காதலில் கூத்து கட்டு 2

IMG-20210202-WA0002-c7f6119f

காதலில் கூத்து கட்டு 2

 

“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? இப்படியா முட்டாள்தனம் பண்ணி வைப்பீங்க ரெண்டு பேரும்!” சசிதரனை கடித்து குதறி‌ கொண்டிருந்தான் வசீகரன்.

 

“டேய் முதல்லயே நான் டென்ஷன்ல இருக்கேன் நீ வேற ஏத்தி விடாத டா” தம்பியிடம்‌ சலித்து கொண்டு நெற்றியை தேய்த்துக் கொண்டான் சசிதரன்.

 

“சரி, என்ன முடிவு பண்ணி தொலைச்சீங்க, அதையாவது சொல்லு” சின்னவன் கேட்க, 

 

“டை… பிரிஞ்சிடலாம்னு” என்று சொல்லி சசிதரன் கண்களை மூடி கொண்டான். தங்களின் விவாகரத்து முடிவை பற்றி வெளிப்படையாக கூற தைரியம் வரவில்லை அவனுக்கு. 

 

“என்ன இவ்வளோ ஈஸியா சொல்லிட்ட? இப்ப பிரிஞ்சிடலாம்னு சொல்ற இதே வாய் தான டா, ‘என் திவி கிடைக்கலனா செத்து போயிடலாம் போல இருக்கு’னு புலம்பினது! அந்த காதல் எங்கடா போச்சு?” உடன் பிறந்த அண்ணனென்றும் பாராமல் வசீகரன் படபடவென பொறிந்து தள்ளி விட்டான்.

 

தம்பியின் கேள்வியில் ஒன்றுக்கு கூட சசியிடம்‌ பதில் இருக்கவில்லை. தலை கவிழ்ந்து மௌனமாய் நின்றான். மனதின் அழுத்தம் அவன் கண்களில் ஈரம் கட்டிக் கொள்ள செய்தது.

 

“என்ன சசி இது, சின்ன புள்ள மாதிரி” வசீகரன் அவன் தோளை தட்டி கொடுக்க, தாங்கமுடியாமல் தம்பியை அணைத்துக் கொண்டு அழுது விட்டான் சசிதரன்.

 

அழுகையில் குலுங்கியவன் முதுகை ஆறுதலாக தட்டி கொடுத்தவன் மனதிலும் பாரம் ஏறிக் கொண்டது.

 

‘மேட் ஃபார் ஈச் அதர்’ என்பது போல தான் சசிதரனும் திவ்யாவும் வாழ்ந்தனர். அண்ணன், அண்ணியின் அன்யோன்யம் பார்த்து வசீகரன் கேலி செய்து, கிண்டல் பேசி கலாய்த்து தள்ளினாலும் அவர்கள் அன்பை நினைத்து மனதில் நிறைவும் இருந்தது.

 

தனக்கான தொழில் தொடங்கும் அலைச்சலில், சில மாதங்களாக வீட்டின் நிலையை வசீகரன் கவனித்திருக்கவில்லை. திவ்யா இவர்கள் வீட்டைவிட்டு அம்மா வீட்டுக்கு சென்ற பிறகு தான் அவர்களின் பிரச்சனை தெரிய வந்தது. அப்போதும்  அவர்களே பிரச்சனையை சரிசெய்து‌ கொள்வார்கள் என்று எண்ணி தான் விட்டுவிட்டான்.

 

ஆனால் மொத்தமாக இரண்டு மாதங்களாக இந்த பிரிவு தொடர, இருவருக்கும் இடையே பெரிய விரிசல் விழுந்திருப்பதை இவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதை எப்படி சரிசெய்வது என்ற யோசனை அவனுக்குள்.

 

சசிதரன் கலங்கி உணர்ச்சி வசப்பட்டிருக்கும் இந்த நிலையில் அவனை மேலும் கேள்வி கேட்டு சங்கடப்படுத்த மனமின்றி, அண்ணனுக்கு தனிமை தந்து நகர்ந்து‌ விட்டான்.

 

இதற்கான தீர்வை பொறுமையாக  தான் யோசிக்க வேண்டும். எப்படியும் தன் அண்ணனின் காதலை மீட்டெடுக்க வேண்டும் என்று மனதில் உறுதி ஏற்றுக் கொண்டான் அவன்.

 

உடைந்த கண்ணாடி துண்டுகளை இணைப்பது அத்தனை சுலபமில்லை. விரிசல்விட்ட சில உறவுகளும் அவ்வகையே. பாவம் இதனை அறியாது அவன் வீண் உறுதி ஏற்று கொண்டான். நிதர்சனம் உணரும் போது அவன் நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பானோ என்னவோ!

 

***

 

மறுநாள் மாலை கல்லூரி வளாகத்தை கடந்து அவள் வெளியே வரும் போது, “ஹாய் டன்டனக்கா” என்று சினேக மென்னகையோடு கையசைத்து அவள்முன் முளைத்தான் அவன்!

 

எதிரே அவனைப் பார்த்து கண்கள் சுருக்கியவள், “ஹாய்” என்பதோடு தன் வழியே நடக்க, அவனும் உடன் நடந்தான்.

 

“என்னை ஏன் ஃபாலோ செய்யற?” நிதானமாக தான் கேட்டாள்.

 

“நான் உன்ன லவ் பண்றேன் இல்ல அதான் ஃபாலோ பண்றேன்” சாதாரணம் போல அவன் பதில் சொல்ல,

 

“நீ யாருன்னு கூட எனக்கு தெரியாது” சலிப்பாக கேட்டாள்.

 

ஏனோ மறுபடி இதையே சொல்வது அவளுக்கு சரியாக படவில்லை. ‘இந்த வாசகம் அவனை பற்றி தெரிந்து கொள்ள தன் ஆர்வத்தை தெரிவிப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்துகிறதோ?’ என இப்போது யோசனை வந்தது. ஆனால் கேட்டு விட்டாளே!

 

“என்னை பத்தி தெரிஞ்சுக்கனும்னு ரொம்ப அவசரபடுற நீ? மொத்தமா தெரிஞ்சுகிட்டா. இன்ரஸ்ட் போயிடும், கொஞ்ச கொஞ்சமா தெரிஞ்சிக்கோயேன்” என்றவன்,

 

“தமிழோட முதல் எழுத்து என் பேரோட முதல் எழுத்து, தமிழோட கடைசி எழுத்து என் பேரோட கடைசி எழுத்து… என்னோட முழு பேரென்ன? அதை நீயே கண்டுபிடி” என்று புதிர் போட்டவன் குறுப்பு கொப்பளிக்க சிரித்து வைத்தான்.

 

இவள் நின்று திரும்பி, அவனை ஒரு மார்கமாக பார்த்து தலையை அசைத்துக் கொண்டு நடந்தவள், “உன் பேரை கேட்டேனா? நான் கேட்டேனா? உன் புதிரை கண்டுபிடிச்சு உன் பேரை தெரிஞ்சுக்கிற அவசியம் எனக்கு இல்ல” நிற்காமல் நடந்து கொண்டே அவனை தவிர்த்து பேசினாள்.

 

“ப்பா என்ன இன்னைக்கு இவ்ளோ காரமா பேசுற, எனக்கு நெஞ்சு வரைக்கும் காந்துது, நான் போட்ட புதிரை அவிழ்க்காம என் பேர் உனக்கு தெரியாதே” இவன் விடாமல் வம்பு வளர்க்க,

 

“உன்ன பார்த்தா ஜாலி கேரக்டர் மாதிரி தெரியுது. நான் ரொம்ப போர் கேரக்டர், எனக்கும் உனக்கும் ஒத்துவராது, இனி லவ்னு பேசாத எனக்கு அனீசியா தோனுது” இழுத்து பிடித்த பொறுமையோடு சொன்னாள். 

 

“ஒரு பார்வையிலேயே என் கேரக்டர் கெஸ் பண்ணிட்ட, இன்னும் அதிகமா பிடிக்குது உன்ன” என்றான் அவன்.

 

“இதுவரைக்கும் நீ என்கிட்ட நல்லவிதமா‌ பேசுற, அதால தான் நானும் நல்ல விதமா பதில் சொல்லிட்டு இருக்கேன்” என்றாள் எச்சரிக்கையாக.

 

“நீ எல்லாத்திலும் புதுசா இருக்க, எனக்கு பிடிச்சிருக்கு. டன்டனக்கா ரிங்டோன் வைச்சிருக்கறதெலாம் வேற லெவல்”  அவள் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் அவன் சிலாகிக்க,

 

‘ரிங்டோன் பார்த்து லவ் பண்ற லூசு பயனாடா நீ!’ என்று நெற்றியில் அடித்து கொண்டவள், “ஹலோ மிஸ்டர், கோவில் மாதிரி அமைதியான இடத்துல திடீர்னு  குத்து பாட்டு கேட்டா, அங்கிருக்கறவங்களோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு நேரா பார்க்க தான் அப்படி செஞ்சேன். என் மொபைல் ரிங்டோன் ஒன்னும் அது இல்ல” நேற்றைய கலாட்டாவிற்கு படபடவென விளக்கம் தந்து விட்டு நிற்காமல் நகர்ந்தாள்.

 

அவன் வியப்பாக புருவம் உயர்த்தி, “என்னதான் சைக்காலஜி ஸ்டூடன்டா இருந்தாலும் இப்படியா பண்ணுவ?” கிண்டலாகவே கேட்டு அவனும் பின்தொடர, இவள் மறுபடி நின்று திரும்பினாள். 

 

“என்னை உனக்கு முன்னமே தெரியுமா?”

 

“ம்ம் தெரியுமே ரெண்டு வருசமா”

 

“எப்படி? நான் உன்ன நேத்து தான முதல் முறை பார்த்தது!” அவள் நம்பாமல் கேட்க,

 

“அதுவும் தெரியும். இனி தினமும் என்னை பார்ப்ப?” என்றான் அசராமல்.

 

“என்ன டைமிங்ல பேசி என்னை இம்ப்ரஸ் பண்ண பார்க்குறியா?” அவள் முறைத்து வைக்க,

 

“அப்ப நீ இன்னும் என்கிட்ட இம்ப்ரஸ் ஆகலனு நினைச்சுட்டு இருக்கியா டன்டனக்கா?” அவன் விடாமல் நூல் விட்டான்.

 

“டோன்ட் கால் மீ டன்டனக்கா, என் பேர் கூட தெரியாமலையா ரெண்டு வருசம் சுத்தியிருக்க” அவன் பேச்சு இவளுக்கு கோபம் ஏற்றியது.

 

“ஓஹ் நான் உன்ன பேர் சொல்லி கூப்பிடனும்னு ஆசை படறல்ல”

 

“நீ ஒரு மண்ணும் கூப்பிட வேணாம், என்னை டிஸ்டர்ப் பண்ணாம போய் தொலை” அவன் மடக்கி மடக்கி பேசுவது இவளுக்கு எரிச்சலாக இருக்க, சாலை என்பதையும் மறந்து கத்தி விட்டாள்.

 

அவள் கத்தலில் சாலையை கடந்து கொண்டிருந்த வசீகரன் கவனம் இவர்கள் புறம் திரும்பியது. தன் வண்டியின் வேகத்தை குறைத்து அவன் சுற்றி பார்க்க, அந்த சாலையை கடந்த அனைவரின் பார்வையும் அவர்களை தான் தொட்டு மீண்டு நகர்ந்து கொண்டிருந்தது.

 

அவனுக்குள் குபுகபுவென்று கோபம் ஏற, வண்டியை ஓரங்கட்டி விட்டு‌ வேகமாக அவர்களை நெருங்கினான்.

 

“ஹே ஷூ கத்தாதே இது ரோடு” அவன் அவளை சமாதானம் செய்ய, “இவ்வளோ நேரம் என்னை வம்பளத்தப்போ தெரியலயா இது ரோடுனு” அவள் கொதித்து பேச,

 

“உங்க காதல் கன்றாவி எல்லாம் நடு ரோட்டுல தான் வச்சுப்பீங்களா?” வசீகரனின் கோப குரலில் இருவரும் அவனிடம் திரும்பினர்.

 

வசீகரனை அங்கு பார்த்ததும் இவளின் கொதிப்பு இன்னும் கூடி போக, இதுவரை அவளிடம் வம்பளத்து இருந்தவன் புதியவனை கண்டதும் ஜெர்க்கானான்.

 

“இது என்ன உன் அப்பன் வீட்டு ரோடா, பெருசா கேட்க வந்துட்ட” அவள் வசீகரனிடமும் காய்ந்தாள்.

 

“நான் கேக்காம யாரு கேப்பா? திவி பண்ணி வச்ச வேலைக்கு சசி அங்க அழுதுட்டு இருக்கான். இங்க நீ புதுசா ரூட் விட்டுட்டு இருக்கியா?” அவளுக்கு குறையாமல் இவனும் காய்ந்தான்.

 

“ஏய் என்னை பார்த்தா அவ்வளோ சீப்பா தெரியுதா உனக்கு? உங்க குடும்பத்தால தான் திவி படாதபாடு பட்டுட்டு இருக்கா?” உடன் பிறந்தவர்களின் கண்ணீர்  இவர்களிடத்தில் கோபத்தை கிளப்பி இருந்தது.

 

இருவரையும் குழப்பமாக பார்த்தவன், “உனக்கு அண்ணன், தம்பி யாரும்மில்லனு தான நினைச்சேன், இது யாரு புதுசா” தாழ்ந்த குரலில் அவளிடம் கேட்க, அவன் கேள்வி வசீகரனுக்கும் தெளிவாகவே கேட்டது.

 

“அண்ணன் தம்பி இல்லன்னு விசாரிச்சியே, மாமன், மச்சான் இருக்கானானு விசாரிச்சியாடா?” வசீகரன் கேள்வி இவனிடம் வர,

 

“ஐயோ பாஸ் நீங்க இவளோட மாமாவா”

 

“இல்ல மச்சான்” வசி நக்கலாக சொல்ல,

 

“அப்ப நீங்க எனக்கு அண்ணா” அவன் வசீகரனுக்கும் சேர்த்து கொக்கி போட்டான்.

 

தலையில் அடித்துக் கொண்டவன், “இவகூட உனக்கு என்ன பிரச்சனை?” என்று வினவ,

 

“ஜஸ்ட் லவ்வர்ஸ் பிராப்ளம் பாஸ், வேற எதுவுமில்ல” அவன் சாதாரணமாக சொல்லி வைத்தான்.

 

“பொய், இவன் யாருன்னு கூட எனக்கு தெரியாது. இவன் பேர் கூட தெரியாது, லவ் பண்றேனு பின்னாடியே வரான் லூசு பய” இருவருக்கிடையே அவள் படபடக்க, வசீகரன் இருவரையும் ஆழ பார்த்தான்.

 

“உன் பேரென்ன சொல்றா?”

 

“அச்சோ என் பேரை வச்சு இப்ப தான் நூல் விட்டுருக்கேன், அதால அதை மட்டும் கேட்காதீங்க பாஸ்” அவன் கெஞ்ச,

 

“உன் நூல் அறுந்து ரொம்ப நேரம் ஆச்சுடா, ஒழுங்கா பேரை சொல்லு இல்ல” வசீகரன் தன் கை சட்டையை மடித்து விட,

 

அதில் பயந்தவன், “நோ வயலன்ஸ் பாஸ், அமுதன். என்னோட பேரு” சொல்லி விட்டான்.

 

பெரிய பெரிய கோப மூச்சுகளோடு அவர்கள் இருவரையுமே முறைத்து நின்றவளை பார்த்தவன், “ஏய் கொடுக்காபுளி உன் பேரை மறந்துட்டேன் சொல்லு” என்றான்.

 

“என் பேர் கூட உனக்கு ஞாபகம் இல்லையா” இவள் அவனை‌ குறைக்கூற,

 

“பெரிய எலிசபெத் மகாராணி பேரு பாரு ஞாபகம் வச்சுக்க. அதெல்லாம் மறந்து போச்சு, ஒழுங்கா பேரை சொல்லு” அவனும் முறைத்து நின்றான்.

 

“டன்டனக்கா பாஸ். ச்சே ரம்யா பாஸ்” அமுதன் இருவரிடையே நுழைந்து அவள் பேரை சொல்ல, 

 

வசீகரன், “என்னாது டன்டனக்காவா, ஹாஹா உனக்கு ஏத்த பேரு தான் போ” சிரித்தபடி கேலி செய்ய, “டேய் உங்க ரெண்டு பேரையும் இங்கேயே குழி தோண்டி புதைக்க போறேன் பார்த்துக்க” ரம்யா அவர்கள் கேலியை பொறுக்க முடியாமல் சிடுசிடுத்தாள்.

 

“கோபபடாத கூல் பேபி” சைக்கிள் சந்தில் அமுதன் அவளிடம் வழிந்து வைக்க, “பேபி கீபின்ன முஞ்சை பேத்தேடுவேன் ஜாக்கிரதை” ரம்யாவின் கடுப்பான மிரட்டலில் அவன் முகம் கூம்பி போனது.

 

“ஏன்டா போயும் போயும் இவ பின்னாடியா சுத்தற, என்ன மொக்க டேஸ்ட்டா உன்னோடது?” வசீகரன் இப்போது சாவகாசமாக அமுதனிடம் போட்டு வாங்க,

 

“மொக்க பிகரா இருந்தாலும் பரவாயில்லைனு ரூட் விட்டா இப்படி குறுக்க வந்து ஆட்டைய கலச்சிட்டீங்களே பாஸ்” அமுதன் நொந்தபடியே சொல்ல,

 

“இவ சரியான போருடா, உனக்கு டைம் பாஸ்க்கு கூட ஒத்துவர மாட்டா. டைம் வேஸ்ட் பண்ணாம கிளம்பு” வசீகரன் அறிவுரையில் ரம்யாவின் காதில் புகை மட்டுமே வரவில்லை. இரண்டு வளர்த்தியான ஆண்களுக்கு நடுவே அவர்களின் தோளிற்கும் கீழே தெரிந்தவள், கழுத்து வலிக்க தலையை நிமிர்த்தி, முடிந்த மட்டும் முறைத்து கொண்டிருந்தாள்.

 

அமுதனின் முகம் மொத்தமாக வீழ்ந்து போக, “ரெண்டு வாரமா ஃபாலோ பண்ணி, ரெண்டு நாளா தான் பேசி கரெக்ட் பண்ண டிரை பண்ணேன் பாஸ், ப்ச் நீங்க வந்து மொத்தமா சொதப்பிட்டிங்க” அவன் வருத்தமாக சொல்ல,

 

“பொறுக்கி நாயே, ரெண்டு வருசம்னு பொய் சொன்னியா, இந்த ரம்யாவ அவ்ளோ ஈஸியா நினச்சிட்டியா, உன்னல்லாம்…” கையிலிருந்த பையை கொண்டு அவனை அடிக்க பாய்ந்தவளை வசீகரன் தடுத்து பிடித்துக் கொள்ள, தன் ராஜதந்திரம் பலிக்காததில் அமுதன் அங்கிருந்து நழுவிக் கொண்டான்.

 

“என்னை விடு, அவனை கொல்லாம விட மாட்டேன், பொண்ணுங்கன்னா அவ்வளோ ஈஸியா போச்சா அவனுக்கு” ரம்யா திமிறி கொண்டு போக,

 

“போதும் ரம்யா, அவன் போயிட்டான். எல்லாரும் உன்னயே பார்க்குறாங்க பாரு, கூல் டவுன்” வசீகரன் அவளை அமைதிப்படுத்த, சாலையில் போவோர் வருவோர்‌ பார்வை தன்மீதே இருப்பதை கவனித்தவள், தன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு நடந்தாள்.

 

“ரம்யா நான் உன்ன டிராப் பண்றேன் வா” வசீகரன் அழைக்க, “அந்த அரைலூசு கூட சேர்ந்து நீயும் தான என்னை கலாய்ச்ச போடா டேய்” நிற்காமல் நடந்தாள்.

 

“நான் உன்கூட கொஞ்சம் பேசனும், சசி பத்தி” வசீகரன் உயர்த்திய குரலில் நின்று அவனிடம் குடுகுடுவென ஓடி வந்தவள், “நானும் பேசனும் உன்கிட்ட இல்ல, சசி மாமாகிட்ட, என்னை அவர்கிட்ட கூட்டிட்டு போறியா?” என்று ரம்யா கேட்க, வசீகரன் சரியென தலையசைத்தான்.

 

***

 

காதல் கூத்து கட்டும்…