காதலில் கூத்து கட்டு 1

IMG-20210202-WA0002-f8b26b43

காதலில் கூத்து கட்டு 1

காதலில் கூத்து கட்டு 1

 

‘உஷ்ஷ்ஷ்’ சத்தமிட்டு அவர்களை மோதி சுழன்றது கடற்காற்று. பிற்பகல் பொழுதானதால் சுடும் வெப்பத்திற்கு சில்லென்ற காற்றின் மோதல் சுகமாக தான் இருந்தது. எனினும் அந்த இதத்தை ரசிக்கும் மனநிலையில் அந்த இருவருமே இல்லை.

 

அவர்கள் பார்வைகள் கூட ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளாமல் தூர தெரிந்த கடலின் நீலத்தை வெறித்திருந்தது.

 

அவர்களின் நீண்ட மௌனம் அங்கே ஓயாமல் சுற்றி திரியும் காற்றுக்கும் கூட சலிப்பை உண்டாக்கியதோ என்னவோ அவர்களை பலமாக மோதி தள்ள முயன்று தோற்றது. அவர்களின் இளகாத பிடிவாதத்தை போல, அந்த காற்றின் வீச்சுக்கும் அசையாமல் நின்றிருந்தனர்.

 

“இதுக்கும் மேல என்னதான் சொல்ல போற?” அவர்களிடையேயான மௌனத்தை உடைத்து சசிதரனின் கேள்வி கடுப்பாக வர,

 

“நான் என்ன சொல்லனும்னு எதிர்பார்க்கிற” திவ்யா பதிலும் ஆத்திரமான கேள்வியாக தான் சீறியது.

 

“இவ்வளோ பட்டும் இந்த எதிர்த்து பேசற புத்தி மட்டும் போகுதா பாரு உனக்கு” 

 

“எல்லாத்துக்கும் என்ன மட்டும் குத்தம் சொல்ற உன் புத்தி போகாத வரைக்கும் என் புத்தியும் மாறாது”

 

“போதும் திவ்யா, இப்படி சண்ட போட்டு போட்டு எனக்கு அலுத்து போச்சு, இதுக்கும் மேலயும் என்னால முடியாது”

 

“என்னாலயும் முடியல, இதோட முடிச்சிக்கலாம்” அவளும் சலித்து சொன்னாள்.

 

“முடிச்சுக்கலாம்னா? என்ன அர்த்தம்?” அவன் கேள்வி கூர்மையாக வர,

 

“நாம பிரிஞ்சிடலாம்…!” உள்ளுக்குள் நெஞ்சம் தகித்து அழுத்தியபோதும் அவள் சொல்லி விட்டாள்.

 

அவனிடம் பதில் இல்லை. பெரிய அதிர்ச்சியும் ஏற்படவில்லை. தங்களுக்கிடையே ஏற்பட்ட இந்த நிலையை இருவருமே வெறுத்தனர். அந்த வெறுப்பு மற்றவர் மீதும் பாய்ந்தது.

 

“திமிரு, உன் உடம்புல இருக்க ஒவ்வொரு செல்லுலயும் திமிர்தனம் ஆடுது, அதான் அதான் இப்படி எல்லாம் உன்ன ஆட வைக்குது” சசிதரன் குரலை உயர்த்த,

 

“இவ்வளோ தான் மரியாதை உனக்கு, என்னைபத்தி இன்னும் ஒரு வார்த்தை பேசினா, நடக்கறதே வேற” அவள் விரல் நீட்டி எச்சரிக்க,

 

“இன்னும் உன்னோட பேச என்ன இருக்கு, டிவோர்ஸ்க்கு அப்ளே பண்ணி தொலைக்கிறேன் ச்சே” கசப்பாக மொழிந்து விட்டு அங்கிருந்து வேகமாக சென்று தன் காரில் ஏறிக் கொண்டான்.

தலையைப் பிய்த்துக் கொண்டு கத்தலாம் போல இருந்தது அவனுக்கு.

 

எத்தனை எத்தனை கனவுகளுடனும் காதலுடனும் முகிழ்ந்த அழகான உறவு! எங்கே எப்போது எப்படி நிறமாறி போனது? அவர்களுக்கே தெரியவில்லை.

 

அவன் போவதை பார்த்திருந்த திவ்யாவின் பார்வையை கண்ணீர் திரையிட்டது. 

 

‘எத்தனை சுலபமா சொல்லிட்டான் டிவோர்ஸ் தரேன்னு, ச்சே இவனை போய் நேசிச்சு தொலைச்சேனே’ மனம் வெதும்பிக்கொள்ள, ஈரம் துளிர்த்த இமையோரத்தை ஒற்றை விரலால் சுண்டி விட்டு தன் காரில் ஏறியவள், தன் ஆதங்கம் மொத்தமும் காரை இயக்குவதில் காட்டி சாலையில் வேகமெடுத்தாள்.

 

அவள் வேகத்தை பார்த்திருந்தவன் ‘எல்லாத்திலயும் வேகம் இவளுக்கு, காதல்ல, கல்யாணத்தில இப்ப பிரியறதுல கூட’ நொந்தபடி தன் காரை எதிர்ப்பக்கம் வளைத்து திருப்பி செலுத்தலானான் அவளுக்கு குறையாத வேகத்தில்.

 

சுலபமாய் கிடைத்திட்ட எதுவும் வெகுநாள் ரசிப்பதில்லை போலும்

அது காதலானாலும் கூட!

கொஞ்சம் போராடி 

கொஞ்சம் திண்டாடி

உள்ளத்துள் வேரோடி 

கலந்த காதல் கசப்பதில்லை என்றென்றுமே! 

 

***

 

‘டன்டனக்கா னக்கா னக்கா னக்கா

டன்டனக்கா னக்கா

 

எங்க தல எங்க தல டீ ஆரு

சென்டி மென்டுல தாறு மாறு

 

மைதிலி காதிலி இன்னாரு

அவர் உண்மையா லவ் பண்ண சொன்னாரு

 

மச்சான் அங்க தான்டா

தல நின்னாரு

 

டன்டனக்கா னக்கா னக்கா னக்கா

டன்டனக்கா னக்கா’

 

சரியாக தீபாராதனை காட்டும் போது செல்பேசி ஒலியெழுப்ப, ஐயர் உட்பட அனைவரது பார்வையும் அவள்மீது மோதி நின்றது.

 

சிலரின் பார்வை காட்டமாய், சிலரது பார்வை கேலியாய், கோபமாய், சிரிப்பாய் என தன்னை மோதிய வெவ்வேறு முகபாவனைகளை தன் குட்டி கண்களை விரித்து ஒருமுறை சுற்றி பார்த்தவள், சற்றே வழிச்சல் சிரிப்புடன், “சாரி” என்ற மன்னிப்போடு ஒலித்துக் கொண்டிருந்த கைப்பேசியை அணைத்து வைத்தாள். 

 

“ஏன் மா சாமி கும்புடும்போது செல்போன் சைலன்ட்ல போடனும்னு தெரியாதா” ஒரு வளர்ந்து கெட்டவன் கடுப்போடு கேட்க, “ஆமாண்ணா மறந்துட்டேன். எங்க உங்க செல்போன் காட்டுங்க நீங்க சைலன்ட்ல போட்டிருக்கீங்களானு பார்க்குறேன்” அவள் அப்பாவியாக முகத்தை வைத்து கேட்க, அவன் அவளை ஒரு முறை முறைத்து விட்டு தெய்வத்தை நோக்கி கைக்கூப்பிக் கொண்டான். அவனின் முறைப்பும் கடுப்புமே அனைவருக்கும் சொன்னது‌ அவனும் தன் கைப்பேசியை சைலன்டில் வைக்கவில்லை என்று.

 

தீபாராதனையோடு பூஜை மணியோசை ஒலிக்க, நடந்த குட்டி கலாட்டாவை ஒதுக்கி அனைவரின் கவனமும் தெய்வத்தின் மீது திரும்பிட சிரத்தையாக வணங்கி இறைவனை வேண்டிக் கொண்டனர்.

 

மற்றவர்களை விட, இந்த ‘டன்டனக்கா பெண்’ தான் தீவிரமாக நீளமான வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தாள். இமைகளை இறுக மூடி, கைகளை கூப்பி, தலையை ஆட்டி ஆட்டி அவள் முணுமுணுவென வேண்டுவது நம் கண்களை கவர, சற்றே நெருங்கி வந்து அவளின் வேண்டுதலை காதொற்ற தோன்றியது.

 

“என்ன பாஸ் நீ இப்பல்லாம் ரொம்ப சொதப்பி வைக்கிற, அம்மா மார்னிங், ஈவ்னிங் லொங்கு லொங்குனு நடக்குறாங்களே பாவம் அவங்க வெயிட் லாஸ் பண்ண சொல்லி கேட்டா, ரெண்டு கிலோ அதிகமா ஏத்தி விட்டு இருக்க நீ டூ பேட், அவங்களால முடியலனு கட்டில் கீழ, சோஃபா கீழ கிளீன் பண்ற வேலையெல்லாம் எனக்கு வச்சுட்டாங்க. உன் பேபி நான் பாவம் இல்லையா”

 

“அப்புறம் நானும் கேட்டுட்டே இருக்கேன் இப்ப வரை நீ பதில் தரவே மாட்டேங்கிற! எங்க அப்பாவை படைக்கும் போது ஏதாவது இன்கிரிடியன்ஸ் மாத்தி போட்டு தொலைச்சிட்டியா என்ன? எப்ப பார்த்தாலும் மனுசன் உர்ருனு கடுகடுனே இருக்காரு. என்னால முடியல, அவரோட மைன்ட் டென்ஷனை பொக்கி அவரை கலகலனு சிரிக்க வைக்க வேண்டியது உன் பொறுப்பு தான் ஓகேவா”

 

“இவங்கள விட என் அக்காவ நினச்சாதான் தலை பிச்சுக்குது, என்னாச்சு? ஏன் இப்படி இருக்கா? ஒன்னும் புரியல, என்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேங்கிறா, கேட்டா நான் சின்ன பொண்ணாம், எனக்கு தான் அவ செய்யறது எதுவுமே சரியா படல. கொஞ்சம் ஓவர் டைம் வொர்க் பார்த்து அவளோட ரூட்ட கிளியர் பண்ணி விடு பாஸ்”

 

“எப்பவும் போல என் ஸ்டெடிஸ் எல்லாம் செமயா போயிட்டு இருக்கு. படிக்கிற வேலைய நான் பார்த்துக்கிறேன். சோ நீ அதை பத்தி கவலைபட வேணாம். ஐ’ம் கிளவர் கேர்ள் யூ நோ! ஆனா ஒன்னு, லைஃப் செம மொக்கையா போகுது பாஸ், எனக்கு இப்படி சலிச்சுட்டே எல்லாம் வாழ பிடிக்கல. எனக்குனு நீ கொடுத்த இந்த ஒரேயொரு வாழ்க்கைய முழுசா நிமிசம் நிமிசமா உணர்ந்து ரசிச்சு வாழனும். அதுக்கு நீதான் பொறுப்பு, சும்மா அல்லு விடனும் நம்ம லைஃப் பார்த்துக்க!”

 

“இன்னைக்கு கோட்டா ஓவர் பாஸ், முன்ன மாதிரி ஏதாவது சொதப்புன, உன்ன கட் பண்ணிட்டு உன் அண்ணன் பிள்ளையார் கிட்ட ஜாய்ன் பண்ணிடுவேன். என்னைபோல கியூட் பேபிய நீ மிஸ் பண்ண மாட்டனு நம்புறேன். உன்னையும் நல்லா பார்த்துக்கோ, உலகத்தையும் நல்லா பார்த்துகோங்க பாஸ். கிளம்புறேன் டாட்டா” என்று கண்களை திறக்க, இடையில் ஒற்றைக் கையூன்றி பூரண அலங்காரத்தில் இதழ் கடை புன்னகை விரிய தரிசனமானது முருக பெருமானின் திருவுருவம், மனதார வணங்கி விட்டு பிரகாரம் சுற்றி வந்தாள்.

 

வழக்கம் போல குடும்பத்தில் அனைவரின் நலம் வாழ நெய் தீபம் ஏற்றி வணங்கி எழுந்து, கோவில் படியில் வந்தமர்ந்தாள். எப்போதும் இப்படி முருகனிடம் மனதில் உள்ளதை எல்லாம் வடிக்கட்டாமல் கொட்டிவிட்டால் மனம் லேசாகிவிடும் தான். ஆனால் இன்று ஏதோவொரு நெருடல் மிச்சமிருந்தது அவளுக்குள் காரணம் விளங்காமல். 

 

விரல் சொடக்கிடும் சத்தம், அவளின் சிந்தனை கயிற்றை அறுக்க, திரும்பினாள். அவள்முன் ஓர் இளைஞன் நின்றிருந்தான்.

 

இவள் அவனை புருவம் சுருக்கி பார்க்க, அவன் பார்வையில் அப்பட்டமான ஆர்வம் பளிச்சிட்டது. இவளின் புருவ சுருக்கங்கள் நேராகின.

 

அவன் புன்னகை விரிய, “ஹேய், ஐ லவ் யூ டன்டனக்கா” என்றான் அலட்டலாக.

 

“ஹலோ நீ யாருன்னு கூட எனக்கு தெரியாது” பதட்டமா, கோபமா ஏதோவொன்று அவனிடம் பதில் பேசினாள்.

 

“என்னை பத்தி நீ தெரிஞ்சிக்க லைஃப் லாங் இருக்கு, பொறுமையா தெரிஞ்சிக்கலாம் டன்டனக்கா” என்றவனை இவள் வித்தியாசமாக பார்த்து வைத்தாள்.

 

“என் பேரு ஒன்னும் டன்டனக்கா இல்ல” அவன் அப்படி அழைப்பது கோபத்தை கிளப்ப மறுத்து பேசினாள்.

 

“ஓ அப்படியா, அப்ப உன் பேரை சொல்லு” இதை சாக்காக எடுத்து அவன் அவளிடம் கொக்கி இட,

 

மேலும் அவனிடம் பேச்சு வளர்ப்பது அவசியம் இல்லை என்று தோன்றியது அவளுக்கு விலகி நடந்தாள். அவன் அவளை தடுக்கவில்லை. அவள் போகும்மட்டும் அவள் மீதே பார்வை பதித்து நின்றிருந்தான்.

 

“டேய், நிஜமா ப்ரோபோஸ் பண்ணிட்டியா?” அவனருகே வந்த நண்பர்களில் ஒருவன் கேட்க, இவன் ஆமோதிப்பாக தலையசைத்தான்.

 

“தில்லு தான் டா உனக்கு. அவ என்ன சொன்னா?” மற்றவன் ஆர்வமாய் கேட்க, “நான் யாருன்னு கூட அவளுக்கு தெரியாதுன்னு சொன்னா” என்றான் பதிலாய்.

 

“அப்ப நீ உன்னபத்தி சொல்ல வேண்டியது தானே!”

 

“ம்ம் இப்பவே என்ன அவசரம், நிதானமாவே அவ என்னைபத்தி தெரிஞ்சிக்கட்டும்” என்று கள்ள புன்னகை விரித்தான்.

 

“என்னடா இப்படி எல்லாம் உளற ஆரம்பிச்சுட்ட நீ” அவர்கள் கேலியில் இவனும் சிரித்தபடி உடன் நடந்தான்.

 

***

 

அவள் அறையில் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி சின்னாபின்னமாகி இருந்தன. கலைந்து கிடந்த கட்டிலின் ஓரத்தில் பெரிய பெரிய மூச்சுகள் வாங்க தலைவிரிக் கொலமாய் அமர்ந்து இருந்தாள் திவ்யா.

 

மகளின் இந்த ஆத்திரம் பைரவியை கவலைக்கொள்ள செய்தது. “இப்ப என்ன தான் உன் பிரச்சனை? எதுக்கு இப்படி எல்லாத்தையும் போட்டு உடைக்கிற?” அவரின் குரலில் கோபமும் ஆதங்கமும் சரிபாதியாக ஒலித்தது.

 

திவ்யாவிடம் பதில் இல்லை. தரையை வெறித்து தன்னையே வெறுத்து நிமிராமல் அமர்ந்து இருந்தாள்.

 

கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்தவள் தன் அக்காவின் நிலையையும் அறையின் நிலையையும் நெற்றி சுருங்க பார்த்து விட்டு ஏதும் பேசாமல் நகர்ந்து கொண்டாள்.

 

“காதல் காதல்னு அவனை பிடிச்சிட்டு தொங்கினயே இப்ப என்னாச்சு? நானும் உன் அப்பாவும் தலைபாடா அடிச்சுக்கிட்டோம் அவன் வேணாம்னு கேட்டியா நீ. ஒத்த கால்ல நின்னு அவன் தான் வேணும்னு கட்டிக்கிட்ட, முழுசா ரெண்டு வருசம் கூட முடியல அதுக்குள்ள உங்க காதல், கத்திரிக்கா எல்லாம் எங்கடி போய் தொலைஞ்சது?” பைரவி மனம் ஆராமல் பேசி கொண்டே போக, 

 

“ஹான் காத்து வாங்க போயிருக்கும், நகரும்மா” என்று கையில் ஹாட் சாக்லேட் கோப்பையோடு உள்ளே வந்தவள் திவ்யா அருகில் அமர்ந்து, “திவி ஹாட் சாக்லேட் செமயா இருக்கு. சத்தியமா நான் பிரபேர் பண்ணல, சுவிக்கா தான் செஞ்சு கொடுத்தாங்க சோ நீ தைரியமா குடிக்கலாம்” என்று அவளிடம் நீட்டினாள்.

 

தங்கையின் துடுக்கு பேச்சில் அவளுக்குள் இருந்த இறுக்கம் சற்றே தளர நிமிர்ந்தவள் வேண்டாம் என்று தலையசைத்தாள்.

 

“எதையாவது சொன்னா தானடி எங்களுக்கும் என்னன்னு தெரியும். உன் கோவத்துக்கு வீட்டுல இருக்கிறதெல்லாம் போட்டு உடைச்சா சரியா போச்சா, என்ன தான் நினைச்சிட்டு இருக்க நீ?” பைரவி விடாமல் பெரிய மகளை கண்டிக்க,

 

“ம்மா சீரியல் டையலாக் எல்லாம் மெமரி பண்ணிட்டு வந்து இங்க ஒப்பிக்காம கிளம்பு மா காத்து வரட்டும்” அவள் பைரவியை சீண்ட, அவர் சின்ன மகளை முறைத்து வைக்க, திவ்யா சின்னதாய் சிரித்து விட்டாள்.

 

“இது வெறும் ஹாட் சாக்லேட் மட்டும் இல்ல திவி, உனக்கு புதுபுது திங்க்ஸ் கிடைக்க போகுதில்ல அதுக்காக நான் கொடுக்குற ட்ரீட்” என்று மேலும் சொல்ல, திவ்யா புரியாமல் அவள் முகம் பார்த்தாள். 

 

“உன்னோட ரூம் எத்தனை வருசமா இப்படியே இருக்கு. ஒரே மாதிரி பார்த்து பார்த்து போரடிச்சு போச்சு. நல்ல சான்ஸ் யூஸ் பண்ணி இப்ப எல்லாத்தையும் உடைச்சு போட்டுட்ட, இதையெல்லாம் வாரி கொட்டிட்டு சூப்பர் சூப்பர் திங்க்ஸா வாங்கி இந்த ரூமை அல்ராமார்டன் பண்ண மாட்டோம்” என்று கலகலத்து அவள் கையில் கோப்பையை திணித்தாள்.

 

“சரியான வாலுடி நீ” என்று தங்கையை சலித்து கொண்டு ஹாட் சாக்லேட்டை மெதுவாய் பருகலனாள். இதமான சூட்டில் அதன் இனிப்பு சுவை தொண்டைக்குள் இறங்க, மரத்து கிடந்த மூளையின் செல்களை தூண்டி அவளுள் புத்துணர்வை பரவ செய்வதாய்.

 

முழுதாய் குடித்து முடித்ததும் சற்றே ஆசுவாசமாக உணர்ந்தாள் திவ்யா. “தேங்க்ஸ்டி இப்ப கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்றேன்”

 

“உன் தேங்க்ஸ் எனக்கெதுக்கு, டீல் பேசலாமா?” என்று அவள்முன் துள்ளி எழுந்து நின்று, “உனக்கு மறுபடி இதே போல கோவம் வந்ததுனு வச்சுக்கோ நேரா என் ரூம்க்கு போய் எல்லாத்தையும் உடைச்சு போட்டுற, அப்புறம் என் ரூமும் புதுசா மாத்திக்கலாமா? அப்பவும் நான் உனக்கு இதே போல ஹாட் சாக்லேட் ட்ரீட் தருவேனாம், டீலா நோ டீலா?” அவள் கண்ணடித்து கேட்க, திவ்யா வாய்விட்டு சிரித்து விட்டாள்.

 

“என் டென்ஷன் உனக்கு விளையாட்டா தெரியுதா? எப்பதான் வளருவியோ நீ” திவ்யா தலையசைத்து சொல்ல,

 

“நான் என்னத்துக்கு வளரனும்கிறேன்? இதே மாதிரி குட்டி பேபியா ஹாப்பியா இருந்தா போதாதா? நீயும் எதையும் போட்டு குழப்பிக்காம ஹேப்பியா இரு. எல்லாம் நல்லதாவே நடக்கும். உனக்காக பாஸ்கிட்ட ஆப்ளிகேஷன் போட்டுட்டு வந்துருக்கேன். சோ யூ டோன்ட் வொர்ரீ, எல்லாம் அவர் பார்த்துக்குவாரு” என்று சொல்லிச் செல்லும் தங்கையை பார்த்து விரக்தி சிரிப்பை உதிர்த்தாள் திவ்யா.

 

மறுபடி அவள் மனது தன் நிலையை எண்ணி உறழ தொடங்கியது. ‘எங்கே? எப்போது? எங்களின் காதல் பொய்த்து போனது?’ அவளுள் எழுந்த கேள்வி அவளின் மனதை மறுபடி வேதனையில் அழுத்தச் செய்வதாய்.

 

***

 

இரவு படுக்கையில் விழும்போதும் திவ்யாவின் நிலை இவளை கவலை கொள்ள செய்தது. ‘சசி சசி என்று மூச்சுக்கு மூவாயிரம் முறை அவன் பெயரை உச்சரித்து நச்சரித்து கொண்டிருந்தவள், இப்போது எப்படி இப்படி மொத்தமாய் வெறுத்து போனாள்?’ 

 

‘அப்படி என்ன தான் பிரச்சனை ரெண்டு பேருக்கு நடுவுல? காதல்னா இவ்வளோதானா?’

 

அவள் யோசனை ஓட, இன்று கோவிலில்

அவன் சொன்ன ‘ஐ லவ் யூ’ இவள் நினைவில் வந்து நின்றது. 

 

அவளிடம் முதல் முதலாக சொல்லப்பட்ட ‘ஐ லவ் யூ’ இது. 

 

”என்ன பாஸ் இது. உன்கிட்ட சொன்னா என் லைஃப்ல திரில்லிங்கா ஒரு டிவிஸ்ட் வைப்பன்னு பார்த்தா, அருத மொக்க டிவிஸ்ட் வச்சிருக்க” மானசீகமாக கடவுளை நோக்கி சிடுசிடுத்தாள்.

 

”பாஸு சினிமால தான் லவ் வந்தா லைட் எரியும், பட்டர்ஃபிலை வயித்துக்குள்ள பறக்கும், நம்ம சுத்தி எல்லாமே மாறிபோகும்னு கதை கட்டலாம், வாழ்க்கையில எல்லாம் காதல் ரொம்ப தலைவலி ஆண்டவரே”

 

”அவனை சைட் அடிக்கனும், லுக் விடனும்,‌ அவனை லைக் பண்ணனும், அப்புறம் லவ் பண்ணனும், அவனுக்காக டைம் ஸ்பென்ட் பண்ணனும், வாய் ஓயாம எல்லா நேரமும் பேசனும், அப்பா, அம்மாகிட்ட பொய் சொல்லனும், எப்பவும் கனவுலையே மிதக்கனும், எல்லாத்துக்கும் மேல அவன் ஹக் பண்ணா, கிஸ் பண்ண வந்தா…?!” அதை நினைத்து பார்ததவள் முகம் அஷ்ட கோணலாகியது.

 

”அய்யோ… சினிமால ரொமான்டிக் சீன் பார்க்கும் போதெல்லாம் கிளுகிளுன்னு இருக்கும். நமக்குன்னு யோசிக்கும் போது ஏன் இவ்வளவு கன்றாவியா இருக்கு‌ உவேக்”

 

”நீயே சொல்லு பாஸ். இதெல்லாம் எனக்கு தேவையா? எனக்கு தேவையாங்குறேன்? எனக்குன்னு இருக்கற ஒரே வாழ்க்கையில நான் ஏதாவது புதுசா, ஆத்மார்த்தமா செய்ய ஆசபடுறேன். நீ என்னடான்னா உப்பு பெறாத இந்த காதல், கீதல்ல சிக்க வைக்க பார்க்கிற, திவி இப்ப சிக்கிட்டு தவிக்கிறது பத்தாதா!” என்று தலையில் அடித்து கொண்டாள்.

 

ஆனாலும் முன்பின் தெரியாத ஒருவன் திடீரென தன் முன்னாள் முளைத்து காதலை சொன்னது அவளை நெருட தான் செய்தது. 

 

‘ஏன் அப்படி சொன்னான்?’ மறுபடி மனதில் அதே அர்த்தமற்ற கேள்வி சுழன்றது.

 

இதுவரை தன் அழகைப் பற்றி அவள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இப்போது?

 

படுக்கையில் இருந்து எழுந்து, கண்ணாடி முன் நின்று தன்னை அளவிட்டாள்.

 

ஒல்லி, குண்டு என்று எதிலும் சேராமல் சற்று பூசினாற் போன்ற உடல்வாகு. கொழு கொழு கன்னங்கள், டெடி பியர் கண்களை போல குட்டி குட்டி கண்கள், கத்தியின் கூர்மையை பழிக்கும் சப்பை மூக்கு, செப்பு வாய், அதில் இரு புறமும் ஒட்டி வைத்ததை போல மிக மெல்லிய இதழ்கள், மொத்தத்தில் குழந்தைதனம் மாறாத அழகு கொஞ்சும் முக அமைப்பு அவளுடையது.

 

”சும்மா பார்த்த உடனே லவ் சொல்ற மாதிரி கெப்பாசிட்டி எல்லாம் எனக்கு இல்லையே? அவன் எதுக்காக என்கிட்ட ஐ லவ் யூ சொன்னான்?” என்று தலையை சொரிந்தபடி தீவிரமாக யோசிக்கலானாள்.

 

‘ஒருவேளை ஆள மாத்தி சொல்லிட்டானோ?’

 

‘கண்ணு தெரியாத கபோதியா இருப்பானோ?’

 

”ச்ச இருக்காது, பார்க்கிறத்துக்கு அழகா தான் இருந்தான்! என்னைவிட ஹைட்டா தெரிஞ்சான்! அவனோட ஸ்மைல் கூட கியூட்டா தான் இருந்தது! ப்ச் யார் அவன்?” இவளுக்குள் ஓர் ஆர்வம் தொற்றிக் கொண்டது.

 

யாரோ முன்பின் தெரியாதவனை பற்றிய அலசல்கள் அவசியமில்லை என்று தோன்றியது அவளுக்கு.

 

தன்னுள் எழுந்த ஆர்வத்தை அப்படியே ஓரங்கட்டியவள், தனது புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கினாள். விரைவில் உறக்கம் வருவதற்கான எளிய வழி‌ இது!

 

சில நிமிடங்களில் புத்தகத்தின் எழுத்துக்கள் இரண்டாய் மூன்றாய் தெரிய, இமைகள் சொருக அதன் மீதே படுத்து உறங்கி போயிருந்தாள்.

 

***

 

காதல் கூத்து கட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!