கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் – அத்தியாயம் 7(1)

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்

 

அத்தியாயம் 7(1)

 

இளாவின்  மனதை அறிந்ததும் பெரிய பாரம் விலகியதாக வேதாவின் மனது. பூஜையறையில் சென்று, மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்து விட்டு வந்தார்.

 

மனமும் உடலும் பரபரக்க, என்ன செய்வதென்று தெரியாமல் அங்குமிங்கும் நடந்தவரை , ரோஜாவுக்கு பார்க்க சிரிப்பாய் இருந்தது.

“மீ, என்னாச்சு உங்களுக்கு, இன்னும் பத்து வயசு குறைஞ்சு போச்சு,”

 

புன்னகை முகத்துடன் நினைவுக்கு வந்தவராய்,

“ரோ இங்க வாடா.. பால்கோவா  செய்யணும்.. பாலை அடி கனமான பாத்திரத்தில் கொதிக்க வை..” ரோஜா வை உதவிக்கு அழைத்தார்.

 

ரோஜா அதற்கு , “என்ன மீ.. காலையிலதான ஸ்வீட் செஞ்சோம்.. மறுபடியும் ஸ்வீட்…?”

 

“உன் அண்ணன் நல்ல செய்தி சொல்லியிருக்கான் ரோ . அதுக்கு தான். இப்பதான் ஆரா  அவனுக்குள்ள அபிப்ராயம் இருக்கிறது பயலுக்கு தெரிஞ்சிருக்கு.. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம்  இப்ப தான் நல்ல காரியம் நடக்க ஆரம்பிச்சிருக்குடா அவனுக்கும் ஆராக்கும்.அதுவும் அவங்க பெத்தவங்க செத்து இத்தனை வருஷத்திற்கு அப்புறம்……

அதான் ஸ்வீட் செஞ்சே ஆகணும் எனக்கு இப்போ..”

 

“இளா அண்ணா, ஆராவோட அப்பா,அம்மா இல்லைன்னு தெரியும் எப்போ இறந்தாங்க மீ….?”

 

“ கிட்டதட்ட  பதினஞ்சு இருபது வருஷத்துக்கு மேல இருக்கும் அவங்க  எல்லாம் தவறி……..”

 

“அவங்க நாலு பேருமே ஒரே டைம் ல செத்துட்டாங்களா மீ…”

 

“ஓ,…உனக்கு அவங்களை பத்தி தெரியாது தானே … இரு சொல்றேன்.. முதல்ல இருந்து சொன்னாதான் தெரியும்… அப்படியே பால் சுண்ட ஆரம்பிச்சதும் கை விடாமல் கிண்டனும்…”

பால்கோவா வுடன் சேர்த்து  இளா, ஆராவின் ஃபிளாஷ் பேக்கையும் கிண்டினார் வேதா…

 

“இளாவுடய அப்பா சுகுமாறன், ரொம்ப வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அவன் அம்மா இளவரசியும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவங்கதான். இளவரசியின்  பெரியப்பா மகன் தான் ராமச்சந்திரன் அண்ணன். ராமு அண்ணன் ,சுகுமாரன்  அண்ணன், என் அண்ணன் வைத்தியநாதன் மூணு பேரும் ரொம்ப நெருக்கமான ப்ரெண்ட்ஸ் ..…..”

 

“ டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ் ஆரம்பிச்சு சுகுமாறன் அண்ணனும் , ராமச்சந்திரன் அண்ணனும் நடத்த என் அண்ணன் ஆடிட்டரா இருந்தாரு. திருச்சியில் ஆரம்பிச்ச ஆசிர்வாத்தோட கிளையை பார்த்துக்க ராமு அண்ணன் போனாரு. போன எடத்துல  …,பெரிய  குடும்பத்து பொண்ணான பொற்கொடிய காதலிச்சாரு … பொற்கொடியொட அப்பா ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர். “

 

“இவங்க காதலுக்கு சிவப்பு கொடி காட்டிட்டாரு. அவரு ரொம்ப செல்வாக்கான ஆளு அந்த பக்கம். தான் பொண்ணுக்கு வேற மாப்பிள பார்க்க ஆரம்பிச்சுட்டாரு. அப்புறெமென்ன….,பொற்கொடிய கூட்டிட்டு போயி, மலைக்கோட்டையில வச்சி மாலை மாத்திகிட்டாரு ராமு அண்ணன்… இது தெரிந்த அவ அப்பாவும் அவுங்க குடும்பமும்  இவளுக்கும் எங்களுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லைன்னு தலை முழுகிட்டாங்க. அப்புறம் பொற்கொடியும் , ராமு அண்ணாவும் சென்னைக்கே வந்துட்டாங்க.  அப்ப இளாவுக்கு ரெண்டு வயசு இருக்கும்.. கிருஷுக்கு  எட்டு மாசம் இளமை அவன்.பொற்கொடின்னா உயிரு இளாவுக்கு. இடுப்புல ஏறினான்னா இறங்கமாட்டான். ராமு அண்ணன், பொற்கொடிக்கிட்ட போனாலே, அழுது அடம் பிடிச்சு அவரை துரத்தி விட்டுதான் மறுவேலை பார்ப்பான்.”  அன்றைய நினைவுகளினில் ஒரு பெருமூச்சு கிளம்பியது வேதாவிற்கு.

 

“ராமு அண்ணாவும் மாறன் அண்ணனும் சேர்ந்து அப்பதான் ஆசீர்வாத் பவன் கட்டி குடி போனாங்க… இளவரசி குடும்பத்தில் அவங்க பெத்தவங்களுக்கு அப்புறம். பெரிய சொந்த பந்தம் இல்லை.. ஆனா சுகுமாறன் அண்ணனுக்கு சுகந்தின்னு ஒரு தங்கச்சி இருந்தாள். அவளை ராமு அண்ணனுக்கு  எப்படியாவது கட்டி வச்சிடனும்னு நினைச்சிட்டு இருந்தாங்க  அவங்க அம்மா ,ஆண்டாள் . ஆனா ராமு அண்ணனின் கல்யாணம் அவங்களுக்கு பெரிய இடியா விழுந்துடிச்சி..”

 

“சுகந்திக்கு  வேற இடத்தில கல்யாணம் ஆகியும்

அந்த கோபத்தை இளவரசி மேலயும், பொற்கொடி மேலயும் காட்டிட்டு இருந்தது அந்த அம்மா. இதைப் பார்த்த சுகுமாறன் அண்ணா  கேள்வி கேட்கவும், அவர்கிட்ட சண்டை போட்டுட்டு  சுகந்திவுடைய வீட்டுக்கு போயிட்டாங்க..”

 

“அடுத்த கொஞ்ச வருஷத்துல ஆராதனா பிறந்தாள்.

ரெண்டு குழந்தைகளும் அந்த வீட்டுல இளவரசன், இளவரசி யா வளர்ந்தாங்க… ஊரே கண்ணு வைக்கிறது போல இருந்தது அவங்க நட்பு. சுகுமாறன் அண்ணாவுக்கு கல்யாண நாள் வந்தது…, இளாக்கும் , கிருஷுக்கும் அன்னைக்கு பரீட்சை. இளாவை என்கிட்ட விட்டுட்டு, விருத்தாச்சலத்தில் இருக்கிற குல தெய்வக் கோயிலுக்கு போனாங்க…”

 

“ம்.. கம்” தொண்டையை செருமிக்கொண்டு வேதா மேலே தொடர்ந்தார்.

“மதியம் இளாவுக்கு   பரீட்சை முடியறதுக்கு முன்னாடியே, எதிர்ல வந்த லாரி இவுங்க காரோட மோதி, அங்க மூணு பேரோட வாழ்க்கை முடிஞ்சிடுச்சி…ஆராவையும், பொற்கோடியையும் மட்டும் அரை உசிரா மீட்க முடிஞ்சது. உசிர கையில பிடிச்சு கிட்டு ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்தாங்க அம்மாவும் மகளும்…அப்ப என் அண்ணன் பொற்கொடி குடும்பத்துக்கு தகவல் சொல்லி விட்டாரு..”

 

“ஆனா பொற்கொடின்னு யாரையும் தெரியாதுன்னு பழைய கோபத்தில் அவ அப்பா கதவை பூட்டிகிட்டாரு … ஆராவுக்கு ஓரளவு உடம்பு தேற தேற, பொற்கொடிக்கு ரொம்ப மோசமாகிகிட்டே வந்தது..”

 

“என் அண்ணனை கூப்பிட்டு இளாவை பார்க்கணும்னு வரவழைச்சாங்க. இளாவுக்கும் ஆராவுக்கும் எங்கண்ணனையே கார்டியனா போட்டாங்க. அதோட அவுங்க பேருல  இருந்த எல்லா சொத்தையும் இளா பேருக்கு எழுதினாங்க. ஆரா பேர்ல இருக்கட்டும் என்று எவ்வளவோ பேசிபார்த்தோம்.”

 

“என் பொண்ணெயே மருமகங்கிட்டா ஒப்பைடைக்கிறேன்.., சொத்து கொடுத்தா தப்பான்னு  கேட்டு எங்க வாயை அடைச்சிட்டாங்க. இளாக்கு பொற்கொடின்னா உசுரு.. அவளாவது இருக்கான்னு நினைச்சிட்டு இருந்தான் புள்ளை..”

 

“இளா வை கூப்பிட்டு, பொற்கொடி சந்தோஷமா பேசினா….. கடைசியாக அவ பேசின வார்த்தை இன்னும் எனக்கு அப்படியே நினைவில் இருக்கு.”

 

 “அத்தை கிட்ட  , என்ன ஏன் கல்யாணம் பண்ணிக்கலைன்னு கேட்டுகிட்டே இருப்பியே டா தங்கம்…உனக்கு அத்தைய அவ்வளோ பிடிக்குமா இளா.? எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் டா கண்ணா.  ஆனா உன்னை ஆளாக்கி பார்க்க எனக்கு கொடுத்து வைக்கல..அத்தையால உன் கூட இனிமே இருக்க முடியாது… ஆனா என் உயிர்க்கு உயிரான ஆராவை உன்கிட்ட விட்டுட்டு போறேன்டா…ரெண்டு பேரும் சந்தோஷமா நீடூழி வாழனும் …அத்தை உன்னை விட்டு எங்கேயும் போகல பார்த்துகிட்டே , உன் கூடவே தான் இருப்பேன் …”

“அப்படின்னு சொல்லிட்டு இங்க வாடான்னு இளாவை கூப்பிட்டு அவனோட நெத்தியில் முத்தம் கொடுத்தவதான்… மகாராசி அவ ஜீவனை அந்த புள்ளைக்கிட்டயே விட்டுட்டு போயிட்டா…”

 

“இருந்தாலும் இந்த நிலைமை எதிரிக்கு கூட வரக்கூடாது ரோ. உலகம் தெரியாத புள்ளை, பெரிய பங்களா, கோடி கணக்கில் சொத்து எல்லாம் இருந்தும் அனாதையாக நின்னான். பண்ணண்டு வயசு கொள்ளி போடுற வயசா…? அடுத்தடுத்து நாலு பேருக்கு கொள்ளி வச்சான்.  எல்லாத்தையும் இழந்துட்டு நிர்கதியா எங்க இளா இப்படி இந்த  மடியிலே தான் சுருண்டு கிடந்தான்…” துக்கம் தாங்காமல் வேதா வெடித்து அழ, 

 

ரோஜா   “விடுங்க மீ… இன்னொரு நாள் பேசிக்கலாம்.. நடந்த எதையும் நம்மால மாற்ற முடியாது மீ…”    என்று தேற்றினாள்.. ஆனாலும் மனது ஆறாத வேதா மீண்டும் தொடர்ந்தார்…

 

“சொந்தம் பந்தமின்னு பல பேரு வந்தாங்க போனாங்க…..காரியம் முடிச்சதும் பார்த்தா ஒரு ஈ காக்கா கூட மிச்சமில்லை.. ஆண்டாளம்மாவும் வந்துச்சு, எல்லாரையும் சேர்த்து ஆராதான் முழுங்கிட்டா, ராசியில்லாத பிறப்புன்னு சபிச்சுட்டு போயிட்டு.

 அதுக்கப்பறம் எல்லாரும் ஆரா பொழைச்சி வரணும்னு தவமா தவம் இருந்தோம்… அவ பிழைச்சா ஆனா ..,கண்ணுல ஜீவனை தேக்கிகிட்டு உசிரோட்டமே இல்லாமல் இருந்தாள்.. டாக்டருங்க , அவ கண்ணு முன்னாடி ரத்த வெள்ளத்தில் மிதந்த பெத்தவங்களை பார்த்து மூளை ஸ்தம்பித்து போயிட்டுதுன்னு சொல்லிட்டாங்க. “

 

“அன்னைக்கு பக்குவ பட்டவந்தான் இளமாறன்.. ஆரா வை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்க ஆரம்பிச்சான். என்னதான் நெஞ்சு நிறைய பாசம் இருந்தாலும் நாங்க வெற்றாள் தானே…? பகலில் கூட இருக்க முடிந்தது ஆனா ராத் தங்க முடியல.. சொத்துக்கு ஆசைப்பட்டு ஒட்டிகிட்டோம்ன்ற பழி சொல் வந்துட கூடாதுன்னு ஒரு சுய நலம் தான்…”

அப்போதைய இந்த வருத்தம் வேதாவிடம் இன்னமும் மிச்சமிருந்தது.

 

“அந்த ஆண்டாள் அம்மா , வேண்டா வெறுப்பா , அப்பப்ப வரும் போகும், வீட்டு வேலைக்கு இருந்த வடிவு அம்மா, சின்னசாமி அய்யான்னு எல்லாரும் சேர்ந்து  புள்ளைக்கு துணையா நின்னோம்..”

 

“ராத்திரி எல்லாம் என் பொண்ணு அம்மா அம்மான்னு அழுவும் , இளா தான் ராத்திரி கண்ணு முழிச்சு அவளை சமாதானம் பண்ணி தூங்க வைப்பான். ராத்திரியும் தூங்காமல் காலையில ஸ்கூலுக்கு போவான். சீக்கிரமா உன் புருஷனை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு , போய் பகலில் லட்ட பார்த்துப்பேன்.ஆராக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரியாக ஆரம்பிச்சது.”

 

“அவ உலகமே இள மாறன் தான்.அவன் கூட தான் தூங்குவா, சாப்பிடுவா எல்லாத்துக்கும் இளா தான்… படிக்கிறதுக்கு ரெண்டு வருஷம் கழிச்சு தான் பள்ளி கூடம் போக ஆரம்பிச்சா. அதான் அவ இப்ப, இருபத்தி இரண்டு வயசுல காலேஜ் கடைசி வருஷம் படிக்கிறா.”

 

 “ அவ பெரிய பொண்ணு ஆகிறது போல இருக்கவும், வீட்டில் பொம்பளை துணை வேணும்னு  எங்கண்ணன் மூலமா பேசி,ஆண்டாள் அம்மாவ வர வழைச்சோம்.. இளா அப்ப காலேஜ் போயிட்டு இருந்தான்.”

 

“ஆண்டாள் அம்மா இளா வீட்டுல இல்லாதபோது எல்லாம் நம்ம ஆராவ கொடுமை படுத்திட்டு இருந்திருக்கு. தன் பிள்ளையையும் முழுங்கிட்டா,   தன் பேரனை கைக்குள்ள போட்டுகிட்டான்னு..,  அவளை எந்நேரமும் கரிச்சி கொட்டிட்டு இருக்கும். அந்த வீட்டுக்கு உரிமையுள்ளவங்க  அந்த அம்மா , அதனால் எங்களாலயும், ஒண்ணும் கேட்க முடியல.”

 

 

“இதுல என்ன ஒரு கொடுமைன்னா, அந்த அம்மாவுக்கு இவள பிடிக்காதது கூட தெரியாம பாட்டி, பாட்டின்னு ,அது காலையே சுத்தி வரும் நம்ம லட்டு. அதுக்கு அதிர்ந்து பேசினாத்தான் தன்னை திட்டுறாங்கன்னே தெரியும்.இல்லைன்னா நம்மக்கிட்ட பேசவும் ஆள் இருக்குன்னு மிதப்பா திரியும் அந்த குட்டி.இன்னமும் அப்படித்தான்.”

“கிருஷ்க்கு அவளை ரொம்ப பிடிச்சாலும் ,அவளோட மந்திச்ச குணம் பிடிக்காது. அதை ஏன் கொட்டின, இதை ஏன் தள்ளிவிட்ட, டிரெஸ்ஸை ஏன் ஒழுங்கா போடலன்னு,  அவன் பாட்டுக்கு என் பொண்ணை அந்த திட்டு திட்டுவான். கோந்தும்  நானும் பொண்ணுக்கு பரிஞ்சுகிட்டு அவனை திட்டினா, இது போயி அவன் மடியில் உக்கார்ந்து கிட்டு, அண்ணா ஆ’ ன்னு சோறு ஊட்டிக்கும் அவன்கிட்ட.” மகன் மகளை விட்டு கொடுக்காத பெருமை ரோஜா முகத்தில்.

 

“நான் கூட லட்டு ஏன் அந்த வயசுக்கு உள்ள தெளிவும் விவரமும் இல்லாம இருக்கான்னு நிறைய முறை நினைச்சு இருக்கேன். இப்பத்தான் தெரியுது , அது இயல்பிலேயே விவரம் தெரியாத பிள்ளன்னு,” 

 

“ஆனா விவரம் தெறியலன்னு கூட சொல்ல முடியாது. ரோ., ஆராவுக்கு வீடு முழுக்க சொந்த பந்தம் இருக்கணும்னு ஆசை.. அஞ்சு வயசுல இழந்ததை இன்னும் தேடிக்கிட்டு இருக்கா போல. உன் கல்யாணத்துக்கு முன்னாடி வரை அடிக்கடி ரெண்டு பேரும் இங்கேயே தங்கிடுவாங்க. அவங்க சம்மர் லீவ் பூரா இங்க தான் இருப்பாங்க..உன் மாமாவுக்கும் இவங்கன்னா உசுரு.”

 

“அதான் கிருஷ் ரொம்ப உயிரா இருக்காரு போல மீ…சின்ன வயசுலயிருந்து ப்ரெண்ட்ஸ்  வேற..”,ரோஜா கூற…,

 

“அட நீ வேற மா, சின்ன வயசுலேயிருந்து இவனுங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தன ஒருத்தனுக்கு புடிக்காது…இதுக்கு இடையில மகராசி அந்த சீமா சிங்காரி வேற ரெண்டு பக்கமும் கொள் மூட்டி விட்டுடுவா… ரெண்டு பேருக்கும் பொதுவான பிடிச்ச விஷயம்  ஆரா. “

 

“இதுல அவங்க அப்பா அம்மா போனதுல இருந்து ஆரா பொழைச்சி வர வரை நான்  இளா கூடவே இருந்ததை பார்த்ததும், கிருஷ்க்கு பொறாமை வேற..அவனும் சின்ன புள்ளை தான …? உங்க மாமாதான் அவனுக்கு துணையா இருந்தார்.அப்புறம் நைட் தூங்குறப்ப சமாதானம் பண்ணி தூங்க வைப்பேன்..”

 

“அப்புறம் எப்பதான் சேர்ந்தாங்க மீ……?” ஒருத்தர் மனச இன்னொருத்தர் பேசாமலே புரிஞ்சுக்குற இந்த நட்பு எப்படி சேர்ந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரோஜாவுக்கு …