காதலில் கூத்து கட்டு 19

IMG-20210202-WA0002-b359cece

காதலில் கூத்து கட்டு 19

காதலில் கூத்து கட்டு 19

 

மறுநாள் விடியற்காலை சுபவேளையில் புது பாத்திரத்தில் பொங்கி வழியும் பசும்பாலை அதிசயமாக பார்த்து முகம் மலர்ந்தாள் ரம்யா.   

 

அவளை நெற்றி சுருங்க கவனித்த வசீகரன், “இதுவரைக்கும் பால் பொங்கினதை நீ பாத்ததே இல்லையா என்ன?” என்று சந்தேகமாக கேட்கவும், உதட்டை பிதுக்கியவள், “இல்லயே, இப்பதான் ஃப்ர்ஸ்ட் டைம் பார்க்குறேன். நல்லாயிருக்கு இல்ல”

 

“என்னாதே நல்லாயிருக்கா… ஏய்ய்ய் அப்ப கிட்சன்ல உனக்கு ஒன்னுமே தெரியாதா?” அடைத்த தன் நெஞ்சை பிடித்தபடி அவன் பதற, “தெரியாது வசி, நீ சொல்லி தா, நான் கத்துப்பேன்” என்று சமத்தாக சொல்லியவளை பார்த்து சூடேறிய தலையை வேகமாக ஆட்டிக் கொண்டவன், “உஃப்” என்று வாய்வழி காற்றை உதறி விட்டான்.

 

“முதல்ல சாமி கும்பிடலாம் வா, அந்த கடவுளாவது என்னை காப்பாத்தட்டும்” என்ற வசீகரன் காய்ச்சிய பாலை தம்ளரில் ஊற்றி எடுத்து வந்து பூஜை மாடத்தில் வைக்க, ரம்யா விளக்கேற்றி அவளுக்கு தெரிந்த மட்டும் பூசை செய்தாள்.

 

குழந்தை வேலனின் படமும், மலர் மாலையும், காமாட்சி அம்மன் விளக்கின் ஒளியும், ஊதுபத்தி, கற்பூர வாசமும் அந்த சிறு மாடத்தை நிறைத்து வீடெங்கும் பக்தி மணம் கமழச் செய்வதாய்.

 

இரு கரங்கள் கூப்பி உளமாற வணங்கி நின்றவர்கள் மனதில் எந்த வேண்டுதலும் இருக்கவில்லை. தாயின் நிழலில் ஒதுங்கி ஒட்டிக்கொள்ளும் பிள்ளைகளாய் இறைவனின் நிழலில் தஞ்சமாயினர் அவ்வளவே. இமைகள் திறந்ததும் நான்கு கண்களும் ஆதுரமாய் சந்தித்துக்கொண்டன. 

 

ரம்யா, “தேங்க்ஸ் வசீ” என்றாள் மென்மையாய்.

 

“எதுக்கு, இந்த தேங்க்ஸ்?” என்றான் அவனும்.

 

“எல்லாத்துக்கும்” என்றவளின் நெற்றியை முட்டியவன், “உன் தேங்க்ஸ்ஸ நீயே வச்சுக்கோ இப்ப காஃபி குடிக்கலாம் வா” என்று நகர்ந்து இருவருக்கும் குளம்பி கலக்கலானான். 

 

“ஐய் வசீ உனக்கு சமைக்க தெரியுமா?” ரம்யா ஆர்வமாக கேட்டு அவன் பின்னே வர,

 

“ம்ம் ஓரளவு தெரியும்” என்று அவளிடம் காஃபி கோப்பை ஒன்றை தந்து விட்டு தானும் பருகினான். 

 

சூடான காஃபியை ஊதி ஊதி ஒரு மிடறு பருகியவள், “ம்ம் நல்லாயிருக்கு, சூப்பர்” என்று அவனுக்கு பாராட்டை தரவும், 

 

“சீக்கிரம் நீயும் காஃபி போட கத்துக்கனும் ரமி” என்று வசீகரன் குட்டு வைத்தான். இதெல்லாம் தன்னால் செய்ய முடியுமா என்று அவளுக்கே அவள் மீதுஈஎ சந்தேகம் வந்து போனது!

 

அவர்கள் வீட்டில் அவளுக்கு தேவையான உணவு வகையை சொன்னால் மட்டும் போதும், அது அவளுக்கு கிடைத்து விடும். அதன் செய்முறை பற்றி எல்லாம் இதுவரை யோசித்ததில்லை. இனி?

 

“உன்னோட டயட் சொல்லு ரமி, அதுக்கேத்த மாதிரி சமைக்கலாம்” வசீகரன் கேட்கவும் கவனம் திரும்பியவள், “அப்படி எதுவும் இல்லயே, எல்லாமே சாப்பிடலாம். நான் சாப்பிடுற ஃபுட் அளவுக்கு ஏத்தமாதிரி மருந்து எடுத்துக்கனும் அவ்வளவு தான்” என்றாள்.

 

“அதெப்படி அளவு கணக்கு வச்சுக்குவ?” அவன் கேட்கவும்,

 

“ம்ம் அதுக்கெல்லாம் தனியா அட்டவணை இருக்கு அதை மைண்ட்ல வச்சு தான்”

 

“ஓஹ் ஓகே” என்று அவள் சொன்னதை அவன் யோசிக்க,

 

“வசீ, என்னை பேஷன்ட் போல டிரீட் பண்ணாத ப்ளீஸ்” அவள் சிணுங்கினாள். 

 

“அப்படி எல்லாம் கனவு காணாதீங்க மேடம், வீட்டு வேலையெல்லாம் நாம தான் ஷேர் பண்ணி செய்யனும்” வசீகரன் சொல்லி எழுத்துக் கொள்ள, “ஆங்” என்று விழித்தாள். 

 

முதல் நாள் நடைபழகும் குழந்தை தாயின் பின்னோடே நடப்பதை போல அவன் பின்னோடே வந்து அவன் செய்யும் வேலைகளை கவனித்தபடி சுற்றிக் கொண்டிருந்தாள் ரம்யா அந்த சிறு கூட்டிற்குள்.

 

சின்ன சின்ன வேலைகளை கூட ரம்யாவிற்கு வசீகரன் சொல்லி கொடுக்கும்படி ஆக, முதலில் சலித்தவன், பின்பு, கடுப்பாகி அவளுக்கு மாமியாராகி போனான்.

 

“அப்படியில்ல ரமி, ஒழுங்கா செய், ம்ஹூம் இது சரிவராது நீ நகரு, நானே செய்றேன். நீ ஒழுங்கா கவனிச்சுக்கோ” என்று பால் பாத்திரத்தை கழுவி வைத்து, கையோடு மற்ற பாத்திரங்களையும் கழுவி முடித்து அடுக்கினான். 

 

மளிகை பொருட்கள் அனைத்தையும் எடுத்து டப்பாக்களில் அடைத்து அடுக்கி வைக்கவே அரைநாள் கழிந்தது அவர்களுக்கு! இல்லை வசீகரனுக்கு.

 

உப்புக்கும் சீனிக்கும் கூட வித்தியாசம் தெரியாதவளை கண்டு நொந்து தான் போனான். அதுவும் ஒவ்வொன்றுக்கும் அவள் தெரியாமல் மலங்க மலங்க விழிப்பதை பார்க்க பார்க்க அவனுக்கு சிரிப்பு வேறு பீறிட்டு வந்து தொலைத்தது.

 

ரம்யாவிற்கு எல்லாமே புதிதாக இருக்கவும், அவன் சொல்வதை அரைகுறையாக செய்து திட்டு வாங்கி, மறுபடி ஒழுங்குபடுத்தி என அந்த நாள் பொழுது பரபரப்பாகவே நீண்டது.

 

மூன்று வேளையும் வசீகரனின் நளபாகம் தான். அவன் மனைவி சப்புக்கொட்டி சாப்பிடும் அளவிற்கு நன்றாகவே சமைத்தான். வெளி சாப்பாட்டை கூடுமானவரை குறைத்துக்கொள்ள முடிவெடுத்திருந்தான் அவளின் உடல் நலனுக்காக.

 

தோளில் துண்டோடு வசீகரன் அடுப்படியில் சமைக்கும் லாவகத்தை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை ரம்யாவிற்கு. கண்கொட்டாமல் அவனையே ரசித்திருந்தாள். இன்று விடிந்ததில் இருந்து அவன் செய்யும் ஒவ்வொன்றையும் பார்த்து அதிசயத்து தான் போகிறாள். நிச்சயம் வசீகரனை இத்தனை பொறுப்பானவனாக பொறுமையானவனாக அவள் நினைத்து பார்த்ததேயில்லை.‌ 

 

வசீ அவள் தலையில் தட்டி, “சமைக்கறதை கவனிக்க சொன்னா, என்னை என்ன லுக்கு விட்டுட்டு இருக்க” என்று அதட்ட,

 

“போடா காலையில இருந்து என்னை நீ திட்டிட்டே இருக்க, உன் பேச்சு கா” ரமி முகம் திருப்பிக் கொண்டாள்.

 

அவளின் முகம் பற்றி நேராக திருப்பியவன், “விளையாட்டு இல்ல ரமி, சொன்னா புரிஞ்சுக்க, உனக்கு காலேஜ் ஓபன் பண்றதுக்குள்ள ஓரளவு சமைக்க கத்துக்கோ, எல்லா நேரமும் நான் கூட இருக்க முடியாது சரியா” வேகமாக ஆரம்பித்து இதமாக சொல்லி முடித்தான். 

 

“ம்ம்” என்று உம்மென்று  தலையாட்டியவள், “ரொம்ப நேரம் நின்னுட்டே பார்க்கறது எனக்கு கால் வலிக்குது” என்று முகம் சுருங்க சொன்னவளை கண்ணுற்றவன், சமையல் மேடையில் இருந்த பாத்திரங்களை ஒருபுறம் ஒதுக்கி, தன் ஈர கைகளை துடைத்து விட்டு திரும்பி, ரம்யாவின் இடை பற்றி அலேக்காக தூக்கி மேடையில் அமர வைத்தான். 

 

அவள் திகைத்து, கண்கள் சாசர் போல விரிய, மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டாள். சில நொடிகள் ஆனது அவன் செயலை அவள் உணர்ந்துகொள்ள. “டேய் என்னடா, இவ்வளோ அசால்டா தூக்கி உட்கார வச்சிட்ட!” ரம்யா திகைப்பு விலகாமல் கேட்க, “எனக்கு அரிசி மூட்டை தூக்கி பழக்கம் தான் ரமி” என்றவனை முறைத்தவள், “நானும் அரிசி மூட்டையும் உனக்கு ஒன்னா, போடா…” அவள் சீறவும் பெரிதாக சிரித்தவன், “அரிசி மூட்டை இருவத்தியஞ்சு, முப்பது கிலோ இருக்கும், நீதான் அதுக்கு ரெண்டு மடங்கு வெயிட் இருக்கியே. பப்ளி பேபி” என்று அவன் வாய் அவளிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தாலும், கைகள் பாட்டிற்கு சமையல் வேலையை செய்து கொண்டிருந்தன.

 

மட்டன் குர்மாவிற்கு தாளித்து குக்கரில் வைத்து மூடியிட்டவன், பிசைந்து வைத்திருந்த கோதுமை மாவை சிறு உருண்டைகளாக எடுத்து வட்டமாக தேய்த்து தவாவில் போட்டு எடுத்தான். அவன் கைகள் அத்தனை வேக வேகமாக இங்கும் அங்கும் செயலாற்றின. 

 

அவன் சமைக்கும் லாவகத்தில் தன் முறைப்பை மறந்து, “வசீ, உன் சமையல் டேஸ்ட்டும் சூப்பரா இருக்கு. நீ சமைக்கற ஸ்டைலும் பார்க்க பார்க்க செமயா இருக்கு டா” என்று சிலாகிப்பவளை திரும்பி பார்த்தான். 

 

அந்த சின்ன மேடையில் சம்மணமிட்டு, இருகைகளாலும் கன்னத்தை தாங்கி அவனை தான் ரசனையாக பார்த்துக்கொண்டு இருந்தாள் அவள்.

 

“இப்படி எனக்கு ஐஸ் வச்சு, நீ தப்பிக்கலாம்னு பிளான் பண்ணாத, வா கடைசி ரெண்டு சப்பாத்தி இருக்கு இதை தேய்ச்சு போட்டு எடுத்துட்டு வா” என்ற வசீகரன் விலகி நின்றுக் கொண்டான்.

 

“நானா?” என்று சங்கடமாக உடல் நெளித்தவளை இறக்கிவிட அவன் அருகில் வர, அவனை அவசரமாக கைநீட்டி தடுத்தவள், தானே இறங்கி வந்து சப்பாத்தி மாவை தேய்க்க முயற்சித்தாள்! முயற்சித்தாள்! முயற்சித்துக் கொண்டே இருந்தாள். ஒற்றை சப்பாத்தியும் ஆன பாடாய் தான் காணோம். மாவு கட்டையில் ஒட்டி, அதை வழித்து மறுபடி உருட்டி தேய்க்க, அது அலங்கோலமாக வந்து, ஒருபுறம் தடிமனாக இருக்க, மறுபுறம் மெலிதாக பிய்ந்து தொங்கியது. அவள் தேய்த்த சப்பாத்தியை கையில் வைத்துக்கொண்டு அவனை பார்த்து உதடுகள் பிதுக்கி முகம் சுருங்கி நின்றவளை பார்த்து இவன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்து தீர்த்தான்.

 

“சிரிக்காத வசீ, எனக்கு இது வட்டமா வரவே இல்ல” அவள் மேலும் மூக்கை உறிஞ்சி கொண்டு சொல்ல, 

 

“ஹாஹா சரியான காமெடி பீஸ்டி நீ” என்று கண்ணோரங்களில் ஈரம் கசியுமளவு சிரித்து முடித்தவன், அவள் செய்த அலங்கோல சப்பாத்தியை சரியாக செய்து காட்டி, ஒற்றை புருவம் உயர்த்தி காட்டி அவளை சீண்டினான்.

 

“நீ எப்போ இதெல்லாம் கத்துக்கிட்ட வசீ?” அவன் சீண்டலை கண்டுகொள்ளாது இவள் சீரியசாக கேட்க, 

 

“சின்ன வயசுல இருந்தே செய்வேன், அம்மாவும் பாட்டியும் சாப்பிட மட்டுமில்ல சமைக்கவும் கத்துக்கனும்னு எங்களை நல்லா வேலை வாங்குவாங்க, சசி அப்படி இப்படினு பிட்ட போட்டு எஸ்ஸாகிடுவான். எனக்கு தான் அவங்ககிட்ட மாட்டிட்டு பெண்டு நிமிர்ந்துடும்” என்று ஆர்வமாக சொன்னவன் முகம் அவர்கள் நினைவில் சற்றே வாடி பின் நேரானது.

 

“சோ ஸ்வீட் இல்ல அத்தையும் பாட்டியும், ஆனா எங்களுக்கு அம்மா எதுவுமே சொல்லிக் கொடுத்தது இல்லயே, அம்மா கூட அதிகமா சமைக்க மாட்டாங்க, சுசித்ரா அக்கா தான் எப்பவும் சமையலுக்கு, நான் என்ன கேட்டாலும் ரொம்ப டேஸ்ட்டா செஞ்சு தருவாங்க தெரியுமா” என்றவளுக்கும் தன் வீட்டு நினைவு வர, நெஞ்சடைத்தது.

 

இந்த இரண்டு நாட்கள் பிரிவின் வெறுமை இளையவர்கள் இருவரையும் மௌனியாக்கியது. உணவை எடுத்து வைத்து அமைதியாகவே பரிமாறி கொண்டனர். தொலைக்காட்சி சேனலை மாற்றியபடி வசீகரன் சாப்பிட, ரம்யா உணவை பார்த்தபடி அமைதியாக இருந்தாள்.

 

அதை கவனித்தவன், “சூடா சாப்பிட்டா தான் நல்லா இருக்கும் ரமி, இப்ப என்ன யோசனை உனக்கு?” அவளுக்கு அதட்டல் விட, “இல்ல வசி, நீ சூப்பரா சமைச்சு தர, நானும் மூக்கு முட்ட சாப்பிறேன், அம்மா சாப்பிட்டாங்களா இல்லையான்னு தெரியல? இன்னும் என்னை நினச்சு அழுதுட்டே இருப்பாங்களா?” அவள் முகம் வாடி கேட்டாள்.

 

“அதெல்லாம் சாப்பிட்டு இருப்பாங்க. உன் அப்பாவும் அக்காவும் பாத்துப்பாங்க, நீ வீணா கவலைபடாம சாப்பிடு” என்று சமாதானம் சொல்லி அவன் அவளுக்கு ஒருவாய் ஊட்டி விட, அவளும் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.

 

சப்பாத்தி வில்லையை மென்றபடி, “அக்கா பெங்களூருக்கு போஸ்டிங் வாங்கிட்டு போறேன்னு சொன்னா” ரம்யா அவனிடம் மேலும் வருந்தி சொல்ல, 

 

“யாரு எங்க போனா நமக்கென்ன? உன் காலேஜ் ரீ ஓபன் எப்போ? அதுக்கு முன்ன ஒன் டைம் நாம காலேஜ் போய் பேசிட்டு வரனும். எப்பனு கேட்டு சொல்லு” வசீகரன் பேச்சை மாற்றிவிட்டு அவளுக்கு அடுத்த வாய் ஊட்ட வர, “நானே சாப்பிட்டுக்கிறேன், நீ‌ சாப்பிடு” என்று சாப்பிட்டாள்.

 

சாப்பிட்டு படுத்தது தான் தெரியும் இருவருக்கும் அப்படியொரு தூக்கம். ஒருநாள் வீட்டு வேலைக்கே அவர்களுக்கு அத்தனை அலுப்பு தட்டி இருந்தது. 

 

காலை எட்டு மணிக்கு விழித்து எழுந்த வசீகரன் நேராமாவதை உணர்ந்து, ரம்யாவை தொந்தரவு செய்யாமல் குளிக்க சென்று விட்டான்.

 

அந்த நேரம் சரியாக வாசலில் அழைப்பொலி ஒலிக்கவும், பாதி கலைந்த உறக்கத்துடன் எழுந்து வந்து, சன்னல் வழியே யாரென்று எட்டி பார்த்தவள் விழிகள் ஆச்சரிய அதிர்ச்சியில் விரிந்தன.

 

பதற்றமாக உள்ளே ஓடி வந்தவள், அதே வேகத்தில் குளியலறை கதவை திறந்து, ”டேய் மாமா வந்திருக்காரு டா…” என்றாள் பதற்றமாய்.

 

அரையாடையோடு குளித்துக் கொண்டு இருந்தவன் அவள் வந்ததில் பதறி, “அடச்சீ பிசாசே… பாத்ரூம் கதவுக்கு லாக் சரியில்லைன்னு தெரியாதா?” என்று கத்தினான்.

 

“ரொம்ப முக்கியம்” அவள் பதற்றத்தில் நறநறத்து கொள்ள,

 

“இருடி நீ குளிக்கும் போது நானும் இப்படி கதவு திறந்து வரேன், அப்போ தெரியும் உனக்கு” அவன் கோபத்தில் மிரட்ட, இப்போது‌ தான் வசீகரனை கவனித்தாள். உடல் முழுவதும் சோப்பு நுரை வழிய சங்கடமாக நின்றிருந்தவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்து முகம் கசக்கினாள்.

 

“டேய் ரொம்ப ஓவரா பண்ணாதடா… மாமா வத்திருக்காங்க டா மடையா” என்றாள் நெற்றியில் அடித்து கொண்டு.

 

“எந்த மாமா?”

 

“உன் மாமா… ச்சே என் மாமா… அய்யோ உன் அப்பா வந்திருக்காங்கடா” என்று உளறிக் கொட்டினாள்.

 

“என்னாது அப்பாவா?” அவன் அதிர்ந்து நிற்க,

 

“ஆமா நீ சீக்கிரம் வா” ரம்யா அவசரப்படுத்த,

 

“இப்படியே வரவா” இவன் கடுகடுத்தான்.

 

“சரி சரி ரெண்டு கப் தண்ணிய ஊத்திட்டு வந்து தொலைடா” அவள் பரபரக்க,

 

“எதுக்கு அவர் என்னை அடிச்சு துவைச்சு காயப்போடவா… என்னால வர முடியாது. நீயே போய் சமாளி” என்றான்.

 

“நானா?” ரம்யா யோசிக்க,

 

“ஆமான் டி ஜாங்கிரி, உன் அப்பன் அந்த முசுடு முனியாண்டிய நான் சமாளிச்சேன் இல்ல. இப்ப உன் டர்ன். என் அப்பா வீரு விருமாண்டிய நீ சமாளிப்பியாம், டீல் ஓகே வா” வசீகரன் அவசர ஒப்பந்தம் போட,

 

அவன் சொல்லவதும் சரிதான் என்று தோன்றியது அவளுக்கு. அப்போதும் எதையோ யோசித்துக் கொண்டே நின்றாள்.

 

“இன்னும் என்னடி, அப்பா வெயிட் பண்றாரு பாரு. சீக்கிரம் போய் சமாளி போ” அவன் விரட்ட,

 

“நீ சொல்ற டீல் ஓகே தான்… பட் நீ மொத்து வாங்கிறதை என்னால பாக்க முடியாம போயிடுமே” என்று உச்சுக்கொட்டி அவள் கவலை போல சொல்ல, அவள் மீது கடுப்பாகி இவன் தண்ணீரை மோந்து ஊற்ற, அதற்குள் ரம்யா கதவை சாற்றிவிட்டு ஓடி இருந்தாள்.

 

வாசலில் பொறுமை கழிய நின்றிருந்தார் இளங்கோவன். கதவருகே வந்தவள், தன் உடையை ஒருமுறை சரிபார்த்து, கண்களை விரலால் சுழற்றி விட்டு கொண்டு, வாயருகே புறங்கையை மறைத்து கொட்டாவி விட்டபடியே கதவை திறந்தாள்.

 

“பால்காரண்ணா, பால் பாக்கெட்ட போட்டு போக வேண்டியது தான, ஏன் காலிங் பெல் அடிச்சு, என் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்றீங்க” அவள் தூக்கம் கலையாதது போலவே கேட்க,

 

“நான் ஒன்னும் பால்காரன் இல்ல, நல்லா கண்ண திறந்து பாரு” இளங்கோவனின் இறுகிய குரலில் விழிகள் விரித்து பார்த்தவள், முகத்தில் அதிர்ச்சியை அதிகம் காட்டி, “பேப்பர் காரனா… ச்சே மாமா நீங்களா, உள்ள வாங்க” என்று வரவேற்றாள்.

 

கோபமாக உள்ளே வந்தவர் பார்வை அந்த சிறிய வீட்டை ஒரு முறை சுற்றி வந்தது. 

 

“எங்க அவன்?

 

“தூங்கிட்டு இருக்காரு மாமா”

 

“எழுப்பி வர சொல்லு”

 

“அச்சோ இல்ல குளிச்சிட்டு… குளிச்சிட்டு இருக்காரு மாமா” என்று மாற்றி மாற்றி பேசியவளை இவர் கண்கள் இடுங்க பார்க்க,

 

“நிஜம்மா மாமா, உங்க மீச மேல சத்தியமா அவன் குளிச்சிட்டு தான் இருக்கான்” என்றாள்.

 

அவள் சத்தியத்தில் சற்றே திகைத்தவர் தன் கோபம் குறையாது, “நீங்க ரெண்டு பேரும் படிச்சவங்க தானே, இப்படியா முட்டாள்தனம் பண்ணுவீங்க? அறிவில்ல, நம்ம குடும்ப விவகாரம் தெரிஞ்சும், முன்ன பின்ன யோசிக்க மாட்டீங்களா?” இளங்கோ சிடுசிடுவென பொரிய, இவள் அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு நின்றாள்.

 

“பெத்தவங்க பார்த்து பேசி புரிஞ்சு நடந்த கல்யாணமே அத்துக்கிட்டு போகுது இதுல, எல்லாரையும் எதிர்த்து நீங்க பண்ண கல்யாணம் எத்தனை நாள் தாக்கு பிடிக்கும்னு நினைச்சீங்க…”

அவர் நிறுத்துவதாக காணோம்.

 

“அவனுக்கு தான் அறிவில்லைனா உனக்கு அறிவு எங்க போச்சு?”

 

“நான் ஒன்னுமே பண்ணல மாமா… எல்லாம் அவன் தான். முதல்ல சசிமாமா பத்தி பேசனும்னு வந்தானா, அப்புறம் திவிக்கா பத்தி கேக்கிறேன்னு பேசினான். அப்புறம் என்னை லவ் பண்றேன்னு உளறுனான்… நான் சரிப்பட்டு வராதுன்னு சொல்லியும் கேக்கல ரொம்ப உருகுனானா போனா போகுதுன்னு ஓகே சொன்னேன்… இதெல்லாம் தெரிஞ்சு வீட்டுல அவசர மேரேஜ் பிக்ஸ் பண்ணாங்களா, இவனே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு தாலிக்கட்டி இழுத்துட்டு வந்துட்டான்” ரம்யா மூச்சு விடாமல் பேச, இவருக்கு தான் மூச்சு வாங்கியது.

 

“இவன் சொன்னா கழுத்த நீட்டுவியா, உன் வீட்ல பார்த்த மாப்பிள்ளைய கட்டிட்டு போக வேண்டியது தானே” அவர் எரிச்சலாக சொன்னார். இவர்களால் குடும்பமே சிதறி கிடைக்கிறதே என்ற வருத்தம், கோபம் அவருக்கு.

 

“அவன் இவனை விட மொக்கையா இருந்தான் மாமா, அதால தான் இவனே மேலுனு வசி கூட வந்துட்டேன்” என்று மிக வருத்தமாக அவள் சொன்னதில் இவர் ஜெர்க்கானார்.

 

கோபமும் ஆத்திரமும் போட்டி போட இங்க வந்தவருக்கு, அந்த கோபத்தை என்னவென்று காட்ட புரியாமல் நின்றார்.

 

“நீ முதல்ல அந்த ராஸ்கல கூப்பிடு” என்று அவளை விரட்ட,

 

சமத்து பெண்ணாக தலையாட்டியவள், குளியலறை கதவை தட்டி, “டேய் மடையா, குளிச்சது போதும் வெளியே வந்து தொலைடா” என்றாள் கலவரமாக.

 

கதவை திறந்து வெளியே வந்தவன், அவள் தலையில் நங்கென்று கொட்டி, “நான் உனக்கு மடையனா? நீ தான்டி மடச்சீ” என்று அவள் காதை பிடித்து திருகினான்.

 

இடுப்பில் கட்டிய துண்டோடு, அவன் காதை பிடித்து திருக, இவள் வலியில் துள்ள, அதை பார்த்தவருக்கு அவர்கள் சண்டை புதுமணத்‌ தம்பதிகளின் அன்யொன்யமாக தோன்றியது. சிரித்தும் கொண்டார்.

 

“டேய் மாமா டா மடையா” அவள் சத்தமிட திரும்பி தன் அப்பாவை பார்த்தவன், “அடிப்பாவி அப்பா முன்னாடியா என்னை மடையானு கூப்பிட்ட, கோத்து விட்டுட்டியேடி கொடுக்காபுளி” என்று பற்களை கடித்தவன், ஈயென்று இளித்தப்படி தந்தையை எதிர்க்கொண்டான்.

 

“சாரி ப்பா, அது… எனக்கு வேற வழி தெரியல” என்று தன் சூழ்நிலை கூறி வசீகரன் மன்னிப்பு வேண்டிக்கொள்ள, இவள் ஆவலாக அவன் அடிவாங்குவதைக் காண காத்து நின்றாள்.

 

“மடையா… அறிவிருக்காடா உனக்கு? நீ இப்படியொரு முட்டாள்தனம் செய்வனு நான் எதிர்பார்க்கல, உன்மேல நம்பிக்கை வச்சதுக்கு…” அவரும் ஆற்றாமல் திட்ட ஆரம்பிக்க,

 

“என்மேல எந்த தப்பும் இல்ல ப்பா… எல்லாம் இவ தான். முதல்ல சசி கிட்ட பேசனும்னு வந்தாளா! அப்புறம் திவி அண்ணி பத்தி கேக்கிறேன்னு பேசினாளா! அப்புறம் என்னை லவ் பண்றேன்னு உளற ஆரம்பிச்சுட்டா… நான், சரிப்பட்டு வராதுன்னு சொல்லியும் கேக்கலப்பா, நான் இல்லன்னா செத்து போயிடுவேன்னு அழுதுட்டு நின்னாளா, நானும் போனா போகுதுன்னு ஓகே சொன்னேன்… எனக்கு வேற இளகுன மனசா, காதலிச்ச பாவத்துக்கு மொக்க ஃபிகரா இருந்தாலும் பரவால்லன்னு கட்டிக்கிட்டேன் ப்பா” என்று ஒரே மூச்சாக அவளை போலவே பேசிய மகனை மலங்க மலங்க பார்த்து நின்றார் இளங்கோவன்.

 

ஒருநிமிடம் அவருக்கே தலை கிறுகிறுத்து போனது. “டேய் காரணம் சொல்லாத, பல்ல தட்டி கைல கொடுத்துடுவேன், பெத்த அப்பன் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னு தோனுச்சாடா உனக்கு” இளங்கோ ஆத்திரமாக கேட்க,

 

“தோனினா மட்டும் உங்களுக்கு லைன் கிடைச்சிடுமா? எத்தனை வாட்டி டிரை பண்றது. எனக்கு பைத்தியமே புடிச்சிடுச்சு” மகனும் தந்தைக்கு மேல் ஆதங்கத்தை கொட்டினான்.

 

இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு நின்றனர். 

 

ரம்யா, “மாமா, வசி மேல எந்த தப்பும் இல்ல. நீங்களாவது நாங்க சொல்றதை பொறுமையா கேளுங்க ப்ளீஸ்” என்றவள் சற்று தயங்கி, “நானும் வசியும் லவ் பண்ணவே இல்ல” என்று சொன்னாள்.

 

“வாட்? காதல் பண்ணாம தான், இப்படி கல்யாணம் பண்ணிட்டு நிக்கிறீங்களா?” இளங்கோவனின் அனல் பார்வை இருவரின் மீதும் பாய்ந்தது.

 

“ஆமா ப்பா” என்ற வசீகரன், அமுதனின் தொந்தரவு பற்றியும், அவனை விரட்ட இவன் விளையாட்டாக சொன்ன பொய்யை, திவாகரிடம் அவன் வத்தி வைத்ததையும் விளக்கினான்.

 

“அந்த பொறுக்கி சொன்னதை நம்பி, இவ வீட்ல இவளை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க, கட்டாய கல்யாணம் வரைக்கும் ச்சே, எல்லாம் தெரிஞ்சும் பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியலப்பா அதான் கூட்டிட்டு வந்துட்டேன்” என்றான்.

 

இளங்கோவன் ஓய்ந்து அமர்ந்து விட்டார். மகன் மீது அவருக்கு அதீத நம்பிக்கை தான். அந்த நம்பிக்கை உடைந்த சேதி கேட்டு அடித்து பிடித்து ஓடி வந்திருந்தார். இவர் வருவதற்குள் இங்கு எல்லாமே முடிந்திருந்தது. நடந்ததை மாற்ற முடியாது. இனி நடக்க வேண்டியதை தான் அவர் பார்க்க வேண்டும். தனக்குள் தெளிந்தவராக நிமிர்ந்தார்.

 

“சரிடா நடந்ததெல்லாம் போகட்டும், நீங்க நம்ம வீட்டுக்கு வாங்க” இளங்கோவன் அழைக்கவும் வசீகரன் இறுக்கமாக நின்றான்.

 

“ரம்யா நீயாவது எடுத்து சொல்லுமா இவனுக்கு, ஏன் ரெண்டு பேரும் தனியா இருந்து கஷ்டபடனும்” அவர் மருமகளிடம் சொல்ல,

 

“வசி” ரம்யா வாயெடுக்கவும் கைகாட்டி அவளை நிறுத்தியவன், “உங்களை போலவே முழு மனசோட அம்மாவும் பாட்டியும் சசியும் எப்ப எங்களை ஏத்துக்கிறாங்களோ, அப்ப நாங்க நம்ம வீட்டுக்கு வரோம் ப்பா” என்றான் பிடிவாதமாக.

 

“டேய் நான் பேசறேன் டா அவங்ககிட்ட. வாடா” அவர் சொல்ல,

 

“நோ ப்பா, அவங்களா எங்களை மன்னிச்சு ஏத்துக்கிறவரை நாங்க காத்திருக்கோம். எது எப்படி இருந்தாலும் உங்களை எல்லாம் மீறி நாங்க கல்யாணம் கட்டிக்கிட்டது பெரிய தப்பு தான் ப்பா, அதுக்கு எந்த எக்ஸ்கியூஸும் இல்ல” வசீகரன் தெளிவாக பேசினான்.

 

மேலும், “சசி கல்யாணம் குடும்பத்தை மீறி நடக்கக்கூடாதுனு அவ்வளவு செஞ்சேன். கடைசியில நானே குடும்பத்தை மீறி கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சு” வசீகரன் விரக்தியாக சொல்ல, தந்தைக்கு உருகி விட்டது. மகனை கட்டிக் கொண்டார். 

 

சில நிமிடங்கள் பாசபிணைப்பிற்கு பிறகு அந்த சூழ்திலையை சகஜமாக்கிட,

“காஃபி குடிக்கிறீங்களா? டீ குடுக்கிறீங்களா மாமா?” ரம்யா விருந்து உபச்சாரமாக கேட்க, வசீகரன் மனையாளை மெச்சிக் கொண்டான்.

 

இளங்கோவன் புன்னகைத்தவராக, “காஃபி போதும் மா” என்றார்.

 

ரம்யா தலையசைத்து சமையலறைக்குள் நுழைய, “ஜஸ்ட் எ மினிட் ப்பா” என்று வசீகரனும் அவள் பின்னோடு சென்றான்.

 

“என்ன பண்ற?”

 

“காஃபி எப்படி போடலாம் னு யோசிச்சுட்டு இருக்கேன்”

 

“பரதேவதை எங்கப்பா பாவம் அப்படி எதுவும் யோசிச்சு செஞ்சு தொலைக்காத, கேஸ்ல பால் மட்டும் சூடேத்து, நான் ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வந்திடுறேன் ஓகே” என்று அறைக்குள் விரைந்தான்.

 

ரம்யா ஃபிரிட்ஜில் இருந்து பால் பாத்திரத்தை எடுத்து, அடுப்பில் வைத்து சூடேற விட்டு, டம்ளர்களை எடுத்து வைத்தாள்.

 

வசீகரனும் வந்து விட, “என்ன வசி இது, கொஞ்சம் பால் பொங்கறத்துக்கு இவ்வளோ நேரமாகுது” என்று அலுத்தவளை நகர்த்திவிட்டு, பாலை கவனித்தவன், அதிர்ந்து சட்டென அடுப்பை அணைத்தான்.

 

“மக்கு, மரமண்ட, மட சாம்பிராணி” கடுப்பாகி பற்களுக்குள் அவளை திட்டி, தலையில் கொட்டி வைக்க, 

 

வலித்த தலையை தேய்த்துக் கொண்டவள், “பால் காயலனா என்னை ஏன்டா திட்ற, கொட்ற” முகம் சுருக்கினாள்.

 

“ஏய்ய், நீ அடுப்புல வச்சது பாலா இருந்தா தானடி காயறத்துக்கு, அது தோசை மாவுடி மடச்சி” தன் தலையில் அடித்து கொண்டவன், அவசரமாய் பால் பாத்திரத்தை மாற்றி வைத்து சூடேற்றி, தந்தைக்கு பிடித்தவாறு குளம்பியை கலக்கினான். 

 

ரம்யா, தோசை மாவு பாத்திரத்தை உற்று உற்று பார்த்து, “மாவும் பாலும் வொயிட்டா இருக்கில்ல அதான் கொஞ்சம் குழம்பிட்டேன் போல” என்று தனக்கே விளக்கம் கொடுத்து கொள்ளவும்,

 

“இல்லனா மட்டும்” என்றவன் அவளை சலிப்பாக பார்த்துவிட்டு, டம்ளரை அவள் கையில் திணித்து, “காஃபியை கீழ ஊத்தி தொலைக்காம அப்பாகிட்ட கொடு, இதையும் சொதப்பிடாத ப்ளீஸ்” என்க, அவள் நல்ல பிள்ளையாக தலையாட்டி மாமனாரிடம் தந்தாள்.

 

குளம்பியை மிடறு மிடறாக பருகியவர் முகம் நிறைவைக் காட்டியது. அதே நிறைவுடன் இருவரையும் வாழ்த்திவிட்டு விடைப்பெற்றுக் கொண்டார் இளங்கோவன். இனி தான் செய்ய வேண்டியது என்ன என்ற யோசனையோடு.

 

***

 

காதல் கூத்து கட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!