காதலில் கூத்து கட்டு 18

IMG-20210202-WA0002-f267d10a

காதலில் கூத்து கட்டு 18

 

“டேய் என்னடா இது, இப்படியொரு வீடு எடுத்து இருக்க?” வீட்டின் உள்ளே நுழைந்ததும் தேவாவின் கேள்வி இதுவாக தான் இருந்தது.

 

“அவசரத்துக்கு இந்த ஏரியால இந்த வீடு கிடைச்சதே பெரிய விசயம் டா” வசீகரன் சொன்னான். எண்ணி இரண்டு நாட்கள் தேடலில் இந்த வீடு அமைந்ததே பெரிதாக தோன்றியது அவனுக்கு.

 

“அதுக்காக இப்படியா வீடு எடுப்ப? கொஞ்சம் வசதியா எடுத்து இருக்கலாம் இல்ல, பாவம்டா அந்த பொண்ணு” தேவா ஆதங்கமாக சொல்லவும், 

 

“அவ புரிஞ்சுப்பா டா, கொஞ்ச நாள் அட்ஜெஸ்ட் பண்ணிட்டு தான் ஆகனும், இப்ப வேற வழி இல்ல” என்று சொல்லி, வசீகரன் ரம்யாவை திரும்பி பார்க்க, அவள் வீட்டின் வெளியே நின்று சுற்றும் முற்றும் மிரண்டு பார்த்திருந்தாள்.

 

“ரமி, என்ன அங்கேயே நிக்கிற,‌ இங்க யாரும் நமக்கு ஆரத்தி எடுக்க மாட்டாங்க உள்ள வந்து பாரு” என்றழைக்க, அவளும் அமைதியாக உள்ளே வந்தாள். 

 

சற்று பழையதாக தெரிந்த அந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் இரண்டாவது வீடு இவர்களுடையது. வீட்டின் உள்ளே நுழைந்ததும் வலப்பக்கம் சிறிய சமையலறை, அதையடுத்து ஒற்றை படுக்கை அறை, சிறிய ஹால், அதை ஒட்டினாற் போன்ற குளியலறை இருந்தது. மிக சிறிய வீடு. இரண்டு பேருக்கு போதுமானது தான் என்றாலும் பழைய வீடாக தெரிந்தது. தரைகூட சிமெண்ட் தரை தான். ‘டெய்ல்ஸ் இல்லாத வீடுகள் இப்போதும் இருக்கா’ என்று நினைத்துக் கொண்டாள் ரம்யா.

 

“உனக்கு வசதிபடுமானு உள்ள போய் பாருமா” தேவா சொல்ல, அதற்கும் தலையாட்டி விட்டு, ஒவ்வொரு அறையாக சென்று பார்க்கலானாள்.

 

இரண்டு பேர் சேர்ந்தாற்போல் நிற்கும் அளவே இருந்தது சமையலறை. அதையடுத்து படுக்கை அறை, எந்த பொருட்களும் இல்லாமல் இருப்பதால் சற்று பெரிதாக தான் தெரிந்தது. அடுத்து குளியலறை. தயங்கி உள்ளே எட்டி பார்த்தாள். இன்டியன் வகை டாய்லெட் தான். சுத்தமாகவே இருந்தது. சற்று நிம்மதியாக திரும்பியவள் அதிர்ந்து விட்டாள்.

 

“ஐயோ வசீ, இங்க வா” ரம்யாவின் கத்தலில் பதறி ஓடி வந்தான்.

 

“என்ன?”

 

“பாத்ரூம் டோர்ல லாக் இல்ல” என்று சங்கடமாய் உதட்டை பிதுக்கினாள்.

 

“வாட்?” கதவை ஆராய்ந்தவன்‌ அதில் உள் தாழ்ப்பாள் இல்லாததைக் கவனித்து நெற்றியில் அடித்து கொண்டான். “ச்சே இதை கூடவா பார்க்க மாட்டாங்க, அட்வான்ஸ் மட்டும் அடிச்சு பேசி வாங்கிகிட்டாங்க” வசீகரனுக்கு எரிச்சலானது.

 

தொடர்ந்த‌ இந்த ஒருவார அழுத்தம், நெருக்கடியான திடீர் திருமணம்,  தனிக்குடித்தனம் என்று கழுத்தை முட்டும் செலவுகளும் உளைச்சல்களும் அவனை தவிக்க செய்திருந்தது.

 

“என்ன அப்படியே நின்னுட்டு இருக்க வசீ” ரம்யா அவனை கலைக்க,

 

“ப்ச் என்ன செய்ய சொல்ற?”

 

“நீ பையா படம் பார்க்கல, அதுல தமன்னாக்கு கார்த்திக் ஆன்டனா கம்பி வளைச்சு தாழ்ப்பாள் ரெடி பண்ணி கொடுப்பான் இல்ல”

 

அவளின் விளக்கத்தில் இவன் கடுப்பாகி, “இப்ப என்ன நானும் அதேமாதிரி செய்யனுமா?” அவன் சிடுசிடுப்பாக கேட்க, இவள் ஆமேன்று மேலும் கீழும் வேகமாக தலையாட்டி வைத்தாள்.

 

“ஏய் உன்னல்லாம்” என்று கடுப்பாக முறைத்து அவளை நெருங்க, அவள் பயந்து ஓரெட்டு பின்வாங்கிக் கொண்டாள்.

 

“இப்ப யாரு ஆன்டனா யூஸ் பண்றாங்க? நான் எங்கனு தேடி அந்த கம்பிய களவாண்டு வரது?”

 

“இல்ல, அதுமாதிரி வேற கம்பி ஏதாவது” அவள் இழுக்க,

 

“வேணாம் என்னை கடுப்பேத்தாத”

 

“லாக் இல்லாம எப்படி பாத்ரூம் யூஸ்‌ பண்றதூஉ” இதற்கும் ராகம் இழுத்தாள்.

 

“அம்மா மாதேவி, இன்னைக்கு ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, நாளைக்கு லாக் வாங்கிட்டு வந்து நானே பிக்ஸ் பண்ணிறேன், போதுமா” அவன் சொல்ல, அவன் சிடுசிடு முகமாற்றம் கவனித்து இவளும் சரியென்று தலையசைத்துக் கொண்டாள். ஆனாலும் உள்ளுக்குள் நெருடலானது. தாழ்ப்பாள் இல்லாமல் எப்படி? மனம்‌ முரண்டியது. நினைத்து பார்க்கவே மிகவும் சங்கடமாக உணர்ந்தாள்.

 

மாலை வருவதாக கூறி தேவா விடைப்பெற்றதும், ஹாலில் இருந்த பிளாஸ்டிக் இருக்கையில் ஓய்ந்து‌ அமர்ந்து விட்டான் வசீகரன். அந்த வீட்டில் இரண்டு பிளாஸ்டிக் இருக்கைகள் மட்டுமே இப்போது இருந்தன. தலையை தாங்கிக் கொண்டு அவன் உட்கார்ந்து இருந்த தோற்றம் இவளையும்‌ கவலை கொள்ள செய்வதாய். 

 

“வசி”

 

“ம்ம்”

 

“இந்தா வாங்கிக்கோ” என்று அவள் நீட்டியதை தலை நிமிர்த்தி பார்த்து நெற்றி சுருக்கினான்.

 

“இது என்னோட செயின், வளையல். ரெண்டுமே கோல்ட் தான், எனக்காக நீ இவ்வளோ கஷ்டபட வேணாம், அந்த சனிய புடிச்சயவன்கிட்ட சிக்கவிடாம என்னை காப்பாத்தி மீட்டு வந்தியே அதுவே ரொம்ப பெரிய விசயம், அதுக்கே உனக்கு நான் பெரிய நன்றி சொல்லனும், 

 

இதையெல்லாம் வித்து என்னை ஏதாவது லேடிஸ் ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டுடு. அப்படியே பார்ட் டைம் ஜாப் ஒன்னு வாங்கி கொடுத்தா மட்டும் போதும். நான் காலேஜ் போயிட்டு வேலை பார்த்துட்டு சமாளிச்சுக்குவேன்” ரம்யா தீவிரமாக சொல்லவும், இவன் முகம் இளகியது. மனதின் அழுத்தங்கள் இதமாய் வடியும் உணர்வு அவனுள்.

 

அவள் தலையில் தட்டியவன், “நான் சொன்னேனா உன்ன பார்த்துக்கிறது எனக்கு கஷ்டம்னு, என்னை நம்பி என்கூட வந்த உன்ன நல்லபடியா பார்த்துக்கனும்ற டென்ஷன் தான் எனக்கு” என்றவன் அவளை தன்னெதிரே இருக்கையில் அமர சொன்னான்.

 

அவள் கையில் வைத்திருந்த நகையை அவளின் கையோடு சேர்த்து‌ மடித்து‌ பிடித்துக் கொண்டவன், “நேத்து வரைக்கும் நமக்கு எல்லாமுமா இருந்த குடும்பம் இப்ப இல்ல ரம்யா, அவங்க யாருக்கும் நாம இப்ப தேவயில்லாதவங்களா ஆகிட்டோம், இந்த நிமிசத்துல இருந்து உனக்கு நான் மட்டும் தான், எனக்கு நீ மட்டும் தான், சோ இங்க எவ்வளோ கஷ்டம் இருந்தாலும் நமக்கு நாமே சப்போட்டா இருக்கனுமே தவிர‌… இப்படி பிச்சுக்கிட்டு தப்பிச்சு எல்லாம் ஓட கூடாது புரியுதா” அவன் நிதானமாக சொல்ல, அவன் முகத்தை வியப்பாய் பார்த்து விழி விரித்தவள், “நீ இவ்வளோ நல்லவன்னு இதுவரைக்கும் எனக்கு தெரியாம போச்சே வசி” என்றாள் புருவங்கள் உயர.

 

“இன்னும் என்னை பத்தி நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு செல்லம்” தன் சட்டை காலரை தூக்கி விட்டு கொண்டவன், “இப்ப இந்த நகையை நீயே போட்டுக்கோ, அப்புறம் ஏதாவது செலவுக்கு தேவப்பட்டா வித்துக்கலாம்” வசீகரன் விளையாட்டாக சொல்ல, “அட பக்கி” என்று முறைத்தவள் அவன் தலையில் கோபமாக கொட்டினாள்.

 

“என்னடி கொட்ற, வலிக்குதுடீ ராட்சசி”

 

“பின்ன கொஞ்சுவாங்களா உன்ன?”

 

“அய்யோ வேணா ஆத்தா, நீ இன்னும் கூட கொட்டிக்கோ, கொஞ்சலுக்கு கொட்டலே தேவல” வசீகரன் பதற, அவனை முறைத்தபடி இரண்டு கொட்டுகள் கொட்டி விட்டே அமர்ந்தாள்.

 

வலித்த மண்டையை தேய்த்து கொண்டவன், “பிசாசு உன்ன நம்பி வந்த பையனை இப்படி கொடுமை செய்யறியே தகுமா உனக்கு” என்று அலற்றினான்.

 

“போடா, நீதான் சாப்பாடு கூட போடாம கொடுமை பண்ற, எனக்கு ரொம்ப பசிக்குது டா” அவள் வயிற்றை தேய்த்துக் கொண்டு முகம் சுருக்க, அப்போதுதான் மணியை பார்த்தான். அது மதியம் இரண்டு மணி காட்டியது. 

 

“சாரிடி, நான் டைம் கவனிக்கல, பத்து நிமிசம் வெயிட் பண்ணு நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வந்துறேன்” என்று வெளியே வந்தவன், “கதவை லாக் பண்ணிக்கோ ரமி. வந்துறேன்” என்று குரல் கொடுத்து விரைந்து சென்றான்.

 

அவன் சென்ற வழி பார்த்து நின்றிருந்த இவளுக்குள் என்னவென்று புரியாத இதமான உணர்வு!

 

***

 

அன்று மாலையிலேயே வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் வந்து இறங்கின. 

 

கேஸ் அடுப்பு, சமையல் பாத்திரங்கள், மிக்ஸி, ஃபிரிட்ஜ், தொலைக்காட்சி, வாஷிங்மிஷின், மெத்தை என இறக்கி வைத்த ஒவ்வொன்றையும் கண்கள் விரிய பார்த்து நின்றாள் ரம்யா.

 

“என்ன ண்ணா, ஒரே டைம்ல இவ்வளோ திங்க்ஸ் வாங்கி இருக்கீங்க?” அவள் தேவாவிடம் கேட்டு விட, 

 

“இதெல்லாம் இல்லாம எப்படிமா நீங்க குடும்பம் நடத்த முடியும்? ஏதாவது மிஸ்ஸாகி இருந்தா பார்த்து சொல்லுமா, வாங்கிடலாம்” தேவா சொல்லிவிட்டு பொருட்களை அடுக்கி வைக்க வசீகரனுக்கு உதவி செய்யலானான்.

 

இப்போது பார்க்க வீடு ஓரளவு நன்றாக தெரிந்தது. “இவ்வளோ‌ போதும் தேவா. மீதி நாங்க பார்த்துக்கிறோம்” வசீகரன் சொல்ல, “சரிடா. நாளைக்கு பால் காச்சி குடித்தனம் ஆரம்பிங்க, இப்போ என்னோட வீட்டுக்கு வாங்க, அம்மா, ரெண்டு தடவ கால் பண்ணிட்டாங்க” என்று தேவா அவசரப்படுத்தி அவர்களை அழைத்து சென்றான். 

 

தேவாவின் வீட்டில் புது மணமக்களுக்கு தடபுடலான விருந்து அமர்க்களப்பட்டது. அவர்களின் வாழ்த்தையும் சில பல திட்டுகளையும் பெற்று கொண்டு வசீகரன், ரம்யா விடைப்பெற்று கிளம்பி வந்தனர்.

 

முன்னிரவு மெல்ல மெல்ல ஏறிக் கொண்டிருந்தது. அறைக்குள் கட்டிலின்றி தரையில் மெத்தையிட்ட வசீகரன், “செம‌ டயர்ட் ரமி, மெயின் டோர் லாக் பண்ணி இருக்கானு ஒன் டைம் செக் பண்ணிட்டு வந்து படுத்துக்கோ, ப்ளீஸ்” என்று சொல்லி விட்டு சோர்வாக படுத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான்.

 

அவன் சொன்னது போலவே கதவை பார்த்து விட்டு, விடி விளக்கை எரிய விட்டு வந்தவளுக்கும் சோர்வாக தான் இருந்தது. ஆனால் உறக்கம் வருமா என்பது சந்தேகம் தான்.

 

“என்ன யோசனை ரமி, நேரமாச்சு பாரு படுத்து தூங்கு” வசி கண்கள் திறக்காமல் அவளிடம் சொல்ல,

 

“எனக்கு இப்ப தூக்கம் வரும்னு தோனல வசி, நீ தூங்கு” ரம்யா சொல்லவும் அவளை விழித்து பார்த்தவன், “ஏன்? என்னாச்சு டா? ஆர் யூ ஓகே” வசீகரன் கேட்க,

 

“ஒன்னுமில்ல, என்னவோ போல இருக்கு தெரியல” என்று நின்றபடி பதில் தந்தவளை அமர சொன்னவன், “உடம்புக்கு ஏதாவது செய்யுதா?” வாஞ்சையாக வினவினான். 

 

இல்லையென்று தலையசைத்தவள், “மனசுக்கு தான் என்னவோ மரமரனு… சொல்ல தெரியல” என்றாள்.

 

“உன் வீட்டு ஞாபகம் வந்திடுச்சா?” அவன் கேட்க,

 

“ம்ம் அப்பா எப்பயும் போல கோபமா இருப்பாரு தெரியும், ஆனா அம்மா, அவ்வளோ சீக்கிரம் உடைஞ்சு அழ மாட்டாங்க, காலையில நான் வரும்போது அழுதுட்டாங்க, அப்பவே கஷ்டமாகிடுச்சு, இப்ப எப்படி இருக்காங்கனு தெரியல” அவள் மனம் வெதும்பியது.

 

அவளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் தேடியவனுக்கு, தன் அம்மாவின் ஞாபகமும் சேர்ந்து வந்து அழுத்தியது.

 

‘லவ் பண்ணல லவ் பண்ணலனு சொல்லிட்டு, இப்ப அவளை கல்யாணம் பண்ணிக்கிறனு வந்து நிக்கிற இல்ல’ மகனை கன்னம் பழுக்க அறைந்துவிட்டு மேகவாணி கொதித்து பேசியது நினைவு வர, அறை வாங்கிய தன் கன்னத்தை தேய்த்துக் கொண்டான் வசீகரன்.

 

ரம்யாவின் கட்டாய திருமண நிலையையும் தன் முடிவின் காரணத்தையும் அவன் விளக்க முயன்றும் அவர்கள் யாருக்கும் காது கொடுத்து கேட்கும் பொறுமை இருக்கவில்லை.

 

‘ரமி யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்படி போனா உனக்கென்ன? அவளை கட்டிட்டு கஷ்டப்படனும்னு உனக்கு என்ன வந்தது?’ சசிதரனின் இந்த கேள்வியை வசீகரன் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

“வசி கண்ணா, அந்த பொண்ணுக்கு ஏதோ உடம்பு கோளாறாம். உனக்கு என்னடா தலையெழுத்து அந்த பொண்ண கட்டிக்கனும்னு, அந்த சிளுக்கி மவ உன்ன மயக்கி வச்சிட்டாடா? பெரியவன் நிம்மதியை அவ அக்கா கெடுத்தது பத்தாதுனு சின்னவ உன்ன குலைக்க பார்க்குறாடா, வேணாம் ராசா” தன் பாட்டியும் ரம்யாவை தூற்றி பேச, வசீகரன் நொந்து தான் போனான்.

 

தொடர்ந்து எடுத்துச் சொல்லி இவன் புரிய வைக்க முயன்றும் பலனில்லை. ‘வசீ நீ உன் முடிவில இருந்து மாறலன்னா, உன் லோனுக்கு ஸூரிட்டி சைன் நான் போடமாட்டேன், ஒழுங்கா உன் வேலையை மட்டும் பாரு’ அண்ணனின் கடைசி மிரட்டலில் வசீகரனுக்கு சீ போ என்றாகிவிட்டது.  

 

அப்போதே தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான். ‘கிளிக்கர்ஸ்’ அலுவலக அறையில் தங்கிக் கொண்டு, ரம்யாவிற்கு தந்த வாக்கினை நிறைவேற்ற முழு முயற்சியை மேற்கொண்டு யார் உதவியும் இன்றி திருமணத்தையும் குறைவின்றி முடித்தும் விட்டான். இத்தனையும் தாண்டி அவன் மனதில் இப்போது ஒரு நிம்மதி வந்திருந்தது. அதன் காரணம் அவனுக்கும் புரியவில்லை.

 

“ஏன் திடீர்னு அப்படி கேட்ட வசீ?” ரம்யாவின் கேள்வி அவனை திருப்பியது.

 

மெத்தையில் ஒரு முனையில் அவன் மல்லாந்து படுத்திருக்க, மறு முனையில் இவள் குத்திட்டு உட்கார்ந்து இருந்தாள்.

 

“எப்படி கேட்டேன்?” அவள் கேள்வி விளங்காது திருப்பி கேட்டான்.

 

“அதான், திடீர்னு வந்து நாம கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டியே? உனக்கு என்னை அவ்வளோ பிடிக்குமா?” அவள் இப்போதும் நம்ப முடியாத பாவனையில் கேட்க,

 

இல்லையென்று தலையசைத்தவன், “நீ ஃபோன்ல சொன்னல்ல, ‘என்னாலயும் சந்தோசமா வாழ முடியும்னு வாழ்ந்து காட்ட ஆசப்பட்டேன்’னு அது என்னவோ மனசை அரிச்சது. உனக்கு ஒரு சின்ன சப்போர்ட் மட்டும் இருந்தா போதும் நீ உன் லைஃபுல ஜெயிச்சிடுவனு தோனுச்சு. அந்த சப்போர்ட்டா நானே இருக்கலாம்னு முடிவெடுத்து தான் கேட்டேன். அதுவும் அந்த சொட்டயனோட உன்ன‌ சேர்த்து பார்க்கவே சகிக்கல எனக்கு” கடைசியில் வசீகரன் முகங் கடுக்க சொன்னதும் இவள் கிண்கிணியாய் சிரித்து விட்டாள்.

 

“சரி, நான் கேட்டதும் நீ எப்படி உடனே ஓகே சொன்ன?” அவன் இடது புருவம் உயர்த்தி வளைத்து அவளை கேட்க,

 

“சிம்பிள், அந்த சொட்டயனுக்கு நீ பெட்டரா இருந்த அதான் டக்குனு ஓகே சொல்லிட்டேன்” என்று கைகள் விரித்து சொன்னவளை முறைத்து வைத்தான்.

 

“அது மட்டும் தான் ரீசனா?” அவன் விடாமல் கேட்க, 

 

“ஆமா, வேறென்ன இருக்கு?” அவளும் அசட்டையாக கேட்டாள்.

 

“இந்த ஹான்சம் வந்து ப்ரோபோஸ் பண்ணதும் உன்னால மறுக்க முடியலன்ற உண்மைய சொல்லு” வசீகரன் கண் சிமிட்டி சீண்டலுடன் சொல்ல,

 

“ஐயடா ரொம்ப தான். அப்படி எல்லாம் ஒன்னுமில்ல போ போ” ரம்யா வாயை கோணிக் காட்டினாள்.

 

அதை பார்த்து வசீகரன் வாய்விட்டு சிரிக்க, அவனை விழி அகற்றாமல் பார்த்தவள், “அம்மா, அப்பா, அக்கானு எல்லாரும் அவங்க பிடிவாதத்துலயே நின்னாங்க, யாருமே என்னைப்பத்தி நினச்சு பார்க்கல, இத்தனைக்கும் எனக்காக ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து மெனக்கெட்டு செய்யறவங்க, கல்யாண விசயத்துல மட்டும் ஏன் இப்படி புரிஞ்சிக்காம நடந்துக்கிறாங்கனு எனக்கு சுத்தமா புரியல. மொத்தமா உடைஞ்சு போயிருந்தேன் தெரியுமா? அப்பதான் நீ எனக்காக தவாவ அனுப்பி வீடியோ கால்ல பேசினயில்ல, எனக்கு நம்பிக்கை சொன்னயில்ல, எனக்கு அப்ப உயிர் மீண்ட மாதிரி இருந்துச்சு, எனக்காக நீ மட்டுமாவது யோசிக்கிறனு தோனுச்சு” ரம்யாவின் இமைகள் ஈரமாகின.

 

“ரமி ரிலாக்ஸ்” வசிகரன் அவளுக்கு சமாதானம் சொல்லியும் அவள் முகம் தெளிவதாக இல்லை.

 

“அப்ப பொண்ணுங்க நீங்க எமோஷனல் ஃபூல்ஸ் தான் இல்ல? என்னோட ஒரேயொரு ஃபோன்கால்ல எனக்கு ஓகே சொல்லி இருக்க ம்ம்?” அவன் அவளை உசுப்பேற்றிவிட, 

 

கண்களை துடைத்துக் கொண்டவள், “எல்லா பொண்ணுங்களும் அப்படியில்ல, முக்கியமா நான் ஃபுல் இல்ல. நீ என்னை லவ் பண்றேன்னு உருகி இருந்தா கண்டிப்பா உனக்கு ஓகே சொல்லி இருக்க மாட்டேன், எந்த மொழுகலும் இல்லாம கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்ட, நான் சம்மதம் சொன்ன அப்புறமும் என்னை ஹக் பண்றது கிஸ் பண்றதுன்னு கோமாளித்தனம் பண்ணாம நார்மலா பிஹேவ் பண்ணியே எனக்கு பிடிச்சு இருந்தது” வேகமாக சொல்லிவிட்டு சின்னதாய் இதழ் விரித்தாள்.

 

“அட ஆமால்ல, நீ ஒகே சொன்னதும் ஹக் பண்ணி இருக்கனும் இல்ல, ச்சே ச்சே எனக்கு தோனாம போச்சே” வெகுவாக அவன் அலுத்துக் கொண்டதில் ரமி இன்னும் கிளுக்கி சிரித்தாள்.

 

“ஏய் வாலு, சான்ஸ் கிடைச்ச உடனே பாயறத்துக்கு பேரு லவ் இல்ல, அதுக்கு பேரு வேற, முதல்ல நீ உருப்படியா படிக்கிற வழியை பாரு, நான் ஒழுங்கா ஸ்டூடியோ வேலைய பார்க்கிறேன், இப்ப நேரமாச்சு படுத்து தூங்கு” என்று வசீகரன் சிரிப்புடனே அதட்டவும், ரம்யா சமத்தாக படுத்துக் கொண்டாள்.

 

எதிரெதிரே இருவரும் முகம் பார்த்தபடி படுத்து இருந்தனர்.

 

“கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா, ரூம்க்கு ஏசி, கட்டில் வாங்கிடலாம், இப்ப உன்னோட மெடிசின், காலேஜ் ஃபீஸ்க்கு கை கடிக்க கூடாதில்ல அதான்” கணவனாய் குடும்ப நிதி நிலைமையை மனைவிக்கு எடுத்து சொல்ல,

 

“சொல்ல மறந்துட்டேன் வசீ, என் அக்கௌன்ட்ல கூட அமௌன்ட் இருக்கு, அதை யூஸ் பண்ணா கூட அப்பா ஒன்னும் சொல்ல மாட்டாரு” என்றாள், அவன் சுமையை உணர்ந்து.

 

அதற்கு புன்னகைத்தவன், “பரவால்ல அதை பத்திரமா வச்சுக்க, என் மாமனாருக்கு ஞாபகம் வந்து கணக்கு கேட்கும்போது சொல்லனுமில்ல” என்றான் கொட்டாவி விட்டபடி.

 

“போடா, அப்பா அதெல்லாம் கேக்க மாட்டாரு” ரம்யா வீம்பாக சொல்லவும், வசீகரன் புன்னகை இன்னும் விரிந்தது. அவன் சோர்ந்த கண்களும் சிரிப்பில் மின்னின.

 

“இளிக்காத, கண்ணமூடி தூங்கு” என்று அதிகாரமாக சொன்னவள், தன் இமைகளை இறுக மூடி கொண்டாள்.

 

“குட் நைட்” என்று விட்டு வசீகரனும் வாகாய் திரும்பி படுத்துக் கொண்டு உறங்க முயன்றான்.

 

இளையவர்கள் இதமான உறக்கத்தில் ஆழ்ந்து போகவும், அவர்கள் வீட்டு பெரியவர்கள் கனமான வேதனையில் உழன்று உறக்கம் தொலைத்து இருந்தனர்.

 

***

 

காதல் கூத்து கட்டும்…