கனலிடம் காற்றுக்கென்ன நேசம்

received_831487837460704-bbd4b9bd

கனலிடம் காற்றுக்கென்ன நேசம் 23

தன் பேசண்டுகளை பார்த்து விட்டு ஆத்விகா தன் அறையில் வந்து அமர்வதற்கும் ஆதுவின் கைப்பேசி சிணுங்குவதற்கும் சரியாக இருந்தது.. எடுத்துப் பார்க்க, திரையில் தமிழின் எண் காட்டவும் சிந்தனையுடனே எடுத்து பேசினாள்.

“சொல்லுங்க தமிழ். என்ன இந்நேரத்துக்கு கால் பண்ணியிருக்கீங்க? என கேட்க, தமிழும் “ஒரு சந்தோசமான நியூசை சொல்லதான் கூப்பிட்டேன் ஆது” என்றவன் “இப்போ பிசியா? ஃப்ரியா?” என்று கேட்க, ஆதுவும் “இப்போ ஃப்ரிதான்.. சொல்லுங்க என்ன நியூஸ்? எனிதிங் இம்பார்ட்டண்ட்?” என்று கேட்க

தமிழும் “எஸ் ஆது.. ரொம்ப இம்பார்ட்டண்ட்.. நம்ம கம்பெனிக்கு மிகப்பெரிய கவர்மெண்ட் பிராஜக்ட் கிடைச்சிருக்கு.. இதுனால கண்டிப்பா நம்ம செந்தூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.. இன்னைக்கு தான் அந்த பிராஜக்ட்ல சைன் பண்ணிட்டு வந்தோம். அதான் உனக்கும் என் சந்தோசத்தை பகிர்ந்துக்க கால் பண்ணினேன். இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வா ஆது. நம்ம கம்பெனி தொழிலாளர்களுக்கும் நம்ம கிளைண்ட்க்கும் சின்னதா ட்ரீட் வைக்க பிளான் பண்ணியிருக்கோம்.. நானே வந்து உன்னை பிக் பண்ணிக்குறேன்” என்று ஆதுவை பேசவிடாமல் அவனே பேசி வைக்க, 

ஆதுவோ தமிழின் வார்த்தைகளை கிரகித்து அவனிடம் பதில் பேசுவதற்குள் வைத்துவிட, ஆது  கண்மூடி சாய்ந்து அமர்ந்தாள் அவள் இருக்கையில். 

கண்முன்னே அன்றொரு நாள் வெற்றி ஆதுவிடம் இந்த கவர்மெண்ட் பிராஜெக்ட் எவ்வளவு முக்கியம் என்பதையும் இதனால் மாறன் குரூப்பின் தற்போதைய நிலை எந்தளவிற்கு மாறும் என்பதையும் விளக்கி கூறியதும் ஆதுவும் அப்பிராஜெக்ட் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என எண்ணி வேலை செய்ததும் மூடிய கண்களுக்குள்ளே விரிய ஆதுவினால் தமிழின் சந்தோசத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. 

மாறன் குரூப்பின் தொழிலாளர்களின் நிலை மட்டுமே முக்கியமாக பட, அவசரமாக கார்த்தியிடம் சொல்லிவிட்டு தன் தந்தையை காண சென்றாள். 

அதற்குள் மாறனின் கம்பெனியில் மேனேஜர் சொல்லிக் கொடுத்தது போல் அனைத்து தொழிலாளர்களும் தங்களின் போராட்டத்தை தொடங்கினர். இதுவரை நிறுத்தி வைத்திருந்த சம்பளத்தை தர கூறியும் கூடவே சம்பளத்தில் 2% இன்கிரிமெண்ட் வேண்டும் என்றும் பர்ன்னிச்சர் & எல்க்ட்ரானிக்  வேலை செய்யும் தொழிலாளிகள் கூறினால் கன்ஸ்ட்ரக்சன் தொழிலில் அனைவரும் சைட் பக்கமே வராமல் கட்டிட வேலைகளை பாதியில் விட்டு சென்று விட, கிளைண்ட்டுகளும் மாறனை நெருக்க ஆரம்பித்தனர் முழுதாக செய்து கொடுக்கும் படி.

இருபக்கமும் மாறனை நெருக்க அவரால் ஒன்றும் செய்ய முடியா நிலையில் இருந்தார். அவரின் முகம் பார்த்த அரசி “ஏங்க ஒரு மாதிரி இருக்கீங்க? ஏன் இப்படி வேர்க்குது உங்களுக்கு?” என்று பதட்டமாக கேட்க மாறன் “நம்ம இவ்ளோ நாள் கட்டி காப்பாத்தின நம்ம மொத்த கம்பெனியும் நம்ம கைவிட்டு போயிறும் போல அரசி.. எனக்கு நேத்து வரைக்கும் இருந்த தெம்பு மொத்தமும் போயிடிச்சு. நான் முழுசா என் தொழிலாளிகளை நம்பினேன்.. எப்போ இருந்தாலும் எனக்கு உதவியா பக்கபலமா இருப்பாங்கற என் நம்பிக்கையை உடைச்சு இன்னைக்கு என்னை ஒரு திக்கு தெரியா காட்டில் விட்ட மாதிரி இருக்கு..”

“நான் ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆகிற வரைக்கும் நான் கொஞ்சம் தெம்பாவே இருந்தேன். அதுக்கு அப்புறமும் என் நம்பிக்கையில வலு சேர்க்குற மாதிரி தமிழும் நம்ம கம்பெனியை பொறுப்பா எடுத்து நடேத்துறேன்னு சொல்லி வரவும் நான் கம்பெனியை பத்தி கவலைப்படாம இருன்தேன். ஆனா இப்போ..” என்று சொல்லி கண்கலங்கியவரை பார்த்து அரசியும் கலங்க, ஆது வந்த சுவடு தெரியாமல் கிளம்பினாள்.

மாறனும் அரசியும் ஆது வந்ததை சுத்தமாக கவனிக்கவில்லை. ஆதுவின் கண்களோ சாலையில் இருக்க, மனமோ தந்தையின் நிலையை நினைத்து கவலை பட்டு கொண்டிருந்தது. அவள் போக்கில் காரினை செலுத்திக் கொண்டிருக்க அவளின் காரை ஒதுக்குபுற சாலையில் மற்றொரு கார் தடுத்து நிறுத்தி ஆது சுதாரிக்கும் முன்பே அவளை கடத்தியிருந்தது.

மாறனின் இல்லத்தில் அரசி “இப்படி எல்லாம் பேசி உங்களை நீங்களே பலவீனமாக்காதீங்க.. இப்போ எதுக்கும் ஒரு எட்டு கம்பெனிக்கு போய்ட்டு வாங்க… அவுங்க போராட்டம் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து நீங்க இன்னும் அங்க போகலை. அதுவே அவுங்களுக்கு சாதகமா அமைஞ்சி இன்னும் நம்ம நிலமை மோசமா போகறதுக்குள்ள எல்லாரையும் சமதானப்படுத்தி வேலையை ஆரம்பிக்க சொல்லுங்க. நானும் கார்த்தி இல்லைனா வெற்றி கிட்ட சொல்றேன்.. ஆதுகிட்ட இப்போதைக்கு ஒன்னும் சொல்ல வேண்டாம்“ என்று மாறனை கம்பெனிக்கு அனுப்பி வைத்தார். 

மாறன் கம்பெனிக்குள் செல்லும்போதே அவரின் காரை வழிமறைத்து கோஷங்கள் இட்டபடி சுற்றி வளைத்தனர் தொழிலாளிகள். அவர் இறங்கி நிதனமாக நின்று பேசுவதற்குள் அனைவரின் கூச்சல்களும் அதிகமாக மாறனால் தாக்குபிடிக்க இயலவில்லை. ஒருவாராக அனைவரையும் சில நொடி அமைதிபடுத்தி மாறன் பேச ஆரம்பித்தார். 

“கொஞ்சம் எல்லாரும் அமைதியா இருங்க.. எனக்கும் உங்க எல்லாருடைய கஷ்டங்களும் தெரியுது. பட் இப்போ இருக்க சூழ்நிலை நமக்கு சாதகமா இல்லாம போனது நம்ம கெட்ட நேரம். உங்க எல்லாரையும் நான் ரொம்ப நாள் காக்கவச்சிட்டேன். அதுக்கு என்னை மன்னிச்சுருங்க. ஆன உங்களை கஷ்டபடுத்தி நானும் என் குடும்பமும் சந்தோசமா இல்லை. எனக்கு எப்பவும் நீங்க தான் முக்கியமா இருக்கீங்க, இருப்பீங்க.. ஆனால் உங்களுக்கு நான் முக்கியமா இல்லை தான? அதான் என்னை ஆதரிக்க வேண்டிய நேரத்துல என்னை எதிர்க்கறீங்க?” என்று பேச, தொழிலாளிகளில் ஒருவன் “அப்படி உங்களுக்கு நாங்க முக்கியமா இருந்திருந்தா இத்தணை மாச சம்பளமும் எங்களுக்கு நிறுத்தி வச்சிருக்க மாட்டீங்க.. கூடவே நமக்கு வந்த ஆடரை உங்க மருமகனுக்கும் தூக்கி தாரவாத்து கொடுத்துருக்க மாட்டீங்க.. எங்களுக்கு உங்க பசாப்பு வேலை எல்லாம் வேண்டாம். எங்களுக்கு சேரவேண்டிய பணத்தை மட்டும் கொடுங்க.. நாங்க வேற கம்பெனியை பார்த்து போயிக்கிறோம். தண்டமா இங்க உட்காந்து நீங்க நல்லா இருக்கணும்னு எங்க குடும்பத்தை தெருவுக்கு கொண்டு வந்து விடமுடியாது” என்று கடினமாக பேச, அனைத்து தொழிலாளிகளும் அவன் கூற்றை ஆமோதிப்பது போல் அமைதியாக இருந்தனர்.

மாறன் இவர்களின் அமைதியை தாங்கமாட்டாமல் “உங்க எல்லாருக்கும் சேரவேண்டிய பணம் கண்டிப்பா கிடைக்கும். ஆனா அது உடனே கிடைக்காது. கொஞ்சம் எனக்காக பொறுத்து உங்க வேலையை நீங்க மறுபடியும் ஆரம்பிங்க.. கண்டிப்பா நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்” என்று சொல்ல.

இன்னொருவனோ “அதான் மொத்தமா எங்க எல்லாருடைய வயித்துலையும் அடிச்சுட்டியே? இனி என்ன இருக்கு எங்க கிட்ட ஏமாறுவதற்கு? இன்னும் எங்க உழைப்பை சுரண்ட தான் நினைக்கிறையோ தவிர அந்த உழைப்புக்கு உண்டான கூலியை தர எவ்ளோ யோசிக்கிற நீ” என்றூ ஒருமையில் பேச ஆரம்பிக்க, அவனை ஆதரித்து

 சிலர் கூச்சலிட ஆரம்பித்தனர். மாறனின் கூற்றில் அவருடன் பலவருடங்கள் வேலை பார்த்தவர்களில் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவிக்க, சிலர் எதிர்க்க என்று அந்த இடம் குட்டி போர்க்கலமாக மாற, மேனேஜர் கண்ணை காட்ட, அக்கூட்டத்தில் இருந்த சக்தியின் அடியாள் ஒருவன் மாறனை அவர் எதிர்பார்க்காத பொழுது கீழே தள்ளிவிட்டான். அதில் பலமாக அடிபட்ட மாறன் தன் நினைவு இழந்துவிட்டார். பின் மேனேஜரின் குரலுக்கு கட்டுபட்டு அனைவரும் தங்கள் சண்டையை நிறுத்தி தங்கள் இடம் செல்ல, மேனேஜர் சக்திக்கு கால் செய்து நடந்தவற்றை தெரிவிக்க சக்தி மாறனை மருத்துவமனையில் அனுமதிக்க சொன்னான்.

மாலை ஆதுவை அழைத்து செல்ல வந்த தமிழிடம் வரவேற்பு அறையில் இருந்த பெண், ஆது மதியமே சென்று விட்டது பற்றி கூற, ‘எங்கு சென்றாள்?’ என்ற யோசனையுடன் தன் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.   

பின் ஆதுவின் கைப்பேசிக்கு அழைப்பு விடுக்க அதுவோ அணைத்து வைத்திருப்பதாக சொல்லியது. அவன் கைப்பேசியை வைக்கும் நேரம் தேவா தமிழுக்கு கால் செய்ய அதை எடுத்தான். அந்த பக்கம் “தமிழ். எங்க இருக்க? இங்க எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க.. நீ சீக்கிரம் வா” என்று சொல்ல, தமிழும் அங்கு கிளம்பி சென்றான். ஆயினும் அவன் கைகள் ஆதுவின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தது.

இங்கு மாறனை மருத்துவமனையில் அனுமதித்த விசயம் கேள்விபட்டு அரசி கலாவின் துணையுடன் மருத்துவமனை செல்ல, மாறனை ஐசியூவில் வைத்திருந்தனர். எட்டு மணி எனும் போது கார்த்தி மதுவிற்கு கால் செய்ய அவளின் மூலம் மாறனின் நிலை கார்த்திக்கு தெரிந்தது. அவனும் அவசரமாக திவிக்கு அழைத்து சொல்ல, திவி ஆதுவிற்கு அழைப்பு விடுத்துக் கொண்டே மாறன் தற்பொழுது அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு கார்த்தியுடன் சென்றாள்.

கார்த்தியிடம் “ஆது எப்போ போனா அண்ணா? இப்போ அவ போன் சுவிட்ச் ஆப்னு வருது.. எங்க போறான்னு சொல்லிட்டாவது போனாளா?” என்று கேட்க, கார்த்தி “இல்ல திவி. நீ எதுக்கும் தேவாக்கு கால் பண்ணி கேளு. தமிழ் கூட ஆது இருக்கலாம்” என்று சொன்னான்.

திவி தேவாவிற்கு கால் செய்ய அழைப்பை ஏற்றவன் “இன்னும் கிளம்பலையா திவி? நான் வரவா உன்னை கூப்பிட?” என்று கேட்க, திவி “தேவ்.. மாறனப்பாக்கு கொஞ்சம் உடம்பு மறுபடியும் சரியில்லாம போய்டுச்சு. இப்போ அவுங்களை *** ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க. இப்போ நானும் கார்த்தியும் அங்க தான் போறோம். நீங்க ஆது அங்க இருந்தான்னா கொஞ்சம் அவகிட்ட சொல்லி சீக்கிரம் வரசொல்லுங்க.” என்றவள் வைத்துவிட, தேவாவோ விரைவாக தமிழை தேடி சென்றான். 

தமிழ் அவன் கிளைண்ட்டுகளுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த தேவா அவனிடம் நெருங்கி “தமிழ் கொஞ்சம் பேசணும்” என்று சொல்ல, தமிழ் ”என்ன தேவா?” என்று கேட்டுக் கொண்டே அவனிடம் பேசிக்கொண்டிருந்தவர்களிடம் தலை அசைத்து தேவாவுடன் நடந்தான். 

தேவா தமிழிடம் “டேய் மாமாவ ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்களாம். இப்போதான் திவி கால் பண்ணினா. சீக்கிரம் கிளம்பு. அப்படியே ஆதுக்கும் கால் பண்ணி சொல்லு” என்று மொட்டையாக சொல்ல, தமிழோ “டேய் என்ன சொல்ற? எந்த மாமாக்கு? எந்த ஹாஸ்பிட்டல்?” என்று கேட்க, தேவா “டேய் மாறன் மாமாக்கு.. *** ஹாஸ்பிட்டல்ல வச்சிருக்காங்களாம். இப்போ திவியும் கார்த்தியும் அங்கதான் போயிட்டு இருக்காங்க.. நாமளும் கிளம்புவோம்.” என்று சொல்லி அனவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினர் இருவரும். வழி முழுக்க தமிழ் ஆதுவிற்கு கால் செய்து கொண்டே வர அவளின் கைப்பேசியோ அதே பதிலை சொல்லியது.

காத்தியின் காரும் தேவாவின் காரும் பின் ஒன்றன் பின் ஒன்றாக **** ஹாஸ்பிட்டல் வந்தடைந்தது. கார்த்தி மற்றும் திவி முன் செல்ல தமிழும் தேவாவும் பின் வந்தனர். மதுவிடம் கேட்டு மாறன் இருக்கும் மூன்றாம் தளம் செல்ல, லிப்டில் ஏறினர். திவி தேவாவை பார்த்ததும் அவனிடம் சென்று நின்று கொள்ள, தமிழிடம் கார்த்தி “ஆது எங்க தமிழ்? அவ போன் ஆப்ல இருக்கு.. உங்களுக்கு தெரியுமா அவ எங்க போயிறுக்கான்னு?” என்று கேள்வி கேட்க, தமிழ் “இல்லை கார்த்தி. அவ ஹாஸ்பிட்டல்ல இருக்கான்னு நினைச்சு பிக் பண்ண அங்க வந்த போதுதான் ஆது மதியமே கிளம்பினது தெரியும் எனக்கு.. எங்க போனான்னும் தெரிலை எனக்கு. நானும் ஆதுக்கு டிரை பண்ணிட்டே தான் இருக்கேன்” என்று சொல்லும் போதே அவர்கள் செல்ல வேண்டிய தளம் வந்திருக்க நால்வரும் வெளியேறினர். லிப்டின் அருகிலே ஐசியூ இருக்க வெளியில் போடப்பட்டிருந்த இருக்கையில் கலா அமர்ந்திருந்தார். அவரின் அருகில் அரசியும் அவருக்கு அடுத்தாற்போல் மதுவும் அமர்ந்திருந்தனர்.

இவர்கள் வந்ததை கவனித்த கலா ஆதுவை தேட, திவி அவரின் அருகில் வந்தவள் “ஆது சர்ஜெரில இருக்காமா.. இன்னும் அவளுக்கு தெரியாது” என்று அனைவருக்கும் முன் சொல்லிவிட மற்ற மூவரும் திவியின் கூற்றை ஆமோதித்து தலை அசைத்தனர். அரசி இவர்களை கவனிக்காமல் ஐசியூவின் வாயிலையே பார்த்திருந்தார். கார்த்தியின் அருகில் வந்த மது “அப்பாக்கு சொல்லியிருக்கேன் கார்த்தி. வந்துட்டு இருக்காங்க அவுங்களும்” என்றவள் கலாவிடம் திரும்பி “அத்தை. நாம எல்லாருக்கும் போய் சாப்பாடு எடுத்துட்டு வந்தறலாம். இவுங்க இங்க இருக்கட்டும். வாங்க நாம போய்ட்டு வரலாம்” என்று சொல்லி அவரையும் அழைத்து சென்றாள்.

நால்வரும் அரசியின் பக்கத்திலையே அமர, பத்து நிமிடம் கழித்து மருத்துவர் மாறனின் அறையில் இருந்து வெளியில் வந்தார். வந்தவரிடம் திவி ஒரு மருத்துவர் என அறிமுகப்படுத்திக் கொண்டு மாறனை பற்றி கேள்வி கேட்க, டாக்டரும் “இப்போதைக்கு உயிர்க்கு ஒன்னும் ஆபத்து இல்லை. மத்தபடி அவர் கண் முழிச்சாதான் எதுவும் சொல்லமுடியும். ஏன்னா கீழே விழுந்த போது அவருடைய பின் மண்டையில அடி பட்டிருக்கு. இப்போதைக்கு ரத்தம் வரதை ஸ்டாப் பண்ணிட்டோம். அவர் கண் முழிப்பதற்கு வெயிட் பண்ணுவோம் .. லெட்ஸ் ஹோப் ஃப்பார் குட்” என்று சொல்லி நகர்ந்துவிட, திவி அரசியின் அருகில் சென்று அவரை அணைத்தவாறு உட்கார்ந்துவிட, தேவாவும் தமிழும் அமைதியாக இருக்கையில் அமர்ந்தனர்.

சரியாக கால் மணிநேரம் கழித்து ஆத்விகா அரக்கபறக்க அத்தளம் வந்தடைந்தாள். வந்தவளை பார்த்த தமிழ் “ஆது..” என்றழைக்க , அவனின் அழைப்பு கேட்காதவள் போன்று தமிழையும் ஏறெடுத்தும் பார்க்காமல் அரசியின் அருகில் சென்று அவரை அணைத்துக் கொண்டாள். கண்களிலோ கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. கண்களும் அழுதழுது சிவந்து காணப்பட்டது.

தமிழும் தந்தையின் நிலையினால் இப்படி உள்ளாள் என்று நினைத்துக் கொண்டு அவளிடம் கேள்வி கேட்காமல் இருக்க, ஆது திவிடம் “டாக்டர்ஸ் என்ன சொன்னாங்க?” என்று கேட்க, திவியும் மருத்துவர் சொன்னதை கூறினாள். 

திவியிடம் “அம்மாவை பார்த்துக்கோ.. நான் டாக்டரை பார்த்துட்டு வந்தறேன்” என்று சொல்லி மருத்துவரையும் பார்த்து வந்தாள். அவளிடம் மருத்துவர் அதையே சொல்லியிருக்க, மருத்துவரிடம் ஆது மாறனை தங்கள் மருத்துவமனை அழைத்துசெல்ல அனுமதி கேட்டு அவரை கே.கே மருத்துவமனை அழைத்து செல்ல கார்த்தியிடம் வந்தவள் “அப்பாவை நம்ம ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம் கார்த்தி. நான் டாக்டர் கிட்ட பேசிட்டேன். அவரும் ஓகேன்னு சொல்லிட்டாரு. நீ நம்ம ஹாஸ்பிட்டலுக்கு கால் பண்ணி இன்பார்ம் பண்ணிரு’ என்றவள் அரசியிடம் சென்று அமர்ந்துவிட்டாள். 

முகம் முழுவதும் ரத்தமென சிவந்திருக்க, உதடுகளோ அழுகையை அடக்கியதால் துடித்துக் கொண்டிருந்தது. கண்களும் கலங்கியே காணப்பட, ஆதுவை பார்த்த தமிழுக்கு தன் நெஞ்சில் இழுத்து அணைத்து ஆறுதல் சொல்ல கைகள் பரபரத்தாலும் இருக்கும் நிலை உணர்ந்து அமைதியாக இருந்தான்.