கனவு 12
கனவு 12
அத்தியாயம்-12
“எனக்கு ஒரு ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு கௌசி.. அது விஷயமா கனடா போறோம் நானும் என் டீம் மெம்பர்ஸ்
மூன்று பேரும்..” என்றான் விக்னேஷ் குஷியாக.
“சூப்பர் டா.. கங்கிராட்ஸ்…” என்றாள் கௌசி உண்மையான மகிழ்ச்சியோடு.
இந்த மாதிரிப் ப்ராஜெக்ட் அவனின் கனவு என்பது அவள் நன்கு அறிந்த விஷயமே.
அதைப் பத்தி நிறைய நாட்கள் தூங்காமல் உழைத்திருக்கிறான் என்று கௌசிக்குத் தெரியும். அவளுடன் சேர்ந்து வரதராஜனும் ஜெயாவும் வாழ்த்தினர்.
“எப்போப்பா விக்கி கிளம்பனும்?” எனக் கேட்டார் வரதராஜன்.
“நம்ம கௌசி கல்யாணம் முடிஞ்ச அன்றே.. மதியம் மாமா” என்று விக்னேஷ்
சொல்ல எல்லோருமே வாயைப் பிளக்க கௌசி மட்டும் அமைதியாய் இருந்தாள்.
“என்ன விக்கி.. கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் கழித்துப் போனா கிடக்கு” என்று ஜெயா அங்கலாய்த்தார்.
“இல்லை பெரியம்மா.. நான் முன்னாடியே போக வேண்டியது.. இதோ இவளின்
கல்யாணத்தை முடிச்சிட்டு தான் போகனும்-ன்னு டைம் எக்ஸ்டன்ட் பண்ணிருக்கேன்” என்றான் அனைவரையும் பார்த்து.
“என்ன கௌசி விக்னேஷ் அன்னிக்கே கிளம்பறேன்னு நிக்கறான்.. எதுவும் சொல்லாம நிக்கற.. சண்டை போட்டு
இருக்க வை அவனை” என்று வரதராஜன் கௌசியிடம் சொல்ல.. கௌசியோ
விக்னேஷிடம் என்ன சொல்லுவது என்று தெரியாமல் அவனைப் பார்த்தாள். அவளால் என்ன சொல்ல முடியும்.. என்
கல்யாணத்தில் இருந்து என்னை வாழ்த்து என்றா..
“மாமா.. நானும் புதுசா கம்பெனி சொந்தமா ஸ்டார்ட் பண்ணப் போறேன்..
கோயம்புத்தூர்ல கௌசி கல்யாணம் முடிஞ்சு 2 வாரத்துல கிளம்பிருவோம்
நானும் மதியும்” என்று ஜீவா சொன்னான்.
“ஆமா அண்ணா.. இவனுக்கு ரொம்ப நாள் ஆசை.. அதான் நாங்களும் எதுவும்
சொல்லலை.. கோயம்புத்தூர் என்றால் மதி அம்மா அப்பாவும் இருக்காங்க இல்லையா.. நமக்கும் கொஞ்சம் தைரியமாக இருக்கும்” என்றார் ஜெயா.
“ரொம்ப சந்தோஷம் ஜீவா… நல்லா பண்ணு நீயும்.. எப்படியோ உங்க எல்லாருக்கும் புடிச்ச மாதிரி வாழ்க்கை அமைஞ்சிருச்சு..” என்று வரதராஜன்
சந்தோஷப்பட ஜெயாவின் பார்வையும் கௌசியின் பார்வையும் சந்தித்து
மீண்டது.
கௌசிக்கு விக்னேஷ் தன்
கல்யாணத்தன்று போறதே சரியாகப் பட்டது. அவளால் அவனை எதிர்கொள்ள
முடியாது என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஜீவாவும் போகிறேன் என்று சொல்லுவது அவளுக்கு வலித்தது. ஒரே சமயத்தில் இரண்டு பேரையும் பிரிய
வேண்டுமே என்று மனம் சோர்ந்தது. மதியையும் இனி அவ்வளவாகப் பார்க்க
முடியாது என்று எண்ணியவளுக்கு முகம்
சுருங்கியது.
“சரி மாமா.. நான் கிளம்பறேன்” என்று எழுந்தவன் “பெரியம்மா.. அம்மா ஏதோ
மண்டபத்துக்கு-ன்னு சொன்னதெல்லாம்
வாங்கிட்டாங்கலாம்.. 7 மணிக்கு தான் வந்தாங்களாம்.. நாளைக்கு வரேன்னு
சொன்னாங்க” என்ற விக்னேஷ் கௌசி உட்பட அனைவரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
“சரி ஜீவா.. நம்மளும் கிளம்பலாம்.. இரு உன் அப்பாவுக்கும் டிபன் எடுத்துட்டு
வந்திடறேன்..” என்று சமையல்
அறைக்குள் புகுந்து விட்டார்.
ஜீவாவும் வரதராஜனும் ஏதோ பேசியபடி மாடி ஏற மதி இடுங்கிய கண்களுடன்
கௌசியைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மதி. மதியின் பார்வை தன்னைத் துளைப்பதைக் கண்ட கௌசி
எழுந்து தன் அறைக்குச் செல்ல மதியும் அவள் பின்னே சென்றாள்.
தன் பின்னே நுழைந்தவளைக் கண்ட கௌசி “மதி.. நீ குடுத்த ப்ளவுஸ் நல்லா இருக்கு.. ஸ்டிச்சிங் எல்லாம் பர்பக்ட்”
என்று பேச்சின் திசையை வேறு பக்கம் கொண்டு சொல்ல முயன்றாள் கௌசி.
“சரி கௌசி.. இதுல எது ரிசப்ஷன் ப்ளவுஸ்.. எது முகூர்த்த ப்ளவுஸ்-ன்னு
சொல்லு” என்று கைகளை மார்பிற்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு கௌசியைப்
பார்த்துக் கேட்டாள்.
“அ… அது…” என்று ப்ளவுஸைப்
பார்த்தவள் எதுவும் பேசவில்லை.. இஷ்டமான கல்யாணமாக இருந்திருந்தால் எல்லாம் தெரிந்திருக்கும்.. ஆனால் எதுலையும் நாட்டம் இல்லாமல் திரிபவளுக்கு எது
மேலேயும் நாட்டமும் செல்லவில்லை கவனமும் இல்லை.
“கௌசி… உனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு நல்லாவே
தெரியுது” என்று பட்டென்று
சொல்லிவிட்டாள்.
“உன் இளைத்த உடம்பும்..
கருவலையமுமே சொல்லுது.. என்ன கௌசி மறைக்கற நீ…?” -மதி
“ஆமாம் மதி… இஷ்டம் இல்லதான்.. என்னப் பண்ண சொல்ற.. எல்லோருக்கும் புடிச்ச மாதிரி வாழ்க்கை
அமைஞ்சிருதா என்ன.. அது மாதிரி நினைச்சுக்க வேண்டியது தான்” என்றாள்
கௌசி இறுகிய முகத்துடன்.
“இது நம்ம விளையாடற பொருள் இல்ல கௌசி… லைஃப் புல்லா ஒருத்தர் கூட
ட்ராவல் பண்ணப் போறோம் உனக்குப் புரியுதா.. நீ என்னடான்னா இப்படி
அசால்ட்டா இருக்க” என்று கௌசியின் மீது கோபத்தைக் காட்டினாள் மதி. தன்
வாழ்க்கைக்கு அப்படித் தன் தந்தையிடம் பேசியவள் இப்படித் தன் வாழ்க்கைக்கு
வாய் மூடிக்கொண்டு இருப்பது
அவளுக்கு ஆதங்கமாகவும் கோபமாகவும் இருந்தது.
“எல்லாம் சரி ஆகிவிடும் விடு மதி” என்றாள் கௌசி வெற்றுக் குரலில்.
“நீ வேணும்னா சொல்லு.. நான் ஜீவா கிட்ட சொல்லி பேசச் சொல்றேன்” என்று மதி சொல்ல கௌசி அதிர்ந்தாள்.
“எனக்கு இந்தக் கல்யாணம் இஷ்டம் தான்னு சொல்லிடுவேன் மதி” என்று
மனதைக் கல்லாக்கிக் கொண்டு கௌசி சொல்ல மதிக்கு கோபம் வந்து விட்டது.
“கௌசி நீ தைரியமானவள்-னு
நினைச்சேன்.. இப்படி கோழையா இருப்பன்னு நினைக்கல.. என்ன
பிரச்சனை-ன்னு சொல்ல மாட்ற.. வேண்டாம் விடு.. உனக்காக நான் யோசிக்கிறேன் பாரு.. என்ன
சொல்லனும்..” என்று தன்னைத் தானே திட்டியவள் “சரி கௌசி… உன் வாழ்க்கை.. உன் இஷ்டம்” என்று சொன்னவள் அறையை விட்டு வெளியே வர வரதராஜனும் ஜீவாவும் கீழே வந்தனர்.
ஜெயா ஹாலில் தான் உட்கார்ந்திருந்தார். கௌசியும் மதியும் பேசியது அவருக்கு
நன்றாகவே கேட்டது. ஆனால்
மருமகளிடம் கேட்டது போலக் காட்டிக் கொள்ளவில்லை. பிறகு அவர்களும் கிளம்பிச் செல்ல கௌசி தான் தனக்குள்
மருக ஆரம்பித்தாள்.
நாட்கள் முயல் வேகத்தில் நகர்ந்து குரு கட்டியத் தாலியோடு அவனோடு
மணமேடையில் ஓமப் புகையின் முன் அமர்ந்திருந்தாள் கௌசிகா. “முடிந்தது இனி அவ்வளவுதான்” என்று
நினைத்தவளுக்குக் கண்ணில் நீர் திரையிட்டது. நிமிர்ந்தவள் இடது பக்கம் எதேச்சையாக நின்று கொண்டு இருந்த
விக்னேஷைப் பார்த்தாள். அவனும் அவளையேதான் பார்த்துக் கொண்டு
இருந்தான். அவள் கண்களில்
கண்ணீரைப் பார்த்து புருவத்தைச் சுருக்கியவன் பின் ஓமப் புகையில் என்று
நினைத்துக் கொண்டான்.
கல்யாணத்திற்கு நான்சியும்
வந்திருந்தாள். “கௌசி நீ அவளைக் கூப்பிட்டையா?” என்று டச்சப் செய்வது போல வந்து மதி கேட்க இல்லை என்று தலை அசைத்தாள் கௌசி.
“இதைப் பாத்தாலே எனக்குப் புடிக்கல.. கூப்பிடாமையே சிங்காரிச்சுட்டு வந்துட்டா.. என்ன ஜென்மமோ” என்று
எரிச்சல் பட்ட மதி.. தன் மாமியார் கூப்பிட சென்று விட்டாள். கௌசியின் கண்கள்
விக்னேஷைக் கவனித்தது. அவள் சென்று விக்னேஷின் முன் எப்படி இருக்கேன் என்பது போல நின்றதும். விக்னேஷ் அவள் காதில் ஏதோ சொன்னதும். அதற்கு அவள் சிரித்தும் கௌசிக்கு எல்லா உணர்வுகளும் வடிந்தது போல இருந்ததும்.
பின் விக்னேஷிடம் பேசிவிட்டு மேலே வந்தக் நான்சி “கங்கிராட்ஸ் குரு” என்று
கையைக் கொடுக்க குருவும் “தேங்க்ஸ் நான்சி” என்று கையைக் கொடுத்தான் குரு.
“நான்சி.. என்னோட ஸ்கூல் பிரண்ட்..” என அறிமுகம் செய்ய “ம்ம்” என்று மட்டும்
தலையை ஆட்டினாள்.
“கௌசியை எனக்கு நல்லாத் தெரியுமே.. நம்ம ஜூனியர் தானே ஸ்கூல்ல.. செம
போல்ட் கேர்ள்” என்றவள் கடைசியாக சொன்ன வார்த்தையில் அழுத்தம்
கொடுத்தாள். கௌசி அவளை முறைக்க அதற்குள் மேலே வந்த விக்னேஷ் “ஹே..
வாங்க எல்லோரும் ஒரு போட்டோ எடுத்துப்போம்” என்று சொல்ல அவனும்
நான்சியும் சேர்ந்து குருவின் பக்கத்தில் நிற்க ஜீவாவும் மதியும் கௌசியின் பக்கத்தில் நின்றனர்.
மேலே போட்டோவிற்கு நின்றிருந்த கௌசியைப் பார்த்த ஜெயாவிற்கு வயிற்றில் ஏதோ பிசைந்தது. காரணம் அவளின் இறுகிய பாறை முகம். போட்டோ எடுத்த பின் “கிளம்பறேன்” என்று சொன்ன நான்சியை உறுத்து
விழித்தாள் கௌசிகா. ஆனால்
நான்சியோ இளநகையுடன்
சென்றுவிட்டாள். அவள் போவதையே வெறித்துப் பார்த்த கௌசியைக் கீழே
இருந்து கண்ட ஜெயாவிற்கு
உதறலெடுத்தது.
“கடவுளே… இவள் பிடிவாதம் பிடித்து நிறுத்தியிருந்தால் கூட
பரவாயில்லையே.. இப்படி தானே சென்று விழுந்துவிட்டு இப்படி நிற்கிறாளே.. கடவுளே எந்தப் பிரச்சினையும் வராம
நீதான் காப்பாத்தனும்” என்று கடவுளை வேண்டிக் கொண்டு கனத்த மனதுடன் யாரோ கூப்பிட அடுத்த வேலையைக்
கவனிக்கச் சென்றார்.
பின் எல்லாம் முடிந்து குருவையும் கௌசியையும்.. பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆரத்தி எடுத்து
வரவேற்று எல்லா சம்பிரதாயங்களையும்
செய்தனர்.
“சரி நான் கிளம்பறேன்.. வரதுக்கு எப்படியும் 2 மாசம் ஆயிரும்.. ” என்று மதியத்திற்கு மேல் வீட்டிற்கு வந்து சில
சம்பிரதாயங்களை முடித்துவிட்டு உட்கார்ந்திருந்த கௌசியிடமும் குருவிடமும் கூறினான் விக்னேஷ்.
“ம்ம்” என்று தலை ஆட்டியவளுக்கு வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்
கண்ணீர் மணிகள் உதிர்ந்தன. பழைய கௌசியாக இருந்திருந்தால் அவனை
சந்தோஷமாக அனுப்பி வைத்திருப்பாள். ஆனால் இன்றோ அவன் பக்கத்தில்
இருந்தும் அவளால் எதுவும் பேச முடியவில்லை. குருவின் அருகாமையில் உட்கார முடியாமல் தவித்துக்
கொண்டிருந்தவளுக்கு விகனேஷ் வந்து கிளம்பறேன் என்று சொன்ன போது.. ஏதோ முன் பின் தெரியாத இருட்டில்
யாரோ தன்னை குழியில் விட்டுவிட்டு செல்வதை உணர்ந்தவளுக்கு இயலாமையால் அழுகை வந்தது.
“ஏய்… என்னது இது.. இனி குரு தான் உன்ன வச்சிட்டு அழணும்.. நீ ஏன் அழறே” என்று குரு ஏதாவது நினைப்பானோ என்று சூழ்நிலையைக் கொஞ்சம்
கலகலப்பாக ஆக்க விரும்பி பேச்சை மாற்றினான் விக்னேஷ்.
“நோ வொரிஸ் விக்னேஷ்.. இனிமேல் கௌசி என் பொறுப்பு.. என்னை மீறி
அவளிற்கு என்ன ஆகிவிடப் போது” என்று கௌசியின் தோளில் கை போட்டு.. கையை அவளின் தோளில் அழுத்தினான்.
அவன் கை பட்டவுடன் விக்னேஷின் பார்வையும் கௌசியின் பார்வையும்
அவன் கை இருந்த இடத்தைத் தான் பார்த்தது. கௌசிக்கு குருவின் செயல் சுத்தமாகப் பிடிக்கவில்லை. காரணம்
இல்லாமல் ச்சி என்று இருந்தது.
“சரி நான் கிளம்பறேன்.. ஒன்ஸ்
அகெயின்… ஹா.. ஹாப்பி மேரிட் லைஃப்” என்றவன் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான் விக்னேஷ்.
அடுத்து கிடைத்த தனிமையில் மதி கௌசியிடம் பேசினாள். “கௌசி சாரி. அன்னிக்கு கொஞ்சம் கோபமாக பேசிட்டேன்” என்றாள் வருத்தமாக மதி.
“அதெல்லாம் எதுவும் சாரி வேண்டாம் மதி.. என்மேல இருந்த அக்கறைல தானே
பேசுனே” – கௌசி முயன்று வரவழழைத்த புன்னகையோடு.
“ஹம்.. கௌசி.. கொஞ்சம் மாற ட்ரை பண்ணு.. என்ன ஆனாலும் காலம் பதில்
சொல்லும் கௌசி.. நமக்கு புடிச்ச மாதிரி எல்லாம் மாறிடும்.. நீ சந்தோஷமா இரு
கௌசி.. நாங்க கோயம்புத்தூர் இன்னும் ஒன் வீக்ல கிளம்பிருவோம்.. அடிக்கடி
போன் பண்ணு.. நாங்க வந்தாலும் உன்ன பாக்க வறோம் ” என்றாள் மதி.
“ம்ம்” என்று கௌசி சொன்னாலே தவிர எதுவும் பேசவில்லை.. அவளால் பேச
முடியவில்லை. அதற்குள் அங்கு வந்த சுமதி கௌசியை அழைத்து குரு வீட்டிற்கு
எடுத்துச் செல்ல வேண்டியது பற்றி ஆரம்பித்தார்.
மாலை கௌசி குருவின் வீட்டிற்குக் கிளம்ப வரதராஜன், சுமதி, ஜெயா, மதி, ஜீவா எல்லோருக்குமே கண்களில்
கண்ணீர் கோர்த்ததே தவிர கௌசிக்கு ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை. ஏன்
ஜெயாவின் கணவர் சதாசிவம் மற்றும் சுமதியின் கணவர்
செந்தில்நாதனிற்குமே மனம் கனத்தது. ஆனால் கௌசியின் முகம் இறுகி மனமோ எங்கோ இருந்தது. (அவள் மனம்
கனடா சென்றவனுடன் பின்னேயே இருந்தது)
அங்கு அனைவரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்ப நேராக குருவுடன் ஓ.எம்.ஆர் இல் உள்ள வீட்டில் கார் வந்து நின்றது. வரும் வழியில் தன் சிந்தனைகளிலேயே
இருந்தவள் குருவின் பார்வையை உணரவில்லை. வீடு வந்து இறங்கியதும்
இயந்திரத் தன்மையுடன் நடக்க குருவின் அக்கா வினித்ரா ஆரத்தி எடுக்க அப்போது தான் கௌசிகா வீட்டைக்
கவனித்தாள். அவ்வளவு பெரிய வீட்டைப் பார்த்தாள் எந்தப் பெண்ணுக்கும் மனம்
துள்ளும்.. ஆனால் கௌசியின் மனமோ சுருங்கியது. அவள் மனமும் லயிக்கவில்லை. மாமியார் நீலவேணியோ வேண்டா வெறுப்பாக
நின்றிருந்தார். அவரது முகத்தை வைத்தே அவருக்கு இந்தத் திருமணத்தில்
அவ்வளவு விருப்பம் இல்லை என்பதை கௌசி யூகித்து விட்டாள். இருக்கிற
வேதனையில் இது வேறா என்று நினைத்தவளுக்கு தலை வேறு வலிக்க
ஆரம்பித்தது.
வீட்டிற்குள் வந்தவுடன் சில உறவினர்கள் தவிர யாருமே இல்லை.. அவர்களும் ஏழு
மணிக்கு மேல் கிளம்பிச் செல்ல வினித்ரா “கௌசி.. வா ரெடி ஆக வேண்டாமா?” என்றபடி வந்தாள்.
“எதுக்கு?” என்று கௌசி கேட்க
எல்லோரும் அவளை விசித்திரமாகப் பார்த்தனர். அப்போது தான் அவளுக்கு
நியாபகம் வந்தது… எதற்கு வினித்ரா அழைக்கிறாள் என்று.
“ஏம்மா உனக்கு சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் தெரியுமா தெரியாதா” என்று
குருவின் தாயார் நீலவேணி கேட்க “இ.. இல்லை.. வந்து.. மறந்திட்டேன்” என்று
திணறினாள் கௌசிகா.
அமைதியாக எழுந்து வினித்ராவுடன் ஒரு அறைக்குச் சென்றாள். கௌசிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதை அவள் யோசிக்கவே இல்லையே..
இதற்குத் தான் அத்தை சொன்னாங்களா.. அய்யோ கடவுளே என்னக் காப்பாத்து..
என்று மனதிற்குள் புலம்புவதைத் தவர அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
வினித்ரா அவளின் தம்பியின் அருமை பெருமைகளை சொல்லிக் கொண்டே
கௌசியைத் தயார் செய்ய அது எதுவும் கௌசியின் காதில் விழவில்லை. அவளுக்கு வியர்த்துக் கொண்டே இருந்தது.
“ஏன் உங்களுக்கு இப்படி வியர்க்குது?” என்று வினித்ரா கேட்க “அது.. வந்து..” என்று திணறினாள் கௌசி.
“பயப்படாதே… என் தம்பி ரொம்ப நல்லவன்” என்று தைரியம் மூட்டினாள். அவளை தயார் செய்து குருவின்
அறைக்குள் விட்டுவிட்டுத் தன்
கணவன் மற்றும் குழந்தையுடன் வீட்டிற்குக் கிளம்பி விட்டாள் வினித்ரா.
அறைக்குள் இருந்த கௌசிக்கு மூச்சு முட்டுவது போல ஆகியது. கால்கள் எல்லாம் செயல் இழந்து நடக்கக் கூடத்
தோன்றாமல் அப்படியே நின்றவள் அப்போது தான் அறையின் அலங்காரத்தைக் கவனித்தாள். இதயம் நின்று நின்றுத் துடிக்க தன் கைப்
பெருவிரல் நகத்தால் உள்ளங்கையை அழுந்தியபடி நின்றிருந்தாள். அவள்
அழுத்திய அழுத்தில் அந்த இடம் கன்றி ரத்தம் வரும் நிலைக்கு ஆனது.
எப்படியாவது குருவிடம் இதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும் என்று அவனைப்
பற்றி அறியாமல் யோசித்துக்
கொண்டிருந்தாள் கௌசிகா. வினித்ரா சொன்னது அவளுக்குக் கொஞ்சம்
தைரியத்தைத் தர நின்றிருந்தாள்.
“எ…ன்ன யோசிச்சி…ட்டு இரு..க்க கௌசிகா?” என்று தன் பின்னால் அருகில் நின்றபடி அவள் காதின் அருகே குருவின் குரல் கேட்க தூக்கிவாரிப் போட்டபடி திரும்பிப் பார்த்தவள் அவனது
தோற்றத்தில் தினைத்தாள்.
இது குருவா?
தலை கலைந்து.. கண்கள் சிவப்பேறி நின்றிருந்தவனிடம் மது வாடை வர கௌசிக்கு உமட்டல் எடுத்தது. ஐடி
வேலையில் இருந்தவளுக்கு ஏதாவது பார்ட்டிக்கு போகும்போது பக்கத்தில்
இருப்பவரிடம் வரும் மதுவின் நெடி சாதரணம் தான். ஆனால் அவளுக்குத் தெரிந்த யாரும் இப்படி மொடாக் குடிகாரர்கள் யாரையும் பார்த்தது இல்லை.
அவன் பார்வை வேறு வித்தியாசத்தைத் தர கௌசிக்கு அந்த ஏசி அறையிலும் வேர்த்தது. அவளின் உடலை மேலிருந்து
கீழ் அளந்தவனைப் பார்க்க மனதின் தைரியம் குறைந்து கொண்டே வந்தது. அவன் அவள் அருகே வர.. அவன் தன்
நிலையில் இல்லை என்பதை உணர்ந்த கௌசிகா பின்னே நகர்ந்தாள். அவளுக்கு உள்ளுக்குள் எச்சரிக்கை மணி
அடிக்க வாயைத் திறந்து பேசினாள்.
“குரு நான் உங்ககிட்டப் பேசனும்..” – கௌசியின் குரல் சொல்லும் போதே நடுங்கியது.
“ஹம்ம்… ப்ளீஸ் டோன்ட் ஸ்பாயில் மை மூட்” என்று அருகில் வர.. கௌசியின்
உடல் உதறல் எடுத்தது. உள்ளமும் நடுங்கியது. கொஞ்சநஞ்சம் இருந்த
நம்பிக்கையும் குருவின் பார்வையில் பறந்து கொண்டு இருந்தது.
அவன் கௌசியின் தோளில் கை வைக்க வர சடாரென விலகியவள் வெளியே
செல்லப் பார்க்க.. அந்தப் போதையிலும் கௌசியை ஒரே எட்டில் வந்து
பிடித்துவிட்டான். துள்ளித் திமிறி விலக முயன்றவளை அவன் கரம் உடும்பாய் பற்றி வலியைத் தந்தது.
அவன் கைகள் எல்லை மீற கோபம் வந்தவளாய் தன் முழு பலத்தைக் கொண்டு அவனைத் தள்ளி விட்டு
அவனை முறைத்தாள். “ச்சி மனுஷனா நீங்க.. ஒரு பொண்ணோட விருப்பம்
இல்லாம இப்படி பிகேவ் பண்றீங்க..” என்று பயத்தை வெளியே காட்டாமல் மறைத்து கோபமாய் அவனிடம்
சொற்களை வீசினாள்.
கோபப்படுவான் அல்லது முகம்
கன்றுவான் என்று நினைத்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாறாக அவன்
முகம் ஏளனத்தைத் தத்தெடுத்திருந்தது.
“ஏன் நான் உன் கணவன் தானே?” என்றான் ஏளனச் சிரிப்போடு.
“ஓ.. அப்போ நீங்க எனக்கு தாலி கட்டிட்டா.. என்னை என்ன வேணாலும் பண்ணலாமா?” என்று சீறினாள் கௌசி.
“ஸோ வேற என்ன நீ எதிர்பாக்கறே? இந்த சீரியல், சினிமால வர மாதிரி உனக்கு
வெயிட் பண்ணச் சொல்றியா.. எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்ல.. வெயிட்
பண்ண ரீசணும் இல்ல” என்றான் விட்டேற்றியாக.
“நீங்க எல்லாம் படிச்சு ஒரு பிரயோஜமும் இல்ல.. காட்டான் மாதிரி நடந்துக்கறீங்க”
என்றாள் முகத்தில் வெறுப்புடன்.
“நீ என்ன வேணாலும் சொல்லிக்க.. நான் அதை எல்லாம் கன்சிடர் பண்ண
மாட்டேன்.. இந்தக் காதுல வாங்கி இந்தக் காதுல விட்டிடுவேன்” என்று போதையிலும் அழுத்தமாகப் பேச கௌசிக்கு பயம் எடுத்தது உண்மைதான்.
“ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டான்ட்… என்ன
ஒரு மனுஷியாக ஆவது நினைச்சா.. கொஞ்ச நாள் என்னை விட்டிடு” என்றாள்
எங்கோ பார்த்தபடி.
“ஏன்?” – குரு.
“….” – கௌசிகா.
அவள் அருகில் வந்தவன் “ஏன்னு கேட்டேன்?” என்று அவளின் தோளில் கையை வைத்தான். ஆனால் அவனின்
கேள்வி அவன் தெரியாததைக் கேட்பது போல இல்லை.. ஏதோ உள்ளே வைத்துக் கொண்டு வேண்டுமென்றே கௌசியைக்
காயப்படுத்தும் நோக்கம் இருந்தது.
அவன் கையைத் தட்டிவிட்டவள் “ச்சி.. உனக்கு புரியுதா.. எனக்கு நீ தொட்டா புடிக்கலை.. அருவெருப்பா இருக்கு”
என்று முகத்தை சுளித்து அவனிடம் வெளிப்படையாகச் சொல்லியே விட்டாள்.
ஆனால் அடுத்து அவன் கேட்ட
கேள்வியில் கௌசிகா ஆணி அடித்தாற் போல அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.
“உன் அத்தை மகன் விக்னேஷ்
தொட்டிருந்தால் இப்படி சொல்லிருப்பியா டி?” என்று குரு ஆங்காரமாய்க் கத்த
கௌசிக்கு உலகமே நின்றுவிட்டது.