கனவு 16

அத்தியாயம்-16

“முடியாதுப்பா.. முடியவே முடியாது” என்று கத்தினாள் கௌசி கண்ணீருடன்.

“இல்லம்மா.. நீ ஒத்துக்கிட்டு தான் ஆகணும்.. குருவை மறந்து புது வாழ்க்கையை ஆரம்பி” என்று அவர் சொல்ல கௌசிக்கு காது எல்லாம்
ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப் போல இருந்தது.

“அப்பா… என்னால…வேண்டாம் அப்பா.. விக்னேஷ் இதுக்கு சம்மதிக்க மாட்டான்” என்றாள் கௌசி. அவன் நான்சியைக்
காதலிப்பதாக அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறாள் கௌசி. மதியும் ஜீவாவும் கூட.

“விக்கி-க்கு சம்மதம் தான்.. அடுத்த வாரம் வரான் கௌசி” என்று சுமதி சொல்ல
கௌசிக்குத் தன் காதுகளையே நம்ப
முடியவில்லை. தனக்காகத் தான் ஒத்துக் கொண்டிருப்பான். மற்றபடி அவனுடையகாதலை மறந்து எப்படி.. ச்சி என்று நினைத்தவள் தன் அப்பாவிடம் பேச்சை வளர்த்தாள்.

“அப்பா… யார் ஒத்துக்கிட்டா என்ன.. நான் ஒத்துக்க மாட்டேன்.. இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டேன்.” என்று பைத்தியம் பிடித்தவள் போலக் கத்த.. ஜீவா எழுந்து அருகில் வந்து
கௌசியை நிலைக்குக் கொண்டு வந்தான். இல்லை கொண்டு வர முயற்சி
செய்தான். மதி கௌசியையும் அவள் அழுகையையும் பார்த்து அப்படியே விக்கித்து நின்றாள். கௌசிக்கு இப்படிக்
கோபப்படத் தெரியுமா என்று.

“கௌசி இங்க பாரு.. கன்ட்ரோல் யுவர் செல்ப்” என்று ஜீவா கத்தி அதட்ட கௌசி அப்படியே நின்றாள்.

“ஜீ.. என்னால முடியாது ஜீ.. ப்ளீஸ்.. நீயாது சொல்லேன்” என்று இருகைகளையும் கூப்பியபடிச் சொல்ல..
அவளது கையைப் பிடித்துக் கீழே இறக்கியவன் “எஎ.. என்ன கௌசி கையெல்லாம் எடுத்துக் கும்படறே.. ப்ளீஸ்
கௌசி.. உன் நல்லதுக்கு தான்
சொல்றாங்க புரிஞ்சிக்கோ.. எல்லார் முடிவுக்கும் ஒத்துக்க.. இந்த ஒரு டைம் கௌசி” என்று ஜீவாவும் பெரியவர்கள் பக்கம் இருந்து சொல்ல கௌசி
ஜீவாவின் கையை உதறித் தள்ளினாள். விக்னேஷை உள்ளே இழுக்கவும் அவளுக்கு விருப்பம் இல்லை. அடுத்த
கல்யாணம் என்ற வார்த்தையே அவளிற்குக் கசந்தது.

“என் வாழ்க்கையைக் கையில் எடுக்க உங்கள் எல்லோருக்கும் யார் ரைட்ஸ் தந்தது” என்று இந்தக் கல்யாணம் நடக்கக்
கூடாது என்ற ஆத்திரத்தில் கௌசிகா வார்த்தைகளை விட வரதராஜனின் கரம் கௌசியின் கன்னத்தில் இறங்கியது. ஏற்கனவே காய்ச்சலில் இருந்தவள்
இப்போது தன் தந்தை அறைந்த அறையில் கீழே விழுந்தாள். தன் தந்தையா தன்னை அடித்தார் என்பதை
உணர்ந்தவள் ஏறிட்டு அவளைப் பார்க்க தன் தந்தை கோபத்தில் நிற்பதைப்
பார்க்க அப்படியே நடுங்கி விட்டாள்.

“இவங்களுக்கு உரிமை இல்லையா.. யாரைப் பார்த்து என்ன கேள்வி கேக்கறே..” என்று கர்ஜித்தவர் “உன்னை
சின்ன வயதில் தூக்கி இருந்து
வளர்த்தவங்க. இவர்களப் பார்த்து இப்படிப் பேச உனக்கு வெட்கமாக இல்ல.. சொல்ற பேச்சைக் கேட்டு இருக்கிறதுனா இரு.. இல்லனா என் கண் முன்னாடி நிக்காதே.. எவ்வளவு நாள் தான் நானும் எவ்வளவு கஷ்டத்தைத்
தாங்குறது. நானும் சாதாரண மனுஷன் தான்” என்று என்னப் பேசுகிறோம் என்றே
தெரியாமல் வரதராஜன் கோபத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

தந்தையின் கோபமும் வார்த்தைகளும் உடலை நடுங்கச் செய்ய நடுங்கி கீழே
கிடந்தவளை ஜெயா சென்று
அணைத்துக் கொண்டார். “என்னண்ணா நீங்க.. இப்படியா அடிப்பீங்க புள்ளைய.. உங்களுக்கு என்ன உரிமை இருக்கோ அதே உரிமை எங்களுக்கும் இருக்குண்ணே.. நீங்க இவளை கை வைக்காதீங்க” என்று நடுங்கிக் கொண்டிருந்த கௌசியை தன் தோளோடு அணைத்துச் சொன்னவர்
அழுதே விட்டார்.

கௌசியின் வார்த்தைகள் அங்கு யாரிடமும் செல்லவில்லை.. இப்படியே
அவளை விட முடியாது என்று
எண்ணியவர்கள் நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டனர். ஜெயாவிற்கும் விக்னேஷ்
அவளை மாற்றுவான் என்ற
நம்பிக்கையில் கௌசியைத் தேற்ற முயன்றார். ஆனால் விரக்தியில் இருந்த கௌசியின் மனமோ எதையும்
ஏற்கவில்லை. எல்லாரிடமும் பேசுவதை நிறுத்தினாள். தன் அன்னையை நினைத்து ஊமையாய் மனம் அழுதது.
அவர் இருந்திருந்தால் இந்நேரம் என் மனதைப் புரிந்திருப்பார் இல்லையா
என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். பிறந்ததில் இருந்து அன்னையை நினைத்து அழாதவள் “அம்மா” “அம்மா” என்றே கிடந்தாள்.. “பேசாமல் என்னையும் உன்கூட கூடிட்டு
போயிருக்கலாம்ல மா” என்று வந்த இரவுகளில் அழுதழுது தலையணையை நனைத்தாள்.

“டேய் விக்னேஷ்…” என்று ஓடிச் சென்று ஒன்றரை மாதம் கழித்து பார்த்த விக்னேஷைக் கட்டிக் கொண்டான் ஜீவா.
கௌசியைத் தவிர எல்லோரும்
ஏர்போட்டிற்குச் சென்றிருந்தனர். குடும்பத்தினரை பார்த்தவன் முகத்தில் சுரத்தே இல்லை.. அவன் கண்கள்
இன்னொருத்தியைத் தேடி ஏமாந்தது.

எல்லோரும் நேராக வரதராஜனின் வீட்டிற்கு வர வீடு திறந்து கிடக்க ப்ரௌனி கட்டிய இடத்தில் இருந்து
அதுக்கும் இதுக்கும் ஓடி கழுத்தில் கட்டியச் சங்கிலி அத்துப்போகும் அளவிற்கு குரைத்துக் கொண்டிருந்தது.
எல்லோரும் உள்ளே சென்று கௌசியைத் தேட அவளின் சுவடே இல்லை. ஒரு வெள்ளைக் காகிதம் மட்டும் இருந்தது அவளின் பெட்டின் மேல்.

எடுத்துப் படித்த விக்னேஷின் முகம் இறுகியது. ஜீவாவின் கையில் குடுத்துவிட்டு வெளியே வந்து உட்கார்ந்து
விட்டான். அதில் இருந்தது இதுதான் “ஸாரிப்பா.. நீங்க இனி என் கஷ்டத்தைத்
தாங்க வேண்டாம் அப்பா.. என்னால முடியலப்பா.. என்னை யாரும் தேடி வராதீங்க.. வந்தால் உயிரை விடவும் யோசிக்க மாட்டேன்” என்று எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தாள் கௌசி.

எழுதி வைத்துவிட்டு கௌசி சென்ற இடம் கம்பம். எங்கே போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவள்
சங்கரலிங்கம் ஐயா நியூஸ் பேப்பரில் குடுத்த செய்தி மூளையில் மின்னல் அடிக்க நேராக கம்பம் சென்றாள்.
அவளைப் பொருத்த வரை விக்னேஷை இக்கட்டில் இருந்து தப்பிக்க வைத்து
விட்டாள். அவளால் விக்னேஷ்
நான்சியுடன் கல்யாணம் பண்ணி வாழ்வதை அவளால் பார்க்க முடியாது. மேலும் தன் தந்தைக்கு இனி தன்னால்
எந்த பாரமும் வேண்டாம் என்று தான் கிளம்பினாள்.

அவள் கிளம்பி விட்டாள். ஆனால் அதற்கு மேல் தான் அங்கு யாராலும் நிம்மதியாக
இருக்க முடியவில்லை. விக்னேஷ் இந்த வேலையால் தான் எல்லாம். அந்தப் பேயைச் சந்தித்தது. கனடா சென்றும்
கௌசிக்காக வர முடியாமல் இருந்து. மறுபடியும் இழந்தது என்று வேலையையே விட்டுவிட்டான். அவனிடம்
எல்லோரும் கேட்டும் அவன் யாரிடமும் எதுவும் மூச்சு விடவில்லை. ஜீவாவிடம்
மட்டும் நான்சியின் விஷயத்தைச் சொல்லி இருந்தான். மதியின் காதிற்கும்
அது சென்றது. “அப்போ அவள லவ் பண்ணியிருந்தா.. கௌசியைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுக்க
மாட்டாருல..” என்று மதி குத்திய போது ஜீவா “மதி… கௌசி போன கோபத்துல
அவனை குறை சொல்லாதே..” என்று அதட்டினான்.

“எப்படி ஜீவா.. உன்னாலையும்
விக்னேஷ்னாலையும் இப்படி இருக்க முடியுது.. நம்ம கல்யாணத்திற்கு எப்படி
என் அப்பா கிட்ட பேசினா.. அப்புறம் நம்மள விட சந்தோஷமா இருந்தது
அவதான்.. அன்னைக்கு வரதராஜன் சித்தப்பா அவளை அடிச்சு அவ அழுது நடுங்குனது என் கண்ணு முன்னாடியே
இருக்கு ஜீவா.. எனக்கு இந்த டைம் அவளை ரொம்ப மிஸ் பண்ற மாதிரி இருக்கு.. ஸீ இஸ் எ வெரி குட் ப்ரண்ட் அன்ட் சிஸ்டர் டூ மீ.. என்னால உங்கள
மாதிரியும் விக்னேஷ் மாதிரியும் சுயநலமா இருக்க முடியல” என்று நான்கு மாதமான மகவோடு அழுத
மனைவியைப் பார்க்க பாவமாக இருந்தது. ஜீவாவும் விக்னேஷும் மதி சொன்னது போல இருக்கவில்லை.
யாருக்கும் தெரியாமல் கௌசியைத் தேட முயற்சி செய்து கொண்டு இருந்தனர்.

அடுத்து வந்த மாதத்தில் செந்தில்நாதன் மாரடைப்பால் இறந்துவிட மேலும் குடும்பமே கலங்கியது. விக்னேஷும்
இனி அடுத்து என்ன என்று பார்த்தான். அவனால் சென்னையிலேயே இருக்க
முடியவில்லை.. முதலில் அந்த இடத்தில் இருந்து நகர நினைத்தவன் எல்லோரின்
முன்னிலையில் தன் அன்னையிடம் அது பற்றிப் பேசினான்.

“அம்மா.. இந்த ஊரே எனக்குப்
பிடிக்கவில்லை.. நம்ம வேற ஊருக்குப் போனா என்ன?” என்று கேட்டான்.

“ஆமா விக்கி.. என்னால இங்க இருக்க முடியலை.. உங்கப்பா நியாபகமாகவே இருக்கு.. வேற எங்காவது போய் விடலாம்” என்று அழுக “பேசாமல்
கோயம்புத்தூரே வந்திருங்க” என்று ஜீவா சொல்ல விக்னேஷும் சம்தித்தான்.

“மாமா.. நீங்களும் தான்” என்று
விக்னேஷ் வரதராஜனைப் பார்த்துச் சொல்ல அவர் மறுத்தார். “இங்கையே இருந்து என்ன பண்றதா உத்தேசம் மாமா உங்களுக்கு… உங்களை விட்டுட்டு போற அளவுக்கு என்னை என்ன சுயநலவாதின்னு நினைச்சீங்களா.. என்
மேல் நம்பிக்கை இருந்தா என் கூட வாங்க மாமா” என்று சொல்ல அவரால் மறுக்க முடியவில்லை.

எதுவும் சென்னை நியாபகம் வேண்டாம் என்று நினைத்த விக்னேஷ் தன் அன்னையின் சம்மதத்துடன் அனைத்தையும் விற்றான். வரதராஜனும்
வீட்டை விற்றார். ஆனால் விற்ற பணத்தில் எதையும் விக்னேஷ்
உபயோகிக்கவில்லை.. அதை அன்னை பெயரிலும் மாமா பெயரிலும் டெபாஸிட்
செய்து விட்டான். அடுத்த இரண்டு வாரத்தில் கோயம்புத்தூர் வந்து
சேர்ந்தவன் அங்கு இங்கு என அழைந்து லோன் போட்டு.. கூடவே தான் நான்கு வருடம் சம்பாதித்த சேவிங்ஸ்ஸில்
இருந்து தான் அந்த போட்டோகிராப்பி
ஸ்டியோவை ஆரம்பித்தது. கூடவே நிறைய கடைகளுக்கு விளம்பரமும் செய்து தந்தான். அதில் ஒரு ஜவுளிக்கடை
விளம்பரம் ஹிட் ஆக அவனுக்கு நிறைய ஆர்டர்கள் குவிய ஆரம்பித்தது. பெரிய
பெரிய கல்யாணத்திற்கும் வந்தது.

கோயம்புத்தூர் வந்து வீடு பார்த்தவன் தன் சிட்டிக்குள் பார்க்காமல் சிட்டிக்கு வெளியில் கிணத்துக்கடவில் வீடு பார்த்தான். அப்போது தான் தன் வீட்டிற்குப் பின்னால் இருந்த மகாலிங்கம் அய்யாவின் அறிமுகம் கிடைத்தது. வயது
வித்தியாசம் பாராமல் இருவருக்கும் ஒரு நட்பு இழையோட.. கொஞ்ச நாளில்
இயற்கை விவசாயம் பற்றி இருவரும் தங்கள் பேச்சைத் திருப்ப “உனக்கு அதில்
விருப்பமாப்பா” என்று கேட்டார்
மகாலிங்கம்.

“இருக்குத் தாத்தா.. அதைப் பத்தி படிச்சிருக்கேன். ஆனா முழுசாத் தெரியாது” என்று சொன்னான்.

“என் நிலத்தில் நான் சில நாளுக்கு முன் இயற்கை விவசாயம் செய்ய.. எல்லாம்
கெமிக்கல் இல்லாமல் இயற்கை முறைப்படி மாற்றினேன்.. ஒரு வருடம்
ஆச்சு மாத்தி.. பேசாமல் நீ பண்ணேன் விக்கா.. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் எல்லாத்துலையும்” என்று
சொல்ல “தாத்தா அது உங்க இடம்.. நான் எப்படி..” என்றான்.

“சரிப்பா.. இரண்டு பேரும் பண்ணலாம்.. வர வருமானத்தில் பாதி பாதி சரியா.. நீ சும்மா என் நிலத்தில விவசாயம் பண்ண வேண்டாம்” என்று சொல்ல சரி என்று
சம்மதித்து இருவரும் சம்மதித்து இருவரும் இரண்டு வருடமாக சாதித்து வருவது.

ஜீவாவும் ஒரு சிறிய நிறுவனத்தை நிறுவி
முதலில் தடுமாறியவன் பின்பு கால் ஊன்றி நின்றான்.. இன்னும் தளரவில்லை.

இன்று..

காலையில் கண் முழித்த கௌசி.. எழுந்து வெளியே வர ஜீவா தூங்கிக் கொண்டு
இருக்க விக்னேஷைத் தேடிக் கொண்டு வெளியே வந்தாள். அவனைத் தேடி வெளியே வந்த கௌசிகா அவன் பல் விலக்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு அவளும் அவள் வேலையைத் தொடங்கினாள்.

பின் வேலைகளை எல்லாம் முடித்து.. லக்கேஜ் எல்லாம் எடுத்து வைத்தவள் வெளியே வர ஜீவா “ஏய் நீ இன்னும் ரெடி
ஆகலையா” என்று கேட்டான்.

“ரெடி ஆகிட்டேன் ஜீ..”

“என்ன இது.. எதுமே ரெடி ஆன மாதிரி இல்லையே நீ” – ஜீவா. அவள் பழைய கௌசி என்ற நினைவிலேயே அவன்
கேட்டான். ஏனெனில் அப்படி ஒப்பனை செய்பவள் இப்படி ஒரு ஒப்பனையும் இல்லாமல் நின்றது ஜீவாவை அப்படிக்
கேட்கச் செய்தது.

அவன் கேள்வியைப் புரிந்து கொண்டக் கௌசி “இல்ல ஜீ.. இப்போ எல்லாம் இப்படித் தான் ரெடி ஆவேன்..” என்றுவிட்டு பெட்டிகளை எடுக்க விக்னேஷும் ஜீவாவும் எல்லாப் பைகளையும் தூக்க கௌசி அந்த மஞ்சள் நிற ட்ராலியை மட்டும் வைத்திருந்தாள் கையில்.

சங்கரலிங்கம் அய்யா வீட்டில் அவரிடமும் அவர் மனைவி மற்றும் பிரபுவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினர் மூவரும். கிளம்பும் போது கவிதாவிற்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னவள்
சுரேஷையும் நேரில் வரச் சொல்லி சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

தேனி வந்து மதுரை பஸ் ஏற.. “ஏன் ஜீ.. மதுரைல என்ன வேலை” என்று கேட்டாள்.

“இல்ல கௌசி.. நாம ப்ளைட்ளயே போயிரலாம்.. அப்பதான் சீக்கிரம் போவோம்.. இல்லைனா பஸ் மாறி மாறி
நீ டையர்ட் ஆயிருவ” என்று சொல்ல முன்னாடி சென்று கொண்டிருந்த விக்னேஷ் இருவரையும் திரும்பி
முறைத்தான்.

“நீங்க இரண்டு பேரும் இப்படிக் கதை பேசிட்டு வந்தா.. நாளைக்கு தான் கோயம்புத்தூர் போய் சேருவோம்” என்றுத் திட்ட இருவரும் அவனுடன் இணைந்து நடந்தனர்.

மதுரையை அடைந்து கோயம்புத்தூர் ப்ளைட் ஏறி கோயம்பத்தூரை அடையும்
போது மணி இரண்டு ஆகி இருந்தது. முதலில் கேப்பை புக் செய்து வடகோவையில் உள்ள ஜீவாவின் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் வீட்டிற்குள் நுழையும் போதே வெளிவந்த மதி கௌசியைக் கட்டிக் கொண்டாள்.

“வா கௌசி.. வா..” என்று மதி வாய் நிறைய அழைக்க கௌசியின் உள்ளம் அவளது அன்பில் உருக ஆரம்பித்தது
உண்மைதான்.

உள்ளே அழைத்துச் சென்ற மதி.. “நீ ப்ரஷ் ஆயிட்டு வா கௌசி… நான் சாப்பாடு
எடுத்து வைக்கிறேன்” – மதி.

“இல்ல மதி.. எனக்குப் பசி இல்ல.. கொஞ்சம் தலை வலிக்கற மாதிரி இருக்கு.. டீ வேணாப் போட்டுத் தா மதி”

சரி என்று மதி செல்ல.. உள்ளே சென்ற கௌசி முகத்தைக் கழுவிக் கொண்டு வெளியே வர.. “நீங்க தா…. சிட்டியா” என்ற
கேள்வியில் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்த கௌசி யார் என்று பார்க்க
பெட்டில் வியாஹா தூக்கக் கலக்கத்தில் கண்களைக் கசக்கியபடி அவளைப்
பார்த்து அமர்ந்திருந்தாள்.

போட்டோவில் பார்த்த வியாஹா முகம் நியாபகம் வர அவள் அருகில் சென்ற
கௌசி “என்ன கேட்டிங்க?” எனக் கேட்டாள்.

“நீங்க தா சிட்டியா” என்று தன் அழகானச் சிப்பி இமைகளை மூடித் திறந்து தூக்கக்
கலக்கத்தில் இருந்தபடியே கேட்க அவளை அள்ளி வைத்துக் கொஞ்சத் தோன்றிய மனதை அடக்கினாள்.

“ஆமா நான் தான் சித்தி..” என்று வியாஹா நுனி மூக்கில் தன் ஆள்காட்டி விரலை வைத்து அவளுக்கு வலிக்காத
வன்னம் நிமிண்டினாள்.

“நீங்க ஊருக்கு போயிட்டு
வந்துட்டீங்ங்களா.. பெர்யயயய ஸ்கூல் முடிஞ்சா..” என்று கையை விரித்து மழலையில் கேட்க… கௌசி விழித்தாள்.

“அதெல்லாம் சித்தி முடிச்சாச்சு.. நீ எந்திரி.. அப்பாவும் சித்தாவும் வந்தாச்சு” என்றபடி மதி உள்ளே வர… சித்தப்பா அப்பா என்றதும் வியாஹா கத்திக் கொண்டு
வெளியே ஓடிவிட்டாள்.

“அவகிட்ட உன் போட்டோ காமிச்சு சின்ன வயசுல இதான் சித்தின்னு சொல்லும்
போதெல்லாம்.. எப்போ வருவேன்னு கேப்பா கௌசி.. நான் நீ பெரிய ஸ்கூல் அதாவது காலேஜ் போயிருக்கன்னு சொல்லி வச்சிருந்தேன்” – மதி புன்னகை
முகத்துடன்.

“தேங்க்ஸ் மதி”

“எதுக்கு தேங்க்ஸ் கௌசி… உன்னப் பத்தி மறக்காம சொன்னதுக்கா.. உன்ன
எங்கனாலேயே மறக்க முடியாது கௌசி.. அதான் இப்போ எல்லோரும் ஒன்னு
ஆயிட்டோம்ல. ஃப்ரீயா இரு கௌசி” என்று சொல்லிவிட்டுப் போனாள்.

வெளியே வந்த கௌசிக்கு மதி டீயைத் தர கௌசி கப்பை காலி செய்தாள். “கௌசி நீ விக்கி கூட ஹாஸ்பிடல் போ..
நான் ஒரு சின்ன வேலை முடிச்சிட்டு வந்திடறேன்” என்று ஜீவா சொல்ல தலையை ஆட்டிய கௌசி விக்னேஷைப்
பார்த்தாள். அவனோ அவனிற்கும் பேச்சுக்கும் சம்மந்தம் இல்லை என்பது
போல இருந்தான்.

ஜீவா தன் காரில் கிளம்ப அப்போது தான் வெளியில் வந்த விக்னேஷிற்கு தான்
ஹாஸ்பிடலிலேயே கடைசியாகத் தன் பைக்கை நிறுத்தியது நியாபகம் வந்தது.
“நீங்க வேணும்னா.. என் ஸ்கூட்டிய எடுத்துட்டுப் போங்க விக்னேஷ்” என்று மதி புரிந்தவளாய்ச் சொல்ல “இல்ல
மதி. பைக் ஹாஸ்பிடல்ல இருக்கு.. ஸோ ஆட்டோல போயிட்டு பைக் எடுத்திட்டு
வந்திடறேன்” என்றான் விக்னேஷ்.

“ஒரு நிமிஷம் விக்னேஷ்.. நைட் இங்கையே கௌசியைக் கூட்டிட்டு வாங்க.. சாப்பிட்டு விட்டு அப்படியே அங்க
யார் இருக்காங்களோ அங்களுக்கும் டிபன் எடுத்துட்டு போயிருங்க” என்று மதி
சொல்ல தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.

ஆட்டோப் பிடித்தவன் ஏறு என்றபடி கையை கௌசியிடம் காட்ட கௌசி எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்தாள். ஏறி
அமர்ந்தவளுக்கு அப்பாவின் எண்ணம் ஆக்கிரமிக்க ஏனோ இதயம் படபடத்தது. மூன்றரை வருடம் கழித்து பார்க்கப்
போகிறாள். அவரைத் தன்னால் எதிர்கொள்ள முடியுமா என்று நினைத்தவளுக்கு முகம் கன்றியது. ஏனோ தோன்ற முகத்தைத் திருப்பியவள்
விக்னேஷ் அவளைப் பார்ப்பதை உணர்ந்தாள். அவள் பார்ப்பது தெரிந்தும்
அவளையே அவன் பார்க்க.. அந்தப் பார்வையின் அர்த்தத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனது விழி வீச்சைத் தாங்காது முகத்தை வெளியே திருப்பிக் கொண்டாள்.

ஹாஸ்பிடல் வந்து இறங்கும் போதே கௌசிக்கு கால்கள் உடம்பெல்லாம் ஏதோ செய்தது. அவர்களை எதிர்கொள்ள
முடியுமா என்று தோன்றி கைகள் நடுங்கின.. உதட்டிற்கு மேல் வியர்த்தது. விக்னேஷைத் தொடர்ந்தவள் அவன் செல்லும் அறைக்குள் செல்ல.. ஒரு நிமிடம் தயங்கி நின்றவள்.. கால்களை நகர்த்தி முன் சென்றாள். அண்ணனுடன் பேசிக் கொண்டு ஜெயா மட்டும் இருந்தார்.

கௌசியைப் பார்த்த ஜெயா “கௌசி..” என்று கண்கள் விரிய அழைக்க
வரதராஜனும் தங்கையிடம் இருந்து பார்வையைத் திருப்பிப் மகளைப் பார்த்தார். தந்தையும் மகளும் ஒருவரை
ஒருவர் பார்த்துக் கொண்டே நிற்க விக்னேஷும் ஜெயாவும் அவர்களுக்கு தனிமை தந்து வெளியே சென்றனர்.

கண்களில் இருந்து கண்ணீர் வழிய உதட்டைக் கடித்துக் கொண்டு தந்தையைப் பார்க்க அவரோ வேதனையோடு மகளின் தோற்றத்தைப்
பார்த்தார். அவள் இருந்ததிற்கும் இப்போது இருப்பதிற்கும்.. ஜீவாவின்
மனதில் எழுந்த அதே எண்ணம் மனதில் எழுந்து தாக்கியது.

“கௌசிமா…” என்று அழைக்க.. அவ்வளவு தான்.. பெட்டில் இருந்த தன் அப்பாவின்
கால்களைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் கௌசி. அறுவை
சிகிச்சை செய்த உடம்பால் காலை டக்கென்றும் நகர்த்த முடியவில்லை. “மன்னிச்சிருங்கப்பா…” என்று நெற்றியை அவர் காலின் மேல் வைத்து அழுதவளை அவரால் பேசவே முடியவில்லை.

“கௌசிமா.. இங்க வா” என்று அவர் கூப்பிட.. அவர் அருகில் செல்ல கௌசியின் கையைப் பிடித்தவர் “இனிமேல் அப்பாவை விட்டுப் போக
மாட்டீல” என்று வலமும் இடமும் தலையை ஆட்டினாள் கௌசி.

“ஸாரிப்பா..” என்று மறுபடியும் கேட்க.. “அப்பா கூட இனி இரு பாப்பா அதுவே போதும்” என்றார்.

“சரி.. வெளியில் உன் அத்தையும் விக்னேஷும் நிக்கறாங்க பாரு.. உள்ள வர சொல்லு” என்று வரதராஜன் சொல்ல வெளியே வந்தவள் இருவரையும் அழைத்தாள்.

“பாப்பா”

“சொல்லுங்கப்பா”

“அப்பாவிற்கு ஒரு கடைசி ஆசைடா”

“அப்பா” “மாமா” “அண்ணா” என்று ஒரு சேர கௌசி, விக்னேஷ், ஜெயா மூவரும்
அதட்டினர்.

“இல்லடா நான் சொல்லிடறேன்.. அப்பா
அன்னிக்கு உன்கிட்ட ரொம்ப கடுமையா நடந்துகிட்ட.. ரொம்ப ஸாரி.. “

“அதெல்லாம் இல்லப்பா.. விடுங்க” – கௌசி சங்கடமானக் குரலில்.

“இல்லடா.. நீ இல்லைன்னு
சொன்னாலும்.. அதுதான் உண்மை.. அந்த நிலையில் உன் மனசை புரிஞ்சுக்கலையோ ன்னு தோணுது.. கொஞ்சம் உனக்கும் ஒரு இடைவெளி
தந்திருக்கனும். உன்ன அப்படியே விட என்னால முடியாது பாப்பா.. நீ இல்லாம
இத்தனை நாள் நான் இருந்ததே பெரிசு.. இதோ இவன் மட்டும் இல்லைனா
என்னிக்கோ போயிருப்பேன்” என்று விக்னேஷைக் காட்டிப் பேசினார்.

“இங்க பாரு கௌசிமா.. நீ என் கூடையே இருக்கறன்னு சொல்ற.. அப்பாக்கு ரொம்ப சந்தோஷம் தான்.. நீ அதை
விக்னேஷைக் கல்யாணம் செஞ்சிட்டு இருந்தா எனக்கு இன்னும் நிம்மதி டா..” என்று சொல்ல கௌசி தன் கையைப்
பிடித்திருந்தத் தந்தையின் கையைப் பார்த்திருந்தாலே தவிர வேறு எதுவும்
பேசவில்லை.

“எனக்கு சம்மதம் மாமா.. நீங்க வீட்டுக்கு வந்து பத்து நாட்களில் கல்யாணம்” என்று
சொல்ல கௌசி உறைந்து நின்றாள். அவள் ஏதோ பேச வாயெடுக்க “கௌசி நீ
வந்த உடனே டாக்டர் பேசனும்ன்னு சொன்னாரு.. பர்ஸ்ட் என்கூட வா..” என்று
விக்னேஷ் அழைக்க அவனுடன் வெளியில் வந்தாள். வெளியே வந்தவளிடம் “இங்க பாரு.. அவரு சொல்றதுக்கு தலைய ஆட்டு.. அவரு பாடி
கண்டிஷன் அப்படி” என்று டாக்டர் சொன்னதைச் சொல்லியவன் “மறுபடியும்
சுயநலமா இருக்காதே” என்று
வார்த்தைகளைக் கடித்துக் துப்பினான்.

பின் ஜெயா அன்று இரவு அண்ணனுடன் இருப்பதாகச் சொல்லி.. பிடிவாதமாகத்
தான் தந்தையோடு இருப்பதாகச் சொன்ன கௌசியை விக்னேஷுடன்
அனுப்பி வைத்தார். பைக்கில் ஏறி ஒரு பக்கமாக அமர்ந்தவள்
யோசனையிலேயே வந்தாள். ஜீவாவின் வீடு வந்தவுடன் இறங்க ஜீவா வெளியே
வந்தான். “நான் இப்ப தான் வரலாம்ன்னு கிளம்பிட்டு இருந்தேன்.. நீங்களே
வந்துட்டீங்க.. பாப்பாவைத் தூங்க வைக்க லேட் ஆயிருச்சு” என்றான் ஜீவா.

“இல்லடா பரவாயில்லை.. மாமா ரெஸ்ட் எடுக்கறாரு.. நீ போக வேண்டாம்”
என்றுவிட்டான் விக்னேஷ்.

உள்ளே நுழைய மதி ரெடியாக டிபன் எல்லாம் வைத்திருக்க நான்கு பேரும் சாப்பிட்டனர். அப்போது தான் நியாபகம்
வந்தவளாக “சந்தியா எங்கே?” எனக் கேட்டாள் கௌசிகா.

“அவளுக்கு கல்யாணம் முடிஞ்சு.. இன்னும் மூணு மாசத்துல குழந்தையே
பொறக்கப்போது” என்று மதி சிரித்துக் கொண்டே சொல்ல.. கௌசிகா புன்னகையை மட்டும் உதிர்த்தாள்.

“சதா மாமா எங்கே?” எனக் கேட்டாள் மறுபடியும்.

“அவரு ஒரு முக்கியமானவங்க
கல்யாணத்திற்காக பழனி வரை போயிருக்காரு.. நாளை வந்துடுவார்” என்று ஜீவா சொன்னான்.

பின் நால்வரும் வந்து ஹாலில் அமர “ஜீவா மாமா வீட்டிற்கு வந்ததுக்கு அப்புறம் எனக்கும் கௌசிக்கும் கல்யாணம்.. சிம்பிளா நம்ம மருதமலையிலேயே வச்சிக்கலாம்” என்று சொன்னான். ஏற்கனவே தன் அன்னை போன் பண்ணித் தெரிவித்துவிட்டதால்
ஜீவாவும் மதியும் அவ்வளவு அதிர்ச்சி முகத்தில் காட்டவில்லை.

ஆனால் “யாரைக் கேட்டு நீ முடிவு பண்ண” என்று கௌசியின் குரல் ஆத்திரத்தில் ஒலித்தது.

“நீ வாயை மூடுனா நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்..” – விக்னேஷ்.

“நான் ஏன் வாயை மூடனும்.. ஆளாளுக்கு என் வாழ்க்கையைக் கையில் எடுத்துட்டு ஆடுவீங்களா…” – கௌசி.

“ஆமா.. உனக்கு இஷ்டம் இருந்தாலும் இல்லைனாலும் நீ இதுக்கு ஒத்துக்கிட்டு தான் ஆகணும்”

“முடியாது”

“சுயநலவாதி” என்று பல்லைக் கடித்தான் விக்னேஷ்.

“யாரு நானா.. நீதான்டா சுயநலவாதி..” என்றாள் ஆத்திரத்தில். பின் ஏதோ
நியாபகத்திற்கு வர “ஆமாம்… நான்சி..” என்று இழுத்தாள் மூவரையும் பார்த்து.

“அதெல்லாம்.. முடிஞ்சு போச்சு எப்பவோ.. இப்போ அது இங்கத் தேவை இல்லாதது. நீ கல்யாணத்திற்கு ஒத்துக்கறே டாட்” என்றான்.

“வாய்ப்பே இல்ல.. என்னை ஏன் எல்லோரும் டார்ச்சர் பண்றீங்க.. அடுத்தவங்களோட ஃபீலிங்ஸைக் கொஞ்சம் கூட புரிஞ்சிக்க முடியாதா” என்று குரல் கரகரக்க சொன்னவளை மதி சமாதானம் செய்ய வர “இல்லை மதி.. அப்பாவும் ஹாஸ்பிடல்ல இப்படித்தான்
பேசுனாரு.. எல்லாருக்கும் அவங்க அவங்க சந்தோஷம் தான் முக்கியமாத் தெரியுது.. என்னுடைய நிலையை
யாருமே புரிஞ்சிக்க மாட்டிறாங்க..
சுயநலவாதிகள்” என்று சொல்ல அவளின் கையைப் பிடித்த விக்னேஷ்
தரதரவென்று பக்கத்தில் இருந்த அறைக்கு இழுத்துச் சென்றான். அவன் அவளை இழுத்துச் செல்வதில் கௌசி
மட்டுமல்ல ஜீவாவும் மதியுமே
திகைத்தனர்.