கந்தர்வலோகா2


விஷ்வாவும் லோகாவும் மேலே சாளரத்தின் வழியாக விண்ணில் உள்ள நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
வான மண்டலத்தில் அவ்வப்போது சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை அனைத்தையும் மனிதனால் புரிந்து கொள்ள முடியாது. அவன் அறிவுக்கு எட்டியவரை மட்டுமே ஆராய்ந்து அறிந்து தெரிந்து கொள்வான்.
குறிப்பாக மனிதனுக்கு கேட்கும் திறன் என்பது ஒரு குறிப்பிட்ட அலை அதிர்வு வரையே அவனால் கேட்க முடியும். அந்த அளவிற்கு மேல் இருக்கும் சப்தத்தையோ அல்லது அதற்குக் குறைவாக இருக்கும் மெல்லியே ஒலியையோ அவனால் கேட்க இயலாது. அதற்காக அப்படிப்பட்ட ஒலிகளே இல்லை என்பதை நம்மால் நிச்சயம் மறுக்க முடியாது.
அதே போல மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட சக்திகளும் இந்த உலகத்தில் உலவிக்கொண்டு தான் இருக்கின்றன. அவ்வித சக்திகள் மனிதர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை, அல்லது அவற்றை நம்மால் உணர்ந்துகொள்ள முடிவதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அவற்றுள் ஒன்று தான் வானுலகம். கண்ணுக்குப் புலப்படும் அண்டங்களையும் நட்சத்திரங்களையும் மட்டுமே விஞ்ஞானிகளால் ஆராய்ச்சி செய்ய முடியும். அந்த விண்ணுக்கு மேலே என்னென்ன இருக்கிறதென்று இதுவரை யாரும் அறியாத ஒன்று.
அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு அன்று விண்ணில் நடந்ததது. அதைத் தான் இந்தப் பிள்ளைகளும் கண்டார்கள்.

மற்ற நட்சத்திரங்கள் இருந்த இடத்திலிருந்தே கண்சிமிட்டிக் கொண்டிருக்க, எங்கிருந்தோ ஒரு ஒளிக் கீற்று அந்த விண்ணையே கிழித்துக்கொண்டு வந்தது. முதலில் ஒரு சிறு புள்ளியாகத் தான் தோன்றியது நட்சத்திரம் போல. ஆனால் வரவர அது ஒரு மெல்லிய கொடு போல நீண்டது, முன்னை விட இன்னும் கூடுதல் பிரகாசத்துடன் பூமியை நோக்கி வந்தது. இல்லை, இவர்களை நோக்கி வருவது போல இருந்தது. பின் சட்டென மறைந்தது. ஆனால் அது தெரிந்தது ஒரு சில நொடிகளே.
இந்த இரு பிள்ளைகளும் அதைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கு முன் இப்படி ஒன்றை லோகா பார்த்ததே இல்லை. இத்தனை நேரம் பயந்து போர்வைக்குள் இருந்தவள் மறுபடியும் போர்வைக்குள் புகுந்து கொண்டாள்.
என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தாள். கண்ணை மூடினால் அந்த ஒளி தான் கண்ணுக்குள் வந்தது. கண்ணுக்குள்ளேயே அந்த ஒளித் தங்கி விட்டது போலத் தோன்றியது. ஒரு குளிர்ச்சி பரவியது போல உணர்ந்தாள். உண்மையில் அந்த ஒளி அவளைத் தாக்கியதோ!!
மூடிய போர்வைக்குள்ளிருந்தே மீண்டும் அந்த ஜன்னல் வழியாக எதாவது தெரிகிறதா என்று பார்க்க முயல, ஒன்றும் தெரியவில்லை. போர்வையின் இருட்டுத் தான் தெரிந்தது. பின் ஆழ்ந்த யோசனை அவளை உறக்கத்தில் தள்ளியது.
விஷ்வா ஒரு புறம் அது என்னவாக இருக்கும் என்று யூகித்தான். அது ஒரு எரி நட்சத்திரமாக இருக்கலாம் என்பது அவன் கருத்து.

ஆங்கிலத்தில் ஷூட்டிங் ஸ்டார் என்று சொல்வார்களே, அது தானென நினைத்தான்.
இப்படி ஷூட்டிங் ஸ்டாரைப் பார்கும்பொழுது எதையாவது வேண்டிக்கொண்டால் அது நடக்கும் என்பார்களே! என்ன வேண்டுவது??‘ என்று யோசிக்க , சற்று நேரத்திற்கு முன் சிரித்த முகமாகத் தெரிந்த லோகா தான் மனதில் நின்றாள். தன்னையும் அறியாமல் ‘ எப்போதும் அவ என்கூடவே இருக்கணும் ‘ எனக் கண்மூடி வேண்டினான். பிறகு,
ச்சே! என்ன பைத்தியக்காரத்தனம் இது. நான் ஏன் அப்படி நினச்சேன். நாம தப்பு பண்றோமோ! இல்லை நாம இனிமே கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருக்கணும். அதுசரி! நினைக்கறது எல்லாமேவா நடந்துடுது. நாம வேண்டிகிட்டது நடக்கணும்ன்னு ஒன்னும் சட்டமில்லையே! ‘சிந்தனை ஓட்டம் எங்கோ செல்ல, கண்கள் கனத்தது. மேல் இமைகள் கீழ் இமைகளைத் தழுவ இந்த உலகத்தை விட்டுக் கனவுலகில் பயணப்பட்டான் விஷ்வா.
எவர் கண்டார்! இருவரையும் அந்த ஒளி ஆட்டி வைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. ஆம்! வேறு உலகத்திலிருந்து முதல் முறை இந்தப் பூமியில் பிரவேசித்த அந்த ஒளிக்கீற்று, தன்னை கவனித்த இவர்களை அறிந்து கொண்டது.
காலையில் வெகுநேரம் கழித்தே கண்விழித்தனர். லோகா அவள் அறையிலிருந்து வெளி வர , அப்போது விஷ்வாவும் வெளியே வந்தான். அவனைக் கண்டதும், நேற்று அவன் அமைத்த வீடு நினைவுக்கு வர,

விஷ்வா ! சீக்கிரம் குளிச்சிட்டு வா. நாம அந்த வீட்டுக்குப் போவோம்.” சிரித்த முகத்துடன் சொல்ல, அவளைப் புதிதாகப் பார்ப்பது போலப் பார்த்தான். அவள் கண்கள்! அது முன்னை விடச் சற்று பிரகாசமாகத் தோன்றியது.
ஒரு வேளை நான் அதையே நினச்சதால அப்படித் தோணுதோ! விஷ்வா.. டேய்.. ‘மனது அதட்ட,
போலாம் வாண்டு, போய் முதல்ல பல்லு தேய்! “ பெரியவனாகக் கண்டித்துவிட்டு கீழே இறங்க,
காலைலேயே ஆரம்பிச்சுட்டான். “ அவன் பின்னால் அவனுக்கு அழகு காட்டினாள். சட்டெனத் திரும்பிப் பார்த்தவன் அவளின் செய்கையைக் கவனித்துவிட்டு அவளை முறைத்து,
அழகா காட்ற !.. ஒழுங்கா வந்து ஒரு கொட்டு வாங்கிக்கோ” அவளை நோக்கி அடியெடுத்து வைக்க, அவனின் கைக்கு அகப் படாமல் கீழே குனிந்து ஓட்டமெடுத்தாள்.
மஞ்சுளா சமையல் செய்து கொண்டிருக்க, அவரின் அம்மா உதவியாக இருந்தார். அப்பாக்கள் இருவரும் வாக்கிங் செல்ல வெளியே கிளம்பினார்கள். விஷ்வா வும் அவர்களுடன் சென்றான்.
அந்தக் காடு ஒரு ரம்யமான சூழலை அவர்களுக்குத் தந்தது. நகரத்து வாகனங்களின் சத்தம் இல்லாமல் , நெருக்கடி இல்லாமல் , ஜனக் கூட்டத்தின் பிடியிலிருந்து தப்பி, இயற்கையோடு வாழ்வது ஒரு வகையில் இன்பம் தான்.

அதனால் தான் அந்தக் காலத்தில் தவம் செய்யக் காட்டிற்கு வந்தார்கள் போலும். அவர்களும் இப்போது அதைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.
இந்த இடம் ரொம்ப நல்லா இருக்கு மகேஸ்வரா, நாம அடிகடி இங்க வரலாம்” குளிரில் கையை நன்றாக மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு நடந்தபடியே சொன்னார் ரகு.
ஆமா ரகு. அந்த பிசியான லைஃப் ரொம்ப டென்ஷனா இருக்கு, நேரமே இல்லாம ஓடிகிட்டே இருக்கறது. மனுஷனா வாழறோமா இல்லை மிஷினா வாழரோமானே தெரியலை. மனுஷனோட ரசிப்புத் தன்மையே இந்த மாதிரி இடத்தில தான் முழுமையா புரிஞ்சிக்க முடியும். இயற்கை வாழ்வு.” மகேஸ்வரனும் சொல்ல, அவர்களின் பேச்சு அப்படியே போய்க்கொண்டிருந்தது.
நடந்து வந்துகொண்டிருந்த பாதையை ரசித்துக்கொண்டிருந்தான் விஷ்வா. அவர்கள் சிட்டியில் இருப்பது போலத் தார் ரோடு போட்டுச் சமன் செய்யப் படவில்லை. எங்கும் மரத்திலிருந்து விழுந்த இலைகள் பரவிக் கிடக்க, இரவு பெய்த பனியில் அவை சற்று ஈரப்பதத்துடன் காணாப்பட்டது.
சில்லென்ற காற்று காது மடல்களை உரசிச் செல்ல, ஏசி அறையில் இருப்பதை விடச் சுகமாக உணர்ந்தான். பறவைகளின் சின்ன சின்னக் காணங்கள் தான் அந்த இடத்தை மேலும் உயிரூட்டியது போலத் தோன்ற, தாங்கள் நடக்கும் சப்தமும் அந்தப் பறவைகளின் ஒலியும் மட்டும் கேட்டவனுக்கு அதுவே ஒரு வகை பாடல் போல இசைத்தது.

அங்கிள் சொன்னது போல இங்கு வந்தபிறகு எனக்கும் ரசனை பிறந்து விட்டதா!’ மனதில் நினைத்துக்கொண்டே சென்றான். மற்ற இருவரும் சற்று தூரம் முன்னே சென்றுகொண்டிருந்தனர்.
சுற்றியிருந்த இடத்தைப் பார்த்துக்கொண்டு சென்றவனுக்கு யாரோ தன்னைப் பார்ப்பது போலத் தோன்ற, அங்கேயே ஒரு நொடி நின்றான். மற்ற மரங்கள் அசையாமல் நிற்க, பின்னால் இருந்த மரத்தின் இலைகள் மட்டும் தனியாக அசைந்து கொண்டிருந்தது.
ஏதோ ஒரு வாசனை வருவது போலத் தோன்றியது. அது ஒரு புதுவித வாசனையாக இருந்தது. மிகவும் மென்மையாகத் தான் இருந்தது. ஆனால் எங்கிருந்து வருகிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. ‘வீடுகள் கூட அருகில் இல்லை. ஒரு வேளை அந்த மரத்தின் பூக்களா !’ அருகே சென்று அந்த மரத்தில் இருந்த ஒரு சிறு பூவை எட்டிப் பிடித்து நுகர்ந்தான். அதில் எந்த வாசனையுமில்லை.
இப்போது அவனைச் சுற்றி அந்த வாசனை பலமாக வந்தது. யாரோ சென்ட் அடித்துக் கொண்டு பக்கத்தில் நடப்பது போல இருக்க, லேசாக மனதில் பயம் எழுந்தது. மேலும் தாமதிக்காமல் தைரியத்தை வரவைத்துக் கொண்டு “ அப்பா!” என்று கூச்சல் போட்டான்.
அவர்கள் வெகுதூரம் சென்றிருக்க, உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். சிறிது நேரம் அந்த வாசனை தன்னை சூழ்ந்தது போலத் தோன்ற, பெரியவர்களை நெருங்கிச் செல்லச் செல்ல அது விலகியது.

மீண்டும் அந்த இடத்தைப் பார்த்தவன் அங்கு எதுவும் இல்லாததைக் கண்டு சற்று நிம்மதியடைந்தான்.
வீட்டில் லோகா, அம்மாவிடமும் பாட்டியிடமும் சமையல் அறையில் அமர்ந்து ஏதோ தீவிரமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
அனைவரும் உணவருந்த அமர்ந்தபோது மீண்டும் ஒரு முறை அதை அவர்களிடம் சொல்ல, விஷ்வாவும் சேர்ந்து கொண்டான். அவள் சொன்னது நேற்று இரவு அவள் பார்த்த அந்த ஒளியைப் பற்றித்தான்.
அந்த ரொம்ப வேகமா வந்துச்சா, அப்புறம் காணும்..” கையை அசைத்துச் சொன்னாள்.
அட அது ஒரு நட்சத்திரம் தான். நீ ஷூட்டிங் ஸ்டார்ஸ் கேள்விப்பட்டிருக்கியா?” விஷ்வா விளக்கம் தர,
என்ன நட்சத்திரம் கீழே விழுமா?” வாயப் பிளந்தாள் லோகா.
ரகு அதற்கு விளக்கம் தந்தார். “ நட்சத்திரம் கீழே விழாது லோகா. விண்வெளியில் ஏராளமான கோள்கள் சுத்திகிட்டே இருக்கும். அது தன்னோட பாதைல இருந்து விலகினாலோ இல்ல மத்த கோள்கள் மேல மோதினாலோ, வேகாமா பூமிய நோக்கி விழும். அது காற்றை கிழுத்துக் கொண்டு வரும்போது தீப்பிடித்து எரியும். பூமிக்கு வருவதற்கு முன்பே அதுவும் அணைஞ்சிடும். அது தான் நம்ம கண்ணுக்குப் பளிச்சுன்னு தெரியும்.” அவர் சொல்லி முடிக்க,

அப்போ யார் மேலயாவது விழுந்தா?” சந்தேகமாகக் கேட்டாள் லோகா.
ரகுபதி சிரித்துவிட்டு, “ விழறதுக்கு முன்னாடியே அது சாம்பலாகிடும் டா. சாம்பல் காத்தில் கலந்திடும்”
அப்படியா “ அவளின் பாட்டி ஊட்டியதை மென்று கொண்டே கேட்டாள்.
விஷ்வாவிற்கும் அப்போது தான் பல விஷயங்கள் புரிந்தது. அதன்பின் இருவரும் நேற்று அமைத்த அந்தக் கம்புகள் ஊன்றிய அந்த இடத்திற்குப் போக, இப்போது விஷ்வாவிற்கு இன்னும் அதை அழகு படுத்த தோன்றியது.
சிறிது நேரம் யோசித்தவன், லோகா வை அழைத்து, அந்த மரத்தையும் வீட்டையும் சுற்றி சுத்தமாகப் பெருக்கி வைக்க வேண்டும் என்றான். இருவரும் ஆளுக்கு ஒரு துடைப்பம் கொண்டு அந்த இடத்தைச் சுத்தப்படுத்தி வைத்தனர்.
அந்த வீட்டிற்கு நடந்து செல்லும் பாதை போல அதன் வாயிலிலிருந்து இரண்டு பக்கமும் கற்களைக் கொண்டு பாதை அமைத்தனர்.
அவர்கள் இருந்த அந்தக் காட்டில் சில வித்தியாசமான வண்ண கற்கள் கிடைத்தன. அவற்றைக் கொண்டு அந்தப் பாதை அமைக்க, அந்தச் சிறு வீடு இப்போது மிகவும் அழகாக இருந்தது.

மஞ்சுளாவும் அவரது தாயும் வேலை முடித்து வெளியே வந்து இவர்கள் விளையாடுவதைப் பார்த்தனர். வெளியே இருந்த ஒரு பெரிய பாறாங்கல்லின் மீது அமர்ந்தார் அந்தப் பாட்டி.
அவரின் உடலில் ஒரு வித குளிர் பரவியது. கைகால்கள் சில்லிட்டுப் போனது. இரு உள்ளங்கைகளையும் தேய்த்து விட்டு புடவையைத் தோள்களைச் சுற்றி இழுத்து மூடிக்கொண்டார்.
மஞ்சுளா! உனக்கு குளிருதா?” மெதுவாகக் கேட்க
இல்லையே இன்னிக்கு தான் இங்க கொஞ்சம் வெயில் வந்த மாதிரி இருக்கு, கதகதப்பா நல்லா இருக்கு”
மஞ்சுளா சொன்னதும் தனக்கு மட்டும் குளிரும் காரணம் புரியவில்லை. ஒரு வேளை வயதாகிவிட்டதால் ரத்தமில்லாமல் கூடக் குளிரலாம் என்று நினைத்தார்.
சற்று நேரத்தில் மஞ்சுளா சிறிது நேரம் உறங்குவதாகச் சொல்லிச் சென்றார்.
லோகா தான் ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த சொப்பு சாமான்களை எடுத்து வந்து அந்த வீட்டின் அருகே அமர்ந்து மண்ணைக் கொட்டி விளையாடிக்கொண்டிருந்தாள். விஷ்வாவோ மரத்தின் மீது ஏறி அமர முயற்சி செய்துக்கொண்டிருந்தான். இவை அனைத்தையும் ரசித்த பாட்டியம்மாவிற்கு இப்போது ஒரு வாசனை மூக்கை துளைத்தது.

எங்கிருந்து வருகிறது என்று சுற்றும் முற்றும் பார்க்க, ஒன்றும் புரியவில்லை. குளிரும் அவருக்கு அதிகரித்தது. தாங்க முடியாமல் உள்ளே செல்ல அந்தப் பாறையின் மீதிருந்து எழுந்தார்.
எழுந்த மாத்திரத்தில் “ஆ! “ வெனக் காதுகளைப் பொத்திக்கொண்டு அலறினார்.
காதுக்குள் யாரோ பலாமாகக் கத்தும் சத்தம் கேட்டது.
பிள்ளைகள் இருவரும் பயந்து அருகில் ஓடிவந்து, “ என்ன ஆச்சு பாட்டி? ஏன் கத்தினீங்க? “ என்று மருண்டு விழித்துக் கொண்டு கேட்டனர்.
அவர்களிடம் ஏதும் சொல்ல முடியாமல், “ஒன்னும் இல்லப்பா, கல்லு குத்திடுச்சுநீங்கப் போய் விளையாடுங்க” அவர்களை அனுப்பிவிட்டு அதே பாறையில் அமர்ந்தார்.
பிள்ளைகள் ஓடி வந்ததிலிருந்து அவர்களுக்கு அந்தச் சத்தம் கேட்கவில்லை என்பது உறுதியானது. ‘பின் தனக்கு மட்டும் ஏன் கேட்க வேண்டும்!’ குழப்பத்தில் ஆழ்ந்தார்.
இப்போது அவரின் உடல் முழுதும் வியர்த்து விட்டிருந்தது. குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியே வைக்கப் பட்ட பாத்திரம் போல முகத்திலும் கழுத்திலும் சட்டென அவ்வளவு நீர்த்துளிகள்!
அவருக்கு இது சாதாரணமாகப் படவில்லை. அவருக்கு அடிக்கடி அருள் வருவதனால் இது வேறு ஏதோ ஒன்று என்று அவரது உள்ளுணர்வு சொல்லியது.

உடனே தன் அறைக்கு எழுந்து சென்றார். எப்போதும் பையில் வைத்திருக்கும் அம்மன் படத்தை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டார்.
சிறிது நேரம் தனக்குத் தெரிந்த ஸ்லோகத்தை சொல்லியபடி அமர்ந்திருந்தார். பின் எழுந்து அதே இடத்திற்கு செல்ல, பிள்ளைகள் இன்னும் சற்று தூரம் சென்று விளையாடுவதைப் பார்த்தார்.
இப்போது அவர்கள் சுத்தப் படுத்திய இடத்திலிருந்த மரத்தின் மேல் உருவமில்லாத ஒன்றுகண்ணுக்குப் புலப்படாத ஒன்றுஅந்தப் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதை தன் புறக் கண்களால் காணாவிட்டாலும் அகக் கண்களால் உணர்ந்தார்.!