காதலில் கூத்து கட்டு 17

IMG-20210202-WA0002-580e91f0

காதலில் கூத்து கட்டு 17

 

இரண்டு நாட்கள் கழிந்து இருந்தது. நாளைய நிச்சயத்தார்த்த ஏற்பாட்டில் அவர்களின் வீடு வண்ண விளக்குகள், மலர் அலங்காரத்தில் பளபளத்தது.

 

நிற்கவும் நேரம் இல்லாதது போல, திவாகரும் பைரவியும் நிச்சய வேலைகளில் துரிதமாக செயல்பட்டு கொண்டிருந்தனர். அவர்களின் ஆர்வத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் பார்த்து ரம்யாவிற்கு ஒருபுறம் பதட்டமாகவும் மறுபுறம் பாவமாகவும் தோன்றியது. நேற்று கூட திருமணத்தை நிறுத்திவிடும் படி, அவர்களிடம் ரம்யா வாக்குவாதம் செய்திருந்தாள். ஆனால், எப்போதும் போல பலன் பூஜ்யம் தான்.

 

நேற்றிரவு முழுதும் உறக்கமின்றி புரண்டு இருந்தவள், இதோ விடியற்காலையில் எழுந்து குளித்து தயாராகி அமர்ந்து விட்டாள். இனி என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பு அவளிடம் ஒட்டிக்கொண்டது.

 

நிச்சய மேடையில் கூடியிருக்கும் சொந்தங்கள் மத்தியில், திவாகரின் மூக்குடைத்து, ரம்யாவை அழைத்து போவதாக வசீகரன் சொன்னதற்கு ரம்யா தான் மறுத்து இருந்தாள். 

 

‘அப்பா பேச்சை மீறி போறதே தப்பு. இதுல அவருக்கு தீராத அவமானத்தையும் தர வேணாம். அதுக்கு முன்னவே என்னை அழச்சிட்டு போயிடு வசீ’ ரம்யா சொல்லி இருக்க, நிச்சயத்திற்கு முந்தைய நாள் வருவதாக சொல்லி சென்றவனிடம் இருந்து இதுவரை ஒரு தகவலும் வந்திருக்கவில்லை. 

 

இருவித மனநிலையில் இரு நாட்களை இரண்டு யுகங்களாக கழித்திருந்தாள் அவள். இப்போதும் ஒவ்வொரு நொடியையும் தவிப்பாக கடத்தி கொண்டிந்தாள்.

 

“டேய் நீ ஏன் டா மறுபடி இங்க வந்த, ஒருமுறை சொன்னா புரியாதா உனக்கெல்லாம்? வெளியே போடா, செக்யூரிட்டி…” திவாகரின் கட்டை குரலில் ரம்யா அறைக்குள் இருந்து வெளியேறி வேகமாக படிகளில் இறங்கி வந்தவள் அப்படியே பிரேக் அடித்து நின்றாள். வசீகரனை அப்படி ஒரு கோலத்தில் அவள் எதிர்பார்க்கவில்லை. 

 

அவனின் தோள் தொட்டிருந்த கேசத்தை ஒட்ட வெட்டி விட்டு, திருத்தமான முகத்துடன் அவளின் பார்வைக்கு புதியவனாக வந்து நின்றிருந்தான் வசீகரன். 

 

சத்தமிட்ட திவாகரையும், பம்மலாக வந்து நின்ற காவலாளியையும் அசட்டை செய்தவனின் பார்வை உட்புறமாக ரம்யாவை தேடி அலைந்து அவளிடம் நிலைத்து வாவென்று அழைத்தது. ரம்யா மூச்சை இழுத்து பிடித்து பெற்றவர்களை தவிப்புடன் பார்த்தபடியே படியிறங்கி வந்தாள்.

 

“டேய், நான் சொல்லிட்டே இருக்கேன், என்ன திமிரு டா உனக்கு, கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளறத்துக்குள்ள மரியாதையா போயிடு” திவாகர் விடாமல் ஆவேசமாக கத்தி கூச்சலிட,

 

அவரிடம் திரும்பியவன், “போக தான் போறேன், தனியா இல்ல” என்றவன் நேராக, “ரமி என்கூட வா” அவளை பார்த்து அழைத்தான்.

 

திவாகர் ஆத்திரத்தில் பொங்கி எழுந்து அவன் சட்டையை பிடித்து விட்டார். “என் பொண்ண என் கண்ணு முன்னாடியே கூப்புட எவ்வளோ தைரியம் டா உனக்கு” அவர் கண்கள் சிவக்க உறும,

 

“திருப்பி உங்க சட்டைய பிடிக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? நான் உங்க மேல கைய வச்சா அது உங்களுக்கு தான் அவமானம்” வசீகரன் அமர்த்தலாக சொல்லவும் அவர் கைகள் தன்னால் தளர்ந்தது.

 

கண்களை அழுத்த மூடி திறந்தவர், “உன் அண்ணனால என் பெரிய பொண்ணு வாழ்க்கை தான் போச்சு, சின்னவளாவது வாழட்டும், தயவுசெஞ்சு இங்கிருந்து போயிடு. அவளை விட்டுடு” என்றார். குரல் சற்று இறங்கி ஒலித்தது.

 

“சரி நான் ரமிய விட்டுறேன்” உடனே ஒத்துக் கொண்டவன், “பட் ஒன் கன்டிஷன், இந்த கல்யாணத்தை நீங்க நிறுத்தனும் முடியுமா உங்களால” வசி சவாலை போல கேட்க,

 

“நான் ஏன்டா கல்யாணத்தை நிறுத்தனும்? என் பொண்ணு கல்யாணம் நடக்கும், ரம்யா உள்ள போ” என்று மகளிடம் கத்தினார்.

 

“ரம்யா என்னோட வா” வசீகரன் மறுபடி அழுத்தமாக அழைத்தும் அவளிடம் சிறு தயக்கம். இருவரின் பேச்சுக்கும் அசையாது பரிதவித்து நின்றிருந்தாள்.

 

“அய்யோ பாவி, ஏன்டி இப்படி கல்லு மாதிரி நிக்கிற உள்ள போடி, அவனோட போயி குடும்ப மானத்தை வாங்காதடி, வாடி உள்ள” பைரவி மகளை உள்ளே இழுத்துச் செல்ல முயல,

 

“என் பொண்ணு வர மாட்டா, என்ன நீ மிரட்டி பார்க்குறீயா? முதல்ல வெளியே போடா, ரமீ இன்னும் ஏன் நிக்கிற உள்ள போ, இல்ல உன்ன தொலைச்சு கட்டிடுவேன்” எதிர்பாராத அதிர்ச்சியில் அவரின் உடலும் குரலும் நடுங்கியது. உச்சந்தலை சூடேற கத்தினார்.

 

“இப்ப ரம்யா என்கூட வந்தா குடும்பத்தோட போகும். இல்ல… நிச்சய மேடையில எல்லாருக்கும் முன்ன அவளை என்கூட கூட்டிட்டு போயிடுவேன்… அத்தனை துணிச்சல் எனக்கு இருக்கு, அது உங்களுக்கும் தெரியும்! இப்ப எப்படி வசதி?” வசீகரனின் மிரட்டலில் அவர் மிரண்டு தான் போனார். என்ன இருந்தாலும் கௌரவ பிரச்சனை அல்லவா. எத்தனை தலைகுனிவு. அவனின் முரட்டுதனம் வேறு அவரை கலவரப்படுத்த, அந்த நேரம் யோசிக்கவும் மறந்து முகம் வெளுத்து நின்றார்.

 

வசீகரன், ரம்யாவிடம் வந்து அவள் முன் தன் கரத்தை நீட்ட, அவள் பரிதவித்து அவனை பார்த்தாள். முன்பே எடுத்த முடிவானாலும் பெற்றவர்களை மீறி போவதை நினைக்கவே மனம் கனத்தது.

 

“ஒரு நிமிசம் வசி” என்று அவசரமாய் அவனை தாமதிக்க செய்தவள், தந்தையிடம் வந்து, “ப்பா உங்களை மீறி நான் போக விரும்பல ப்பா, இந்த கல்யாணத்தை மட்டும் நிறுத்திடுங்க ப்பா, ப்ளீஸ் ப்பா, அவன் ரொம்ப மோசம் ப்பா, புரிஞ்சிக்கங்க ப்பா” வார்த்தைக்கு வார்த்தை அப்பாவென்று அழைத்து அவள் கெஞ்சலோடு கேட்க,

 

“ஆசையா பெத்து வளர்த்த பொண்ணுங்க ரெண்டு பேரும் எங்க கை மீறி போயிட்டீங்க இல்ல, இப்படினு தெரிஞ்சு இருந்தா, குழந்தையா இருக்கும் போதே உங்க கழுத்தை திருகி போட்டிருப்பேன்” என்றார் உச்ச பச்ச கோபத்தில்.

 

“ப்பா… நான் எந்த தப்பும் பண்ணல” என்றவள் கன்னங்களில் கண்ணீர் கோடிட்டது.

 

“நீ என்ன சொன்னாலும் அவங்க நம்ப போறதில்ல ரமி, கிளம்பலாம் வா” அவன் அவள் கைப்பற்றி நடக்க, அவள் நகர முயலாமல் பெற்றவர்கள் முகம் பார்த்து நின்றிருந்தாள்.

 

“அடிபாவி, இப்படி சீறழிஞ்சு போகவா, உன்ன ராத்திரி பகலா காப்பாத்தி வளர்த்தேன்? அவனோட போகாதடீ நாதியத்து போவ, திரும்பி வந்து தோலையேன்டீ அய்யோ, ஏதாவது செய்யுங்க, யாரையாவது கூப்பிட்டு நம்ம பொண்ண காப்பாத்துங்க” பைரவி கணவனை பிடித்து உலுக்க, திவாகர் இறுகி கனன்று நின்றிருந்தார். இப்போதே வசீகரனை அடித்து, போட்டு மிதித்து தன் மகளை மீட்கும் வேகம் அவர் மனதில். ஆனால், ஆறடி உயரத்தில் முரட்டு உடற்கட்டோடு முழு ஆண்மகனாக நிற்பவனிடம், இவரின் பெருத்து தளர்ந்த உடலுடன் எப்படி மோத முடியும்? ஆட்கள் வைத்து பெண்ணை காவல் காக்கும் வில்லத்தனம் எல்லாம் அவருக்கு வந்திருக்கவில்லை வேறு.

 

ரம்யாவின் தவிப்பு வசீகரனுக்கு புரிந்தது தான், அதற்காக அவளை இப்படியே விட்டு போகவும் முடியாதே! 

 

“போயிடலாம் ரமி, வேற ஏதாவது பிரச்சனை வந்திட போது, புரிஞ்சிக்க” என்றான் நிலைமையின் தீவிரத்தை தாழ்ந்த குரலில் உணர்த்தி.

 

“முடியல வசி, வேற வழி இல்லயா?” பெற்றவர்களை பிரிய அடம்பிடிக்கும் குழந்தையாய் அவள்.

 

“ஒரு வழி இருக்கு” என்றவன் அவள் இறுதி நேர நம்பிக்கையாக அவனை பார்க்க, “நீ அந்த நவீன் குமாரை கல்யாணம் பண்ணிக்கனும்” என்றான். நிச்சயம் அவன் குரலில் கேலி இல்லை. சங்கடம் தான் இருந்தது.

 

அவன் சொன்னதே அவளுக்கு தூக்கி வாரி போட்டது. அந்த நிதர்சனம் நினைக்கவே அவளை மிரட்டி பார்க்க, “இல்ல வசி நான் உன்கூடவே வரேன்” பூச்சாண்டிக்கு பயந்த குழந்தை போல அவன் கையை இறுக்கி பிடித்து கொண்டாள்.

 

அவளை ஆழ பார்த்தவன், தன் பிடியிலும் அழுத்தம் தந்து அவளுடன் வெளியே நடந்தான். 

 

பெற்றவர்களின் வயிற்றெரிச்சலும் சாபங்களும் அவர்கள் பின்னோடு மோதின.

 

அவன் வண்டியை உயிர்பிக்க, “அச்சோ வசீ என்னோட பேக், உள்ளயே வச்சுட்டேன்” என்றாள் ரம்யா பதட்டமாய். “அப்படி என்ன இருக்கு உன் பேக்ல?” அவன் அங்கிருந்து போக வேண்டுமே என்ற அவசரத்தில் கேட்டான்.

 

“ஆங், எனக்கு டிரஸ்ஸஸ் கொஞ்சம், அப்பிறம், எனக்கு பிடிச்ச திங்க்ஸ் கொஞ்சம், அப்பிறம் என் டெடி, அப்பிறம்…” 

 

“போதும் உன் அப்பிறம், உன் பேகும் வேணாம். ஒரு மண்ணும் வேணாம், முதல்ல வண்டியில ஏறு” அவன் பொறுமை இழக்க,

 

“இல்ல, அதுல தான் என் புக்ஸ். சர்ட்டிபிகேட், மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எல்லாம் இருக்கு” அவன் கோபத்தை பார்த்து இவள் படபடவென ஒப்புவித்தாள்.

 

“லூசு, அதை ஞாபகமா எடுத்துட்டு வர மாட்டியா?” அவன் அவளை திட்ட,

 

“சாரி, பதட்டத்துல பயந்துட்டேன், இஇல்ல பயத்துல மறந்துட்டேன்” அவள் உளறி கொட்டினாள்.

 

“சரி பேக் எங்க வச்சிருக்க?” அவன் கேட்கவும், “என் ரூம்க்கு வெளியே மாடிபடி கிட்ட” என்றாள்.

 

வண்டியிலிருந்து இறங்கி அவர்கள் வீட்டு வாயலருகே வந்தவன், சில நிமிடங்களில் அவளின் பையோடு வர, ரம்யா அவள் வீட்டு காவலாளியை முடிந்த மட்டும் முறைத்து விட்டு, அவன் பின்னோடு ஏறிக் கொண்டாள். இருவரையும் சுமந்தபடி வண்டி சாலையில் வேகமெடுத்தது.

 

இன்னுமே அவளால் நம்ப முடியவில்லை. இத்தனை சுலபமாக வசீகரன் தன்னை அழைத்து வந்து விட்டான் என்பதை. ஆனாலும் நிம்மதி இல்லை. நெஞ்சம் கனத்து அழுத்தியது. கண்ணீர் வேறு முட்டிக் கொண்டு வரவா என்றது.

 

***

 

ரம்யாவை நேராக தன் ‘கிளிக்கர்ஸ்’ அலுவலக அறைக்கு அழைத்து வந்தான் வசீகரன். தயக்கமாக உள்ளே வந்தவள், “இங்க ஏன் வசி?” அவனிடம் கேட்க,

 

“ஒன்பது மணிக்கு முகூர்த்தம். சீக்கிரம் கிளம்பு ரமி” என்று அவளிடம் பட்டு புடவையை நீட்ட,  அதை தயக்கத்துடன் வாங்கிக் கொண்டவள், “இப்போவேவா கல்யாணம்?” என்று மிரண்டு கேட்டாள்.

 

வசீகரன் அவளை கூர்ந்து பார்த்தான். பரிதவிப்பு, வேதனை, குழப்பம் அலைகழிப்பு என மொத்தமாய் அவள் முகத்தில்.

 

“நமக்கு மேரேஜ் முடிச்சிட்டா தான் சேஃப்டி, உன் அப்பா ஏதாவது கிறுக்குதனம் பண்ணி வச்சா சிக்கல் ஆகிடும். இன்னைக்கு முகூர்த்தநாளா இருக்கறது நல்லதா போச்சு, போ மா” என்றான்.

 

பக்கத்தில் வசீகரன் முகத்தை பார்த்தவளுக்கு ஏதோ வித்தியாசமாக தெரிந்தது. சிவந்த கண்கள், சோர்ந்த முகம், தளர்ந்த உடல்மொழி என சற்றுமுன் வீட்டில் அப்பாவை எதிர்த்து நின்ற தோற்றத்திற்கு நேர்மாறாக தெரிந்தான்.

 

“என்னாச்சு வசி உனக்கு? உடம்பு சரியில்லயா?” ரம்யா வாஞ்சையாக கேட்க,

 

“இல்லடா, ரெண்டு நாளா சுத்தமா ரெஸ்ட் இல்ல, அதான் டயர்டா இருக்கு” என்றான் சோர்ந்த குரலில்.

 

“ரெஸ்ட் எடுக்காம என்ன பண்ணிக்கிட்டு இருந்த நீ?” ரம்யா தொடர்ந்து அவனை கேட்க, சின்னதாக சிரித்தவன், “ரெண்டு நாள்ல ஒரு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றது அவ்வளவு ஈஸினு நினச்சுட்டியா, அதோட நாம தங்கறத்துக்கு, இன்னும்… ஃபேமிலி பிராப்ளம் வேற” வெறுமையாக சொன்னான்.

 

“என்னாச்சு, அத்த, மாமா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கலையா?” அவள் கவலையாக கேட்க, இல்லையென்று தலையசைத்தவன், “அப்பா, அம்மா, பாட்டி புரிஞ்சிக்க மாட்டாங்கனு எனக்கு தெரியும் தான், ஆனா சசி? அவன் கூட இப்படி பண்ணுவான்னு நினக்கல” என்றவன் அழுத்த முகத்தை துடைத்து கொண்டான்.

 

எப்போதும் துறுதுறுவென வலம் வருபவனை இப்படி உடைந்து போய் பார்க்க, அவளுக்கு மனம் தாங்கவில்லை. 

 

“இவ்வளோ கஷ்டப்பட்டு இந்த கல்யாணம் வேணாம் வசீ, இன்னைக்கு மட்டும் எங்காவது சேஃபா தங்கிட்டு, நாளைக்கு அப்பாகிட்ட போய் உண்மைய சொல்லி சாரி கேக்குறேன். கோபபடுவாரு தான், பரவால்ல” அவனுக்கு சுமையாக இருக்க இவளும் விரும்பவில்லை.

 

“சின்ன குழந்தை மாதிரி பேசாத ரமி, நீ சொல்ற மாதிரி நடந்துகிட்டா நம்ம ரெண்டு பேரோட கேரக்கடரும் ஸ்பாய்ல் ஆகிடும்” என்றவன், “துணிஞ்சு முடிவெடுத்த பிறகு பின்வாங்குற பழக்கம் எனக்கு கிடையாது” என்றான் உறுதியாய்.

 

அப்போதும் ரம்யா அவன் முகம் பார்த்து தயங்கி நிற்க, அவளருகில் வந்தவன், “தைரியமா உங்க வீட்டுல இருந்து உன் கை பிடிச்சு கூட்டிட்டு வந்திருக்கேன் ரமி, நமக்கு கல்யாணம் நடக்கலனா நம்ம பத்தி தப்பா பேசுவாங்க, இன்னும் மேல போய், போலிஸ், கம்ப்ளைன்ட்னு உங்கப்பா போனா ரிஸ்க். எந்த உரிமையும் இல்லாம உன் பக்கம் என்னால எப்படி நிக்க முடியும்?” என்றான். அவளுக்கு புரிய வைக்க முயன்று.

 

காதல், ஆசை, பிடித்தம் அடிப்படையில் திருமணம் நடக்கலாம். ஆனால் இங்கு அப்படி எதுவும் இல்லையே! சூழ்நிலை நிர்பந்தம்! மூச்சு முட்ட வைக்கும் அழுத்தத்தில் இந்த திருமணம்.

 

இத்தனை பிரச்சனைக்கும் ஒருவகையில் தானும் காரணம் என்ற எண்ணமே அவனை குற்ற கூண்டில் ஏற்றியது. ஆனால் அனுபவித்த தண்டனைகள் அனைத்தும் அவளுக்கு.

 

இன்னும் கூட அவளின் உதடு கிழிந்த காயம் ஆறாமல் இருக்க, இவனுக்குள் கிழிப்பு.

 

“சாரி ரம்யா… உன்ன இந்த இக்கட்டுல இருந்து இப்ப காப்பாத்தனும்றதை தவிர வேற எந்த எண்ணமும் இல்ல. நம்பி வா ப்ளீஸ்” அவன் குரல் கெஞ்சலில் இவளும் மறுவார்த்தை பேசவில்லை. அவன் அத்தனை சுலபமாக கெஞ்சுபவன் இல்லை என்பதும் இவள் அறிந்ததே. அவன் காட்டிய உள் அறைக்கு சென்று சேலை மாற்றி வந்தாள்.

 

கிட்டத்தட்ட அரைமணி நேரமாகி இருந்தது. படியாத சேலையை போராடி, உடுத்தி வெளியே வர. ‘இதுக்கே நாக்கு தள்ளுதே ரமி, இன்னும் என்னென்ன ஆகுமோ!’ அவளுக்குள் பதறியது.

 

வசீகரனை தேட, அவன் பட்டு வேட்டி, சட்டைக்கு மாறி, செல்போனில் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான். 

 

அவளை பார்த்ததும் ‘கிளம்பலாம்’ என்று தலையசைத்தவன், “இதோ கிளம்பிட்டோம்” என்று மொபைலை அணைத்துவிட்டு, வெளியே வந்து வண்டியை எடுக்க, ரம்யா ஏறிக் கொண்டதும் வேகமெடுத்தான். மிதமான வேகம் தான். அவன் மூளையின் அவசர பரபரப்பிற்கு மாறாக, அவன் மனம் நிர்சலனமாக இருந்தது. உள்ளே பரபரப்பு, தவிதவிப்பு, கலவரத்துக்கு நேர் மாறாக வெளியே வெகு நிதானத்தைக் காட்டினான். வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்வதை தள்ளிப்போட வண்டியின் வேகத்தை முடிந்த மட்டும் குறைத்தே செலுத்தினான். ஆனாலும் வர வேண்டிய இடத்திற்கு வந்தே விட்டனர்.

 

வடபழனி முருகன் கோயில் அவர்களை பக்தியோடு வரவேற்றது. அதன் பிறகு,  யோசிக்கவும் நேரமின்றி அடுத்தடுத்த சடங்கு முறைகளுடன், நண்பர்கள் புடைசூழ வசீகரன், ரம்யா திருமணம் இனிதாக முடிவுற்றது. 

 

தன் கழுத்தில் ஏறிய மங்கல நாண் தந்த புது உணர்வுடன் ரம்யா நிமிர்ந்து பார்க்க, அவர்களை சுற்றிலும் ஆணும் பெண்ணுமாக நண்பர்கள் வட்டம். அவளின் தோழிகள் சிலர் தான். மற்றவர்கள் எல்லாருமே வசீகரனின் நட்புக்கள். ஆண்களும் பெண்களுமாய் சுமார் இருபது பேருக்கும் மேலான இளமை வட்டம். அங்கே மூத்தோர், முதியவர், பெற்றவர்கள், பெரியவர்கள் என யாருமே இருக்கவில்லை. நிதர்சனம் புரிந்தும் ரம்யா மனம் சுணங்கியது.

 

“மண பொண்ணுக்கு மெட்டி பூட்டனும், மாப்பிள்ள பையன் சகோதரி வாங்கோ” ஐயர் அழைக்க, அங்கிருந்த ஒரு பெண்களும் அசையவில்லை.

 

“ஏய் நேரமாகுது யாராவது வாங்க பா” தேவா அழைத்தும், ம்ஹூம் யாரும் அசையவில்லை.

 

‘அடிபாவிகளா!’ என்று பற்களை கடித்துக்கொள்ள மட்டுமே முடிந்தது அவனால்.

 

“சுபா, உனக்கு தான் கல்யாணம் ஆகிட்டு இல்ல, வா” பாலா திருமணமான தோழியை அழைக்க, “ஆங் கல்யாணம் ஆகிட்டா, அதுக்காக என்னால வசிக்கு தங்கச்சியெல்லாம் ஆக முடியாது போடா” சுபா சொல்லவும் அங்கே கொல்லென்ற சிரிப்பலை.

 

“சரியா போச்சு போ, ரிஷா, தேவி, கீர்த்தி உங்கள்ல யாராவது வாங்க தெய்வங்களா” அன்பழகன் அழைக்கவும், “நாங்கெல்லாம் அவன் கல்யாணத்துக்கு வந்து அர்ச்சனை போட்டதே பெருசு, விட்டா அவனுக்கு ராக்கி கட்ட சொல்லுவீங்க போல, அதெல்லாம் முடியாது போங்கடா” மூவரும் ஒன்றே போல மறுத்தனர்.

 

“டேய் அன்பு, நம்ம செட் பொண்ணுங்களை கூப்பிட்டா எப்படி வருவாங்க, அதுங்கெல்லாம் வசிக்கு ஃபேன்கிளப் மெயின்டைன் பண்ண ஆளுங்க ஆச்சே” கரண் சொல்லவும்,

 

அன்பழகன், “அது அவன் முரட்டு சிங்களா இருந்தப்போடா, இப்போதான் கமீட் ஆகிட்டானே, இன்னும் என்ன?” அதற்கும் அங்க சிரிப்பு சத்தம் மட்டுமே.

 

தேவா, “பவி, தவா நீங்க ரம்யா ஃப்ரண்ஸ் தான, நீங்க வந்து நாத்தனார் முறை செய்யலாம் இல்ல” பவித்ரா, தவமணியை அழைக்க, ஒருவரை ஒருவர் பார்த்து விழித்து கொண்ட பெண்கள், வேகமாக மறுத்து தலையசைத்து ஒன்றே போல இளித்து வைத்தனர்.

 

“ஆத்தாடி நீங்களுமா!” யாரோ கூச்சலிட,  

அவர்களின் கலாட்டா பேச்சுக்களில் அந்த இடமே ரணகளம் ஆனது.

 

வசீகரன் தான் தன் தலையில் கைவைத்து கொண்டு ரம்யாவை திரும்பி பார்த்தான். புருவங்கள் நெளிய அவனை பார்வையிட்டவள், ‘அவ்வளோ பெரிய அப்பாடக்கரா நீ’ கண்களை சுழற்றி காட்ட, ‘கிழிஞ்சது’ என்று நொந்து கொண்டவன், “டேய் சும்மா இருங்கடா” வசீகரன் குரல் உயர்த்தி கூச்சலை அடக்கினான்.

 

“எம்மா பரதேவதைகளா, தாலி கட்டின உடன எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுக்க பிளான்‌ பண்ணாதீங்க யாராவது ஒருத்தர் வந்து தொலைங்க ப்ளீஸ்” அவன் கெஞ்சலாக கேட்ட விதத்தில் ரம்யா கூட சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட, அங்கே மேலும் சிரிப்பலை கூடியதே தவிர ஒருத்தியும் வந்தபாடில்லை.

 

“பசங்களா நேக்கு நாழியாகுது யாராவது வறீங்களா இல்லயா” ஐயர் பொறுமையிழந்து குரல் கொடுக்கவும், 

 

“சாமி வேற யாரும் வர தேவையில்ல. என் பொண்டாட்டிக்கு நானே மெட்டி போடுறேன் தாங்க” வசீகரன் கடுப்பாகி அவரிடம் கை நீட்டினான்.

 

“நான் செய்யலாமா அண்ணா?” அங்கே தயங்கி ஒரு குரல் கேட்க அனைவரின் பார்வையும் ஒட்டு மொத்தமாக அந்த பெண்ணிடம் மோதி நின்றது. அவள் ரம்யாவின் கல்லூரி தோழி ஜெனிஃபர். பவித்ரா, தவமணி உடன் வந்திருந்தாள்.

 

அவளின் தயக்கம் வசீகரன், ரம்யாவிற்கு புரிந்தது. “இதுலென்ன இருக்கு ஜெனி, நீயாவது எனக்கு தங்கச்சியா வந்தியே வா மா” என்றழைத்தான் வசீகரன் புன்னகை விரிய.

 

“எப்பா கடைசியா வசிக்கு தங்கச்சி கிடச்சாச்சு பா” என்று யாரோ சத்தமிட, மறுபடி எழுந்த சிரிப்பலையின் ஊடே ரம்யாவின் பொன் விரல்கள் மெட்டி பூட்டிக் கொண்டன.

 

பெரியவர்கள் இல்லை என்ற குறை தவிர, வேறு குறையின்றி முழு சடங்குகளோடு நிறைவாக திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தான் வசீகரன். திருமணம் முடிந்து சன்னதியில் வடிவேலனை மனமாற வணங்கி ஆசி பெற்று வெளிவந்தனர். 

அருகிருந்த உணவகத்தில் திருமண விருந்தை முடித்துக் கொண்டதும், மணமக்களிடம் வாழ்த்தை பகிர்ந்து கொண்டு நண்பர்களும் விடைப்பெற்று கொண்டனர்.

 

“அடுத்தெங்க டா?” தேவா கேட்க, “வீட்டுக்கு தான் போகனும்” வசீகரன் சொல்லிவிட்டு ரம்யாவை பார்க்க, அவள் சம்மதமாக புன்னகைத்தாள்.

 

மறுபுறம் திவாகர், நவீன் குமார் வீட்டிற்கு நிச்சயதார்த்தம் நடக்காது என்று தகவல் சொல்லிவிட்டு இடிந்து அமர்ந்து இருந்தார். பைரவி புலம்பி அழுது அரற்றி ஓய்ந்து போயிருந்தார். தாமதமாக எழுந்த வந்த திவ்யாவிற்கு தாமதமாக தகவல் தெரிய அதிர்ச்சியாகி நொந்துபோனாள். வசீகரன் செயலின் தாக்கம் சசிதரன் மீதான அவளின் கோபத்தை இன்னும் அதிகமாக்கியது.

 

வசீகரன், ரம்யா திருமணம் முடிந்த தகவல் அறிந்து, வசீகரனின் வீடும் உடைந்து போயிருந்தது. சாவித்ரி பாட்டி பூஜை அறையில் அழுது புலம்ப, மேகவாணி செல்ல மகனை எண்ணி கலங்கி துவண்டிருந்தார். சசிதரனுக்கு இன்னுமே மனம் ஆறவில்லை. தன் பேச்சை மீறி தம்பி வீட்டைவிட்டு வெளியேறியதோடு திருமணத்தையும் முடித்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கெல்லாம் மூலகாரணம் திவ்யா தான் என்று மனைவி மேலான ஆத்திரத்தை மேலும் வளர்த்துக் கொண்டான்.

 

பெற்றவர்களின் வருத்தத்தையும் கண்ணீரையும் தாங்கி, இணைந்த இளையவர்கள் புது வாழ்க்கையின் தொடக்கமான அந்த வீடோ, அவர்களை பாவமாக வரவேற்றது!

 

***

 

காதல் கூத்து கட்டும்…