்குரலில் வெற்றி “இன்னொரு வாட்டி வீரபாகுன்ன வகுந்துருவேன் வகுந்து!” என்று கடித்து துப்பிவிட்டு

“என்ன மேடம்? ஒரே ஆட்டமா?” என நக்கலாய் கேட்கவும்

“உனக்கு பொறாமை வீர்பாக்ஸ்” என வேண்டுமென்றே அவனை மறுபடியும் கடுப்பேற்றினாள் ஏப்ரல்.

“எது? இந்த காத்து கறுப்பு அடிச்சா மாதிரி கைய கால ஒதறிட்டே புரியாத பாஷைல அபஸ்வரத்துல ஏதோ பாடுவியே அத பாத்து நாங்க பொறாம படுறோமாக்கும்! பட்டுட்டாலும்! மொதல மூடிட்டு போய் கதவ மூடுங்க சகோதரி” எனவும் அவளது ஆட்டம் சட்டென நின்றது. ராட்சசன் அதையும் அறிந்தவன் போல,” என்ன? அதேதான! கதவ மூடலதான? வீட்ல குடிவரதுக்கு முன்னயே காலி பண்ண வச்சுராத தாயே! நீ தயவு செஞ்சு வீட்டுக்கு வா மீதியெல்லாம் நான் பாத்துக்கறேன்” என்று அதட்டலாய் கெஞ்சிக்கொண்டிருக்கையிலேயே ஏப்ரல் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

வீட்டை மறு முறை கண்களால் சுற்றியவளுக்கு அப்படியொரு திருப்தி!

எத்தனை இடங்கள் அலைந்திருப்பர்? பேச்சுலர்ஸ்க்கு வீடு கிடைப்பது கடினம் அதிலும் தனித்து வாழும் பெண்களுக்கு குதிரை கொம்பு! இதில் இவர்கள் இரண்டு பெண் ஒரு ஆண் என்று இருக்கையில் சொல்லவா வேண்டும்! எப்படியோ இவர்கள் இப்பொழுது இருக்கும் வீட்டு உரிமையாளரை தேடி பிடித்திருந்தனர். வசதியான வீடும் கூட! ஆனால் இப்பொழுது அதற்கும் ஆப்பு வைப்பதை போல அவர் மகன் வருகையினால் காலி செய்ய சொல்லிவிட இவர்களது திண்டாட்டம் மறுபடியும் தொடங்கியது.

ம்ஹ்ம்.. ஆழ மூச்சிழுத்துவிட்டவள் கதவை பூட்டிவிட்டு படிகளில் தாவி இறங்கினாள்.

மறுநாளே புது வீட்டிற்கு குடிபெயர்ந்தனர்.

வந்திறங்கிய சாமான்களையெல்லாம் ஓரளவு அடுக்கிவிட்டவர்கள் பெரிய பெரிய பெட்டிகளை மட்டும் இறக்க இறக்க அப்படியே ஆங்காங்கே வைத்துவிட, அத்தனையும் இறக்கி முடித்து வந்தவர்களை அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்த பிறகே முகத்தில் மோதியது பெட்டிகள் குமிந்து கிடந்த வீடு. நடுவில் கிடந்த குட்டி சோஃபாவை தவிர்த்து சுற்றிலும் பெட்டிக்களாய் இருக்க வெற்றிக்கும் ஏப்ரலுக்கும் கண்ணைக்கட்டிக் கொண்டு வந்தது. அதிதி அழகாய் அடுக்களை பக்கம் நழுவிக்கொண்டாள்.

“நான் காஃபி போடறேன்..” என்றோடியவள் அங்கு அடுக்களையில் எல்லாம் பிரித்து அடுக்கப்படாமல் அப்படி அப்படியே இருப்பதை பார்த்துவிட்டு திருதிருவென முழிக்க அவள் பின்னோடே முறைத்துக் கொண்டு வந்த வெற்றிக்கு இப்பொழுது சிரிப்பு பீறிட்டது.

“என்ன ஜகன்மோகினி மாதிரி கால்லயே பால் காய்ச்ச போறியா?” எனவும் அவனை பார்வையாலையே அவள் காய்ச்ச தொடங்க அவள் தலையில் தட்டியவனோ, “வீட்டுல பாலே இல்ல காபி போடறாளாம்.. டீ தூளுக்கும் காபி தூளுக்கும் வித்தியாசம் தெரியுமா மேன் உனக்கு?” என்றுவிட்டு பையை தூக்கிக்கொண்டு வெளியேறியவன் ஏப்ரலிடம்,”நீ அடுப்ப செட் பண்ணிரு நான் பால் வாங்கிட்டு வந்துடறேன்” என்றுவிட்டு வெளியேறுவது கேட்டது.

“நல்லா சமைக்க தெரிஞ்ச ஒரே காரணத்துக்காக இந்த வெட்டுகிளிக்கிட்டலாம் பேச்சு வாங்க வேண்டியதா இருக்கு! ச்சைக்! கடைசில உன் நெலம இப்படியாயிடுச்சே அதி! எல்லாம் இந்த நாக்கு.. நாக்கு! செத்தபய நாக்க சொல்லனும்!” என்று தன் வாயிலேயே போட்டுக்கொண்டவள் அடுத்து ஏப்ரல் அழைப்பதற்குள் நழுவி பால்கனிக்கு சென்றாள்.

இங்கு பால் வாங்க வந்த வெற்றிக்கு மத்தியம் வெளியில் காரசாரமாய் உண்ட உணவு வேறு நெஞ்சு கரிப்பது போல் இருக்க எதற்கும் இருக்கட்டும் என்று மூவருக்கும் சேர்த்து மோர் பாக்கெட்டுகளும் வாங்கிக்கொண்டவன் மெல்ல நடக்கத் தொடங்கினான். அவர்களது பழைய வீடிருந்த இடத்தைவிட இங்கு சற்று குளிர் தூக்கலாய் தான் இருந்தது. அவன் முழுக்கை டீஷர்ட்டுக்கு மேல் அத்தனை கனமான புல்லோவர் ஒன்றை அணிந்து அதன் ஹூடியை தலைவரை இழுத்துவிட்டிருந்தும் குளிர் சற்று தெரியத்தான் செய்தது.

இயர்ஃபோனுக்குள் ‘பனி விழும் மலர்வனம்’ ஓடிக்கொண்டிருக்க மெல்ல நடந்தவனின் உலகில் அடுத்த இரண்டு நிமிடங்கள் இடிவிழும் மலர்வனமானது.

பருப்பு, எண்ணெய் என அதன் அதனை இடம் பார்த்து வைத்துக்கொண்டிருந்த ஏப்ரல் அழைப்பு மணி அடிக்கவும் அடுக்களையினுள் இருந்து வெளியேறியவள், “அத்தி! கதவ தொற அவன்தான் வந்துருப்பான்” என்று போற போக்கில் சொல்லிவிட்டு ஒரு அறையினுள் நுழைந்துக்கொள்ள, அதில் அவளையே குழப்பமாய் பார்த்துக்கொண்டே பால்கனியில் இருந்த அதிதி கதவை திறக்க சென்றாள். திறந்தவளுக்கு ஏக அதிர்ச்சி.

வெற்றிதான் வந்திருந்தான். ஆனால் அவன் தோற்றம்! கண்கள் இரண்டும் கலங்கலாய் ஒரு மாதிரி இருந்தவனை பார்த்து அதிர்ந்தவள்

“டேய்! என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று லேசாய் பதற அவளிடம் மறுப்பாய் தலையசைத்துவிட்டு வீட்டினுள் நுழைந்தவனோ பால் வாங்கி வந்த பையை அப்படி தரையில் வைத்துவிட்டு போய் சோஃபாவில் அமர்ந்துக்கொள்ள அதில் இன்னும் குழம்பியவளோ அமைதியாய் அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.

மெல்ல அவன் புஜத்தில் கை வைத்தவள் “டேய்.. என்னடா ஆச்சு?” என்று மறுபடியும் கேட்க அவள் புறம் திரும்பியவனின் பாவத்தை தான் அவளால் படிக்க இயலவில்லை.

“ஒரே அசிங்கமா போச்சு அதி” என்றவனுக்கு லேசாய் சிரிப்பு வந்ததோ?

அதிதி, “நெனைச்சேன்! நீ தனியா கடைக்கு கிளம்பினப்பவே ஏதாவது சர்க்கஸ் பண்ணுவேனு..” என்றுவிட பீறிக்கொண்டு வந்த சிரிப்பையும் அதற்கு நேர்மாறாய் கலங்கிக்கொண்டிருந்த கண்களையும் கட்டுப்படுத்தும் வழியறியாது நின்றவனே தொடர்ந்தான்.

“நான் பால் வாங்க போனேன்ல.. மத்தியம் வெளில சாப்டது வேற ஒரு மாதிரி நெஞ்சுல நின்னுச்சா.. சரி மோரும் வாங்குவோம்னு மூணு பேருக்கும் வாங்கிட்டு வந்துட்டு இருந்தேனா.. அப்ப ஒரு பாட்டி, ப்ளாட்ஃபார்ம்ல உக்காந்துருந்தாங்களா.. அவங்க என்ட்ட பைசா கேட்டாங்க, நான்தான் பர்ஸ் எடுத்துட்டு போலயே! ஆன்லைன்ல தான பே பண்ணேன்.. இல்லனு சொல்லிட்டு கொஞ்ச தூரம் வந்துட்டேன்.. ஆனா கொஞ்சம் ஒரு மாதிரி இருந்துச்சு.. நைட் நேரம் ஒருத்தங்க கேட்டு இல்லனுட்டோமேனு.. சரினு திரும்பி போய் அதே கடைல இன்னும் ரெண்டு மோரும் ஃப்ரூட் கேக்கும் வாங்கிட்டு வந்து.. பாட்டி என்ட்ட பைசா இல்ல, ஆனா இத வச்சுக்கறீங்களானு கேட்டேனா..” என்றுவிட்டு சிறு இடைவேளைவிட்டவன் மற்றவளை பார்த்தான். அவள் மேலே சொல்லு என்பது போல் மௌனம் சாதிக்க மீண்டும் அவனே தொடர்ந்தான்.

“அந்த பாட்டி அதுக்கு.. இதெல்லாம் எனக்கு வேணாம்.. வாங்க மாட்டேனு ஏதோ இதெல்லாம் மனுசன் சாப்பிடுவான்னான்ற மாதிரி டோன்ல சொல்லிட்டாங்கலா.. எனக்கு அழுகையே வந்துருச்சு அதி.. ஒரே அசிங்கமா போச்சு..” எனவும் ஒரு நீண்ட மௌனத்திற்கு பிறகு வெடித்துக்கொண்டு வந்த அதியின் சிரிப்பு அந்த அறையை நிறைக்க அவனுக்குமே அழுகையும் சிரிப்பும் ஒன்றாய் வந்தது. அப்பொழுதே வெளியில் வந்த ஏபர்லும் அடக்க மாட்டாமல் சிரிப்பது பார்வையில் விழுந்தது. மெல்ல நிதானித்துக்கொண்டவனோ,”இரு இரு.. இனிமே தான் இது இன்னும் மோசமாக போது” எனவும் அதிதி இதுக்கு மேல என்னய்யா பண்ண என்று பார்த்திருக்க

வெற்றி,”அங்க இன்னொரு தாத்தா இருந்தாரா.. அவர்ல.. என்ட்ட வந்து அது என்னதுனு கேட்டாரா நான் காட்டினதும் எனக்கு தானு கேட்டாரு.. சரி கேக்கறாங்களேனு நான் குடுத்தா வாங்கி உத்து உத்து பாத்துட்டு இதெல்லாம் வேணாம்னு திருப்பி தர வந்தாரா.. எனக்கு ரொம்ப அழுகையா வந்துடுச்சு.. நான் இல்ல தாத்தா நீங்களே வச்சுக்கங்க சாரினு சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்” எனவும் அதிதிக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தாலும் அவனை பார்க்க பாவமாகவும் இருந்தது.

அதிதி,”சரி விடு! நாம வாங்காத செருப்படியா?” என்றவன் தோளை தட்டிக்கொடுக்க அவனோ

“அது இல்ல அதி.. மொதல்ல நான் செய்யறது சரினு தோணுச்சு ஆனா இப்ப யோசிச்சா ரொம்ப தப்புனு படுது.. அவங்களுக்கு என்ன தேவைனு கேக்காம நானா முடிவெடுத்தது என் தப்பு தானே..” என்று வருந்தவும் இப்பொழுது அவளுக்கு இன்னும் பாவமாய் போனது. இது ஒரு ஆறடி அல்வா செலை! என்றெண்ணம் ஓட அது தந்த மெல்லிய முறுவலுடன் அவன் தோளை சுற்றி கைபோட்டுக் கொண்டவளோ,

“சரி விட்றா வெட்டுக்கிளி! நீ நல்லது நினைச்சுதான பண்ண? அது தப்பா போயிடுச்சு.. இனி எதும் செய்றதுக்கு முன்ன கேட்டு செய்” என்றவன் தோளில் அழுத்தம் குடுக்க அவனுக்கு மறுபுறம் வந்தமர்ந்து அதே போல் அவன் தோளில் கைப்போட்டுக்கொண்ட ஏப்ரலும்,”ஆனா சும்மா சொல்லக்கூடாதுரா! ஔட் ஆஃப் த வே போய் அசிங்கப்பட்டு வந்துருக்க!” என்றுவிட மீண்டும் அவ்வறையை நிறைத்தது அவர்களது சிரிப்பு சத்தம்.

 

 

 

error: Content is protected !!