காதலில் கூத்து கட்டு 11

காதலில் கூத்து கட்டு 11

ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணி அளவில் இரு குடும்பங்களும் திவாகர் இல்லத்தில் கூடியது. இயல்பான வரவேற்புடன் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்க அங்கே ஒருவித சங்கடம் நிலவியது.

 

திவாகரின் அழுத்த பார்வை மற்றவர்களை தவிர்த்து வசீகரனை சுட்டெரித்து குற்றம் சாற்றிக் கொண்டிருக்க, அவன் அதை உணர்ந்தும் தாடை இறுக, தன்னை அமைதியாக காட்டிக் கொண்டான். 

 

‘இந்த பக்கிங்க லவ்வ நம்பி ரிஸ்க் எடுத்து சேர்த்து வச்சதுக்கு,‌ இந்த ஹிட்லர் முறைப்ப எல்லாம் பொறுத்துக்க வேண்டியதா போச்சு’ வசீகரன் தனக்குள் கடுகடுத்து வேறுபுறம் திரும்பிக் கொண்டான்.

 

“டேய் அண்ணா, இனி எந்த லவ்வையும் சேர்த்து வைக்க மாட்டேன்டா, அது உன்மேல சத்தியம்டா! உன் மாமனார் முறைக்கிறது, நடுவீட்டுல உக்கார வச்சு என் மூக்கறுக்கற மாதிரி இருக்கு” அண்ணனின் காதில் வார்த்தைகளை கடித்து துப்ப,

 

“டேய், நீ வேற, இவங்களை தனிதனியா விட்டாலே பக்கம் பக்கமா பேசுவாங்க, இப்ப மொத்தமா கூடி இருக்காங்க வேற, இங்க என்ன கூத்து நடக்க போகுதோன்னு தல பிச்சுகுதுடா எனக்கு” சசிதரனும் பதற்றத்தில் தம்பியின் காதில் படபடக்க,

 

“சேருவதும் பிரியறதும் உங்களுக்கு ஈஸியா போச்சு இல்ல, அனுபவி” என்றவன் அங்கே பார்வையை சுழற்றி விட்டு, “அட, எல்லாரும் இருக்காங்க, முக்கியமான ஆள மட்டும் காணோமே” என்றான்.

 

“யாருடா அது? என் மாமனார விட முக்கியமானவங்க?” சசிதரன் குழப்பமாக கேட்க, “வேற யாரு உன் மச்சினி தான்” என்றவனை சட்டென நிமிர்ந்து பார்த்தான். 

 

“அடாபாவி, இங்க என்ன ரணகளம் நடக்க போகுதோனு நான் பயந்துட்டு இருக்கேன், நீ சைட் அடிக்க ஆள் பார்த்துட்டு இருக்கியா?” என்று பெரியவன் அங்கலாய்க்க,

 

“உன் மாமியார் வீட்டுல கொஞ்சமாவது புத்திசாலித்தனமா பேசறவ அவ மட்டும் தான், அதான் கேட்டேன்” என்றவனை பெரியவன் நம்பாமல் பார்க்க, “கொஞ்சமே கொஞ்சம் கியூட்டா இருக்கா இல்லடா, இந்த கிழடு கட்டைகளுக்கு நடுவே கொஞ்சம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கட்டுமேனு” வசீகரன் கண் சிமிட்டலுடன் பேச்சை முடிக்காமல் இழுக்க, கடுப்பான சசிதரன் தன் வாய் மேல் கை வைத்து, “வாயை மூடு” கடுப்பாக சைகை காட்டி விட்டு நிமிர்ந்து அமர்ந்து கொண்டான்.

 

எதிரே திவ்யா இவர்களை தான் கோப பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு குறையாத ஆதங்கத்துடன் சசிதரனும் மனைவியை முறைத்து வைத்தான்.

 

‘உன்னால தான் டி நாலு பேரு நம்ம வாழ்க்கைய நோண்டி நொங்கெடுக்குற நிலைம வந்திருக்கு, போயும் போயும் உன்ன காதலிச்சு கட்டி தொலைச்சேன் பாரு என் புத்திய சொல்லனும்’ சசிதரனால் தனக்குள் கறுவிக் கொள்ள மட்டுமே முடிந்தது.

 

வீட்டு பெண்கள் தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டிருக்க, இளங்கோவனின் தொண்டை கணைப்பில் மீண்டும் அங்கே அமைதி சூழ்ந்து கொண்டது.

 

இளங்கோவன், “திவ்யா, நம்ம வீட்ட விட்டு வெளிய வர அளவுக்கு அங்க என்னம்மா உனக்கு குறையா நடந்தது, சொல்லுமா” நேரடியாக மருமகளிடம் கேட்கவும், சட்டென திவ்யாவிற்கு பதில் சொல்ல வரவில்லை அமைதியாக இருந்தாள்.

 

சாவித்ரி, “நானுந்தான் கேக்குறேன் அப்படி என்னமா குறை வச்சோம் நாங்க உனக்கு, கல்யாணமாகி வந்த இந்த ரெண்டு வருசத்துல ஒருநாளாவது சமையற்கட்டு பக்கம் எட்டி பார்த்து இருப்பியா, இல்ல காபி, சுடு தண்ணியாவது வச்சு கொடுத்திருப்பியா? நாங்க பார்த்து கட்டி வச்ச பொண்ணுனா அதட்டி கூட வேலை சொல்லி இருப்பேன். என் பேரன் ஆசபட்டு கட்டிட்டு வந்தவளா போயிட்டனு மூனு வேளையும் முகங்கோணாம நானும் எம் மருமவளும் ஆக்கி போட்டோமே அதுல குறை கண்டியா?” சசிதரன் பாட்டி அங்கலாய்த்து பேச,

 

பைரவி, “எங்க பொண்ணுக்கு என்ன தலையெழுத்து உங்க அடுப்படியில வெந்து ஆக்கி போடனும்னு, பார்த்து பார்த்து சீராட்டி பாராட்டி வளர்த்து வச்சா, பெரிய இடத்து பொண்ணுனு வளச்சி போட்டு போன உங்க மகனுக்கு பொண்டாட்டிய ரத்தனமா வச்சு தாங்கற வக்கு இருக்கனும்” திவ்யா அம்மாவும் எதிர் வாதம் செய்ய,

 

சசிதரன், “அத்த, உங்க பொண்ண கேளுங்க, நான் அவள தாங்கினேனா இல்லயானு அவ சொல்லுவா, இப்பவும் நாங்க பிரிஞ்சி இருக்க காரணம் உங்க பொண்ணு தான். இப்பவும் மனசுல அவளை தாங்கிட்டு தான் இருக்கேன், வாழ்க்கை பூரா அவளை தாங்கவும் தயாரா தான் இருக்கேன்” ரோஷமாக பதில் தர,

 

பைரவி, “ரோஷம் மட்டும் இருந்தா பத்தாது, பொண்டாட்டி மனங்கோணாம வச்சு வாழ்ந்து இருக்கனும், உங்கள சொல்லி குத்தம் இல்ல, தராதரம் பார்க்காம ஆசபட்டு, எங்க பேச்சையும் மீறி ஒத்த கால்ல நின்னு கட்டிக்கிட்டா இல்ல இவள சொல்லனும்” தன் மன புழுக்கங்களை கொட்டி தீர்க்கலானார்.

 

சாவித்திரி, “ஆ…மா, நீங்க எட்டூரு கட்டியாண்ட ராஜ வம்சம் பாரு, நாங்க கழுத மேய்ச்ச வம்சம் பாரு, பல்லு மேல நாக்கப்போட்டு 

பெருசா பேச வந்துட்ட, மெத்த படிச்ச பொண்ணா இருந்தாலும் வீட்டு வேலை கொஞ்சமாவது சொல்லி கொடுத்து வளர்த்து இருக்கனும், அந்த பக்குவம் உனக்கே இல்ல. உன் மகளுக்கு எப்படி வரும்? புருஷன் கூட எப்படி விட்டு கொடுத்து வாழனும்னு நாலு வார்த்தை நல்லது சொல்லி இருக்கனும், அதுவும் இல்ல” அலுத்து பேசிக்கொண்டே போக,

 

“ம்மா, இங்க அவங்கள சமாதானப்படுத்த தான் வந்து இருக்கோம், சண்டைக்கு இழுக்க இல்ல, புரிஞ்சு பேசுங்க” இளங்கோ சொல்லவும் சாவித்ரி வாய் மூடிக் கொண்டார்.

 

“நீ பேசு திவ்யா” இளங்கோ மருமகளை மீண்டும் கேட்க, 

 

பைரவி, “அவ என்ன பேசுவா? இத்தனை பேருக்கு முன்னவே என் பொண்ண உங்க அம்மா இவ்வளோ பேசுறாங்களே, அப்ப வீட்டுல எவ்வளோ பேசி இருப்பாங்க?” ஆதங்கமாக கேட்டார்.

 

அதுவரை அமைதியாக இருந்த மேகவாணி, “நானோ இல்ல அத்தையோ உன்ன ஏதாவது சொல்லி இருக்கோமா திவ்யா? உன் அம்மா சொல்லும் போது நீயும் அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” மருமகளை அழுத்தமாக பார்த்து கேட்க,

 

“இல்ல ம்மா, அத்தையும் பாட்டியும் என்னை எதுவும் சொன்னதில்ல. பிரச்சனை எனக்கும் சசிக்கும் மட்டும் தான் வேற யாருக்கும் சம்பந்தமில்ல” திவ்யாவின் பதிலில் அனைவரின் பார்வையும் சசிதரனை மோதி நின்றது.

 

“எல்லாரும் என்னை குத்தவாளி மாதிரி பார்த்தா என்ன அர்த்தம்? நான் அவளை அடிச்சேனா இல்ல கொடுமை படுத்துனேனானு அவளையே கேளுங்க, அதோட என்னை பிரிஞ்சு வந்தது அவ தான், நானில்ல” சசிதரன் தன் தரப்பை கொட்டினான்.

 

இப்போது அனைவரின் பார்வையும் திவ்யாவை நோக்க, “எனக்கு பிடிக்கல, அதான் வந்துட்டேன்” என்றாள் முகத்தில் அடித்ததை போன்று.

 

“ரெண்டு பேரும் விரும்பி தான கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க, இப்ப பிடிக்காத மாதிரி என்ன ஆச்சு, சசி என்ன தப்பு பண்ணான் சொல்லுமா? நான் அவனை கேட்கிறேன்” இளங்கோ கேள்வியை வைக்க, திவ்யாவிடம் இப்போதும் பதிலில்லை. 

 

“ப்பா, அவளுக்கு நான் மட்டும் தான் வேணும், நம்ம குடும்பம் தேவையில்ல, தனியா போயிடலாம்னு அவ சொன்னதை நான் ஒத்துக்கல” சசிதரன் அவர்களின் முதல் பிரச்சனையை சபையில் போட்டு உடைக்க, மறுபடி அங்கே சலசலப்பு.

 

சற்று யோசித்து முடிவு எடுத்தவராக இளங்கோவன், “உனக்கு கூட்டு குடும்பத்துல இருக்கறது தான் பிரச்சனைனா, உங்களை தனிக்குடித்தனம் வைக்க ஏற்பாடு பண்றேன், சரிதானே” அவர் சொல்லவும், மேகவாணி கலங்கி விட, வசீகரன் முகமும் சுருங்கி போனது. சாவித்ரி எழுந்தே விட்டார். 

 

“நேத்து வந்த இவளுக்காக என் பேரனை நான் பிரிஞ்சு இருக்கனுமா? சசி இல்லாம எங்க யாருக்கும் ஒருவா சோறு இறங்காது தெரியுமா உனக்கு, காடும் மலையுமா சுத்தற உனக்கு என்னடா சொல்லிட்டு போயிடுவ” சாவித்ரி அம்மா அங்கலாய்க்க,

 

“ம்மா, அவங்க சந்தோசம் தான நமக்கு முக்கியம், நம்ம வீட்டு பக்கத்துல தங்க வச்சுக்கலாம். பொறுமையா இரும்மா” இளங்கோ சமாதானம் சொல்லி அம்மாவை அமர வைக்க, சாவித்ரி திவ்யாவை முறைத்துக் கொண்டு அமர்ந்தார்.

 

திவ்யா, “ப்ளீஸ் மாமா, தனியா போனா கூட இனி எங்களால சேர்ந்து வாழ முடியும்ற நம்பிக்கை எனக்கில்ல, என்னை என் விருப்பப்படி விட்டுடுங்க, இப்படி எல்லாரும் கூட்டம் போட்டு பேசறது எனக்கு இரிடேட்டிங்கா இருக்கு” சங்கடமாக பேசவும்,

 

சசிதரனுக்கு திவ்யா இதற்கெல்லாம் மனம் மாறுவாள் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை. அப்பாவிற்காக பொறுமையை இழுத்து பிடித்து அமர்ந்து இருந்தான். 

 

இளங்கோவனுக்கு அத்தனை பொறுமை இல்லை போல, மருமகளை நோக்கி அழுத்தமான கேள்விகளை விடுத்தார்.

“முன்னையும் உங்க விருப்பப்படி தானேமா விட்டோம்? எங்களுக்கு பூரண சம்மதம் இல்லன்னாலும் உங்க ரெண்டு பேரு ஆசைக்காக மட்டும் தான உங்களை சேர்த்து வச்சோம், அப்ப உங்களுக்குள்ள இருந்த நம்பிக்கை இப்ப ஏன்மா இல்லாம போச்சு?” 

 

திவ்யா, “மாமா ப்ளீஸ், உங்க எந்த கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்ல, எங்களோட பர்சனலை எங்களுக்காக விட்டுடுங்க, சசி இல்லாம வாழ முடியாதுன்னு பிடிவாதம் பிடிச்சது நான் தான் இப்ப, அவன் கூட வாழவே முடியாதுன்னு விலகி நிக்கிறேன்னா என் நிலைமைய புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க” கெஞ்சலும் சலிப்புமாக சொல்ல,

 

“எப்படி விட முடியும்? புருசன் பொண்டாட்டிக்குள்ள ஏதோ மனஸ்தாபம் பிரிஞ்சு இருக்கீங்க, நீங்களே சமாதானம் ஆகி சேர்த்துடுவீங்கனு இந்த நாலு மாசமா நாங்களும் ஒதுங்கி தான இருந்தோம், இப்ப விவாகரத்து வரைக்கும் வந்து நிக்கிறீங்க, இப்பவும் நாங்க ஒதுங்கி போகனும்னா எப்படி? பெத்த பிள்ளைங்க வாழ்க்கை கண் முன்னால நாசம் ஆகறதை பார்த்துட்டு நிக்க சொல்றீயா?” இளங்கோவன் பேச்சு வேகம் பிடித்திருக்க, திவ்யா முகம் வீழ்ந்து போனது.

 

விவாகரத்து வரை அவர்கள் சென்றது பெரியவர்கள் அனைவரையும் திகைக்க வைத்தது. சாவித்ரி ஆத்திரமாக பேச, மேகவாணி கலங்கி மகனை உலுக்க, பைரவி மகளை கேள்விகளாக துளைக்க, சசிதரன், திவ்யா பதில் சொல்ல முடியாமல் தலையை பிடித்து கொண்டனர்.

 

வசீகரன் எதையும் கண்டும் காணாமல் தனக்கும் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லாதது போல, தன் கைப்பேசியை மும்முறமாக நோண்டிக் கொண்டு இருந்தான்.

 

“வசி, என்னடா அமைதியா இருக்க?” சசிதரன் தாழ்ந்த குரலில் கேட்க, “வேறென்ன செய்ய” அவனும் அப்படியே கேட்டான். 

 

“ஏதாவது சேய்யேன்டா” சசிதரன் உதவி கேட்க, “இனி உங்க பிரச்சனையில தலையிட மாட்டேன்னு சொல்லிட்டேன் இல்ல, அதான் தலையிடல” கைப்பேசி திரையிலிருந்து கண்ணெடுக்காமல் வசீகரன் சொல்லவும், 

 

“முடியலடா உன்னோட, காப்பாத்துடா என்னைய” சசிதரன் கெஞ்சி கேட்க, 

 

“சாரி, வார்த்தை மாறும் பழக்கம் என்கிட்ட இல்ல” வசீகரன் அசராமல் வசனம் பேசவும், சசிதரன் நொந்து போனான்.

 

இத்தனை ஆர்பரப்பிற்க்கு நடுவிலும் திவாகர் எதுவும் பேசாமல் அமைதியாகவே அமர்ந்து இருந்தார். இறுகி கறுத்து சிவப்பேறிய முகத்துடன் அவர் பார்வை வசீகரன் மீதே குத்திட்டு இருக்க, வெடிக்க தயாராக இருக்கும் எரிமலை போல அங்கே நடப்பதை பார்த்துக்கொண்டு இருந்தார் அவர்.

 

“போதும் நிறுத்துங்க, சசிதரா, திவ்யா நல்லா கேட்டுக்கோங்க, உங்களுக்கு நடுவுல எந்த பிரச்சனை, சண்டை இருந்தாலும் சேர்ந்து சமாளிக்க பாருங்க, நான் அடுத்த வாரம் கிளம்புறேன் அதுக்குள்ள உங்களுக்கு தனிவீடு தயாரா இருக்கும், அவ்வளவு தான்” இளங்கோவன் முடிவாக தீர்ப்பு கூற,

 

“பிடிக்கலன்னா விட்டுடுங்களேன், ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க” திவ்யா கோபமாக எழுந்து கத்திவிட, சசிதரன் பொறுமையிழந்து அவளை அறைந்து இருந்தான். “பிடிக்கல பிடிக்கலன்னா என்ன அர்த்தம்? கொஞ்சம் கூட இறங்கி வராம உனக்கென்ன இவ்வளவு பிடிவாதம்?” 

 

திவ்யாவின் ஆத்திரம் மேலும் கூடிப்போக கணவன் தனக்கு தந்ததை திருப்பி அவனுக்கே தந்தாள். மனைவி தந்த அறையில் அவன் கன்னம் எரிந்தது. அத்தோடு அத்தனை பேரின் முன்பு அவனுக்கு அவமானமானது.

 

“முன்னயே சொல்லி இருக்கேன் சசி, அடிக்கிற வேலை மட்டும் என்கிட்ட வேணாம், வலியும் அவமானமும் உனக்கு மட்டுமில்ல எனக்கும் இருக்கு” என்றாள் ஆங்காரமாய்.

 

எல்லாருமே வாயடைத்து போயினர். வசீகரன் கூட எழுந்து நின்று விட்டான். தன் அண்ணியின் தன்மானத்தை மெச்சிக் கொள்ள தான் தோன்றியது. அதேநேரம் அண்ணனையும் கண்டனமாக பார்த்து வைத்தான்.

 

“பேசிட்டு இருக்கும்போது கையோங்கற பழக்கம் என்னடா இது? இதுதான் உன் லட்சனமா?” இளங்கோவன் மகனை கண்டிக்க,

 

“அதுக்கு கட்டின புருசன கை நீட்டி அடிப்பாளா அவ?” சாவித்ரி மனம் தாங்காது சண்டைக்கு வந்தார்.

 

“எங்க பொண்ண எங்க முன்னாடியே

அடிக்கிற நீ, உன்ன நம்பி என் பொண்ண அனுப்ப முடியாது போடா” பைரவி ஆதங்கமாக சீற, 

 

“கடவுளே, ஏன் இப்படி சின்ன பசங்க மாதிரி மாறி மாறி அடிச்சிக்கிறீங்க, பெத்தவங்க எங்க மனசு என்ன பாடுபடும்னு ரெண்டு பேரும் யோசிக்க மாட்டீங்களா?” மேகவாணி பதைபதைத்து மொழிந்தார்.

 

“என்ன திவாகர், ஏதாவது பேசுங்க அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” கேட்ட இளங்கோவன் பொறுமையும் வடிந்து கொண்டிருந்தது. சற்றும் பக்குவமின்றி இப்படி அடித்து கொள்பவர்களை என்னவென்று சமாதானம் செய்வது என்று அவரின் மனமும் சோர்ந்து போனது.

 

அதுவரை அமைதியாக அமர்ந்து இருந்த திவாகர் ஒரு முடிவுடன் எழுந்து நின்று, “இனி எந்த பேச்சுவார்த்தையும் அவசியமில்ல, எல்லாத்தையும் இப்படியே முடிச்சுக்கலாம்” என்றார் நிதானமாக அழுத்தமாக. 

 

திவ்யா, சசிதரன் உட்பட அனைவருமே அவரை அதிர்ந்து பார்க்க, “முடிச்சுக்கலாம்னா என்ன அர்த்தம் திவாகர்?” இளங்கோ நெற்றி சுருங்க அவர்  முன் வந்தார்.  

 

“சேர்ந்து வாழ விருப்பம் இல்லனு தான டைவர்ஸ் வரைக்கும் போயிருக்காங்க, நாம பேசி சேர்த்து வச்சு என்னாக போகுது” திவாகர் விட்டேற்றியாக கேட்க,

 

“பொண்ண பெத்தவங்கனு கொஞ்சமாவது அச்சத்தோட பேசுங்க” சாவித்ரி முன்வந்து கண்டித்தார். திருமண உறவை முறித்து கொள்வதை அத்தனை சுலபமாக எண்ண முடியவில்லை அந்த மூத்த பெண்மணியால்.

 

“என் பொண்ணோட எல்லா பிரச்சனையும் முடிஞ்சு போகட்டும்னு தான் பேசறேன். இனி திவ்யாவுக்கும் உங்க மகனுக்கும் எந்த உறவும் இல்ல, அதேபோல எங்க குடும்பத்துக்கும் உங்க குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, இப்பவே எல்லாத்தையும் முறிச்சிக்கலாம்” திவாகர் முடிவாக சொல்லவும், சசிதரன் மூக்கு விடைத்தது.

 

“உங்களோட இந்த முட்டாள்தனத்தை தான் உங்க பொண்ணும் குத்தகைக்கு வச்சிருக்கா, ச்சே என்ன பொழப்புயா உங்களோடது, அப்படியென்ன வறட்டு பிடிவாதம் அப்பாவுக்கும் பொண்ணுக்கும்”

 

“ரொம்ப சாதாரணமா எல்லா பந்தத்தையும் வெட்டி முறிச்சுக்கலாம்னு சொல்றீங்க? எதை மனசுல வச்சு இப்படியெல்லாம் பேசறீங்க?” இளங்கோவனும் ஆத்திரமாக கேட்டார்.

 

திவாகர் முகம் காட்டமாக வசீகரன் பக்கம் திரும்பியது. “இதோ ஒரு பொறுக்கிய பிள்ளையா பெத்து வச்சிருக்கீங்களே இவனை வச்சு தான் சொல்றேன்” என்று அவனை கை காட்ட, அதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்து இருந்தவன் வாய்ப்பூட்டு கழன்று கொண்டது.

 

“அங்கிள், அவங்க பிரச்சனையில என்னை ஏன் இழுக்குறீங்க? உங்க பொண்ணு என்கிட்ட கேட்டதுக்காக தான் அவங்க காதலுக்காக உங்ககிட்ட வந்து பேசினேன். நீங்க முதல்ல ஒத்துக்காம முரண்டு பண்ணீங்க, சோ, என்னோட வழியில உங்களை சம்மதிக்க வச்சேன் அவ்வளவு தான். இதுக்காக என்னை இன்னும் நீங்க மொறச்சுட்டு நிக்கிறது சரியில்ல, அவங்கள பிரிக்கனும்னு நினைக்கிறதும் சரியில்ல” வசீகரன் அவர் முன் வந்து நெஞ்சை நிமிர்த்தி கேட்க, ‘இதென்ன புது பிரச்சனை’ என்று அனைவரின் முகங்களும் குழப்பத்தைக் காட்டின.

 

“பேசி சம்மதிக்க வச்சியா? என்னை மிரட்டி சம்மதிக்க வச்சடா நீ” திவாகர் பற்களை நறநறக்க,

 

“அதுல அவன்மேல எந்த தப்பும் இல்ல, எங்களுக்காக தான் அப்படி செஞ்சான்” சசிதரன் தம்பிக்கு அருகே வந்து நின்று பேச, திவ்யா அதை பேசவும் வார்த்தை இன்றி வெறித்திருந்தாள்.

 

அவர்களை கேவலமாக பார்த்தவர், “அவ்வளவு கேடித்தனம் செஞ்சு நீங்க கல்யாணம் பண்ணி என்ன ஆச்சு? ரெண்டு வருசத்துக்குள்ள பிச்சுக்கிட்டு நிக்கிறீங்க இல்ல?” என்றவர் முகத்தில் ஒருவித வெளிச்சம் வந்து போனது. தன் சம்மதம் இல்லாமல் நடந்த நிகழ்வு இப்போது முறிவில் நிற்பதில் அவருக்குள் ஒருவித அற்ப திருப்தி. அது தன் மகளின் வாழ்க்கை என்ற போதிலும் கூட.

 

“பிச்சிட்டு நிக்கறது உங்க பொண்ணுதான் நான் இல்ல, எப்பவோ நடந்து முடிஞ்சதை இப்ப இழுத்து பேசறது உங்களுக்கும் நல்லது இல்ல” சசிதரனும் எதிர்த்து பேசினான்.

 

இளங்கோவன், “வசி என்ன தப்பு செஞ்சான்னு எனக்கு தெரியல, நான் அவனை கண்டிக்கிறேன். பழசை மனசுல வச்சுக்கிட்டு குடும்ப உறவை பிரிக்க நினைக்காதீங்க, இது ரெண்டு பேரோட வாழ்க்கை” சின்னவனை முறைத்து விட்டு சம்பந்தியிடம் சமாதானம் பேசினார்.

 

“முடிஞ்சதோட தொலைஞ்சு இருந்தா இப்ப ஏன் அதை பேச போறேன்? இந்த ராஸ்கல் கொழுப்பெடுத்து போய் என் சின்ன பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருக்கான்! இப்பவும் சும்மா விடுவேன்னு நினச்சானா?”

 

“என்னாதே?” வசீகரன் ஜெர்க்கானான். 

 

இப்படியொரு அதிர்ச்சியை அவன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அடுத்த நொடி அவனுக்குள் சுறுசுறுவென்று கோபம் எழுந்தது.

 

“என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? உங்க பொண்ணு பின்னாடியாவது நான் சுத்தறதாவது போயா?” அவரின் குற்றச்சாட்டில் வசீகரன் கத்திவிட்டான்.

***

காதல் கூத்து கட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!