கனவு 15

அத்தியாயம்-15

கௌசிகாவின் பிறந்தநாள் அடுத்து வந்த சில தினங்களில் தான் விக்னேஷ் நான்சியைச் சந்தித்தது. முதலில்
ஹைதராபாத்தில் வேலையில்
இருந்தவள் சென்னைக்கு மாற்றல் கிடைக்க இங்கு வந்து ஒரு ப்ளாட் எடுத்துத் தங்கியிருந்தாள்.

வேலையில் சேர்ந்த அன்று தான் அவள் விக்னேஷைப் பல வருடம் கழித்து சந்தித்தது. முதலில் விக்னேஷிற்குமே
அவளை அடையாளம் தெரியவில்லை. அவளாக வந்து பேசிய போது தான்
அவனுக்கு நினைவு எழுந்தது.

பிறகு வந்த நாட்களில் இருவரும் நட்பாக.. நான்சி அதை அடுத்த கட்டத்திற்குக்
கொண்டு சென்றாள். ஒருநாள் இருவரும் கான்டினில் உட்கார்ந்திருக்கையில் தன்
பேச்சை ஆரம்பித்தாள்.

“விக்னேஷ்…” – நான்சி.

“சொல்லு நான்சி…” – போனில்
கௌசிகாவிற்கு மெசேஜ் செய்தபடி.

“உன்கிட்ட ஒன்னு சொல்லனும்
விக்னேஷ்.. கொஞ்சம் போனைக் கீழே வைக்கிறயா?” – அதிகாரக் குரலில்.. அந்தக் குரலில் அவனுக்கு எரிச்சல்
மண்டினாலும் எதுவும் காட்டிக்
கொள்ளாமல் போனை வைத்துக் கேட்டான். “சொல்லு கௌசி..” என்று நாக்கைக் கடித்துக் கொண்டவன்.. “சாரி..
நான்சி சொல்லு.. கௌசிக்கு மெசேஜ் பண்ணிட்டு இருந்தேனா அதான்” என்றான் சாதாரணமாக.

கௌசியின் பேரைக் கேட்டதும் பொங்கி வந்த ஆத்திரத்தை மறைத்தவள் முகத்திலும் எளிதாக அதை மறைத்து
விக்னேஷிடம் சிரித்து வைத்தாள். “விக்னேஷ் ஐ ஸ்டில் லவ் யூ..” என்று
டேபிளின் மேல் இருந்த கையைப் பிடிக்க விக்னேஷ் ஒரு நிமிடம் தடுமாறித் தான்
போனான். அவனும் நான்சியின் அழகில் விழுந்து கிடந்தது உண்மை தான்.

அழகு என்பதற்காக? கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் வர நந்தினி கூடத்தான் அழகு.. ஆனால் அந்தப் பாம்பின் விஷத் தன்மையை மறந்தப் பெரிய பழுவேட்டரையர் அவள் அழகில் மதியை இழந்த மாதிரி விக்னேஷின் மதியும் அங்கு சற்று சறுக்கத் தான் செய்தது.

அடுத்து…
அவள் காதலை ஏற்றுக் கொண்டான் விக்னேஷ். ஆனால் கௌசியின் மேல்
கனன்று கொண்டிருந்த நெருப்போ நான்சியைத் தூங்க விடாமல் செய்தது. விக்னேஷைத் தன் பேச்சைக் கேட்கும் பொம்மையாக ஆக்க நினைத்தாள் அவள். ஆனால் அதற்கெல்லாம் ஆடுபவன்
அவனா? அவள் அழகில் மயங்கினானே தவிர அவன் மூளையை ஒன்றும் அவன்
கழட்டி வைக்கவில்லை.

“கௌசி ஏன் உங்க கூடையே இருக்காவிக்னேஷ்.. எப்போமே உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டு.. என்ன இது?” என்று ஒரு நாள் விடாமல் கௌசி அவனை போனில்
கூப்பிட்ட போது தன் விஷத்தைக் கக்கினாள்.

“இங்க பாரு நான்சி.. உன்கிட்ட டைம் ஸ்பென்ட் பண்ணலைனா ஏன்னு கேளு..
அதவிட்டுட்டு கௌசிகிட்ட பேசறது.. நான் வெளில போறத பத்தி பேசறது எல்லாம்
வச்சுக்காதா.. என் கேர்ள் ப்ரண்டா இருந்தாலும் பீ இன் யுவர் லிமிட்ஸ்” என்று மூஞ்சியில் அடித்த மாதிரி அவன் பேச அதிலிருந்து அதைப் பற்றி வாயைத்
திறக்கவில்லை அவள்.

அதற்கு என்று நான்சியும் தன்
எண்ணத்தைக் கைவிடவில்லை. அவள் கௌசியை எப்படியாவது அழ வைக்க வேண்டும்.. அவளது சந்தோஷத்தைக் குலைக்க வேண்டும் என்ற வில்லத்
தனத்தில் இருந்தாள். மொத்தத்தில் அவள் விக்னேஷைக் காதலிப்பதை விட அவளுக்கு கௌசியின் மேல் இருந்த பழிவெறி அதிகமாக இருந்தது. அதனால்
விக்னேஷிடம் தன்னிரக்கத்தைச் சம்பாரித்தாள் அவள்.

“ப்ளீஸ் விக்னேஷ்.. என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க.. நானே அம்மா அப்பாவை விட்டு இங்கே இருக்கேன்.. ஐ
ஃபீல் லோன்லி.. எனக்கு இங்க உங்களை விட்டா யார் இருக்கா.. ஐ லவ் யூ விக்னேஷ்.. ஐ மிஸ் யூ” என்று பேசிப்பேசியே அவனைத் தன் பக்கம் இழுத்தாள். அவ்வப்போது கண்ணீரையும் காட்டினாள். அதனால் தான் அவளோடு வீடு வரை சென்று அவளுடன் அவன் சில நேரம் பொழுதைக் கழித்தது. அதைத்
தனக்கு சாதகமாக ஆக்கி விக்னேஷைத் தன் மோகப்பிடியில் இழுக்க முயற்சிக்க.. அதில் அவன் நேர்மை தவறாமல் இருந்தான். விக்னேஷ் இம் என்று
இருந்தால் அவனோடு எதற்கும்
துணிந்திருப்பாள் நான்சி. அவனின் வளர்ப்பு முறையே அவனை அவளிடத்தில் நெருங்க விடாமல் வைத்தது. (உண்மையைச்
சொல்லப்போனால் அவளிடம் அவனிற்கு அப்படித் தோன்றவில்லை.. மாறாக அவள் அப்படித் தன்னிரகத்தைச் சம்பாதிக்கும்
போதெல்லாம் ஒரு ஓரத்தில் அவனுக்கு எரிச்சலும் வெற்றிடமும் மண்டியது).

விக்னேஷும் முதலில் குடும்பத்திடம் மறைக்க எண்ணியவன் முதலில்
ஜீவாவிடம் சொன்னான். “ஜீ.. ப்ளீஸ் கௌசி கிட்ட நானே சொல்லிக்கிறேன்.. அவ அழுவா டா” என்று சொன்னான்
விக்னேஷ். அவள் அழுவாள் என்று தெரிந்தவனுக்கு அவள் ஏன் அழுவாள் என்றுத் தெரியவில்லை. அதற்கு
பொஸசிவ்நஸ் என்ற காரணத்தை அவனே கற்பித்து வைத்தான்.

இதோ அவன் கௌசியிடமும் தன் குடும்பத்திடமும் சொல்லிவிட்டு கனடா
கிளம்பியவன்.. நான்சியிடம்
சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று அவளது ப்ளாட்டிற்குச் சென்றான். அங்கே தான் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நான்சியின் ப்ளாட்டிற்குச் சென்றவன் நாலவது மாடியில் இருக்கும் அவளது வீட்டிற்குள் செல்ல லிப்டில் இருந்து
வெளியே வரும்போதே நான்சியின் குரலும் இன்னொருவனின் குரலும்
கேட்டது. ஆனால் இருவரும் கத்திக் கொண்டு இருந்தனர்.

“இங்க பாரு.. ஹைதராபாத்தில் இருக்கும் போது உன்ன லவ் பண்ண.. இப்போ இல்ல போதுமா” என்று சொல்ல
விக்னேஷ் முதலில் அவளின் கத்தில் கேட்டு வாசலிற்கு ஓடி வந்தவன் கடைசியில் அவள் சொன்ன வாக்கியத்தில் அப்படியே நின்று விட்டான்.

“அப்போ நீ என்ன ஏமாத்திட்டேல” என்று
ஆதங்கமாய்க் கேட்டது அவன் குரல்.

“ஆமாம்” – இரக்கமே இல்லாமல் வந்தது நான்சியின் குரல்.

“நீ இங்க யாரையோ லவ் பண்றேன்னு கேள்விப்பட்டேன்.. அது உண்மையா.. அதுக்காகத் தான் என்ன அவாய்ட் பண்றையா?” என்று அப்பாவியாய்க் கேட்க முதலில் திணறியவள் அடுத்து
சொன்ன பதிலில் அவன் மட்டும் இல்லை விக்னேஷும் அதிரிந்தான்.

“இங்க பாரு.. எனக்கு அல்ரெடி மேரேஜ் பிக்ஸ் ஆன மாதிரி தான்.. உனக்கே தெரியும் என் மாமா பையன் திவாகர்..
சும்மா டேட் பண்றவனை எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது” என்றவள் “சும்மா பேசிப்பேசி டைம் வேஸ்ட்
பண்ணாத.. எனக்கு டென்ஷன் ஆகுது.. தயவு செய்து வெளில போ..” என்றவள் உள்ளிருந்து கதவிடம் வந்து கைகாட்ட அப்படியே நின்றுவிட்டாள். காரணம் வெறி கொண்ட வேங்கையாய் விக்னேஷ்
கோபத்தில் கண்கள் சிவப்பேறி நின்றிருந்தான்.

அந்த நேரத்தில் விக்னேஷ் வருவான் என்று தெரியும்.. ஆனால் ஹைதராபாத்தில் இருந்த வந்தவனைப் பார்த்து எரிச்சல் ஆகிப் போனவள்
அனைத்தையும் கொட்ட அப்போது வந்த விக்னேஷிற்கு எல்லாம் விளங்கியது.
விக்னேஷ் இரண்டு மாதத்திற்குள் வருவதற்குள் அப்பா அம்மா என்னை
நம்புகிறார்கள் என்று புலம்பி
விலகிவிடலாம் என்று நினைத்தவளுக்கு அவனை இங்கு இப்போது கண்டவுடன்
தொண்டை எல்லாம் கவ்வியது பயத்தில். அவளைப் பொருத்த வரை கௌசியை பழி வாங்கி விட்ட மாதிரி தான் இஷ்டம்
இல்லாத கல்யாணத்தில் தள்ளி விட்டு. இப்போது அவன் சென்ற சமயம் சுலபமாக விலகி விடலாம் என்று
எண்ணியவள் கையும் களவுமாக மாட்டி விட்டாள்.

அவள் கையைக் காட்டிய பக்கம் வந்த ஹைதராபாத்காரனும் விக்னேஷ் நிற்பதைப் பார்த்தே விக்னேஷ் யார் என்று புரிந்து கொண்டு.. இனி நீ அவ்வளவு தான் என்ற பார்வையை
நான்சியிடம் வீசிவிட்டு சென்றுவிட்டான்.

ஒவ்வொரு அடியாய் விக்னேஷ்
அழுத்தமாய் எடுத்து வைத்து உள்ளே செல்ல நான்சியின் கால்கள் தானாகப் பின்னே நகர்ந்தது. கை முஷ்டிகள் இறுக
அவள் அருகில் சென்றவன் கையை எடுத்து கழுத்தை நெறிக்கச் சென்றுவிட்டான் கோபத்தில். பின் என்ன
நினைத்தானோ கையை இறக்கி விட்டு “ச்சி.. உன்ன மாதிரிப் பழகுறவளுக்கு
காசுக்கு வரவ எவ்வளவோ மேல்” தன் மனதில் எழுந்த வார்த்தையை அவளிடம்
தீயாய் வீசிவிட்டு வெளியே
விறுவிறுவென்று சென்று விட்டான்.

அவனுக்குக் கோபம் தலைக்கு ஏறியதே தவிர வருத்தமோ மனதில் வலியோ இல்லை.. ஆனால் கோபம் மிதமிஞ்சி
இருந்தது. அறிவிளந்து அவளிடம் மயங்கிக் கிடந்த மூளையைச் சரி செய்தவன் தான் வந்த கேப்பில் ஏறி
ஏர்போட்டிற்குச் சென்றான்.

ஏர்போட்டிற்கு வந்து தன் டீம் மேட்ஸுடன் இணைந்தவனுக்கு ஒன்றும் பெரிதாய் எதுவும் மனதை அலட்டவில்லை..
செக்கிங் எல்லாம் முடிந்து தன் போனை ப்ளைட் மோடில் போட்டுவிட்டு ப்ளைட்டில்
உட்கார்ந்தவன் அப்போது தான் தன் மொபைலை எடுத்தான். அவனுடன் வந்த டீம் மேட்ஸிற்கு முன்னால் சீட் கிடைக்க இவனுக்கு மட்டும் பின்னால் சீட் கிடைத்தது. அப்போது தான் தன்
மொபைலை எடுத்து அன்லாக் செய்தவன் உள்ளே இருந்த வால்பேப்பரைப் பார்த்தான். அவனும் கௌசியும் அவள்
பிறந்தநாள் அன்று ரெஸ்டாரன்ட் முன் நின்று கடைசியாக எடுத்த செல்பி.
பார்த்தவனுக்கு அடி மனதில் இருந்து துக்கம் தொண்டையை அடைக்க அவனுக்கு அது என்ன உணர்வு என்றே
தெரியவில்லை.

“என்ன சார்.. கேர்ள் ப்ரண்ட் விட்டு பர்ஸ்ட் டைம் அப்ராட்டா.. இப்போ எல்லாம் வாட்ஸ் ஆப் வீடியோ கால்.. ஸ்கைப் ன்னு
இருக்கு.. 20 வருசத்துக்கு முன்னாடி இதெல்லாம் இல்லாம என் வயசுல
இருக்கவங்க ரொம்ப சிரமப்பட்டோம். டோன்ட் வொர்ரி தம்பி.. எல்லாம் சரி
ஆயிரும்” என்றுப் பக்கத்தில் இருந்தவர் பேச்சுக் கொடுக்க விக்னேஷிற்கு உடம்பில் ஷாக் அடித்தது போல இருந்தது.

அவன் தனக்குள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் விடைகள் கிடைத்தது. அன்று விக்னேஷ் கல்யாணம்
செய்துகொள் என்று முழுமனதோடு ஒன்றும் பேசவில்லை. மாமா
சொன்னதிற்காகத் தான். அன்று நான்சியை விட கௌசி அழுது கொண்டே சென்றதில் நான்சியை அப்படியே
விட்டுவிட்டு வந்தது ஏன் என்று இப்போது புரிந்தது. மற்றும் குரு கௌசியின்
கழுத்தில் தாலி கட்டியபோது ஏன் அப்படி தான் வெறித்த நிலையில் இருந்தோம் என்று இப்போது அவனுக்குப் புரிந்தது. மேலும் தாலி கட்டியவுடன் கௌசி
கண்ணீருடன் நிமிர்ந்ததில் அவன் அடிபட்டுத் தான் போனான். மற்றும் அவளின் தோளில் குரு இன்று கைபோட்ட போது அவனை அடிக்க வேண்டும் என்ற
எண்ணம் தன்னை அறியாமல் ஏன் எழுந்தது என்பதை இப்போது தான் உணர்ந்தான்.

“அய்யோ….” என்று தலையைப் பிடித்து உட்காரந்துவிட்டான் விக்னேஷ். கண்களில் கண்ணீர் வர அடக்க
முயன்றவன் தோற்றுப்போனான்.
இரண்டு சொட்டுக் கண்ணீர் தன் ஜீன்ஸ் பேண்டை நனைக்க கண்ணை மறைத்து
வெளியே பார்த்த வண்ணம் தலையைத் திருப்பிக் கொண்டான். சொல்ல முடியாத
துயரம் நெஞ்சைத் தாக்க கண்ணீரை அடக்கியவனின் தலை நரம்புகள் எல்லாம்
புடைத்தன. அவன் உட்கார்ந்திருந்தானே
தவிர எங்கெங்கோ சென்று அவனின் ஜீவன் கௌசியின் இடத்தில் சென்று நின்றது.

‘மடையன்’ ‘மடையன்’.. கூடவே இருந்த தேவைதையை விட்டுவிட்டேனே.. என்று
தன்னைத்தானே திட்டி அதட்ட மட்டுமே அவனால் முடிந்தது. ஆனால் இப்போது என்ன செய்ய முடியும்.. அவள் தான்
இன்னொருவனின் மனைவி ஆயிற்றே என்று நினைத்தவனுக்கு உடல் மரண
ஓலமிட்டது. அப்போதும் தன் காதலை உணர்ந்தானே தவிர அவளின் காதலை அவன் உணரவில்லை.

எழுந்து வாஷ்ரூமிற்குச் சென்றவன் கண்களை அழுத்தமாகத் துடைத்தான்.
கண்கள் சிவப்பேறி தன்னைப்
பார்ப்பதற்கே அவனிற்கு முடியவில்லை. அவனின் சப்தநாடியும் அடங்கியது அவள்
இல்லாத வெறுமையை
உணர்ந்தவனுக்கு. அடுத்தவன்
மனைவியை நினைப்பது கூடப் பாவம் என்று நினைத்தவன் மனதில் விழுந்த அடியுடனே கனடா வந்தடைந்தான்.

அதற்குள் நான்சி விக்னேஷ் விஷயம் ஆஃபீஸில் பரவி கனடாவில் விக்னேஷுடன் இருந்த டீம் மேட்ஸ் வரை
வந்து சேர்ந்தது. எல்லோரும் அவனைப் பார்க்கும் பார்வையில் எழுந்த
ஆத்திரத்தை அடக்கியபடி ப்ராஜெக்ட்டில் கவனத்தைச் செலுத்தினான். கௌசிக்கு
அழைக்கலாமா என்று நினைத்தவன் “வேண்டாம்.. கூப்பிட்டா அவளை மறப்பது
கஷ்டம்” என்று நினைத்து அதைக் கை விட்டான்.

ஆனால் நான்கு நாட்களில் ஜீவா போன் செய்து விஷயத்தைச் சொல்ல விக்னேஷ் மனதில் வெண்ணீரை யாரோ ஊற்றியது போல ஆகியது. முகம் எல்லாம் வெளுத்து
வியர்த்து நின்றவனை பக்கத்தில் இருந்த யாரோ நிதானத்திற்கு கொண்டு வர..
அவரிடம் இருந்து நழுவி யாருமில்லாத ஒரு இடத்திற்கு வந்தான்.

“ஜீ… என்னடா சொல்ற” எனக்
கேட்டவனின் குரல் கரகரத்தது.

ஜீவா சொல்லி முடிக்க “நான் இப்போதே கிளம்பி வறேன் ஜீ..” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று உள்ளே
சென்று தன் கம்பெனியை கான்டாக்ட் செய்து கேட்டவனுக்கு.. அவர்களின் பதில் ஆத்திரத்தைக் கிளப்பியது. “நீங்க இப்போது வர முடியாது.. வேலை எல்லாம்
முடிந்து தான் வர முடியும்.. நாங்க நீங்க வர அனுமதிக்க முடியாது” என்று அந்தக்
காப்ரேட் விஷமிகள் சொல்ல விக்னேஷ் அவர்களிடம் பாய்ந்தான்.

“எனக்கு இந்த வேலை வேண்டாம்.. நான் இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து விலகறேன்” என்று சொல்ல மேலும் அவன் தலையில்
இயலாமையை இறக்கியது அந்த நிறுவனம்.

“ஓகே.. பட்.. நீ இப்போதே ப்ராஜெக்ட்டை முடிக்க வேண்டும்.. இல்லை என்றால்
அந்த நஷ்டத்திற்கான பணத்தை வந்து தர வேண்டும்.. இல்லை என்றால் ஜெயில் தான்” என்று செக்கை வைத்தான் விக்னேஷிற்கு.

“முடியாது.. நான் கிளம்பி வரேன்.. உன்னால் ஆனதப் பாத்துக்க” என்று போனை வைத்தவன் தன் குடும்பத்திற்கு போனைப் போட்டு விஷயத்தைச் சொல்ல
வரதராஜன் உட்பட எல்லோரும் அவன் வருவதை மறுத்தனர். அவன் எவ்வளவு ஆசையாக சென்றான் என்பது அவர்களுக்கே தெரியும். அதையும் மீறி கிளம்பி வருகிறேன் என்று ஆர்ப்பாட்டம்
செய்தவனை வரதராஜன் சமாதானம் செய்தார்.

“மாமா.. உங்களுக்கு புரியுதா.. அவ உங்களுக்கு மட்டும் மகள் இல்லை.. என் கூடையே வளர்ந்தவ.. அவளை இந்த
நிலையில் விட்டுட்டு என்னால இங்கக் கிடக்க முடியாது” என்று கத்தியவனை  வரதராஜன் தன் பேச்சால் அடக்கினார்.

“வந்துரு விக்னேஷு.. வந்து இங்க உட்கார்ந்து எங்களோட அழு.. உனக்கு அந்தப் ப்ராஜெக்ட் கிடைச்சதுல உன்ன
விட எங்களை விட அதிகமாக சந்தோஷப்பட்டது கௌசி தான்.. நீ வந்தா அவ என்ன
சந்தோஷப்படுவாளா? அவனால வந்துட்டன்னு இன்னும் அழுகதான் செய்வாள்.. நான் சொல்றத சொல்டேன் வரதா இருந்த வந்துரு விக்னேஷ்” என்று
வரதராஜன் கோபத்தில் அவனிடம் இரைய போனை வைத்துவிட்டான்.

நாட்கள் சென்றது.. மதிக்குப்
போன்செய்து அவ்வப்போது கௌசியின் நிலையைக் கேட்டறிந்தான். அவன்
எவ்வளவோ போன் செய்தும் அவள் எடுக்கவில்லை.. தினமும் 30 கால்ஸ்.. 50 மெசேஜ் என்று வழக்கம் தவறாமல்
அனுப்பினான். வரதராஜன் மாமாவிற்கு போன் செய்து அவளிடம் குடுக்கச் சொல்ல அவள் பேச மறுத்தாள்.
ஒன்றுக்கும் அவள் ரெஸ்பான்ஸ் செய்யாமல் போகவே சென்னையில்
இருக்கும் மதியை நாடினான் விக்னேஷ்.

கௌசியின் நிலையே வேறு.. நான்கு நாட்களில் புருசனைக் கொன்று விட்டாள் என்று அக்கம் பக்கத்தின் இருந்தவர்கள் பேச்சில் நொந்தாள். “ராசி இல்லாதவள்”,
“அய்யோ காலையில் அவள் முகத்தைப் பார்த்துவிடக் கூடாது”, “இவள் ஆடின
ஆட்டம் என்ன” என்று சில கழிசடைகள் பேச்சு கௌசியை வெளியே போகவே அஞ்ச வைத்தது. அவளையே இன்பீரியர் காம்ப்ளக்ஸில் தள்ளியது. தனக்கு மெய்யாகவே ராசி இல்லையோ என்று எண்ணி மருகினாள்.

ஒருநாள் “மதி கருவுற்றிருக்கிறாள்.. வீட்டிற்கு வா கௌசி..” என்று ஜெயா அத்தை அழைக்க.. தான் முதலே போக வேண்டாம் என்று எண்ணியவள் “நான்
நாளை வரேன் அத்தை” என்று போனை வைத்துவிட்டு.. மதிக்கும் ஜீவாவிற்கும்
“கங்கிராட்ஸ் ஃபார் தி நெக்ஸ்ட் லெவல்” என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி
வைத்துப் படுத்துவிட்டாள். அடுத்த நாள் தனக்குக் கிடைக்கப் போகும்
அவமானத்தை அறியாமல்.

அடுத்த நாள் காலை எழுந்து
குளித்துவிட்டு ஒரு லைட் கலர் சுடிதாரை அணிந்து கொண்டு மதியைப் பார்க்கச் சென்றாள் கௌசி. வரதராஜன் தான்
மாலை பார்க்க வருவதாகச் சொல்லவே அவள் மட்டும் கிளம்பினாள். அத்தை
வீட்டிற்குள் அவள் நுழைய எதிரே காலேஜிற்கு கிளம்பி வந்த சந்தியா இவளைப் பார்த்து தலை குனிந்தாள்.

“காலேஜ் கிளம்பியாச்சா சந்தியா?” என்று கௌசி வினவ அவளின் பதிலின்
தொனியே வேறு மாதிரி இருந்தது.

“பாத்தா தெரியலை…” என்று வெறுப்புடன் கூறியவள் “காலங்காத்தால நேருல
வந்துட்டு சை..” என்று முணுமுணுத்து விட்டுப் போக கௌசி அடிபட்ட பறவையாய் விக்கித்து நின்றாள். சந்தியா சொன்னது அவளுக்குக்
கேட்காமல் இல்லை.கௌசிக்கு கேட்க வேண்டும் என்றுதான் சந்தியா அப்படிச் சொன்னது.

“அட. வா கௌசி” என்று ஜீவாவின் குரல் கேட்க முகத்தைச் சமாளித்து ஜீவாவிடம் புன்னகைத்தாள் கௌசி. வாழ்த்துக்களைத் தெரிவித்தவள் மதியிடமும் வாழ்த்தைத் தெரிவித்தாள்.

“நீ எப்போ வந்த ஜீ?” – கௌசிகா.

“நான் நேத்து மதி சொன்ன உடனே கிளம்பிட்டே கௌசி.. மார்னிங் 6.40கே வந்துட்ட..” என்றவன் “மாமா எங்கே..?”
எனக் கௌசியிடம் கேட்டான்.

“அப்பா… ஈவ்னிங் வரேன்னு சொல்டாரு ஜீ” – என்றாள் கௌசி. அவளின் அமைதி
ஜீவாவையும் தாக்கியதும் ஏதோ உண்மைதான்.

“வாடிம்மா.. எப்படி இருக்க?” என்று நன்றாக இழுத்து ஸ்ருதியுடன் கேட்டபடி வந்தார் மதியின் தாயார் பரமேஸ்வரி.
நேற்று ஜீவா கிளம்பிய போது அவனுடன் மதியின் குடும்பமும் கிளம்பி வந்திருந்தது.

“நல்லா இருக்கேன் பெரிம்மா.. நீங்க எப்படி இருக்கீங்க. பெரியப்பா வரலையா?” – கௌசிகா.

“ம்ம் நல்லா இருக்கோம்.. மதி அப்பா கோயிலுக்குப் போயிருக்காரு” என்றவரின் பார்வை கௌசியை மேல்
இருந்து கீழ் வரை இளக்காரமாய் அளந்தது. அவரின் பார்வையில்
கௌசியின் மனம் நத்தயாய்ச்
சுருங்கியது. மேலும் மதியின் அண்ணன் சுதாகரன் தன்னைப் பார்க்கும் பார்வை
அவளைக் கொன்றது. கல்யாணம் ஆகாத
போது வேறு.. ஆனால் கல்யாணம் முடிந்து.. இப்படிப் பட்ட நிலையில் இருக்கும் தன்னை அவன் தப்பான
பார்வையில் பார்ப்பது கௌசிக்கு அருவருப்பை மூட்டியது.

எல்லோரும் காலை சாப்பிட கௌசி தான் சாப்பிட்டுவிட்டுத் தான் வந்ததாகச் சொல்ல அவளைத் தொந்திரவு
செய்யாமல் அனைவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டு விட்டு வந்த பரமேஸ்வரி கௌசியிடம் “உன்கிட்ட பேசனும்” என்றார்.

“சொல்லுங்க பெரிம்மா”

“இங்க வேணாம்.. வா அங்க போவோம்” என்று மாடிப் படி அருகில் கூப்பிட கௌசியும் அவர் பின்னேயே சென்றாள்.

“ஏம்மா.. உனக்குக் கொஞ்சம் ஆச்சும் இங்கிதம் இருக்கா.. நல்ல விஷயம் சொல்லி எல்லோரும் இங்க
வந்திருக்கோம்.. இந்த நேரத்தில நீ இங்க வரலாமா.. சரி உன் அத்தை கூப்பிட்டாலும் நீ இரண்டு நாள் கழிச்சு
வரலாம்ல.. அதுவும் இல்லாம புருசன் பொண்டாட்டி ரொம்ப நாள் அப்புறம் பாக்கறாங்க.. நீ இருந்தா நல்லா இருக்குமா.. அதுவும் இந்த புருசனை
முழுங்கிட்டு…..” என்று முடிப்பதற்குள் ஆங்காரமாய் வந்தது சுமதியின் குரல்.

“போதும் நிறுத்துமா….” -கத்திய கத்தலில் அரண்டே விட்டார் பரமேஸ்வரி. மதி கருவுற்றிருக்கிறாள் என்ற விஷயம் அறிந்து சுமதியும் அவர் வீட்டுக்காரர்
செந்தில்நாதனும் வருகை தந்தனர். வாசலில் செருப்பை விடும் போது தான்..
பரமேஸ்வரி கௌசியிடம் பேசுவது சுமதிக்கும் செந்தில்நாதனிற்கும் கேட்டது.
அவரது பேச்சை கேட்ட இருவருமே கொதித்து விட்டனர்.

சுமதியின் குரல் கேட்டு வெளியே வந்த அனைவரும் அங்கு நின்றிருந்த
பரமேஸ்வரி, கௌசி, செந்தில்நாதன், சுமதியை மாறி மாறிப் பார்த்தனர்.

“இங்க பாரும்மா… இது என் அக்கா வீடு.. அத முதல்ல நியாபகம் வச்சிக்க.. என்னமோ உன் வீடு மாதிரி எங்க
புள்ளைய இப்படிப் பேசறே.. இதையே வேற எவளாவது பேசிருந்தான்னா வாயைத் தச்சிருப்பேன்..”

“சுமதி என்ன ஆச்சு” – ஜெயா.

சுமதி நடந்ததைச் சொல்ல
எல்லோருக்குமே கோபம் வந்தது. “ஏம்மா.. உனக்கு அறிவே இல்லையா.. நீயும் ஒரு
அம்மா தானே அவளுக்கு.. அவளை அப்படி சொல்ல உனக்கு எப்படி மனசு வந்துச்சு” என்று மதி தன் தாயிடம்
சீறினாள்.

“ப்ளீஸ் ஸ்டாப் இட்..” என்று கௌசி கத்த.. அனைவரும் அமைதி ஆயினர்.

பின் மதியிடம் திரும்பியவள் அமைதியாக “மதி.. அவங்க சொன்னதுல்ல என்ன
தப்பிருக்கு.. அவங்க நிலைமைல இருந்து
பார்த்தா.. உன் மேல இருக்க அக்கறைல தான் சொல்லிருக்காங்க.. அவங்களைத் திட்டாதே..” என்றவள் “அம்மா இருந்திருந்தா எனக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்” என்ற கௌசி பரமேஸ்வரியிடம் திரும்பி கைகளைக் கூப்பி “சாரி பெரிம்மா” என்றவள்…
அங்கிருந்து இரண்டு நிமிடத்தில் கிளம்பி விட்டாள்.

முருகானந்தம் வந்தவுடன் தன் தாய் செயத்தைத் தன் தந்தையிடம் மதி சொல்ல மனைவியை அவர் கடித்தெறிந்து விட்டார் வார்த்தைகளால். பின் அவர் அனைவரிடமும் மன்னிப்பைத்
தெரிவித்துவிட்டு மனைவியையும் மகனையும் கூட்டிக் கொண்டு கிளம்பி
விட்டார்.

“அம்மா…” என்ற வீட்டு வேளையாளின் குரலில் ஜீவா.. சதாசிவம்.. ஜெயா.. மதி..
செந்தில்நாதன்.. சுமதி.. அனைவரும் திரும்பினர்.

“மனசு கேக்கல.. அதான் சொல்றேனுங்க.. தப்பா நினைக்காதிங்க.. கௌசி பாப்பா அதுக்காக மட்டும் போலைங்க.. வந்து.. காத்தால பாப்பா வந்தப்போ.. நம்ம
சந்தியா பாப்பா..” என்று தொடங்கியவர் சந்தியா காலையில் கௌசியை
இகழ்ந்துரைத்ததைப் போட்டு உடைத்தார்.

அவ்வளவு தான் மாலை வீடு திரும்பிய தங்கையை ஜீவாவின் கரம் பதம் பார்த்தது.. சந்தியா என்ன என்று
சுதாரிப்பதற்குள் ஜெயா அவளை வார்த்தைகளால் வெளு வெளு என்று வெளுத்து விட்டார். “ஏன்டி.. மதி அடுத்த
வீட்டுப் பொண்ணு தானே.. அவளுக்கு இருக்கிற அக்கறை உன்கிட்ட கொஞ்சம்  இருந்திருந்தா.. கௌசியை அப்படிப் பேசிருப்பையா.. ச்சி.. இந்த புத்தி எங்க இருந்துடி வந்துச்சு உனக்கு..” என்று
கௌசியின் நிலையை முழுதாக அறிந்து குமுறிய ஜெயா.. 18 வயது மகள் என்றும்
பாராமல் அவளை அடித்து விட்டார்.

மாலையில் மதியைப் பார்க்க வந்த வரதராஜன் உள்ளே நடந்த அனைத்தையும் கேட்டுவிட்டார். அவர்
வந்ததைக் கண்ட ஜீவா தலையைப் பிடித்துக் கொள்ள சதாசிவம் தான் “உள்ளே வாங்க மச்சான்” என்று
அழைத்தது.

உள்ளே வந்து உடகார்ந்தவர்
“வாழ்த்துக்கள்.. ஜீவா.. மதி..” என்று முயன்று தன் குரலை மகிழ்ச்சியாக வைத்துச் சொன்னார்.

“வந்து.. நம்ம முறைப்படி.. அதான் வாங்கி வந்தேன்” என்று ஒரு பவுன் தங்கக் காசை
மதியின் கையிலும் ஜீவாவின் கையிவும் வைத்துத் தர எல்லோருக்கும் அந்த வீட்டில் கூசி விட்டது. அவர்
நினைத்திருந்தால் தங்கைகளை எப்படியோ என்று விட்டிருக்கலாம். ஆனால் இன்று வரை முறை அதுஇது
என்று எல்லாவற்றையும் செய்யும் மனிதனிடம் அவர்களால் மூஞ்சியைக்
கூட சரியாகப் பார்க்க முடியவில்லை. அதுவும் இந்த நிலைமையில் அவர்
இருக்கும் கஷ்டத்திற்கு இது அதிகம் தான்.

“சரிப்பா.. நான் கிளம்பறேன்” என்று வரதராஜன் எந்தரிக்க எல்லோருக்கும் மிகவும் தர்ம சங்கடமான நிலை ஆனது.
சமாதானத்திறகாகக் கூட யாராலும் எதுவும் பேச முடியவில்லை.

“சந்தோஷமா சந்தியா.. ஆனா நீ இந்த அளவுக்கு பிகேவ் பண்ணுவன்னு நினைக்கல.. படிச்ச பொண்ணு தானே நீ..
பாத்தீல.. நீ இப்படி பண்ணியும் உன் மாமா எதுவும் பேசாமல் அவரோட முறைய பண்ணிட்டு போயிட்டாரு.. அதுதான்
அவர்.. கௌசியும் வேற எதுவும் பேசாமல் போயிட்டா.. இப்போதாவது புரிஞ்சுக்க”
என்று சதாசிவம் மகளை அதட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்தனர்.

வீடு வந்த வரதராஜன் உள்ளே நுழைய செந்தில்நாதன் முன் அறையில் உட்கார்ந்திருந்தார். சுமதி சமையல் அறையில் இருந்தார்.. கௌசி வழக்கம்
போல் அவள் அறையில் அடைந்து கிடந்தாள். கௌசி காலை ஜெயா வீட்டில் இருந்து கிளம்பிய கால் மணி நேரத்தில்
அவர்களும் மனம் கேட்காமல் இங்கேயே வந்தனர். உள்ளே வந்து சட்டையின் மேல் இரண்டு பட்டன்களைக் கழட்டியபடி உட்கார்ந்தவர் செந்தில்நாதன் பக்கத்தில்
அப்படியே கண்மூடி அமர்ந்தார். அவருக்கு மனம் எல்லாம் தொய்ந்தது போல இருந்தது. தன்னை யார் என்ன
சொன்னாலும் தாங்கிக் கொள்வார்.. ஆனால் தன் மகளை… என்று நினைக்கும்
போதே தன் இயலாமையால் அவரின் மனம் வலித்தது.

மூடிய கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப் பார்க்க “மச்சான்..” என்ற செந்தில்நாதனின் அழைப்பில்
கண்ணைத் திறந்தார்.

“சொல்லுங்க மாப்பிள்ளை” என்றார் வரதராஜன் கண்களை மூடியபடியே.

“நம்ம கௌசியை எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க” என்றார் செந்தில்நாதன்.

“அவ வந்தானா கூட்டிட்டு போங்க மாப்பிள்ளை.. எப்போமே அந்த அறைக்குள்ள தான் அடஞ்சு கிடக்கா” என்றார் கண்களைத் திறந்து
செந்தில்நாதனைப் பார்த்துத் தொய்ந்த குரலில்.

“இல்லை மச்சான்.. நான் அவள
மருமகளா என் வீட்டுக்கு அனுப்பி வைங்கன்னு கேக்கறேன்” என்று கேட்க
வரதராஜனுக்கு நா எழவில்லை.

“நீங்க…” என வரதராஜன் இழுக்க “ஆமாம் மச்சான் நம்ம விக்னேஷிற்குத் தான்
கேட்கிறேன்” என்று செந்தில்நாதன் சொல்ல அவரின் கையைப் பிடித்துக்
கொண்டார் வரதராஜன்.

“ஆமாண்ணே… அந்தப் பொம்பளை என்னப் பேச்சு பேசுனா தெரியுமா.. அப்புறம் அந்த சந்தியா கழுதை.. என்ன
வாயி அதுக்கு இப்பவே.. அதுவும் இல்லாம எனக்கு அவ எங்க கூட வரது நல்லதுன்னு தோணுது..” என்றார் சுமதி.

“எந்தப் பொம்பளை? என்ன ஆச்சு?” என்று பரமேஸ்வரி பேசியதை அறியாத
வரதராஜன் கேட்க சுமதி அனைத்தையும் கூறினார். வரதராஜனிற்கு இப்போது
கோபம் வந்தது. அந்தப் பொம்பளை யார் என் மகளைப் பேச என்று குமுறினார்.

“சுமதி.. விக்னேஷ்கிட்ட கேட்டிங்களா? அவனைக் கேட்காம..” என்று வரதராஜன்
கேட்க சுமதி குறுக்கிட்டார்.

“அண்ணா.. அவனுக்கு எந்தப்
பிரச்னையும் இல்லை.. அவன் தான் அடுத்த வாரம் வரான்ல” என்று பேச்சை முடித்தார் சுமதி. ஊருக்கும் வரும் எண்ணத்தில் சீக்கிரமே வேலையை
முடித்திருந்தான் விக்னேஷ்.

அந்த நேரம் மனம் கேட்காமல் அண்ணன் வீட்டிற்கு வந்தனர் ஜெயாவும் சதாசிவமும்.. பின்னாடியே ஜீவாவும் மதியும் வந்தனர். ஜெயா தன்
அண்ணனிடம் நடந்ததிற்கு மன்னிப்புக் கேட்க வரதராஜனோ “விடுமா.. நீ என்ன பண்ணுவே” என்று முடித்துக் கொண்டார்.

பின் விஷயத்தை அறிந்த
அனைவருக்கும் மகிழ்ச்சி தான். ஆனால் விக்னேஷும் சம்மதம் தெரிவித்து விட்டான் என்று சுமதி சொல்லிய போது
ஜீவாவும் மதியும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். “நான்சியிடம் என்ன சொல்லுவான்”
என்று இருவர் மனதிலும் எழுந்தது.

பின் அவன் வந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர். அப்போது தான் அறையைத் திறந்து
வெளியே வந்த கௌசி அனைவரையும் கவனித்தாள். காய்ச்சல் வேறு வந்திருந்தது அவளுக்கு காலையில்
நடந்ததை மனதில் போட்டு அறற்றி. முகம் எல்லாம் காய்ச்சலால் வீங்கி இருக்க
அனைவரும் அவளை பரிதாபமாகப் பார்ப்பது வேறு அவளை வாட்டியது. வந்து
அவர்களுடன் எதுவும் பேசாமல்
அமர்ந்தவள் தன் பக்கத்தில் இருந்த சுமதியின் தோளில் காய்ச்சல் தாங்காமல் கண் மூடி அமர்ந்தாள்.

“கௌசி” – மெதுவாக அழைத்தார் வரதராஜன்.. அவள் ஒரு மாதமாக எந்தச்
சத்தத்துக்கும் பயப்பதே அதற்கு காரணம்.

“சொல்லுங்கப்பா” என்றாள் முடியாதக் குரலில்.

“ரொம்ப முடியலையா பாப்பா..
ஹாஸ்பிடல் போகலாமா”
“இல்லப்பா.. சாப்பிட்டு டாப்ளட்ஸ் போட்ட சரி ஆகிரும்பா..” என்று காய்ச்சல் குரலில் சொன்னாள்.

“ம்ம்.. பாப்பா.. அடுத்த வாரம் உனக்குக் கல்யாணம்.. விக்னேஷ் கூட” என்று
வரதராஜன் சொல்ல கௌசி
காய்ச்சலையும் மறந்து அதிர்ச்சியில் எழுந்து நின்றாள்.