2
வீட்டினுள் நுழைந்த அஷ்மிதாவின் முதல் கேள்வி
“இஞ்சி வந்தாச்சாமா?” என்பதுதான். வேலையாக இருந்த லீலாமதியோ
“அவ என்னைக்குடா காலேஜ் விட்ட உடனே வந்துருக்கா?” என்று கேட்க அப்பொழுதுதான் அவளுக்கு மூச்சே வந்தது ‘ஓ…அதான் வீடு அமைதியா இருக்கா’ என்றெண்ணியவள்
“ஆராவ இன்னும் சரி செய்யலையா ம்மா?” என அவரோ
“இல்லடா கடைக்கு கொண்டு போகனும்” என்க அவளுள் ஒரு யோசனை!
ஆரா வை அவளே உருட்டிச் சென்றாள் கடைக்கு. ஆரா- ஆரா குறிஞ்சியின் சைக்கிள். அவளிடம் இருக்கும் எல்லாவற்றிற்கும் ஒரு பெயர் வைத்திருப்பாள். அவளது தோள்பை புஜ்ஜீ முதற்கொண்டு இரண்டு வாரத்திற்கு முன்பு வாங்கிய சின்ட்டூ – பொம்மை வரை…
ஆரா பஞ்சராகியிருந்தது. நேரமின்மையால் அதைச் சரி செய்ய முடியவில்லை…
அந்த ஆள் அரவமில்லா சாலையில் ஆராவை ஓட்டிய பொழுதுதான் அவளுக்கு அவளது இஞ்சியின் பக்கத்து நியாயம் புரிந்தது. பின்னே இவளும் அவள் சைக்கிள்தான் வாங்குவேன் என்று நின்றபொழுது கேலி செய்தவள்தானே.
“ஹே! எல்லாரும் கலாய்க்க போறாங்க…”
“ஏன்?”
“பின்ன என்ன எல்லாரும் ஸ்கூட்டீ பைக்குனு இருந்த நீ ரிவர்ஸ்ல யோசிக்கற சைக்கிள்னு…”
“யார் கலாய்ச்சா எனக்கென்ன அஷ்மி…எனக்கு பிடிச்சிருக்கு நான் சைக்கிள்லதான் போகப்போறேன்” என்றவளாயிற்றே.
அதுவும் ஆரா அவளே வாங்கியது பகுதி நேர வேலைக்குச் சென்று
முதலில் அவள் வேலையென்றவுடன் மறுத்தவர்கள் பின் அவளது சந்தோஷத்துக்காக ஒத்துக்கொண்டனர். பின்னே அப்பொழுது அவள் வயது வெறும் பதினேழு!
அவள் என்றுமே அஷ்மிக்கு வியப்புதான்!
*************
அந்த வீடு ஒரு குட்டி போர்க்களமாகிக்கொண்டிருந்தது. வேறு யாராக இருக்க முடியும் குறிஞ்சிதான்.
“அஷ்மி துரோகி!!!!” என்று கத்த அவளோ
“இஞ்சீ!!!” என்று அலற லீலாவோ இவர்கள் போட்ட சத்தத்தில் அங்கு வந்தவர்
“என்னாச்சு இரண்டு பேருக்கும்?” என்றார்
“பாரு லீல்! உன் பொண்ணு பண்ணி வச்சிருக்கற வேலைய…”என அவரோ புரியாமல் அஷ்மிதாவைப் பார்த்தார் அவளோ,
“நீயே கேளும்மா காலைல இவதானே குளிச்சிட்டிருக்கும்போது என்ன கால அட்டன்ட் பண்ண சொன்னா… இப்ப வந்து குதிக்கறா” என குறிஞ்சியோ
“ஓய் ஓய் ஓய்!! நான் கால அட்டன்ட் தான் பண்ணச்சொன்னேன்.. நான் எத்தன மணிக்குத் தூங்கினேன்னு புவன்கிட்ட சொல்ல சொல்லல…”
“நீ அத முதல்லயே சொல்லிருக்கணும் அவ ஏன் லேட்டுனு கேட்டா நான் சொன்னேன்” என்றவள் சொல்லவும் ஃபோன் இசைக்கவும் சரியாக இருந்தது அதை எடுத்தவளோ
“ஒரு அஞ்சு நிமிஷத்துல அனுப்பறேன்” என்று பேச இங்கு லீலாவோ
“ஏன் இஞ்சி கோவப்படுற?” என்க அவளோ
“நான் எங்க கோவப்பட்டேன்” என்று கண்ணடித்தாள்.
“அடிப்பாவீ!!!” என்றவர் பார்க்க அவளோ அவரைக்கட்டிக் கொண்டு
“அம்மூ இன்னும் பச்ச பிள்ளையாவே இருக்கு” என்று அவர் கன்னத்தைக் கிள்ளியவள், “குறிஞ்சிக்கு பூஸ்ட் எங்க?” என்றாள் கொஞ்சல் குரலில் அவரோ,
“அதெல்லாம் அப்பவே ரெடிங்க மேடம். நீங்க சொல்லுங்க மேடம். நான் கொண்டுவரேன் மேடம்” என்றார் வார்த்தைக்கு ஒரு மேடம் போட்டு.
“ஓய் கேடி அம்மூ!!! எப்படி லீல் இப்படி ஈக்வல் டஃப் குடுக்கற”
“ஹம்ம்ம்.. தி க்ரேட் குறிஞ்சிக்கு அம்மூவா இருந்துட்டு இதக்கூட பண்ணலன்னா எப்படி?”
“கலாய்க்கற” என்க லீலாவோ ஒரு பூஸ்ட்டை கொடுத்து அவளை ஆஃப் செய்தார்.
ஃபோன் பேசி முடித்து வந்த அஷ்மியோ குறிஞ்சியைப் பார்வையால் தேட லீலா “அவ அப்போவே ரூமுக்கு போய்ட்டா ஏதோ வேலையிருக்காம்” என்று சொல்லி முடிப்பதற்குள் அங்கு அவர்கள் அறையில் ‘ஏ!!! என் கோலி சோடாவே!…என் கறி குழம்பே…’ என்று பாட்டு அலறியது. அவளுக்கோ ‘போச்சுயா!!!ஆரம்பிச்சிட்டா…’ என்றானது.
அவள் அறைக்குள் நுழைந்தாள். குறிஞ்சி வசதியாக தரையிலமர்ந்து கால்களை நீட்டி அந்த லேப்டாப்பையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு எதையோ ஆராய்ந்துகொண்டிருக்க
“என்ன இஞ்சி?” என்றாள். அவளோ பார்வையை அகற்றாமல்
“ஒரு சின்ன அசைன்மென்ட் அஷ்மி”
“ஓ.. சரிடா நான் ஃப்ரெஷாயிட்டு வரேன்” எனவும், அவ்வளவு நேரம் பார்வையை அகற்றாதவள் இப்பொழுது நிமிர்ந்து
“உன்னாலதான் அஷ்மி தண்ணி பஞ்சமே”என்றுவிட்டு குனிந்துகொள்ள அவளோ,
“அதுக்காக உன்ன மாதிரியா காக்கா குளியல் அதுவும் காலையில அவசர அவசரமா”
“பாரு குளிச்சு குளிச்சே நீ தேயப்போற” என்றுவிட அஷ்மியோ ‘அடியாத்தி இவ அடுத்த ரௌன்டுக்குல ரெடியாற…’ என்று பதறியவள் பாத்ரூமிற்குள் ஓடிவிட்டாள்.
குறிஞ்சி அவளது வேலையில் மூழ்கிவிட, அவளது கவனத்தைக் கலைப்பதற்கென்றே அடித்தது அஷ்மியின் ஃபோன்.
“அஷ்மி ஃபோன்!!!” என்று இவள் கத்த அவளோ உள்ளிருந்தபடியே
“யாருன்னு பாரேன்” என்றாள். அதற்குள் அது தன் அலறலை நிறுத்தியிருந்தது. சரியென்று அவள் மறுபடியும் மடிக்கணினியைக் கட்டிக்கொள்ள இம்முறை அவளது ஃபோன்.
‘அடேய் எவன்டா அவன்.. நிம்மதியா அசைன்மென்ட் கூட பண்ணவிடாம’ என்று புலம்பிக்கொண்டே எடுத்தவள் அது புவன் என்று காட்டியதும் அதை உயிர்ப்பித்து
“என்ன புவன்?”
“என்ன என்ன புவன்?” என்று அந்தப் பக்கத்திலிருந்தவள் கடுப்பேற்ற இவளோ
“சரி என்ன எரும?” என்றாள் சீரியஸான குரலில்.
“விளையாடாத மேடி” என்றவளிடம் “ஒரு நிமிஷம் புவன்”
என்றுவிட்டு ரிஷிக்கும் , ஸ்வராவுக்கும் கான்ஃப்ரன்ஸ் போட அவர்களும் இதில் இணைந்தவுடன் கேட்ட முதல் கேள்வி
“ஆர் யு சீரியஸ் மேடி?” காரணம் அவள் செய்யவிருக்கும் காரியம் அப்படிப்பட்டது.
இன்னும் சில வாரங்களில் வரவிருக்கும் ஒரு நேஷனல் கான்ஃபரன்ஸிற்கு இவர்கள் டீமை ப்ரொஃபஸர் பரிந்துரைக்க இவளோ இவர்களிடம் “நாம கட்டாயம் பண்றோம்” என்றிருந்தாள்.
அதற்குத்தான் இவ்வளவும்.
புவனாவோ “நான் அவங்க குறுகுறுன்னு பார்க்கும்போதே நினைச்சேன்!! வில்லங்கம் விசிட்டிங் கார்ட நீட்டியிருக்கு நீயும் வாங்கி பாக்கெட்டுகுள்ள போட்டுட்டு எங்களையும் இழுக்கற” என
குறிஞ்சியோ “ஜோக்கு? நல்லாயில்ல” என்றாள்.
ரிஷி “அவ சொல்றதும் கரெக்ட்தானே மேடி இது பெரிய கான்ஃபரன்ஸ் பிஜி ஸ்டூடன்ட்ஸும் வருவாங்க நிறைய பிஸ்னஸ் பீபிளும் வருவாங்க.. நம்மளால முடியுமா? நமக்கு டைமும் அவ்வளவா இல்லையே” என்றான் சந்தேகமாய்.
“அதுக்காகத்தான் சொல்றேன் நாம கட்டாயம் பண்றோம்! நாளைக்கு நாம PhDலாம் பண்ணா இப்படியா இருப்பீங்க?” என புவனோ
“நாங்க ஏன்பா PhDலாம் பண்ணப்போறோம்” என்று புலம்பித்தள்ளினாள்.
“சரி PhD இல்ல ஆனா நாம பிஸ்னஸ் பண்ணப்போறோம்ல நமக்கு நல்ல எக்ஸ்போஷர் வேண்டாமா?” என
“அவ சொல்றதும் சரிதான்” என்றது ஸ்வரா.
“நீ வாம்மா என் தங்கம்!” என்றவள் மற்ற இருவரையும் சம்மதிக்க வைக்க முயல மறுபடியும் அஷ்மிதாவின் ஃபோன் அலறியது.
“அஷ்மி ஃபோன்!!!” என்றவளின் கத்தலில்
“இதோ வரேன் இஞ்சி” என்றிருந்தாள் ஆனால் அது அந்தப் பக்கமிருந்தவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையல்லவா? அதுவோ தொடர்ந்து கதற, அஷ்மிதாவோ
“இஞ்சி யாருன்னு பாரு” என்க ஏற்கனவே கடுப்பிலிருந்தவளோ அதை அரைகுறையாகப் பார்த்துவிட்டு
“எதோ நரி…” என்றந்தப் பெயருக்கு அவளால் முடிந்த நல்லதைச் செய்தாள். அஷ்மி ‘யாரது நரி’ என்று யோசித்துக்கொண்டிருக்க இங்கு தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்த ஃபோனை எடுத்தவளோ
“ஹலோ!!!” என அந்த பக்கத்திலிருந்தவனோ ஏதோ ஒரு அவசரத்தில்
“அஷ்மிதா சீக்கிரம் அந்த பிடிஎஃப் அனுப்பறீயா?” என்று படபடக்க இவளோ
“அனுப்ப முடியாது” என்றுவிட்டு அணைத்திருந்தாள்.
‘லூசுப்பய யாரு பேசறான்னே தெரியாம ஒளற வேண்டியது’ என்றுவிட்டு அவளது பிரச்சனையைக் கவனிக்கக் கடைசியில் ஒருவழியாக அவர்கள் அதன் நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.
பாடல் மாறியிருக்க வெளியே வந்த அஷ்மியோ
“யாரு இஞ்சி?” என்று கேட்டாள்.
“இந்த இஞ்சி பிஞ்சிலாம் வேணாம் “என்றவளின் கோபக் குரலில்.
“உன்ன இத்தன வருஷமா அப்படித்தான் கூப்பிடறேன். இனிமேலும் அப்படித்தான் கூப்பிடுவேன்” என்றுவிட்டு
“சரி யாரு கூப்பிட்டா?” என்றாள்.
“ஏதோ நரின்னு போட்ருந்துச்சு…” என்க அஷ்மியோ விழுந்து விழுந்து சிரிக்க அதில் புருவங்கள் நெறிய
“ஏன் இப்போ இப்படி சிரிக்கற?” என்றவளிடம்
” அது நரி இல்ல நரேந்தர்” என்றுவிட்டு மறுபடியும் சிரிக்க அவளோ
“எதோ ஒன்னு ஆனா சரியான லூசு” என்கவும் அவளது சிரிப்பு சடன் ப்ரேக் போட்டது.
“என்ன? நீ அட்டன்ட் பண்ணியா?” என்று அதிர்ச்சியுற அவளோ
“ஆமா அடிச்சிக்கிட்டே இருந்தது. அதான் எடுத்தேன்”
“என்ன சொன்ன?”
” எதோ பிடீஎஃப் அனுப்ப சொன்னான்…”
“நீ என்ன சொன்ன?” என்றவள் கேட்க அவள் பயந்ததுபோலவே அவளும்
“அதெல்லாம் அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டேன்” என்றுவிட்டு வேலையில் கவனமாகிவிட. அஷ்மிதாவோ
“அடிப்பாவீ!!! இஞ்சீ” என்று மொபைலை நோக்கி ஓடினாள்.
இதுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லப்பா என்ற முக பாவத்துடன் அசைன்மென்டை பார்த்து
“இரு உன்ன செஞ்சிடறேன்”. என்றாள் இஞ்சியாகப்பட்ட குறிஞ்சி.