கரிசல் காட்டுப் பெண்ணே 25 Final

கரிசல் காட்டுப் பெண்ணே 25 (இறுதி பதிவு)

 

ஐந்து ஆண்டுகள் கடந்து இருந்தன.

 

இன்று, 

 

விடுமுறை தினம் என்பதால் நேரங்கடந்தும் அவனின் உறக்கம் தொடர, ஜன்னல் வழி வந்த சூரிய கதிரின் வெப்பம் அவனை கலைத்தது.

 

முகத்தை துடைத்துக் கொண்டு சோம்பலாக எழுந்தமர்ந்த ராமகிருஷ்ணன் பார்வை திரை விலகி இருந்த ஜன்னல் மீது படிய, இது யார் வேலையாக இருக்கும் என்று அறிந்தவன் முகம் அப்பட்டமான கடுகடுப்பை காட்டியது.

 

“மைத்ரே… மைத்ரே…” படுக்கையை விட்டு எழுந்து அவன் சத்தமிட, இரு கைகளாலும் காதை பொத்தியபடி அறைக்குள் வந்த மைத்ரேயி, “ஏன் இப்படி எழுந்ததுமே காட்டு கத்து கத்துறீங்க” என்று கணவனிடம்  சத்தமிட்டாள்.

 

“அப்படியே அறைஞ்சேன்னா பாரு, சண்டே அதுவுமா நிம்மதியா கொஞ்ச நேரம் தூங்க விடுறீயா? உன்ன யாருடி விண்டோ ஸ்கீரின விலக்கி வைக்க சொன்னது?” ராமகிருஷ்ணன் கொதித்து பேச, 

 

“என்ன தூக்கம் வேண்டி கிடக்கு? மணி ஒன்பது ஆச்சு, போய் குளிச்சிட்டு வாங்க நான் காஃபி எடுத்து வைக்கிறேன்” அவள் மசியாமல் அவனை அதிகாரம் செய்ய, ராமகிருஷ்ணன் ஏகத்துக்கும் மனைவியை முறைத்தபடி நின்றான்.

 

“என்னா மொறப்பு?” இவள் கையசைத்து கேட்க, அவள் கையை பற்றி இழுத்து, மறுகையால் அவளி கூந்தலை வலிக்க பற்றி தலையை நிமிர்த்தியவன், “இன்னைக்கு என்கிட்ட வாங்கி கட்டிக்காம நீ அடங்க‌மாட்ட போல” என்று பற்களை கடித்தான்.

 

கணவனின் முரட்டு தனத்தை எத்தனை முறை அனுபவித்து இருந்தாலும் இப்போதும் அவளுக்கு வலிக்கவே‌ செய்தது.

 

வலியில் முகம் சுருங்க, “வலிக்குது ராம்கி விடுங்க, ஸ்கீரின் தள்ளி விட்டதுகெல்லாம் இவ்ளோ கோபம் ரொம்ப ஓவர் தெரியுமா?” மைத்ரேயி சிணுங்க, 

 

“நான் கோபபட்டு இப்படி கத்தணும்னே, எல்லாத்தையும் செய்யற இல்ல நீ”

 

“ஆமாண்டா புருசா, எனக்கு வேற வேலையில்ல பாரு, உன் ரெட்டை வாலுங்களை சமாளிக்கவே எனக்கு மூச்சு முட்டுது. இதுல நீ இவ்ளோ வயலண்டா பிஹேவ் பண்ணா… பாரு உன்ன டைவர்ஸ் பண்ணிடுவேன்” 

 

எப்போதுமே அவளின் உச்சபட்ச மிரட்டல் இதுதான். இதை சொன்னால் ராம்கி இறங்கி வருவான் என்பதும் இவளுக்கு நன்றாகவே தெரியும். இப்போதும் இறங்கி வந்திருந்தான். அவளின் தலைமுடியை விடுவித்தவன் முகம், கடுமை குறையாமலே இருந்தது.

 

“ஆமா, ஆன்னா ஊன்னா இதை ஒண்ணு சொல்லு, இத்தனை வருசத்தில ஒருநாளாவது ஒழுங்கான பொண்டாட்டியா நடந்து இருக்கியா டீ நீ?”

 

“நான் உனக்கு ஒழுங்கான பொண்டாட்டியா நடக்காம தான் ஒரே பிரசவத்தில ரெட்ட புள்ளைய பெத்து கொடுத்து இருக்கேனா?” அவள் சளைக்காமல் பதில் தர,

 

“சீ வெட்கங்கெட்ட பேச்சபாரு, பொம்பளயாடி நீ எல்லாம்?” அவன் இதற்கும் எரிந்துவிழ,

 

“அது தெரியாமையா இத்தனை வருசம் குடும்பம் நடத்துற?” என்றவள் இடக்கு பேச்சில் அவன் மனைவியை அருவருப்பாக பார்க்க, இவளோ அவனின் கழுத்தோரத்தில் ஒட்டி இருந்த தனது ஸ்டிக்கர் பொட்டை எடுத்து அவனிடம் காட்டினாள். எத்தனை முயன்றும் முடியாமல் அவன் முகத்தில் அசடு வழிவது தெரிந்தது.

 

அவள் புருவத்தை ஏற்றி இறக்கி, “என்ன மிஸ்டர் முரட்டு சிங்கிள், இதுக்கென்ன சொல்றீங்க?” அவள் கேட்ட விதத்தில் அவளை உதறிவிட்டு, குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

 

மைத்ரேயி,‌ “என்ன ஷார்ட் டெம்பரோ? குண்டூசி விழுந்த சத்ததுக்கு கூட, அணுகுண்டு வெடிச்ச அளவுக்கு ரியாக்ட் பண்ண வேண்டியது” என்று முணுமுணுத்தப்படி வெளியே வந்தாள். 

 

இத்தனை வருட இல்லற வாழ்வில் கணவனின் கோபத்தையும் குணத்தையும் பிரித்தறிய கற்றிருந்தாள் மைத்ரேயி. ராம்கியை சமாளிக்கும் வித்தையிலும் தேர்ந்திருந்தாள்.

 

“என்னமா எழுந்ததுமே உன் புருஷன் கத்துறானா?” மூன்று வயதான தன் பேத்திகளுக்கு இட்டிலியை பாலில் தொட்டு ஊட்டியபடி கோதாவரி கேட்க, 

 

“உங்க மகன் கத்தாம இருந்தா தான் அதிசயம் அத்த” என்று அவருக்கு பதில் தந்துவிட்டு சமையலறையில் பாத்திரங்களை உருட்ட தொடங்கினாள்.

 

ராமகிருஷ்ணன் குளித்து விட்டு வந்து அமர, அவன் கையில் காஃபியை திணித்தவள், மாமனாருக்கு உணவு மேஜையில் காலை உணவை பரிமாறினாள்.

 

“ஏன்டா மா, எழுந்ததுமே இப்படி உர்ருனு இருக்கானே, நம்மள நிம்மதியா டிவி பார்க்க விடுவாங்கிறே?” குலோத்துங்கன் தாழ்ந்த குரலில் மருமகளிடம் கேட்க, 

 

“உங்க பேத்திங்களை அவர் தலையில கட்டிட்டா போச்சு, விடுங்க மாமா நாம பார்த்துக்கலாம்” என்று மைத்ரேயி சொல்ல, அவரும் சரிதான் என சிரித்து கொண்டார்.

 

சற்று நேரத்தில் ராமகிருஷ்ணனும் காலை உணவை முடித்து கொண்டு எழ, “நேரமாச்சு அத்த, வாங்க சாப்பிடலாம்” என்று அழைத்தவள், “ரியா, தியா… பாட்டி, தாத்தாவ வச்சு செஞ்சது போதும், அப்பா இன்னைக்கு ஃபிரீ தான் அவர் கூட போய் விளையாடுங்க, போங்க” என்று கோர்த்து விட்டாள்.

 

குழந்தைகள் இருவரும் ஓடிவந்து, “வாப்பா விளாலாம்”, “ப்பா வா” ராமகிருஷ்ணனின் இருகைகளை பக்கத்துக்கு ஒன்றாக பிடித்திழுக்க,  மகள்களை இருபுறம் அலேக்காக தூக்கிக்கொண்டவன், “இன்னைக்கு என்ன விளையாடலாம் மை டியர் ஏன்ஜல்ஸ்” என்று கொஞ்சியபடி தங்கள் அறைக்குள் புகுந்து கொண்டான்.

 

அப்பா, மகள்களின் விருப்பமான விளையாட்டுகளில் காகிதங்களை மடித்து உருவங்கள் செய்வதும் ஒன்று. 

“அப்பா ஆனை, ஆனை செயி” என்று தியாவும், “எனக்கு பீக்காக் வேணும்” ரியாவும் தங்கள் மழலையில் கேட்க, ராமகிருஷ்ணன் பொறுமையாகவே அவர்கள் கேட்பதைச் செய்து தர தொடங்கினான். 

 

மாமியாரும் மருமகளும் சாப்பிட்டு எழவும், அவர்கள் எதிர்பார்த்து இருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடங்கவும் சரியாக இருந்தது. மூவரும் ஆர்வமாக தொலைக்காட்சி முன் அமர்ந்து கொண்டனர்.

 

பெரிய எல்இடி திரையில், துறுதுறு முகத்துடன் தொகுப்பாளினி தோன்றினாள். “அனைவருக்கும் வணக்கம். இது உங்கள் ‘சிறப்பு விருந்தினர் பக்கம்’ நிகழ்ச்சி. தொகுத்து வழங்குவது நான் உங்கள் பிரதீபா. இன்றைய சிறப்பு விருந்தினரை சந்திக்கலாம் வாங்க” என்று அவள் நடக்க, திரையில் பெரிய வீட்டின் முன்புறம் காட்சி தோன்றியது.

 

“இந்த சின்ன கிராமத்தில இவ்வளவு அழகான பெரிய வீட்டை பார்த்து நாங்க அசந்து தான் போயிட்டோம். இந்த ஸ்பெஷலான பெரிய வீட்டை போலவே, இந்த வீட்டில் இருப்பவர்களும் ரொம்பவே ஸ்பெஷலானவங்க, சீக்கிரம் கண்டுபிடிங்க அவங்க யாரா இருக்கும் என்று” படபட பட்டாம்பூச்சியாக பேசியவள், அடுத்து பெரிய வீட்டின் அகன்ற கூடத்தின் சோஃபாவில் அமர்ந்து இருந்தாள்.

 

“நீங்க கண்டுபிடிச்சு இருப்பீங்க என்று நினைக்கிறேன். சரி இப்ப நானே சொல்றேன். இப்ப நாம சந்திக்க வந்திருக்க சிறப்பு விருந்தினர், தித்திக்கும் தேன் குரலுக்கு சொந்தமான பிரபல பின்னணி பாடகி திருமதி சீதா மஹாலட்சுமி…” துள்ளல் குரலோடு  பெயரை சொல்லியவள், எதிர்புறம் பார்த்து, “வணக்கம் மேம், உங்களை சந்திச்சதுல எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி” என்றாள்.

 

இப்போது திரையில் சீதா மஹாலட்சுமி தோன்றினாள். பாந்தமான சேலையில் வெள்ளந்தி பெண்ணின் முகத்தோற்றம் மாறி, குடும்ப பெண்ணின் தெளிந்த தோற்றம் மிளிர, இயல்பான நிமிர்வோடு அமர்ந்திருந்தவள், விரிந்த மென்னகையோடு இருகரங்கள் கூப்பி “எல்லாருக்கும் வணக்கம்” என்றாள்.

 

“பாடகியா அறிமுகமான இந்த சில வருடங்களில் நிறைய விருதுகளையும் பாராட்டுக்களையும் அதைவிட அதிகமான ரசிகர்களையும் பெற்று இருக்கீங்க, அதோட இந்த வருடத்திற்கான சிறந்த பாடலை பாடிய பாடகியாக தேசிய விருதுக்கும் தேர்வாகி இருக்கீங்க, வாழ்த்துக்கள் மேம்” 

 

தொகுப்பாளினியின் வாழ்த்துக்கு, “நன்றி” உரைத்து நிறைவான புன்னகையை பதிலாக தந்தாள் சீதா மஹாலட்சுமி.

 

“இந்த நிகழ்ச்சியை உங்களோட ஒரு இனிமையான பாடலோடு தொடங்கலாமே! எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்க மேம்” – தொகுப்பாளினி பிரதீபா கேட்க, சீதா ஆமோதித்து தலையசைத்து, ஆழ மூச்செடுத்துப் பாடினாள்.

 

“வீசும் காற்றிலே…

இன்னிசை மீட்டவா!

 

பேசும் மொழியிலே…

சொல்லிசை கூட்டவா!

 

வானவீதியில்… மென்னடை போடவா!

 

பூக்கள் வாசத்தை… 

மொழி பெயர்த்து கூ…றவா!”

 

அந்த நான்கு வரிகள் அவளின் தேன் குரலில் இனிமையாய் இசைக்க, அறைக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கவனம் கலைந்து, “அப்பா சீதாம்மா பாட்டு ஐய்” என்று கட்டிலை விட்டு இறங்கி ஓடி வந்தனர். அதுவரை இயல்பாக இருந்த ராமகிருஷ்ணன் முகம் இருளடைத்தது.

 

“சின்ன கிராமத்தில ஒரு விவசாய குடும்பத்தில பிறந்த சீதா மஹாலட்சுமி, இன்று பிரபல பாடகியா மாறின உங்க வெற்றி பயணத்தை பற்றி சொல்லுங்க”

 

“இந்த கிராமம், எங்க குடும்பம், எனக்கான பாட்டு இது மட்டும் தான் என்னோட சந்தோசமா இருந்தது. நானும் ஒரு பிண்ணனி பாடகியா வருவேன்னு அப்பல்லாம் எனக்கு தோன்றினதில்ல, முதல்முறை ஆல்பத்தில என்னை பாட சொன்னப்போ, அது என்னால முடியுமான்னு தோணுச்சு, அந்த ஆல்பத்தில என்னோட வாய்ஸ் பிடிச்சு போய் சினிமால பாட வாய்ப்பு வந்ததும் கூட நம்ப முடியல… முதல்ல நான் தயங்கினேன் தான், என்னோட கணவர், அவங்க ஃபேமிலி எனக்கு ஃபுல் சப்போர்ட் செய்ந்தாங்க, என்னை இந்த இடத்துக்கு கைபிடிச்சு தூங்கிவிட்டது அவங்க தான்” சீதா மஹாலட்சுமி நன்றி பெருக்கோடு திரையில் பேச, வெளியே வந்த ராமகிருஷ்ணன் நேராக சென்று தொலைக்காட்சியை அணைத்து விட்டான்.

 

“ராமகிருஷ்ணா, உனக்கு பார்க்க பிடிக்கலனா விடு, பார்க்கற எங்களையும் ஏன் தடுக்கற?” குலோத்துங்கன் அதட்டிட,

 

“உன்னோட பிடிவாதத்துக்கு அளவே இல்லாம போச்சுடா, உன்னோட திமிர அடக்க தான் ஆண்டவன் ஒண்ணுக்கு ரெண்டு பொண்ணுங்களை கொடுத்து இருக்கான்” கோதாவரியும் மகனை கண்டிக்க,

 

“இப்பவும் உங்களுக்கு என்னைவிட அவ தான் பெருசா போயிட்டா இல்ல…” என்று சத்தமிட்டு சண்டைக்கு நின்றவனைக் கைப்பிடித்து இழுத்து கொண்டு உள்ளே சென்றாள் மைத்ரேயி.

 

மறுபடி தொலைகாட்சியை உயிர்பிக்க, தன்னை அறிமுகப்படுத்திய, வாய்ப்புகள் வழங்கிய இசையமைப்பாளர்களுக்கு தன் நன்றியை தெரிவித்துக் கொண்டிருந்தாள் சீதா மஹாலட்சுமி.

 

தாங்கள் தூக்கி வளர்த்த மருமகளின் வளர்ச்சியை கண்டு குலோத்துங்கன், கோதாவரி மனம் நிறைந்து போயிருந்தது.

 

# # #

 

“ஏய் விட்றீ…” அறைக்குள் வந்ததும்‌ ராமகிருஷ்ணன் அவள் கையை உதறிவிட, மைத்ரேயி இரு கைகளையும் இடுப்பில் வைத்து கொண்டு அவனை முறைத்து நின்றாள்.

 

“என்னாச்சு ராம்கி உனக்கு, மார்னிங்ல இருந்து இப்படி சிடுசிடுக்கிற?” அவள் கேட்க இவன் முகம் திருப்பிக் கொண்டான்.

 

“நீ தான் இன்னும் அவங்க மேல இருக்க கோவத்தை இழுத்து பிடிச்சிட்டு இருக்க, சீதா, ராம் இப்பவும் நம்மள வேறா பார்க்காம நல்லா தான் பழகுறாங்க” மைத்ரேயி புரியவைக்க முற்பட,

 

“அவங்கள பத்தி என்கிட்ட பேசாதன்னு சொன்னா கேக்க மாட்டியா?” இவன் அதட்டினான்.

 

“மாட்டேன், நான் பேச தான் செய்வேன், அவங்க சரியான நேரத்தில சரியான முடிவு எடுத்ததால தான, இந்த முரட்டு கிறுக்கனை என்கிட்ட நேரா வந்து ப்ரோப்பஸ் பண்ண வச்சது” என்று சொல்லி சிரித்து அவனை இடித்து வைக்க, “ப்ச்…” இவன் சலித்துக் கொண்டான்.

 

அவன் மேல் கையை இருகைகளாலும் சுற்றி பிடித்து தோள் சாய்ந்தவள், “நாலு வருஷம் புத்து… உன்மேல பைத்தியமா உன் பின்னாடியே சுத்திட்டு இருந்தேன். ஒருமுறையாவது என்னை கண்டுகிட்டியா நீ? இதுல பாவம் அந்த சின்ன பொண்ணை போய் கட்டிக்க போறதா சொன்ன பாரு எனக்கு அப்படி பத்திகிட்டு வந்துச்சு… அப்பவே சொன்னேன் இல்ல, உன் முரட்டு தனத்தை என்னை தவிர வேற யாராலையும் சமாளிக்க முடியாது, ஒழுங்கா என்னை கட்டிக்க, நான் உன்ன பத்திரமா வச்சு காப்பாத்துறேன்னு… கேட்டியா நீ… அப்ப என்னை எவ்ளோ சீப்பா பேசிட்டு போயிட்ட!” அன்று இவன் சிதறவிட்டிருந்த விட்டிருந்த வார்த்தைகள், இப்போதும் அவள் நெஞ்சை அழுத்துவதாய். அமைதியானாள்.

 

அவளை இழுத்து தன் முன்னே நிறுத்தியவன், “கொஞ்ச கூட வெட்கமில்லாம என் பின்னாடி சுத்தின உன்ன வேற எப்படி சொல்ல சொல்ற? அப்ப கூட ஊர்ல பிரச்சனை ஆனதும் நேரா உன்கிட்ட தான வந்து நின்னேன், வேறொருத்திய தேடி போகல இல்ல, சந்தோசப்பட்டுக்கோ” என்றான்.

 

அவளுக்கு அந்த நாள் நன்றாகவே நினைவு இருந்தது. இன்னும் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் நினைவில் இருக்கும். அவன் மார்போடு முகம் சாய்த்துக் கொண்டாள். ராம்கி தன்னவளை விலக்கவில்லை. 

 

அன்று, அப்பா, அம்மா, அத்தை, மாமா, சீதா, ஸ்ரீராம் என அனைவரின் மீதிருந்த ஆத்திரத்தில் ஊரிலிருந்து நேராக வந்து மைத்ரேயி முன் நின்றிருந்தான். “நாம கல்யாணம் பண்ணிக்கலாம் வா” எந்தவித முகமன் கூறாது இப்படி பேசுபவனை அவள் குழப்பமாக பார்க்க, “எதுக்கு இப்படி பேந்த பேந்த முழிக்கிற? என்னை அவமானபடுத்தி, அசங்கபடுத்தின எல்லார்க்கு முன்னேயும் நான் மாலையும் கழுத்துமா நிக்கணும், அவங்க எல்லார் மூக்கையும் அறுக்கணும்” அவன் ஆவேசமாக பேச, இவளுக்கு புரிந்தும் புரியாத நிலைமை.

 

“என்னை என்ன உன் வீட்டு பூனைக்குட்டின்னு நினச்சியா, வான்னு சொன்னதும் உன் பின்னாடியே வாலாட்டிட்டு வரத்துக்கு? முதல்ல என்ன பிரச்சனைன்னு எனக்கு முழுசா சொல்லு” என்று உயர்த்திய அவள் குரலுக்கு கட்டுப்பட்டு இவனும் நடந்ததை சொன்னான்.

 

மைத்ரேயிக்கு புரிந்தது எல்லா பிரச்சனைகளுக்கும் இவன் முன் கோபமே முற்று முதல் காரணம் என்பது. ஆனாலும் அவளின் உள்ளம் துள்ளத்தான் செய்தது.

 

“ஓஹோ, அப்ப போனா போகுதுன்னு என்ன கட்டிக்கலாம்னு வந்திருக்க அதான”

 

“அப்படித்தான் வச்சுக்கோ, உன்னால முடியாதுன்னா நான் வேற எவளையாவது தேடிக்கிறேன் போ” என்று திமிர் பேசியவனை முறைத்தவள், “உன்ன திருட்டு கல்யாணம் எல்லாம் செஞ்சிக்க முடியாது. ஒழுங்கா எங்க அப்பா, அம்மாகிட்ட வந்து பொண்ணு கேளு, நானும் உங்க அப்பா, அம்மாகிட்ட உன்ன மாப்பிள்ளை கேக்கிறேன். டீலா? நோ டீலா?” என்ற அவளின் நேர்பேச்சில் முதல் முறை தடுமாறி இருந்தான் ராமகிருஷ்ணன்.

 

கலைந்த நினைவுகளில், தன்னவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். இவள் தன் வாழ்வில் வந்த பிறகு மலைபோல தோன்றியவை யாவும் துரும்பாய் மாறி போன அதிசயத்தை இவனும் உணர்ந்தே இருந்தான்.

 

“ஏன் டீ, எல்லாரும் என்னை கோவபடுத்துற மாதிரியே நடந்துக்கிறாங்க?” அவன் அர்த்தமற்ற கேள்வியில் இவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

 

“இங்க யாருமே உன்ன கோபபடுத்துல, நீங்க தான் பாஸ் உப்பு பெறாத விசயத்துக்கு எல்லாம் எரிஞ்சு விழுறீங்க” என்று அவன் தலையை கலைத்து விட்டவள், “லன்ச்க்கு எங்காவது வெளியே போலாமா?” என்று கேட்டு அவனை மடைமாற்றம் செய்தாள்.

 

சின்னதாய் சிரித்தவன், “ம்ம் போலாம் சீக்கிரம் ரெடி ஆகு” என்று விட்டு, “ஒருவேளை உன்ன மிஸ் பண்ணி இருந்தா, நான் லைஃப்ல ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன் டீ” என்று உணர்ந்து சொன்னான். ராம்கியின் இந்த ஒற்றை வாக்கியத்தில் மைத்ரேயின் காதல் கொண்ட மனம் நிறைந்து போனது.

 

“ஆமாமா உங்களையும் உங்க பொண்ணுங்களையும் சமாளிக்கிறதுக்கு நான் ஒருநாளைக்கு பத்து வேளை சாப்பிட்டாலும் எனக்கு பத்தாது” என்று சத்தமாக சொன்னாள். 

ராமகிருஷ்ணன் சமாதானம் ஆகிவிட்டதை தன் மாமனார், மாமியாருக்கும் உணர்த்தும் பொருட்டாய்.

 

# # # # # # # #

 

நிலமகளின் தலை வகிடாய் நீண்டு கிடந்த தார்ச்சாலையில் அந்த மகிழுந்து மிதமான வேகத்தில் ஊர்ந்து சென்றது.

 

‘தென்னூர் அன்புடன் வரவேற்கிறது’ என்ற பெயர்ப் பலகையைக் கவனித்தவுடன் அவன் முகத்தின் பொலிவு கூடியது.

 

அவன் ஸ்ரீராம்… சிறு வயதில் பிரிந்து சென்ற தன் கிராமத்திற்கு பருவ வயதில் வருகை தந்தவன், தன் தொழிற் திறமையால் பெரிய வீட்டை புது பொலிவோடு ஆக்கி தந்தவன்.

 

அவனுக்கு இந்த கிராமத்தின் பொக்கிஷ பரிசாக கிடைக்கப் பெற்றவள் தான் சீதா, நட்பாய் வந்து அன்பை தந்து, மனைவியாய் சேர்ந்து முடிவிலா காதல் தருபவள். 

 

இந்த கிராமமும் பெரிய வீடும் அவன் வாழ்வில் ஏற்றமான சந்தோச மாற்றங்களை தந்தன தந்து கொண்டிருக்கின்றன. சீதாவுடனான திருமண வாழ்க்கை குறைவில்லா நிறைவை தர, நண்பர்களின் உறுதுணையாலும் தன் திறமையாலும் அவர்கள் தொடங்கிய கட்டுமான தொழில் இத்தனை வருடங்களில் நல்ல வளர்ச்சி நிலையை எட்டி இருந்தது. 

 

மேலும் தன்னவளுக்கு பாட்டின் மீதிருந்த தீரா ஆர்வத்தை ஊக்குவித்து, தன் நண்பனின் நண்பன் வழி நண்பன் தயாரித்த ஆல்பத்தில் சீதாவை பாடவைத்து அவளின் தனித்துவமான திறமைக்கு உறுதுணையாகவும் நின்றான். சீதாவின் குரல்வளம் அனைவரையும் ஈர்க்கும் என்பதில் இவனுக்கு சந்தேகம் இல்லை தான் என்றாலும் இந்த சில வருடங்களில் இசை துறையில் அவள் எட்டிய உயரம் இவனும் எதிர்பாராதது. தன் உயிரானவளின் வளர்ச்சி கண்டு இவனும் பூரித்து போயிருந்தான்.

 

இது மாலை நேரமானதால், ஊரின் எல்லையில் இருந்தே சாலையோரங்கள் இருபுறமும் சீரியல் வண்ண விளக்குகள் மின்ன தொடங்கின. ‘செல்லாத்தா செல்ல மாரியாத்தா, என் சிந்தையில் வந்து ஆடி நீ ஆடி நில்லாத்தா’ ஒலி பெருக்கியில் பக்தி பாடல்கள் ஒலிக்க, ஊரே திருவிழா கோலம் பூண்டிருந்தது.

 

நாளை விடிந்ததும் எல்லையம்மன் கோயில் திருவிழா, தன் குடும்பத்தினர் அனைவரும் முன்பே வந்திருக்க, தன் தொழில்முறை‌ முக்கிய சந்திப்புகளை முடித்துவிட்டு ஸ்ரீராம் இப்போது தான் வருகிறான்.

 

முதல்முறை போலவே இப்போதும் ஒவ்வொரு முறையும் அவன் கிராமம் அவனை அன்போடே வரவேற்கிறது. பெரிய வீட்டின் முன் காரை நிறுத்தி விட்டு இறங்கி வந்தவனுக்கு சின்ன ஏமாற்றம், தன் மனைவியும் குழந்தைகளும் தனக்காக வாசல்வரை ஓடிவராதது.

 

அன்னை கௌதமியும் அண்ணி தேவிகாவும் தான் ஸ்ரீராமை முன்வந்து அழைத்தனர்.

 

“ஏன் ஸ்ரீ இவ்வளவு லேட்?” கௌதமி கேட்க, அவர் தந்த தண்ணீரை வாங்கி பருகியவன், “மீட்டிங் முடிஞ்சு‌ கிளம்பவே லேட் ஆகிடுச்சு மா” என்று வாய் பதில் தர, அவன் பார்வை தன் மனைவி மக்களை அலசியது.

 

“சரி நீ போய் கை, கால், முகம் கழுவிட்டு வா, நான் காஃபி எடுத்துட்டு வரேன்” என்று கௌதமி உள்ளே செல்ல, 

 

“அண்ணி, பாப்பு, பசங்க எல்லாம் எங்க?” ஸ்ரீராம் ஆர்வமாக வினவினான்.

 

“தோட்டத்தில இருக்காங்க ஸ்ரீ, நீயே போய் பாரு அவங்க அடிக்கிற கூத்தை” என்று சொல்லி நகர்ந்தாள்.

 

ஸ்ரீராம் கால்கள் தோட்டத்து பக்கம் நடந்தன. மனம் மனைவியை உரிமையாய் கோபித்துக் கொண்டது. ‘பத்து நாள் கழிச்சு வந்திருக்கேன், என்னைவிட உனக்கு தோட்டம் முக்கியமா போச்சா பாப்பு’ என்று.

 

அப்போதே அவளின் பாட்டோசை இவன் செவிமடுத்தது.

 

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை!

 

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை!

 

எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்?

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்?

 

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை!

 

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை!

 

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்?

 

க – கமகம – ரிமகரி – ஸநிரி – ஸ

பமகம – தமக – ரிஸநிரி – ஸ

கம – ஸநிஸ – தநிமத – கமரிக – ஸ

நிஸதநி – ஸ

நிஸம – கக

நிஸ – பமம – க

ஸநிஸ – கமக

ரிநித – மமக

கமக – க – கமரிக

நிரிநிக – ரிமகரிஸ

பமத – மநி – தநிமத – கமரிக – ஸ”

 

காட்டில் தொலைந்தேன்

வழியாய் வந்தனை!

 

இருளில் தொலைந்தேன்

ஒளியாய் வந்தனை!

 

எதனில் தொலைந்தால்

எதனில் தொலைந்தால்

நீயே வருவாய்?

 

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை!

 

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை!

 

பள்ளம் வீழ்ந்தேன்

சிகரம் சேர்ந்தனை!

 

வெள்ளம் வீழ்ந்தேன்

கரையில் சேர்ந்தனை!

 

எதனில் வீழ்ந்தால்

எதனில் வீழ்ந்தால்

உன்னிடம் சேர்ப்பாய்?

 

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை!

 

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை…!”

 

தன் சின்னாவை மனதில் இறுத்தி, சீதா நெகிழ்ந்து பாடிக் கொண்டிருந்தாள்.

 

ஸ்ரீராம் தோட்டத்தை அடையும் போது தன்னவளின் காதல் ததும்பி வழியும் உயிர் உருகும் குரலில் ஊண் உருகி நின்று விட்டான்.

 

அங்கே, நால்வரும் சேர்ந்து புதுச் செடிகள் ஊன்றி தண்ணீர் தெளித்து கொண்டிருந்தனர். 

 

சீதா செடிகளை நட, ஐந்து வயது சிறுமி பவித்ரா தண்ணீர் ஊற்ற,‌ நான்கு வயது சிறுவனுடன் இளைஞசனாக சக்திவேல் செடியை நட்டு கொண்டிருந்தான்.

 

“சரிதான் க்கா, காடு, கரை, தோட்டம், பூவுன்னு பாடி திரிஞ்ச உன்ன அவரை நினச்சு காதல் பாட்டு பாட வச்சுட்டாரே ஸ்ரீ மாமா” என்று சொல்லி சக்திவேல் சிரிக்க, “அட போடா, இன்னைக்கு வாரேன், நாளைக்கு வாரேன் சொல்லிகிட்டு பத்து நாளாச்சு… இப்பெல்லாம் சின்னாவுக்கு என்னைவிட அவக பிஸ்னஸ் தான் பெருசா போச்சு” என்று நொடிந்து கொண்டவளை இதழ்மடித்த சிரிப்புடன் பார்த்து நின்றான்.

 

ஸ்ரீராமை முதலில் பார்த்துவிட்ட ஆதித்யா, “அப்பா வந்தாச்சு” துள்ளி ஓடி வர, மகனை தாவி பிடித்து தூக்கிக் கொண்டவன், “ஆதி குட்டி என்ன செய்யறீங்க இங்க?” ஸ்ரீராம் கொஞ்சலாக கேட்க, “அம்மா, நான், பவிக்கா, சக்தி மாமா எல்லாரும் செடி வக்கிறோம் ப்பா, அது பெருசாகி நிறைய ஃபுரூட்ஸ் கொடுக்குமா” என்று அவன் பதிலில் மகிழ்ந்தவன், மகனின் பட்டு கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு, “குட் மை பாய்” என்று பெரிய சாக்லேட் ஒன்றை அவனிடம் கொடுத்தான்.

 

அதை ஆசையாக வாங்கி அவன் சாப்பிட, “சித்தப்பா எனக்கும் சாக்லேட்” என்று அவனிடம் வந்தாள் பவித்ரா. “உங்களுக்கு இல்லாததா பவி குட்டி. இதோ” என்று அவளிடமும் ஒன்றை கொடுக்க, இரு குழந்தைகளும் துள்ளி குதித்து உள்ளே ஓடின.

 

“ஊருக்கு வந்ததும் அக்காவுக்கும் தம்பிக்கும் தோட்டத்து வேலை தானா சக்தி” சேறுபடிந்த தன் கைகால்களை கழுவிக் கொண்டு வந்த தன் சீதாவை ஒருபார்வை பார்த்து விட்டு, சக்திவேலிடம் கேட்க, 

 

“அட நீங்க வேற மாமா, நீங்க ஒருபக்கம் கன்ஸ்ட்ரக்ஷன் ஒர்க், மீட்டிங்னு பெங்களூர் ஓடுறீங்க, அக்கா ரெக்கார்டிங், டிஸ்கஷன்னு சென்னை பக்கம் ஓடுறாங்க, ஊர் திருவிழா ஆனதால தான் உங்க ரெண்டு பேரையும் என்னால சுலுவா பாக்க முடியுது… அதான் சந்தையில இருந்து நந்தியாவட்டம் செடியும், நெல்லி செடியும் வாங்கியாந்தேன் அக்காவுக்கு பிடிக்கும்னு” என்று சக்திவேல் வழக்கம் போல நீளமாக வளவளத்தான். 

 

“எங்க வேலை அப்படி டா என்ன செய்ய? அப்புறம் உன் காலேஜ் எப்படி போகுது?” ஸ்ரீராம் விசாரிக்க, “அது நல்லாவே போகுது‌ மாமா, என்ன காடு, கழனி பத்தி இன்னும் அதிகமா தெரிஞ்சுக்கிறேன், சந்தோசமா தான் இருக்கு ஸ்ரீ மாமா” 

இப்போது சக்திவேல் முதுநிலை வேளாண் படிப்பு படித்து வருகிறான். 

 

இன்னும் சற்று நேரம் வாயடித்து விட்டு அவன் விடைப்பெறவும், சீதா, “பயண அலுப்பு தீர குளிச்சிட்டு வாங்க, நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வாரேன்” என்று நகர்ந்தவளை கைப்பற்றி நிறுத்தியவன், “என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு, என் பாப்புவ அவ்வளவா ஏங்க வச்சுட்டேன்” என்க.

 

“பின்ன இல்லையா, சக்தி சொல்ற மாதிரி நீங்க ஒருபக்கம் நான் ஒருபக்கம்னு சுத்திட்டு கிடக்கறோம், இப்பெல்லாம் எதுவுமே வேணா, உம்ம கூட இருந்தா மட்டும் போதும்னு தோணுது சின்னா” என்னவளின் தோளணைத்துக் கொண்டவன், “என் மக்கு பாப்பு, உன்னோட ஃபீல்ட்ல உனக்குன்னு தனி இடத்தை பிடிச்சு இருக்க, அதுவும் நேஷனல் அவார்ட் கிடைக்கிறதெல்லாம் எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா? நீ பாடுடி, நான் இன்னும் கொஞ்சம் அதிகமா உன்னோட, பசங்களோட டைம் ஸ்பெண்ட் செய்ய ட்ரை பண்றேன், சரியா” என்று எப்போதும் போல நிதானமாக பேசி அவளை சமாதானம் செய்தான். அவள் தலையாட்டி கொண்டாள்.

 

“ஆமா ஆஹிரி குட்டி எங்க காணோம்?” ஸ்ரீராம் தன் மகளை வினவ, “தூங்கிட்டு இருக்கா, அப்பா வேணும்னு அடம்பிடிச்சுட்டே இருந்தா” என்று இருவரும் தங்கள் அறைக்குள் வர, அங்கே கட்டிலில் இரண்டு வயது பெண் குழந்தை ஆஹிரி, சிறு பூவாய் உறக்கத்தில் இருந்தாள்.

 

ஸ்ரீராம் குளித்து விட்டு வந்ததும் உறக்கம் கலைந்த மகளும், மகனும் அவனை பிடித்து கொண்டனர். மாலை தேநீர் பருகிய படி, அப்பா, அண்ணன், அண்ணியுடன் பேசி விட்டு, தன் மாமனார் வீட்டுக்கு சென்று மரகதம் அத்தையிடமும் சங்கரன் மாமாவிடமும் அளாவி விட்டு வந்தான்.

 

ஊர் முழுவதும் திருவிழா கோலம் பூண்டு ஜகஜோதியாக இருந்தது. குடும்பம் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை முடித்து கொண்ட பிறகும் கூட, உறக்கம்‌ பிடிக்காமல் ஸ்ரீராம், ஆதித்யா, ஆஹிரி தங்கள் அறையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

வேலை முடித்து அனைவருக்கும் பால் எடுத்து வந்த சீதா, “விளையாடினது‌ போதும், நேரமாச்சு எல்லாரும் பால் குடிச்சுட்டு தூங்குங்க, நாளைக்கு சீக்கிரம் எழுந்து கோவிலுக்கு பொங்கல் வைக்க போகணும்” என்றாள்.

 

திருவிழா என்றதும் குழந்தைகள் பாலை குடித்து விட்டு நல்லத்தனமாக படுத்துக் கொண்ட பின்னரும் தூக்கம் சேராமல், கதையடித்து கொண்டிருந்தனர்.

 

“அப்பா நாளைக்கு திருவிழாவில எனக்கு ரிமோட் கார் வேணும்” ஆதித்யா கேட்க, “நம்மூர் திருவிழாவில கிடைக்குமான்னு தெரியலையே ஆதி, இருந்தா கண்டிப்பா வாங்கி தரேன்” ஸ்ரீராம் உறுதி தர,

 

“ப்பா… எக்கு பயூன்” ஆஹிரியும் அப்பாவின் சட்டையை பிடித்து இழுத்து கேட்க, ஸ்ரீராம் அவள் கேட்பது விளங்காமல் மனைவியை பார்த்தான்.

 

“அவளுக்கு பலூன் வாங்கி தரணுமா” சீதா சொல்லவும், “ஆஹி குட்டிக்கு இல்லாத பலூனா, நிறைய வாங்கிக்கலாம்” ஸ்ரீராம் சொல்ல, குழந்தைகள் விடாமல் தந்தையிடம் மேலும் ஒவ்வொன்றாக கேட்டு கொண்டே சென்றனர்.

 

“போதும், நாளைக்கு போய் திருவிழா கடையை மொத்தமா விலை பேசிக்கலாம் இப்ப தூங்குங்க ரெண்டு பேரும், இல்ல நாளைக்கு தாமதமாகிடும்” சீதா அமர்த்தலாக சொல்லவும், “எனக்கு தூக்கம் வரலையே ம்மா” ஆதித்யா சிணுங்கவும், “ம்மா பாத்து பாது, பாப்பா தூங்குது” ஆஹிரி மழலை குரலில் தாயை தாலாட்டு பாடச் சொன்னாள்.

 

இதற்கிடையே ஸ்ரீராம், குறும்பு பார்வையால் சீதாவை அருகழைத்து கெஞ்சிட, இவள் வெட்கம் சிதறிய கண்களை தாழ்த்திக் கொண்டாள்.

 

“இப்ப அம்மா பாடுவாங்களாம், பட்டு குட்டிங்க ரெண்டு பேரும் சமத்தா தூங்குவீங்களாம் சரியா?” ஸ்ரீராம் சொன்னதும் இருவரும் தலையசைத்தனர்.

 

சீதா புன்னகை விரிய, தன் தேனமுத குரலில் காற்றில் இசை கூட்டினாள்.

 

ஆயர்பாடி மாளிகையில்

தாய்மடியில் கன்றினைப் போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான்

தாலேலோ

 

அவன் வாய்நிறைய 

மண்ணை உண்டு

மண்டலத்தைக் காட்டியபின்

ஓய்வெடுத்து தூங்குகின்றான்

ஆராரோ

ஓய்வெடுத்து தூங்குகின்றான்

ஆராரோ

(ஆயர்பாடி…)

 

பின்னலிட்ட கோபியரின்

கன்னத்திலே கன்னமிட்டு

மன்னவன் போல்

லீலை செய்தான் தாலேலோ

அந்த மந்திரத்தில் அவர் உறங்க

மயக்கத்திலே இவனுறங்க

மண்டலமே உறங்குதம்மா

ஆராரோ

மண்டலமே உறங்குதம்மா

ஆராரோ

(ஆயர்பாடி…)

 

நாகப்படம் மீதில் அவன்

நர்த்தனங்கள் ஆடியதில்

தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான்

தாலேலோ

அவன் மோக நிலை கூட

ஒரு யோக நிலை போலிருக்கும்

யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ

யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ

(ஆயர்பாடி…)

 

கண்ணனவன் தூங்கிவிட்டால்

காசினியே தூங்கிவிடும்

அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும்

போதை முத்தம் பெறுவதற்க்கும்

கன்னியரே கோபியரே வாரீரோ

கன்னியரே கோபியரே வாரீரோ…”

 

சீதா பாடி முடிக்கவும் குழந்தைகள் இருவரும் ஆழ்ந்து உறங்கி இருந்தனர். இவளின் சின்னாவும் அவர்களோடு சேர்ந்து உறங்கியதை பார்த்தவள் சிரித்து கொண்டாள். அவன் தலையை மெதுவாக கலைத்து விட்டு, பிள்ளைகளின் உச்சியில் மென்மையாய் இதழ் பதித்து நிறைவான மனதோடு தானும் கண் அயர்ந்தாள்.

    ****************முற்றும்***************

கதையில் இடம்பெற்ற கிராமிய பாடல்கள் அமைந்த நூல்கள்:

 

*ஜகந்நாதன், கி.வா. – மலையருவி.

 

*அழகப்பன்.ஆறு – நாட்டுப்புற பாடல்களில் திறனாய்வு.

 

*அன்னகாமு. சே – ஏட்டில் எழுதா கவிதைகள்.

 

*பாரதியார் பாடல்கள்.

 

*கிராமிய விளையாட்டு பாடல்கள்.

 

*வாய்மொழிப் பாடல்கள்.

 

*திரையிசை மற்றும் தாலாட்டு பாடல்.

      ******************நன்றி*************