கரிசல் காட்டுப் பெண்ணே 24 pre final

கரிசல் காட்டுப் பெண்ணே 24 (ஈற்றயல் பதிவு)

 

உயர்ந்த கோபுரம் தாங்கிய, சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்து தூண்களால் தாங்கி நிற்கும் பழமை சிறப்பு வாய்ந்த கோயில். பார்த்ததும் மனதில் பிரம்மாண்டமும் பக்தியும் நிறைப்பதாய்.

 

பெரிய குடும்பத்தின் திருமணங்கள் வழிவழியாய் இந்த கோயிலில் நடைபெறுவதே வழக்கம்.

 

அவ்வழக்கப்படியே ஸ்ரீராம், சீதாமஹாலட்சுமி திருமணமும் இக்கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் ஏற்பாடாகி இருந்தது. 

 

நெய்த பச்சை‌ தென்னங்கீற்றுகளாலும் வண்ண மலர் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த கல்மேடையில் அமைந்த மணமேடையில், சூரியன் துயில் கலைந்த விடியற்காலை வேளையில், வெள்ளை பட்டுவேட்டி சட்டையில் ஸ்ரீராம் காத்திருக்க, குங்குமநிற முகூர்த்த சேலையில் அணிமணிகள் நிறைய அலங்கார கன்னிகையாக தளிர்நடைப்பழகி வந்து அவன் அருகமர்ந்தாள் சீதாமஹாலட்சுமி.

 

ஐயர் மந்திரம் ஓத, கெட்டிமேளம், நாதஸ்வரம் மங்கல இசை ஒலிக்க, உற்றார், சுற்றார் அர்ச்சனை தூவ, பெண்ணவள் கழுத்தில் பொன்தாலி பூட்டி தன் பெயரோடு அவள் பெயரை இணைத்துக் கொண்டான் ஸ்ரீராம்.

 

பத்து மாதங்களுக்கு முன்பு, தன் கிராமத்திற்கு வரும்போது இங்கு தன் வாழ்வில் இத்தனை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று ஸ்ரீராம் சிறிதும் நினைத்திருக்கவில்லை. எண்ணி இரண்டு வாரம் முன்பு வரை, சீதாவும் கூட இந்த தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்த்திருக்கவில்லை.

 

ஆனாலும் இன்று, இக்கணத்தில் நடந்தே விட்டது. இருவரின் மனதும் மகிழ்ச்சியை தாண்டிய ஒருவித நிம்மதியில் நிறைந்திருந்தது.

 

முறைபடி திருமண சடங்குகள் அனைத்தும் முடிய, மணமக்கள் கருவறையில் தூங்கா மணிவிளக்கின் ஒளியில் ஒளிர்ந்த இறைவனின் தரிசனத்தை மனதார வணங்கி வந்தனர்.

 

திருமண விருந்து கோவில் பிராகாரத்தில் தடபுடலாக ஏற்பாடாகி இருந்தது. திருமண விருந்தினர்களோடு, கோயில் பக்தர்களுக்கும் அறுசுவை விருந்து படைக்கப்பட்டது. 

 

அவசர கல்யாணம் தான். ஆனாலும் பெரிதாக ஆர்பாட்டம் இன்றி நடந்து முடிந்திருந்தது. இத்திருமணத்தில் சிலருக்கு சுணக்கம், சிலருக்கு வருத்தம், சிலரிடம் எதிர்ப்பும் கூட. அத்தனையும் தாண்டி திருமணம் முடிந்திருக்கவே ஒருவித ஆசுவாசமான நிம்மதி தோன்றியது குடுப்பத்தினருக்கு. 

 

அந்த நிம்மதியில் ஊருக்கு திரும்பும் வழியில் காரில் பெரியவர்கள் கண்ணயர்ந்து விட, ஸ்ரீராம் தன்னருகே அமர்ந்திருந்த சீதாவின் கைப்பற்றி உரிமையோடு விரல்கள் கோர்த்துக் கொண்டான். அவளும் மறுக்கவில்லை, மனம் நிறைந்து அவன் தோளில் தலைசாய்த்து இமைமூடிக் கொண்டாள்.

 

“தூக்கம் வருதா பாப்பு?” ஸ்ரீராம் கேட்கவும் அவள் நிமிராது இல்லையென தலையசைக்க, இவன் தலைசாய்த்து அவளின் முகம் பார்க்க முயன்று, “அப்ப வெக்கம் வருதா?” என்றான்.

 

நிமிர்ந்து அவன் முகம் நோக்கியவள் இல்லையென தலையசைத்து, “சந்தோசமா இருக்கு சின்னா, சொல்ல தெரியல… தேங்க்ஸ்” என்று இறுக இமைகள் மூடி அவன் தோள் சாய்ந்து கொண்டாள். அவன் முகத்தில் மென்மையாய் புன்னகை விரிய, அவள் விரலிடுக்கில் அழுத்தம் கூட்டினான்.

 

சீதாவை கல்யாணம் செய்து கொள்ளும்படி கோதாவரி பெரியம்மா கேட்ட அந்த நொடியில் அவனுக்கு நிச்சயமாக மறுக்க தோன்றவில்லை. அதையும் விட நிச்சயமாக சொல்லுவான் அதற்குமுன் சீதா மீது வேறு எண்ணம் அவனுக்கு தோன்றியதில்லை என்று. 

 

பின் எப்படி கேட்டவுடன் தன் மனம் சீதாவை சிறு மறுப்பும் இன்றி இயல்பாக ஏற்றுக் கொண்டது? ஒருவேளை என்னையும் அறியாமல் பாப்புவை என் மனம் நேசித்திருக்குமா? 

 

ஒருவேளை அப்படி சீதாவின் மீது நேசம் இருந்து இருந்தால், ராமகிருஷ்ணனை பார்த்து இவனுக்கு பொறாமை தோன்றி இருக்குமே! அப்படி தோன்ற வில்லையே, இவர்கள் திருமணம் முடிய முழுமனதோடு எல்லா முயற்சிகளையும் இவனே தானே எடுத்தான்! என்று யோசித்தவனுக்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை.

 

தான் தொழில் தொடங்கி அதில் ஓரளவு நிலைத்தப்பிறகே தன் திருமணத்தைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று உறுதி ஏற்றிருந்தான். குறைந்தது அதற்கு நான்கு வருடங்களாவது ஆகுமென கணக்கிட்டு இருந்தான். ஆனால் இப்போது! தன் உறுதியை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு வெறும் இரண்டே வாரங்களில் திருமணத்தை முடித்திருக்கிறான். இதில் ஸ்ரீராமிற்கு சிறு வருத்தம் இருக்கவே செய்தது.

 

ஆனாலும், திருமணத்தை தாமதிக்க அவன் சிறு முயற்சியும் செய்யவில்லை. காரணம் அவனின் பாப்பு! அவனுக்கு சீதா மீது‌ காதல் தோன்றாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஆழமான அன்பு தோன்றி இருந்தது. இந்த சிலமாத பழக்கத்தில் அவள் குரலில் தொலைந்து இருக்கிறான்! அவளின் செய்கைகளை ரசித்திருக்கிறான்! அவளின் மன பக்குவம் கண்டு மலைத்து இருக்கிறான்! அவளின் தைரியம் கண்டு வியந்திருக்கிறான்! அவளுக்கு தன்னால் அவமானம் என்பதும் துடித்து இருக்கிறான்! அவளின் கஷ்டத்தில் இவனும் கலங்கி இருக்கிறான்!

 

இத்தனைக்கும் அன்று ராமகிருஷ்ணன், தங்களை இணைத்து பேச, சீதா அனைவரின் முன்பும் குறுகி கலங்கி நின்றிருந்ததை, ஒரு கையாலாகாத தனத்துடன் பார்க்கவேண்டிய தன் நிலையை எண்ணி கசந்திருந்தான். யாரும் தங்களை தவறாக பார்க்கவும் கூடாது என்று தானே கீர்த்தியை வரவழைத்து அத்தனை மெனக்கெட்டான். அந்த நொடி அவனின் முயற்சிகள் எல்லாமே தகர்ந்து போயிருந்தன.

 

ராமகிருஷ்ணன் பிடிவாதகாரன், கோபக்காரன் என்று தெரியும் தான், இத்தனை மூர்க்கமானவனாக இருப்பான் என்று ஸ்ரீராம் நினைத்தும் பார்த்ததில்லை. சீதாவின் எதிர்காலம் அப்போது பெற்றவர்களை போல இவனையும் மிரட்டி தான் பார்த்தது.

 

ராமகிருஷ்ணன் திருமணம் மறுத்து சத்தமிட்டு வெளியேறியதைக் கூட இவன் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் கோதாவரி பெரியம்மா இவனிடம் சீதாவை ஏற்றுக்கொள்ள கேட்கவும்… ஏதோ பெரும் பிரளயத்தில் இருந்து தன் பாப்புவை காத்திட விழைபவன் போல உடனே அவசரகதியாய் அவனின் ஆழ்மனம் சம்மதம் உரைத்து இருந்தது.

 

சீதா மறுத்து சொல்லவும் சற்று தயங்கியவன், ஒரு முடிவோடு உண்மை நிலை விளக்கி அனைவரிடமும் சம்மதத்தைப் பெற்ற பிறகே நிம்மதியாக உணர்ந்தான்.

 

ஊர் வந்திருக்க, தன் நினைவுகள் கலைந்தவன், குனிந்து, “உன்ன சந்தோசமா பார்த்துப்பேன் பாப்பு… இனி எப்பவும் எதுக்காவும் உன்ன கலங்க விட மாட்டேன்” என்று தன்னவளின் காதோடு உறுதி கூறினான். 

 

சீதாவும் சற்று அவன் காதிற்கு அருகே எக்கி, “நானும் உங்கள பத்திரமா பாத்துப்பேன் சின்னா… இனி உங்கள துணி துவைக்கவும் சமைக்கவும் விடவே மாட்டேன்” என்று அதே உறுதியான குரலில் கிசுகிசுத்திட, ஸ்ரீராம் சத்தமாகவே சிரித்து விட்டான்.

 

“வாயாடி, இந்த வாயை எங்கடீ வச்சிருந்த இத்தனை நாளா?”

 

“ம்ம் உம்ம சட்ட ஜோபிக்குள்ள தான் வச்சிருந்தேன்” மனையாளின் சளைக்காத எதிர் பேச்சில் ஸ்ரீராம் சந்தோசமாகவே வாய்பிளந்தான்.

 

சீதாவிற்குமே தன் பதில் பேச்சு ஆச்சரியம் தான்! 

 

‘அச்சோ சீதா ஏன் இப்படி வாயளக்கிற? சின்னா தப்பா நினைச்சுக்க போறாக! என்ன வாழ்வு வந்துடுச்சுன்னு இப்படி அடங்காம குதிக்கிற நீ? அடக்கி பேசு!’ தன்னை தானே கடிந்தும் கொண்டாள்.

 

ஏனோ கழுத்தில் தாலி ஏறிய பின்னும் கூட, ஸ்ரீராமிடம் பதற்றமோ தயக்கமோ தோன்றவில்லை சீதாவிற்கு. தன் சின்னா என்ற உரிமை உணர்வே மேலோங்கியது. இதற்கான காரணம் அந்த பேதைக்குமே புரியவில்லை தான்!

 

பெரிய வீட்டின் முன்பு கார் நிற்க, அனைவரும் இறங்கினர். மணமக்களை வாசலில் நிறுத்தி ஆலங்கரைத்து கற்பூரம் ஏற்றி சுற்றி, கண்ணேறு கழித்து வீட்டிற்குள் அழைத்து வந்தனர்.

 

புதுமை வாசம் மாறாத பெரிய வீடு புது தம்பதிகளையும் விருப்போடே தன்னுள் சேர்த்துக் கொண்டது.

 

சீதா மஹாலட்சுமி, பூஜை அறையில் திருவிளக்கேற்றி, புதுவீட்டு மருமகளாய் தன் புகுந்தவீடு செழிக்க, பருப்பும், உப்பும் தன் கைகளில் அள்ளி எடுத்து வைத்து வணங்கினாள். 

 

“ஏன் இதெல்லாம் நான் செய்ய கூடாதா?” என்று ஸ்ரீராம் கேட்டு வைக்க, 

“இது வீட்டுக்கு வந்த புது மருமக செய்யறது மாப்புள” அங்கே சிரிப்பு சத்தங்கள் கலகலத்தன.

 

மாலை கவிழ்ந்த இரவின் தொடக்கத்தில், புது மணமக்களுக்கு ஊஞ்சலாட்டு சடங்கு ஏற்பாடாகியிருந்தது.

 

பெரிய வீட்டின் நடு கூடத்தில் பூக்களால் அலங்கரிக்க பட்ட ஊஞ்சலில் புது மணமக்களை அமர்த்தி ஊஞ்சலாட்டு நடத்துவர்.

 

அதன்படி வெள்ளை பட்டுவேட்டி சட்டையில் ஸ்ரீராமையும் எலுமிச்சை மஞ்சள் பூவேலைபாடமைந்த சேலையில் சீதாவையும் அழைத்துவந்து அருகருகே அமர்த்தினர். நீண்ட ஒற்றை முல்லைசர மாலையை அவர்கள் கைகளில் கொடுத்து மாலைமாற்றி கொள்ள செய்ய, மாப்பிள்ளை பெண்ணின் மணிகட்டிலும் முல்லைசரம் சுற்றப்பட, இருவருக்கும் ஒருவித சங்கடமாகியது.

சேடிப் பெண்கள் இருபுறமும் நின்று மெதுவாக ஊஞ்சலாட்ட, புதுமண பூரிப்பு மணமக்களின் முகத்தில் புத்தோளி பாய்ச்சி இருந்தது. 

 

கிராமத்து மக்கள், நெருங்கிய சொந்தங்கள் என அனைவருமே ஊஞ்சலாட்டில் ஆர்வமாகவே கலந்து கொண்டனர். இந்த ஊஞ்சலாட்டு இன்பத்தின் சடங்காகவே பார்க்கப்படுகிறது. அங்கே கேலி பேச்சுக்குகளுக்கும் சுவாரஸ்ய விளையாட்டுகளுக்கும் எந்த குறைவும் இருக்காது.

 

“என்னங்கடி சும்மா ஊஞ்சலை ஆட்டிவிட்டா மட்டும் போதுமா, சேந்து பாட்டு படிங்கடி” மூதாட்டி ஒருவர் குரல் எழுப்ப,

 

“நாங்க என்ன பாட்டு படிக்க? பாட்டுனா சீதா தான். அவளைத்தான் படிக்க சொல்லோணும்” என்றாள் ஓர் வாயாடி பெண்.

 

“ஆமா அவக ஊஞ்சலுக்கு அவகளே பாடிப்பாங்களா? ஏதாவது தெரிஞ்சதை பாடுவீங்களா” முன்னவர் வழக்கடிக்க,

 

“அப்ப எங்களுக்கு சினிமா பாட்டு தான் வரும் படிக்கவா?” என்று கேட்டாள் மற்றொருத்தி.

 

“சரிதான் விரசா நல்ல பாட்டா நாலு பாட்டு பாடுங்கம்மா” பெரியவர் சம்மதம் தெரிவிக்க, அந்த பெண்களும் பாடியபடி ஊஞ்சலாட்டினர்.

 

“கல்யாண தேதி வந்து 

கண்ணோடு ஒட்டிக்கிச்சு

பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு

பாருங்கடி பொண்ண பாருங்கடி

வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு

 

ஏ இடிச்ச பச்சரிசி 

புடிச்ச மாவிளக்கு

அரைச்ச சந்தனமும் மணக்க

மதுரை மல்லிகைப்பூ 

சிரிக்கும் செவ்வந்திப்பூ

செவந்த குங்குமப்பூ மயக்க

 

தை மாசம் வந்துடுச்சு 

கால நேரம் சேந்துடுச்சு

ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு

மேகம் கருத்துருச்சு 

மாரி மழை பெஞ்சுடுச்சு

மண்ணில் மணம் ஏறிடுச்சு 

மஞ்சள் நிறம் கூடிடுச்சு

 

தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே

தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே”

 

அடுத்தடுத்து ஒவ்வொருவராக தெரிந்த பாடல்களை பாடி, ஊஞ்சலாட்ட அங்கே மகிழ்ச்சியும் சிரிப்பலைகளும் சிதரின.

 

அடுத்து மணமக்களுக்கு சந்தன நலங்கு வைக்கப்பட, தொடர்ந்து அவர்களுக்கு விளையாட்டுகள் தொடங்கின.

 

பெண்ணையும் பிள்ளையையும் எதிரெதிரே தூர உட்காரவைத்து, ஒரு பூப்பந்தை அவர்களிடம் தந்து உருட்ட சொல்லினர். ஆண்கள் ஸ்ரீராம் புறம் அமர்ந்திருக்க, பெண்கள் சீதா புறம் இருந்தனர்.

 

“இதான் வாய்ப்பு மாப்புள, ஆசபட்ட கேள்விகேட்டு பந்தை உருட்டுக, பொண்ணு தப்பாம பதில் சொல்லித்தான் ஆகணும்” ஒருவன் உசுப்பிவிட, ‘என்ன கேள்வி கேட்பது, அதுவும் இத்தனை பேர் முன்பு?’ என்று இவன் தயங்கி தாமதித்தான்.

 

“என்ன உம்ம மாப்புள முழிக்கிறாக? கட்டிகிட்டவ மேல அம்புட்டு பயமோ!” இந்த புறம் பெண்ணொருத்தி வம்பு இழுக்க, “பொண்ணு வாயடைக்கிற மாதிரி கேள்வி கேப்பாக பாரு” அந்த புறம் சளைக்காமல் பதில் தந்து விட்டு மாரி, ஸ்ரீராம் தோள் இடித்தான்.

 

“என்னை உனக்கு எதனால பிடிச்சது?” வேறு தோன்றாமல் இதை கேட்டுவிட்டு அவளிடம் பூப்பந்தை உருட்டி விட, அதை பிடித்துக் கொண்டவள், “எங்க சின்னாவ எப்படி எனக்கு பிடிக்காம போகும்?” சீதா மிழற்ற, இவன் இதழ் மடித்து சிரித்து கொண்டான்.

 

மற்றவர்களோ “என்ன சொன்னாக, எங்க காதுல விழுகலியே” என்று சத்தமிட, “இவக சின்னாவ பிடிக்காம போகாதாம்” பெண்களும் பதிலாக சத்தமிட்டனர்.

 

“இப்ப நீ இதை கேளு” சீதாவின் காதில் ஒருத்தி சொல்லிதர, “என்னை தவிர வேற பொண்ணை, உம்ம பார்வை எப்படி பாக்கும்?” இடக்காக கேள்வி கேட்டு இவள் பந்தை உருட்ட, அதை கைப்பற்றிய ஸ்ரீராம் அவளை சன்னமாய் முறைத்து வைத்தான்.

 

“ம்ம் சுமாரான பொண்ணா இருந்தா என் தங்கச்சியா பார்க்கும், சூப்பரான பொண்ணா இருந்தா… உன் தங்கச்சியா பார்க்கும்” அவன் தடாலடி பதிலில் எல்லாரும் ஆர்பரித்து சத்தமிட, சீதாவின் கார பார்வை ஸ்ரீராமை மோதி நின்றது.

 

அதை ஏற்றவன், “எனக்கு சமைக்க தெரியாது உனக்கு சமைக்க தெரியுமா?” என்று தெரிந்த கேள்வியை கேட்டு பந்தை உருட்டி விளையாட்டை தொடர்ந்தான். வம்பு தும்பு கேள்வி, பதிலோடு பூப்பந்து இருவரின் கைகளில் உருண்டோட, சிறிது நேரத்தில் விளையாட்டு முடிந்தது.

 

அடுத்து அகல பித்தளை தாம்பாளத்தில்  பசும் பால் நிறைத்து, அதில் போன் மோந்திரத்தை இட்டு மணமக்களை தேட வைக்க, மணமக்களின் விரல்கள் பாலில் மோந்திரத்தை தேடி அலைந்தன.

முதலில் ஸ்ரீராம் எடுக்க, அடுத்தடுத்து சீதா எடுத்து விட்டாள். சுற்றி இருந்தவர்களின் ஆர்பாட்டத்தோடு விழா முடிந்தது.

 

பெரியவர்கள் இரவு மணமக்களை தனித்து அறையில் விட, அறைக்குள் வந்ததும், “ஏன் அப்படி சொன்னீக?” சீதா நேராக தாளாமல் கேட்டு விட, ஸ்ரீராம் நெற்றி சுருக்கி, “என்ன சொன்னேன்?” பதிலுக்கு‌ கேட்டான்.

 

தன்னவள் உடனான தனிமையும் அவளின் புதுப்பெண் அழகும் பொலிவும் இவனை கொள்ளை கொண்டிருக்க, அதற்கு சிறிதும் எதிர்வினை இன்றி, அவளின் புரியாத கேள்வியில் தாமதித்து நின்றான்.

 

சீதாவின் சின்ன முகம் சுருங்கிட. “அதான், அழகான பொண்ணை உம்ம கண்ணு வேறுமாதிரி பார்க்குமுன்னு…” அவள் இழுக்க, இவன் முகம் சிரிப்பில் விரிந்தது.

 

“நீ வம்புக்குனே கேள்வி கேட்டா, என்  பதிலும் அப்படி தானே வரும்” என்றவன் அவளைத்‌ தாண்டி சென்று கதவை தாளிட்டு திரும்ப, அவன் மனைவி இன்னும் முகம் தெளியாமல் நின்றிருந்தாள்.

 

மென்மையான புன்னகையோடு அவளிடம் வந்தவன்,‌ அவள் நெற்றியோடு நெற்றி முட்டி,‌ “நான் ஸ்ரீராமன்டீ இந்த சீதாவ தாண்டி போகமாட்டேன் போதுமா” என்று மெல்லிடை வளைத்து தன்னோடு சேர்த்து கொள்ள, சீதாவின் கண்களும் முகமும் விரிய, “நிசம்மா?” அழுத்திக் கேட்டாள்.

 

“நிஜம்மா… டீ பொண்டாட்டி” தன்போல போலி அழுத்தம் கொடுத்து சொல்லியபடி, தன்னுடன் இழைய முயன்றவனை எட்டி நிறுத்தியவள், அவன் கைகளில் பால் டம்ளரை திணித்துவிட்டு, தானும் ஒரு டம்ளரை எடுத்துக் கொள்ள, ஸ்ரீராமிற்கு தான் சொத்தென்று ஆனது.

 

“ஃபர்ஸ்ட் நைட்ல ஒரே கிளாஸ் பாலை தானே ஹஸ்பெண்ட் அன்ட் வொய்ஃப் ஷேர் பண்ணிப்பாங்க! இதென்ன புதுசா” என்று சலிப்பாக கேட்க, “ஆமாவா? என்கிட்ட அப்படி யாரும் சொல்லலியே” என்று இடவலமாக தலையசைத்து பாலை பருகும் மனையாளை கண்கள் சுருங்க பார்த்து வைத்தான் இவன்.

 

“என்ன பாப்பு நீ இப்படி சொதப்புற, நீ வெக்கப்பட்டுட்டே வருவ, என் கால்ல விழுவ, நாம ஒரே கிளாஸ் பால் ஷேர் பண்ணி குடிக்கணும்! அப்படி என்னென்னவோ நினைச்சு இருந்தேன். கிராமத்து பொண்ணா இருந்துட்டு என்னை இவ்ளோ நார்மலா ஃபேஸ் பண்ற?” ஸ்ரீராம் புலம்பியபடி அவளருகே அமர, சீதாவின் பார்வை அந்த அறையை ஒருமுறை சுற்றி வந்து அவனிடம் நின்றது.

 

“அறை ரொம்ப அழகா, பெருசா இருக்கு சின்னா” என்று பாராட்டியவளை இவன் கடுப்பாகி முறைக்க, “நிசமா எனக்கு வெட்கமெல்லாம் வரல சின்னா, மனசு நிறைய சந்தோசந்தான் கொட்டி கிடக்கு! அப்படியே வானுக்கும் மண்ணுக்குமா குதிக்கணும் போல இருக்கு” சீதா துள்ளலாக பேச, இந்த சீதா இவனுக்கு புதியவள்.

 

அவளின் கரத்தை தன்னோடு எடுத்துக் கொண்டவன், “ஏன் உனக்குள்ள இவ்வளோ சந்தோசம்?” அவளின் காதோடு கிசுகிசுக்க, அவள் கூச்சத்தில் நெளிந்தவள், “சரியா சொல்ல தெரியல சின்னா, ஆனா இதுக்கெல்லாம் நீக தான் காரணம்னு மட்டும் தெரியுது” தன்னவன் தோளோடு தலைசாய்த்துக் கொண்டாள்.

 

அவளின் இந்த இளக்கம் போதுமானதாக இருந்தது அவனுக்கு தன்னவளிடம் உரிமை எடுத்துக் கொள்ள. கணவனின் அண்மையில் சீதாவின் உடலில் நடுக்கம் பரவியது.

 

“சின்னா…”

 

“ம்ம்”

 

“வேணா…”

 

“ஏன்?”

 

“பயமாயிருக்கு!” அவள் நடுங்கிய குரலில் விலகியவன், “நான் தான் சொன்னேன் இல்ல, இது நம்மோட தனிமை, நமக்கான ஃபீலிங்க்ஸ், ப்ளீஸ் பாப்பு” ஏக்கமாக இறைஞ்சியது அவன் முகபாவனை.

 

“இப்ப வேணாமே ப்ளீஸ்” அவளும் கெஞ்சிட,

 

“பின்ன எப்பவாம்?”

 

“அப்புறம்… நாளைக்கு… கொஞ்ச நாள் கழிச்சு…” அவள் திணறலாக மொழிய, ஸ்ரீராம் முகம் மாறிட எழுந்து, பால்கனி கதவை திறந்து கொண்டு அங்கே போய் நின்று கொண்டான்.

 

எப்போதும் போல தோட்டத்து சுகந்த காற்று அவனை இதமாக மோதியது. 

 

சீதாவின் மனம் பதறிட அவனிடம் வந்தவள், “கோச்சிட்டியா சின்னா?” தவிப்பாக கேட்க, “ப்ச்” என்ற சலிப்பாக பதில் வர, பெண்ணவளுக்கு அய்யோ என்றானது.

 

“நீக இப்படி முகம் திருப்புனா எனக்கு தாங்காது… நான் ஏதோ பயத்துல மறுத்து சொல்லிபுட்டேன், தப்புதான்! இனி மறுக்கமாட்டேன்… என்னை எடுத்துக்கோக!” 

 

தன்முன் தலைதாழ்த்தி இமைகவிழ்த்து நின்றவளை பார்த்து, “நீ என்ன லூசா?” அவளின் பேச்சை கேட்டு கண்டிக்க, “அப்படித்தான் போல” என்ற அவள் பதிலில் இவன் முகம் புன்னகை பூசிக் கொண்டது.

 

அவளை தன்புறம் இழுத்து, பின்னோடு அணைத்து நின்றவன் பார்வை தங்கள் வீட்டு தோட்டத்தின் பச்சையில் நிலைத்தது.

 

“எப்பவும் எனக்காக இப்படி விட்டு கொடுப்பியா சீதா?” ஸ்ரீராம் மென்மையாக யாசிக்க, “உம்ம சந்தோசந்தானே எஞ் சந்தோசம், உமக்காக விட்டுக்கொடுக்காம வேற எதுக்காக விட்டு கொடுக்க போறேன்” என்று அவள் பதிலில் இவன் அணைப்பு இறுகியது.

 

“உனக்கே தெரியும் சீதா, பிஸ்னஸ் இப்ப தான் இனிஷியல் ஸ்டேஜ்ல இருக்கு, இப்ப நாங்க எல்லாம் முழுமூச்சா செயல்பட்டா தான் எங்க தொழிலை ஒரு நிலைக்கு கொண்டு வர முடியும், பிஸ்னஸ்ல ஒரு நிலைக்கு வந்த அப்புறம் தான் மேரேஜ் பத்தி யோசிக்கணும்னு நினைச்சு இருந்தேன். பட், நம்மோட ஸ்விட்சுவேஷன் இப்பவே கல்யாணம் முடியற மாதிரி ஆகிடுச்சு” ஸ்ரீராம் நிதானமாக எடுத்து சொல்ல,

 

“நான் உமக்கு சுமையா சேர்ந்துட்டேனா சின்னா?” சீதா கலங்கி கேட்க,

 

“அப்படியெல்லாம் இல்ல, நான் சொல்றதை புரிஞ்சிக்க ட்ரை பண்ணு” என்று அவளை தன்புறம் திருப்பியவன், “என்னால உன்கூட நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது சீதா, நீ புரிஞ்சுப்பன்னு நினைக்கிறேன்” அவளுக்கும் அவன் நிலை புரிந்தது தான். ஆனாலும் வலித்தது. சரியென்று தலையசைத்துக்‌ கொண்டாள்.

 

“ஓய் இப்ப எதுக்குடி இந்த அழுகாச்சி மூஞ்சிய காட்ற? இன்னும் கொஞ்ச நாளைக்கு தான்” அவன் சமாதானம் பேச, “ம்ம்” என்றவள் “என்னை உமக்கு பிடிக்கும் தான சின்னா?” திருமண முதல் நாள் இரவிலேயே பிரிவை பற்றி பேசுகிறானே! என்று அவளுள்ளம் துவண்டது.

 

“ரொம்ப பிடிக்கும் டீ, எவ்வளவு பிடிக்கும்னு காட்டவா” குறும்பாக கேட்டு அவளை அள்ளி இரு கைகளில் தூக்கிக் கொண்டு நடந்தவன், “நாட்டு கட்டன்னு சொல்லுவாங்க இல்ல… எப்பா என்னா கனங்கனக்குற நீ தான் டி சரியான நாட்டு கட்ட” என்று அவன் பேச்சை மாற்ற,

 

துள்ளி இறங்கி கொண்டவள், “உங்கள நானா தூக்க சொன்னேன்?” சின்ன முகம் சுருங்கினாள்.

 

“அன்னிக்கு ஆசை கிறக்கத்துல உன்ன தூக்கும் போது பூ மூட்ட மாதிரி இருந்த, இப்ப சிமெண்ட் மூட்டை மாதிரி கனக்குற” அவன் விடாமல் வம்பு வளர்க்க,

 

“ஒரு வாரத்துல நான் எடை கூடி போயிட்டேன்னு சொல்றீங்களா?” என்று அவள் பாவமாய் பார்த்திட, இவன் சத்தமாகவே சிரித்து விட்டான். புது மனைவியோடு வம்போடு சேர்த்து அவன் காதலையும் வளர்க்க முயல, சற்று பயந்தவள் அவன் கைகளுக்குள் ஒன்றிக் கொண்டாள்.

 

செப்பு இதழோடு

முரட்டு இதழ் பொருத்தி

சுவை தாண்டி சுகத்தொடு கலந்திட,

அவளறிந்தாள் இவன் இதழ் பசித்தவன் என்று.

இவனறிந்தான் அவள் முத்தம் தின்பவள் என்று.

மோகம் தீர்ந்த பின்னும் 

தீராத முத்தங்கள்

மேகம் கலைந்த பின்னும்

ஓயாத மென் தூரல்களாய்!

 

**********

 

வருவாள்…