காதலில் கூத்து கட்டு 13

images (13)-ca1e3080

காதலில் கூத்து கட்டு 14

 

பெரிதாக ஆர்ப்பாட்டம் இன்றி அவர்களின் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. 

 

‘கிளிக்கர்ஸ்’ விளம்பர நிறுவனத்தில் அடுத்தடுத்த வாய்ப்புகள் தொடர்ந்து வர தொடங்கி இருக்க, வசீகரனும் தேவாவும் தங்கள் வெற்றியின் இரண்டாவது படியை தொட்டிருந்தனர்.

 

இரவும் பகலும் ஓய்வின்றி வேலைகள் இழுத்த போதிலும் அதை உற்சாகத்துடனே செய்து கொண்டிருந்தான் வசீகரன். அவர்கள் முயன்ற வங்கி கடனுக்கு அனுமதி கிடைத்திருந்தது. நம்பிக்கையான இருவரின் கையொப்பம் இருந்தால் கடன் தொகை கிடைத்துவிடும் என்று வங்கி மேலாளர் சொல்ல, தேவாவிற்காக அவனின் பெரியப்பா பொறுப்பேற்று கையோப்பமிட தயாராயிருந்தார். 

 

வசீகரனுக்காக கடன் பொறுப்பேற்க சசிதரன் முன்வர, சந்தோசத்தில் அண்ணனை தூக்கி சுற்றினான்.  வசீகரனுக்குள் பெரிதான நம்பிக்கை ஊற்று. வங்கி கடன் உதவி கிடைத்தவுடன் தங்களுக்கான தனி ஸ்டூடியோ அமைக்க திட்டமிட்டிருந்தனர் வசியும் தேவாவும். அவர்கள் தொழிலின் அடுத்தபடி அது.

 

மறுபுறம் செமஸ்டர் தேர்வுகளுக்காக தன் முழு கவனத்தையும் படிப்பில் பதித்திருந்தாள் ரம்யா. கல்லூரி பாடங்கள், தோழிகளுடன் அரட்டை,  பரீட்சைக்கான திட்டமிடல் என அவளின் நாட்கள் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருந்தன. 

 

இவ்விதமே எல்லாம் இருந்திருந்தால் வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பின்றி போயிருக்கும். ஆனால், விதியோ? இல்லை, மனிதர்களின் மதியோ? இயல்பாக நகர்ந்த நாட்களை தலைக்கீழாக புரட்டி போட்டது. ரம்யாவை பெண் பார்க்கும் ஏற்பாட்டின் மூலமாக!

 

இன்று காலையில் கடைசி தேர்வை முடித்துவிட்டு, சூடேறி இருந்த மூளையை குளிர்விக்க, ஐஸ்கிரீம் பார்லர் சென்று பனிகூழை ருசித்து, கூடவே அழகு நிலையம் சென்று ஓய்ந்திருந்த தங்கள் அழகை பொலிவாக்கி,  தோழிகள் மூவரும் சினிமாவிற்கு சென்று அரட்டையை முடித்து மாலை தான் வீடு வந்திருந்தனர்.

 

பைரவியின் உத்தரவின் பேரில் பவித்ராவும் தவமணியும் ரம்யாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு விடைப்பெற்று சென்றனர். தேர்வு விடுமுறையின் உற்சாகமும், தோழியரின் பிரிவும் ஒன்றாக தாக்க, மாடிப்படிகளில் ஏறும்போது திவாகரின் குரல் ரம்யாவை நிறுத்தி திரும்ப வைத்தது.

 

“ரமி, நாளைக்கு மாப்பள வீட்டுல இருந்து வராங்க, ஒழுங்கா நடந்துக்க” 

 

அவர் சொன்னதில் இவளுக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. எனவே, “எந்த மாப்பிள? எந்த வீட்டுக்கு வராங்க? ஏன் வராங்க? நான் எப்படி நடக்கனும்?” கேள்விகளின் பட்டியலை வாசித்து வைத்தாள் மகள்.

 

“முதல்ல இந்த வாய் துடுக்க அடக்கி வை. நாளைக்கு உன்ன பொண்ணு பார்க்க மாப்பிள வீட்டுக்காரங்க வராங்க, அவங்க முன்னாடி இப்படி வாயடிச்சு மானத்த வாங்காம அடக்க ஒடுக்கமா வந்து நில்லு போதும். புரியுதா?” திவாகர் சொல்லவும் சின்னவளுக்கு சுர்ரென்று கோபம் ஏறியது.

 

“என்னப்பா விளையாடறீங்களா? இப்ப என்னை‌ இந்த வீட்ட விட்டு துறத்தறதுல உங்களுக்கு அப்படியென்ன அவசரம்?”

 

“அவசரம் இல்ல அவசியம். எதை? எப்போ? எப்படி? செய்யனும்னு எனக்கு தெரியும்”

 

“ஐயோ அப்பா. நான் இன்னும் காலேஜ் கூட முடிக்கல” 

 

“கல்யாணத்துக்கு அப்புறம் படிச்சுக்கோ, யாரும் உன்ன தடுக்க மாட்டாங்க” அவர் சாதாரணமாக சொன்னதில் இவளுக்கு திக்கென்றானது.

 

“பொண்ணு பார்க்க மட்டும் தான வராங்கனு சொன்னீங்க, இப்ப கல்யாணம் வரைக்கும் பேசுறீங்க?” அவள் சந்தேகமாக வினவ,

 

“ரெண்டு குடும்பமும் எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டோம். உன் எக்ஸாம் முடியறத்துக்காக மட்டும் தான் வெயிட் பண்ணது. நாளைக்கு அவங்க பார்க்க வரது கூட ஜஸ்ட் ஃபார்மாலிட்டிக்காக தான். போதுமா விவரம்”

 

யோசிக்கவும் மறந்து சில நொடிகள் அப்படியே நின்று விட்டாள் ரம்யா. அவர் சொல்வதை முழுதாய் உணர்ந்து கொள்ளவே அவளுக்கு சிரமமாக இருந்தது. 

 

“என்னப்பா, எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு எனக்கு த்…தகவல் சொல்றீங்களா? சட்டம் சொல்ற கல்யாண வயசு கூட எனக்கு ஆகலையேப்பா, அதுக்குள்ள! நீங்க படிச்சவர் தான, சமூகத்தில கௌரமான இடத்தில இருங்கவங்க தான, நீங்களே இப்படி… செய்யலாமாப்பா?” திக்கிய மொழியில் ஆதங்கமான வார்த்தைகளை இறைத்தாள்.

 

திவாகரின் இறுகிய முகம் இன்னும் கடுமை ஏறியது. “கௌரவம்னு சொன்னல்ல, அந்த கௌரவத்தை காப்பாத்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு நீ என்னை தள்ளிட்ட, முன்ன உன் அக்காவும் அப்படி தான் செஞ்சா, அவ விசயத்துல நான் சுதாரிக்காம விட்டுட்டேன், அதான் உன் விசயத்துல முந்திக்கிட்டேன்”

 

“ப்பா, இது வாழ்க்கை ப்பா, கேம் இல்ல, முந்திக்கவும் பிந்திக்கவும். அக்காவோட மேரேஜ் லைஃப் அந்தரத்துல இருக்கும்போது அதை சரி பண்றதை விட்டு, இந்த நிலமையில எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றீங்களே?” அவளால் அவள் தந்தையை சுத்தமாக புரிந்துக்கொள்ள முடியவில்லை.

 

“ஆமா, அவளைமாதிரி நீயும் காதல் பின்னாடி போய் தோத்து திரும்பி வர கூடாது பாரு, அதான், உன்ன ஒரு நல்ல இடத்துல கட்டி கொடுக்க போராடிட்டு இருக்கேன்”

 

“காதலா?! அய்யோ ப்பா, எனக்கு காதலும் இல்ல, கத்தரிக்காவும் இல்ல, இவ்வளவு நாள் என்னை கண்காணிச்சிட்டு தான இருக்கீங்க, நான் ஏதாவது தப்பா செஞ்சேனா, தப்பா நடந்துக்கிட்டேனா, இன்னும் உங்களுக்கு என்மேல சந்தேகம் குறையலயா?” ரம்யா ஆயாசமாக தலையில் கைவைத்துக் கொண்டாள். 

 

“காதல் இல்லனா ஏன் கல்யாணம் வேணாங்கிற? உனக்கு தப்பா எதுவும் நடந்திட கூடாதுன்னு தான் இதெல்லாம் செய்றேன்” திவாகர் பாயின்ட் பிடித்து பேசினார்.

 

“யூஜி மட்டுமாவது முடிச்சிறேன் ப்பா, இன்னும் ஒரே வருசம். அப்புறம் நீங்க யாரை சொல்றீங்களோ கல்யாணம் பண்ணிக்கிறேன். இப்ப வேணாப்பா, அதுவும் இவ்வளோ அவசரமா. வேணவே வேணாம்ப்பா” தந்தையின் பிடிவாதம் தெரிந்து கெஞ்சலில் இறங்கினாள்.

 

“அதான் கல்யாணத்துக்கு அப்புறம் படிக்கலாம்னு சொல்றேன் இல்ல. அவசரமா பார்த்தாலும் வத்தலும் சொத்தலுமா நான் உனக்கு மாப்பிள பார்க்கல, எம்.சி ஹாஸ்பிடல் நிர்வாகத்தோட குடும்பத்துக்கு மருமகளா போக போற‌ நீ, சிதம்பரம் சாரோட மூணாவது பையனுக்கு உன்ன பேசியிருக்காங்க. பையன் பார்க்க கண்ணுல ஒத்திக்கிற மாதிரி இருக்கான்” அவர் பெருமையாக சொல்லிக்கொண்டே போக,

 

“யாரா இருந்தாலும் எப்படி இருந்தாலும் எனக்கு இப்ப கல்யாணம் வேணாம், வேணா, வேணா” ரம்யா தீவிரமாக மறுத்து சொன்னாள். அவளை இப்போதே மணமேடைக்கு இழுத்து சென்று அமர்த்தி விடுவதைப் போன்ற தந்தையின் வேகம் அவளை பயமுறுத்தி பார்த்தது.

 

“புரிஞ்சிக்காம அடம்பிடிக்காத ரமி, அவங்க ஹாஸ்பிடல் ஆடிட்டிங் நான் தான் பார்க்கிறேன், அவ்வளவு பெரிய குடும்பத்தில நீ வாழ அதிர்ஷ்டம் பண்ணி இருக்கனும்”

 

“எனக்கு எந்த அதிர்ஷ்டமும் தேவையில்ல. என்னை நானா இருக்க விடுங்க அது போதும்” மகளும் குரல் உயர்த்தினாள்.

 

“ஏய் சின்ன கழுதை இதுக்கு மேல பேசுன…” விரல் நீட்டி எச்சரித்தவர், “நாளைக்கு ஒழுங்கா நடந்துக்க” என்று உத்தரவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார்.

 

ரம்யாவிற்கு மனம் பொறுக்கவில்லை. திடுமென்ற திருமண ஏற்பாடு அவளை பதறடித்தது. அம்மாவிடம் சென்று கெஞ்சி பார்த்தாள். ”அப்பா எது செஞ்சாலும் உன் நல்லதுக்காக தான் ரமி” என்ற ஒற்றை வாசகத்தோடு முடித்துக் கொண்டார் பைரவி.

 

திவ்யாவிடம் உதவி கேட்க, “நான் ஒருமுறை அவங்களை அலட்சியபடுத்திட்டேன். அப்பவே அப்பா, அம்மாவ தொலைச்சிட்டு இருக்கேன். இப்ப தான் அதுவே எனக்கு புரியுது. நீயும் அவங்கள தொலைச்சிடாத, அவங்க சொல் பேச்சு மீறாத செல்ல பொண்ணா இரு” என்றதோடு ஒதுங்கிக் கொண்டாள். 

 

அறைக்குள் வந்த ரம்யாவிற்கு தலையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்தது. “கூல் ரமி, ஜஸ்ட் கூல். உன்ன மீறி இங்க எதுவும் நடக்காது, பீ பாஸிட்டிவ். பீ ஸ்ட்ராங்” தன்னை தானே திடப்படுத்திக் கொண்டாள். ஒரு லாலிபாப்பை பிரித்து வாய்க்குள் அதக்கிக் கொண்டவள், தொலைக்காட்சியில் டாம் அன்ட் ஜெர்ரி கார்டூனை ஓடவிட்டு அமர்ந்து விட்டாள். மனம் மெல்ல மெல்ல சமநிலைக்கு மீண்டது.

 

***

 

மகளின் வாழ்வை நினைத்து இரவில் உறக்கமின்றி தவித்திருந்தார் பைரவி. மனைவியின் முகம் இன்னும் தெளிவற்று இருப்பதை கவனித்தவர்,

“உனக்கு என்ன வந்தது? நீ ஏன் இப்படி முகத்தை தூக்கி வச்சிருக்க” திவாகர் கேட்க,

 

“இல்ல, அவங்க குடும்பம் எல்லாம் ஓகே தான், ஆனா, மாப்பிளையோட வயசு தான்!” என்று பைரவி சங்கடமாக இழுத்தார்.

 

திவாகருக்கு மனைவியின் மனநிலை புரிந்தது தான். இவருக்கும் முதலில் இந்த தயக்கம் எழுந்தது தான், பின் சாதக பாதகங்களை ஆராய்ந்து பார்த்து சம்மதம் சொல்லி இருந்தார்.

 

பைரவியின் கைப்பற்றி கொண்டவர், “ரமியோட ஹெல்த் கன்டிஷனுக்கு அவளை கேர் பண்ற அளவுக்கு பொறுமை இருக்குற லைஃப் பார்ட்னர் தான் இப்ப அவளுக்கு தேவை. நவீனுக்கு ரமியவிட பதினொரு வயசு கூட தான். அதனால டீன்ஏஜ் பசங்கள விட அவருக்கு பொறுப்பும் பக்குவமும் நிறைய இருக்கும். ரமிய நல்லா பாத்துக்குவாரு. சொந்தமா ஹாஸ்பிடல் இருக்கு ரமிக்கு எல்லாவிதமான டிரீட்மென்டும் சுலபமா கிடைக்கும். நாம நிம்மதியா இருக்கலாம்” பொறுமையாக மனைவிக்கு விளக்கி சொன்னார்.

 

அவரின் விளக்கம் பைரவிக்கும் சரியென்று தான் பட்டது. ஆனாலும் சின்னதாய் ஒரு நெருடலை தவிர்க்க முடியவில்லை.

 

“நீங்க சொல்றது சரிதாங்க, ஆனாலும் ரமி கல்யாணத்துக்கு சம்மதிக்கனுமே”

 

“கண்டிப்பா சம்மதிக்க மாட்டா, இப்பவே எப்படி பேசிட்டு போறா பார்த்தயில்ல, எப்படியாவது உருட்டி மிரட்டி தான் சம்மதிக்க வைக்கனும், இதுல காதல் வேற அந்த பொறுக்கி மேல”

 

“இல்லங்க, நாம தான் ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டோம் போல, ரமியும் வசியும் காதலிச்சு இருப்பாங்கனு எனக்கு தோனல, உங்களுக்கு வந்த ஃபோன் கால் தான் தப்பா இருக்கனும்” இதுவரை மகளை கவனித்ததில் தான் உணர்ந்ததை சொன்னார்.

 

“அந்த பொறுக்கி கூட ரமிக்கு பழக்கம் இல்லனா சந்தோசம் தான். அதை நம்பி எல்லாம் கல்யாண ஏற்பாட்டை நிறுத்த முடியாது”

 

“இல்லங்க அது”

 

“சொல்றதை புரிஞ்சுக்கோ பைரவி. நம்ம ரமி சாதாரண பொண்ணில்ல. அவளுக்கு இப்படியொரு வியாதி இருக்கறது தெரிஞ்சா, யாரு அவளை கல்யாணம் பண்ணிக்க முன் வருவாங்க சொல்லு, சிதம்பரம் குடும்பம் டாக்டர் ஃபேமிலி, அதால தான் ரமி பத்தி முழுசா தெரிஞ்சும் அதை பெருசு பண்ணாம சம்மதம் சொல்லி இருக்காங்க. இப்படியொரு சம்பந்தத்தை தட்டி கழிக்க எனக்கு மனசு வரல”

 

கணவன் சொல்வதில் நிதர்சனம் புரிய, பைரவியும் சம்மதமாக தலையாட்டினார்.

 

தன் சின்ன மகளின் வாழ்க்கையாவது நன்றாக அமைய வேண்டுமே என்ற வேண்டுதல் அந்த தாயிடம்.

 

***

 

நவீன் குமார். முப்பத்திரண்டு வயது இளைஞன். இளமையின் இலகு தன்மை முற்றிலும் தொலைத்த இறுக்கமான முகம். நெடுசாண்டையாக வளர்ந்த உருவம். முன் வழுக்கை காட்டும் தோற்றம்.  

 

அவனை பார்க்க பார்க்க ரம்யாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது. அவனின் நிழற்படத்தை பார்த்தே பிடிக்கவில்லை என்று சொல்லியும் பெண் பார்க்கும் நிகழ்வை ஏற்படுத்தி தன்னையும் இங்கே நிற்க வைத்த அப்பா, அம்மா, அக்காவின் மீது அத்தனை கோபம், ஆத்திரம் பொங்கியது. அதனை சற்றும் மறைக்காமல் முகத்தில் பிரதிபலித்தப்படி தான் மாப்பிள்ளை வீட்டார் முன் நின்றிருந்தாள்.

 

நவீனின் பார்வை ரம்யா மீது தான் படிந்திருந்தது ஆர்வமாய் அல்ல ஆராய்ச்சியாய். 

 

“எங்க பையனுக்கு தோஷ ஜாதகம், அதாலையே கல்யாணம் தட்டி போயிட்டே இருந்துச்சு, உங்க பொண்ணோட ஜாதகம் ஒத்து வரதால தான் வசதி எல்லாம் பாக்காம பெண்ணெடுக்க வந்திருக்கோம்” மாப்பிள்ளையின் அப்பா சிதம்பரம் சபையில் கால்மேல் கால் போட்டபடி அமர்ந்து சட்டமாக பேசினார்.

 

“எங்களுக்கு வரதட்சணைனு சல்லி பைசா கூட தேவையில்ல. ஆனா சபையில எங்க கௌரவத்துக்கு சிறு குறையும் வரக்கூடாது. நூறு பவுனுக்கு குறையாம நகைநட்டு போடனும், வெள்ளி, வெண்கலம், சில்வர் பாத்திரம், மத்த லொட்டு லொசுக்கு எல்லாம் அடுக்கி வைச்சிடனும் சொல்லிட்டேன்” மாப்பிள்ளையின் அத்தை உத்தரவாக பேச,

 

“அப்புறம்” ரம்யா தான் கேட்டு விட்டிருந்தாள். 

 

அவர்கள் அடுக்கி பேசிய விதத்தில் இவள் வாய் தன்னால் வார்த்தை விட்டிருக்க, இப்போது அனைவரின் பார்வையும் அவள்மீது பாய்ந்தது. இவள் குடும்பத்தார் பார்வை கண்டனமாய், அவன் குடும்பத்தார் பார்வை அதிருப்தியாய்.

 

ரம்யா தொடர்ந்து பேசினாள். “எனக்கு இவங்க கூட கொஞ்சம் பேசனும்” என்றாள் நவீனை பார்த்தபடி.

 

“அதெல்லாம் அவசியம் இல்ல” திவாகர் மகளை கண்டிக்கவும், நவீன் எழுந்துக் கொள்ளவும் சரியாக இருந்தது.

 

அதற்குமேல் யாரும் மறுப்பு சொல்லவில்லை. பின்புறம் சிறிய தோட்டத்தில் இருவரும் தனித்து பேச அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

“என் அப்பா உங்ககிட்ட என்னைபத்தி என்ன சொன்னாங்கனு எனக்கு தெரியாது சார். நான் இப்பதான் பி.எஸ்.சி செகண்ட் இயர் சைக்காலஜி படிச்சிட்டு இருக்கேன். எனக்கு இப்ப கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பம் இல்ல சார். மேல படிக்கனும்னு ஆசை. வீட்ல ஃபோர்ஸ் பண்ணி தான் இந்த ஏற்பாடெல்லாம் பண்றாங்க. என் நிலைமைய புரிஞ்சிட்டு நீங்க போயிடுங்க” அவன் வந்து நின்றதுமே ரம்யா படபடவென பேசி முடித்து விட்டாள்.

 

நவீன் வெறுப்பாய் உதட்டை சுழித்துக் கொண்டான். “நான் மட்டும் புடிச்சு தான் இங்க வந்து உக்கார்ந்து இருக்கேனா? போயும் போயும் உன்னோட தான் என் ஜாதகம் சேர்ந்து தொலைச்சிருக்காம். வேறவழி இல்ல. அதான் அமைதியா இருக்கேன்” 

 

ரம்யாவின் முகம் தெளிந்து போக, “ஐ சூப்பர்! எனக்கும் உங்களை சுத்தமா பிடிக்கல, ரெண்டு பேருக்கும் பிடிக்காம எதுக்கு இந்த கல்யாணம் நடக்கனும். எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க” என்றாள்.

 

அதற்கு மாறாக நவீன் முகம் கடுகடுத்தது. “வாட், நீ என்னை பிடிக்கலனு சொல்றியா? நான் சொல்லனும் உன்ன பிடிக்கலன்னு, ஓ மை காட், பொண்ணு பார்க்க சொன்னா எனக்குனு ஒரு பூசணிக்காய பார்த்து வச்சு இருக்காங்க ஷிட்”

 

“என்னாது பூசணிக்காயா? யூ யூ பிளடி, யாரை பார்த்து பூசணிக்கா சொல்ற” அவன் தன் தோற்றத்தை பழிக்க, இவளுக்கும் கோபம் வந்துவிட்டது.

 

“உன்ன பார்த்து தான், முன்ன பின்ன கண்ணாடி பார்த்ததில்லையா நீ” அவன் பேச்சில் தானென்ற கர்வமும் எடக்கும் தெறித்தது.

 

“நீ உன் முகறகட்டய கண்ணாடியில பார்த்து இருக்கியாடா, இஞ்சி தின்ன மங்கி மாதிரி ஒரு மூஞ்சிய வச்சிக்கிட்டு என்னை சொல்றியா?” அவன் வயதுக்கு இவள் தந்த மரியாதை பறந்து போனது.

 

“ஏய் குந்தாணி மாதிரி இருந்துட்டு என்னை மங்கி சொல்ற இல்ல”

 

“என்னை அப்படி சொன்ன எனக்கு கெட்ட கோபம் வரும்”

 

“ஹலோ ஓவரா கோபப்பட்டு ஒரேயடியா போய் சேர்ந்துடாத” என்றதும் ரம்யா முகம் சுருங்கி போனது. பற்களை கடித்துக்கொண்டு பொறுமையை இழுத்து பிடித்து நின்றாள்.

 

“ஏதோ ஜாதகமாம், என் தலையெழுத்து உன்கூட தான் ஒத்து போகுதாம். சோ இந்த கல்யாணம் நடந்து தான் ஆகும்” நவீனின் பேச்சில் இம்மிக்கும் பக்குவம் இருக்கவில்லை.

 

“பிடிக்கலனா ஏன் கல்யாணம் பண்ணிக்கனும்?” இதுவரை துள்ளி வந்த அவள் குரல் தேய்ந்து ஒலித்தது.

 

“ஜஸ்ட் என்னோட ஃபேமிலிக்காக, என் மாம், டேட்காக”

 

“நான் யாருக்காகவும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”

 

அவளின் கலங்கிய முகத்தை கவனித்தவன் அவளின் காதருகினில் குனிந்து, “நீ மாட்டேன்னு சொன்னாலும் இந்த கல்யாணம் நடக்கும், சோ ரொம்ப அடம்பிடிக்காம ஓகே சொல்லிடு” அவள் சட்டென விலகி நின்றாள்.

 

அதற்கும் அலட்டிக்கொள்ளாதவன், “ஓகே எனக்கு உன்னோட ஃபுல் மெடிக்கல் ரிப்போர்ட் வேணும், உன் ஹெல்த் கன்டிஷன் எனக்கு தெரியனும், எங்க ஹாஸ்பிடல்லயே பண்ணிக்கலாம்” என்றவனை புரியாமல் பார்த்து ரம்யா நெற்றி சுருக்கினாள்.

 

“எதுக்குனு யோசிக்கிறியா, நம்ம பிசிக்கல் ரிலேஷன்ஷிப்க்கு உன் ஹெல்த் கன்டிஷன் ஒத்து வரனும் இல்லயா? அதுக்காகத்தான்” அவன் சொன்னதில் இவள் முகம் கசங்கி கவிழ்ந்தது.

 

“ச்சீ நான் பிடிக்கலன்னு சொல்லிட்டு இருக்கேன், நீ எதை பத்தி பேசிட்டு இருக்க”

 

“ஏய் குந்தாணி, நெக்ஸ்ட் வீக் நமக்கு என்கேஜ்மென்ட், டுவன்டி டேஸ்ல நமக்கு மேரேஜ், எல்லாம் முடிவானதுக்கு அப்புறம் இப்ப வந்து பிடிக்கல பிடிக்கல பிளா பிளானு கத்திகிட்டு இருக்க” அவன் கடுகடுப்பாக சொல்ல சொல்ல,  அவன் சொன்னதை ஏற்கமுடியாமல் அவள் கண்கள் கலங்கி கன்னங்களில் ஈரம் வழிந்தது.

 

“ஓ காட், டேமை திறந்து விட்டியா? மேரேஜ்க்கு முன்னாடியே நல்லா அழுது முடிச்சுக்கோ, என்கூட வந்தப்புறம் இப்படி டிவி சீரியல் ஓட்டினா ரொம்ப மோசமானவனா ஆகிடுவேன்” மிரட்டலாக சொல்ல, அவன் முகத்தின் கடுமையில் ரம்யாவின் முகத்தில் பய ரேகை படர்ந்தது.

 

“ஹேய், பயத்தா உன் ஃபேஸ் ரெட்டிஷ் ஆகுது, நாட் பேட்” என்றவன் ரசனையாக அவள் கன்னத்தை வருட, ரம்யா வெறுப்புடன் அவன் கையை தட்டி விட்டாள்.

 

“ரொம்ப பண்ற நீ, இட்ஸ் ஓகே. இதுக்கான பதிலை உனக்கு… நம்ம ஃப்ர்ஸ்ட் நைட்ல திருப்பி தரேன், வெயிட் அன் ஸீ ரம்யா ச்ச ச்ச குந்தாணி. இந்த நேம் தான் உனக்கு ஸூட் ஆகுது” நவீன் சென்று விட்ட பின்னும், அவள் ஆணி அடித்தது போல் அங்கேயே நின்றிருந்தாள்.

 

தங்கையின் முகவாட்டத்தை கவனித்த திவ்யாவின் மனதிற்கும் கனமானது. ஆனாலும் அவளால் செய்யக்கூடியது எதுவும் இருக்கவில்லை.

 

இந்த திருமண பேச்சு பற்றி தெரிந்த உடனேயே, ரம்யாவிற்காக அப்பாவிடம் பேசி இருந்தாள் திவ்யா. 

 

“இவ்வளவு அவசர அவசரமா ஏன் இந்த கல்யாண ஏற்பாடு, ரமி சின்ன பொண்ணுப்பா, இதெல்லாம் அவளால ஏத்துக்க முடியாது. வேணாம்ப்பா”

 

“ரமி கல்யாணத்தை எப்படி நடத்தனும்னு எனக்கு தெரியும், நீ சொல்ல வேண்டியது இல்ல. நீ எப்ப எங்க பேச்ச மீறி போனியோ அப்பவே நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு திவி, இப்ப வாழாவெட்டியா வந்து இந்த வீட்டுல நீ இருக்கேனா அது நாங்க பெத்த கடனுக்காக மட்டும் தான். புரிஞ்சதா?” அவர் வீசிவிட்டு நகர்ந்த வார்த்தைகள் அவளின் தன்மானத்தை உரசி சென்றிருக்க உடைந்து போய் விட்டாள்.

 

பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டிலும் தன்னை பற்றி யாருக்கும் கவலை இல்லை. அக்கறை இல்லை. என்ற எண்ணமே அவளை நிலைகுலைய செய்வதாய்.

 

இங்கிருந்து எங்கேயேனும் தூரமாக சென்றுவிட தோன்றியது. அதற்கான வாய்ப்புகளை தேடி அலையலானது அவளின் அடுத்தடுத்த நாட்கள். அதில் தங்கையின் நிலையை அவள் கவனிக்க மறந்தாள். ரமியிடம் வெளிப்படையாக பேசுவதையும் குறைத்துக்கொண்டு தனக்குள் ஒடுங்கிக் கொண்டாள்.

 

இப்போது ரம்யா ஒரு முடிவுடன் வீட்டிற்குள் வந்தாள். அம்மா, அக்கா இருவரிடமும் தனக்கான ஆதரவு கிடைக்காது என்பதை உணர்ந்து, தானே தன் தந்தையிடம் நேராக பேசினாள்.

 

“நிச்சயதார்த்தம், கல்யாணம் வரைக்கும் முடிவே பண்ணிட்டீங்களா? அதுவும் என்னை ஒரு வார்த்தை கேக்காம” மாப்பிள்ளை வீட்டினரை வழி அனுப்பிவிட்டு உள்ளே வந்த திவாகரை நோக்கி ரம்யாவின் ஆதங்கமான கேள்விகள் விழுந்தன.

 

“கேட்டிருந்தா மட்டும் நீ ஒத்துட்டு இருந்து இருப்பியா?” அவரும் அசராமல் பதில் கேள்வி வீசினார்.

 

“என்னை விட்டுடுங்கப்பா, அந்த நவீனுக்கு கூட என்னை பிடிக்கல, அவங்க ஃபேமிலிக்காக தான் இந்த கல்யாணம்னு சொல்றான். பிடிக்காத கல்யாணத்துக்கு நான் செத்து போயிடுவேன் ப்பா” அவளின் துவண்ட மனம் உடைந்த வார்த்தைகளை கொட்டியது.

 

“ஓ சாகற அளவுக்கு பேச்சு வருதா உனக்கு, பன்னெண்டு வயசுலயே இல்லாம போயிருக்க வேண்டிய உன்ன இழுத்து புடிச்சு வச்சிருக்கோம் இல்ல. அதுக்கு இப்படி தான் பேசுவ” திவாகர் தன் முடிவிலிருந்து விலகாமல் மகளை குத்திக்காட்டி பேச,

 

“இப்ப என்ன செய்ய சொல்றீங்க, நீங்க காப்பாத்தின என் உயிரை கௌரவம்ன்ற பேர்ல நீங்களே பலி கொடுக்க போறிங்களா? அதுக்கு நான் சம்மதிக்கனுமா?” ரம்யா அடங்காத ஆதங்கத்தில் கேட்டுவிட, வெகுண்ட கோபத்தில் திவாகரும் மகளை அறைந்து விட்டார்.

 

அவர் அறைந்த வேகத்தில் நிலை தடுமாறி அருகிருந்த படியில் இடித்து கொண்டு சுருண்டு போனாள் மகள்.

 

“பலி கொடுக்கவா உன்ன காப்பாத்தி வளர்த்திருக்கேன்? இனிமே இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லி பாரு, உன்ன நானே கொன்னு போட்டுறேன்” அப்போதும் கோபம் குறையாமல் கத்திவிட்டு சென்றார்.

 

மகளை கைதூக்கிவிட்ட பைரவி, அவள் கீழ் உதட்டில் அடிப்பட்டு தடித்திருக்க, துடிதுடித்து போனார்.

 

“அய்யோ ரமி உனக்கு அடிப்பட்டிருக்கு” திவ்யாவும் பதற, இருவரின் கைகளையும் தட்டி விட்டவள், “எல்லாம் தெரிஞ்சும் நீங்களும் என்கிட்ட மறச்சிட்டீங்க இல்ல, உங்களுக்கும் என்மேல நம்பிக்கை இல்லல. போங்க எனக்கு யாரும் வேணா, போயிடுங்க” ரம்யா கத்தி விட்டு தன் அறைக்குள் அடைந்துக் கொண்டாள். 

 

***

 

காதல் கூத்து கட்டும்…