காதலின் விதியம்மா 19

Kv 2-95bab1ab

பவள தேசம், பல வளங்களை உள்ளடக்கிய மிக பெரிய பேரரசு. வற்றாத ஜீவ நதிகள், உலகத்தின் மிக பெரிய சிகரங்கள், அடர்ந்த காடுகள், வளமான மண், பல கண் கவரும் அருவிகள் என பல அதிசயத்தை உள்ளடக்கியது. 

 

மன்னர் விஸ்வகர்மா தர்மத்தை முன் நிறுத்தி ஆட்சி செய்ய எக்குறையும் இல்லாமல் குடிமக்கள் ஆனந்தமாக வாழ்க்கை நடத்தினார்கள். விஸ்வகர்மா நாட்டு மக்களை எவ்வாறு பேணி காப்பாறோ அதை விட பல மடங்கு தன் வீட்டு மக்களின் மேல் உயிரையே வைத்து இருக்கிறார். 

 

காதல் மனைவி சம்யுக்தா தான் அவரை ஆளும் ராணி. திருமணம் முடித்து ஐந்து வருடங்கள் ஆகியும் அதே நாணத்துடன் இருக்கும் மனைவி மேல் கொள்ளை பிரியம். ராஜ்யத்தின் அரசர் பல மனம் புரியும் நிலையில் இவரோ ஏகப்பத்தினி விரதர். அவர்களின் காதல் சாட்சி தான் அவர்களின் தவப்புதல்வன் அநபாயன். தற்போது தன் இரண்டாவது வாரிசை சுமப்பவளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கிறார். 

 

இவரின் சகோதரி சந்திரிகா. கடை இளவரசி. பல சேட்டைகளுக்கு சொந்தகாரி இவரின் சேட்டையில் தன்னை இழந்த ஆத்ரேயன் தனது சிநேகிதன் விஸ்வகர்மா விடம் தன் மனதில் இருக்கும் பிரியத்தை சொன்னதும் தன் சகோதரியின் சம்மதத்துடன் அடுத்து வந்த நன்னாளில் இருவருக்கும் மணமுடித்து வைத்தார். இவர்களின் காதல் பரிசு சந்திரிகாவின் மணி வயிற்றில் வளர்ந்து வருகிறது. 

 

மார்க்கண்டேயன், மாற்றான் தாய் மகனை தனது சொந்த சகோதரனாக விட மேலாக பிரியத்துடன் பார்த்து கொள்வார். இவரின் துணைவி மாதரி. இவர்களின் புதல்வன் மூன்று அகவையை பூர்த்தி செய்துள்ள மாயோன். 

 

அந்தி சாயும் வேளையில்,  

 

“அண்ணியாரே…. தங்களுக்கு இம்முறை பெண் பிள்ளை தான் பிறக்கும்….. என் தமையனின் நிண்ட நாள் ஆசை” என்ற சந்திரிகாவை சிறு புன்னகையுடன் நோக்கிய சம்யுக்தா “தங்களுக்கும் பெண் குழந்தை தான் பிறப்பாள் மறவாமல் என் மகன் அநபாயனுக்கு மணமுடித்து வைத்து விடுவீர்களா” என்று தன் ஆசையை வினாவாக எழுப்ப, 

 

“நிச்சயம் அண்ணியாரே!!! என் மருமகனுக்கு தான் என் மகள். இதில் மாற்றம் என்பது இல்லை” என இதுவரை தன் தம்பியுடன் விளையாடிக் கொண்டு இருந்த அநபாயன் வேகமாக இருவரையும் நெருங்கி, 

 

“அத்தை அவர்களே…. இந்த நேரம் தாங்கள் இருவரும் பழரசம் அருந்த வேண்டும். ஆனால் நீங்கள் இருவரும் இங்கே அரட்டை அடித்து கொண்டு இருக்கிறீர்கள்….. இம்முறை நான் நிச்சயம் தந்தையிடம் இருவரை பற்றி குறை கூற போகிறேன்” என்று நான்கு வயதிலே சர்வமும் புரிந்து நடக்கும் இளவரசரை பெருமையாக பார்த்தனர் இருவரும். 

 

தமையனை பின்பற்றி மாயோன் “ஆமாம் ஆமாம்” என்று தலையை ஆட்டினான். 

 

“நம் இருவரையே இவன் இந்த சிறு வயதிலேயே கண்ணில் வைத்து பார்த்து கொள்கிறான் என்றால் என் மகளை தங்க தட்டில் வாங்க மாட்டானா என்ன… சரி தானே மருமகனே!!!” என்ற தன் அத்தையை புரியாமல் நோக்கியவன் தன் அன்னையிடம், 

 

“அத்தை என்ன கூறுகிறார்கள் அன்னையே” என்க, “நீவிர் வளர்ந்ததும் நாங்கள் இதற்கு விளக்கம் அளிக்கிறோம்” என்று இருவரும் உள்ளே சென்று விட, அவர்களே அறியாமல் அநபாயன் மனதில் ஒரு விடயத்தை அழுத்த பதிந்து விட்டனர். பிறக்கும் அத்தை மகள் தனக்காகவே பிறப்பதும் அவளை காப்பதும் தன் கடமை என்று அந்த சிறிய இதயத்தில் கல்வெட்டாக தேங்கி விட்டது. 

 

கோட்டை கதவு மூடப்பட்டு இருக்க, கோட்டை மதிலை இரவு நேர காவலாளிகள் கண்காணிக்க, அரண்மனை மாடத்தில் நின்று நிலவை ரசித்து கொண்டு இருக்கும் அரசர் விஸ்வகர்மாவை நோக்கி வேகமாக வந்தார் ஆத்ரேயன். 

 

“நண்பா!!!! தங்களை காண ராஜகுரு வந்துள்ளார். இந்நோரத்தில் என்ன குழப்பம் தங்களுக்கு” என்று தான் சொல்லாமல் தன் மனதை படித்த தன் ஆருயிர் நண்பனை கவலையுடன் நோக்கி “புரியவில்லை ஆத்ரேயா….. மனம் ஒரு நிலையில் இல்லாமல் சஞ்சலமாக உள்ளது” என்று கொண்டே முன்னே நடந்தான். 

 

ஆலோசனை கூடத்தில் ராஜகுரு காத்திருக்க விஸ்வகர்மா வந்ததும் “மன்னிக்கவும் ராஜகுரு சற்று யோசனையில் மூழ்கி விட்டேன். தங்களை அழைத்த காரணம் மனம் இரு நாட்களாக நிலையே இல்லாமல் தவிக்கிறது. விரும்பத்தகாத விடயம் நடப்பது போல் உள்ளது” என்று அவரின் முகத்தை பார்க்க, 

 

ராஜகுரு சொழியை உருட்டி ஒரு முறைக்கு இருமுறையாக பார்த்தும் அவரின் முகம் தெளியவில்லை. ஆத்ரேயன் “என்ன நேர்ந்தது ராஜகுரு” என்றதும், 

 

“தங்கள் இருவரின் கிரகங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தாரின் கிரகங்களும் சற்று சாதகமாக இல்லை அரசே!… நாளை தவறாமல் இரு குடும்பத்தாரும் காளியம்மனை வழிப்பட்டு வரவும்…. நல்லதே நடக்கும் அரசே” என்று இருவரிடமும் விடைபெற்று சென்ற ராஜகுருவின் மனதில், 

 

“பேரழிவு வரவிருக்கின்ற அரசே!!! இதை தங்களிடம் கூற இயலவில்லை… எவ்வளவு பெரிய சாம்ராஜ்யமும் ஒரு நாள் அழிந்து போவது இயற்கையே. பேரழிவின் ஆரம்ப புள்ளி நாளை துவங்க உள்ளது. காளியம்மன் தான் காக்க வேண்டும்” என்று தன் இருப்பிடம் நோக்கி சென்று விட்டார். 

 

மறுநாள் காலை அனைவரும் காளி கோவிலுக்கு கிளம்ப தயாராக இருந்த போது சந்திரிகா தன் அறையில் “ஆத்ரேயா….. நான் வரவில்லை நீங்கள் மட்டும் சென்று வாருங்கள்” என

 

“ஏன் தேவியே….. உடலில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா?” என்று கணவனை அணைக்க முயன்று தோல்வியை தழுவியதால் முகத்தை பாவமாக வைத்து கொள்ள, 

 

ஆத்ரேயன் பின்புறமாக அவளை அணைத்து “நம் மகள் பிறந்ததும் என்னை அமைதி கொள்ளலாம்…. ஏன் வர மறுக்கியாய்” என

 

“தெரியவில்லை ஆனால் மிகவும் சோர்வாக உள்ளது. ஆத்ரேயா என் ஆசை படி எனக்காக என் பேறு காலம் முழுவதும் தமையன் இடத்திலே இருப்பது தங்களுக்கு அசௌகரியமாக இல்லையே” என்ற மனைவியின் கழுத்தில் முகத்தை புதைத்து கொண்டு, 

 

“இல்லை என் அரசியே…. உங்களை எனக்கு நம் விவாஹம் முன் இருந்தே தெரியும். நாம் இப்போது கணவன் மனைவியாக இருக்கலாம் ஆனால் முதலில் நீங்கள் என் தோழி….. கணவன் ஒருவன் தன் மனைவியை புரிந்து கொள்ளாமல் தவறிழைக்கலாம்…. ஆனால் என்றுமே நட்பில் புரிதல் இல்லாமல் இருக்காது. ஆகையால் நான் என்ன நினைப்பேன் என்று யோசிக்காமல் நீங்கள் சந்தோசமாக இருங்கள். நானும் உங்களுடனே இருந்து விடுகிறேன். மற்றவர்கள் ஆலயத்திற்கு சென்று வரட்டும் ” என்று

 

“அதெல்லாம் சரி தான் ஆத்ரேயா!!! நான் தங்களை விட வயதில் சிறியவள் நானே தங்களை வார்த்தைக்கு வார்த்தை பெயர் சொல்லி அழைக்க, தாங்கள் மட்டும் என்னை என் பெயர் சொல்லி அழைக்காத காரணம் என்ன? திருமனம் முன்பு சின்ன குட்டி இப்போது தேவி எப்பொழுது சந்திரிகா என்று அழைப்பீர்” என்றதும் சிரித்து கொண்டே, 

 

“திருமணம் முடித்து பல காலம் சென்ற பின் தங்களுக்கு இந்த ஐயம் எழ காரணம்” என்றான் ஆத்ரேயன். 

 

“பெரிதாக ஒன்றும் இல்லை. அன்று தங்களை மாடத்தில் இருந்து அழைத்த போது தமையனும் அண்ணியும் அருகே இருந்தார்கள். தமையன் சிறு சிரிப்புடன் நகர்ந்து விட்டார் ஆனால் அண்ணியார் தான் கணவனை பெயர் சொல்லி அழைக்கலாமா என்று தொடங்கி பல அறிவுரைகள் என் காதில் உதிரம் வராதது தான் அதிசயம்” என்ற மனைவியை கட்டிலில் அமர வைத்து அவளின் காலடியில் அமர்ந்து வீங்கி இருந்த பாதங்களை பிடித்து கொண்டே, 

 

“உன் அண்ணியார் கூறியது அவருக்கு அவருடைய வீட்டில் புகுத்தியது. ஆண்கள் கீழே தான் பெண் இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்கம் நிறைந்த சமூகம் இது. ஆணும் பெண்ணும் சமம் தானே தேவி. நீங்கள் என் பெயரை சொல்லி அழைத்தால் நான் என்ன குறைந்து விட போகிறேன். உன் தமையன் பல முறை போராடி பார்த்து விட்டார் ஆனால் சம்யுக்தாவின் வாயில் இருந்து அவர் பெயர் வரவே இல்லை. பாவம் உன் தமையன் என்னிடம் புலம்பி தள்ளுவார். 

 

அவர் வளர்ந்த விதம் நம்மால் தவறு சொல்ல முடியாது. நீங்கள் என்னை பெயர் சொல்லி அழைக்கும் போது தோன்றும் ஒரே விடயம் தன் தாய் உயிரோடு இருந்திருந்தால் இப்படி தான் அவரும் என்னை அழைத்து இருப்பாரோ என்று தான் ” என்பவனின் பதில் சந்திரிகாவிற்கு காதல் பலமடங்காக பெருகியது. இருந்தும் “ஆனால் என்னை ஏன் பெயர் சொல்லி அழைக்க வில்லை” என்று புருவம் உயர்த்தி கேட்க, 

 

“நீங்கள் என் ராணி. என் மனதை மட்டும் அல்ல என்னையே ஆளும் ராணி. அப்படி இருக்க பெயர் சொல்லி அழைக்க இயலுமா” என்க, “பரிகாசம் வேண்டாம் உண்மையான காரணத்தை கூறுங்கள்” என

 

மென் சிரிப்புடன் “நீ சேட்டை செய்யும் போது என் பிள்ளையாக தோன்றுகிறது உன் கண்களால் என்னை கைது செய்யும் போது என் காதலியாக தோன்றும் என்னுடன் சண்டை இடும் போது உற்ற தோழியாக தோன்றும் எனக்காக தாங்கள் பார்த்து பார்த்து செய்யும் சிறு செயலில் என் தாயை பார்க்கிறேன். எதனால் தான் எனக்கு அனைத்தும்மாகிய தன் தேவியை எப்படி பெயர் சொல்லி அழைப்பது” என

 

“தங்களுக்கு அனைத்துமாக இருப்பது சந்தோசமே இருப்பினும் மனைவியை மட்டும் விட்டு விட்டீர்களே” என்று முகம் கூம்பி சொல்ல, 

 

“அடடே… மனைவி என்பவள் என்னில் சரி பாதி தானே…. என்னை நானே எப்படி உவமை படுத்தி சொல்ல” என்ற போது ஒரு காவலாளி “அரசர் தங்கள் இருவரையும் அழைத்து வர சொன்னார்” என்று தகவலை சொல்லிவிட்டு செல்ல, 

 

விஸ்வகர்மா “இருவரும் தயாரா நேரம் சென்று கொண்டே இருக்கிறது இப்போது கிளம்பினால் தான் இரவு நேரத்தில் திரும்ப வசதியாக இருக்கும்” என

 

ஆத்ரேயன் “நாங்கள் இருவரும் வர இயலாது நண்பா…. தேவிக்கு உடம்பு சற்று சோர்வாக உள்ளதாம்” என மற்ற அனைவரும் கிளம்ப தயாராக இருக்கும் போது விஸ்வகர்மாவிற்கு அரச வேலை அவனை வந்த இழுத்து கொண்ட காரணத்தால் செல்ல இயலவில்லை. 

 

கடைசியாக கோவிலுக்கு சென்றது சம்யுக்தா, மாதரி, மார்கண்டேயன், அநபாயன், மாயோன் மற்றும் சில காவலாளிகள். 

 

காளி கோவில், பல அதிசயத்தை தன்னுள் அடக்கியுள்ள புனித ஸ்தலம். உக்கிரமாக இருக்க வேண்டிய காளி இங்கே மட்டும் தான் சாந்தமாக இருப்பாள். பெயர் அறியா பல தனிமங்களை கொண்டு காளியின் சிலையை அவர்களின் முன்னோர்கள் செதுக்கி உள்ளனர். எவ்வளவு கொடிய நோய் தாக்கினாலும் இக் காளி சிலைக்கு பால் அபிஷேகம் செய்து ஒரு மண்டலம் அந்த பாலை குடித்து வந்தால் நோய் வந்த இடம் தெரியாமல் போய் விடும். இது ஒரு அதிசயம் என்றால் இன்னொன்று. 

 

காளி முன்னால் பலி கொடுத்து கேட்கும் விடயம் எப்பிறவி எடுத்தாலும் நடக்கும் என்பது அங்கே நம்பப்படும் வழக்கம். அதே போல் நடந்தும் உள்ளது. 

 

சம்யுக்தா “அனைவரும் அம்மனை வழிப்பட்டு தங்களுக்கு வேண்டியதை கேட்டுக் கொள்ளுங்கள். சீக்கிரம் கிளம்பினால் தான் இருட்டும் முன் அரண்மனை செல்ல முடியும்” என்று தன் நிறைமாத வயிற்றை ஒரு கையால் தாங்கிய படி சொல்ல, 

 

மார்கண்டேயன் “நீங்கள் சற்று நேரம் அமருங்கள் அண்ணி…. சோர்வாக தெரிகிறது உங்க முகம்” என மாதரியும் தன் பக்கத்தில் இருக்கும் இடத்தை சுத்தம் செய்து கொடுக்க சம்யுக்தா அமர்ந்து கொண்டார். 

 

அநபாயன் மற்றும் மாயோன் இருவரும் கோவிலை சுற்றி விளையாடி கொண்டு இருக்க, அநபாயன் தாய் சொன்னதை கேட்டு மாயோனிடம் “அன்னை சொன்னதை கேட்டாய் தானே வா…. நாம் இருவரும் நமக்கு வேண்டியதை காளியிடம் கேட்போம்” என்று அவனை இழுத்து சென்று காளி முன்னாள் நிற்க வைத்தான். 

 

மாயோன் என்ன வேண்டிக்கொள்வது என்று தெரியாமல் தமையன் போல் கை கூப்பி கண் முடிக் கொண்டார். அநபாயனோ மனதில் “எனக்கு மாயோன் இருக்கிறான் அதனால் இம்முறை எனக்கு அழகிய தங்கை வேண்டும். பின் என் தந்தையும் மாமனும் பேசும் போது எனக்காக தான் அத்தை வயிற்றில் இருக்கும் பாப்பா பிறப்பதாக சொன்னார். அதே போல் அன்னையும் கூறினார்கள். எனக்கே எனக்காக பிறக்கும் பாப்பாவை பத்திரமாக பார்த்துக்கோ” என

அரண்மனையில், நேரம் செல்ல செல்ல சந்திரிகாவிற்கு பிரசவ வலி எடுக்க தொடங்கியது. வைத்தியர் தலை சிறந்த மருத்துவச்சி என்று அனைவரும் உள்ளே இருக்க பதட்டத்துடன் அந்த அறையின் முன்னே ராஜா விஸ்வகர்மாவும் ஆத்ரேயனும் இருக்க, நேரம் தான் சென்று கொண்டிருந்தது.  

 

வலியில் சந்திரிகா அலறினால் அவள் அலறலில் ஆத்ரேயன் துடித்து போனார். வீல் என்ற சந்திரிகா சத்தத்தில் ஜனித்தால் ஆத்ரேயனின் இளவரசி. 

 

முகம் புரித்து வெளியே வர வேண்டிய மருத்துவச்சி சற்று பதட்டத்துடன் முகம் கலங்கி வர, 

 

விஸ்வகர்மா “என்ன குழந்தை…. குழந்தையின் அழுகுரல் கேட்கவில்லையே” என்றதும், 

 

“அந்த தூர்கையே பிறந்தது போல் பிரகாசமான முகம் கொண்ட பெண் பிள்ளை. ஆனால்…. ” என்று இழுக்கும் போதே கோவில் சென்றவர்கள் அங்கே வந்துவிட, 

 

தயக்கத்துடன் “சிசு பிறக்கும் போதே இறந்து பிறந்தது அரசே!!” என்றதும் எங்கே ஒரே மையான அமைதி. ஆத்ரேயன் கண் கலங்கி அப்படியே அமர்ந்து விட்டார். குழந்தையை பற்றி தன் மனைவியின் கனவை நன்கு அறிவாரே. 

 

சற்று நேரத்தில் இந்த விடயம் காற்று தீயாய் பரவி ராஜ்யத்தையே துயர் கொள்ள வைத்தது. சிறு குழந்தை அதுவும் அரச வாரிசை இழந்த சோகம் அரச குடும்பத்தையே உலுக்கி விட்டது. 

 

சிசுவிற்கு இறுதி சடங்கு செய்யும் நேரத்தில் ஆத்ரேயன் பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து “என் மகளை சீராட்டி வளர்க்கும் பாக்கியம் தான் கிடைக்க வில்லை. ஆனால் என் மகள் புறமுதுகிட்டு சென்றது போல் இருக்க கூடாது” என்று கையில் இருந்த கத்தியை அந்த சிசுவின் மார்பில் அரச முத்திரையை வரைந்தார். 

 

அநபாயன் வேகமாக தந்தையிடம் இருந்து குழந்தையிடம் சென்றவன் சிசுவை தன் கையில் ஏந்தி “நீ எனக்காக பிறந்த பாப்பா. நான் காத்திருப்பேன் நீ திரும்ப என்னிடம் வரும் வரை. தாமதிக்காமல் திரும்பி வந்து விடு” என்று தன் மாமா வரைந்து முத்திரையால் வழிந்த உதிரத்தை தன் பிஞ்சு கரங்களால் அழுத்த மூடி அங்கே இருந்த புரோகிதரிடம் கொடுக்க, அவரோ அச் சிசுவை வெள்ளை துணியால் சுற்றி இறுதி சடங்கை தொடங்கினார். 

 

 

இருபது வருடங்கள் பிறகு, 

 

பவள தேசத்தில் இருந்து அறுபது காதை தூரம் அமைந்துள்ள தீவு சியேரா தீவுகள். பல மலைகளை உள்ளடக்கிய தீவு. பழங்குடி மக்கள் அவர்கள் வாழ்வை தாங்களே தனியாக ஆளும் சுயராஜ்யம். 

 

இந்க குடியின் தலைவர் அபேவிக்ரமன். அவரின் துணைவி கோதமி. இவர்கள் இருவரின் மக்கள் அகிழவன், மாரிகா. 

 

அபேவிக்ரமனின் தம்பி ஜெயகோடி அவரின் மனைவி ருக்மணி. இருவருக்கும் ஒரே மகள். அவள் தான் ஆர்கலி. 

 

ஜெயகோடி வேகமாக குடிலுக்கு வந்து “ருக்கு எங்க புள்ள உன் மகள்” என்று சற்று பதட்டமாக கேட்க, 

 

“ஓ… என் மகளா தங்களுக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் கதைக்காதீங்க” என்று காரமாக சொல்ல, 

 

“சரி தாம் எங்கே என் மகள்….. அண்ணன் வேற அவளை தேடுகிறார். இன்று என்ன செய்தாளோ….. அவளுக்கு மட்டும் கடவுள் ஏன் துல்லி பயத்தையும் கொடுக்காமல் விட்டாரோ… அங்கே அண்ணி அவர் மகள் தான் சொன்னதை தாண்டி எதுவும் செய்ய மாட்டாள் என்று பெருமையாக மாரிகாவை புகழ்ந்து என் மகளை வஞ்சித்து பேசுகிறார்” என்று வேதனையாக சொல்ல, 

 

“என்ன இது…. அவர்களுக்கு அவர் பிள்ளை தங்கம் என்றால் என் பிள்ளை வைரம். தங்கம் தன் நிலைக்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுக்கும். ஆனால் வைரம் அப்படி அல்லவே…. மதிப்பு கொடுத்து தலையில் வைத்தால் கீரிடத்தையே அலங்கரிக்கும் ஆனால் மதிக்காமல் மிதித்தால் காலை கிழித்து விடும்.  

 

தாங்கள் தானே நான் சொல்ல சொல்ல கேட்காமல் அவளுக்கு வில், வாள் என்று பல பயிற்சிகளை தங்கள் அண்ணனுக்கு தெரியாமல் அளித்து அவளை ஒரு பெண் என்றே மறக்க வைத்து விட்டு இப்போது அநுதினமும் என் மகள் உங்கள் அண்ணனிடம் ஏச்சு வாங்குகிறார். 

 

ஒரு நாள் உங்கள் தமையனை கண்டபடி பேச நேரும்….. என் மகள் எனக்கு உயிரை விட மேலானவள். சமூகமே என்னை மலடி என்ற போது வரமாக பிறந்தவள் என் ஆர்கலி” என

 

“உனக்கு மட்டும் அல்ல எனக்கு அவள் தான் உயிர் ருக்கு. ஆனால் கோபமும் அடாவடி தனமும் அதிகரிக்க சற்று பயமாக உள்ளதே. என்ன தான் ஆண் மகனாக வளர்க்க முடிந்தாலும் இறுதியில் அவள் பெண் தானே” என்று இருவரும் தங்கள் மகளின் எதிர்காலத்தை நினைத்து ஐயம் கொள்ள, 

 

அவர்களின் மகளோ நின்ட சமுத்திரத்தில் முத்து குளிக்கும் கூட்டத்துடன் சிறு சிறு சிற்பியை ஆசையுடன் சேகரித்து கொண்டு இருந்தால் ஆழ்கடல் ஆழத்தில். 

 

விதிகள் தொடரும்

நிலா