காதலின் விதியம்மா 20

Kv 2-1d07a7bb

ஆர்கலி, உலகத்தின் மொத்த அழகையும் தனதாகி பிறந்த தேவதை. தானும் ஒரு அழகி என்று உணராத பேரழகி. தாய் தந்தையின் ஒற்றை பிள்ளை. ஆண்களுக்கு கீழ் தான் பெண்கள் இருக்க வேண்டும் என்ற தமையனின் கூற்றை தன் மகளுக்காக மீறி ஆண்களை விட மிக்க தைரியமான பெண்ணாக வளர்த்தவர் ஜெயகோடி. பல வருட காத்திருப்புக்கு கிடைத்த பிள்ளை வரத்தை இருவரும் மகிழ்ந்து அவளை ராணியாக வாழ வைத்தனர்.   

 

அபேவிக்ரமனின் குடில் மாரிகா “தமையனே தாய் தந்தை இருவரும் ஆர்கலி மேல் கடும் கோபத்தில் உள்ளது ஏன்?” என்று கவலையாக கேட்க, 

 

“முத்து குளிக்க சென்ற ஆண்களுடன் அவளும் சென்றதை பார்த்து விட்டு ஒருவன் நம் தந்தையிடம் சொல்லி விட்டார்கள். அதை கேட்டதில் இருந்து இருவரும் கடும் சினத்துடன் இருக்கிறார்கள். அந்தி சாய்ந்ததும் தான் ஆர்கலி வீடு வருவாள் அது நமக்கே தெரியும் அதன் பின் என்ன நடக்க போகிறதோ” என்று அகிழ் யோசனையாக மொழிய,  

 

மாரி “இருந்தாலும் இந்த பெண்ணிற்கு இவ்வளவு தைரியம் ஆகாது தமையனே. இரவு நமக்கு பொழுதுபோக்கு கண்டிப்பாக உள்ளது” என்று சிரிக்க, அவளது புன்னகை அவனையும் தொற்றிக் கொண்டது.

 

அகிழவனுக்கும் மாரிகா விற்கும் ஆர்கலியை சகோதிரியாக பார்க்க மாட்டார்கள் தங்கள் இருவருக்கும் ஆர்கலி செல்ல பிள்ளை. அகிழ் தன் உடன் பிறந்த மாரியை விட ஆர்கலி மேல் கொள்ள பிரியம். பல முறை தன் தாய் தந்தையிடம் இருந்து திட்டு வாங்காமல் அவளை காப்பாற்றி உள்ளான். தன்னாலே தன் தந்தையை எதிர்த்து பேச முடியாமல் தினறும் பல சமயத்தில் தன் தங்கையின் தைரியத்தை பாராட்டாமல் இருக்க முடியாது அவனால். 

 

பத்து வயதில் ஆண்கள் வாள் ஏந்தி பயின்ற போது தனக்கு பயிற்சி அளிக்க சொல்லி பெரிய தந்தையிடம் கேட்க, அவரோ “வீட்டில் அடங்கி உட்கார போகும் உமக்கு எதற்கு வாள் பயிற்சி” என்று கேலியாக கேட்க, பத்து வயது ஆர்கலியோ   

 

“நீங்கள் அனுதினமும் வணங்கும் கொற்றவை கூட ஒரு பெண் தான். அவர் கையில் வாள் மட்டும் அல்ல பல ஆயுதங்கள் இருக்கும் போது எனக்கு ஒரு வாள் சண்டை கற்று தர தாங்கள் தயங்குவது ஏன். சுற்றத்தில் இருக்கும் பெண்களை மதியாமல் ஒர் பெண் தெய்வம் முன் தலை வணங்கி வேண்டுவது தவறுதானே” என்று மழலை மொழி மாறாமல் பேசியது கேட்டு அந்த இடமே மையான அமைதியானது. 

 

அதன் பின் அவனும் அவனின் சிற்றப்பா இருவரும் தந்தைக்கு தெரியாமல் பல பயிற்சி அளித்து உள்ளனர் அவளின் ஆர்வத்தை பார்த்து. 

 

வயது வந்த பின் மாரிகா மற்றும் ஆர்கலி இருவருக்கும் வெளியே செல்ல தடை போட்டார் விக்ரமன். மாரிகா தந்தையின் கோபத்திற்கு பயந்து வீட்டிலே முடங்கி விட, ஆர்கலியோ தான் யாருக்கும் அடங்காத காற்று என்று யாரின் பேச்சையும் கேட்காமல் அந்த தீவையே ஒரு கலக்கு கலக்கி வருவாள். 

 

இவளால் மாட்டி கொள்ளும் மூன்று அப்பாவி ஜீவன்கள் அவளது தந்தை ஜெயகோடி, தமையன் அகிழ் மற்றும் அவனது அப்பாவி நண்பன் சுக்லா. மூவரில் சுக்லா பாடு தான் மிகவும் மோசம். பல முறை இவளால் இருட்டு அறையில் இரண்டு நாள் அடைக்கும் தண்டனை கூட பெற்று உள்ளான். இருந்தும் தோழிக்காக தாங்கி கொள்வான். 

 

 

கடற்கரை அருகே “ஆரி….. வா போகலாம் உமது வீட்டில் இருப்பவர்கள் இங்கே வந்தால் நாம் அவ்வளவு தான்” என்று கெஞ்சி கொண்டு இருந்தான் ஆர்கலியின் உயிர் தோழன் சுக்லா. 

 

தொப்பலாக நினைந்து இருக்கும் தனது ஆடைகளை பிழிந்து கொண்டே “சுக்கு இந்த ஆரிக்கு என்ன தோன்றுதோ அதை மட்டும் தான் செய்வாள் அவளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது” என்று ஆடையை நன்றாத உலர்ந்த பின் “சரி நாளை விடியற்காலையில் படகுடன் இவ்விடம் வந்து விடு நாம் கடற்பயணம் செல்லலாம்” என்று அவனின் தலையில் இடியை இறக்க அதிர்ந்து ஆர்கலியை நோக்கினான். 

 

சுக்லாவின் அதிர்ச்சிக்கு காரணம் ஏற்கனவே இவளை தாம் தான் கூடவே இருந்து பெற்றவர்களின் பேச்சை கேட்க விடாமல் ஊர் சற்ற வைத்ததை போல் அவளின் பெரிய தந்தை இவனை பார்த்தாலே கொதித்து திட்டி தள்ளுவார். தற்போது அவர்களின் மரபை மீறி கடற்பயணம் மேற் கொள்ளுவதை பற்றி பேசி அவனை சிலையாக்கி உள்ளாள். 

 

சுக்லா “உனக்கு பைத்தியம் தான் பிடித்து உள்ளது. நமது மரபில் கடல் தாண்டி செல்வது தெய்வ குற்றம் என்பது தெரியும் தானே. முத்து குளிக்க செல்லும் ஆண்களே சில அடி தூரம் செல்ல மட்டுமே அனுமதி உள்ளது தெரியும் தானே. உனக்கு நீச்சல் சொல்லி கொடுத்தது தான் தவறாகி விட்டது கடல் தாண்டி சென்று கொற்றவையின் கோபத்திற்கு ஆளாகாதே. நான் வருகிறேன்” என்று அவளை திரும்பி பார்க்காமல் சென்று விட்டான். 

 

செல்லும் அவனினை சில நிமிடம் வெறித்து பார்த்து விட்டு மீண்டும் கடலை நோக்கி வந்தவள் பொங்கி வந்து கரையை அடைந்த மறு நிமிடம் திரும்ப கடலை நோக்கி செல்லும் அலையை பார்த்து அதில் காலை நினைத்து கொண்டே “என்னை ஒவ்வொரு முறை தீண்டி செல்லும் போதும் நீ என்னிடம் ஏதோ செய்தியை சொல்ல நினைப்பது போலே தோன்றுகிறது. எதோ சொல்ல தெரியா உணர்வு இந்த இருதயத்தை படபடக்க வைக்கிறது. இந்த உணர்வு இழுக்கிறதே எதனால் எனக்கு இந்த உணர்வு எல்லாம் தோன்றுகிறது?” என்று ஆர்ப்பரிக்கும் அலையிடம் கேட்க, 

 

 

மறுமுனையில் “இளவரசே!! தாங்கள் இங்கே தான் இருப்பீர்கள் என்றும் நினைத்தேன். தங்கள் அன்னை உங்களை காண வர சொன்னார்கள்” என்றது அநபாயனின் படை தளபதியும் உற்ற தோழனான சிபி. 

 

கண்கள் இரண்டு கடலை நோக்கி இருக்க மனம் முழுவதும் நேசம் வழிந்து இருந்தது. அவன் கையில் இருந்த சிறு கல்லை பார்த்து, 

 

“இளவரசே! தாங்கள் காத்திருப்பது எதற்கு என்றே எமக்கு புரியவில்லை. சிறுவயதில் தோன்றிய உணர்வு பாசத்தால் வந்தது. இன்றும் அதையே நினைத்து காத்திருப்பது வீண் முயற்சியாகவே எமக்கு தோன்றுகிறது” என்ற தோழனின் கூற்றில் மென் புன்னகையை இதழில் பரவ விட்டு, 

 

“நான் எதற்காக காத்திருக்கிறேன், என் காத்திருப்பு சரியா தவறா என்றெல்லாம் எமக்கு தெரியாது ஆனால் என் காத்திருப்பு என்றும் வீண் போகாது. என் காளியம்மன் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனக்காக என் பாப்பா மீண்டும் வருவாள்” என்று நம்பிக்கையுடன் கூற, 

 

“சரி தான் உனது பாப்பா உன்னிடம் சீக்கிரம் வர நானும் வேண்டிக்கொள்ளுகிறேன் இளவரசே!! தற்போது அரண்மனை நோக்கி செல்வோமா” என இருவரும் சில பல விடயங்களை பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர். 

 

சியேரா தீவு, விக்ரமன் தன் எதிரே நிற்கும் தம்பி மகளை கோபத்துடன் முறைத்து கொண்டு இருக்க, அவர் பக்கத்தில் இருக்கும் அவரின் பத்தினி கோதமி “இந்த முறை இவள் மிக பெரிய அனர்த்தம் செய்துவிட்டாள். நமது மரபில் பெண்கள் யாரும் செய்ய துனியாத விடயத்தை மிக எளிமையாக செய்து விட்டு ஒன்றும் அறியாத பிள்ளை போல் நிற்பது என்னவோ. இவள் செய்த தவறால் கண்டிப்பாக கொற்றவை நம் மீது கோபத்தில் இருப்பார். பெரும் பிரளயத்திற்கு ஆளாக போறோம்” என்று புலம்ப அதை கேட்டு சுற்றி இருந்த மக்கள் சிறிது நடுங்க ஆரம்பித்தனர். 

 

நூறு குடும்பம் வாழும் தீவில் அபேவிக்ரமன் சொல்வது தான் சட்டம். கடற்கரையில் இருந்து தனது குடிலுக்கு செல்ல விருந்த ஆர்கலியை மறைத்த மக்கள் விக்ரமனின் முன் அவளை நிறுத்தி அவள் கடலில் சென்றதை சொல்லி முறையிட்டனர். 

 

ஆர்கலி “நான் செய்தது எந்த விதத்தில் தவறாகும். நீந்த தெரிந்த ஆண்கள் செல்லும் போது நான் சென்றது மட்டும் பெரிய தவறாக இப்போது நீங்கள் கதைப்பது வேடிக்கையாக உள்ளது. எனக்கு நிறைய வேலைகள் உள்ளது. கொற்றவையின் கோபமாம்…… கொற்றவையும் ஒரு பெண் தான்” என்று சற்று யாரையும் மதியாமல் செல்ல, 

 

விக்ரமன் “அவள் இழைத்த தவறுக்கு கண்டிப்பாக நாளை கொற்றவை முன் தண்டனை உண்டு. யாரும் பயம் கொள்ள தேவையில்லை” என்று ஒரக்க மொழிந்து விட்டு செல்ல, ஜெயகோடியும் ருக்குவும் அதிர்ந்து அங்கவே நின்று விட்டனர். 

 

ருக்கு “ஏங்க…. எமக்கு இம்முறை மிகவும் பயமாக உள்ளது. உங்கள் அண்ணிக்கு என் மகளை துல்லி கூட பிடிக்காது. போன முறை மலை ஏறிவிட்டாள் என்ற சிறு காரணத்திற்காக காலில் பழுக்க காயந்த இரும்பு கம்பியில் சுடு போட்டார்கள். உங்கள் தமையன் அமைதியாக இருந்தால் கூட இவர் பேசி பேசியே அவர் மனதை என் மகளுக்கு எதிராக திரும்பி விடுவார். என் மகளை நாளை எதோ செய்ய திட்டத்துடன் தான் இருக்கிறார் போல” என்று கூறும் சமயம், 

 

கோதமி அவளது சகோதரன் பரமேஸ்வரிடம் “நாளையோடு ஒழுந்தாள் அந்த சிறுக்கி. நாளை அவளுக்கு தண்டனை வழங்க போவதாக எல்லாரும் நினைக்கும் கொற்றவை அல்ல இந்த கோதமி. என்னை பகைத்து அவள் வாழ்க்கையில் மிக பெரிய தவறை செய்துவிட்டாள்” என்று கண்கள் சிவக்க அவளால் அவமானப்பட்ட நிகழ்வை நினைத்து வெந்து ததும்பினார். 

 

இவர்கள் இருவரும் பேசியதை கேட்ட பரமேஸ்வரின் மகன் பர்வன் “உங்களால் எதுவும் செய்ய இயலாது அத்தை அவர்களே…. நாளை பாருங்கள் நான் செய்யும் செயலில் நீங்கள் செய்ய எண்ணியது மறந்து போகும்” என்று கேலியாக சிரித்து வைத்து யாரும் அறியாமல் செல்ல, இவர்கள் பேசியதை அந்த பக்கம் கேட்ட ஒருவர் அவர்களிடம் இருந்து ஆர்கலியை காக்க திட்டத்துடன் திரும்பி சென்றார். நாளை என்ன நடக்க போகிறதோ??? 

 

பவள தேசம், தன் தாயை காண அவரது அறைக்கு வர, சம்யுக்தா “அடடே அனல் அங்கே பார் யார் அறைக்குள் பிரவேசித்து….. வருங்கால அரசர் வருகிறார் பார்….” என்று நக்கலாக தன் மகள் அனலிக்கா விடம் மொழிய, 

 

“அன்னையே!!!! பரிகாசம் வேண்டாம் அழைத்த காரணத்தை விரைவாக கூறுங்கள்… வரும் வழியில் தந்தையை பார்க்க நேர்ந்தது அவர் ஒரு வேலையை தந்துள்ளார்” என்க

 

“அது சரி அழைத்தது நான் ஆனால் உதவுவது அனைத்தும் தந்தைக்கு” என்று முகத்தை திருப்பி கொள்ள அதை பார்த்து சிறு சிரிப்புடன் “தமையனே நான் அறிந்த வரை தாய் தாரம் இருவர் இடையே தான் ஆண்களின் பாடு திண்டாட்டமாக இருக்குமாம். ஆனால் தங்களுக்கு தாய் தந்தையிடமே இவ்வளவு திண்டாட்டம் என்றால் நாளை தங்கள் துணைவி வந்த பின் அவ்வளவு தான் தாங்கள்” சிரிக்க, 

 

“சரி மன்னித்து விடுவீர்…. தற்போது என்ன வேண்டும் சொல்லுங்கள் தாயே….. தமக்காக எதுவும் செய்வான் இவ்வடியன்.” என்க, 

 

“சிறிது காலம் அத்தை அவர்களுடன் இருந்து விட்டு வாருங்கள். இன்று இரவே கிளம்ப தயாராகி இருங்கள். அனல் வருவதாக முன்பே சொல்லி விட்டாள். மாயோனிடம் கேட்டு விட்டு மூவரும் சென்று வாருங்கள்” என்ற தாயை கேள்வியாக பார்த்தான் அநபாயன். 

 

இவன் பார்வையை உணர்ந்து “என்ன தான் உன் அத்தை மாமா இருவரும் சந்தோசமாக இருப்பது போல் நம்மிடம் சொன்னாலும் அப்படி இல்லையே உண்மை நிலவரம். குழந்தை வரம் கிடைக்குமா என்று பல வருடங்களாக காத்திருந்து சோர்ந்து போய் விட்டனர் இருவரும். காளி ஏன் அவர்களை சோதிக்கிறாள் என்று தெரியவில்லை. இன்றிலிருந்து பத்தாவது நாள் கோசியில் மணிவிழா நடைபெற உள்ளது நீங்கள் முன்னே சென்றால் அவர்களும் சற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள் ” என்ற பின் பயணத்திற்கு தேவையானது எடுத்து கொண்டு மூவரும் கோசி செல்ல ஆயத்தமாகினர். 

 

செல்லும் வழியில் மாயோன் “தமையனே தங்கள் முகத்தில் புது வித பிரகாசத்திற்கு என்ன காரணமோ? ” என்று நகைக்க, 

 

“நமது அரண்மனையில் இருந்து கடற்கரை வெகு தூரம். ஒவ்வொரு முறை நான் கடற்கரை வந்தாலும் பின்னே வேலையும் வந்து என்னை எங்கே இருக்க விடாது. ஆனால் இப்போது நாம் செல்லும் இடம் எப்படி அல்லவே…… கடற்கரை நகரமான கோசியில் நமது அரண்மனை கடற்கரையில் தானே உள்ளது. கடலின் வாசம் என் சுவாசத்தில் கலக்கும் போது எதோ ஒர் சொல்ல முடியாத உணர்வு தோன்றும்” என்று கூறும் அநபாயன் முகத்தில் அவ்வளவு வசீகரம். 

 

அண்ணன் கூறியது புரியவில்லை என்றாலும் அவன் சந்தோசமாக இருப்பது புரிய, தமையனின் சந்தோஷத்தை நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்தனர். அவர்கள் வேண்டுதல் அவ்வளவு சக்தி வாய்ந்ததா என்று யோசிக்கும் வண்ணம் நாளை அவனது சந்தோசம் அவனின் கையில் தவழ போவதை அக்கணம் யாருமே அறியவில்லை.