கந்தர்வலோகா1

                                                    ஸ்ரீ ராம ஜெயம்

 

பனி கொட்டும் மாலை. ஆதவனும் தன் அன்றையக் கடமையை மந்தமாகவே முடித்துவிட்டுக் கிளம்பத் தயாரானான். நட்சத்திரங்கள் லேசாக எட்டிப்பார்க்கத் தொடங்கின. ஆனால் மதியம் தொடங்கிய அந்தப் பிள்ளைகளின் விளையாட்டு மட்டும் இன்னும் முடிந்தபாடில்லை.
அது ஒரு காட்டுப்பகுதி. நீளஅகலமான மரங்கள் நிறைந்த இடம். மிருகங்கள் நடமாட்டம் அதிகம் இல்லையென்றாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த மிருகமும் வரும் வாய்ப்புள்ளது. இப்போது தான் காட்டு விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதே. வந்தால் அதிசயம் தான்!
அந்த இடத்தில் ஆங்காங்கே வீடுகள் அமைத்து அதைக் குறுகிய நாட்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தார்கள். வீடுகள் எல்லா வசதிகளுடனும் அமைக்கப் பட்டிருக்கும். அங்கு வந்து தங்குவதற்கு முன்பே தேவையானவற்றை வாங்கி வந்து விட வேண்டும். சமையல் செய்வது முதல் மருந்து மாத்திரை வரை சகலமும் கைவசம் வேண்டும். இல்லையென்றால் ஒரு இருபது கிலோமீட்டர் காட்டை விட்டு ஊருக்குள் சென்று தான் வாங்கிவர முடியும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் இடையே மிக நீண்ட இடைவெளி இருக்கும். குளிர் காலத்தில் பனி கொட்டும். சுற்றிலும் மரங்கள் இருப்பதால் வெய்யிலின் தாக்கம் மிகக் குறைவு. சீக்கிரமே இருள் தொடங்கிவிடும். விடுமுறை நாட்களைச் சிலர் இங்கே வந்து தங்கி அந்த அமைதியையும் இயற்கை சூழலையும் அனுபவிப்பார்கள்.

அந்த இடத்திற்கு இப்போது இரண்டு குடும்பங்கள் வந்து தங்கியிருந்தார்கள். ஒன்று மகேஸ்வரன் மஞ்சுளா குடும்பம் மற்றொன்று ரகுபதியின் குடும்பம். இருவரும் நெருங்கிய நண்பர்கள். தங்களின் சிறு வயது முதலே மிகவும் உழைத்து, முதல் போட்டு ஒரு கம்பெனி ஆரம்பித்தார்கள். இப்போது அது வளர்ந்து நல்ல லாபம் கொடுத்துக்கொண்டிருந்தது. அதைக் கொண்டாடவே இந்தக் காட்டிற்கு வந்து சில நாட்கள் இருந்துவிட்டுச் செல்லத் திட்டமிட்டனர்.
ரகுபதியின் மனைவி குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட, அவர் தனியாகவே தன் மகனை வளர்த்தார். மறு கல்யாணம் செய்து கொள்ளச் சொன்னபோது அதை மறுத்துவிட்டார். எதற்கும் சோர்ந்து போகாமல் தன் மகன் ஒருவனே உலகம் என்று அவனின் விருப்பு வெறுப்புகளை அறிந்து, அவன் போக்கில் அவனை வளரவிட்டார்.
சொல்லித் தெரிவதை விடப் பட்டுத் தெரிவது என்றும் மறக்காது. அவன் உலகத்தைப் புரிந்துகொள்ள அதுவே அவனுக்கு உதவும் என்று நம்பினார். அவனும் அதன் மூலம் எதையும் தீர ஆராய்ந்து அறிந்து கொள்ளும் அறிவை வளர்த்துக் கொண்டான். சிறு விஷயமாக இருந்தாலும் அதன் அடி முதல் தெரிந்துகொள்ளாமல் விடமாட்டான். அவனுக்குப் பொருத்தமானப் பெயரைத் தான் வைத்திருந்தார். விஷ்வம்! விஷ்வம் ரகுபதி ! விஷ்வா என்று தான் அழைப்பது.
இந்தக் காட்டிலும் அவன் புதுவிது அனுபவங்களைப் பெறுவான் என்று தான் இந்த இடத்திற்கு வரச் சம்மதித்தார் ரகு.

அவனுக்கு இப்போது வயது பதினைந்து. இந்தக் காட்டில் அவனுடன் விளையாட ஒருத்தி மட்டுமே இருந்தாள். அவள் தான் மகேஸ்வரனின் மகள். மிகவும் சாமர்த்தியசாலி.
துறுதுறுப்பாக எதையாவது செய்து கொண்டே இருப்பாள். பத்து வயது தான் அவளுக்கு.
மகேஸ்வரனும் மஞ்சுளாவும் எல்லோரையும் போல அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ளும் தம்பதிகள் தான். ஆனால் இறுதியில் யாராவது ஒருவர் சமாதானப் புறாவைப் பறக்கவிட்டு விடுவார்கள்.
அது தங்கள் மகளின் பெயர் சூட்டும் விழாவின் போதும் சர்ச்சையில் தொடங்கியது. அவரவர்களின் அம்மாவின் பெயரைத் தான் அவளுக்கு வைக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்க, இறுதியில் சமாதானம் அடைந்து இருவரின் பெயரையும் சேர்த்து வைக்க முடிவு செய்தனர்.
மகேஸ்வரனின் அம்மா மீனாக்ஷி. அவர் இப்போது உயிருடன் இல்லாவிட்டாலும், இயல்பாகவே அவர் சில விஷயங்களை முன்கூட்டியே அறிந்துகொள்வார். எல்லா விஷயங்களும் தெரியாவிட்டாலும் தன் குடும்பம்பற்றி அவருக்குத் தெரிந்தது. மகேஸ்வரன் பிறக்கும் முன்பே தனக்கு ஆண் குழந்தை தான் என்று சொல்லிவிட்டார்.
அதே போலத் தன் மகனுக்குப் பன்னிரண்டு வயதில் ஒரு ஆபத்து இருக்கிறதென்றும் ஆனால் அதிலிருந்து அவனே தப்பிவிடுவான் என்றும் கூறினார்.
அதே போல மகேஸ்வரன் பள்ளியில் சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டார். எட்டிப்பார்த்த அனைவரும்

அவர் இறந்துவிட்டார் என்று நினைக்க , அவரோ ஒரு ஒரு மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்கினார். பின் அவரே குரல் கொடுக்க, அங்கே இருப்பவர்களின் உதவியோடு ஒரு கயிற்றிப் பிடித்து மேலே வந்தார்.
நிறைய விஷயங்களை முன்னமே அறிந்தார் மீனாஷி . மகேஸ்வரனின் திருமணம் கூட அப்படித்தான். கோவிலில் ஒரு முறை மஞ்சுளாவைப் பார்த்துத் தன் மகனுக்கு இவள் தான் மனைவி என்றார். அதே போல தரகர் மூலம் அந்தப் பெண்ணின் வரன் தான் வந்தது.
இருவருக்கும் திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் கழித்துத் தான் உனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும் என்று சொல்ல, அதே போலத் தான் நடந்தது.
மீனாக்ஷி இறக்கும்போது தன் பேத்திக்குத் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். அவரின் அந்தச் செயலுக்குப் பின் ஏதேனும் அர்த்தம் இருக்கலாம். ஆனால் அந்த நொடி முதல் அவளுக்குள் மீனாஷி வாழ்வதாகவே உணர்ந்தார் மகேஸ்வரன்.
மஞ்சுளாவின் விஷயமே வேறு. அவரின் தாய் ஒரு சாதாரணப் பெண்மணி தான். பெயர் லோகாம்பாள். மிகவும் சாந்தமானவர். ஆனால் கோவிலுக்குச் செல்லும் போதோ அல்லது திருவிழாக்கள் நடக்கும் பொழுதோ அங்கு ஒலிக்கும் மேளம், உடுக்கை சத்தம் கேட்டால், அவர் தன்னிலையை மறந்து விடுவார். அவருக்கு அருள் வந்துவிடும். தன்னை மறந்து ஆவேசமாக மாறிவிடுவார்.

அப்பொழுது அவர் அருகில் செல்ல யாரும் பயப்படுவார்கள். அவரின் அந்தப் பார்வையே மற்றவர்களை எரித்துவிடுவது போல மாறிவிடும்.
அவரைக் கட்டுப்படுத்த யாராலும் முடியாது. அவருக்குக் கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்த பின்னரே மீண்டும் பழைய நிலைக்கு வருவார். இதனாலேயே அவர் வெளியிடங்களுக்கு அதிகம் செல்லாமல் இருந்தார்.
தன் மகளின் , மகள் மீது அதிகப் பாசம் வைத்திருபார். இப்போதும் அவளைக் கண்டால் அவருக்குச் சொல்லமுடியாத உணர்வுகளை ஏற்படுத்துவதாகச் சொல்லுவார். கணவன் இறந்து விட்டதால் , மஞ்சுளாவிடம் வந்து தங்கி விட்டார்.
இந்த இரண்டு பாட்டிகளின் பெயரைத் தனாதாக்கிக் கொண்டு கள்ளம் கபடம் இல்லாமல் தன் நண்பனுடன் விளையாடிக்கொண்டிருந்தாள் லோகாஷி!
ஆமாம், மீனாஷி,லோகாம்பாள் இருவரின் பெயரையும் அவளுக்குச் சேர்த்து வைத்திருந்தனர். அவளுடைய சிறப்பு அம்சமே அவளின் லேசான பச்சை நிறக் கண்கள். அவள் சிரிக்கும்போது அவளது நீண்ட இமைகளுக்குள் அந்தக் கண்களும் சிரிக்கும்.
விஷ்வாவும் லோகாவும் அடிக்கடி சந்திப்பதுண்டு. தங்கள் அப்பாக்களின் நட்பு அவர்களிடமும் இருந்தது. வயசு வித்தியாசம் இருந்தாலும் அவளுடன் புதுப்புது விளையாட்டுகளை விளையாடுவான் விஷ்வா. அவளுக்குத் தெரியாததை சொல்லிக்கொடுப்பான். ஆனால் வயதில் மூத்தவன் என்று அவளிடம் கண்டிப்புடன் தான் இருப்பான்.

அவனிடம் எப்போதும் ஒரு பயம் இருக்கும் லோகாவிற்கு. சில நேரங்களில் அவன் திட்டிவிட்டால், “போடா சிடுமூஞ்சி” என்று சொல்லிவிட்டு ஒடிவிடுவாள்.
அவனிடம் தலையில் கொட்டு வாங்கிக்கொண்டு மீண்டும் விளையாட வருவாள். அவன் சொல்லிக்கொடுத்ததை லோகாவும் தன் பள்ளித் தோழிகளிடம் சொல்லித் தன் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவாள்.
அன்றும் அப்படித்தான் அந்தக் காட்டில் உள்ள மரக் கிளைகளையும் அங்கே கிடைத்த கற்களையும் வைத்து விளையாடினார்கள்.
அங்கிருந்த கிளைகளைச் சரிசமமாக உடைத்து இலைகளை உதிர்த்துவிட்டு அதை வரிசையாக வைத்துக் கட்டினான். லோகாவை அங்கிருந்த கற்களை எடுத்து வரச் சொன்னான். அவளும் அவன் பேச்சைத் தட்டாமல் கேட்டாள். கற்களைக் கீழே வைத்து முட்டுக்கொடுத்து அந்தக் கம்புகள் சாயாமல் நிறுத்தினான்.
லோகாவின் பாட்டியிடம் சென்று தென்னை ஓலையை அழகாகப் பின்னி ஒரு கூரை போல அமைத்துக் தரக் கேட்டான். அவரும் அவ்வாறே செய்து கொடுத்திருந்தார்.
அவர்கள் இருந்த வீட்டின் அருகேயே ஒரு அகண்ட மரத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். அதைப் பின்பக்கமாக்கி , தென்னையோலைகள் கூரையாகவும், அந்த மரக் கம்புகள் பக்கச் சுவராகவும் வைத்துச் சிறு வீடு ஒன்று உருவாக்கினர்.
இருவரும் அதைக் கண்டு அங்கேயே குதித்து மகிழ்ந்தனர். அதன் உள்ளே சென்று அமர்ந்து கொண்டனர். அவர்கள் இருவர்

மட்டுமே அங்கு உட்கார முடிந்தது. அத்தனை குறுகிய இடம். இருந்தாலும் அதை மிகவும் ரசித்தனர். அவன் உள்ளே அமர்ந்திருக்க இவள் வெளியே சென்று அந்த மரத்தையும் வீட்டையும் சுற்றி சுற்றி வந்தாள்.
விஷ்வா நாம இங்கேயே இருக்கலாமா? இது ரொம்ப அழகா இருக்கு. “ மீண்டும் உள்ளே சென்று அமர்ந்து கொண்டு கேட்டாள்.
அவளின் அந்த உற்சாகம் அவனுக்கு மிகவும் பிடித்தது. அவளின் குண்டு கன்னங்களில் உள்ளங்கையை கை வைத்துகொண்டு அவளது பச்சை நிறக் கண்களால் அவனை உருத்து விழித்துக் கொண்டு கேட்டாள்.
அந்த வயதில் அவன் மனதில் என்ன தோன்றியதோ..! “ உனக்கு இந்த வீடு புடிச்சிருக்கா லோகி?” ஆர்வமாகக் கேட்க
எனக்கு எங்க வீட்டை விட நீ கட்டின இந்த வீடு தான் புடிச்சிருக்கு விஷ்வா!!”
அவள் சொன்ன பதில் அவனை ஈர்த்தது. ஏனோ மனதில் ஒரு புது வித உணர்வு. அவளிடம் கண்டிப்புடன் இருப்பவன் தான் , இருப்பினும் அவளின் கள்ளத்தனமில்லாத முகம் அவனை இளகச் செய்வதாய்!
அவளின் தோளில் கை போட்டுக்கொண்டு “ சரி வா எல்லாரையும் கூப்பிட்டு வந்து காட்டலாம்” அவளை அழைத்துச் சென்றான்.
பெரியவர்களை அழைத்து வந்து அதைக் காட்ட, அவர்கள் மிகவும் ஆச்சரியமடைந்தார்கள்.
ரகு தன் மகனின் ஆக்கப்பூர்வ அறிவை மெச்சினார். இவன் பின்னாளில் ஒரு நல்ல நிலைக்கு வருவான் என்பதில் அவருக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

இனிமே இது தான் எங்க வீடு நாங்க இங்க தான் இருப்போம்” என்றாள் லோகாக்ஷி.
அனைவரும் சிரிக்க, அவள் விஷ்வாவை தன்னோடு சேர்த்துக் கொண்டாள். அவனோ எதையுமே சற்று அதிகமாகச் சிந்திப்பவன். அவள் சொன்னது போல அது அவர்களின் வீடு தான் ஆனால் அங்குத் தங்க முடியாதே!
லோகி ! நைட் எல்லாம் இங்க தங்க முடியாது. முதல்ல லைட் இல்ல, அப்புறம் எப்படி இங்க இருப்ப, பயமா இருக்காதா? வா நாம காலைல வந்து இங்க விளையாடலாம்” அவள் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல,
அவளும் மனமில்லாமல் ஒத்துக்கொண்டாள். அவனை எதிர்த்துப் பேசினால் மண்டையில் கொட்டுவான், அதனால் பேசாமல் அவர்களோடு சென்றாள்.
அவளை அந்தச் சிறு கம்புகள் ஊன்றிய வீடு மிகவும் ஈர்த்தது. திரும்பிப் பார்த்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள்.
ஒரே வீட்டில் அனைவரும் தங்கியிருந்தனர். கீழே இரண்டு அறைகளும் மேலே இரண்டு அறைகளும் இருந்தன. கீழே மஞ்சுளாவும் அவரது தாயும் இருந்தனர். மேலே உள்ள இரண்டு அறைகளும் பிள்ளைகள் ஆளுக்கு ஒன்றாய் எடுத்துக்கொண்டு அவர்களின் தந்தையோடு உறங்கச் சென்றனர்.

இருவரின் அறைகளிலும் விட்டத்தில் ஒளி புகும்படி கண்ணாடி பதித்து அதை மெத்தைக்கு நேரே அமைத்திருந்தனர். அதனால் படுத்துக்கொண்டே வானத்தைப் பார்க்கும் இன்பம் அறைக்குள்ளேயே கிடைத்தது.
பெற்றோர்கள் படுத்ததும் உறங்கியிருக்க, பிள்ளைகள் இருவரும் வெவ்வேறு விதமான சிந்தனையில் வானத்தைப் பார்த்துப் படுத்திருந்தனர்.
விஷ்வாவிற்கு அரும்பு மீசை முளைக்கும் பருவம். பார்ப்பது அனைத்தும் பிடிக்கும் வயது. இந்த வயதில் தோன்றும் எண்ணங்களுக்கு அளவே இல்லை. கட்டுக்கடங்காத மனவோட்டங்களும்அதீத கற்பனைகளும் மனதை ஆட்கொள்ளும். இந்த வயதில் தான் பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு வழி வகுக்கும்.
சில பேர் அதை ஜாக்கிரதையாகக் கையாண்டு வெளி வருபவர்களும் உண்டு. சில பேர் அந்த எண்ணங்களில் சிக்கி வாழ்வில் வேறு பாதையில் செல்வதும் உண்டு.
இப்போது விஷ்வாவும் அப்படிப் பட்ட நிலையில் தான் இருந்தான். அவன் பார்த்துக் கொண்டிருந்த வானத்தில் நட்சத்திரங்களோடு லோகாவின் கண்களும் சிரித்தன. அவளின் முகம் அவனை ஈர்த்தது.
ஆனால் அதைப் பற்றிய சிந்தனை கூட அவனுக்குக் குற்றவுணர்வைத் தந்தது. ஆகவே அதை வேண்டுமென்றே தவிர்த்துத் தனது விண்ணில் இருக்கும் நட்சத்திரத்தை எண்ணத் தொடங்கினான்.

லோகாவின் எண்ணம் முழுதும் அந்தச் சிறு வீட்டின் மீதே இருந்தது. அதை அழாகாக அமைத்த விஷ்வாவை மிகவும் பிடித்தது.
அவன் அமைத்துக் கொடுத்தது என்பதாலோஇல்லை வேறுசில காரணங்களாலோ அவளுக்கு அதைப் பிடித்துவிட்டது. படுக்கையிலிருந்து எழுந்து சென்று ஜன்னல் வழியே வெளியில் எட்டிப் பார்த்தாள். சுற்றிலும் வெறும் இருட்டு. நிலவின் ஒளிமட்டும் அங்கிருந்த மரங்களில் பட்டுச் சிறு வெளிச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதில் அந்தச் சிறு வீட்டைத் தேட அது கண்ணுக்கு அகப் படவில்லை. ஆனால் ஏனோ அந்த இருட்டிலும் அதைத் தேட முயன்றாள். எங்கும் அமைதியாய் இருக்க, அந்தக் கண்ணாடியின் சிறு இடுக்கு வழியே வெளியே அடித்தக் காற்று உட்புக முயன்றது. அது ஏற்படுத்திய சத்தம் அவளை அச்சம் கொள்ள வைத்தது.
அதே நேரம் அந்த மரத்தின் அடியிலிருந்து எதுவோ ஒன்று குதித்து ஓடியது போலத் தோன்ற, சட்டென ஓடிவந்து தன் தந்தையின் அருகே வந்து போர்வையை தலை வரைப் போத்திக்கொண்டு படுத்துவிட்டாள். மனம் படபடத்தது. உடல் சிறிது நடுங்கியது. கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
தூக்கம் வரவில்லை. அப்பாவை ஒட்டிக்கொண்டு படுத்துக் கொண்டாள். சற்று நேரம் கழித்து போர்வையை சிறிது விலக்கிக் கண்களை மட்டும் வெளியே வைத்துப் பார்த்தாள்.

அப்போது ஒரு சம்பவம் நடந்தது. விஷ்வாவும் லோகாவும் ஒரே நேரத்தில் அதைக் கண்டனர்.