கனலியின் கானல் அவன்(ள்)14.2

மலேசியா சென்றிருந்த ருத்ரா அங்கே புராதன நகரங்களில் ஒன்றான மலாக்கா மாநிலத்திலேயே அவனுக்கான வேலை இருந்தது.கடந்த இரு வாரங்களும் நிதானமாக செயல்பட்டவன் கடைசி இரு  நாட்களாக இரவு பகல் என ஓயாது அலைந்து திரிந்தவன் அவன் வந்த வேலையை திறம்பட முடித்திருந்தான். 

நாளை மறுநாள் ஊர் திரும்பிடுவான். 

 

இறுதியாக காலேஜ் மாணவர்களை  மையப்படுத்தி அமைச்சர் ஒருவர் செய்து வந்த போதைப்பொருள் விற்பனை முடக்கப்பட்டு மாணவர்கள் அதிலிருந்து மீட்கப்பட,அமைச்சருக்கு எங்கிருந்து இவ்வளவு இலகுவாக பொருட்கள் கைக்கு  கிடைக்கின்றன என தேடிய காவல் அதிகாரிகள் அதற்கான விடையை பெற்றவே ருத்ராவின் இம் மலேசியாவிற்கான விஜயம். 

 

அமைச்சர் அவருக்கு பொருள் வரும் இடம்  எனக் காட்டியது ஓர் நிறுவனம் அதுவும்  விளையாட்டு பொருட்களை இறக்குமதி செய்து,அவற்றை பொதி செய்து சந்தைக்கு கொடுக்கும் நிறுவனம்.

 

ஒன்றுக்கொன்று முரணான இடம் என அது பற்றி அன்றே அலசி ஆராய்ந்தவனுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் அவர்கள்  அதிகளவில் மலேசியாவிலிருந்தே இறக்கு மதி செய்கின்றனர் என்பதே.அவனுக்கு தெரிந்த ஒருவர் மூலம் மலேசியாவில்  அந்நிறுவனம் பற்றி விசாரித்தவனுக்கு கிடைத்தது,அங்கு விளையாட்டு பொருட்கள் பொருத்தும் போது,குறிப்பிட்ட ஒரு விளையாட்டு பொருளில் மாத்திரம் போதை பொருளை சிறு பொதியாக அதனுள் வைத்து  பொறுத்துகின்றனர் எனும் தகவலே.அதன் பின்னர் அனைத்து பொருட்களுடனும் அவற்றை ஒன்றாக கலந்து பொதி செய்து சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

 

 இங்கிருக்கும் நிறுவனத்தில் ஒவ்வொரு  விளையாட்டு பொருளையும் தனித்தனியாக பொலிதீன் பைகளில் பிரித்து பொதி செய்யும் போது குறிப்பிட்ட விளையாட்டு பொருட்கள் மட்டும் தனியாக  பிரிக்கப்பட்டு அதிலிருக்கும் போதைப்பொருள் உரியவரிடம் சேர்க்கப்பட்டிருக்கிறது. 

 

எனவே பொதி செய்யும் பிரிவில் இருக்கும் நபர் ஒருவர் அப்பிரிவில் சிலரை  சேர்த்துக்கொண்டு இத்தொழிலை செய்து வந்தத்தோடு அதனை அந்நிறுவனத்துக்கே தெரியாமல் அவர்கள் மூலமாகவே அவரது  பொருளை மலேசியாவிலிருந்து வரவழைத் தேவையானவர்களுக்கு மிக திறமையாக கொடுத்திருகின்றான்.அதில் முக்கிய நபரே பிடிபட்ட அமைச்சர். 

 

அனைத்தையும் ஆதாரங்களை திரட்டி  அதன் மூலம் மலேசியா காவல் அதிகாரிகளின் உதவியோடு இந்தியர்கள் ஐவர் உற்பட பதினைந்து பேர் கைது செய்து பொருட்கள் அழிக்கப்பட்டு ருத்ராவின் மேலதிகாரிக்கு ஆதாரங்களும் சாட்சிகளையும் அதோடு ஊடகங்களுக்கும்  கொடுக்கவேண்டிய தகவல்களையும் இன்று மாலைதான் சேர்ப்பித்தான்.இங்கு அந்நிறுவனத்தில் சந்தேகப் பட்டவர்களையும் கைது செய்ய அங்கிருந்தே ஏற்பாடு  பண்ணியிருந்தான். 

 

இரவு ஏழு மணியிருக்கும் ருத்ரா பதிவு செய்திருந்த பிரபல ஹோட்டல் ஒன்றில் அவனுக்கான அறையின் ஜன்னலினூடாக அவ்விடத்தின் அழகை ரசித்த வண்ணம் இருந்தான். 

 

மலாக்கா நீரிணையில் செயற்கை  தீவொன்று அமைத்து அதில் கட்டப்பட்டிருந்த பள்ளிவாயல் (Malacca straits’ floating mosque)அவன் நின்றிருக்கும் ஜன்னலுக்கு நேராக அமைந்திருந்தது. சிவந்த இரவு வானில் இருள் மெல்ல பரவி வரும் நேரம்,அவ்விடத்தினை பல வண்ண விளக்குகள் அலங்கரித்திருக்க நீரில் மிதந்த வண்ணம் இருக்கும் படியாகத்தான் அமைக்கப்பட்டிருந்தது அப்பள்ளிவாயல். பார்ப்பதற்கு மிக அழகான இடமாக  தெரிந்தது. 

 

கட்டிட கலையினை பிரதிபலிக்கும் புராதன தளங்கள்,மற்றும் சிறப்புமிக்க பல இடங்களை உள்ளடக்கிய புராதன மாநிலமே மலாக்கா.எப்போதும் ருத்ரா அவன் வேலைக்காக செல்லும் இடங்களில்  வேலைகள் முடிய அங்குள்ள முக்கிய, சுற்றுலாத் தளங்களையும் முடிந்தளவு பார்வையிடுவான்.இன்றும் அவ்விடம் செல்ல முடியாவிடினும் தூரவிருந்தே அதன் அழகை ரசித்துக்கொண்டிருந்தவன் கண்ணில் அக்கட்டிடத்தின் ஓரமைப்பு  கயலின் விழியை அவனுக்கு நினைவு படுத்தியது. 

 

தன் தொலைப்பேசியில் இருக்கும் அவள்  படத்தினை பார்த்தவன்,

 ‘உங்கப்பா உன்னை கண்ணம்மா  சொல்றதுக்கு இந்த கண்ணுதாண்டி  காரணமாயிருக்கும்.இந்தக் கண்ணை  வெச்சே என்னை என்னமோ பண்ற நீ, அன்னைக்கு அவ்வளவு பேசுறேன் ஒரு வா 

ர்த்த பேசுறியா? எதுக்குடி என்ன அவொய்ட்  பண்ற.உன்னை பக்கத்துல வெச்சுகிட்டு நிறைய காதல் பண்ணனும்னு தோணுதுடி. கண்ணால காதல் பண்ற ஆனா உன் உதடுகளோ வேறேதோ கதை பேசுது.

 

கல்யாணம்  பண்ண வேண்டிய  வயசுலதான் லவ் பண்ணவே  ஆரம்பிச்சிருக்கேன்.ஹ்ம்ம்  பார்க்கலாம்… என் மனசுக்குள்ள நீ வர முன்னமே,உன்  மனசுக்குள்ள நான் வந்துட்டேன்னு எனக்கு இப்போதான் புரியுதுடி.என்னை  அறியாமலேயே உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்ல.சாரிடா.

 

முதன் முதலா டென்னிஸ் கோட்டுக்கு நீ வந்தப்போ என்னை நீ பார்த்த பார்வைல  இருந்த ஏதோ ஒன்னு,கடைசியா உன்னை உங்க வீட்ல பார்த்தப்பவும் கண்டேன். 

 

மொத்தமா என் காதலையெல்லாம் சேர்த்து  உனக்கு தரலாம்னு நினைக்கிறேன்,பட் என்னை நீ அன்னைக்கு பார்த்த  பார்வையில உனக்குள்ள எதுவோ மறச்சிகிட்டு பொய்யா பார்க்குற போலத்தான் எனக்கு தோணிச்சு… எதுன்னாலும் என்கிட்ட வந்துரு உனக்காக எதையும் சரிபண்ணுவேன் டா.’

 

 மனதில் பேசியவாறு அவன் விரல்  கொண்டு அவள் படத்தை வருடியவன் அவள் படத்தின் குறுக்கே எழுதியிருந்த ‘கவி வர்மன்’ எனும் பெயரை பார்க்க இதழ்களில்  மென் சிரிப்பொன்று தோன்ற அதோடு அவள் படத்தில் தன் இதழ் ஒற்றியெடுத்தான். 

 

‘ஊருக்கு போனதும் அத்தம்மாவோட பேசி கயல் பற்றி சொல்லிரனும்.அதோட அவங்களும்  எதுவோ முக்கியமா பேசணும்னு சொல்லிருந்தாங்களே,அதை முதல்ல கேட்டுட்டு தான் நம்ம விஷயம்  ஓபன் பண்ணனும்’ என நினைத்துக்கொண்டவன் கயலுடனான நினைவுகளுடன் உறங்கிப் போனான்.