கனவு 7

கனவு 7

அத்தியாயம்-7

நடந்தவற்றை நினைத்துக் கொண்டிருந்த கௌசிகா எப்போது உறங்கினாள் என்று
அவளுக்கே தெரியவில்லை. காலையில் அவள் எழும் போது காலை எட்டு. கவிதாவே எழுந்து குளித்து முடித்து
ரெடியாகிக் கொண்டிருந்தாள். டக்கென்று கௌசிகா எழ “கௌசி ஏன் இவ்ளோ
பதட்டம்?” என்று வினவ “ஸ்கூல்-க்கு டைம் ஆச்சு கவி.. பாரு இப்பவே மணி எட்டு..
நீயாவது எழுப்பியிருக்கலாம் இல்ல?” என்று கௌசி ஆதங்கப்பட “உன் கடமை
உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லயா கௌசி.. இன்னிக்கு சனிக்கிழமை.. எந்தக் காலத்துல் நம்ம ஸ்கூல்
சனிக்கிழமை வச்சிருக்காங்க” என்று கவிதா பேச கௌசிகா “ச்சே மறந்துட்டேன் பார்” பொறுமையாக எழுந்து அனைத்து வேலைகளையும்
செய்ய ஆரம்பித்தாள்.

“கௌசி எனக்கு காலைல சாப்பாடு மட்டும் செய்.. மதியம் வேண்டாம்” என்று கவிதா சொல்ல கேள்வியாய்ப் பார்த்தாள் கௌசிகா.

“ஏன் மதியம் வேண்டாம்?” – கௌசிகா.

“என்ன கௌசி.. எல்லாத்தையும் மறந்துட்ட.. நான் தான் ஊருக்குக்
கிளம்பறேன்-னு சொன்னேன்ல” என்று கவிதா நியாபகப் படுத்தினாள்.

“அட ஆமாம்ல.. பஸ் தானே?” என்று கேட்டாள் கௌசி.

“ஆமாம்” என்று பெருமூச்சு விட்டாள் கவிதா.

“நீ எப்படியும் வீடு போய் சேர ஈவ்னிங் ஆயிரும் கவி.. நான் ஒரு டிபன் பாக்சில் மதிய சாப்பாட்டைப் போட்டுத் தரேன்.
இன்னிக்கு உனக்கு புடிச்ச லெமன் ரைஸ் அண்ட் உருளைக்கிழங்கு வறுவல்” என்று எண்ணையில் கடுகைப் போட்டபடியே பேசியவளிடம் “ம்ம்” என்றுவிட்டு கௌசியை உற்றுக் கவனித்தாள் கவிதா.

‘கல்யாணம் ஆனப் பெண் என்றால் ஒருவன் நம்ப மாட்டான். 26 வயது என்றாலும் நம்பவே முடியாது. இப்படி
அழகும் குணமும் நிறைந்த பெண்ணின் வாழ்வு இப்படியே ஆக வேண்டும். இவளிற்காக அத்தனை பேர் இருந்தும்
இங்கு இப்படி அனாதை போல
வாழ்கிறாளே கடவுளே..’ என்று
வருந்தினாள் கவிதா.

‘மாதத்தில் ஒரு முறை அப்பா அம்மாவைப் பார்த்துவரும் நமக்கே மனது கஷ்டமாக
இருக்கும்.. இவளும் அதே கஷ்டத்தைத் தானே யாரிடமும் சொல்ல முடியாமல்
அனுபவித்திருப்பாள். ஒருமுறை கூட மூஞ்சியைக் காட்டியதில்லை.. கோபப்பட்டால் முறைப்பளே தவிர அப்பவே எல்லாவற்றையும்
மறந்துவிடுவாள்…’ என்று நினைத்துக் கொண்டே போனவளை கௌசியின்
குரல் நடப்பிற்கு கொண்டு வந்தது.

“என்ன கவி நின்னுட்டே சுரேஷ் கூட டூயட்-ஆ” என்று கேட்டாள் கௌசி.

“அதில்லை கௌசி. ஒரு ஐடியா அதான்’ என்றாள் சமையல் அறையின் சுவற்றில்
சாய்ந்தபடி.

“என்ன ஐடியா” – கௌசி. கௌசி கவிதா வீட்டில் பேசும் ஐடியாவைப் பற்றிப் பேசுகிறாள் என்று எண்ணினாள்.

“மாசம் ஒரு தடவ வீட்டுக்கு போயிட்டு வரும் எனக்கே அப்பப்போ கஷ்டமாக இருக்கு.. நீ மூன்றரை வருஷம் ஆச்சு.
ஒரு தடவை போய் உன் அப்பாவையாது பார்த்து வாயேன் கௌசி” என்று கவிதா பேசினாள்.

“வேண்டவே வேண்டாம் கவிதா.. என்னைப் பார்த்தா அவர்களும் கஷ்டப்பட்டு நானும் கஷ்டப்படும்படி
ஆகிடும். அதற்கு மேல எல்லாருடைய பரிதாபமானப் பார்வையை சந்திக்கணும்.
அது இன்னும்.. எ.. என்னை.. அது நரகம் தெரியுமா கவிதா.. அது நம் மூளையைக் கூட மங்கச் செய்துவிடும்.. அதனால் தான் சொல்றேன் வேண்டாம் என்று” என்று தான் அனுபவித்ததை நினைத்தபடிச்
சொன்னாள் கௌசி.

கௌசியைப் பார்க்க பரிதாபமாகத் தான் இருந்தது கவிதாவிற்கு. ஏனென்றால்
கவிதா ஊருக்குச் சென்றாலே உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் இரண்டு
நாளில் என்ன சொல்லுவாள்.. அப்படி இருக்க அவள் அப்பா? மற்றும்…” என்று யோசித்தாள் கவிதா.

“பேசாமல் கௌசி நீயும் என்கூட ஊருக்கு வாயேன்..” என்று கவிதா அழைக்க
கௌசி மறுத்தாள்.

“கவிதா.. நீ கல்யாண விஷயம்
பேசப்போற.. நான் இருந்தால் உங்க எல்லாருக்கும் ப்ரீயா இருக்காது. முக்கியமாக ஒரு மாதிரி சங்கடமாக இருக்கும்” என்று அழுத்தமாகக் கூறி
மறுத்தாள் கௌசிகா.

ஒன்பது மணி அளவில் கவிதா ரெடியாகி இருக்க சுரேஷ் வந்தான். எப்போதும் போல வழக்கமான சிரிப்பை உதிர்த்தவன் “என்ன கௌசி.. கவி எங்கே?” என்று
கண்களை சுழலவிட்டபடிக் கேட்டான்.

“அவ பாத்ரூமில் இருக்கா.. நீங்க உட்காருங்க வந்திருவா” என்று கௌசி சொல்ல நாகரீகமாக வீட்டின் முன்னால்
உள்ள திண்ணையில் சென்று
அமர்ந்தான்.

கவி வர சுரேஷ் வந்திருக்கிறார் என்று
சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் சென்றாள் கௌசி. கவி படுக்கை அறைக்குச் சென்று தன் பையை எடுத்துக்
கொண்டு வர.. கௌசி அவளிற்கு எடுத்து வைத்திருந்த டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு வந்தாள்.

பெண்கள் இருவரும் வெளியே வர சுரேஷ் எழுந்தான். கவிதாவின் முகத்தில் இருந்த பயத்தைக் கண்டவன் அவளின்
கையை பிடித்து “பயமே இல்லாமல் போ கவி.. நான் இருக்கேன். என்னனாலும்
எனக்கு மெசேஜ் பண்ணு” என்று தைரியம் மூட்டினான் அவளது அன்புக் காதலன்.

தலையை ஆட்டியவள் கௌசியைப் பார்க்க “அதான் உன் ஆள் சொல்றார்-ல..
ஜாலியா கிளம்பு” என்று சிரித்தாள் கௌசி.

“இந்தச் சிரிப்பிற்குப் பின் எத்தனை வலிகள்?” என்று நினைத்தவள் கௌசியிடமும் தலையை மட்டுமே ஆட்டினாள்.

“நானே உன்னை பஸ்ஸில்
ஏத்திவிடறேன் வா” என்று சுரேஷ் சொல்ல… கவி சுரேஷுடன் பைக்கில்
புறப்பட்டாள்.

“ஏன் கவி ஒரு மாதிரியாவே இருக்க?” என்று பைக்கில் கூட வருபவளின் முகமே
சரியில்லாது இருக்க விக்னேஷ் கேட்டான்.

“அது….” என்று ஆரம்பித்தவள்
கௌசியின் வாழ்வில் நடந்த
அனைத்தையும் கூறி முடித்தாள். சுரேஷ் எதுவும் பேசாமல் இருப்பதைக் கண்டவள் “என்ன எதுவுமே சொல்லாம வர்றீங்க?” என்று அவனின் தோளில் தட்டியபடிக்
கேட்டாள்.

“எனக்கு என்ன சொல்றது-ன்னு தெரியல.. ஆனா எப்டி டி இவ்வளவு வேதனையை
உள்ள வச்சிட்டு இத்தனை நாள்
சிரிச்சிட்டு இருந்தா கௌசி?” என்று வெளிப்படையாக தன் வியப்பைக் காட்டினான்.

“அதுதான்.. எனக்கு நேத்து கேட்டதுலஇருந்து மனசே சரியில்லை.. சொல்லக்கூடாது தான் ஆனால் அந்த இடத்தில் வேறு பெண் இருந்திருந்தால்
தன் குடும்ப மானமாவது ஒன்றாவது என்று நினைச்சிருப்பா.. ஆனால்
கௌசி எப்படித் தாங்கினான்னு தெரியல” என்று வருந்தினாள் கவிதா.

“எல்லாம் அந்தப் பையன் மேல் இருந்த லவ்வாலும் அவள் அப்பாவின் மேல் இருந்த அன்பாலும்” என்று சுரேஷ்
சொன்னான்.

உண்மைதானே? அந்த இரண்டையும் முன் வைத்து கோரிக்கை வைத்தால் எந்தப் பெண்ணும் கரைந்து விடுவாள்.

கவியை அனுப்பி வைத்து விட்டு உள்ளே வந்த கௌசிக்கு ராத்திரி சரியாத்
தூங்காததாலும் அழுததாலும் தூக்கம் தூக்கமாக வந்தது. கண்கள் எரிச்சலாக
இருப்பதைப் போலவும் உணர்ந்தாள். படுக்கையில் வந்து உட்கார்ந்தவள்
தலையணையை படுப்பதற்கு தோதாக நகர்த்த நேற்று இரவு தலையணை அடியில் வைத்த டைரியைக் கண்டாள்.

ஒரு வறண்ட முறுவலுடன் அதை எடுத்தவள் நேற்று விட்ட இடத்தில் இருந்து சில கவிதைகளைப் படித்தாள்.
ஐந்தாவது கவிதையில் இருந்து படித்தாள்.

ஐந்தாவது கவிதை. தானே 5.5 அடி இருப்பவள் விக்னேஷின் பக்கத்தில் நின்றாள் அவனை நிமிர்ந்து தான் பார்ப்பாள். அப்போது எழுதியது..

‘ஒருவரின்
கையளவுதான் இதயம்
என்று
அறிவியல் சொல்லுகிறது.
பிறகு எப்படி
ஆறடி ஆகிய
நீ
உள்ளே சென்றாய்?

ஆறாவது கவிதை.. இது விக்னேஷுடன்
அவ்வப்போது பகல் கனவில் இருக்கும்
போது எழுதியது..

‘உன்னிடம் இருக்க நினைக்கும்
நிமிடத்தை
நினைத்துப் பார்த்து வெட்கப்பட
வைத்தாய்
உன்னவளாய் நான்
என்னவனாய் நீ
கனவுகளில் வாழும்போது’

ஏழாவது கவிதை.. ரொம்ப
வருடங்களுக்குப் பிறகு ஜீவாவின்
கல்யாணத்தில் பட்டுப் புடவை கட்டி
வந்தபோது.. அன்று விக்னேஷைப்
பார்க்கும் போது தன்னையறியாமல்
வெட்கப்பட போது எழுதியது

‘காரணம் தெரியவில்லை
உன்னைப் பார்க்கும்போது தான்
என் நாணத்தையும்
பெண்மையையும்
நான் உணர்கிறேன்’

பிறகு அடுத்தடுத்து சில கவிதைகளைப்
படித்தாள் கௌசிகா.

பிறகு அந்தக் கவிதை.. இது தான் கௌசி
கடைசியாக மகிழ்ச்சியுடன் எழுதிய
கவிதை.. இதுதான் தான் முறுவலுடன்
எழுதும் கடைசிக் கவிதை என்று
கௌசிக்கு அப்போது தெரியவில்லை.

‘காதல்
அன்பு
பாசம்
எல்லாம் வெறும் வார்த்தைகளாய்
இருந்தன
நீ மனதில் புகுந்து
பொருள்தரும் வரை’

அதற்கு அடுத்த பக்கத்தில் இருக்க கவிதைகளை அவள் படிக்கக் கூட விரும்பவில்லை.. டைரியை மூடி இரண்டு
கைகளாலும் நெஞ்சின் மேல் டைரியை வைத்தவளின் கண்கள் கண்ணீரை சிந்தின. அழுகையை அடக்க நினைத்து
கண்களை மூடியவளால் அழுகாமல் இருக்க முடியவில்லை. கண்ணீர்
கன்னங்களில் வழிந்து வந்து கைகளில் விழுந்தன.

அப்படியே பெட்டில் சாய்ந்தவள் குலுங்கி அழுக ஆரம்பித்துவிட்டாள். அவளின்
உதடுகள் அழுகையில் துடித்தன. சிறிது நேரம் கழித்து டைரியை பெட்டின்
மேலேயே வைத்துவிட்டு அப்படியே கட்டிலில் இருந்து இறங்கி கட்டிலின் கீழே
உள்ள ட்ராளியை வெளியே இழுத்தாள் கௌசி.

ட்ராளியைத் திறந்தவள் அவளின் பழைய மொபைல் போனை எடுத்தாள். சார்ஜ்
இல்லாமல் இருந்த போனிற்குச் சார்ஜைப்
போட்டு உயிர்ப்பித்து கட்டிலில்
உட்கார்ந்தபடியே உட்கார்ந்த படியே உள்ளே சென்றாள். தந்தையிடம் இருந்து
மிஸ்ட் கால் வந்திருந்தது ஐந்து
நாட்களுக்கு முன்னாள். இது மூன்று ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும்
ஒன்றுதான். அவள் கம்பம்
வந்ததிலிருந்து அவர் கூப்பிடுவார். போன் சுவிட்ச் ஆப் என்றே வரும். கவிதா
ஊருக்குப் போகும் போது போனை எடுத்து கௌசி பார்க்கும் போது எல்லாம்
தந்தையின் மிஸ்ட் கால் இருக்கும். பின் எப்போதாவது மதி அல்லது ஜீவாவின்
மிஸ்ட் கால்.

எல்லாவற்றையும் பார்த்து விட்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் எடுத்த தன்
பிறந்தநாள் போட்டோவைப் பார்த்தாள். விக்னேஷின் கௌசிகாவின் தோளில்
கைப்போட்டிருக்க.. சந்தியா ஜீவாவிற்கு இடம் வேண்டும் என்று கௌசிகாவை
நெருக்க கௌசிகா சந்தியா மேல் ஒரு கையைப் போட்டு இன்னொரு கையை
விக்னேஷின் கையைச் சுற்றிப்
பிடித்திருந்தாள்.

அந்த போட்டோவை விரல்களால் வருடியவளின் மனம் “கஷ்டம் என்றால்
என்னவென்றே தெரியாத வாழ்க்கை..” என்று வேதனையுற்றது.

பின் போனையும் டைரியையும்
ட்ராளியினுள் வைத்துவிட்டு பெட்டில் படுத்தாள். நேற்று இரவு சரியாகத் தூங்காத காரணத்தினால் சீக்கரமே
அவளின் கண்களைத் தூக்கம் வந்து அணைத்தது. எத்தனை நேரம் தூங்கினோம் என்றே தெரியாத அளவு
தூங்கிவிட்டாள் கௌசிகா.

கௌசிகா எழ மணி மூன்று ஆகிவிட்டது. மெதுவாக எழுந்தவளுக்கு மிகவும்
சோம்பேறித் தனமாக இருந்தது. எழுந்தவள் நேராக பாத்ரூமிற்குள் புகுந்து
குளித்துக் கொண்டு ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு வந்து நின்றாள். வந்து
மரபீரோவின் முன்னால் நின்றவளுக்கு தன் உடலில் தெரிந்த அனைத்தும் பழைய
வாழ்க்கையை நினைவு படுத்தின. கௌசியால் அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. டக்கென்று ஒரு
காட்டன் புடவையை அணிந்து கொண்டு ரூமிலிருந்து வெளியே வந்தவள்
மணியைப் பார்த்தாள்.

மூன்றரை ஆகியிருந்தது. தட்டில் சாப்பாட்டைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தவளின் இதயம் மிகவும் வேகமாகத் துடிப்பதை உணர்ந்தாள். “சே..
என்ன இது” என்று நினைத்தவள் தண்ணீரைக் குடித்துக் கொண்டு வந்து
மீண்டும் உட்கார்ந்து உண்டு முடித்தாள்.

சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தவள் வீட்டை எல்லாம் சுத்தப்படுத்திப் பாத்திரங்களை எல்லாம் கழுவி முடிக்க
மணி நான்கே முக்கால் ஆகிவிட்டது. அடுத்துத் துவைக்கலாம் என்று வீட்டின்
பின் பக்கம் சென்று ஊற வைத்த துணிகளைத் துவைக்க ஆரம்பித்தாள்
கௌசிகா.

மாலை வெயில் லேசான இதத்துடன் கூடிய காற்றோடு அடித்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்த தொட்டியில் தண்ணீரை எடுத்து
வைத்தபடியே துவைக்கும் கல்லில் ஏதோ யோசனையுடனே துவைத்துக் கொண்டு இருந்தாள்.

“கௌசிகா” என்று சுரேஷின் குரல் கேட்டது.

“……….” – என்ன சுரேஷின் குரல் போல இருக்கு என்று யோசித்தாள் கௌசிகா
தன் யோசனையில் இருந்து வெளியே வந்தபடி.

“கௌசிகா” – மறுபடியும் சுரேஷின் குரல் முன் கதவைத் தட்டியபடிக் கேட்டது.

“ஆங்.. சுரேஷ்.. பின்னாடி துவச்சிட்டு இருக்கேன்.. வரேன் இருங்க” – என்று குரல் கொடுத்தபடி.. கௌசிகா தூக்கிக் கட்டியிருந்த சேலையை கீழே இழுத்து
சரி செய்துவிட்டு தொட்டியில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து கையைக் கழுவிக் கொண்டு திரும்ப சங்கரலிங்கம் ஸார்,
சுரேஷ், பிரபு என்று மூவரும் பின்பக்கம் லைனாக வந்தனர்.

மூவரையும் ஒன்றாகப் பார்த்தவள் “வாங்க ஸார்.. என்ன இவ்வளவு தூரம்..
சொல்லியிருந்தாள் நானே…” என்று பேசிக் கொண்டிருந்தவளின் குரல்
அடுத்து வந்த ஜீவாவைக் காண அப்படியே நின்றது.

எதோ பேச வந்தவள் அடுத்து வந்த விக்னேஷைப் பார்த்து அப்படியே நின்றாள். விக்னேஷைப் பார்க்க
விக்னேஷ் கௌசியைத் தான் வீட்டின் பின் கதவின் நிலவின் மீது சாய்ந்தபடி நின்று வெற்றுப் பார்வையுடன் பார்த்துக் கொண்டு இருந்தான் விக்னேஷ். அவனது பார்வைக்கு என்ன அர்த்தம்
என்று கௌசிகாவால் யூகிக்க
முடியவில்லை. ஏனென்றால் அது இன்றுவரை கௌசிகா விக்னேஷிடம் காணாத பார்வை.

ஏற்கனவே கருகருவென்று இருந்த வானம் பேரிடியை இடிக்க மூச்சடைத்து
நின்றிருந்த கௌசியால் பேசவே முடியவில்லை. கண்களில் நீர்கோர்த்து
மூச்சுதான் வாங்கியது. ஏதோ பேச வாயைத் திறக்க நினைத்தவளால்
முடியவில்லை. கைகால்கள் நெஞ்சம் எல்லாம் படபடக்க தன் முன் நின்றிருந்த
விக்னேஷின் உருவம் மங்கலாகத் தெரிந்து “விக்கா” என்று முணுமுணுத்தபடியே மயங்கிச் சரிந்தாள் கௌசிகா.

கவிதாவை தேனி பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டு பஸ் வரும்வரை சிறிது நேரம் இருவரும் பேசிக்கொண்டு
நின்றிருந்தனர். அவரவர் வீட்டில் எப்படிச் சொல்லலாம் என்று இருவரும்
அடுத்தவரிடம் பேசிக் காண்பித்தனர்.

“ஸார்..” என்று யாரோ கூப்பிட சுரேஷ் திரும்பினான். யாரோ இருவர் இரண்டு துணி மட்டும் வைக்கும் அளவான ட்ரேவல் பாக்கோடு நின்றிருந்தனர்.

“சொல்லுங்க?” – சுரேஷ்.

“சார்.. இங்க அடுத்த கம்பம் பஸ் எப்போ வரும்?” என்று கேட்டான் விக்னேஷ்.

“அடுத்த பஸ் வர ஒரு மணி நேரம் ஆகும்.. இங்க தான் வந்து நிக்கும்” என்று சுரேஷ்
சொல்ல “ஓகே சார். தேங்க்ஸ்” என்றபடி இருவரும் உட்கார்ந்தனர்.

பின் கவிதாவை பஸ் ஏற்றிவிட்டு சுரேஷ் தன் பைக்கை எடுக்கப் போக அந்த
அட்ரஸ் கேட்ட இருவரும்
உட்கார்ந்திருப்பதைக் கண்டான். ஏதோ அவர்களுக்கு உதவ வேண்டும் என்று
தோன்றியது சுரேஷிற்கு.

அவர்களிடம் சென்றவன் “சார்
உங்களுக்கு அவசரம்னா என் கூடையே வாங்களேன்.. நானும் கம்பம் தான் போறேன்.. வாங்க நீங்க எங்க
இறங்கனுமோ அங்க இறக்கி விடறேன்” என்று சொல்ல விக்னேஷும் ஜீவாவும்
சுரேஷுடன் பைக்கில் ஏறினர்.

பைக்கில் செல்லும் போது சுரேஷ் தன்னை அறிமுகம் செய்து கொள்ள ஜீவா
“நான் ஜீவா.. இவன் விக்னேஷ்” என்று தங்களை அறிமுகம் செய்ய சுரேஷ் சடன்
ப்ரேக் போட்டான்.

அவன் ப்ரேக் போட்ட வேகத்தில் ஜீவாவும்
விக்னேஷும் சுரேஷ் மேல் விழ ஒருபக்கம் சாய இருந்த வண்டியை ஒருவாறு
சமாளித்து நிறுத்தினான் சுரேஷ். “என்னாச்சு சுரேஷ் சார்.. என்னாச்சு?” என்று ஜீவா வினவ “ஒன்றுமில்லை ஏதோ
நடுவில் போன மாதிரி இருந்தது.. அதான்” என்று அவர்களைச் சமாளித்தான்.

மீண்டும் வண்டியை கிளப்பியவன் அடுத்த கேள்வியை ஜீவாவிடம் வீசினான் “எந்த ஊர் சார் நீங்க?” என்று கேட்டான்.

“கோயம்பத்தூர்” – ஜீவா.

“சொந்த ஊரே அதுதானா?” – சுரேஷ்.

“சொந்த ஊர் சென்னை சுரேஷ் சார்” – ஜீவா.

“சார் எல்லாம் வேண்டாம்.. சுரேஷ் என்றே சொல்லுங்க” – என்றான் சுரேஷ்.

“நீங்க யார் வீட்டுக்கு போகனும்?” – சுரேஷ்.

“அவர் பெயர் என்ன விக்னேஷ்?” என்று ஜீவா விக்னேஷைக் கேட்டான்.

“யாரோ ஊர் பெரியவர் சங்கரலிங்கம்” – என்று பார்வையை எங்கோ பதித்தபடி
விக்னேஷ் சொன்னான்.

“ஓ அவரா.. எனக்குத் தெரிந்தவர்தான்.. நான் அவர் வீட்டிலேயே இறக்கி விடறேன் உங்களை” என்றான் சுரேஷ்.

ஜீவாவுடன் ஏதேதோ பேசியபடி வந்த சுரேஷ் விக்னேஷைக் கவனித்துக் கொண்டு தான் வந்தான்.. ஏதோ ஆழ்ந்த
சிந்தனையிலேயே இருந்தான் அவன். முகம் ஏதோ இறுக்கமாகக் காணப்பட்டது.

பின் சங்கரலிங்கம் சாரின் வீட்டின் முன் சென்று பைக்கை நிறுத்த அவரின் மனைவி ஏதோ வேலையாளை ஏவியபடி
வந்தார். சுரேஷைப் பார்த்தவர் அவனிடம் நலம் விசாரித்து விட்டு “இவங்க யார்?”
ஊருக்குப் புதுசா?” என்று கேட்க “ஐயாவைப் பார்க்க வந்து இருக்காங்க” என்று பதிலளித்தான் சுரேஷ்.

“அவர் தோட்டம் வரை ஏதோ கணக்குப் பார்க்க போயிருக்கிறாரு.. நீங்க
உட்காருங்க வந்திடுவார்” என்று உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

“நாம் அங்க போய் அவரைப் பார்க்க முடியாதா?” என்று வினவினான் விக்னேஷ்.

“சும்மான்னா போயிருக்கலாம். ஆனா கணக்கு விவரங்களை பார்க்கும் போது போக முடியாது” என்று சுரேஷ் சொல்ல வேறு வழியின்றி உட்கார்ந்தனர் விக்னேஷும் ஜீவாவும்.

பின் காபி பலகாரம் என வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல கொண்டு வரப்பட்டது. பின் சங்கரலிங்கம்
ஐயா வர மூன்று மணி ஆகிவிட்டது. பிரபுவும் உடன் வந்திருந்தான்.

அவர் உள்ளே சென்று அவர்களிடம் பேசட்டும் என்று எண்ணிய சுரேஷ்
பிரபுவைத் தனியே அழைத்து கவிதா தன்னிடம் சொன்ன அனைத்தையும் மேலாக மட்டும் சொன்னான். பின் பிரபுவும் சுரேஷ் வீட்டிற்குள் செல்ல
சங்கரலிங்கம் குரல் நன்றாகவே கேட்டது.
“எனக்கு ஊர் மட்டும் தான் தம்பி தெரிந்தது. ரொம்பவும் வாடிய முகத்துடன் வந்து வேலை கேட்ட பெண்ணிடம் வேலை இல்லை என்று சொல்ல மனமில்லை.. அதான் வேலையும் கொடுத்து என்
தோட்டத்து வீட்டிலேயே பாதுகாப்பாக இன்னொரு பெண்ணுடன் தங்க வைத்தேன். ஆனா நீங்க சொல்லுவதை எல்லாம் கேட்டா ஏதோ சினிமாக் கதை
மாதிரி இருக்கு எனக்கு. இப்படி ஒரு குணமாக பெண்ணிற்கு..” என்று அவர்
பேசிக்கொண்டிருக்க சுரேஷும் பிரபுவும் உள்ளே வந்தனர்.

“இதோ இவன் தான் என் மகன்.. பிரபு.. நம் கௌசிகா வேலை செய்யும் பள்ளியில்
தான் கரஸ்பாண்டன்ட்-ஆக இருக்கிறான். இது சுரேஷ்.. அங்கே ஆசிரியராக இருக்கிறான்.. நம் கௌசியின் பிரண்ட்-உம் கூட” என்றவர் சுரேஷிடம் “இவர்கள்
கௌசிகாவின் உறவினர்கள்” என்றார் சங்கரலிங்கம்.

“தெரியும் ஐயா” – என்றான் சுரேஷ்.

பிரபுவைத் தவிர எல்லோரும்
கேள்வியாய் சுரேஷைப் பார்க்க “அதாவது நேற்று தான் தெரிந்தது” என்றான் சின்னக்குரலில்.

பின் பிரபு காரை எடுக்க ஜீவா, விக்னேஷ், சங்கரலிங்கம், சுரேஷ் என்று கௌசியைப் பார்க்க கிளம்பினர்.
ஜீவாவிற்கு மூன்று வருடங்களுக்குப் பிறகு கௌசியை காணப் போகும்
சந்தோஷம் அதற்கும் மேல் ஏதோ பதட்டம். ஜீவா திரும்பி விக்னேஷைப் பார்க்க அவன் ஏதோ கடப்பாரையை விழுங்கியது போல முகத்தில் எந்த உணர்ச்சியும்
காட்டாமல் உட்கார்ந்திருந்தான். ஆனால் கௌசி தங்களைப் பார்த்து மயங்கி விழுவாள் என்று ஜீவா மட்டுமில்லை
யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

மயங்கிச் சரிந்த கௌசியை டக்கென்று சுரேஷ் தாங்க ஜீவாவும் வந்து கௌசியை
விழாமல் பிடித்துவிட்டான்.

பின் அவள் அறைக்குக் கொண்டு வந்து அவளைப் படுக்க வைக்க சுரேஷ் சமையல் அறைக்குள் சென்று தண்ணீர் டம்ளரை எடுத்து வந்து ஜீவா கையில் தந்தான். ஜீவா தண்ணீரைத் தெளிக்க
கௌசிகாவின் மயக்கம் தெளிந்தது. விக்னேஷ் ஃபேனைப் போட்டு அந்த
சுவிட்ச் பாக்ஸ் பக்கத்திலேயே சுவற்றில் சாய்ந்து நின்று கைகளை மார்புக்குக்
குறுக்காகக் கட்டி கௌசியையே பார்த்தபடி நின்றான்.

எழுந்து உட்கார்ந்த கௌசி தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார சங்கரலிங்கம்
அய்யா அவர்கள் மூவருக்கும் தனிமை அளிக்க எண்ணி பிரபு மற்றும் சுரேஷுடன் மூவரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

சுமார் அரைமணி நேரம் அமைதியே நிலவியது அந்த அறையில். விக்னேஷ்  அந்த சுவிட்ச் பாக்ஸ் அருகிலேயே நிற்க கௌசிகா பெட்டில் அப்படியே உட்கார்நதிருக்க ஜீவா எதிரில் இருந்த
கவிதாவின் கட்டிலில் உடகார்ந்திருந்தான்.

“எவ்வளவு நேரம் இப்படியே இருக்கப் போறதா உத்தேசம்?” என்று விக்னேஷ்
கடுமையானக் குரலில் ஜீவாவைப் பார்த்துக் கேட்டான்.

“விக்னேஷ்..” என்ன கௌசி அழைக்க வந்ததைப் பார்த்தும் பார்க்காதது போலத்
திரும்பிவிட்டான் விக்னேஷ்.

“ஜீ நம்ம எதுக்கு வந்தோம்.. இப்படி சும்மா உட்காரவா? நாளைக்கு நைட் நம்ம
கிளம்பனும்.. எல்லாம் சொல்லிவிடு” என்று சொல்லிவிட்டு கௌசியின்
முகத்தைக் கூடத் திரும்பிப் பார்க்காமல் வெளியே நகர்ந்துவிட்டான் விக்னேஷ்.

“என்ன சொல்றான் ஜீ அவன்” என்றாள் கௌசிகா புரியாமல்.

அவளிடம் இப்போதே எதையும் சொல்ல அவனுக்கு மனமில்லை. “அது
ஒன்றுமில்லை கௌசி” என்றவன் “நீ எப்படி இருக்க கௌசி?” என்று பேச்சை
மாற்றினான்.

“நல்லாயிருக்கேன் ஜீ” என்று அவள் வாய் மட்டும் தான் அப்படிச் சொன்னது.
ஆனால் அவள் எப்படி இருப்பாள் என்று ஜீவாவிற்குத் தெரியாதா?

“மதி எப்படி இருக்கா? வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க? அப்பா..” என்று ஆரம்பித்தவளின் குரல் அப்படியே உள்ளே சென்றது. அவளால் எதுவும் பேச
முடியவில்லை. உதட்டைக் கடித்து உட்கார்ந்திருந்தாள்.

“எல்லாரும் நல்லா இருக்காங்க கௌசி..” என்று அவளுக்கு இதமான பதிலையே
அளித்தான்.

“பையனா பொண்ணா ஜீ?” என்று விசாரித்தாள் கௌசிகா.

“பொண்ணு கௌசி.. பெயர் வியாஹா.. இரண்டரை வயசாச்சு” என்றபடி போனை
எடுத்தவன் தன் குழந்தையின்
போட்டோவைக் கௌசியிடம்
காண்பித்தான்.

போட்டோவைப் பார்த்தவள் “அச்சோடா.. ஸோ க்யூட் ஜீ. அப்படியே உன்ன மாதிரி
இருக்கா பாப்பா” என்றாள் போட்டோவை ரசித்தபடி.

“க்யூட் தான்.. ஆனால் சேட்டை தான் ஜாஸ்தி.. அதில் நீயும் அவளும் சமமா தராசில் நிற்பீர்கள்” என்று ஜீவா
கைகளைப் பின்னால் ஊன்றியபடி சொல்ல கௌசிகா ஒரு வெற்றுச்
சிரிப்பை மட்டுமே உதிர்த்தாள்.

“ஜீ.. ஏதாவது சாப்டிங்களா இரண்டு பேரும்” என்று அவசர அவசரமாக எழுந்தாள்.

“கௌசி… அதெல்லாம் அவங்க
வீட்டிலேயே வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல நல்ல கவனிப்பு.. லேட்டாவே
பண்ணு” என்று சொல்ல கௌசி எழுந்தாள்.

இரண்டு பேரும் பேசியபடியே வீட்டின் பின்பக்கம் சென்றனர். ஏதோ நெடி வர திரும்பிய கௌசி விக்னேஷ் சிகரெட்
குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள். இவளைப் பார்த்தவன் ஒரு வெற்றுப் பார்வையுடன் சிகரெட்டுடன்
வேறு பக்கம் சென்றுவிட்டான்.

“இவனுக்கு இது என்ன புது பழக்கம் ஜீ” என்று முகத்தை அதிர்ச்சி மாறாமல் வைத்துக கேட்டாள் கௌசிகா.
அவ்வப்போது காலேஜ் சேர்ந்ததில் இருந்து விக்னேஷும் ஜீவாவும்
எப்போதாவது ட்ரிங்க்ஸ் சாப்பிடுவாங்க என்று தெரியும். அதுவும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை என்று இருக்கும்.
ஆனால் சிகரெட்டின் நெடியே
விக்னேஷிற்கு ஆகாது. யாராவது பிடித்துக் கொண்டிருந்தால் கூட நகர்ந்து
விடுவான். அப்படி இருப்பவன்…? என்று
கௌசியின் மூளையில் பல கேள்விகள் போட்டி போட்டுக் கொண்டு வந்தன.

“அது இப்போது கொஞ்ச நாளாகத் தான்.. எப்போதாவது டென்ஷனாக இருக்கும் போது” என்று ஜீவா சமாளித்தான்.

பின் ஜீவா தண்ணீர் தொட்டி அருகே உள்ள ஒரு திண்டின் மேல் அமரந்தான். கௌசி துவைத்த துணிகளை அலசிக்
கொண்டிருக்க அவளிடம் உட்கார்ந்த படியே பேசிக் கொண்டிருந்தான் ஜீவா.
துணிகளை எல்லாம் அலசிவிட்டு வேர்த்து விறுவிறுத்து நிமிர்ந்து
நின்றவளிடம் “இந்தக் கஷ்டம்லாம் உனக்குத் தேவைதானா கௌசி?” என்று
சங்கடப்பட்டுக் கேட்டான் ஜீவா.

“எதை கஷ்டம்-ன்னு சொல்ற ஜீ?” – ஒரு வெற்றுப் புன்னகையோடு கௌசிகா.

“நீ இங்க வந்து இப்படிக் கஷ்டப்பட்டு… பாரு இந்த மாதிரி வேலை எல்லாம்
உன்னை மாமா செய்ய விட்ருக்காரா? எனக்கே பார்க்க ஒரு மாதிரி கஷ்டமா
இருக்கு கௌசி” – ஜீவா ஆதங்கமானக் குரலில்.

“என் வேலையை நானே செய்கிறேன். அவ்வளவு தான் ஜீ. இதுல கஷ்டம்-ன்னு
எதுவும் இல்லை” என்று பேச்சை முடித்த கௌசி துணிகளைக் காய வைக்க..
அருகில் கட்டப்பட்டிருந்த கம்பிகளின் அருகில் சென்றாள்.

“கௌசி நான் காயப்போடுறேன் தா” என்று ஜீ அருகில் வர “வேண்டாம் ஜீ..
நானே செய்து கொள்கிறேன்” என்று கௌசிகா மறுக்க ஜீவா முறைத்தான்.

“சரி சரி.. எனக்கு அங்கு பக்கெட்டில் இருக்க ஒவ்வொரு துணியையும் எடுத்து வந்து தா” என்று சொன்னாள் கௌசிகா. ஏதேதோ பேசியபடி இருவரும் வீட்டிற்குள்
வர மணி ஏழு ஆகிவிட்டது.

விக்னேஷ் காலை நீட்டிப் போட்டு சுவற்றில் சாய்ந்தபடி லேப்டாப்பை நோண்டிக் கோண்டிருந்தான். உள்ளே
வந்த இருவரையும் கண்டுகொள்ளாமல்
அவன் வேலையிலேயே
மூழ்கியிருந்ததான் விக்னேஷ். பின் ஜீவாவை அழைத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தவன் கௌசி என்று ஒருத்தி அங்கு இருப்பதையே கண்டு
கொள்ளாமல் இருந்தான். ஜீவா
விக்னேஷின் அருகில் அமர
அவர்களுக்கு எதிரில் இருந்த சுவரில் சாய்ந்தபடி வெங்காயத்தை உரித்துக்
கொண்டிருந்தாள் கௌசிகா.

கௌசிக்கு அவன் தன்னைத் தவிர்ப்பது கஷ்டமாக இருந்தாலும் “இது என்ன
புதிதா?” பல்லைக் கடித்து சகித்தாள். ஜீவாதான் மிகவும் சங்கடமாக உணர்ந்தான். வந்ததில் இருந்து விக்னேஷ் கௌசியிடம் பேசப்
பிடிக்காதவன் போல நடப்பதில் அவள் முகம் வாடுவதை அவ்வப்போது கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.

“ஜீ இதைப் பாரு” என்று விக்னேஷ் அழைக்க அந்த லேப்டாப்பின் ஸ்கீர்ன்-ஐப்
பார்த்தான் ஜீவா.

அந்த ஸ்கீனில் மைக்ரோசாஃப்ட் வோர்டில்
ஏதோ டைப் செய்திருக்க அதை ஜீவா படித்தான். “அவகிட்ட சொல்லிட்டையா?” என்று டைப் அடித்திருந்தான் விக்னேஷ்.

“இல்ல” என்று ஜீவா தலையாட்ட விக்னேஷ் முறைத்துத் தள்ளினான்.

“இப்போ பேசு..” என்று விக்னேஷ் மறுபடியும் டைப் அடிக்க “பாவம் டா” என்று
அவன் காதருகில் பேசினான் ஜீவா.

அவ்வளவு தூரம் விக்னேஷிற்கு கோபம்
வந்துவிட்டது. “இப்போ நீ பேசலைன்னா நான் கிளம்பிடுவேன்” என்று
லேப்டாப்பை மூடிவைத்துவிட்டு
கோபமாகப் பல்லைக் கடித்தபடி பேசினான்.

அவனது திடீர்க் குரலில் நிமிர்ந்த கௌசி இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
ஜீவா சரியென்று ஆரம்பித்தான். “கௌசி
நாளைக்கு நைட் நீ எங்க கூட
கிளம்பணும்.. நிரந்தரமாக.. உன் பெட்டிகளை எல்லாம் எடுத்து ரெடியாக வச்சிடு” என்றான் அழுத்தமான
குரலில் ஜீவா சொல்லி முடித்தான்.

“முடியாது.. நான் எங்கேயும் வர மாட்டேன்” என்று கையில் இருந்த கத்தியை வெறித்தபடி பதில் சொன்னாள் கௌசிகா.

அவளது பதிலில் ஜீவாவிற்கு
எரிச்சலுற்றாலும் அடக்கிக் கொண்டான். ஆனால் விக்னேஷோ கை முஷ்டிகள்
இறுக கௌசியை ஆத்திரமாக கண்கள் கோபத்தில் சிவப்பேறி பளபளக்க நோக்கிக் கொண்டிருந்தான்.

விக்னேஷின் பார்வை தன்னைத் துளைப்பதை உணர்ந்தாள் கௌசிகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!