கரிசல் காட்டுப் பெண்ணே 20

கரிசல் காட்டுப் பெண்ணே 20

 

எதற்காக அழுகிறோம் என்று தெரியாமலேயே அவள் மையழிந்த கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

 

உண்மையில் ராமகிருஷ்ணன் உடனான திருமணம் நின்றதில் அவளுக்கு நிம்மதி தான். சிறிதும் வருத்தம்  எழவில்லை. ஆனாலும் இப்படி முடிந்திருக்க வேண்டியதில்லை.

 

தன்னை எத்தனை கேவலமாக பேசி விட்டான். எத்தனை கீழ்தரமாக நினைத்து விட்டான். கழிவிரக்கம் கொண்டு கலங்கியது சீதாவின் மனம்.

எல்லோருக்கும் எத்தனை மனக்கஷ்டம் என்று அதற்கும் சேர்த்து வருந்தினாள்.

 

“இப்ப எதுக்காக அழற?” என்ற கேள்வியில் நிமிர, அறையின் வாயிலில் ஸ்ரீராம் நின்றிருந்தான்.

 

“தெரியல, அழணும்னு மட்டும் தான் தோணுது” அவளின் பதிலை இவன் உள்வாங்கிக்கொண்டு தலையசைத்து, “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

 

“இல்ல… இப்ப எதுவும் பேச வேணாம் நீ போயிடு” என்றாள். அவளின் ‘சின்னா’ என்ற அழைப்பை கவனமாக கழித்துக் கொண்டாள்.

 

அவளுக்கும் மன இறுக்கம் தளர கொஞ்சம் பேசினால் நன்றாயிருக்கும் என்று தான் தோன்றியது. ஆனால் இவனுடன் அல்ல. முதலிலேயே தன்னால் அவனுக்கு பல பிரச்சனைகள். இன்னும் அவனை தொந்தரவு செய்ய இவள் விரும்பவில்லை.

 

“எனக்கு இப்ப பேசிய ஆகணும்” என்று அழுத்தமாக அவன் உள்ளே வர,  தரையில் உட்கார்ந்து கட்டிலில் தலைசாய்த்து இருந்தவள் அவனை அண்ணார்ந்து பார்த்தாள். அவனின் பிடிவாத பேச்சின் காரணம் விளங்காமல்.

 

“இன்னும் ரெண்டு மூணு நாள்ல ராமகிருஷ்ணன் இங்க திரும்பி வருவான், அவன் பேசினது தப்புனு எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேப்பான் உன்கிட்டயும் என்கிட்டயும் கூட, இனிமே உன்ன சந்தேக படமாட்டேன்னு சத்தியம் செய்வான்! பெரியவங்க கூட அவன்மேல இருக்க பாசத்துல அவனை ஏத்துப்பாங்க, உங்க கல்யாணத்தை மறுபடி ஃபிக்ஸ் பண்ணுவாங்க… இப்ப நீ என்ன செய்யபோற?” இவன் கேள்வியில் அவள் நெற்றி சுருங்கியது.

 

“இதுக்கும் மேல யாருக்காகவும் மாமாவ என்னால கட்டிக்க முடியாது… நான் எல்லார்கிட்டயும் சொல்லிறேன், முன்ன மாமாமேல பயம் மட்டும் தான் இருந்தது. இப்ப… வெறுப்பும் சலிப்பும் தான் இருக்கு. அம்மா, அப்பா, அத்த, மாமா எல்லாரும் என்மேல வச்சிருக்க நம்பிக்கையில கொஞ்சம் கூட அவருக்கு இல்ல… தப்பித்தவறி இந்த கல்யாணம் நடந்தா எங்க வாழ்க்கை நரகமாத்தான் இருக்கும்” இவளின் தெளிந்த பதிலில் அவன் முகமும் தெளிந்தது.

 

தரையில் அவளெதிரில் அமர்ந்தவன் ஆழ மூச்செடுத்து, “என்னை உனக்கு பிடிச்சிருக்கா? நாம… கல்யாணம் பண்ணிக்கலாமா?” ஸ்ரீராம் நேராக கேட்க,

 

“முட்டாளாட்டம் பேசாத, எனக்காக நீ ஒண்ணும் தியாகம் செய்ய வேணாம், கல்யாணத்தவிட உறுப்படியான வேலை எதையாவது நான் பாத்துக்கிறேன்,‌ நீ கிளம்பு” என்றாள் விட்டேற்றியாக.

 

“சீதா… போன நிமிஷம் வரைக்கும் நீ எனக்கு கிடைப்பன்னு நான் யோசிச்சது இல்ல, இப்ப நீ எனக்கே எனக்கா கிடைக்கற வாய்ப்ப இழக்கிற அளவுக்கு நான் முட்டாளா இருக்க விரும்பல” அவன் ஆழ்ந்து சொல்ல, பேச்சு மொழி புரியாதவள் போல் திருதிருத்து விழித்தாள்.

 

“என்ன? என்னென்னமோ பேசுற நீ? கீர்த்தி அக்காகிட்ட அடி தான் வாங்க போற பாத்துக்க” என்று அவள் தான் மிரண்டு அவனை மிரட்ட, ஸ்ரீராம் அர்த்தமாய் புன்னகை விரித்தான்.

 

“சரி, என் காதல் கீர்த்தி இல்லன்னா, நீ என்னை ஏத்துப்பியா?” ஸ்ரீராம் விடாமல் கேட்க, சீதாவின் விழிகள் சுருங்கி விரிந்தன.

 

வெளியே, கீர்த்திவாஷினி தன்னை குறுகுறுவென பார்த்த பெரியவர்களை அசட்டையாக நோக்கி, “ஓ மை காட், நாங்க சொல்றது உண்மைதான் நம்புங்க பா” என்றாள்.

 

“மஹாவையும் ஸ்ரீயையும் இங்க யாரோ தப்பா பேசறதை கேட்டு, ஸ்ரீ என்கிட்ட வருத்தமா பேசினான். இந்த வதந்தியால மஹா கல்யாணத்துல எதுவும் பிராப்ளம் வரக்கூடாது… உங்க யாரையும் கஷ்டபடுத்த கூடாதுன்னு சென்டியா பேசி, கொஞ்சநாள் என்னை அவனோட லவ்வரா நடிக்கச் சொல்லி ரிக்வெஸ்ட் பண்ணான். அதான் பெரிய மனசு பண்ணி போனா போகுதுன்னு நானும் ஓகே சொன்னேன்” என்று கைகளை ஆட்டி அசைத்து அவள் பிளாஷ்பேக் சொல்லி முடிக்க, பெரியவர்கள் நெஞ்சம் நெகிழ்ந்து தான் போனது. தங்கள் பெண்ணை பழிச் சொல்லில் இருந்து காப்பாற்ற ஸ்ரீராம் இத்தனை முயன்று இருக்கிறான் என்று.

 

இங்கு சீதாவும் வாயடைத்து தான் போனாள். “டெடி எனக்கு ஃபிரண்ட் மட்டும் தான், போதுமா, இப்ப நீ சொல்லு” ஸ்ரீராம் சாதாரணமாய் கேட்க,

 

“நான்… என்ன சொல்ல?” சீதா திகைத்து திணறி கேட்க, “என்னை பிடிச்சிருக்கா சொல்லு, என்னை கட்டிக்க சம்மதமா சொல்லு” என்று அவளின் வலக்கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்தபடி அவளின் சம்மதம் வேண்டினான்.

 

இவளின் இதய கூட்டிற்குள் அசுர வேகத்தில் தடதட சத்தம்! அவளின் கண்கள் அசையாமல் அவனை அதிர்வோடு வெறித்திருந்தன. 

 

‘சின்னாவா தன்னிடம் இப்படி கேட்பது!’ அவளால் முழுமையாக நம்பவும் முடியவில்லை. ஒரே நாளில் வாழ்க்கை இப்படி தலைகீழாக மாறுமா என்ன?

 

நிஜமே நிஜமா இது? இல்லை நிஜம் போல கனவா இது?

 

இது கனவென்றால்,

இப்போதே நான் விழித்தெழவா? இன்னும் கொஞ்சம் நேரம் கனவில் அமிழ்ந்து பின் எழவா? 

 

வார்த்தைகளில் உரு கொடுக்க முடியாத தவிப்புக்கள் அவளை வளைத்தன.

 

அவளின் தவிப்பை ரசித்தவன்,‌ புன்னகை விரிய‌ புருவம் ஏற்றி இறக்கி அவளின் சம்மதமான ஒற்றை சொல்லுக்கும் சிறு தலையசைப்பிற்கும் நொடிகள் நீள காத்திருந்தான்.

 

“தெரியல சின்னா…!” குழப்பமான பதிலை சொன்னவள், “நான் எப்படி உனக்கு? நிஜமா என்னை கட்டிக்க நினைக்கிறீயா?” நம்பாமல் வினவ,

 

“பாப்புவ எனக்கு ரொம்ப பிடிக்கும்,‌ அவ பாட்டு பிடிக்கும்,‌ அவ பேச்சு பிடிக்கும்,‌ அவ மனசு பிடிக்கும், அவ என் வாழ்க்கையில வந்தா என்னை சந்தோசமா பார்த்துப்பா, நானும் அவளை சந்தோசமா பார்த்துப்பேன், பாப்புக்கும்‌ சின்னாவ பிடிச்சு இருக்கான்னு கேட்டு சொல்லு”

 

அவன் பேச்சிலும் பார்வையிலும் இவள் பெண்மனம் தடுமாறிட, உள்மனதோ நெருடலில் தவித்தது.

 

“சின்னாவ பிடிக்கும்… ஆனா, இதெல்லாம் சரி வராது?” சீதா இன்னும் தயங்கி பேசினாள்.

 

கீர்த்தி, பெரியவர்களின் குறுக்கு கேள்விகளுக்கு பதில் சொல்லியே அலுத்து போனாள். “அச்சோ ஆள விடுங்க என்னை, நாங்க பொய் சொல்ல போறோம்னு ஆன்ட்டி, அங்கிள் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான் சொன்னோம்… மீதிய அவங்கிட்டயே கேட்டுக்கோங்க” என்று கௌதமி, பரமேஸ்வரனை மாட்டிவிட்டு தப்பித்து நழுவிக் கொண்டாள் இவள்.

 

மற்றவர்கள் திகைத்த பார்வை இவர்களிடம் திரும்ப, “சீதா கல்யாணத்துல தன்னால எந்த பிரச்சனையும் வர கூடாதுன்னு ஸ்ரீ கவலைப்பட்டான். இவ்வளவு செஞ்சும் கடைசியா அதுவே நடந்து போச்சு” கௌதமி சொல்லவும்,

 

“விடு தாயீ, ஆண்டவன் உம்ம மவனுக்கு தான் சீதைன்னு முடிச்சு போட்டு வச்சிருக்கான் போல, அதான் மனசங்க நாம போட்ட மன கணக்கு பிழையா போச்சுது” பவுனு பாட்டி அனுபவ மொழியில் பேச, மற்றவருக்கும் அதுவே ஆறுதலாகப்பட்டது.

 

“ஸ்ரீ, சீதாவ கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுடுவான், நாம மேற்கொண்டு நடக்கவேண்டிய வேலையை பார்க்கலாம்… சம்பந்தி” பரமேஸ்வரன், சங்கரன் தோளை தட்டி கேட்க, சங்கரனும் புன்னகைக்க முயன்று தலையசைத்தார். உயிர் நண்பர்கள் உறவாய் இணைவதில் சந்தோசமே அவர்களுக்கும்.

 

“அண்ணி, சீதாவ மருமவளா ஏத்துக்கிறதுல உங்களுக்கு எந்த சுணக்கமும் இல்லையே” மரகதம் தயங்கி கேட்க, “இதென்ன கேள்வி மரகதம்? ஸ்ரீ உன் மடியில வளர்ந்தவன்னா, சீதா என் தோள்ல வளர்ந்தவ, எங்களுக்கு பூரண சந்தோசந்தான்” கௌதமி நிறைவாய் சொல்லவும் தான் பெற்றவளுக்கு நிம்மதியானது. 

 

ஸ்ரீராம் இன்னும் சீதாவின் தயக்கத்தை உடைக்க முயன்று இருந்தான். “கண்டிப்பா சரிவரும் சீதா, முதல்ல உன் கூட்டுக்குள்ள இருந்து வெளியே வா, நம்ம வானம் விரிஞ்சிருக்கு…”

 

“ஆமா, அதை நாலா மடிச்சு உன் பேண்ட் பேக்கட்ல வச்சுக்கோ” கீர்த்தி கிண்டலடித்தபடி அவன் பேச்சில் குறுக்கே வந்து புகுந்து கொள்ள, இருவரின் பார்வையும் அவளிடம் திரும்பியது.

 

சீதாவின் பார்வை சஞ்சலமாய்,‌ 

ஸ்ரீராம் பார்வை கடுப்பாய்.

 

“என்னடா கூடு, வானம்னு ரம்பம் போட்டுட்டு இருக்க, பெரிய அப்பாடக்கர் மாதிரி ஃபேமிலிய நீ சமாளி, சீதாவ நான் சமாளிக்கிறேன் வந்த… ஊத்திகிச்சா உனக்கு” வஞ்சனையில்லாமல் அவனை கலாய்க்கலானாள்.

 

“கொஞ்சம் உன் ஷட்டரை மூடிட்டு வெளியே போறியா, நாங்க பேசணும்” ஸ்ரீராம் சளைக்காமல் அவளை விரட்ட, சீதா இருவரையும் மாறி மாறி பார்த்து இருந்தாள்.

 

“நீ ஜவ்வு மாதிரி பேசி, முடிச்சி உங்க மேரேஜ் நடக்கணும்னா இன்னும் பத்து வருஷம் ஆகும், நகரு” அவனை தள்ளி விட்டு சீதாவிடம் உட்கார்ந்து கொண்டாள்.

 

“மஹா பேபி, இந்த வில்லேஜ் பீப்பில்ஸ் தான் இவனை என்னவோ ரேன்ஜ் கிரேட் பண்ணி தலையில தூக்கி வச்சு ஆடுறாங்க, உண்மையில இவனுக்கெல்லாம் அவ்ளோ சீன் கிடையாது. சரியான வேஸ்ட் பீஸ்” கீர்த்தி வாயடிக்க,

 

“ஏய் கரடி, போய் தொலைடி, இல்ல உன்ன பிச்சிடுவேன்” இவன் கடுப்படிக்க,

 

“ஹலோ உனக்கு வேலை ஆகணும்னா மட்டும், ஏசி ரூம்ல பீஸா சாப்பிட்டு வீடியோ கேம் விளையாடிட்டு ஜாலியா சுத்திட்டு இருந்தவளை ஐஸ் வச்சு கெஞ்சி கூப்பிட்டு இந்த பட்டி காட்டுல அலைய வைப்ப, இப்ப வேலை முடிஞ்சதும் என்னை கழட்டி விடுறீயா, மவனே கிளோஷ் பண்ணிடுவேன்” கீர்த்தி கட்டை விரலால் தன் கழுத்தின் நேரே கோடிட்டு காட்ட, ஸ்ரீராம் நொந்தபடி தலையில் அடித்து கொண்டான்.

 

“நான் சொன்ன இல்ல இவன் வெத்து பீஸ்னு இப்ப நம்பறீயா?” கீர்த்தி கேட்கவும் சீதாவாலும் அடக்க முடியவில்லை மடித்த இதழ்களுக்குள் சிரிப்பை சிதற விட்டிருந்தாள்.

 

“குட் கேர்ள், இப்படி தான் சிரிச்சிட்டே இருக்கணும், அதுவும் நம்மள அழவைக்கணும்னு யாரு நினைக்கிறாங்களோ அவங்க முன்னாடி இன்னும் சத்தமா சிரிக்கணும்… எதையும் ஃபேஸ் பண்ற தைரியம் உன்கிட்ட இருக்கு மஹா, உன் ஃபேமிலி மெம்பர்ஸ்காக உன்ன நீயே கோழையா காட்டிக்கிற”

 

“மத்தவங்களுக்காக விட்டு கொடுத்து போறது தப்பில்ல, நம்ம தரத்தை விட்டு கொடுக்கறது தான் தப்பு, பொண்ணுங்கன்னா ஒரு கெத்து வேணாமா? உன் மாமா பேச்சுக்காக, இந்த ஊர் பேச்சுக்காக நீ ஒடுங்கி போனா தான் அவங்க இன்னும் அதிகமா பேசுவாங்க, நீ துணிஞ்சு நின்னு ‘ஆமா நான் இப்படி தான்’னு சொல்லு எல்லாரும் பொத்திட்டு போயிடுவாங்க”

 

“அப்புறம் யூ ஆர் ரியலி லக்கி பேபிமா, உன்மேல உன் ஃபேமிலி வச்சிருக்க அன்பை பார்த்து நான் மெர்சலாகிட்டேன். அதோட… எங்க ஸ்ரீயும் கொஞ்சூண்டு நல்ல பையன் தான். நீ தைரியமா நம்பி கழுத்தை நீட்டலாம். ஒருவேளை பியூச்சர்ல ஏதாவது தகராறு செஞ்சான்னா, என்கிட்ட சொல்லு நம்ம ஃப்ரண்ஸ் எல்லாம் சேர்ந்து இவனை டார் டாராக்கிடலாம்” கீர்த்தி நீளமாக அளந்துவிட்டு நிறுத்த, சீதா முழுவதுமாக தெளிந்து இருந்தாள். ஸ்ரீராம் முழுதாக நொந்திருந்தான்.

 

“நிஜமாவே சின்னாவ நீங்க விருப்பலையா கீர்த்திக்கா?” சீதா இயல்பான குரலில் கேட்க, 

 

“இவனை எல்லாம் நான் ஃபிரண்ட் லிஸ்ட்ல வச்சிருக்கறதே பெரிய விசயம், இதுல லவ் எல்லாம் சான்சே இல்ல. பட் ஒரு சின்ன வருத்தம் தான் மஹா, இந்த தடிமாட்டு பயல சின்னானு கூப்பிட்டு என்னை போயி… இந்த டெடிய பார்த்து அக்கான்னு கூப்பிடுற பாரு அதை மட்டும் என்னால தாங்கவே முடியல” என்று அவள் வராத கண்ணீரை துடைத்து கொள்ள,

 

“உன்ன டெடின்னு கூப்பிட சொல்லி நான் பாப்புகிட்ட சொல்றேன், நீ கிளம்பு, முடியல‌ என்னால” ஸ்ரீராம் அவளை விரட்டவும், மூன்று பெண்கள் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

 

இவர்கள் மூவரும் எழுந்து நிற்க, “அடுத்த முகூர்த்தத்திலயே உங்க கல்யாணத்தை முடிச்சிடலாம்னு நாங்க முடிவு எடுத்து இருக்கோம் உங்களுக்கு சம்மதம் தான?” கோதாவரி கேட்க,

 

“ஏன் பெரிம்மா, இத்தனை அவசரமா…?” ஸ்ரீராம் வினவ,

 

“தள்ளி போடறது சரியாபடல அதான்” என்றவர், “சீதாம்மா உனக்கு சம்மதம் தான?” என்று கேட்டார்.

 

சீதா, ஸ்ரீராம் முகம் நோக்க, அவன்  ஆமோதித்து தலையசைக்க, இவளும் “உங்க இஷ்டம் அத்தம்மா” என்று தயங்கி சொன்னாள்.

 

மரகதம் மகளை அணைத்துக் கொண்டு கண் கலங்கினார். மகளின் வாழ்க்கை இனியாவது நன்றாக அமைய வேண்டும் என்ற வேண்டுதல் அவருக்கு. கௌதமி அவரின் தோளை தட்டிக் கொடுத்தார்.

 

“கங்கிராட்ஸ் கைய்ஸ்” என்று கீர்த்தி கை நீட்ட, ஸ்ரீராம் தலைமேல் இருகரம் கூப்பி பெரிதாக கும்பிட்டு வைத்தான். அவள் முறுக்கி கொண்டு, சீதா கைப்பற்றி குலுக்கி வாழ்த்து சொல்ல, “தேங்க்ஸ் டெடி” என்று அவள் நன்றி சொன்னதும், உற்சாகமாக சின்னவளை ஆர தழுவி கொண்டாள் கீர்த்திவாஷினி.

 

அவர்களின் சந்தோசத்தில் முழுமையாக பங்கெடுக்க முடியாமல் கோதாவரியின் தாய் மனம் வெதும்பி தள்ளி நின்று கொண்டது.

 

# # #

 

இரண்டு வாரங்களில் திருமண தேதி முடிவாகி இருந்தது. இவ்வளவு சீக்கிரமா என்று சங்கரனும் பரமேஸ்வரனும் கூட சற்று தயங்கினர். கோதாவரி தான் பிடிவாதமாக திருமண நாளை முடிவு செய்திருந்தார். குலோத்துங்கனாலும் வலுவாக மறுத்து பேச முடியவில்லை தன் மகன் பக்கம் தவறு என்பதால். தனிமையில் மனைவிடம் கத்திவிட்டு தான் ஊர் கிளம்பி இருந்தார். 

 

கோதாவரி எதற்கும்‌ அசைவதாக இல்லை. ஒருவித அழுத்தத்துடன் சீதா, ஸ்ரீராம் திருமண வேலைகளை பட்டியலிட்டு எல்லாரையும் துரிதப்படுத்திக் கொண்டிருந்தார்.

 

பெரிய வீட்டு குடும்பத்தின் வழக்கப்படி, கோயிலில் எளிமையாக திருமணம் முடித்து, விமர்சையாக வரவேற்பு நடத்திக் கொள்ளலாம் என முடிவாகி இருந்தது.

 

புது வீட்டின் ராசி தான் சட்டென கல்யாணம் கூடி வந்திருக்கிறது என்று கிராமத்து மக்கள் பேசிக் கொண்டனர். மணமகன் மாறியது பற்றிய பலவித பேச்சுக்களைக் கண்டு கொள்ள அங்கு யாருக்கும் நேரமிருக்கவில்லை. 

 

ஆண்கள் வெளி வேலைகளிலும் பெண்கள் வீட்டு வேலைகளிலும் பரபரப்பாக இருந்தனர். ஸ்ரீராம் கூட நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தான்.

 

திருமணத்திற்கு வருவதாக கூறி கீர்த்தியும் மற்ற நண்பர்களும் அன்றே கிளம்பி இருந்தனர். அங்கு தொழிலையும் வீட்டையும் கவனித்து கொள்ள ஜெயராமும் தேவிகாவும் சென்று விட்டனர்.

 

ஊருக்கு கிளம்பும் முன் ஜெய்ராம் தம்பியிடம் பேசினான். “அப்பா, அம்மா சொன்னாங்கன்னு கல்யாணம் பண்ணிட்டு, அப்புறம் வருத்தபடுற மாதிரி வச்சுக்காத ஸ்ரீ, நீயும் சீதாவும் வளர்ந்த சூழ்நிலை வேற வேற, எதுக்கும் இன்னொரு முறை யோசிச்சு முடிவு‌செய்” என்றான் அண்ணனாய்.

 

“நான் முடிவு செஞ்சுட்டேன் அண்ணா, இனி யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல. சீதா தான் என் வொய்ஃப்” ஸ்ரீராம் உறுதியாக சொல்ல, “ம்ம் தெளிவா தான் இருக்க போல, எப்ப இருந்து உனக்கு இந்த லவ் எல்லாம் வந்தது?” ஜெயராம் சிரித்தபடியே கேட்க,

 

“பாப்பு, என்னை கட்டிக்க சம்மதம் சொன்னதுல இருந்து” ஸ்ரீராம் சட்டென பதில்தர, “நம்பிட்டேன் நம்பிட்டேன்” என்று நம்பாமல் அவன் தோளை தட்டிவிட்டு விடைப்பெற்றான்.

 

அதை நினைத்து படுத்திருந்தவன், ‘உண்மைய சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க!’ என்று அலுத்துக் கொண்டான்.

 

இரவு வானில் உச்சி நிலா காய்ந்திருக்க, அதுபோல இவனும் தனிமையில் காய்ந்திருந்தான் தன் அறையில்.

 

ஏனோ இந்த சில தினங்களில் சீதாவை பார்க்கவும் பேசவும் இவன் மனம் அடித்துக்கொள்கிறது. ஒருவித முட்டாள்தனமான இம்சையான உணர்வுகள் அவனை அலைக்கழிப்பதாய்.

 

‘நானா இப்படி மாறி போனேன்?’ அவனுள் நிகழும் மாற்றங்கள் அவனுக்கே புதியதாய். 

 

அன்றைய ஆத்திரமான அவசர சூழ்நிலையில் திருமணம் முடிவாகி இருக்க, அவள் இன்னும் முழுமனதோடு சம்மதம் சொல்லவில்லை என்ற எண்ணமே அவனை அலைக்கழிப்பதாய்.

 

பட்டு மெத்தையில் புரண்டு புரண்டு உடல் வலி எடுத்தது தான் மிச்சம். எழுந்து பால்கனி வந்து நின்று கொண்டான்.

 

இரவு தென்றலின் இதமான பரிசமும் அவனை தகிப்பதாய்.

 

திருமணம் முடிவான பிறகு சீதாவை சந்திக்க வாய்ப்பு கிட்டவில்லை இவனுக்கு. அடுத்த வாரத்தில் திருமணம் என்பதால் அதற்கான வேலைகள் ஒருபுறம் இவனை இழுத்துக் கொண்டன.

 

சீதாவை சந்திக்க இவன் முயன்றாலும் எப்போதும் அவளைச் சுற்றி பெண்களின் கூட்டமாகவே இருந்தது.

 

தாகம் தண்ணீருக்கு தவிப்பது போல இவன் தாபமும் தன்னவள் உடனான தனிமைக்கு தவித்தது!

 

பெரிய வீட்டின் முதல் தளத்தில் பின்பக்க அறை தான் ஸ்ரீராம் உடையது. அவன் அறையின் பால்கனியில் இருந்து பார்க்க, சீதா வீட்டின் கொல்லைப்புற தோட்டம் ஓரளவு நன்றாகவே தெரியும். இப்போது அவன் பார்வையும் மனமும் அங்கு தான் சிக்குண்டு கிடந்தது.

 

இரவின் நிலவின் ஒளியில் கிணற்று திட்டில் சீதா அமர்ந்திருப்பதை கவனித்தவன், மேலே யோசிக்காது பக்க படிகளில் வேகமாக கீழே இறங்கி வந்தான்.

 

சீதாவும் குழப்பத்தில் உறக்கத்தை தொலைத்து இருந்தாள். இந்த திருமணம் சரியா? சரிவருமா? மறுபடி மறுபடி யோசித்து தனக்குள் தவித்து போயிருந்தாள் அவள்.

 

ராமகிருஷ்ணன் தன் அத்தை மகன் என்றாலும் தங்களுக்கு இடையே திருமணம் என்று முடிவான பின்னும் கூட இருவருக்கும் இடையே சிறு இளக்கம் கூட ஏற்பட்டதில்லை.

 

ராமகிருஷ்ணன் அதட்டி அடக்குவதும், இவள் அவனிடம் பயந்து நடுங்குவதும் மட்டுமே தொடர்ந்தது. அவனிடம் பயம் கொள்ளக்கூடாது என்று எத்தனை முயன்றாலும் அவன் அதட்டல் பேச்சில் நடுங்கி தான் போவாள்.

 

முன்பே ராமகிருஷ்ணன் உடனான தன் எதிர்காலத்தை நினைத்து கலக்கம் கொண்டிருந்தாள். அத்தனை கலவரத்திலும் நல்லவேளை இந்த திருமணம் முறிந்து போனது என்ற அற்ப நிம்மதி அவளுக்குள் எழவே செய்தது.

 

ஆனால் சற்றும் ஆசுவாசமின்றி திடுமென சின்னாவுடன் தனக்கு முடிவான திருமணம், அவன் தன்னிடம் சம்மதம் யாசித்த விதம், தன் திருமணத்தில் தான் தங்கள் குடும்ப மானமும் அடங்கி இருக்கிறது என்ற நிர்பந்தம் அவளை அசைத்து பார்த்தது. அரைகுறை மனதுடனே சம்மதம் என தலையாட்டி விட்டிருந்தாள்.

 

இந்த ஒருவாரமாக தெளிவில்லாத குழப்பங்களும் உறுதியற்ற தயக்கங்களுமே அவளை சூழ்ந்திருக்க, அவளின் உறக்கமும் தள்ளி நின்றது.

 

சலனமற்ற இரவின் சலசலப்பில் இவளின் பார்வை திரும்ப, அங்கே ஸ்ரீராம் சற்றே மூச்சு வாங்க நின்றிருந்தான்.

 

தனக்காகவே அவன் வந்திருக்கிறான்‌ என்பதை உணர்ந்தும் எவ்வித தடுமாற்றமும் இன்றி கண்களில் அவனை நிரப்பியபடி வாளாமல் அசைவற்று இருந்தாள் இவள்.

 

அவளை பார்த்து விட்ட கொண்டாட்டம் இவனிடம். தன் கை நீட்டி அசைத்து, பார்வையாலும் அவளை அருகழைத்தான். 

 

விசைக்கு கட்டுப்படும் இயந்திரம் போல, அவன் பார்வைக்கு உடன்பட்டவள், கிணற்று திட்டிலிருந்து இறங்கி வந்து, அவன்முன் தயங்கி நின்றாள்.

 

“இந்த இருட்டுல இப்படி தனியா உக்கார்ந்து இருப்பியா பாப்பு?” அவன் வாஞ்சையாக வினவ,

 

“உறக்கமே வரல, மனசுக்குள்ள ஏதேதோ நினப்பு ஓயாம சுத்துது,‌ மூச்சு முட்டுது சின்னா… இது சரியா தப்பானு கூட தெரியல” அவனிடம் பிதற்றினாள்.

 

“எதை சரியா, தப்பான்னு யோசிக்கிற?” அவன் கேட்க,

 

“இந்த… நம்ம கல்யாணம்!” 

 

“ஏன்? என்னை கட்டிக்கிறதுல உனக்கு விருப்பமில்லையா?”

 

அவளிடம் பதில் இல்லை. நிலவின் பாலோளியில் அவளின் கன்னங்களில் வழிந்த கண்ணீர் பளபளக்க, அதை பார்த்த ஸ்ரீராம் இடைவெளி குறைத்து நெருங்கி அவள் பூமுகத்தை கைகளில் ஏந்தி, கண்ணீரை துடைத்து விட்டான்.

 

அவன் உரிமை தீண்டலில் இவளுக்குள் தடதடப்பு! இந்த இருளும் தனிமையும் கூட அவளை மிரட்டி பார்த்தது.

 

“நான் கேட்ட கேள்விக்கு, நீ இப்படி அழுதா உனக்கு என்னை பிடிக்கலன்னு அர்த்தம் பாப்பு… நிஜமா உனக்கு என்னை பிடிக்கலையா?” அவன் குரல் இவளிடம் இறங்கியது.

 

“உன்ன பிடிக்கும் சின்னா, ஆனா… நமக்குள்ள கல்யாணம் சரிவருமா? முதல்லயே சூடுபட்டவ நானு” அவள் கலங்கி மொழிய,

 

“ஏன் முடிஞ்சதெல்லாம் யோசிக்கிற? என்மேல நம்பிக்கை வரலையா உனக்கு?” அவள் குழப்பம் தீர்க்க வழி தேடினான்.

 

“மாமா என்னை ரொம்ப தப்பா பேசிட்டாரு… நான் அவ்ளோ கேவலமானவ இல்ல சின்னா…” முகம் பொத்தி தேம்பினாள்.

 

“நீ தப்பானவ இல்லன்னு எனக்கும் தெரியும். உன் மாமாவுக்கும் தெரியும். நம்ம குடும்பத்துக்கு பெரியவர்களுக்கும் தெரியும், வீணா மனச போட்டு குழப்பிக்காத” என்றவன், முகம் மூடி இருந்த அவள் கைகளை பிரித்து, 

 

“அதோட நம்ம கல்யாணம் இங்க எல்லாத்தையும் மாத்திடும், சேம்பலுக்கு இப்பவே உன் அழுகையை நிறுத்தி காட்டவா” என்று சவால் விட்டான்.

 

அவள் புரியாமல் பார்க்க,

அவளின் முகம் நிமிர்த்தி நேற்றி பொட்டில் தன் இதழ் தடம் பதித்தான். 

 

அவள் உடலின் ஒவ்வொரு செல்களிலும் சிறு அதிர்வு தோன்றி அடங்கியது!

 

“சின்னா…” அவள் குரல் உடைந்தது. அவனை விலக்கி ஓடும் துணிவு வரவில்லை அவளுக்கு.

 

“முன்ன தவறி என் கைபட்டதுக்கே என்னை அடிச்சல்ல, இப்ப தெரிஞ்சே தான் உன்ன கிஸ் பண்ணேன் சிலாப் மீ” அவன் சொல்ல, இவள் துணுக்குற்றாள்.

 

அவன் அத்துமீறிய கோபம் தன்னுள் எழவில்லை என்பதை வியப்போடே உணர்ந்தாள். அப்போது தன்மனம் சின்னாவை தனக்கு உரிமையாவனாக ஏற்றுக் கொண்டதா? அதிரிச்சியோடே உணர்ந்தாள்.

 

“பாப்பு…” காற்றிலும் மென்மையாய் வருடியது அவன் விளிப்பு.

 

“இப்பவும் நமக்குள்ள செட்டாகாதுன்னு தோணுதா உனக்கு?

 

“ம்ஹும்” என்றாள் அவளுக்கே கேட்காமல்.

 

அவன் சிரித்து கொண்டான். அவளின் கன்னக்குழிகளை விரல்நுனி கொண்டு அளந்தவன், தடைகளை உடைத்து அவளின் மென்னிதழ் நோக்கி தாழ, இவளின் மென்கரம் அவன் வாய்மூடி தடுத்தது.

 

“தப்பு சின்னா…” என்று.

 

தன் வாய்மூடிய அவளின் கரத்தை சேர்த்து அழுத்தமாய் இதழோடு ஒற்றிக் கொண்டவன், “இனி நமக்கு நடுவுல சரி, தப்புன்னு எதுவும் இல்ல பாப்பு. இது நமக்கு மட்டுமேயான தனிமை… ஃபீலிங்க்ஸ்…” அவன் காதல் பாடத்தில் முதல் அத்தியாயம் எடுக்க, உள்ளத்து உணர்ச்சி பெருக்கின் பேரிரைச்சலில் பெண்ணவளின் முகம் கன்றி சிவந்து போனது. அவளின் கால் விரல்கள் மண் தரையோடு புதைத்துக் கொள்ள முயல, தொண்டைக்குழி வறண்டு வறட்சியானது.

 

கிட்டத்தட்ட அவளின் நிலைதான் அவனுக்கும். எப்போதும் தன்னுடன் சளைக்காமல் வாயடிப்பவள் பேச்சிழந்து தவித்து நிற்பது இவனுக்கே பாவமாய்.

 

“ஓய், ஜஸ்ட் ரிலாக்ஸ்” ஸ்ரீராம் அவளின் பதட்டத்தை சமன்படுத்த முயன்றான்.‌ காற்று கலைத்துவிட்ட அவள் முடி கற்றைகளை விரல் கொண்டு ஒதுக்கி விட்டவன், அவள் உணரும் முன்னே அவளின் இடைப்பற்றித் தூக்கி, அருகிருந்த மாமரத்தின் தாழ்ந்த கிளையில் அமர்த்தி விட்டான்.

 

எப்போதாவது சீதா இந்த கிளையில் உட்கார்ந்து கொள்வதை இவனும் ஒன்றிரண்டு முறை கவனித்து இருந்தான்.

 

“நான் தூங்க போகணும் சின்னா… நீயும் போய் தூங்கு… யாராவது நம்ம சேத்து பாத்தா தப்பாகிடும்” அவனின் புதிய நெருக்கம் இவளுக்கு அவஸ்தையாக இருக்க தப்பித்துக் கொள்ள முயன்றாள்.

 

“நான் என் சீதா கூட இருக்கேன், யார் என்ன சொன்னாலும் ஐ டோண்ட் கேர் அபௌட் இட். அதோட என் மக்கு பாப்பு, இந்த அர்த்த ராத்திரியில உன்னையும் என்னையும் தவிர வேற யாரு முழிச்சு இருப்பா சொல்லு?” என்று எகிறி அதே கிளையில் அவளருகில் அமர்ந்து கொண்டான்.

 

“இன்னைக்கு என்னாச்சு உனக்கு? குதிக்கிற, தூக்குற, தாவுற… என்னென்னமோ குரங்கு சேட்டை எல்லாம் செய்யற” சீதா தவித்து கேட்க,

 

“ம்ம் உனக்கு என்னாச்சோ அதேதான் எனக்கும் ஆச்சு! என்னென்னமோ செய்யணும்னு நினைக்கிறேன்… அதைவிட்டு ஏதேதோ செய்திட்டு இருக்கேன்” அவள் மூக்கின் நுனியை பிடித்து வலிக்க ஆட்டி விட்டான்.

 

அவன் கையை தட்டி விட்டவள், “நிசமாவே என்னை உனக்கு புடிச்சிருக்கா சின்னா?” சீதா விழி விரித்து கேட்க, “பிடிக்காம தான் இப்படி வந்து உன்கிட்ட வழிஞ்சிட்டு இருக்கேனாக்கும்” என்று அவளின் இடைவளைத்து இழுத்து தன்னோடு சேர்த்து கொண்டான். அவளும் அவன் மார்போடு ஒண்டிக் கொண்டாள். கலவரத்தில் தவிக்கும் தன் மனதிற்கு அவன் அருகாமை ஆறுதல் தருவதாய்.

 

அவனின் சட்டை வாசம் இவள் நாசிக்குள் நுழைந்து நேசம் விதைப்பதாய்.

 

அவள் சூடியிருக்கும் மல்லிகை வாசம் அவனுக்குள் தாபம் கூட்டுவதாய்.

 

சீதா விலக எத்தனிக்க, அவன் கைகள் அவளை மேலும் இறுக்கி கொண்டன.

 

“நான் பக்கம் இல்லன்னா அம்மா என்னை தேடி வருவாக!” 

 

“தூக்கம் தெளிஞ்சா தான அத்த உன்ன தேடுவாங்க?”

 

“வெள்ளனே பந்தகால் நடணும்னு அப்பா சொன்னாக”

 

“ம்ம் அப்புறம், நலங்கு, சடங்குன்னு உன்ன என் பார்வைக்கு கூட காட்டமாட்டாங்க”

 

“உறக்கங் கெட்டா உடம்புக்கு ஆகாது, போய் கொஞ்சம் நேரம் உறங்கு சின்னா”

 

“தூக்கம் வந்தா நான் தூங்கி இருக்க மாட்டேனா? இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பேசிட்டு இருக்கலாம் பிளீஸ்” அவன் அடமாய் கெஞ்சவும் இவளும் விரும்பியே விட்டு தந்தாள்.

 

நட்ட நடு இரவின் தனிமையில், 

உச்சி வான் நிலவின் கண்காணிப்பில்,

மாமரத்து தாழ் கிளையில் தொற்றிக் கொண்டிருந்தன அந்த ஜோடி தேன் சிட்டுக்கள்!

 

உயிர் துணையின் அருகாமையில் பெண் அவளின் தவிப்பும் குறைந்திருக்க, சற்று நேரத்திலேயே சீதா கண் அயர்ந்து இருந்தாள்.

 

தன் தோளில் சிறு குழந்தையாய் உறங்குபவளின் தலைக்கோதியபடி ஸ்ரீராம், தன் அருகாமையில் இப்போது இவள் உணரும் நிம்மதியை தன் வாழ்நாள் முழுவதும் அவளுக்கு தர வேண்டும் என்று உறுதி ஏற்றுக் கொண்டான்.

 

************

 

வருவாள்…