காதலில் கூத்து கட்டு 15

images (13)-9f406ff2

காதலில் கூத்து கட்டு 15

காதலில் கூத்து கட்டு 15

 

இன்னும் நான்கு நாட்களில் நிச்சயதார்த்தம் என்ற நிலையில் முக்கிய சொந்தங்களுக்கு நேரில் அழைப்பு விடுத்து, மற்றவர்களுக்கு தொலைப்பேசி வழி அழைப்பை அனுப்புவது எனவும், விருந்து, உபசரிப்பு,  திருமண பட்டு, நகை, வரிசை, செலவுகள் பற்றியும் பைரவியும் திவாகரும், காலையில் முதல் வேலையாக அனைத்தையும் திட்டமிட்டு கொண்டிருந்தனர்.

 

அவர்களை கவனித்தும் திவ்யா எதிலும் பங்கு கொள்ளவில்லை. ரம்யா அனைத்து ஏற்பாட்டிற்கும்‌ மௌனமாக தன் எதிர்ப்பை காட்டி நின்றாள்.

 

அந்த இளங்காலை பொழுதில், அறிவிப்பில்லா புயலைப்போல, அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தான் வசீகரன். அவன் என்னவோ நிதானமாக தான் அவர்கள் முன் வந்து நின்றான்.  அவனை பார்த்ததும் அவர்களுக்குள் தான் புயலின் தாக்கம். திவாகரும் பைரவியும் அதிர்ந்து எழ, திவ்யாவிற்கும் ரம்யாவிற்கும் திகைப்பு.

 

“டேய் நீ எதுக்குடா இங்க வந்த? ஒழுங்கு மரியாதையா வெளியே போடா” திவாகர் அதட்டலோடு முன்னால் வர, அவன் பார்வை அவருக்கு பின்னால், திகைப்பாய் நின்றிருந்த ரம்யாவை தொட்டு வந்தது.

 

“அங்க என்னடா பார்வை இப்ப வெளியே போக போறீயா இல்ல போலீஸ கூப்பிடவா” 

 

“நான் வெளியே போகறத்துக்காக உள்ள வரல மாமோய், ம்ம் சீக்கிரம் போலீஸ கூப்பிடுங்க, விருப்பமில்லாத பொண்ணுக்கு கட்டாய கல்யாணம் பண்ணா என்ன தண்டனைனு அவங்க கிட்டயே கேட்டுக்கலாம்” வசீகரன் அலட்டாமல் சொல்ல, அங்கிருந்த அனைவரின் முகமும் வெளுத்தது.

 

பைரவி, “இங்க வந்து எங்களை மிரட்டி பார்க்கிறியா?” என்று கோபமாக கேட்டவருக்கு,

 

“அத்த, தப்பு செஞ்சவங்க தான் மிரட்டலுக்கு பயப்படுவாங்க, தப்பு செய்யாதவங்க பயப்பட மாட்டாங்க, இப்ப நீங்க சொல்லுங்க, நீங்க தப்பு செஞ்சீங்களா? இல்லயா?” வசீகரன் தப்பு, சரியென வார்த்தைகளை கோர்த்த வேகத்தில் பைரவி குழம்பி போனார்.

 

அவன் அதிரடியாக பேசும் வேகத்தில், அவனின் கற்றை கேசம் முகத்தில் விழுந்து புரண்டு தொல்லை தர, அவ்வப்போது விரல்களால் அதை கோதி விட்ட படி, சிறிதும் தயக்கமின்றி அலட்டலோடு பேசும் வசீகரனின் தோரணை, ரம்யாவின் முகத்தில் புன்னகை துளிர்க்க செய்வதாய். மொட்டவிழும் இதழ் விரிப்பை, இதழ் மடித்து அடக்கிக் கொண்டாள். 

 

தனக்காக அப்பாவிடம் பேசுவதாக சொல்லி இருந்தான் தான். ஆனால் நேற்று சொன்னவன் விடிந்ததும் வீட்டிற்கே வந்து நிற்பான் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை. அவன் துணிவை தன்னால் மெச்சிக் கொண்டாள்.

 

ஆனால் மகளின் சிரிப்பை திவாகர் பார்வை கண்டு கொண்டது. “ஏய் கொழுப்பெடுத்த கழுத நீதான் இவனை வர சொன்னியா? உன் ஃபோனை பிடுங்கி வச்சும் உனக்கு புத்தி வரல இல்ல” இப்போது திவாகர் மகள் மீது எகிறினார்.

 

வசீகரன், “யோவ் மாமா, சரியான பீபி கேஸ்யா நீ, எதையும் பொறுமையா கேக்கவே மாட்டல்ல” என்று அவர் முன் நின்றவன், “பொண்ணோட செல்ஃபோனை புடிங்கி வச்சுட்டு, அவளை வீட்டுக்குள்ள அடைச்சு வச்சுட்டு தான் கல்யாணம் பண்ணனுமா? இதெல்லாம் செய்ய உனக்கே வெக்கமாயில்ல” அவன் கேள்வியில் இவருக்கு சுறுசுறுவென்று ஏறியது.

 

“டேய் என் பொண்ண எப்படி வாழ வைக்கனும்னு எனக்கு தெரியும், நீ சொல்ல வேண்டியதில்ல, நீ என்ன அடாவடி செஞ்சாலும் சரி, என் பொண்ண உனக்கு தரமாட்டேன் டா”

 

“நான் கேட்டானா? உன்கிட்ட பொண்ண கொடுன்னு கேட்டானா? இல்ல எங்களுக்குள்ள லவ் இருக்குனு சொன்னேனா? நீங்களா எதையாவது நினச்சிக்க வேண்டியது, அதுக்கும் மேல அந்த சின்ன பொண்ண போட்டு படுத்த வேண்டியது”

 

“அதான் உங்களுக்குள்ள ஒன்னுமில்லனு சொல்லிட்டல்ல கிளம்புடா” திவாகர் அவனை துறத்துவதிலேயே குறியாக இருந்தார். அவனை பார்த்தாலே எப்போதும்போல அவருக்குள் இரத்தக்கொதிப்பு கூடியது.

 

“கிளம்பதான் போறேன், அதுக்கு முன்னாடி நீங்க பெத்த உங்க பொண்ணுமேல நம்பிக்கை வைங்க சார். இந்த கல்யாணம் வேணானு அவ ஏன் சொல்றானு கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க” தழைந்த குரலிலும் திமிரை காட்ட முடியுமா? அவன் காட்டினான்.

 

“டேய் நீ” அவர் ஆத்திரமாக பேச வர, கைக்காட்டி தடுத்தவன், “இங்க பாரு உங்க பொண்ணு மேல எனக்கு லவ் இருந்தா இப்படி மழுப்பிகிட்டு எல்லாம் இருக்க மாட்டேன். ஆமா அவ தான் என் பொண்டாட்டினு கைய புடிச்சு கூட்டிட்டு போயிட்டே இருப்பேன். அவ்வளோ தில்லு எனக்கு இருக்கு. அது உங்களுக்கும் நல்லாவே தெரியும்” வசீகரன் சட்டமாக பேச, பெரியவர்களுக்கு மூச்சடைத்த உணர்வு. 

 

எதற்கும் அஞ்சாதவனிடம், எல்லாவற்றிற்கும் அஞ்சுபவர்கள் எப்படி  என்று போராட!

 

“என்ன பேச்சு இது வசி? இப்ப எதுக்காக இங்க வந்து பிரச்சனை பண்ற?” அதுவரை அமைதியாக நின்ற திவ்யா அவனை கடிந்தாள்.

 

“அய்யோ என் மாஜி அண்ணியாரே, நான் பிரச்சனை வேணானு சொல்ல தான் வந்து இருக்கேன்” என்று அலுத்தவன்,

 

“உங்க வீட்டுல யாருமே சொல்லற விசயத்தை நேரா புரிஞ்சிக்க மாட்டீங்களா, குறுக்கு புத்தியா தான் புரிஞ்சிப்பீங்களா? சரியான மட்ட மடசாம்பிராணிங்க” கடைசி வாக்கியத்தை மட்டும் வாய்க்குள் முணுமுணுத்து கொண்டான். 

 

பைரவியிடம் திரும்பி, “அத்த, நான் தெளிவா சொல்றேன்‌ நீங்களாவது பொறுமையா கேளுங்க… எனக்கும் ரம்யாவுக்கும் காதல், கத்தரிக்கா, வெண்டக்கா, சுண்டக்கானு ஒரு வெங்காயமும் இல்ல… உங்களுக்கு சந்தேகம்னா ரம்யாவையே கேட்டு பாருங்க” என்றவன் அவள் புறம் கைக்காட்ட, 

 

“எனக்கு சொல்லி சொல்லி வெறுத்து போச்சும்மா, எனக்கு யார் மேலயும் காதல் இல்லம்மா” என்றாள் ரம்யா தவிப்பாய். அலுப்பாய்.

 

“அவ தமிழ்ல தான் சொல்றா, தெளிவா சொல்றா உங்களுக்கு புரியுது இல்ல” வசீகரன் பள்ளி குழந்தைகளுக்கு புரிய வைப்பதை போல நிற்க வைத்து அழுத்தி கேட்ட விதத்தில் பைரவி சங்கடமாக தலையசைத்தார்.

 

பொறுமை இழந்த திவாகர், “செக்யூரிட்டி” என்று குரல் கொடுக்க, வாயில் அருகே நின்றிருந்த காவலாளி உள்ளே ஓடி வந்து நின்றார்.

 

“யாரை கேட்டு இவனை உள்ள விட்ட, முதல்ல இவனை வெளியே இழுத்துட்டு போ” என்று கத்த, காவலாளி தயங்கியபடி வசீகரன் அருகில் வந்தார்.

 

“நானே போயிறேன் ட்டூ மினிட்ஸ்” என்று அவருக்கு கைக்காட்டியவன், “உங்க வீட்டுக்காரர் ஒரு சொக்க தங்கத்தை மாப்பிள்ளயா பார்த்து இருக்காரே… அவன் சுத்த தகரம், துருப்புடிச்ச தகரம். எப்படி நீங்க ரம்யாவுக்கு அப்படியொரு மாப்பிள்ளய ஓகே சொன்னீங்கனு எனக்கு புரியவேயில்ல” வசீகரன் ஆதங்கமாக கேட்க,

 

“என் மாப்பிள்ளைக்கு என்னடா குறை? அவர் உன்னவிட எவ்வளவோ மேலு தெரியுமா?” திவாகர் மூக்கு விடைக்க சொல்ல,

 

“யோவ், என்கூட ஏன்யா உன் மாப்பிள்ளைய ஒப்பிட்டு பார்க்குற, கொஞ்சமாவது அறிவிருக்கா” என்று காட்டமாக அவன் கேட்டுவிட, திவாகருக்கும் ஒருமாதிரி ஆகிவிட்டது.

 

“நேத்து உன் நொல்ல மாப்பிள்ள எவ்வளோ கேவலமா பேசுனான் தெரியுமா?” வசீகரன் ஆத்திரமாக சொல்ல வரவும்,

 

“டேய் அவர் கல்யாணம் பண்ணிக்க போற‌ பொண்ண பத்தி நீ போய் பேசினா, யாரா இருந்தாலும் அப்படி தான் டா பேசுவாங்க” திவாகரும் காட்டமாக சொன்னார்.

 

“ஓகே பாயின்ட். நீங்க சொல்றதை நான் ஒத்துக்கிறேன்… ரம்யாகிட்ட அவன் எப்படி நடந்துக்கிட்டான்னு கொஞ்சம் கேளுங்க” என்றவன் ரம்யாவிடம் திரும்ப, நவீன் தன்னை விளித்த சில வார்த்தைகளை ரம்யா சங்கடமாக சொன்னாள்.

 

அதனை கேட்டு திவாகருக்கு ஆத்திரம் பொங்கியது. “நவீன் இப்படி பேசினான்னு சொல்ல சொல்லி இவன் உனக்கு சொல்லிக் கொடுத்தானா?” என்று ஆத்திரமாக மகள் சொன்னதையும் வசீகரன் மேலேயே திருப்பி விட்டார் அந்த மாமனிதர்.

 

“யோவ் என் அப்பா வயசுன்னு பார்க்கிறேன் இல்ல அறைஞ்சுடுவேன்யா” என்று கொதிப்பானவன், “குதிரைக்கு கடிவாளம் கட்டிவிட்ட மாதிரி நேரா தான் பார்த்திட்டு இருப்பியா? சுத்தி முத்தி நல்லது கெட்டது கவனிச்சு தொலைய மாட்டியா?” வசீகரன் பொரித்து தள்ளினான்.

 

“செக்யூரிட்டி…” திவாகர் மீண்டும் சத்தமிட, இதுவரை தயக்கமாக நின்றிருந்த காவலாளி, வசீகரனிடம், “என் வேலை போயிடும் சார், தயவு செஞ்சு வந்திடுங்க சார்” என்று தாழ்ந்த குரலில் கெஞ்சி அழைத்தார்.

 

“என்னை துறத்தறது இருக்கட்டும், அந்த கூமுட்ட மாப்பிள்ளய பத்தி விசாரிச்சு பாருங்க போங்க, ஆட்ட மாட்ட தள்ளிவிடுற மாதிரி பொண்ணையும் தள்ளி விடாதீங்க” என்றதோடு, ரம்யாவை ஒரு அழுத்த பார்வை பார்த்துவிட்டு வசீகரன் வெளியேறி சென்றுவிட்டான். இதற்கு மேல் என்ன பேசி அவர்களுக்கு புரிய வைப்பது என்று அவனுக்கும் புரியவில்லை. ‘ச்சே மக்கு சாம்பிராணிங்க…” வாய்க்கு வந்த வசை சொற்களை முணுமுணுத்துபடி அகன்றிருந்தான்.

 

ரம்யாவிற்கு தான் மனம் பாரமானது. தனக்காக இங்கு நடந்த இத்தனை அவமானங்களையும் பொறுத்து கொண்டானே என்று அவன் மீது இவள் மனம் இளகி கரைந்தது. அதேநேரம் பெற்றவர்கள் மீது கோபமும் எழுந்தது.

 

“எனக்காக பேச வந்தவனை இப்படித்தான் அவமானப்படுத்தி வெளியேத்துவீங்களா? எங்கமேல உங்களுக்கு எப்பவுமே நம்பிக்கை வரவே போறதில்ல இல்ல” என்று ரம்யா ஆதங்கமாக கேட்க,

 

“திவ்யா… இவளை உள்ள இழுத்துட்டு போ, இல்லனா என் கையாலயே அடிச்சு போட்டுடுவேன்” திவாகர் ஆத்திரமாக சொல்லவும், 

 

“நீங்க அடிச்சு போட்டாலும் சரி, நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்” ரம்யா எதிர்த்து பேசினாள்.

 

“என் பேச்ச கேட்டு நடக்கறதா இருந்தா என் பொண்ணா இந்த வீட்டுல இருக்கலாம். இல்ல…!” என்றவர் வாசகத்தை முடிக்க முடியாமல் கோபமாக சென்று விட்டார். 

 

அவர் முடிக்காத வார்த்தைகளின் பொருள் புரிந்து ரம்யா முகம் வீழ்ந்து போனது. ‘அவரோட பேச்ச கேட்கலனா நான் அவரோட பொண்ணு இல்லையாமா?’ சின்னவள் மனம் துவண்டு போவதாய்.

 

***

 

“ச்சே மனுசனா அவனெல்லாம்?” வசீகரன் மனம் பொறாது தேவாவிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.

 

“போதும்டா, இதுக்குமேல உன்னால கூட என்ன தான் செய்ய முடியும்” தேவா நிதர்சனம் உணர்த்த,

 

“ஏதாவது பண்ணனும் தேவா, இல்லனா அந்த சைக்கோ கிட்ட ரம்யா மாட்டிக்கிட்டா! நினச்சு கூட பார்க்க முடியல” வசீகரன் வருந்தினான்.

 

“நீயும் ரமியும் இவ்வளோ சொன்னதுக்கு‌ அப்புறம் அவங்க அப்பா, மாப்பிள்ளய பத்தி விசாரிப்பாரு இல்ல, ஒருவேள அப்ப அவன் கேரக்டர் தெரிஞ்சா கல்யாணத்தை நிறுத்துடுவாரில்ல” தேவா நேர்மறையாக யோசித்து சொல்ல,

 

“நீ சொல்ற மாதிரி நடந்தா நல்லா தான் இருக்கும், ஆனா எனக்கு நம்பிக்கை இல்ல” வசீகரன் மறுப்பாக தலையசைத்தான்.

 

“பேசாம அந்த நவீன தூக்கிடலாமா? மாப்பிள்ள இல்லாம கல்யாணம் எப்படி நடக்கும்?” தேவா அதிரடி யோசனை சொல்ல,

 

“டேய் அந்த எருமை காணோம்னா நேரா வந்து என்னை தான் போலீஸ்ல போட்டு கொடுப்பான் அவ அப்பன், அப்புறம் நீதான் கிளிக்கர்ஸ்ஸ தனியா சமாளிக்கனும்” 

 

“அய்யோ, இப்ப தான் ஓரளவு ஆட் போயிட்டு இருக்கு. இப்ப போலீஸ் கேஸ்னு போனா மொத்தமா இழுத்து மூட வேண்டியது தான்” தேவா பதறினான்.

 

“புரியுதில்ல உருப்படியா ஏதாவது ஐடியா கொடுடா”

 

“டேய் திடீர்னு கல்யாணத்தை நிறுத்த ஐடியா கேட்டா நான் எங்கடா போவேன்”

 

“ப்ச் எனக்கும் எதுவும் தோனலடா” என்றவன் சோர்வாய் தலையை பின்னால் சாய்த்துக் கொண்டான். 

 

“ரொம்ப நல்ல பொண்ணுடா, தைரியமானவளும் கூட. அன்னிக்கு காலேஜ் ரோட்டல வச்சு அந்த அமுதனை என்ன கிழி கிழிச்சா தெரியுமா! கூடவே என்னையும் சேர்த்து கிழிச்சா!” என்றவன் சின்னதாய் சிரித்துக் கொண்டான் அன்றைய நினைவு மீட்டலில்.

 

மேலும், “நைட் தான் டைப் ஒன் டயாபடீஸ் பத்தி எடுத்து படிச்சு பார்த்தேன்! நாமெல்லாம் வாழ்க்கையில சக்சஸ்ஃபுல்லா இருக்க போராடுறோம். ஆனா ரம்யா போல இருக்கறவங்க, சாதாரணமா வாழறத்துக்கே போராடிட்டு இருக்காங்க. இறப்புன்ற முடிவு கோட்டுக்கு பக்கத்துல இருந்தாலும் எவ்வளவு பாஸிட்டிவ்வா இருக்கா தெரியுமா!” வசீகரன் மனது ரம்யாவின் எண்ணத்தில் இருந்து வெளிவர மறுத்தது. 

 

பரிதாபம், கவலை, அவளின் இந்நிலைக்கு ஏதோவொரு வகையில் தானும் காரணம் என்ற குற்றவுணர்வு, அவளை இந்த சிக்கலில் இருந்து எவ்வாறேனும் மீட்க முடியாதா என்ற யோசனை அவனை அலைகழித்துக் கொண்டிருந்தது.

 

தேவா நண்பனின் தவிப்பை பார்த்து கொண்டிருந்தான்.

 

“என்னாடா பெருசா அவ கேட்டுட்டானு அவங்க வீட்டுல டார்ச்சர் பண்றாங்க? படிக்கனும்னு கேக்கறா, அவளோட லைஃப் பார்ட்னர் நல்லவனா, அவளுக்கு பிடிச்சவனா இருக்கனும்னு கேக்குறா, அதை கூட புரிஞ்சுக்காம, என்னடா அப்பா, அம்மா அவங்க ச்சே” அவன் மனக்கொதிப்பு அடங்குவதாக இல்லை.

 

“டேய் போதும்டா வசி, அதை விட்டு தள்ளு. நம்ம வேலைய பாரு, திருமகள் ஜ்வல்ஸ்க்கு டிஃப்ரன்டா, அட்ராக்டிவ்வா ஆட் பண்ணி தரனுமா? ஒன் வீக் தான் டைம் இருக்கு, முதல்ல அதுக்கு கான்செப்ட் யோசிடா” தேவா தொழில் பற்றிய பேச்சில் அவனை இழுக்க,

 

“எப்படி டா விட முடியும், இந்த பிரச்சனைக்கு ஏதோ ஒருவகையில நான் தானே காரணம். அந்த பாழாபோன திவி, சசிய சேர்த்து வைக்கறேன் பேர்வழின்னு ரம்யா கூட நான் பேச போய் தான இப்படியொரு பேச்சு வந்துச்சு” தன்னையே குற்றவாளி கூண்டில் ஏற்றிக் கொண்டான் அவன்.

 

“நீ இவ்வளவு ஃபில் பண்ணி மண்டய உடைச்சிக்கறத்துக்கு, துணிஞ்சு ரமிய நீயே கல்யாணம் பண்ணிக்கலாம்! ஆல் பிராப்ளம் சால்வ்ட்” தேவா சொல்லவும், வசீகரன் தாடை இறுகிட, அவனை கண்களை குறுக்கி பார்த்து வைத்தான்.

 

***

 

காதல் கூத்து கட்டும்… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!