கரிசல் காட்டுப் பெண்ணே 23

கரிசல் காட்டுப் பெண்ணே 23

 

மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் பஞ்சாயத்து கூடியது சங்கரன் வீட்டில். 

 

ஆம், பெண்ணைப் பற்றிய வழக்கு, ஒரு குடும்பத்திற்குள்ளான வழக்கு என்பதால், பஞ்சாயத்து தலைவர் உட்பட நான்கு பெரிய தலைகளும், வழக்குக்கு சம்பந்தமானர்வர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அங்கு கூடி இருந்தனர்.

 

அனைத்து முகங்களும் கவலையையும் வருத்தத்தையும் பிரதிபலிக்க, ஊர் தலைவர் முன்பு இராமகிருஷ்ணன் அமர்ந்திருக்க, எதிர்புறம் சங்கரன் உட்கார்ந்து இருந்தார். மற்றவர்கள் அவர்களைச் சுற்றி நின்றிருக்க விசாரணை ஆரம்பமானது.

 

“உம்ம பொண்ணு சீதாவ, உம்ம அக்கா மவன் ராமகிருஷ்ணனுக்கு நிச்சயம் செஞ்சிபுட்டு, இப்ப அவசரமா வேற இடத்துல கட்டிக்கொடுக்கறதா இவரு பிராது கொடுத்து இருக்காரு. தனக்கு நியாயம் வேணும்னு கேட்டு இருக்காரு நீ என்னப்பா சங்கரா சொல்ற?” பஞ்சாயத்து தலைவர் கேட்க,

 

“நிசந்தானுங்க, என் பொண்ணு எங்கக்கா வூட்டுக்கு மருமவளா போவனும் கொள்ள ஆசையோட தான் இவருக்கு பேசி முடிச்சோம். ஆனா இவக, எங்க முன்னாடியே எங்க பொண்ண கைநீட்டிபுட்டாரு, எங்க மனசு ஒம்பல, என்ன இருந்தாலும் பெத்தவங்க இல்ல அதான், எங்க பொண்ணுக்கு வேற இடம் பார்த்தோம்” சங்கரனும் நேரடியாகப் பதில் தந்தார்.

 

“ஏம்பா, தாலி கட்டின பொண்டாட்டிய கூட மூணாம் மனுசங்க முன்னாடி கையோங்க கூடாது. நீ என்னப்பா வகைதொகை இல்லாம பெத்தவங்க, பெரியவங்க முன்னால அந்த புள்ளைய போட்டு அடிச்சிருக்க?” சற்று காரமாக ராமகிருஷ்ணனிடம் கேள்வி பாய,

 

“தப்பு தான், ஏதோ ஆத்திரத்தில அடிச்சிட்டேன் தான். அதுவும் என் சீதான்ற உரிமையில தான் அவசரப்பட்டு கையோங்கிட்டேன். அதுக்காக எத்தனை முறை வேணாலும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். இந்த ஒரு காரணத்தை வச்சு மட்டும் மாப்பிள்ளய மாத்தறது நியாயமாங்க” அவனும் அதே வேகத்தோடு பதில் தந்தான்.

 

“சரிதானே பா, சொந்த மாமன் மவ, கட்டிக்க போறவ வேற, உரிமைய காட்டுறேன்னு கையோங்கி இருக்காரு. இப்ப தான் தப்ப உணர்ந்து மன்னிப்பு கேக்குறேனு சொல்லுறாகல்ல, இன்னும் என்னய்யா வேணும்?” அந்த கேள்விக்கு சங்கரன் பதில் சொல்லும் முன் கோதாவரி முந்திக் கொண்டார்.

 

“ஐயா, இவக எங்க வூட்டு பொண்ண அடிச்சது பிரச்சனை இல்லிங்க, எதுக்காக அடிச்சாக என்றது தான் பிரச்சனை! கட்டிக்க போறவ மேல உரிமைய மட்டும் காட்டினா போதாது, அவளுக்கான தன்னோட கடைமையையும் புரிஞ்சி இருக்கணும்”

 

“என்னம்மா இப்ப நான் பெருசா கடமை தவறிட்டேன்னு குற்றம் சொல்றீங்க? பெத்த மகன் என்னைவிட உங்களுக்கு அவ பெருசா போயிட்டாள்ல?” ராமகிருஷ்ணன் ஆதங்கமாக கேட்க,

 

“நம்ம குடும்பத்துல பொறந்த பொட்ட புள்ளங்கள சாமியா பாப்போம் டா, என்னை அப்படி பார்த்தாங்க, இப்பவும் பாக்கறாங்க, சீதாவ நாங்களும் அப்படி தான் பாக்கறோம், நீ எங்க சாமிக்கு மரியாதை கொடுத்தியா?”

 

“ஓஹோ இவளுக்கு மரியாதை ஒண்ணு தான் குறைச்சலா போச்சா? அழைச்சிட்டு வாங்க உங்க மருமகள, இங்கேயே கற்பூரம் ஏத்தி பூஜை பண்றேன் போதுமா?” கடுப்பாகவே பதில் பேசினான்.

 

“தம்பி குறுக்கால பேசாதீங்க, நாங்க தான் விசாரிச்சுட்டு இருக்கோம் இல்ல” என்ற பெரியவர், “நீங்க சொல்லுங்க மா, எதுனால பிரச்சனை வந்தது?” அவர் கேள்வி கோதாவரியிடம் நின்றது.

 

அவர் சற்று தன்னை சமாளித்து கொண்டு, “எவனோ வேலவெட்டி இல்லாத எடுபட்ட பய, எங்க வூட்டு பொண்ண, பெரிய வூட்டு புள்ளயோட சேர்த்து பேசி இருக்கானுங்க, இவன் ரோஷமுள்ள ஆம்பளன்னா பேசினவனுங்க நாக்க அறுத்தெறிஞ்சுட்டு வந்திருக்கணும்! அதை விட்டு, எங்க கண்ணு முன்னாலயே சீதாவ சந்தேகப்பட்டு தப்பா பேசி, கையும் நீட்டினான். என் பெத்த வயிறு பத்தி எரியுது இவன் செஞ்ச காரியத்தால” கோதாவரி ஆவேசமாக பேசி கலங்கி விட்டார்.

 

“ஏம்பா ராமகிருஷ்ணா, நீ அந்த பொண்ணு மேல சந்தேகபட்டு பேசித்தான் அடிச்சியா?” தலைவர் கேட்க,

 

“நீங்க வேற, அப்படி தப்பா சந்தேகம் வந்திருந்தா இப்ப ஏன் கட்டிக்கணும்னு வந்து பஞ்சாயத்து வைக்க போறேன்? அவனுங்க பேசினதை கேட்ட ஆத்திரத்துல ஏதோ பேசிட்டேன். தப்புதான். அதுக்காக ரத்த சொந்தம் என்னை கழிச்சு கட்டிட்டு இவனை செர்த்துப்பாங்களாமா?” அங்கே நின்றிருந்த ஸ்ரீராமை கைக்காட்டினான்.

 

“சொல்லுங்க ஸ்ரீராம் தம்பி, இவருக்கு நிச்சயிச்ச பொண்ண நீங்க கட்டிக்க முன்வந்து இருக்கிறது எந்த விதத்துல நியாயம்?” அவர் கேள்வி ஸ்ரீராமிடம் திரும்பியது.

 

“நேத்து, என்னையும் சீதாவையும் நம்பாம தப்பா பேசி கேவலபடுத்துனான். இன்னைக்கு வந்து, எங்கமேல தப்பில்லன்னு நம்புறதா சொல்லி மன்னிப்பு கேட்கிறான்! நாளைக்கு மறுபடி மனசு மாறி உங்கமேல தப்புதான்னு பழியை போட்டா என்ன செய்ய?

 

நாங்க ரெண்டு பேரும் சாதாரணமா தான் பேசி, பழகினோம். அதையும் இங்க வேற மாதிரி திரிச்சு விட்டுட்டாங்க, இந்த பிரச்சனையில ‘இந்த கல்யாணம் நடக்காதுன்னு’ கத்திட்டு வெளிய போனது அவன். பொண்ணோட கல்யாணம் நிக்க கூடாதுன்னு என்னை கட்டிக்க கேட்டது இவங்க, நாங்க ரெண்டு பேரும் மனசு ஒத்து பேசி தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருக்கோம். இன்னும் ரெண்டு நாள்ல எனக்கும் சீதாக்கும் கல்யாணம், பெரியவங்க நீங்க எங்களுக்கு ஆசி கொடுக்கணும்”

ஸ்ரீராம் எந்த பதட்டமும் இன்றி நிதானமாக தன்நிலையை விளக்கினான்.

 

“ஸ்ரீராம் தம்பி சொல்றதும் நியாயம் தான பா, நீங்க பாட்டுக்கு நினச்சு நினச்சு மாத்தி மாத்தி பேசிட்டு கிடந்தா, அந்த புள்ளையோட வாழ்க்கை என்னப்பா ஆகறது?” ஒருவர் கேட்க,

 

“அன்னிக்கு நீங்க தான் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டு போயிருக்கீங்க, இப்ப கட்டிக்கிறேன்னு ஒத்த கால்ல நிக்கறீங்க, நாளைக்கு கட்டிட்டு வாழ மாட்டேன்னு சொன்னா என்னாகிறது பா?” மற்றொரு தலையும் பேச,

 

“முதல்ல நீங்க ஒத்த முடிவுல நிலையா நின்னிங்கனா தான, நாங்களும் எடுத்து பேச முடியும்” தலைவரும் கைவிரித்தார்.

 

ராமகிருஷ்ணன் முகம் இருண்டது. அவனால் இப்போது சீதாவை விட்டுவிட முடியாது. இது அவனின் ஈகோ பிரச்சனை. “அடிச்சாலும் புடிச்சாலும் சீதா என் மாமா பொண்ணு, அவள தான் என்னோட வருங்கால மனைவியா இந்த ஆறு வருசமா நினச்சு இருந்தேன். சும்மா இருந்தவன் மனசுல ஆசைய வளர்த்து விட்டுட்டு இப்ப கட்டித்தர மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்னை பார்த்தா எப்படி தெரியுது இளிச்சவாயன் மாதிரியா? இல்ல கேன கிறுக்கன் மாதிரியா?” நிதானமாக ஆரம்பித்து, எரிச்சலாக முடித்தான்.

 

சற்று நேரம் அங்கே சலசலப்பு ஏற்பட்டது. நான்கு பெரிய தலைகளும் தங்களுக்குள் சிறுகுரலாக விவாதித்து கொண்டனர். கூடியிருந்தவர்கள் மனநிலையையும் தவிப்பாகவே இருந்தது.

 

“இங்க ஒண்ணுக்குள்ள ஒண்ணா நிக்க வேண்டியவங்களே எதிரெதிரா நிக்கறீங்க, அதால வீண் பேச்சு வளர்க்காம பொண்ணுகிட்டயே யாரை கட்டிக்க சம்மதம்னு கேட்டு முடிவெடுக்கலாம். சங்கரா புள்ளய கூப்பிடு பா” என்று உத்தரவிட்டார்.

 

மரகதம் சீதாவை அழைத்துவர, அவள் சங்கடமாக அவர்கள் முன்வந்து நிற்க, “அம்மாடி சீதா, இங்க நடந்த பேச்ச நீயும் கேட்டிருப்ப, இப்ப நீ சொல்றது தான் முடிவு. உன் அத்தை மவன் ராமகிருஷ்ணன், பெரிய வீட்டு புள்ள ஸ்ரீராம், இவங்க ரெண்டு பேருல யார கட்டிக்க உனக்கு விருப்பம்னு தயங்காம, சங்கடபடாம உண்மைய சொல்லுமா?” நேரடியாக தலைவர் கேட்கவும் அந்த சூழல் மிக கசப்பானதாக தோன்றியது அவளுக்கு.

 

அவள் பார்வை ராமகிருஷ்ணன் புறம் தான் திரும்பியது. அவன் பார்வையில் வெளிப்படையான எச்சரிக்கை இருந்தது. ஸ்ரீராமை பார்க்க, அவன் இதமாய் இமைமூடி திறந்து ஆறுதல் காட்டினான்.

 

சீதாவின் பதில் ஸ்ரீராமிற்கு நன்றாகவே தெரியும் என்றாலும் எல்லோரின் முன்னிலையிலும் அவள் உதிர்க்கும் பதிலை சற்று குறுகுறுப்பாக எதிர்பார்த்து நின்றிருந்தான்.

 

“தைரியமா சொல்லுமா” தலைவர் மறுபடி கேட்க,

 

“நான் சின்னாவ தான் கட்டிக்க ஆசபடறேன்” என்று உறுதியாக சொன்னவள், “ஆனா… மாமா கோவம் குறைஞ்சு… எங்க கல்யாணத்துக்கு முன்ன நின்னா சந்தோசபடுவேன்” திக்கி திணறி சீதா சொல்லி முடித்திருக்க, இருக்கையில் இருந்து வேகமாக எழுந்து விட்டான் ராமகிருஷ்ணன்.

 

“அப்படியே ஒண்ணு விட்டேனா பாரு பல்லெல்லாம் தட்டி போயிடும், உங்க ரெண்டு பேரு கல்யாணத்துக்கு நான் முன்ன நிக்கணுமா? என் நெத்தியில என்ன மாங்கா மடையன்னா எழுதி இருக்கு. ச்சே” அதே வேகத்தில் அங்கிருந்து வெளியேற,

 

“எப்பா, ராமகிருஷ்ணா… பஞ்சாயத்தை முழுசா முடிச்சுட்டு போப்பா” தலைகளில் ஒருவர் குரல் கொடுக்க, “போங்கயா நீங்களும் உங்க பஞ்சாயத்தும்” அவன் திரும்பி பார்க்காமல் வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு கிளம்பி இருந்தான்.

 

“சரி சரி, குடும்பம்னா சண்ட சச்சரவு வரது போறது தான் யா, கோபம் தீர்ந்த பின்ன அந்த புள்ள உங்க வீட்டுக்கு வராம தான் போகுமா? நாளபின்ன நீங்க விசேசத்துல கலந்துக்காம தான் போவீங்களா? எல்லா நல்லதா தான் நடக்கும். சும்மா மனச போட்டு கசக்காம கண்ணால வேலைய கவனிங்க போங்க” என்று தலைவர் சொல்லி எழ, சங்கரன், பரமேஸ்வரன் வாசல் வரை வந்து அவர்களுக்கு நன்றி சொல்லி வழியனுப்பி விட்டு திரும்பினர்.

 

முகம் வாட அங்கேயே நின்றிருந்த சீதாவின் அருகே வந்த ஸ்ரீராம், “ஃபீல் பண்ணது போதும் மேடம், முதல்ல என் பேர் என்னனு கொஞ்சம் சொல்றீங்களா?” என்றான்.

 

அவன் பேச்சு தோரணை மாறி தெரிய திரும்பியவள், “ஏன் சின்னா, ஸ்ரீராம் தான உன் பேர்ர்ர்…” என்றவளுக்கு அப்போதுதான் புரிய, தன் சொதப்பலை நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

 

அவளின் நெற்றியை தட்டியவன், “இப்படியா சொதப்பி வைப்ப, நீ சின்னானு சொன்னதும், அந்த பெரிய தலை ‘இது யாருயா புதுசா சின்னானு?’ கிசுகிசுப்பா கேட்டு வச்சாரு, மாமா தான் அவசரமா, அது என் பேருன்னு சொல்லி புரியவச்சாரு” அடக்கிய சிரிப்புடனேயே கடிந்து கொண்டான்.

 

இவள் முகத்தில் அசடு வழிய, “சாரி சின்னா, பழக்கதோஷத்துல உளரி வச்சுட்டேன்” தவிப்பாக சொன்னாள். 

 

“உன் சாரி எல்லாம் இப்ப செல்லாது, வேற தான் வேணும்?” ஸ்ரீராம் குறும்போடு கேட்டு வைக்க, இவளுக்குள் தடதடக்க, தலைக்கவிழ்ந்தாள்.

 

அவன் மேலும் ஏதோ பேச போக, “ம்க்கும் மாப்பிளை, மீதி எல்லாம் கண்ணாலத்துக்கு அப்புறம் பேசுவீங்க, இப்ப நடைய கட்றீங்களா?” உறவு பெண் ஒருத்தி விரட்ட, “ஏன் க்கா, ரெண்டு வார்த்தை கூட பேச கூடாதா?” அவன் தவிப்பாக கேட்க, “ஒத்த வார்த்தை கூட பேச கூடாது. எல்லாம் கல்லாணத்துக்கு அப்புறம் தான் கிளம்புங்க கிளம்புங்க” அவரின் பேச்சோடு சிரிப்பலைகளும் எழ, இனி முடியாது என்று நினைத்தவன் சீதாவிடம் பார்வையால் விடைப்பெற்று கிளம்பினான்.

 

சின்னாவின் முகமலர்ச்சி, பாப்புவின் முகத்திலும் வந்து ஒட்டிக் கொள்ள, திரும்பியவள், அங்கே உடைந்து போய் உட்கார்ந்து இருந்த கோதாவரி, குலோத்துங்கனை பார்த்ததும் மனம் கனத்தாள்.

 

“சாரி அத்தைம்மா, சாரி மாமா” சீதா அவர்களிடம் மன்னிப்பை வேண்ட, குலோத்துங்கன் ஏதும் பேசாமல் கிளம்பி விட்டார். கோதாவரியும் ஏதும் பேசவில்லை. சீதாவை அருகழைத்து அமர்த்திக் கொண்டார்.

 

“நீ விசனபடாத சீதாம்மா, உன்‌ மாமனுக்கு நாங்க இருக்கோம். அவன் ஆசபடுற மாதிரி பொண்ணா பார்த்து அவனுக்கும் சீக்கிரம் கண்ணாலத்தை முடிச்சிடலாம்” என்று அவளை தேற்றியவர், தனக்கும் அதே சமாதானத்தைச் சொல்லிக் கொண்டார்.

 

**********

 

வருவாள்…