கரிசல் காட்டுப் பெண்ணே 22

கரிசல் காட்டுப் பெண்ணே 22

 

அம்மா, அத்தை, மாமா, அம்மத்தா, தாத்தா என்ற அனைவரின் ஏகபோக அன்பிற்கும் உரிமையானவன் ராமகிருஷ்ணன்! குழந்தை ராமு.

 

அவர்கள் குடும்பத்தின் முதல் வாரிசு என்பதால் எல்லாருக்குமே செல்லம்.

மீசைக்கார முனியாண்டி தாத்தாவின்  தோளில் ஏறி கொண்டு கழனிகாட்டுக்கு போகும் போது அச்சிறுவனுக்கு அத்தனை பெருமையாக தோன்றும். அவரின் முரட்டு தோரணையும் அதிகார பேச்சும் எப்போதும் அவனை ஈர்க்கும்.

 

மஹாலட்சுமி பாட்டி பேரனின் ‘அம்மத்தா’ என்ற மழலை அழைப்பில் குழைந்து உருகி போவார். அவரின் மணமணக்கும் பலகார வகைகளுக்கு பேரனின் நாக்கு அடிமை. 

 

சங்கரன் மாமாவுக்கு எப்போதுமே ராமு மீது தனி பிரியம். அவர் ஒருமுறை வெளியூர் சென்று வந்தால் இவன் பட்டியலிட்ட எல்லா பொருட்களும் அவன்முன் குவிந்து கிடக்கும்.

 

மரகதம் அத்தையோ கொழுக் மொழுகென்று இருந்த ராமுவை குளிக்க வைத்து, சீராட்டி, உணவூட்டி, தூங்க வைப்பதுவரை அவர்தான். 

 

இத்தனை பேரின் ஒட்டுமொத்த செல்லத்தில் ராமு அடமும்  பிடிவாதமும் அதிகார தோரணை குணத்துடனேயே வளர்ந்திருந்தான். கோதாவரி மட்டுமே மகனிடம் அவ்வப்போது கண்டிப்பைக் காட்டுவார். அம்மாவின் கண்டிப்பும் பெரிதாக ராமுவை பாதித்ததில்லை. அவனை பாதித்த முதல் விசயம் சீதாமஹாலட்சுமி தான்.

 

ராமுவின் ஐந்து வயதில் குலோத்துங்கன் ஒப்பந்த அடிப்படையில் துபாய் சென்று ஏழு வருடங்கள் வேலை செய்ய கட்டாயம். அதனால் கோதாவரி மகனுடன் தாய் வீட்டில் தான் தங்கி இருந்தார். 

 

பெரிய வீட்டிலும் ஜெய்ராம், ஸ்ரீராமோடு சேர்ந்து ராமுவும் வீட்டு பிள்ளையாகவே உலா வந்தான். அந்த ஊரும், தன் மாமா குடும்பமும் நண்பர்களும் ராமுவின் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தனர் வருட கணக்கில்.

 

இவனின் ஏழு வயதில் முதுமையால் மஹாலட்சுமி பாட்டி தவறிவிட, குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. அவரின் இழப்பால் வெறுமையாகி கிடந்த வீட்டை தன் பொக்கைவாய் சிரிப்பால் நிறைக்கவே அடுத்த வருடம் சீதா பிறந்தாள். மரகதம் பெண் மகவை பெற்றெடுக்க, முதலில் அத்தை குழந்தையை பார்த்து சந்தோசப்பட்ட சிறுவனுக்கு குடும்பமே அந்த குழந்தையை கையில் ஏந்தி கொஞ்சுவதை பார்க்க பார்க்க அவன் வயதிற்கேயுரிய பொறாமை குணம் தலைக்காட்டியது.

 

‘ஐய இந்த பாப்பா அழுதுட்டே இருக்கு, இந்த பாப்பா வேணா’ என்று இவன் தீவிரமாக சொல்ல, சுற்றி நின்று அதை கேட்டவர்கள் சத்தமாக சிரித்து விட்டனர்.

 

‘பசினா குழந்தை அழத்தான் செய்யும் ராமு, இப்ப பாரு எம்புட்டு அழகா சிரிக்கிறா?’ கோதாவரி சமாதானம் சொல்ல, அந்த குட்டி குழந்தையின் அழகு சிரிப்பில் இவன் முகம் உர்ரென்றானது.

 

வீட்டின் முதல் பெண் வாரிசை குடும்பத்தினர் கொண்டாடி தீர்க்க, சீதாமஹாலட்சுமி என்று பெயர் சூட்டி இறந்த தாயின் மறுவடிவாக சீதாவை சீராட்டினர். இதையெல்லாம் பார்த்து இருந்த ராமுவுக்கு சீதா வந்தபிறகு அனைவருக்கும் தன்மீது பாசம் குறைந்துவிட்டதாக எண்ணி இறுகி போனான். அதிகமாக அடம்பிடிக்கவும் பிடிவாதம் பிடிக்கவும் ஆரம்பித்தான்.

 

சீதா பாப்பா தூங்கும் போதும் சிரிக்கும் போதும் அவளை கிள்ளி விடுவது, அடித்து அழ வைப்பது என்று தன் வெறுப்பை எப்போதும் காட்ட, சின்னவள் அருகில் இவன் முகம் பார்த்தாலே வீரிட்டு அழுதுவிடும் நிலைக்கு வந்திருந்தாள். 

 

குழந்தையின் வளர்நிலை பருவத்திலும் இவன் வெறுப்பையும் கோபத்தையும் காட்டினான். அவள் விரும்பி விளையாடும் விளையாட்டு பொருட்களை அவளின் முன்பே போட்டு உடைத்து பிய்த்து எறிந்து அவளை கதற அழ வைப்பதில் இவனுக்குள் ஒருவித குரூர திருப்தி.

 

பெரியவர்கள் இதையெல்லாம் குழந்தைகளின் குறும்பு விளையாட்டாக நினைத்து இருக்க, சீதா வளரவும் அவளிடம் குறைகளை கண்டுபிடித்து திட்டுவது அதிகாரம் செய்வது என்றிருக்க, ஜெய்ராம், ஸ்ரீராம் மற்ற குழந்தைகளோடு இணக்கமாக விளையாடும் அளவிற்கு ராமுவிடம் ஒட்ட முடியவில்லை அவளால்.

 

ராமுவின் பன்னிரண்டு வயதில் குலோத்துங்கன் ஊர் திரும்பி விட, கோதாவரியும் ராமுவும் செல்ல வேண்டியது ஆனது. 

 

கோதாவரிக்கு தாய் வீட்டை பிரிவதை விட, சீதாவை பிரிந்து போவது தான் பெருங்கஷ்டமாக இருந்தது. பெற்றவள் மரகதமாக இருந்தாலும் சீதாவை அரவணைத்து வளர்த்தது இவர் தான். இத்தனைக்கும் சீதா முதல் முதலில் ‘ம்மா’ என்று அழைத்ததும் கோதாவரியை தான். 

 

அதீத அன்பை தம்பி மகளின் மீது வைத்து விட்டவர் பிரிய மனமில்லாது ‘சீதாவை தன்னுடன் அழைத்துச் செல்ல’ கேட்டுவிட, சங்கரன் உடனே சரியென்றுவிட, முனுசாமி மருமகளின் முகத்தை பார்த்தார். மரகதமும் எந்த சுணக்கமும் இல்லாமல் சம்மதம் சொன்னாள். கோதாவரி மனநிலை அவருக்கும் புரிந்து இருந்தது. சீதா தன்னைவிட அவருக்கு தான் செல்லம் என்பதும் அவர் ஒத்துக் கொண்டதே.

 

இந்த சேதி ராமுக்கு தான் எட்டிக்காயை கடித்தது போலானது. அவளை‌ தங்களுடன் அழைத்து செல்வதில் அவனுக்கு சிறிதும் உடன்பாடு இருக்கவில்லை. வீட்டிலும் அவன் மறுப்பை சொல்லிட பெரியவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 

அந்த நாளில் தான் முனுசாமி தாத்தா பேரன், பேத்தியுடன் கழனிகாட்டுக்கு வந்திருந்தார். அவர் வேலையில் கவனமாக, ராமு, சீதாவிடம் வந்தான்.

 

அந்த ஐந்து வயது சிறுமி அங்கிருந்த மூக்குத்தி பூக்களை சேகரித்துக் கொண்டிருக்க, “ஏய் நீ எங்க கூட வரகூடாது, அம்மாகிட்ட நீ வரமாட்டேனு சொல்லணும் சரியா?” அவனின் அதட்டல் தோரணையில் அரண்டு திரும்ப, அவளின் பிஞ்சு உள்ளங்கையில் சேமித்து இருந்த மூக்குத்தி பூக்களெல்லாம் மண்ணில் சிதறின.

 

அத்தனை நேரம் அவள் பறித்தவை எல்லாம் இப்போது மண்ணில். கோபம் வர, “என் பூவெல்லாம் கொட்டி போச்சு போ மாமா” என்று பேசிவிட்டாள்.

 

“பல்லெல்லாம் உடைச்சுடுவேன், என்னை எதித்து பேசற நீ?” இவன் எகிற,

“நீ திட்டுன, நான் அத்தம்மாகிட்ட சொல்லிடுவேன்” இவளும் பதில் பேச, “நான் எப்ப டீ உன்ன திட்டுன? இப்ப பொய் வேற சொல்ல ஆரம்பிச்சிட்டியா?” என்று எகிறினான்.

 

“நான் பொய் சொல்லல, இப்ப நீ தான திட்டின” அவள் ரோஷமாக பேச, “அப்படியே அறைஞ்சேனா பாரு, என்கிட்ட எதிர்த்து பேசுற வேல வச்சுகிட்ட உன்ன தூக்கி அந்த கிணத்துல போட்டுருவேன் ஜாக்கிரதை” அவன் வழக்கம் போல மிரட்டலில் இறங்க, அவள் முகம் சுருங்கினாள்.

 

“எங்க கூட ஊருக்கு வரமாட்டேன்னு நீ சொல்ற சரியா?” என்று அவன் உத்தரவிட, “நான் அத்தம்மா கூட தான் வருவேன், நீ வராத போ” என்றும் இல்லாமல் அவள் பிடிவாதமாக மறுத்து பேசவும், இவனுக்கு சுர்ரென்று கோபம் ஏற, அவளை தூக்கி அருகிருந்த கிணற்றில் பொத்தென்று போட்டிருந்தான்.

 

இவனும் இவன் நண்பர்களும் ஓயாமல் நீச்சலடித்து விளையாடும் அவர்கள் தோட்ட கிணறு என்பதால் ராமுக்கு அது பெரிதாக தோன்றவில்லை. ஆனால், நீச்சல் பழகாத குழந்தையான சீதா ஆழ கிணற்று நீரில் விழுந்து தத்தளித்து உச்சக்கட்ட பயத்தில் அரண்டு மிரண்டு போனாள். 

 

அவளின் வீரிட்ட சத்தம் கேட்டு முனுசாமியும் வேலையாட்களும் ஓடிவர, இவள் நீருக்குள் தத்தளிப்பதைப் பார்த்து சற்றே பயந்திருந்த ராமு நீருக்குள் குதிக்க, மற்றவர்களும் குதித்து குழந்தையை மீட்டனர். தாத்தாவின் கைகளில் பேத்தி மயங்கி கிடந்தாள். பயத்தில் தண்ணீரை அதிகம் குடித்து இருந்தாள் வேறு.

 

அவளுக்கு முதலுதவி செய்து, சுயநினைவுக்கு கொண்டு வர தாத்தாவும் மற்றவர்களும் பதறியதை பார்த்திருந்த ராமுக்கு, அப்போதுதான் தன் செயலின் வீரியம் புரிய குற்றவுணர்வில் மிரண்டு போனான்.

 

அன்றிரவே சீதாவுக்கு குளிர் காய்ச்சல் வந்திட, அவள் மீண்டுவர ஒருவாரம் ஆனது. அதன் வீரியத்தில் குழந்தை மிகவும் சோர்ந்து போயிருந்தாள். ராமுவிற்கு கூட அவள்நிலை பாவமாக தான் இருந்தது. மேலும் அவளை தள்ளி விட்டது தான் தான் என்று சொல்லிவிடுவாளோ என்று பயம் வேறு அவனைக் குடைந்து கொண்டிருந்தது.

 

“ஏய், நான் தான் உன்ன கிணத்துல தள்ளி விட்டேன்னு வெளியே சொன்ன, உன்ன தொலைச்சுடுவேன்” அவன் மிரட்ட, “நான் சொல்ல மாட்டேன்” அவள் தெளியாத பயத்துடன் சொல்ல, “ம்ம் குட் கேர்ள், எங்க கூட நீ ஊருக்கு வரமாட்டேன்னு சொல்லணும்” அவன் அதே மிரட்டல் தோனியில் கேட்கவும், “எனக்கு அத்தம்மா கூட இருக்கணும்…” அந்த சிறுமியால் அவரின் அன்பை இழக்க மனவரவில்லை.

 

“ஓ அப்படியா, என் பேச்சை மீறி நீ அங்க வந்தேன்னு வச்சுக்க, நடு ராத்திரில உன்ன தூக்கிட்டு போய் சுடுகாட்டுல விட்டுட்டு வந்துடுவேன்” அவளின் பயத்தினை அறிந்து இவன் மிரட்டி பார்க்க, சின்னவள் அதை நிஜமென்று நம்பி பயந்து நடுங்கி தான் போனாள்.

 

அந்த சிறுமியின் மனது அவன் உண்மையாகவே அப்படித்தான் செய்து விடுவான் என்றே நம்ப தான் முடிந்தது. அதோடு தன் அத்தம்மாவின் பிரிவையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதீத பய உணர்விலும், பாசத்தின் ஏக்கத்திலும் தனக்குள் ஒடுங்கி போனாள்.

 

நடு இரவின் கோர இருட்டில், சுடுகாட்டில் எரியும் பிணங்களுக்கும் கொள்ளிவாய் பிசாசுகளுக்கு நடுவே தான் நிற்பது போன்ற கனவுகள் தோன்ற தொடங்க, அரற்றி கத்தி கூச்சலிட்டு அழ ஆரம்பித்தாள். அடிக்கடி இதே கனவு திரும்ப திரும்ப வர, உறங்கினால் தானே கனவு வரும் என்று உறங்காமல் இருக்கவும் முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் அச்சிறுமி.

 

இடைவிடாத இந்த தாக்கத்தால் ராமுவை நேரில் பார்த்தாலே அதீத பயவுணர்வு எழும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாள். இவளின் உடல்நிலை கருத்தில் கொண்டு வேறுவழியின்றி அவளை இங்கேயே விட்டு, கோதாவரி, ராமு பயணப்பட, சீதாவுக்குள் ஆற்றாமை தாண்டி சிறு நிம்மதியும் கிடைத்தது என்னவோ உண்மை தான்.

 

பின்னரும் கூட இவள் கனவில் அரற்றுவது தொடர, கிராமத்து சடைமுடியிட்ட பூசாரியம்மாவை அழைத்துவந்து பூசை நடத்தினார்கள். அதன்பிறகு கொஞ்சகொஞ்சமாக அந்த கனவின் தாக்கத்தில் இருந்து வெளிவந்தாலும் ராமு மீது ஏற்பட்ட பயம் விலகுவதாக இல்லை. 

 

அவள் பருவ பெண்ணாக வளர்ந்த பின்னும் பகுத்தறியும் அறிவு வளர்ந்த பின்னரும் கூட, ஏனென்றே தெரியாமல் அவனை தனிமையில் சந்திக்க நேர்ந்தாலே அவளுள் உதறலெடுத்து பயம் சூழும் உணர்வில் மட்டும் மாற்றமில்லை. 

 

சீதா பூப்பெய்திய வேளையில் மாமன் முறையென்று அனைத்து சடங்குகளையும் ராமகிருஷ்ணன் தான் செய்தான். பூப்புனித நீராட்டு விழாவில் வழக்கம்போல பெண்ணின் திருமண பேச்சு வர, ‘சீதா எங்க வூட்டு மருமவதான், அவளை வேற வூட்டுக்கு நான் அனுப்ப மாட்டேன்’ கோதாவரி உறுதியாக சொல்லிவிட, அங்கிருந்த அனைவருக்கும் இந்த சம்பந்தத்தில் மகிழ்ச்சி தான். இருவரை தவிர.

 

“மா என்னால எல்லாம் அவள கட்டிக்க முடியாது” இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவனாய் ராமகிருஷ்ணன் தங்கள் வீட்டிற்கு வந்த மறுநொடியே தன் மறுப்பை உறுதியாக சொல்லிவிட்டான்.

 

“நம்ம சீதாக்கு என்ன கொற டா, நீ கட்டிக்க மாட்டேன்னு முரண்டு பிடிக்க?” கோதாவரி பதறி கேட்க, அவன் தனக்கு தோன்றிய அத்தனை குறைகளையும் அவள்மேல் ஏற்றி பட்டியலிட்டு சொல்லியும் கோதாவரி எதையும் ஏற்பதாக இல்லை. 

 

“கல்யாண பேச்சு பேசுற வயசு உனக்கு இன்னும் வரல, இப்ப படிக்கிற வேலைய மட்டும் நீ போய் பாரு, நடக்கும் போது நல்லதாவே நடக்கும்” என்று குலோத்துங்கன் சொல்லவும், “எனக்கு வயசில்லன்னு தெரிஞ்சும் என் கல்யாணத்தை முடிவு பண்ணி வச்சிருக்கீங்களே, இது உங்களுக்கு ஓவரா தெரியலையா? இப்ப‌ சொல்றது தான் எப்பவும், என்னால அவள கட்டிக்க முடியாது” ராமகிருஷ்ணன் உறுதியாக மறுத்திருந்தான். பெரியவர்களும் அந்த பேச்சை ஆறபோட்டனர்.

 

சொந்தபந்தங்களின் விசேஷ நிகழ்ச்சிக்காக தாயும் மகனும் தென்னூர் கிராமத்து பேருந்தில் வர, அதே பேருந்தில் சீதாவும் தனியாக ஏறினாள். அங்கு கோதாவரியை பார்த்ததும் அப்பட்டமான சந்தோச ஆர்பாட்டத்தோடு கோதாவரி அருகில் வந்து அமர்ந்து அவள் வளவளக்க, பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராமகிருஷ்ணன் இவளை தான் கவனித்திருந்தான்.

 

பாட்டு பயிற்சி வகுப்பு போய் வருவதாக சொன்னவள், பாட்டில் தன் ஈடுபாடு பற்றியும் தன் பாட்டை கேட்டு வந்த பாராட்டை பற்றியும் உற்சாகம் ததும்ப ஒரே மூச்சில் பேசியவளை சற்று திகைத்து தான் பார்த்திருந்தான்.

 

‘இவளுக்கு பாட்டு பாடணும்னு என்ன கேடு வந்தது’ அவனுக்கு தோன்றியது அதுதான். அவளுக்கு பாட்டின் மேலிருந்த ஈடுபாட்டை அவள் பேச்சின் வழி அறிந்தும் இது தேவையற்ற வேலை இவளுக்கு என்று தான் தோன்றியது அவனுக்கு.

 

அதே எண்ணத்தோடுதான் சங்கரனிடம் அவள் பாட்டு கற்று கொள்வதில் தன் விருப்பமின்மையை தெரிவித்தான். “ஏன்டா எடுத்த எடுப்புலயே மறுப்பு சொல்லுற?” கோதாவரி தாங்காமல் கேட்டுவிட,

 

“எனக்கு தான அவள பேசி இருக்கீங்க, நான் கட்டிக்க போறவ பாட்டு, கூத்துன்னு சுத்தரதுல எனக்கு சுத்தமா விருப்பம் இல்ல” ராமகிருஷ்ணன் பதிலில் அங்கிருந்த அனைவரும் வாயடைத்து விட்டனர்.

 

கோதாவரிக்கும் ஆனந்த திகைப்பு தான். நேற்று வரை சீதா வேண்டாம் என்றவன், இப்போது மனம் வந்து சம்மதம் தெரித்துவிடவே அந்த சந்தோசத்தில் மகனிடம் மேலும் சீதாவின் பாட்டு வகுப்புக்காக வற்புறுத்த மறந்தார்.

 

இதைக்கேட்ட சீதாவிற்கு தான் அதிர்ச்சியும் பயமும் ஒன்றாக வந்தது. ராமகிருஷ்ணன் உடன் திருமண பேச்சு வரும்போதே அத்தையிடம் சொல்லிவிட்டாள் தான். ‘எனக்கு மாமாவ பார்த்தாலே நடுங்கி, பயந்தான் வருது அத்தம்மா,‌ என்னால எப்படி மாமாவ‌ கட்டிக்க முடியும்? இதெல்லாம் வேண்டாவே’ என்று.

 

‘அப்படி சொல்லாத சீதாம்மா, சின்ன வயசுல உன்னய நானே தூக்கிட்டு போய் வளர்த்துக்கணும்னு ஆச பட்டேன் அதான் முடியாம போச்சு, இப்ப மருமவளா எங்கூடவே வச்சு பார்த்துக்கணும்னு ஆச படுறேன். எங்கூட வருவல்ல தங்கம்!’ அவர் இத்தனை ஆசையோடு கேட்டபோது மறுத்து பாதகமாக சொல்ல மனம் வரவில்லை சின்னவளுக்கு.

 

‘ராமு கோவக்காரன்னு தான பயப்படுற சீதா, கல்யாணத்துக்கு அப்புறம் அடங்கி போவாக, நீ விசனபடாத, எல்லா ஆம்பளங்களும் இப்படித்தேன் அதட்டி உருட்டுவாங்க, அப்புறம் பெட்டி பாம்பா அடங்கிடுவாங்க’ மரகதம் மகளுக்கு சொல்ல, அதை ஆமோதித்து சொன்ன கோதாவரியும் சிரித்து விட்டார்.

 

அந்த ரெண்டுங்கெட்டா மனநிலையில், அம்மாவும் அத்தையும் சொல்வதை நம்பி தலையாட்டிக் கொண்டாள். 

 

ஆனாலும் அவளுக்கு ராமகிருஷ்ணன் மீதான பயமே விஞ்சி நின்றது. அவனுக்கு தன்மீது இருக்கும் வெறுப்பை அறிந்திருந்ததால் அவன் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டான் என்று எண்ணிக் கொண்டாள்.

 

இப்போது ராமகிருஷ்ணன் தங்கள் திருமணத்திற்கு சம்மதமாக பேசியது அதிர்ச்சி என்றால், தன்னை பாட வேண்டாம் என்று சொன்னது பேரதிர்ச்சி தந்தது அந்த பேதைக்கு.

 

இதுவரை சீதாவின் விருப்பங்களுக்கு வீட்டில் மறுப்பு வந்ததில்லை. இவளும் அவசியமற்றவற்றில் மனதை செலுத்தியதும் இல்லை. ஆனால் பாட்டு அவளின் தீரா கனவு. பாடும்போது அவளுக்குள் அத்தனை ஆத்மார்த்தமான நிறைவைத் தரும் உணர்வை எப்படி இழப்பது?

 

தாங்க முடியவில்லை அவளால். அம்மா, அப்பாவிடம் பேசினாள், அத்தை, மாமாவிடம் கூட கெஞ்சினாள். அனைவரும் ராமகிருஷ்ணனை கைகாட்ட வேறுவழியின்றி அவனிடமும் பேசினாள்.

 

அவனை நேரில் பார்த்தால்‌ தானே தனக்குள் இந்த பயவுணர்வு, என்று யோசித்து தொலைப்பேசியில் பேசினாள். ஆனாலும் அவன் முடிவில் பிடிவாதமாக இருக்க, இவள் மனம் உடைந்து தான் போனது.

 

“ஒரு மண்ணும் வேணா, என் பொண்டாட்டி எனக்கு மட்டும் பாடினா போதும், ஊருக்கெல்லாம் கச்சேரி வைக்கணும்னு தேவையில்ல புரியுதா?” ராமகிருஷ்ணன் முடிவாக முடித்திருந்தான்.

 

சீதா அதற்கு மேல் அவனிடம் கெஞ்சவில்லை. கேட்கவில்லை. தன் விருப்பமும் பாட்டின் மீது தனக்கு இருக்கும் பற்றுதலும் தெரிந்த பின்னும் தன் பிடிவாதமே பெரிதென்று மறுப்பவனிடம் வேறென்ன சொல்லி கேட்க, அந்த இளங்குறுத்தின் மனம் அப்போதே விட்டிருந்தது.

 

“ஒரு விசயம் கேக்கணும் மாமா?”

 

“ம்ம்”

 

“உங்களுக்கு தான் என்னய பிடிக்காதில்ல, எப்படி கட்டிக்க சம்மதம் சொன்னீங்க?” அவள் மனதில் அரித்திருந்த கேள்வியை கேட்க,

 

“என்‌ அம்மாவுக்காக தான்” அவன் பதில் சட்டென வந்தது. “நாளைக்கு நான் வேற எவளாவது ஒருத்திய கட்டிட்டு தான் ஆகணும், அதுக்கு அம்மாவுக்கு பிடிச்ச மருமக உன்ன கட்டிகிட்டாலும் ஓகேன்னு தோணுச்சு”

 

நீயோ, வேறோ எனக்கு இரண்டும் ஒன்று தான் என்ற அவனின் பேச்சு என்னவோ போலானது அவளுக்கு.

 

“அப்புறம் உன்னோட இந்த பட்டிக்காட்டு தனமெல்லாம் எனக்கு செட்டாகாது. இனி எனக்கு ஏத்த மாதிரி உன்ன மாத்திக்க பாரு ஓகே”

 

நிச்சயம் இது தானென்ற திமிர் பேச்சு தான். அதற்கு பதிலடியாக பேச இவள் நாக்கு துடித்திருக்க, “அம்புட்டு விசனப்பட்டு நீங்க ஒண்ணும் என்னை கட்டிக்கிட வேணாம், எனக்கும் உங்கள கட்டிக்கிற விருப்பம் இல்ல” ஏதோ உந்துதலில் பேசிவிட்டாள்.

 

“வந்தேன் பல்லெல்லாம் கொட்டி போகும், உன் மூஞ்சிக்கு வேற எவன் கிடைப்பானாம். ஸ்கூல் போற வயசுல பேச்சை பாரு, மறுபடி எங்கிட்ட இப்படி எடுத்தெறிஞ்சு பேசின, மவள என்ன பண்ணுவேன்னு தெரியாது எனக்கு ச்சே” அவன் கத்திவிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.

 

தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் என்ற பெருங்கோபம் அவனுக்குள். அதன் பிறகு தான் தன் விருப்பங்களை ஒவ்வொரு விசயத்திலும் அவள் மீது திணிக்கத் தொடங்கினான்.

 

அவளை களிமண்ணாக எண்ணி தன் விருப்பத்திற்கு வடிவமைக்க நினைத்தவன் அவளை ஒரு பெண்ணாய் புரிந்து கொள்ள தவறி இருந்தான். அங்கேயே ஆண் மகனாய் தோற்றும் இருந்தான்.

 

சீதாவிற்கு தன்மீது இருக்கும் பயவுணர்வை கூட இதுவரை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

 

இப்போதைக்கு திருமணம் இல்லை என்று சீதா தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாள். கூடுமானவரை தன் எண்ணங்களை ராமகிருஷ்ணன் இடமிருந்து விலக்கி கொண்டாள். இயற்கையிலும் பாட்டிலும் படிப்பிலும் தன்னை ஆழ்த்திக் கொண்டாள்.

 

மாமன் மகள் என்ற முறையில் சீதாவிடம் உரிமை எடுத்துக் கொண்டான் ராமகிருஷ்ணன். எல்லாம் எப்படியோ கடந்து கொண்டிருந்தது. ஸ்ரீராம் வந்த பிறகு இங்கே சிற்சில மாற்றங்கள் தோன்றி இப்போது பெரிதாக எழுந்து நிற்கிறது ராமகிருஷ்ணனை பொருத்தவரை.

 

மனித மனம் ஒரு குரங்கு என்பர். பெரும்பாலும் ஒரே நிலையில் நிலைத்து நிற்பதில்லை. மாற்றிக் கொண்டே இருக்கும்.

 

ஸ்ரீராம், சீதாவின் மீது ராமகிருஷ்ணனுக்கு சந்தேகம் எழவில்லை தான், அவர்களை பற்றி தவறாக பேசியவர்களையும் அடித்து நொருக்கிவிட்டு தான் வந்திருந்தான். ஆனால் சிறிது நேரத்தில் இப்படியும் இருக்குமோ என்று அவனுக்குள் ஒரு சந்தேகப்பொரி கிளம்பியதும் கொதித்தெழுந்தவனாய் கண்மண் தெரியாமல் பேசிவிட்டிருந்தான்.

 

கோபம், ஆத்திரம் அவனின் பொறுமையைப் பறக்கவிட்டிருந்தது. அங்கிருந்து கோபமாக சென்ற பின்னர் கூட, எப்படியும் தன்னை அவர்கள் சமாதானபடுத்த வருவார்கள் என்று தான் எண்ணிக் கொண்டான். யார் வந்து கெஞ்சினாலும் சீதா தனக்கு வேணாடாம் என்ற வரட்டு முடிவிற்கும் வந்திருந்தான். அதனாலேயே யாரின் அலைப்பேசி அழைப்பையும் ஏற்காமல் தவிர்த்தான்.

 

இந்நிலையில் சீதா, ஸ்ரீராம் திருமணம் சிலநாட்களில் என்ற சேதி அவனை எட்ட முதலில் அதிர்ந்து தான் போனான். இப்படி ஒரு திருப்பத்தை ராமகிருஷ்ணன் நிச்சயம் எதிர் பார்க்கவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

 

வருட கணக்கில் தனக்கு உரிமையானவள் என்று எண்ணி இருந்தவளை வேறு ஒருவனிடம் கொடுக்க அவன் தன்மானமும் பிடிவாதமும் இடந்தரவில்லை. துணிந்து தன் சொந்தங்கள் மீதே பஞ்சாயத்தைக் கூட்டி விட்டான்.

 

********

 

வருவாள்…