கச்சேரி-2
மூன்று மாதங்களுக்கு முன்….
எனக்கு இப்போ கல்யாண வயசு தான் வந்துடிச்சி டி
Date பண்ணவா?
இல்ல chat பண்ணவா?
உன் கூட சேர்ந்து வாழ ஆசை தான் வந்துடுச்சி டி
Meet பண்ணவா?
இல்ல wait பண்ணவா?
என்று அந்த அறையில் டீவி அலறிக் கொண்டிருக்க யுக்தாவோ முகிலினியை திகிலாகப் பார்த்தாள்.
அவள் இருக்கும் மனநிலையில் அதை அடித்து நொறுக்கவும் வாய்ப்பிருக்கிறதே.. வேறுயாராய் இருந்தாலும் சரி ஆனால் இது முகிலினி ஆயிற்றே! வாய்ப்புக்கள் அதிகம்!
அவளது எண்ணம் சரியென்பது போல அந்த டீவியையே கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் முகி..முகிலினி..!
அவளது பார்வையில் பதறியவளாக ஓடிச் சென்று அதை அணைத்தவள் பின் ‘டீவி தப்பிச்சது!’ என்றொரு நிம்மதி பெருமூச்சுடன் அந்த அறையின் பால்கனி பக்கம் வந்தாள்.
இன்னும் முகிலினி கொதிநிலையில் இருப்பது எரிமலை வெடிக்கும் அவள் விழிகளே காட்டியது.
அவளும் பாவம் யாருக்காகவென்று பேசுவாள்..?!
முகிலினிக்காக பேசப் போனால் முல்லை புலம்பித் தள்ளிவிடுவார். சரி இவளை சமாதானம் செய்யலாம் என்றால்…ம்ஹூம்!! வாய்ப்பேயில்லை
அப்புறம் முகி வெடிக்கும் எரிமலைதான்! யாராலும் அவ்வளவு சீக்கிரம் அவளை கட்டுக்குள் கொண்டுவர இயலாது.
யுக்தாவோ உள்ளுக்குள் குமுறுவாள். வேறென்ன செய்ய பால்யகால நட்பு வேறு இதுவரை முகியுடன் இத்தனை காலம் தாக்கு பிடித்தவள் அவள் மட்டுமே!
யுக்தாவும் முகியும் பள்ளி காலத்திலிருந்து நண்பர்கள். வருடங்கள் பல ஓடியும் அவர்களிடையே ஆன அந்த நட்பு மட்டும் நாளுக்கு நாள் நெருக்கமானதே தவிர விரிசல் விழவே இல்லை.
யுக்தாவின் சிறுவயதிலேயே அவளது பெற்றோர்கள் இருவரும் ஒரு விபத்தில் இறந்துவிட… பாட்டியும் தாத்தாவும் மட்டுமே ஆறுதலாய்.. ஒரே பற்றுகோலாய் இருந்தனர். அதில் இன்னும் இனிமை சேர்ப்பதாய் அமைந்தது முகிலினியின் நட்பு.
முகிலினியினுடனான நட்பு அவளுடன் முடிந்துவிடவில்லை. காலப்போக்கில் யுக்தாவும் முல்லைக்கு இன்னொரு மகளாகிப்போனாள்.
அதனால்தானோ என்னவோ முல்லையின் வருத்தம் தோய்ந்த முகத்தை காண முடியாமல் முகிலினியுடன் பேச்சு வார்த்தையில் இறங்கிவிட்டாள்.
“கல்யாணம்…கல்யாணம்…கல்யாணம்!!! எப்ப பார்த்தாலும் இதே பேச்சு! அவ பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு! இவ பொண்ணுக்கு கொழந்த பொறந்துடுச்சு! சின்னவ பொண்ணு ஸ்கூலுக்கு போய்ட்டா! னு” என்று எரிமலைச் சிதறல்கள் முகியிடம்..!!
“நீ அவங்க பக்கத்துல இருந்தும் கொஞ்சம்…” என்று யுக்தா முடித்திருக்கவில்லை அதற்குள் பொங்கிவிட்டாள் பெண்.
“என்ன யோசிக்கனும்!? இல்ல என்ன யோசிக்கனும்ங்கறேன்?! அவங்க யோசிக்க மாட்டாங்களா?? நான்தான் சொல்றேனே எனக்கு கல்யாணம் வேணாம் கல்யாணம் வேணாம்னு..”
என்றவள் பொங்க யுக்தாவிற்கும் அவள் சொல்வதில் நியாயம் இருப்பதாகத்தான் பட்டது ‘அதானே…இப்போவே என்ன அவசரம்” என்றுத் தோன்றிய மறுகணமே முல்லையின் முகம் கண்முன் வந்துப் போக தன் எண்ணத்தை மாற்றியவளாக அவளிடம்
“ஏன் கல்யாணம் வேண்டாங்கறே??” என்றதுதான் மிச்சம் அதற்குபின் வந்த அரைமணி நேரமும் அவள் காதுமடல்கள் கன்றிச் சிவக்கும் வரை காரணங்களை அவள்முன் கொட்டியிருந்தாள் முகி!
ஒரு கட்டத்தில் யுக்தாவே ‘ஏண்டா இதை கேட்டோம்??’ என்று எண்ண ஆரம்பித்துவிட்டாள்.
ஆனால் இதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பதுபோல் அடுத்து முகிலினி உரைத்ததில் உறைந்துப் போனாள் அவள்!
“எவனாவது பொண்ணு பாக்கறேன் பன்னு கேக்கறேன்னு வரட்டும்! அப்புறம் இருக்கு! வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினான்ங்கற அளவுக்கு அவன ஓடவிடல அப்புறம் என் பேர் முகிலினி இல்ல!” என்று அவள் வீர வசனம் பேச இங்கு யுக்தாவுக்கோ நடுக்கமே வந்துவிட்டது.
‘இவ செஞ்சாலும் செய்வா’ என்று அவள் மனம் அடித்துச் சொல்ல அதையெல்லாம் எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் இறங்கினாள் யுக்தா!
முகிலினி!
மென்மையானவள்தான்…நல்ல குணம் படைத்தவள்தான்… பொருப்பானவள்தான்…ஆனால் கொஞ்சம் கோபக்காரியும்கூட!
Straight forward என்பார்களே…அந்த ரகம்!
தவறு என்று பட்டால் யார் என்னவென்றெல்லாம் பார்க்க மாட்டாள்! விளாசித் தள்ளிவிடுவாள்!
அதற்கு அவளிடம் நியாயமான காரணங்களும் இருக்கும்…ஆனால் யாருக்கும் அதை விளக்க மாட்டாள்!
அதற்கு மனமிருக்காது!
யார் தன்னைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள்? என்பதிலெல்லாம் அவளுக்கு கொஞ்சமும் ஆர்வமில்லை.
‘என்னைப் பற்றி நல்லவிதமாக பேசுகிறாயா? சரி!… தவறாக பேசுகிறாயா? அப்பொழுதும் சரிதான்!’
ஆகமொத்தத்தில் எல்லாவற்றையும் ஒரு ‘ஆஹான்’ உடன் கடந்துவிடுவாள்.
அது பாதியே முல்லைக்கு வருத்தம்!
“என்னங்க இந்த பொண்ணு இப்படியிருக்கா???” என்று அவர் கதிரவனிடம் புலம்பாத நாட்கள் மிகவும் குறைவுதான்!
பக்கத்து வீட்டு கோமளாவிலிருந்து எதிர்த்தவீட்டு அகல்யா வரை எவரேனும் வந்து அவரிடம் “உங்க பொண்ணு என்ன பண்ணா தெரியுமா??” என்று வந்தாலோ
“எங்க பொண்ண பத்தி எங்களுக்குத் தெரியும்…உங்க பையன நேத்து…” என்று கதிரவன் ஆரம்பிக்கும் முன் வந்தவர்கள் வந்த வேகத்தில் ஓடியிருப்பர்!
‘பொண்ண பெத்தவனுக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா பாரேன்??? ‘என்ற புலம்பல்தான் அவர்களிடமிருந்து வரும். ஆனால் அதையெல்லாம் அந்த வீட்டில் எவரும் கண்டும் காணாதுபோல் இருந்துவிடுவர்.
ஆனால் முல்லையால்தான் அப்படி இருக்க முடியாமல் புலம்பித் தள்ளுவார்.
அவருக்கு அவர் மகளின் எதிர்காலத்தை நினைத்து பயம்!
கதிரவன்-முல்லை தம்பதியின் மூத்த மகள்தான் முகிலினி இளையவன் சஞ்சயன். முகிலினியைவிட நான்கு வயது இளையவன். கல்லூரி காலத்தின் அத்தனை கொண்டாட்டங்களையும் ரசித்துக் கொண்டிருக்கிறான்.
கதிரவன் ஒரு தனியார் வங்கியில் பணியில் இருக்கிறார்.
முல்லை இவர்கள் அனைவரையும் கண்ணுக்குள் வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்.
அவர்களது அழகான அளவான குடும்பம். சந்தோஷங்களுக்கு பஞ்சமிராது.
முகிலினியையே பார்த்திருந்த யுக்தாவோ தலையை பிய்த்துக் கொள்ளும் நிலைதான்! இவளிடம் இவ்வளவு துள்ளும் முகி அவள் பெற்றோர்கள் முன் பார்க்க வேண்டுமே?
அவள் அவர்களிடம் பேசுவதே அவ்வளவு மென்மையாக இருக்கும்…கல்யாணப் பேச்சு வராத வரை
கல்யாணம்! என்ற பேச்சை எடுத்தால் போதும் இந்த பாசப் பைங்கிளி பத்ரகாளிதான்!
***************************************
ஒத்தையடி பாதையில
தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில
தேடி வாடுறேன்.
சந்தன மாலை
அள்ளுது ஆள
வாசம் ஏருது.
என் கிளி மேல சங்கிலி போல
சேர தோணுது.
சக்கர ஆல சொக்குது ஆள
மாலை மாத்த
மாமன் வரட்டுமா….
என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அதனுடன் இணைந்து ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்து பாடிய வண்ணம் கிளம்பிக் கொண்டிருந்த தன் அண்ணனையே வாசற்படியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஜீவா
“என்ன மகிழா?! பாட்டெல்லாம் பலமா இருக்கே!?” என்றான் கிண்டலாக
“போடா டேய்!” என்று வாய் மொழிந்தாலும் கண்கள் சிரிப்பில் சுருங்கின அதை கண்டு கொண்டவனாக
“டேய்!! டேய்!! அண்ணா!!!” என்று மகிழனின் இடுப்பில் கிள்ள அவனோ துள்ளினான்.
இவர்கள் அறையை கடந்துச் சென்ற ஆனந்தனோ தலையில் அடித்தபடி வந்தவர் முற்றத்தில் அமர்ந்திருந்த தாமரையிடம் “ஏழுகழுத வயசாச்சு!! இன்னும் கிச்சுகிச்சு மூட்டி விளையாடுறானுங்க!” என்றார் குறையாக தாமரை சின்ன சிரிப்போடு அதை ஒதுக்கியவராக உள்ளே நோக்கி குரல் கொடுத்தார்.
“மகிழா!!! ஜீவா!!! ரெண்டுபேரும் சாப்பிட வாங்க!!!” என்று அழைத்துவிட்டுச் சென்றார்.
மகிழன்!
பெயருக்கேற்றார்போல் எப்பொழுதும் ஒரு புன்சிரிப்பு அவன் இதழ்களில் தவழும் வரம் பெற்றவன்!
தன்னுடன் இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளத் தெரிந்தவன் அவன்!
ஆனந்தன்-தாமரை தம்பதியின் மூத்த மகன்! படித்து முடித்துவிட்டு தற்பொழுது நல்ல உத்யோகத்தில் வீற்றிருப்பவன்.
இளையவன் ஜீவன்! கல்லூரி கலாட்டாவில் நேரமில்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவன்.
“சந்தனைமாலை அள்ளுது ஆளை…..ம்ம்ம்” என்று தன் எதிரில் அமர்ந்து தட்டில் வைக்கப்பட்ட இட்லியுடன் போராடிக் கொண்டிருந்த மகிழனை பார்த்து ஜீவன் பாடி வைக்க…
மகிழனோ தன் பார்வை தட்டிலிருந்து அகற்றாது மேசைக்கு அடியில் காலை நீட்டி ஜீவனின் காலிலேயே ஓங்கி ஒரு மிதித்துவிட…
“ஆஆஆ!!!” என்று கத்தியதோ ஆனந்தன்.
‘அடியாத்தி!!! அவசரத்துல இவர் காலை மிதிச்சு தொலைஞ்சிட்டோமே!!!’ என்று அவன் திருதிருவென விழித்தான் என்றால் ஜீவனோ நடந்ததை கணித்து விட்டவன்போல விஷமமாய் சிரித்தான்.
என்ன நடந்திருக்க கூடும் என்று யூகித்த தாமரையோ இளைய மகனை அடக்கினார்.
“ஜீவா!!!” என்றவரின் அழுத்தமான குரலில் ஸ்விட்ச் போட்டார்போல் தலையை குனிந்து கொண்டு இட்லியில் தன் கவனத்தை பதித்தான்.
தாமரையை நன்றியுடன் பார்த்த மகிழன் எங்கு ஆனந்தன் ஆரம்பித்துவிடுவாரோ என்ற பயத்தில் அங்கிருந்து தப்பியிருந்தான்.
*****************************************
மிஸ்டர்.சூரியன் மக்கள்மேல் தனக்கிருக்கும் காதலை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருந்தார்.
காலை மணி ஒன்பதரைகூட இருக்காது ஆனால் அந்த நெரிசலிலும்…வாகனங்களில் இருந்து வந்த புகையாலும் வேர்த்து வழிய வண்டியை உருட்டிக் கொண்டிருந்தான் மகிழன்!
‘இப்படிபோய்…என்னைக்கு நான் ஆஃபிஸ் போய்ச் சேர???’ என்றெண்ணியன் பின் ‘அய்யோ டீம் லீட் தகரடப்பா வேற ஹாட்பாக்ஸாயிருமே!!!’ என்று வண்டியை கொஞ்சம் ஓரம் கட்டியவன் ஒரு குறுந்தகவலை அந்த தகரத்துக்கு தட்டிவிட்டிருந்தான்.
ஃபோனை உள்ளே வைக்க போனவனின் பர்ஸ் கீழே விழ அதை குனிந்து எடுத்தவனின் காதில் வந்து மோதியது அந்த ‘ப்ளார்’ சத்தம்!
‘என்ன சத்தம் இந்த நேரம்???’ என்று அவன் மனமோ சிட்ச்சுவேஷன் பாட்டு பாட நிமிர்ந்து பார்த்தவனோ அதிர்ச்சியில் உறைந்து போனான்!
“அடியாத்தீ!!! இவ அவ-ல????”
கச்சேரி களைகட்டும்!!!!