காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்

      காதாலிக்க கற்றுக்கொள்ளுங்கள்…

 

சுற்றிலும் விவசாயத்தின் சாயலாக நெற் கதிர் முற்றியிருக்க. ஒரு பக்கம், தென்னை மரங்கள் முன்னூறு ஏக்கர் வரை கம்பீரமாக நிற்க. இன்னொரு பக்கம், வாழைகள் நான் வாழைத்தார் வெட்டுகள் தயார் என்பது போல் இருக்க. தக்காளி, அவரை, வெண்டிக்காய் என அந்த மண்ணிற்க்கு ஏற்றார் போல் விதைத்து, அதை அறுவடை செய்வதற்க்கும், சந்தையில் விற்ப்பதற்க்கும்.

 

ஆனால் இப்போது அறுவடை செய்வது பெரிய வீட்டின் விழாவிற்க்கு கொண்டு செல்ல. அவர்கள் விடியலின் முன்னே தொடங்கிய வேலையை இதோ எல்லாம் தயாராகி மாட்டு வண்டியில் ஓவ்வொரு கூடையாய் ஏற்றிகொண்டிருந்தார்கள் அவர்கள்.

 

ஆம், பெரியவீட்டில் விழா.. அதுவும் சாதாரண விழா அல்ல. அந்த வீட்டின் இளவரசியான, சிவநாதன் – மீனாட்சி தம்பதியின் மகளுக்கு இன்று பூப்புனித நீராட்டு விழா. உற்றார், உறவினர் மட்டுமின்றி, அந்த முழு கிராமமே அந்த பெரிய வீட்டில் விழாவை சிறப்பிக்க வந்திருந்தது.

 

”மீனா.. சமையல் எல்லாம் ஆச்சா.. விழா முடிஞ்சதும் சனங்களுக்கு பந்தி தயாரா இருக்கனும் பார்த்துக்கோ.” சிவநாதன் மனைவியிடம் கட்டளையாக சொல்ல.

 

“எல்லாம் தயாராகிட்டே இருக்கு.. நீங்க முதல்ல வாசல்ல நின்னு வர்ரவங்களை பாருங்க. அப்படியே, ஆம்பிளைகளுக்கு உக்காருரதுக்கு சேர் எல்லாம் சரியா இருக்கானு பாருங்க.” மீனாவும் பதிலுக்கு அவரிடம் வேலையை சொல்ல.

 

”ஏய்.. மீனாட்சி.. இந்த செல்வி எங்க போன… வன்னாத்திய கூப்பிட்டு வரசொன்னேன். இவ எங்க போனான்னு பாத்தியா மீனாட்சி.” மகனுக்கு குறையாத அம்மாவாக பேச்சி மீனாவிடம் செல்வியை பற்றி கேட்க.

 

“ஆத்தா… கூப்பிட்டு வந்துட்டேன்.. ஏன் காது ஜவ்வு கிழியிற அளவுக்கு கத்துற.” என்ற்படி வந்தாள் அந்த வீட்டில் சிறு வயது முதல் இருந்து, இப்போது வேலையும் செய்துகொண்டிருக்கும் செல்வி வந்தாள்.

 

“ஏன் டி சொல்லமாட்ட.. இருந்து இருந்து என் பேத்தி இப்போ வயசுக்கு வந்திருக்கா. அவளோட விசேஷம், ஒரு குறையும் வரகூடாதுனு பார்த்து பார்த்து செய்யிற என்னை பார்த்து கத்துரேனு சொல்லுற. உன் வாயி.. உசிலம்பட்டியை தாண்டி மதுரைக்கு போகும்னு எனக்கு தெரியாத டி.”

 

“ஆமா.. என் வாயி அந்த அளவுக்கு நீலம் தான். அம்மா.. இந்த ஆத்தா என்னை குறை சொல்லுது நீங்களும் பார்த்துட்டு இருக்கீங்க.” தனக்கு ஆதரவு சேர்க்க மீனாவை அழைக்க.

 

”என் கண்ணுல.. இன்னைக்கு ஒரு நாள் அத்தை சொல்லுறதை காதுல போட்டுக்காத புள்ள. வா.. அந்த மரக்காவ எடுத்துட்டு வரலாம் என்கூட வா.” மாமியாரிடம் இருந்து நேக்காக செல்வியை அழைத்துகொண்டு கிழக்கு அறைக்கு சென்றார்.

 

ரோடியோவில் தொண்ணூறுகளில் இருந்து வெளியான இளையராஜ, எஸ்.பி.பி பாடல் முதல் கொண்டு இன்றைய காலங்களில் வெளியான பாடல் வரை அனைத்து ஒலித்துகொண்டிருக்க. பெரிய வீட்டில் ஒவ்வொரு வேலையையும் ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் செய்துகொண்டிருக்க. சிவநாதனுக்கு அழைப்பு வந்தது, விழாவின் நாயகியின் தாய்மாமானிடம் இருந்து.

 

“சொல்லுங்க மச்சான்… கிளம்பிட்டீங்களா.. எங்க வரீங்க.”

 

“ஊருக்கு உள்ள நுழைஞ்சுட்டோம் மாமா.. தங்கச்சிய எங்க.”

 

“அப்படியா.. மச்சான்.. உங்க தங்கச்சி உள்ளார வேலையா இருக்கா. எதுவும் முக்கியமானதா மச்சான்..”

 

“அப்ப்டியில்லாம் இல்லை மாமா..” சொல்லி பேச்ச முடிக்க.

 

இரண்டு லாரியில் மக்கள் கூட்டத்துடன் உள்ளே நுழைந்தது அந்த குவாலிசி கார்கள். முன்னே மூன்று கார்கள் வர, அதை தொடர்ந்து இரண்டு லாரி மக்கள் வந்து இறங்கினர் அந்த பெரிய வீட்டின் முன்.

 

“சிவா.. மீனாட்சி அண்ணோட வீட்டுல இருந்து ஆளுங்க வந்துட்டாங்க. மீனாட்சிய கூப்பிடு அப்படியே உன் ஆத்தாலையும் கூப்பிடு.” சம்மந்தி வீட்டின் வருகையை மகனிடம் சொல்லிகொண்டே அவர்களை வரவேற்க்க சென்றார் தங்கபாண்டி.

 

“இதோ கூப்பிட போரேன் ப்பா..” மீனாட்சியை அழைக்க உள்ளே சென்றார்.

 

சாதாரணமாக கல்யாணமான பெண்கள் பிறந்த வீட்டின் உறவுகளையோ, ஊர் மக்களையோ பார்த்தால் போதும் பெத்த தாயை கண்டது போல் மகிழ்ச்சியில் இருப்பார்கள். இதுவோ மகளின் நீராட்டு விழா, அதில் பிறந்த வீடு மட்டுமின்றி பிறந்த ஊரில் இருந்த அத்தனை சனங்களையும் கண்டதில் மீனாவிர்க்கு கண்களில் நீர் கோர்த்துகொண்டது. இந்த மாதிரியான விழாவின் போது, ஒட்டு மொத்த சொந்தமும் ‘நான் இருக்கிறேன்’ எனபது போல காட்டுவது ஒரு பெண்ணிற்கு பெருமையும் கூட.

 

“வாங்க.. வாங்க.. சம்மந்தி..” தங்கம் வரவேற்க.

 

மீனாவின் அன்னையும், தந்தையும் “வரோம் சம்மந்தி..”

 

“என்ன மாமா நல்லா இருக்கீங்களா..” மீனாவின் அண்ணன் சுந்தரம் கேட்க.

 

“ரொம்ப நல்லா இருக்கேன் மாப்பிள்ளை.. வாம்மா.” சுந்தரத்தின் மனைவி மோகனாவையும் வரவேற்க.

 

ஊரில் இருந்து வந்த அனைவரையும் வரவேற்று அழைத்து வரும் போது.. சரியாக ரோடியோவில்,

தாய் மாமன் சீர்சுமந்து வாராண்டீ
அவன் , தங்க கொலுசு கொண்டு தாரண்டீ
சீறு சுமந்த சாதிசனமே , ஆறு கடந்த ஊரு வருமே
சீறு சுமந்த சாதிசனமே , ஆறு கடந்த ஊரு வருமே..” பாடல் சரியாக ஒலிக்க.

 

மீனாவும், சிவநாதனும் அனைவரையும் வரவேற்று, உள்ளே அழைத்து சென்றனர். ஊர் மக்களை அமர ஒரு பக்கம் முழுவது இருக்கைகளும், ஆறு ஜமுக்காலமும் விரிக்க பட்டு இருக்க. கொண்டுவந்த சீர்களை சபையின் முன் வைக்கை மூணு ஜமுக்களமும் விரிப்பு விரிக்கப்பட்டுயிருந்தது. தாய் மாமான் சீரின் பெரும் பங்கு வகிப்பது, கூரை தாவணியும், சேலையும் அதனுடன் பெண்ணுக்கு அணிவிக்கும் தங்கம் நகை. அந்த நகையின் ஒர் பாரம்பரியம் இருப்பது உண்மை.

 

“எல்லா தயாரா இருக்கு.. பொண்ணை அழைச்சிட்டு வந்து சபையில உட்க்கார வச்சு நல்லெண்ணையும், சிக்காயும் வச்சு விட்டு தீட்டு கழிக்கனும்.” கூட்டத்தில் ஒரு பெரிய பெண்மனி சொல்ல.

 

“செல்வி, போய் பாப்பாவ அழைச்சுட்டு வா..” செல்வியை ஏவ.

 

விழாவின் நாயகியோ பதுமையாக நடந்து வந்தாள். அவள் அணிந்திருந்த சாதாரண தாவணியில் அவளின் அழகு மிளிர்ந்துகொண்டிருந்தது. கிராமத்து வாசத்துக்குரியவாளாக இருந்தாள். வயதுக்கு வந்ததால், உடல் கொஞ்சம் பூசினார் போல் இருந்தது. முகம் அதற்கேற்றவாறு ஜொலிப்பாக இருந்தது.

 

வயதுக்கு வந்த பெண்ணின் முகம் யாரும் பார்க்க கூடாது என்பதற்காக மறைவாக அமரத்தப்பட்டு இருந்தாள். மோகனா, அவளுக்கு நல்லெண்ணையு, சிக்காயும் மூன்று முறை வைத்து. கொல்லை புரத்திற்க்கு அழைத்து சென்றார். குளிக்க வைத்து, மீண்டும் ஒரு சாதாரணம் உடையை அணிந்து வர.

 

தாய் மாமன் உறவு தாய், தந்தையை விட முக்கியமான உறவு. தாய்க்கு பின் அவளின் பிள்ளையை தாய் போல பேணி காக்கா தான் இந்த தாய் மாமன் உறவை ஒவ்வொரு சடங்கிற்க்கும் முன் நிறுத்துவார்கள். அதுவும் பெண் பிள்ளைகளின் காது குத்துவதில், இருந்து அவளின் திருமண சீர் வரையிலும், சபையில் தாய் மாமன் உறவை தான் முன்னிலைப்படுத்துவார்கள். கிராமங்களின் இன்று வரையில் தாய் மாமன் உறவை விட்டுகொடுக்காமல் இருக்க சொந்தத்திர்க்குள் திருமணத்தை முடிப்பார்கள். ஒரு பெண் எந்த உறவையும் வேண்டுமேனாலும் விட்டுக்கொடுப்பாள். தாய் மாமனின் உறவை அவள் உயிர் போகும் வரை விட்டு கொடுக்கமாட்டாள். அந்த அளவிர்க்கு தாய் மாமனின் உறவு பலமானது.

 

“எங்கப்பா தாய் மாமான்ங்கள? கூப்பிடுங்க.. பொண்ணுக்கு சந்தனம், குங்குமம் வச்சு புது உடுப்ப கொடுக்கனும்ல நல்ல நேரத்துல சடங்க முடிக்கனும்.” பெரியவர் அழைக்க.

 

வரிசையாக வந்து நின்றனர் மீனாவின் அண்ணனும் தம்பிமார்களும். சுந்தரம், செல்வராசு, ஆனந்தன், பெருமாள். முதலில் சுந்தரமும், மோகனாவும் கையில் சீர் தட்டுடன் வந்தார்கள். சீர் தட்டில், ‘புது உடையான காஞ்சி பட்டு, வைர ஆராம். தங்க அட்டிகை, மோதிரம், மூக்குத்தி, ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம். வெற்றிலை பாக்குடன் இனிப்பு.’ இவைகள் அடங்கிய தாம்பூழத்தை. விழாவின் நாயகிக்கு சந்தனம், குங்குமம் வைத்து, ஆசீர்வதித்து கையில் கொடுத்தனர்.

 

”பொண்ணை கூப்பிட்டு போய் உடுப்பு மாத்தி அழைச்சுட்டு வாங்க சடங்க ஆரம்பிக்கனும்.” பெரியவர் சொல்ல, புது உடுப்புடன், தாய் மாமன் கொடுத்த அனைத்து அணிந்து கொண்டு வந்தாள் விழாவின் நாயகி.”

 

“இப்போ தாய் மாமன் மாலை போடுங்க..” சுந்தரத்தில் ரோஜா மாலையை கொடுத்து போட சொன்னார்.

 

“வாங்கப்பா… அடுத்து நீங்க மூனு பேரும் தான்.. நீங்களும் மாலை போட்டு பிள்ளைய ஆசீர்வாதம் பண்ணுங்க.” மற்ற மூவரும் மாலை போட்டு, பொட்டு வைத்தனர்.

 

“மீனா, உன் மகளை நீ வெளிய எல்லாம் கட்டிக்கொடுக்க தேவை இல்லை. இங்க பாரு, சிங்கமாதிரி உன் தம்பிகளே போதும். மூனு பேருல ஒருத்தருக்கு உன் மகளை கட்டிகொடுத்துரு. சிரமமே இல்லை, சொந்தத்துக்கு சொந்தமும் ஆச்சு, மகளையும் பக்கதுலே பார்த்துக்கலாம்.” அங்கிருந்த மூத்த பெண்மணி ஒரு சொல்ல, அதைக்கேட்ட மற்ற மூவரும் கண்டுகொள்ளாமல் அகன்றனர்.

 

“அதெப்படி முடியும், என் பேரன் இருக்கியல இவங்களுக்கு எப்படி என் பேத்திய கொடுப்பேன். என் பேரனுக்கு தான் என் பேத்தி. இங்காருடி.. சடங்குக்கு வந்தியா, சாப்பிட்டயா இருக்கனும், என் பேத்திக்கு மாப்பிள்ளைய காட்ட சொல்லலை.” பேச்சி பதிலுக்கு அவரின் மகள் பிள்ளையை கொண்டு வந்தார் அவரின் பேச்சில்.

 

“அட விடுக்கா, என்னமோ அடுத்த நாளே பரிசம் போட வர்ர போற மாதிரி பேசுரீங்க. பிள்ளையே இப்போ தான் வயசுக்கு வந்திருக்கு, அது போக, நாள் இருக்கு, வருஷம் கிடக்கு. இப்போ நடக்குறதை பாருங்க.” அந்த பெரியவர் இரு பெண்மணிகளின் வாக்குவாதத்தை நிறுத்தி வைத்தார்.

 

சடங்கு சம்பிரதாயங்கள் முடிய, பந்தி நடக்க ஆரம்பித்தது. வந்தவர்களையும், வாழ்த்தியவர்களை முதல் பந்தியில் அமர வைத்து உணவு பரிமாறப்பட்டது. பெரியவர்கள் நாட்டு நிலவரத்தை வெத்தலை போட்டுகொண்டு பேசிக்கொண்டிருக்க. பெண்கள், அடுத்தடுத்து அமர்ந்த சொந்தங்களை உணவு உண்ண அழைத்து சென்றனர்.

 

”செல்வி, பாப்பாவ அழைச்சுட்டு போ அறைக்கு.” பேச்சியின் கட்டளைக்கு விழாவின் நாயகியை அழைத்து சென்றாள் செல்வி.

 

“ஏம் புள்ள இப்படி அமைதியா இருக்க.. உனக்கு தானே சடங்கு வச்சாங்க.. போட்ட புடிச்சாங்க, ஆனா உன் முகத்துல சந்தோசத்தையே காணோம். இங்கபாரு புள்ள.. என்னாச்சு.. வவுறு வலிக்குதா… அப்படி தான் இருக்கும், போக போக வலி சரியாகிடும் புள்ள.” அமைதியின் திரு உருவமாய் அமர்ந்திருப்பளின் காரணம் என்ன செல்வி கேட்க. எதற்க்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

 

விழாவின் நாயகியின் மாலையை கழட்ட சென்றவளின் கையில் விழுந்தது கண்ணீர் துளி. விழாவின் நாயகியின் முகத்தை செல்வி ஏறிட்டு பார்க்க, கண்ணீருடன் நிமிர்ந்தாள் விழாவின் நாயகி குழலி.

 

”அவங்க வரவே இல்லை செல்வி.. என்கிட்ட இன்னைக்கு நான் தான் உனக்கு மாலையும், குங்குமமும் வைப்பேனு சொல்லிட்டு போனவுங்க வரவே இல்லை செல்வி.”

 

“யாரு.. தேனு அத்தையோட மகனா.. அந்த முகிலன் அண்ணனையா சொல்லுற.” செல்வி கேட்டதற்க்கு. குழலின் தலை ஆம் என அசைந்தது.

 

அதிர்ச்சியில் செல்வி நிற்க, குழலியின் வாய்மொழி சொல்லை கேட்டு அதிர்ந்து நின்றது இன்னொரு ஜீவன்.

 

மாயக்கண்ணனுக்கு புல்லாங்குழல் மீது

எவ்வளவு பிரியமோ அது போல

குழலியின் மீது உயிரே வைத்திருக்கும்

இன்னொரு ஜீவனின் காதலை குழலி

வாய்மொழி சொல்லால் கீறிவிட்டாள்.

இனி அந்த காயம் தழும்பாக மாறுமா?

இல்லை காயத்திற்க்கு மருந்தாவாளா குழலி

 

                                        தொடரும்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!