காதலில் கூத்து கட்டு 10(1)

images (25)-bc6813d9

காதலில் கூத்து கட்டு 10(1)

‘உன்மேல செம காண்டுல இருக்கேன் பாஸு. அதான் ஒருவாரமா உன்ன பார்க்க வரல’ ரம்யா வழக்கம் போல கருவறை முன்பு கைக்கூப்பி நின்று, அந்த அழகன் முருகனிடம் மானசீகமாக சண்டையிட்டு கொண்டிருந்தாள்.

 

‘ஏதோ லைஃப் போரிங்கா போகுது சும்மா ஒரு டிவிஸ்ட் கொடுன்னு கேட்டது ஒரு குத்தமா, அதுக்குன்னு இப்படியா! போயும் போயும் அந்த அமுதன் ஃபிராடு கிட்டயா என்னை கோர்த்து விட பார்ப்ப, அவனையும் பிச்சிடுவேன் உன்னையும் பஞ்சர் ஆக்கிடுவேன்’ 

 

‘பஞ்சர் ஆக்குவாயா?! இதென்ன தமிழ் கடவுளெனக்கு வந்த சோதனை!?’ என்று கேட்பது போலவே கருவறையில் அப்பாவி களை சொட்ட சொட்ட நின்றிருந்தான் வடிவேலவன்.

 

‘மறுபடியும் நீ சொதப்புன பாஸு உனக்கும் எனக்கும் எந்த டீலிங்கும் இல்ல ஆமா, அப்புறம் என்னைபோல கியூட் பக்தைய நீ இழக்க வேண்டி இருக்கும் பார்த்துக்க’ என்று வழக்கமான தன் மிரட்டலை விடுத்து கண்களை திறக்க, எதிரே வசீகரன் தரிசனமானான். அவளை ஒரு மார்க்கமாக பார்த்தபடி.

 

அவள் சட்டென கருவறைப் புறம் திரும்பி முருகனை வணங்கிவிட்டு பிரகாரம் சுற்றி நடக்க, வசீகரனும் ஒருமுறை இறைவனை வணங்கிவிட்டு அவளுடன் நடந்தான்.

 

அவ்வப்போது கோவிலில், பொது இடங்களில் இவர்கள் ஒருவரையொருவர் பார்த்து கொள்வது வழமை தான் என்றாலும் முன்பு போல கண்டும் காணாமல் நகர்ந்து போக முயற்சிக்கவில்லை இருவரும்.

 

“வேண்டுதல் பலமோ ரமி? ரொம்ப நேரமா வேண்டிட்டு இருந்த, பட் உன் ஃபேஸ் ரியாக்ஷன் தான் ஏதோ உர்ருனு இருந்துச்சு” அவன் புன்னகை வழிய கேட்டு அவளுடன் இணைந்து நடக்க,

 

“அதெல்லாம் எனக்கும் பாஸுக்கும் இருக்க அன்டர்ஸ்டேன்டிங், உனக்கு சொன்னா புரியாது” என்றவள், “அதோட என் பேமிலி, கிளோஸ் ஃபிரண்ட்ஸ்னு எனக்கு நெருக்கமானவங்க மட்டும் தான் என்னை ‘ரமி’னு செல்லமா வெல்லமா கூப்பிடுவாங்க, நீ அப்படி கூப்பிடாத ஓகே” ரம்யா உத்தரவாக சொல்ல, வசீகரன் புருவங்கள் மேலெழுந்து இறங்கியது. 

 

“சரி, ரமினு கூப்பிடல விடு” அவன் உடனே ஒத்துக்கொள்ள, அவனை புருவங்கள் நெளிய பார்த்தவள், “என்ன, இன்னைக்கு நீயும்‌ கோயிலுக்கு வந்திருக்க? எப்பவும் என்னை பார்த்தா முறச்சுட்டு போவ இப்பென்ன சிரிச்சு வேற பேசுற?” என்று கேள்வி தொடுத்தாள்.

 

“ம்ம் இருபத்தி நாலு வருசத்துக்கு முன்னால இதே நாள்ல ஒரு உயிரை படைச்சு விட்டியே முருகா, அந்த அப்பாவிய கொஞ்சம் கைத்தூக்கி விடுப்பானு கேட்க வந்தேன்” வசீகரன் இழுத்து சொல்ல, இவள் புரியாமல் அவனை பார்த்தாள்.

 

அவன் இளநகை விரிய, இவளுக்கு புரிந்தது. “ஓ இன்னைக்கு உன்னோட பர்த்டேவா?”

 

“அப்படியும் சொல்லலாம்” அவன் தோள் குலுக்க, 

 

“இது உனக்கே ஓவரா தெரில”  என்றவள், “சரி பொழச்சு போ, மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ்” வாழ்த்து சொல்லி கை நீட்டினாள்.

 

அவனும் அவள் வாழ்த்தினை ஏற்று கைக்கொடுக்க வர, அவன் கரத்தை தட்டி விட்டவள், “பர்த்டேக்கு விஷ் பண்ணா சாக்லேட் கொடுக்கனும், அதுகூட தெரியாதா உனக்கு?” ரம்யா வாயை கோணி காட்டி தலையில் அடித்துக் கொள்ள,

 

“ம்க்கும் நீயும் நானும் ஸ்கூல் பசங்க பாரு, டிஃபன் பாக்ஸ்ல சாக்லேட்ஸ் ரொப்பி வந்து கொடுக்க, நீயெல்லாம் வளரவே மாட்டியா?” அவனும் அலுத்து கொண்டான்.

 

“எதுக்கு வளரனும்? வளரந்துட்டே போனா கிழவியா தான் ஆகனும். நமக்கு பிடிச்ச மாதிரி நாம இருந்துக்கலாம். நோ டென்ஷன் நோ பிபி” என்றவள் துர்க்கை சன்னதியில் நின்று, அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி கைக்கூப்பி வணங்கினாள். 

 

கருங்கல் அம்மன் சிலையும் குங்கும அலங்காரமும் நெய் தீப ஒளியும் அவள் வணங்கி நின்ற தோற்றமும் தெய்வீக அழகியலாக காட்சியானது அவனுக்கு. உடனே தன் கைப்பேசியில் நிழற்படமாய் சேகரித்து கொள்ளவும் செய்தான் வசீகரன்.

 

கண் திறந்தவள், “அறிவிருக்கா உனக்கு எதுக்கு ஃபோட்டோ எடுத்த? மொபைல கொடு” அவனிடமிருந்து கைப்பேசியை பிடுங்கி பார்க்க, அந்த நிழற்படம் மிக அழகாகவே வந்திருந்தது.  

 

எலுமிச்சையின் மஞ்சள் நிறமும் தீபங்களின் சிவப்பு நீல ஒளியின் மந்தகாச பிரகாசத்தில் தெரிந்த அம்மனின் கருணை தோற்றமும் அத்தனை நேர்த்தியாக வந்திருந்தது, இல்லை அவன் அத்தனை லாவகமாக படம் பிடித்து இருந்தான். இவள் வணங்கி நிற்பதை கூட முகம் தெரியாமல் பக்கவாட்டு தோற்றத்தில் மட்டுமே எடுத்திருந்தான். 

 

அந்த படத்தை டெலிட் செய்ய இவளுக்கு மனம் வரவில்லை. “நல்லாதான் எடுத்து இருக்க. ஆனாலும், என்னை கேக்காம என்னை ஃபோட்டோ எடுத்தது தப்பு தான்” என்ற கண்டிப்புடன் கைப்பேசியை அவனிடம் திருப்பி கொடுத்தாள். 

 

“சாரி, பார்க்க ரொம்ப நல்லா இருந்ததா, அதான் ஆர்வத்துல எடுத்துட்டேன். அப்போ கூட உன் ஃபேஸ் தெரியாம தான் எடுத்தேன்” அவன் சமாதானம் சொல்ல, “இதுக்காக எல்லாம் உன்ன நல்லவன்னு ஒத்துக்க முடியாது போ” ரம்யா அசட்டையாக சொல்லி செல்ல, 

 

“அப்ப நான் நல்லவன் இல்லனு சொல்றீயா?” அவன் சாதாரணமாக கேட்க முயன்றும் சற்றே ஆதங்கம் வெளிப்பட்டது.

 

“உனக்கு நீ நல்லவனா இருக்கலாம், எனக்கும் நீ நல்லவனா இருக்கனும்னு அவசியம் இல்லயே” அவள் சொல்ல, வசீகரன் கண்கள் சுருங்கி விரிய, “அட ஆமால்ல” என்றான்.

 

“ஆமாவா? இல்லயா?” ரம்யா விடாமல் கேட்க, “கடுப்படிக்காத ரம்யா, மொக்கயா ஜோக்” என்றவன் பார்வை சற்று தூரத்தில் யாரையோ கண்டு கொண்டது!

 

தான் வழக்கமாய் அமரும் படியில் அமர்ந்து கொண்டவளின் பார்வையும் அங்கே சுற்றி தேடி நின்றது. 

 

அவளையும் கவனித்த வசீகரன், “யாருக்காவது வெயிட் பண்றியா?” என்று கேட்க, மறுப்பாக தலையசைத்தவள், “அந்த அமுதன் இல்ல, நான் எங்க போனாலும் பின்னாடி வந்து டென்ஷன் ஏத்துறான். அதான் இப்பவும் வந்து தொலைவானோனு பார்த்தேன்” என்று முகம் சுருக்கி சொன்னாள்.

 

“உனக்கு அந்த அமுதனை பிடிச்சிருக்கா ரம்யா?” வசீகரன் நேரடியாக கேட்க, அவள் அவனை ஏகத்துக்கும் முறைத்து வைத்தாள்.

 

“இல்ல அவன்மேல உனக்கு ஃபீலிங் ஏதாவது? அப்படி” அமுதனை பற்றி அவள் என்ன நினைக்கிறாள் என்று அறியும் பொருட்டு மேலும் கேட்க,

 

“அவன்மேல எனக்கு இரிடேட் ஃபீலிங் தான் வண்டி வண்டியா இருக்கு போதுமா, பிடிக்கல ஒத்துவராதுன்னு சொல்லியும் கொஞ்ச கூட வெக்கமே இல்லாம பின்னாடி சுத்தறான், ஒருநாள் இல்ல ஒருநாள் அவனை கல்லெடுத்து அடிச்சு விரட்ட போறேன் பாரு” என்று ரம்யா படபடத்துக் கொண்டே செல்ல, 

 

வசீகரன், “கேட்டுச்சா… மறைஞ்சு இருந்து‌ கேட்டதெல்லாம் போதும் வெளியே வாங்க சார்” என்று கத்தி சொன்னவன், தங்களுக்கு எதிர் பக்கவாட்டு சுவரின் மறைவிலிருந்த அமுதனின் சட்டையை பிடித்து இழுத்து வந்து அவள் முன் நிறுத்தினான்.

 

ரம்யா முகம் கோபத்தில் ஊதி போனது. அமுதன் மாட்டிக்கொண்ட போதும் அசராதவனாக, “ஹாய் டன்டனக்கா” அவளிடம் கையசைக்க, அவள் முகம் திருப்பிக் கொண்டாள். 

 

“அதென்னடா டன்டனக்கா?” வசீகரன் இருவரையும் பார்த்தபடி பொறுமையாக சந்தேகம் கேட்க, 

 

“டன்டனக்கா தெரியாதா பாஸ் உங்களுக்கு? அது ரம்யாவோட ரிங்டோன்” அமுதன் ஆர்வமாக சொல்ல வர, “போதும் நிறுத்திக்க” ரம்யா குறுக்கே தடுத்து பேசினாள்.

 

“என்னை டிஸ்டர்ப் பண்ணாதனு எத்தனை முறை சொன்னாலும் உன் மரமண்டயில ஏறாத, எப்ப இங்க உன்ன பார்த்தேனோ அப்போ இருந்து என் நிம்மதியே போச்சு” அவள் படபடக்க,

 

“உன்ன பார்த்ததுக்கு அப்புறம் என் நிம்மதி கூடத்தான் போச்சு, உன்ன பார்க்காத என்னோட நாளெல்லாம்  முழுமையாகாமா அரைகுறையா தொங்கல்ல நிக்குது, என்னை என்ன செய்ய சொல்ற டன்டனக்கா” அமுதன் உருகி பேச,

 

“டேய் என்னை அப்படி கூப்பிடாத, உன்ன கொன்னுடுவேன்” ரம்யா கத்தி விட்டாள்.

 

“உன் காதல்ல தினம் தினம் உயிரோட செத்துட்டு தான் இருக்கேன், இப்ப நீ என்னை கொன்னாலும் எனக்கு சந்தோசம் தான்” அமுதனின் உருகி வழியும் பேச்சில் வசீகரனுக்கும் கண்ணைக் கட்டியது போலாக, தலையைக் குலுக்கி விட்டுக் கொண்டான்.

 

“வசீ, என்னால இந்த அறுவ கூட பேச முடியல, ப்ளீஸ் இவனை அடிச்சு துரத்து உனக்கு புண்ணியமா போகும்” வசீகரனிடம் ரம்யா கை கூப்பி கேட்டு கொள்ள, அவனுக்கும் அவளை பார்க்க பாவமாக தான் இருந்தது. அவன் பார்வை எரிச்சலாக அமுதனிடம் பாய, அமுதன் பம்மினான்.

 

“ப்ரோ, கோயில்ல அடிதடி எல்லாம் கூடாது ப்ரோ, நாம பொறுமையா பேசி தீர்த்துக்கலாம்” அமுதன் அவசரமாக சொல்ல,

 

“யாருடா உனக்கு ப்ரோ? என்ன பேசி தீர்க்கனும்? தீர்த்துட்டே பேசிக்கலாம், எங்க வீட்டு பொண்ணுக்கிட்ட கடலை போடுற உன்ன சும்மா விடலாமா சொல்லு” வசீகரன் தன் கை சட்டையை‌ மடித்து விட, 

 

“நீங்க ரம்யாக்கு மச்சான்னா எனக்கு ப்ரோ தான ப்ரோ அதான்” என்ற அமுதன் இரண்டடி பின்வாங்கினான்.

 

“ஓஹ் மொறை வச்சு கூப்புறியோ, அட ச்சீ அடிக்க மாட்டேன் இங்க வா” என்று அவனை அருகிழுத்து கொண்ட வசீகரன், “பிடிக்கலன்ற பொண்ணு பின்னாடி சுத்தி இப்படி டிஸ்டர்ப் பண்றது கேவலமா இல்லயா உனக்கு” 

 

“கொஞ்சம் கேவலமா தான் இருக்கு, பட், மானம், அவமானமெல்லாம் பார்த்தா லவ் ஒர்க்அவுட் ஆகாதே ப்ரோ” அமுதன் அசராமல் சொன்னான்.

 

“இருந்தாலும் உனக்கு வாய் கொழுப்பு அதிகம் தான். இந்த வாயிலயே நாலு குத்து விட்டா, சரியா போயிடும்”

 

“அய்யோ ப்ரோ,‌ மீ பாவம், இங்க வந்ததும் ரம்யா கண்ணு என்னை தான முதல்ல தேடிச்சு, அவளுக்கும் என்மேல ஒரு ‘இது’ இருக்கு” அமுதன் கண்ணடித்து சொல்ல, வசீகரன் கேள்வியாய் ரம்யாவை பார்த்தான்.

 

“எனக்கு குரங்க பார்த்தா பயம், அது என் பக்கத்துல வந்துடுமோனு பயந்து தேடி பார்த்தா, அது மேல எனக்கு ‘இது’ன்னு ஆகிடுமா?” ரம்யா காரமாக பதில் தந்தாள்.

 

“போதுமா மங்கி, இப்ப சொல்லு நீ எந்த ஏரியா, இங்க ஏன் சுத்திட்டு இருக்க?” வசீகரன் அவன் சட்டை காலரை வாட்டமாக பிடித்து விசாரிக்க, “ஏரியா எல்லாம் எதுக்குண்ணா, பிடிச்சிருக்கிறதை பிடிக்கலன்னு சொல்லி சுத்தல்ல விடுறது தான பொண்ணுங்க பாலிசி” அமுதன் மேலும் உளறி கிளறி வைக்க, ரம்யாவின் ஆத்திரம் தலைக்கேறியது.

 

“ஏய் எங்களுக்கென்ன மூளை முதுகுலியா இருக்கு, பிடிச்சிருந்தா பிடிக்கலன்னு மாத்தி சொல்றதுக்கு? நீங்களா பொண்ணுங்கள பத்தி தப்பு தப்பா சொல்லிக்கிட்டா அதுக்கு நாங்க பொறுப்பா?” ரம்யா அமுதனை அடிக்க பாய,

 

“ப்ளீஸ் ப்ளீஸ் கோபப்படாத டன்டனக்கா, நாம ரெண்டு பேரும் தான் மேட் ஃபார் ஈச் அதர். நாம வாழ போற வாழ்க்கை நம்ம காதலுக்கு உதாரணமா இருக்கும். என்னை நம்பு” அமுதன் அவள் கையை பற்றிக் கொள்ள, அவன் கையை உதறியவள், “இந்த லூசு கிட்ட பேசறதெல்லாம் வேஸ்ட், வா வசி போலாம்” ரம்யா வெறுத்து போய் விலகி செல்ல,

 

“நோ ரம்யா, இவன் சேப்டரை இங்கே கிளோஸ் பண்றது பெட்டர்” என்ற வசீகரன் திரும்பி, அமுதன் கன்னத்தில் ஓரறை விட்டிருந்தான். அவன் விட்ட அறையில் அமுதனுக்கு மட்டுமின்றி ரம்யாவிற்கும் பொறி தட்டியது.

 

ரம்யாவின் முன்பு அறை வாங்கியது வலியை விட, அவமானத்தை அதிகம் தர, அமுதன் முகம் சிவந்து கறுத்து போனது. “இங்க பாருங்க பேச்சு பேச்சா இருக்கும் போது எதுக்கு கை வைக்கிறீங்க? நான் திருப்பி அடிக்க மாட்டேன்னு நினச்சிட்டீங்களா?” அமுதன் சீறிக் கொண்டு நிற்க, பிரச்சனை பெரிதாகமோ என்று ரம்யாவிற்கு பயம் பிடித்துக் கொண்டது.

 

“அடிச்சு தான் பாரேன், நானும் எங்க வீட்டு பொண்ணு விசயம் ஆச்சேனு பொறுமையா போனா, ரொம்ப சீன் போடற இல்ல நீ” வசீகரனும் சண்டைக்கு நின்றான்.

 

இப்போதே கோயிலில் அங்கங்கே இருந்தவர்கள் கவனம் இவர்கள் பக்கம் திரும்பி இருக்க, “கோயில்ல வச்சு பிரச்சனை வேணா, போகலாம் வசி” ரம்யா வசீகரனை பிடித்து இழுத்தாள்.

 

“இப்ப வேணா அவளுக்கு என்னை பிடிக்காம இருக்கலாம், ஆனா என்னை தவிர வேற யாராலையும் அவ மனசை தொட முடியாது. அதெல்லாம் காதலுக்கு இருக்கிற திமிருங்க அந்த திமிரு எனக்கும் இருக்கு, அதுலென்ன தப்பு” அமுதன் நிறுத்தாமல் பேசிக்கொண்டே போக, வசீகரன் மறுபடி அவனை அறைந்து இருந்தான்.

 

“நானும் பார்க்கிறேன் சும்மா சும்மா டைலாக் விட்டுட்டு இருக்க” வசீகரனுக்கு கோபம் ஏறி இருந்தது.

 

“ஏய், என்னா? உன் ஆளுக்கு நான் ப்ரோபோஸ் பண்ண மாதிரி பொசுக்கு பொசுக்குனு அடிக்கிற, நல்லால்ல சொல்லிட்டேன்” அமுதனும் திமிறிக்கொண்டு முறைக்க,

 

“ஆமா டா, அவ என் ஆளு தான், அவளை நீ டிஸ்டர்ப் பண்ணா நான் அடிக்க தான் செய்வேன். இப்ப என்ன சொல்ற?” வசீகரனும் ஏட்டிக்குப் போட்டியாக பதில் தர, அமுதன்‌ திகைத்து விழி பிதுங்கி பார்க்க, ரம்யா நெற்றியில் கைவைத்து கொண்டாள்.

 

“சும்மா சொல்லாதீங்க பாஸ்” அவன் தந்த அதிர்ச்சியில் அமுதன் இறங்கி வந்திருந்தான்.

 

வசீகரன் ஒருமுறை ரம்யாவின் முகம் பார்த்துவிட்டு, “நான் ஏன் டா பொய் சொல்ல போறேன்? உன்கிட்ட பொய் சொல்லி எனக்கு என்ன ஆக போகுது சொல்லு? ரம்யா படிப்பு முடியறவரைக்கும் யாருக்கும் தெரிய வேணாம்னு மறைச்சு வச்சிருந்தோம். நீதான் தேவையில்லாம எங்க குறுக்க வந்து கிளறி விட்டுட்ட” உண்மைபோல அவன் காதல் கதையை திரித்து விட, அமுதன் முகம் மொத்தமாக தொங்கி போனது. 

 

‘அடாபாவி!’ 

 

அவன் விட்ட ரீலில் ரம்யா வாய் பிளந்து நின்றாள்.

 

வசீகரன் திரித்த கதையை உண்மையென்றே நம்பினான் அமுதன். இன்று இவர்கள் இருவரையும் ஒன்றாக கோயிலில் பார்த்த போதே அவனுள் தோன்றிய நெருடல் அவனை நம்ப செய்திருந்தது.

 

“சாரி சார். நான் தான் தப்பா” அமுதன் குரல் உடைவது போலாக, 

 

“இனிமே ரம்யாவ டிஸ்டர்ப் பண்ற வேலையெல்லாம் வேணா, கிளம்பு” வசீகரன் உத்தரவில் அங்கிருந்து சென்ற அமுதனை பார்த்த ரம்யா, பக்கென வாய்விட்டு சிரித்து விட்டாள். 

 

“உனக்கு உண்மைய விட பொய் தான் பக்காவா வருமா, என்னமா அளந்து விடுற, அந்த லூசும் அதை நம்பி பர்ஃபார்மன்ஸ் கொடுத்துட்டு போகுது” என்று அடக்கமாட்டாமல் மேலும் சிரித்து விட்டவள், “எப்படியோ அந்த குரங்கு போய் தொலைஞ்சான், ரமீ ஹேப்பீ பாஸ்” என்று ஆசுவாச மூச்செடுத்து விட்டாள்.

 

அவளை நெற்றி சுருங்க பார்த்து நின்ற வசிகரன், “ஓய், அவன்கிட்ட நாம லவ்வர்ஸ்னு பொய் சொல்லி இருக்கேன், அதைப்பத்தி உனக்கு ப்ராப்ளம் இல்லயா?” என்று கேட்க, 

 

“அதான் பொய்னு நீயே சொல்லிட்டியே, அப்புறம் என்ன? உண்மைக்கு தான பயப்படனும் பொய்யெல்லாம் டீல்ல விட்டு தள்ளலாம்” என்றவள் பழைய துள்ளலுடன் முன் நடந்தாள்.

 

“ப்ச் பொய்க்கு கூட போயும் போயும் உன்ன லவ் பண்றேன்னு சொல்ல வேண்டியதா போச்சே, அதான் சகிக்கல” அவன் முகத்தை கசக்கி கொள்ள, ரம்யா “ரொம்ப தான் போ, வெவ்வே வெவ்வே” அவனுக்கு அழகு காட்டி நடந்தாள்.

 

இருவரும் கோயிலுக்கு வெளியில் வந்திருந்தனர். 

 

“தனியாவா வந்த? நான் டிராப் பண்ணவா?” வசீகரன் விசாரிக்க, அவனின் புதுமையான அக்கறை இவளுக்கு வினோதமாக தான் தெரிந்தது.

 

“நோ தேங்க்ஸ், கார்ல தான் வந்தேன். அதோ டிரைவர் அண்ணா எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காரு பாரு” என்று கைக்காட்ட, ரம்யாவை கவனித்த ஓட்டுனர் காரை இவர்களிடம் இயக்கி வந்து நிறுத்தினார்.

 

“ரம்யா வெயிட், ட்டு மினிட்ஸ்” என்று அருகிருந்த கடைக்கு சென்றவன், சாக்லேட் ஒன்றை வாங்கி வந்து அவளிடம் நீட்டினான்.

 

ரம்யா அவனை மெச்சுதலாக பார்த்து, “ஐ சாக்லேட், நாட் பேட் இப்பவாவது கொடுக்கனும்னு தோனுச்சே உனக்கு” என்று வாங்கிக் கொண்டவள், தன் கைப்பையை துழாவி எடுத்து அவனிடம் ஒரு பரிசு பொருளை நீட்டினாள். “உன்னோட பெஸ்ட் டேல உனக்கு எல்லாமே பெஸ்ட்டா அமையட்டும். உன்னோட டிரீம்ஸ் எல்லாம்  சக்சஸ்ஃபுல் ஆகட்டும்” என்று வாழ்த்தும் சொன்னாள்.

 

அவளின் வாழ்த்தையும் பரிசையும் இளநகையோடு பெற்றுக் கொண்டவன், அவள் தந்ததை பார்க்க, ‘சக்ஸஸ்’ என்ற ஆங்கில வார்த்தை தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டு வெள்ளை சிறு கற்கள் பதிக்கப்பட்ட கீசெயின் அது. இன்னும் கவர் கூட பிரிக்கப்படாமல் இருந்தது. அதை பார்த்ததும் அவன் இளநகை மேலும் விரிந்தது.

 

“எப்படி இப்படி எல்லாம்” அவன் சிரித்தபடி கேட்க,

 

“பார்த்ததும் பிடிச்சது, ஆர்டர் பண்ணேன், ஈவ்னிங் தான் வந்தது, உனக்கும் பிடிச்சு இருக்கு இல்ல” என்றாள் ரம்யா.

 

ஆமோதித்து தலையசைத்தவன், “சாக்லேட் கொடுத்தா தான்… ப்ரசன்ட் கூட கிடைக்குது இல்ல ம்ம்” வசீகரன் அவளை சீண்ட,

 

“ஆமா, இங்க எதுவும் சும்மா கிடைக்காது வசி அங்கிள்” அவளும் சீண்டலாக சொல்ல, “அடிங்” என்று அதட்டினான்.

 

“டுடே என்ன பர்த்டே ஸ்பெஷல்?” ரம்யா அவன் அதட்டலை கழித்தலில் விட்டு ஆர்வமாக கேட்க, “ஈவ்னிங், ஃபேமிலி, ஃபிரண்ஸோட ஒரு சின்ன பார்ட்டி, அவ்வளோ தான்” என்றான்.

 

“என்னை எல்லாம் இன்வைட் பண்ண மாட்டீங்களோ?”

 

“அப்படியே உன்ன இன்வைட் பண்ணிட்டாலும், உன் அப்பாவும் அக்காவும் கட்டைய தூக்கிட்டு ஓடி வருவாங்க, தேவையா எனக்கு”

 

“நீ இன்வைட் பண்ணா கூட நான் ஒன்னும் வரமாட்டேன், தண்ணி அடிச்சுட்டு, கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட கூத்தடிப்ப சீ சீ பே பே” அவள் முறுக்கி கொண்டாள்.

 

“ஓய் அதெல்லாம் இல்லனா பார்ட்டில வேற என்ன மஜா இருக்கு சொல்லு” அவன் விடாமல் கேட்க, “நான் போறேன் பை, அன்ட், நீ எப்பவுமே கெட்ட பையன் தான்” என்று முகத்தை திருப்பி விட்டு காரில் ஏறிக் கொண்டாள்.

 

கார் அங்கிருந்து நகர்ந்த பிறகும் வசீகரன் முகத்தில் அவள் தந்து சென்ற மென்னகையின் மிச்சங்கள் ஒட்டி இருந்தது.

 

***