காதலில் கூத்து கட்டு 12

IMG-20210202-WA0002-8153c242

காதலில் கூத்து கட்டு 12

 

ஒருவாரம் கடந்து இருந்தது. இளங்கோவன் தன் இரு மகன்களுக்கும் நூறு புத்திமதிகள் சொல்லிவிட்டு தன் ஆராய்ச்சி பணிக்கு கிளம்பி இருந்தார். 

 

சசிதரன் எதையும் கண்டு கொள்ளவில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று தன்னை இன்னுமே சுருக்கிக் கொண்டான். வீட்டு பெண்களின் ஓயாத சலசலப்பை ஓரளவுக்கு மேல் பொறுக்க முடியாத வசீகரன், அவர்களிடம் கோப முகம் காட்டி விலகி கொண்டான். 

 

வாடிக்கையாளர்கள் சந்திப்பு, விளம்பர படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகள், ஸ்டூடியோ பணிகள், வங்கி கடன் பெறுவதற்கான அலைச்சல் என தேவாவுடன் அலைந்து கொண்டிருந்தான் வசீகரன்.

 

அன்றைய பிரச்சனைக்கு பிறகு ரம்யாவை சந்திக்கவோ, அவளிடம் பேசவோ முயற்சிக்கவில்லை. உண்மையில் தான் அவளிடம் பேச முயற்சித்தால் அதையும் வைத்து கதை கட்டி விடுவார்கள் என்று பயந்தான். ஆம் பயம் தான்! தன்னால் ஒரு பெண்ணின் பெயர் கெடுவதில் அவனுக்கு உடன்பாடு இல்லை.

 

ஆனால், மருத்துவமனையில் சேர்க்கும்‌ அளவிற்கு ரம்யாவின் உடல்நலம் பாதிக்கப்பட்ட தகவல் கேள்விப்பட்டதும், அவள் உடல்நிலையில் கவலைக் கொண்டு, ரம்யாவின் எண்ணிற்கும் அழைப்பு விடுத்தான். இருமுறை முயன்றும் எதிர்முனை எடுக்கவில்லை. அதற்குமேல் அவனும் முயற்சிக்கவில்லை விட்டுவிட்டான்.

 

எதுவாயினும், அந்த கல்லூரி சாலையை  கடக்கும் போது அவன் வண்டியின் வேகம் குறைவதையும், அவன் பார்வை சற்றே அலைப்பாய்வதையும் தடுக்க முடிவதில்லை! 

 

‘அதான் பொய்னு நீயே சொல்லிட்டியே, அப்புறம் என்ன? உண்மைக்கு தான பயப்படனும் பொய்யெல்லாம் டீல்ல விட்டு தள்ளலாம்’ அன்று ரம்யா துள்ளலுடன் சொன்னது இவன் நினைவில் வந்து போனது. 

 

‘அன்று தான் விளையாட்டாக சொன்ன பொய் தான் இன்றைய தங்கள் நிலைமைக்கு காரணமோ!’ என்ற குற்றவுணர்வை அவனால் தவிர்க்க முடியவில்லை.

 

இன்று மாலையும் கல்லூரி சாலையை கடக்கும் போது அவன் வண்டி வேகம் குறைந்து, அவன் கண்கள் பெண்கள் கூட்டத்திற்குள் அலைபாய்ந்தது. ரம்யாவை ஒருமுறை பார்த்து விட்டால் தனது குற்றவுணர்வு குறையுமா? என்ற தவிப்பு அவனிடம்.

 

ஆனால் அவள், இவன் கண்ணில் படவே இல்லை. ‘வேண்டும் என்றே தன்னை தவிர்க்கிறாளோ?’ சந்தேகம் எழ, ‘ரம்யா குணம் அப்படி இல்லை’ என்று இவனே சமாதானப்படுத்திக் கொண்டான்.

 

“ஹாய் வசீ” அழைப்பை கேட்டு நிமிர, அங்கே பவித்ராவும் தவமணியும் கையசைத்து இவனை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.

 

அவர்களை பார்த்ததும் அவன் பெயருக்கேற்றாற் போன்ற வசீகர இளநகையை அவன் முகம் உடுத்திக் கொண்டது. திவ்யா, சசிதரன் திருமண கொண்டாட்டத்தில் மூவருக்கும் ஓரளவு சினேகம் ஏற்பட்டு இருந்தது.

 

அவர்கள் நெருங்க, “ஹாய் பேபீஸ்” என்றான் அவனும். 

 

“முன்ன விட இப்ப செம ஹேன்சமா இருக்க வசி” பவித்ரா கண்கள் மின்ன சொல்ல, வசீகரன் தன் கற்றை கேசத்தை கோதிவிட்டு, “தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்பிளிமென்ட்” என்றான் இனிய குரலில்.

 

“எங்க காலேஜ் முன்னாடி யாருக்காக வெயிட் பண்ற வசி, நாங்க தெரிஞ்சுக்கலாமா?” தவமணி கேட்க,

 

“உங்க ஃபிரண்ட்காக தான். ரம்யா இன்னைக்கும் காலேஜ் வரலையா?” வசீகரன் இயல்பு போலவே விசாரித்தான்.

 

“ஆஹா, நீயும் ரமியும் எப்பவும் முறச்சுட்டு தான நிப்பீங்க. எப்போ இருந்து பேச ஆரம்பிச்சீங்க? சொல்லவே இல்ல” பவித்ரா கேட்கவும்,

 

‘அப்படி முறைச்சுட்டே போயிருந்தா இப்ப பிரச்சனை வந்திருக்காது போல’ என்று பெருமூச்செடுத்தவன், “எங்க ரெண்டு ஃபேமிலிகுள்ள பிரச்சனை ஆகிடுச்சு உங்களுக்கு தான் தெரியும் இல்ல. அதான் ரம்யா ஹெல்த் எப்படி இருக்குனு கேக்கலாம்னு”

 

“வாட்? ரமிக்கு என்னாச்சு?” இரு பெண்களும் அதிர்ச்சியாக கேட்டனர்.

 

‘இவங்களுக்கு தெரியாதா?’ என்று அவன் யோசனையாக பார்க்க, தவமணி பொறுக்காமல், தன் கைப்பேசியில் ரம்யாவிற்கு அழைப்பு விடுத்தாள்.

 

“ரமி, உனக்கு என்னாச்சு, உடம்பு சரியில்லையா, அதான் நீ காலேஜ் வரலையா?” மறுபக்கம் எடுத்ததும் தவமணியின் கேள்விகள் படபடவென விழுந்தன.

 

ரம்யா, “அது தவா, என்னோட பேக்ல லாலிபாப் காலியா போச்சா” என்று இழுக்க, இவள் தலையில் அடித்து கொண்டு, “ஹே லூசு, நான் என்ன கேக்குறேன் நீ என்ன சொல்ற, திவி அக்கா விசயத்துல வீட்டுல ப்ராப்ளம், ஒன் வீக் காலேஜ் வர முடியாதுன்னு மட்டும் தான சொல்லி இருந்த” தவமணி கேட்க,

 

“ஆமா அதுவும் தான்” என்று மழுப்பினாள் ரம்யா.

 

பவித்ரா கைப்பேசியை பிடுங்கி கொண்டு, “பிசாசு, நீ எப்படி இருக்க? இப்ப எங்க இருக்க?”

 

“நல்லா இருக்கேன் பவி, வீட்டுல தான் இருக்கேன். ஏன் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி இதையே கேக்குறீங்க?” ரம்யா பதிலுக்கு வினவ,

 

“வசி வந்திருக்கான். உன்னபத்தி கேட்டான். இப்பவாவது சொல்லு ரமி என்னாச்சு?” பவித்ரா அக்கறையுடன் கேட்க, அவளிடம் தயக்கம்.

 

வசீகரன் பவித்ராவிடம் இருந்து கைப்பேசியை வாங்கி காதில் ஒற்றினான். “ஹலோ ரம்யா, ஆர் யூ ஆல் ரைட்? வீட்ல எதுவும் ப்ராப்ளம் இல்லயே” சங்கடமாக விசாரிக்க,

 

“ம்ம் நல்லாதான் இருக்கேன்” என்று சிறு குரலாய் பதில் வந்தது.

 

“அப்ப ஏன் காலேஜ் வரல, என் கால் கூட நீ‌ அட்டர்ன் பண்ணல” 

 

“டாக்டர் ஒன் வீக் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க அதான் காலேஜ் வரல, உன் கால் வரும்போது தூங்கிட்டு இருந்தேன். அதான் பேசல”

 

அவள் குரலின் வித்தியாசத்தை கவனித்தவன், “என்னாச்சு,‌ ஏன் ஒருமாதிரியா பேசுற?”

 

“ஒன்னுமில்ல”

 

“என் மேல கோபமா இருக்கியா?”

 

“எதுக்கு கோபப்படனும்?”

 

“நீயும் என்னை சந்தேகப்படுறியா?”

 

“எதுக்கு சந்தேகப்படனும்?”

 

“ரம்யா ஒழுங்கா பேசு, உனக்கு என்னாச்சுனு தெரியாம நான்… எனக்கு கஷ்டமா இருக்கு… ப்ச் உனக்கு வீட்ல எந்த பிரச்சனையும் இல்லயே” அவன் கேள்வி வேகமாக தொடங்கி பரிவாக நின்றது.

 

மறுமுனை சில நொடிகள் மௌனம் காத்திருக்க,

 

“ரம்யா” அவன் அழுத்தமான அழைப்பு விடுத்தான்.

 

 “என்னை யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க வசி…! அப்பா, அம்மா, ஏன் அக்கா கூட என்னவோ போல பேசுறா, எனக்கு கஷ்டமா இருக்கு” ரம்யா தன் குரல் உடைய சொல்ல, 

 

“உன் அப்பன் ஒரு முசுடு, உன்‌ அம்மா ஒரு அசடு, உன் அக்கா ஒரு அவசரகுடுக்கை, அவங்க அப்படித்தான் உளறுவாங்க, அவங்க நம்பலன்றதால நீ டல்லடிக்காத எப்பவும் போல இரு ஓகேவா” ஆறுதலாக பேசினான்.

 

“ம்ம் நான் அப்படி இருக்க தான் ட்ரை பண்றேன். ஆனா கஷ்டமா இருக்கு, யாருக்கும் என்மேல இத்துனூண்டு கூட நம்பிக்கை இல்லயானு தோனுது. இவங்க இப்படி சந்தேகபடுற அளவுக்கு நான் என்ன தப்பு செஞ்சேன்னு இருக்கு” அவளின் ஓய்ந்த குரல் அவனை வேதனை கொள்ள செய்ய,

 

“ஜஸ்ட் கூல் ரம்யா, நீ எந்த தப்பும் செய்யல, உன்மேல தப்பு சொல்ற அவங்க தான் தப்பு. தப்ப தப்புனு தெரியாம தப்பா செஞ்சுட்டு இருக்க அவங்க எல்லாரையும் விட்டு தள்ளு, சரிய சரின்னு தெரிஞ்சு சரியா செஞ்சுட்டிருக்க உன்ன நீயே கஷ்டப்படுத்திக்காத, ஓகே வா”

 

அவன் பேச்சின் வேகத்தில் மலங்க மலங்க விழித்தவள், “எப்படி வசி இப்படி! தப்பு, சரினு அடிச்சு விடுற” அவளின் திகைத்த கேள்வியில் சிரித்துக் கொண்டவன், “அதுவா வந்துச்சு… என்மேல உனக்கு வருத்தம் இல்லயே” தயங்கி கேட்டான்.

 

“வருத்தமா? எதுக்கு?”

 

“அது… உங்க வீட்டுல நம்ம… தப்பா பேசறதுக்கு”

 

“அதுக்கெல்லாம் காரணம் அந்த வீணா போன அமுதன் தானே, நீ என்ன பண்ணுவ” அவள் குரலில் அப்படியொரு ஆத்திரம்.

 

“அமுதனா? அவன் என்ன பண்ணான்?”

 

“அப்பாவுக்கு ஃபோன் பண்ணி நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து தப்பு தப்பா பேசி இருக்கான், அப்பா சொன்னாரு”

 

“வாட்? அவன் தானா? உனக்கு கரெக்ட்டா தெரியுமா?” வசீகரன் நெற்றி சுருங்க வினவ,

 

“ஐயோ வசி, அன்னிக்கு கோயில்ல பேசினது நாம மூனு பேரு, நீயோ நானோ இப்படி பண்ணி இருக்க மாட்டோம், அப்ப அந்த கோணவாயன் தான” ரம்யா விளக்க, அவள் சொல்வதை யோசித்த பிறகு தான் அவனுக்கு இது அமுதன் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ‘அவன் மட்டும் என் கண்ல மாட்டட்டும், அப்ப இருக்கு அவனுக்கு’ என்று கைமுஷ்டிகளை இறுக்கிக் கொண்டான்.

 

அத்தோடு வேறொன்றும் தோன்ற, “ஏன் அவன்? நான் கூட செஞ்சு இருக்கலாம் இல்ல, நான் தான் கெட்டவன் ஆச்சே” வசீகரன் விடாமல் கேட்க,

 

“ம்ம் நீ இல்ல, அது… நீ முகத்துக்கு நேரா கெட்டவனா காட்டிக்கிற கெட்டவன், அந்த அமுதன் முதுகுக்கு பின்னாடி குத்துற கேடு கெட்டவன். அவனோட பேச்சு, பார்வை எதிலையுமே உண்மை இருந்தது இல்ல தெரியுமா, என்னை ஃபிளர்ட் பண்ணறது மட்டுமே அவன் மோட்டிவ்வா இருந்துச்சு. அதான் அவனை அவாய்ட் பண்ணேன்” என்றவள் சட்டென பதறி, “அச்சோ ரொம்ப நேரமாச்சு நான் வச்சுடுறேன்” என்றாள்.

 

“என்னாச்சு?”

 

“அது, இப்பெல்லாம் நான் ஃபோன் எடுத்தாலே அம்மா ஒருமாதிரி நோட்டம் விடுறாங்க, எனக்கு அனீஸியா ஃபீல் ஆகுது, இப்ப இவ்வளோ நேரம் ஃபோன்ல பேசினது தெரிஞ்சா, யாரு என்னனு கேள்வி கேட்டு கொடைஞ்சுடுவாங்க, நீன்னு தெரிஞ்சா அவ்வளோதான். முடியல வசி என்னால” கலங்கிய கண்களை உதட்டை கடித்து அடக்கிக் கொண்டாள். ஏதோ படபட பட்டாம்பூச்சியை குடுவையில் அடைவைத்தது போன்று அவளின் நிலை.

 

அவள் நிலையை எண்ணி அவனுக்கு கவலையானது. “ஹேய் அவங்க நல்லா நோட்டம் விட்டு நோட்டம் விட்டு நமக்குள்ள ஒன்னுமில்லனு தெரிஞ்சா அவங்களுக்கே புஸ்ஸுனு ஆகிடும், விட்டு தள்ளு, தி கிரேட் ரம்யா இதுக்கெல்லாம் வொர்ரி பண்ணிக்கலாமா?” அவளிடம் இயல்பாக பேச,

 

“ஹா ஹா ஆமால்ல, இல்லாததை தேடி தேடி அவங்களே அலுத்து போயிடுவாங்க” என்று தனக்குள் தெளிந்து வாய்க்குள் சிரித்து கொண்டாள். இந்த ஒரு வாரம் அவள் உடலும் மனமும் அவளை படுத்தி எடுத்திருந்தது. இதில் பெற்றவர்கள் நச்சரிப்பு வேறு.

 

“நீதான அன்னிக்கு சொன்ன ரம்யா, உண்மைக்கு தான் பயப்படனும், பொய்யெல்லாம் டீல்ல விட்டுடலாம்னு, உன் வீட்ல இருக்கறவங்க கத்தலையும் கண்டுக்காம டீல்ல விட்டுடு, டோட்ன்ட் வொர்ரி பீ ஹேப்பி” என்றான் அவளை போலவே.

 

“அட ஆமா இல்ல, நான் சொன்னதை நானே மறந்துட்டேன் பாரேன்” என்று தன் தலையை தட்டிக் கொண்டவள், “அப்ப யாரும் என்னை நம்பலையேனு மனசு கஷ்டமாகிட்டு அழுக அழுகையா வந்துடுச்சு, அன்னிக்கு சித்தப்பா பசங்களோட ரொம்ப நேரம் ஆட்டம் போட்டு டையார்டா வந்தேனா, வீட்டுல லவ் அது இதுனு பேசினதும் ஷாக். நான் இல்லனு சொல்லியும் நம்பலையேனு வெக்ஸாயிடுச்சு, அதுல லோசுகர் ஆகி மூச்சு திணறலாகி ப்ச்” என்று தனது அன்றைய நிலையை சொல்லி உதட்டை பிதுக்கிக் கொண்டாள்.

 

அவள் விளக்கத்தை கேட்டு இவனுக்குள் கனம் கூடிய உணர்வு. “நீ தப்பா நினைக்கலனா நான் ஒன்னு கேக்கவா?” என்று தயங்கியவன், “உனக்கு என்ன ஹெல்த் இஷ்யூ? ஏன் இப்படி ஆகுது?” அவள் உடல்நிலைப்பற்றி கேட்டான்.

 

“எல்லாருக்கும் நேச்சுரல்லா சுரக்கிற இன்சுலின் ஹார்மோன் எனக்கு தட்டுப்பாடு ஆகி போச்சு, அது மட்டும் தான் பிராப்ளம். அதனால டெய்லி இன்சுலின் எடுத்துக்கனும். இல்லனா நான் கோவிந்தா ஆகிடுவேன்” என்றாள் சாதாரணமாக.

 

“எவ்வளோ நாளைக்கு இன்சுலின் போட்டுக்கனும்?”

 

“லைஃப் லாங்! நாள் கணக்கெல்லாம் இல்ல, நான் வாழுற காலம் முழுசும்” அவள் இயல்பு போல தான் சொன்னாள். ஆனால், வாழ்நாள் முழுக்க தினமும் ஊசி மூலம் மருந்தை ஏற்றிக் கொள்வது அத்தனை இயல்பான ஒன்று இல்லையே! அவள் நிலையை எண்ணிப் பார்க்கவே பிரமிப்பாக தான் இருந்தது அவனுக்கு.

 

“எப்போ இருந்து உனக்கு இந்த பிரச்சனை இருக்கு?”

 

“நான் செவன்த் படிக்கும் போதிருந்து”

 

“அப்ப ரொம்ப கஷ்டப்பட்டுருப்ப இல்ல”

 

“ம்ம் ரொம்ப, திடீர்னு மூச்சு திணறி, என்னென்னவோ ஆகிப்போச்சு அப்போ, ஹாஸ்பிடல், டிரீட்மென்ட்னு படுத்தி எடுத்துடுச்சு, ஹப்பா, வீட்டுக்கு வந்ததும் தொல்லை விட்டுச்சுனு பார்த்தா, அப்பவும் ஊசி, மாத்திரை. இவ்வளவு சாப்பாட்டுக்கு இத்தனை யூனிட்னு கணக்கு வச்சுக்கனும் செம இரிட்டேட்டிங் பா, இப்ப எல்லாம் பழகிடுச்சு” என்றாள். 

 

முன்பே நேரமாகிறது என்று பதறியவள் இப்போது நேரம் மறந்து அவனிடம் பேசிக் கொண்டிருக்க, அவள் சொல்வதை கேட்ட வசீகரனுக்கு ஆறுதல், தேறுதல் வார்த்தைகள் அர்த்தமற்று தோன்றின.

 

“உனக்கு வில்பவர் அதிகம் ரம்யா” என்றான் பாராட்டாய்.

 

“ஆமா பா, அதான், போன வாரம் ஹாஸ்பிடல் போய் தூங்கி எழுந்துச்சி வந்திருக்கேன்” என்றாள். அவள் கேலியில் மெலிதாக சிரித்தவன், “சரிதான், ஓகே பை, டேக் கேர்” விடைபெற்று கைப்பேசியை அணைத்துவிட்டு நிமிர்ந்தான்.

 

அந்த இடமே வெறிச்சோடி கிடந்தது. வசீகரன் திகைத்து சுற்றி பார்க்க, மாணவர்கள் அனைவரும் சென்றிருந்தனர். அவன் வண்டி மீது சாய்ந்து அமர்ந்திருந்த இரு பெண்களும் அவனை கடுப்பாக பார்த்து முறைத்தனர்.

 

“சாரி பேபிஸ், உங்களுக்கு லேட் ஆகிடுச்சா” என்று சங்கடமாக சொல்ல, அவனிடமிருந்து தன் கைப்பேசியை பிடுங்கி கொண்ட தவமணி, “மணி கணக்கா பேசுறவன் உன்னோட மொபைல்ல பேசி இருக்கனும், உன்னால என்னோட ரெண்டு பஸ் போயிடுச்சு” என்று கடுகடுத்தாள்.

 

“ரியலி சாரி தவா,  நான் உங்களை ட்ராப் பண்ணவா” வசீகரன் கேட்க,

 

“எதுக்கு, எங்க வீட்டுல எங்க தோல உரிச்சு தோரணம் தொங்க விடவா! நீ ஆணியே புடுங்க வேணாம் கிளம்பு” என்றாள்.

 

பவித்ரா, “தவா, லாஸ்ட் பஸ் போயிட போகுது சீக்கிரம் வா” என்றதும் வசீகரனுக்கு கையாட்டிவிட்டு பேருந்து நிறுத்தம் நோக்கி இருவரும் விரைந்தனர்.

 

அவர்கள் பேருந்து செல்லும் வரை பொறுத்திருந்து, வசீகரனும் சென்றான். ரம்யா அவனை தவறாக எண்ணாததில் அவனுக்குள் பெரும் நிம்மதி ஏற்பட்டு இருந்தது.

 

ரம்யாவும் தன் இயல்புக்கு மீண்டிருந்தாள். அம்மாவின் நச்சரிப்பை காதில் வாங்காது தன் படிப்பிலும் பொழுது போக்கிலும் கவனம் செலுத்தினாள். அவள் உடல்நிலையும் தேறி இருந்தது. 

 

தினமும் கல்லூரிக்கு அவள் பேருந்தில் சென்று வருவதற்கு தடை விதித்த திவாகர், காரில் சென்று வர உத்தரவிட்டார். கோயிலுக்கும் அவளுடன் பைரவியும் வருவதை வழக்கப்படுத்திக் கொண்டார்.

 

தன்னை வட்டமிட்டு பாதுகாக்கும் பெற்றவர்களை நினைத்து ரம்யாவிற்கு சிலநேரம் கடுப்பும் சிலநேரம் சிரிப்பும் வந்தது. அவர்கள் கட்டுப்பாடுகளை மறுக்கவோ தடுக்கவோ இல்லை. அவர்களாகவே பார்த்து தெளிந்து நம்பிக்கை கொள்ளட்டும் என்று அமைதி காத்தாள். 

 

ஆனால் தன் அக்கா திவ்யாவின் செயல்பாடுகள் தான் அவளுக்கு குழப்பத்தை விளைவித்தன.

 

***

 

காதல் கூத்து கட்டும்…