காதலில் கூத்து கட்டு 20

IMG-20210202-WA0002-e22642d8

காதலில் கூத்து கட்டு 20

 

கண்ணாடி சுவர்கள் கொண்ட அதிநவீன நீச்சல் குளம். அதில் விலாங்கு மீன் போல உடல் வளைத்து நீச்சல் பயிலும் அழகு புயல். தன் பொன்மேனியில் நீர் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் கரையேறி ஒய்யாரமாக நடந்து வந்து அவள் பூந்துவாலையை எடுக்க, அதன் அருகே புது நிறுவன சோப்பு கட்டி தனியாக காட்சியானது. மயக்கும் நகையோடு அந்த அழகி தன் முகத்தை பூந்துவாலையில் ஒற்றி எடுக்கவும், அந்த விளம்பர படப்பிடிப்பு முடிந்தது என்று வசீகரன் கை உயர்த்தி பெருவிரல் தூக்கி காட்டினான்.

 

அடுத்து பேக்கிங் வேலைகள் அங்கே துரிதமாகின. ஒருமணிநேர படப்பிடிப்பு என்று திட்டமிட்டது இரண்டு மணிநேரம் இழுத்திருந்ததில் அந்த இடத்திற்கு பேசிய வாடகையும் இரு மடங்காகி இருந்தது. அனைத்தையும் செட்டில் செய்துவிட்டு, தன் அலுவலகம் வந்தவன் படப்பிடிப்பு காட்சிகளை சரிபார்த்து சில மாற்றங்களை செய்து முடித்தவன், மற்ற வேலைகளை தேவாவிடம் ஒப்படைத்து விட்டு வீட்டை நோக்கி விரைந்தான். 

 

அங்கே அவனுக்காக வால் முளைக்காத இம்சை ஒன்று காத்திருக்கிறதே!  

 

வீடு, சமையல், கிளிக்கர்ஸ் விளம்பர படங்கள் என்று கால்களில் சக்கரம் கட்டி பறப்பது வசீகரனுக்கு சவாலாகவே இருந்தது. ரம்யா குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டால் தனக்கு சற்று ஆசுவாசமாகும் என்று அவளின் பொறுப்புகளையும் உணர்த்திக் கொண்டே தான் இருந்தான்.

 

ஆனால், ரம்யாவின் சொதப்பல் வேலைகளும், வசீகரனின் கற்பித்தலும் கண்டிப்பும் என நாட்கள் ரணகளமாகவே நகர்ந்தன. இருவருக்கும் இடையே பிடித்தம் இருக்கிறதோ இல்லையோ பொருத்தம் ஏகபோகமாக இருந்தது.

 

இருவரும் ஒவ்வொன்றிற்கும் முட்டிக் கொண்டாலும் முரண்டு பிடிக்கவில்லை. அவர்களிடையே இழையோடிய புரிதலும் மனப்பக்குவமும் அவர்களை இந்த புது வாழ்வின் சூழ்நிலையில் அழகாகவே பொருந்த செய்தது.

 

ரம்யா செய்த கலாட்டாவில் அன்றே முதல் வேலையாக வசீகரன் குளியலறை கதவிற்கு தாழ்ப்பாள் வாங்கி பொருத்தி விட்டான். 

 

இளங்கோவன் வீட்டிலும் எதை பற்றியும் சொல்லவோ கேட்கவோ இல்லை. அவர்கள் இருக்கும் கோபத்தில் தான் என்ன சொன்னாலும் எடுபடாது என்று யோசித்தவர், இப்போதைக்கு பொறுமை காப்பதே சிறந்தது என்று எண்ணிக் கொண்டார். மகனின் வங்கி கடன் உதவி தொகைக்கு வசீகரனுக்காக தானே பொறுப்பேற்று கையோப்பமிட்டு தந்தையாக தன் கடமையை நிறைவேற்றி திரும்பி விட்டிருந்தார்.  

 

வசீகரன் ஒருவன் இல்லாமல் அவர்கள் வீடு உயிர்ப்பற்று போயிருந்தது. சாவித்திரியும் மேகவாணியும் ஒருவருக்கொருவர் புலம்பலிலாவது ஆறுதல் தேடிக் கொள்ள, சசிதரன் பேச்சு அங்கு வெகுவாக குறைந்து போனது.

 

திவ்யா பெங்களூர் பணி மாற்றல் பெற்றுக் கொண்டு கிளம்பி இருந்தாள். புது இடம், புது நண்பர்கள், இதமான காலநிலை மாற்றம் அவளுக்கு ஆசுவாசமாகவும் சற்று நிம்மதியாகவும் கூட இருந்தது.

 

இரண்டு மகள்களையும் இரு பாதையில் தொலைத்துவிட்டு தனித்து நின்றனர் பைரவியும் திவாகரும். தன் பங்கிற்கு நவீன்குமார் வேறு வீடு தேடி வந்து சத்தமிட்டு போயிருந்தான். அவன் பேச்சின் அவமானத்தில் திவாகர் குறுகி போக, பைரவிக்கு கணவனின் நிலை மனம் பொறுக்கவில்லை. பெற்றவர்களின் நம்பிக்கை இழந்த பாசமும் முதிர்ச்சியற்ற பிடிவாதமும் அங்கே ஊசலாடி கொண்டிருந்தது.

 

இந்நிலையில், கல்லூரி முதல்வரை சந்தித்து ரம்யாவின் கணவனாக அவளின் படிப்பிற்கான பொறுப்பை வசீகரன் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்து, நடப்பு வருட கட்டணத்தையும் செலுத்திவிட்டு, அருகிருந்த பேரங்காடிக்கு வந்திருந்தனர். 

 

ரம்யாவிற்கு முதலில் கைப்பேசி ஒன்றை வாங்கி அவன் பரிசளிக்கவும், “தேங்க்ஸ் வசி, நானே எப்படி உன்கிட்ட கேக்கறதுன்னு தயங்கிட்டே இருந்தேன். உனக்கு ரொம்ப செலவு வைக்கிறேன்னு கில்டியா இருக்கு… நான் ஏதாவது பார்ட் டைம் ஜாப் போகவா?” ரம்யா அவனிடம் அனுமதி கேட்க,

 

“மண்டு, இதையெல்லாம் யோசிக்காம தான் நான் உன்ன கல்யாணம் பண்ணிகிட்டேனா? என்னால சமாளிக்க முடியும் ரமி, நீ வீணா குழம்பாம, படிக்கிற வேலைய மட்டும் பாரு சரியா?” வசீகரன் சமாதானம் சொல்ல, முகம் சுருங்க தலையாட்டிக் கொண்டாள்.

 

இருவரும் மற்ற தேவையான பொருட்களையும் பார்த்து வாங்க, “வசீ எனக்கு லாலிபாப் மறந்துடாத” என்றவளை சிரிப்போடு பார்த்தவன், “உனக்கு வளர்ற ஐடியாவே இல்லயாடி” என்று கேட்டான்.

 

“வளரத்துக்கும் லாலிபாப் சாப்பிடறத்துக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு பிடிச்சதை நான் சாப்பிடறேன்” என்று வாதம் செய்தவளின் தலையில் தட்டியவன், “சும்மா வாயடிக்காம என்னென்ன வேணுமோ சீக்கிரம் எடு போ, உன்ன வீட்ல விட்டுட்டு நான் கிளம்பனும்” என்று அவளை துரிதப்படுத்தினான்.

 

“லாலிபாப்…” அவள் நகராமல் ராகம் இழுக்கவும், அவளை முறைத்தவன், “ம்ஹூம் நீ என்ன சிணுங்கினாலும் நோ தான், சாக்லேட்ஸ், ஆரஞ்ச் மிட்டாய் இருக்கு. வேணும்னா சாப்பிட்டுக்கோ, சும்மா எப்ப பாரு குச்சிய வச்சு சப்பிகிட்டு, நல்லால்ல ரமி” வசீகரன் பெரியவனாக அவளை கண்டித்தான்.

 

“போடா, எனக்கு பிடிச்சதை சாப்பிட கூட, என்னை திட்டுற” அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, வசீகரன் அவளை கண்டுகொள்ளாமல் டிராலியை நகர்த்தியபடி, தேவையான பொருட்களை பார்த்து எடுத்து வைக்கலானான்.

 

அவனின் அலட்சியத்தில் ரம்யாவின் முகம் புசுபுசுவென்று ஊதி போனது. அவன் சொல்வதற்காக எல்லாம் லாலிபாப்பை விட மனதில்லை அவளுக்கு.

 

அவள் கண்களில் பல்ப் எரிய, “வசீ மாமா ப்ளீஸ் வசி மாமா ப்ளீஸ் ப்ளீஸ்” கெஞ்சலாக சொல்லி கொண்டு அவன் பின்னோடு வால் பிடித்து அலைபவளை கண்கள் சுருக்கி பார்த்தவன், “சரியான டகால்டி டீ நீ, உன் காரியம் ஆகனும்னா நான் வசி மாமாவா? இல்லனா அங்கிள் ம்ம்?” வீட்டில் செய்வது போதாது என்று பொதுவிடத்திலும் அவளின் அழிச்சாட்டியத்தில் அவன் மண்டை காய்ந்து போனது.

 

“மாமு, பிடிச்சதால தான கேக்குறேன், நீ என்ன சொன்னாலும் நல்ல பொண்ணா செய்றேன் வாங்கி தா மாமு” என்று சிணுங்கிவளை முறைக்க முயன்று தோற்று போனான். அவளின் இந்த புது அழைப்பு அவனை என்னவோ செய்தது.

 

பக்கத்தில் நின்றிருந்த பெண்மணி அவர்களின் அலும்பை நமட்டு சிரிப்புடன் கவனித்திருப்பது இவன் பார்வையில் பதிய, ரம்யாவின் கைப்பற்றி தன்புறம் இழுத்து நிறுத்தியவன், “என்னடி இது புதுசா மாமு எல்லாம், கேவலம் ஒத்த லாலிபாப்க்கு ஓவரா பண்ற நீ! எனக்கு என்னவோ எல் கே ஜி பாப்பாவ கட்டிக்கிட்ட ஃபீல் வருது” அவளிடம் குனிந்து நொந்துக் கொண்டான்.

 

வசீகரனிடம் ஏதோ சொல்ல நிமிர்ந்தவளின் பார்வை அவனை தாண்டி சென்று தேங்கி நிற்க, அவள் முகம் முழுவதும் பரவசமாக மலர்ந்தது. அவள் பார்வை சென்ற திக்கில் வசீகரன் திரும்பி பார்க்க, அங்கே பணம் செலுத்தும் இடத்தின் வரிசையில் பைரவி நின்றிருந்தார்.

 

மாமு, லாலிபாப் என்று அனைத்தையும் மறந்த ரம்யா, தாயை கண்ட சேயாக அவரிடம் விரைந்து சென்று நின்றவளின் முகம் பளீரென்று ஒளிர்ந்தது. ஆனால், மகளுக்கு மாறாக பைரவி, ரம்யாவை அருகில் பார்த்ததும் வெறுப்பாக முகம் திருப்பிக் கொண்டார்.

 

அதில் சுணங்கி போனவள், “ம்மா, இன்னும் என்மேல கோபம் போகலையா?” என்று கேட்க, அவரிடம் பதில் வரவில்லை.

 

“சரி நல்லா கோபப்பட்டுக்கோ, இப்ப என்கிட்ட பேசேன்ம்மா” என்றவள், தாயின் பாராமுகத்தை தாங்க மாட்டாமல் பேசிக் கொண்டே போனாள்.

 

“நீ எப்படி இருக்க ம்மா, சரியா சாப்பிடுற இல்ல, உடம்ப பார்த்துக்கோம்மா, அப்பாவையும் நல்லா பாத்துக்கோ, என்னை பத்தி கவலைபடாத, நான் ரொம்ப ரொம்ப ஹாப்பீயா இருக்கேன். வசீ என்னை சின்ன குழந்தைமாதிரி பாத்துக்குறான் தெரியுமா?” உணர்ச்சிவசத்தில் ரம்யா படபடவென பேசிக் கொண்டே போக, “போதும் நிறுத்து” பைரவியின் கடின குரல் அவள் பேச்சை நிறுத்தியது.

 

“உன்னபத்தி நான் ஏன் கவலைபடனும்? நான் சாப்பிட்டா என்ன? பட்டினியா செத்து தொலைஞ்சா தான் உனக்கென்ன? எங்களை வேணான்னு உதறி தள்ளிட்டு தான, அந்த பொறுக்கி கூட போன?” அவரின் ஆத்திர பேச்சில் அனைவரின் பார்வையும் இவர்களிடம் திரும்ப, பைரவியின் கோப வார்த்தைகளில் ரம்யா துடித்து போனாள். 

 

“சசாரி ம்மா” அவள் குரல் திக்கி அவள் தடுமாறவும், வசீகரனின் ஒற்றை கரம் அவளின் தோளைணைத்து கொண்டது. 

 

ரம்யா நிமிர்ந்து வசியின் முகம் பார்க்க அவள் விழிகள் நீர் கோர்த்துக் கொள்ள, தன் கரத்தின் அழுத்தம் கூட்டினான்.

 

வசீகரனை அங்கே பார்க்கவும் பைரவியின் ஆத்திரம் இன்னும் அதிகமாக, “பெத்து, வளர்த்து, உன்ன காப்பாத்தி வாழ வைக்க போராடின எங்கள தூக்கி போட்டு இவன் பின்னாடி போன இல்ல, எத்தனை நாள் இவன் உன்ன தாங்குறான்னு நானும் பார்க்க தான போறேன். அவன் குப்பையா தூக்கி போடும்போது எங்க கால்ல தான் வந்து விழனும் நீ, அப்ப தெரியும் எங்க அருமை உனக்கு” பைரவி தன்மை மறந்து வார்த்தைகளை விடவும், ரம்யாவின் உடலில் நடுக்கம் பரவியது.

 

“இதுக்குமேல ஒருவார்த்தை பேசுனீங்க அவ்வளோ தான், உங்கள ஆசையா பார்க்க வந்த பொண்ண இப்படியா கஷ்படுத்துவீங்க, ச்சே என்ன பெரியவங்களோ நீங்கெல்லாம்” அவரை கண்டித்த வசீகரன், மேலும் அங்கே நின்று மற்றவர்களுக்கு காட்சியாகாமல், ரம்யாவை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

 

தன் கோபத்தையும் ஆத்திரத்தையும் வரைமுறையின்றி கொட்டிவிட்ட பைரவியின் உள்ளமும் பாரமேறி கலங்க தான் செய்தது. ஆனால் அவர்கள் மேலான ஆதங்கம் சற்றும் குறைவதாக இல்லை.

 

***

 

கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள், முழுதாக பத்து நாட்கள் தாயையும் வீட்டையும் பாராது இருந்தது ரம்யாவை மிகவும் ஏங்கச் செய்திருந்தது. அம்மாவை பார்க்க மாட்டோமா என்று ஏங்கி கிடந்தவள் பைரவியை பார்த்ததும் அனைத்தையும் மறந்து அவரிடம் ஓடினாள். எத்தனை கோபம் இருந்தாலும் தன் அம்மா தன்னிடம் இத்தனை கடினமாக பேசுவாள் என்று அவள் நினைத்திருக்கவே இல்லை.

 

வசீகரனின் எந்த சமாதானமும் அவளை சரிசெய்யவில்லை. இப்படி வாடி கலங்கி இருப்பவளை பார்க்க அவனுக்கும் பொறுக்கவில்லை. அவளிடம் வந்து அவள் வாய்க்குள் அதக்கி இருந்த லாலிபாப்பை பிடிங்கினான்.

 

ரம்யா தலை நிமிர்த்தி பார்க்க, “இதான் சாக்குனு ஒரே நேரத்தில நாலு லாலிபாப்பை முழுங்கி இருக்க” வசீ குற்றம் சாட்ட, அவளருகில் இருந்த குச்சிகள் அதற்கு சாட்சி கூறின.

 

“நீதானே லாலிபாப் வாங்கி தர மாட்டேன்னு சொல்லிட்டு வாங்கி தந்த? இப்ப நீயே சாப்பிட வேணாம்னு சொல்ற போடா” என்றவள் தலையில் தட்டியவன், “மாமு மாமுன்னு நீதானடி கெஞ்சின, இப்ப லாலிபாப் வந்ததும், போடா சொல்றீயா” அவளின் மனதை மாற்ற பேச்சுக்கு இழுத்தான்.

 

“அப்ப நான் மாமு சொன்னதால தான் லாலிபாப் வாங்கி தந்தியா?”

 

“இல்லயே, உன் அழுமூஞ்சிய பார்க்க சகிக்காம தான் போனா போகுதுன்னு வாங்கி தந்தேன்” 

 

அவன் சீண்டலை புறந்தள்ளி, “ஏன் மாமு, அம்மா என்னை அப்படி பேசினாங்க?” என்று வேதனையாக கேட்டாள்.

 

கண்களை மூடி திறந்தவன், “காதல்னு ஆசைகாட்டி நான் உன்ன அவங்ககிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்துட்டதா அவங்க நினைக்கிறாங்க டா, அதான்” அவளுக்கு பதில் சொன்னபடி படுக்கையை தட்டி போட்டான்.

 

“ஆனா நீ என்னை காப்பாத்த தான இதெல்லாம் செஞ்ச, அதெல்லாம் புரிஞ்சிக்காம அவங்க உன்னயும் தப்பா பேசுறாங்க மாமு” அவனுக்காகவும் அவள் மனம் துடித்தது.

 

“அவங்க புரிஞ்சவங்களா இருந்தா எதுக்கு உனக்கும் எனக்கும் இந்த கஷ்டம், விடு ரமி வந்து படு வா” என்றழைத்தான். இரவு சாப்பாட்டையும் அவள் சரியாக உண்ணவில்லை. அழுது அவள் உடல்நிலை பாதிக்கப்படுமோ என்ற கவலை அவனுக்கு.

 

அவன் சொல்லை தட்டாது வந்து படுத்து கொண்டவளுக்கு மனம் கனத்திருந்தது. வசீகரன் அவள் அருகில் அமர்ந்து கைப்பேசியில் இன்றைய தகவல்களை பார்த்து இருக்க, 

 

“சாரி மாமு” ஏனோ ரம்யா அவனிடம் மன்னிப்பை வேண்டினாள்.

 

“எதுக்கு”

 

“முன்ன நானும் உன்ன புரிஞ்சிக்கவே இல்ல”

 

“ஆஹான்” என்று அவளிடம் திரும்பி அமர்ந்தான்.

 

“அது, முன்ன உன் ஹேர் ஸ்டைல் எனக்கு சுத்தமா பிடிக்காதா, அப்புறம் உன்ன எப்பவும் பொண்ணுங்களோடவே பார்ப்பேனா, அதான் உன்ன தப்பா நினச்சுட்டேன், சாரி” ரம்யா உணர்ந்து மன்னிப்பை வேண்ட, வசீகரன் சிரித்தான்.

 

“ம்ம் அப்புறம்” என்றான்.

 

“இப்ப தான் புரிஞ்சிக்கிட்டேன். நீ ரொம்ப ரொம்ப நல்லவன். சோ ஸ்வீட்” என்று சிலாகிக்க,

 

“சரியான ஸ்வீட் பைத்தியம் நீ, என்னை கடிச்சுகிடிச்சி தின்னு வைக்க போற” மொபைலை நோண்டியபடி அவளிடம் வம்பளத்தான்.

 

“ச்சீ நான் எல்லாம் கடிக்க மாட்டேன்” என்று அவள் முகம் சுழிக்க,

 

“அப்பாடா நான் தப்பிச்சேன்” என்றவனும் வாய்க்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

 

“நான் உன்கிட்ட கேக்கனும்னு நினச்சுட்டே இருந்தேன் வசீ, இப்ப கேக்கவா?”

 

“ம்ம் நான் வேணான்னு சொன்னா நீ விட போறியா? கேளு”

 

“நீ ஏன் திடீர்னு ஹேர்கட் பண்ணிட்டே?” வெகு நாளைய சந்தேகத்தை இன்று வினவினாள்.

 

“ஏன்னா? எயிட் இன்ச் ஹேர் வளர்ந்துடுச்சு, அதான்” என்றவனை விளங்காமல் பார்த்து, “எயிட் இன்ச் ஹேர் வளர்ந்தா வெட்டனுமா, அது ஏன்?” கேட்டாள்.

 

“எயிட் இன்ச்க்கு மேல தான் ஹேர் டொனேஷன்க்கு எடுத்துப்பாங்க மா” வசீகரன் விளக்கம் தரவும், படுத்திருந்தவள் சட்டென எழுந்து அமர்ந்தாள்.

 

அவன் முகத்தை விழியாடாமல் பார்த்து, “கேன்சர் பேஷன்ட்ஸ்காக ஹேர் டொனேட் பண்ணவா முடி வளர்த்து இருந்த?” அவள் வியந்து கேட்க, “ம்ம்” என்று தலையாட்டினான்.

 

ரம்யாவிற்கு அடுத்து பேச வார்த்தை வரவில்லை. புற்றுநோய் கதிரியக்க சிககச்சையில் நோயாளிகளுக்கு அதிகமான முடி இழப்பு ஏற்படும். தொடர் சிகிச்சையினால் நோயின் தன்மையிலும் தோற்ற மாறிபாட்டிலும் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆட்படுவர். இவ்வாறு தங்கள் தலைமுடியை முன்வந்து தானம் செய்பவர்கள் கேசம் அவர்களுக்கு செயற்கை முடி தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. அதனால் அவர்களின் தன்னம்பிக்கையும் ஓரளவு மீட்கப்படுகிறது என்று கேள்விப்பட்டு இருக்கிறாள் தான். அதனால் தன் கணவனின் இந்த குணத்தில் அவள் நெகிழ்ந்து தான் போனாள்.

 

“யூ ஆர் கிரேட் வசி மாமு” என்றாள்.

 

“வீணா போற தலைமுடியை கொடுத்ததுக்கு கிரேட்டா” என்று மென்னகை தந்தான்.

 

“ஆமா, இதெல்லாம் எவ்வளோ பெரிய விசயம் தெரியுமா? அதிகமா லேடீஸ் தான் ஹேர் டொனேட் பண்ணுவாங்கனு கேள்வி போட்டிருக்கேன். உனக்கு எப்படி இந்த யோசனை வந்தது?” ரம்யா ஆர்வமாக கேட்க,

 

“அதுவா, எனக்கு சின்ன வயசுல இருந்தே ஹேர் குரோத் அதிகம், சசிக்கு ஒன்னரை மாசத்து ஒருமுறை ஹேர் கட் பண்ணா போதும், ஆனா எனக்கு எவ்வளவு ஒட்ட வெட்டி விட்டாலும் டிவன்டி டேஸ்ல முடி கண்ண குத்தும்” என்று கதை சொல்லி, சிறு வயது நினைவில் முகம் மலர்ந்தான்.

 

“அம்மாவுக்கு தான் என் முடியால செம்ம டென்ஷன், அடிக்கடி சலூன் கூட்டிட்டு போகும்போது புலம்பி தள்ளுவாங்க, பெரியவனான அப்புறம், நானும் சோம்பேறித்தனமா ஹேர்கட் பண்ணாம வளர்த்து விட்டுக்கிட்டேன். எனக்கும் பிடிச்சு தான் இருந்தது. அப்ப தான் ஹேர் டொனேட் பத்தி தெரிய வந்தது. சோ நானும் செய்யலாமேனு செய்ய ஆரம்பிச்சேன்” என்று தோள் குலுக்கினான்.

 

“இதுவரை எத்தனை முறை டொனேட் பண்ணி இருக்க”

 

“ஃபைவ்‌ டைம்ஸ், இனியும் பண்ணுவேன்” என்று புன்னகையுடன் சொன்னவனை மெச்சுதலாக பார்த்தவள், கண்கள் மூடி படுத்துக் கொண்டாள்.

 

மனம் ஒரு நிலையில் நிற்காது அம்மாவிடமும் வசியிடமும் மாறி மாறி அலைப்பாய்ந்தது. ‘அம்மாவும் அப்பாவும் எப்போதும் எங்களை புரிந்து ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?’ என்ற பயம் சூழ, அவளின் இமைகள் ஓரம் ஈரமானது. 

 

“ரமீ, மறுபடி என்னமா இது சின்ன குழந்தை மாதிரி” அவளை தட்டி எழுப்பினான். அழும் பெண்ணை எப்படி அமைதிபடுத்துவது என்று அவனுக்கும் தெரியவில்லை.

 

“இனிமே எப்பவுமே அம்மா, அப்பா என்னோட பேசவே மாட்டாங்களா? கஷ்டமா இருக்கு மாமு” என்று தேம்பவும், பார்த்தவனுக்கு மனம் தாங்கவில்லை. அழுதவளை தன் தோள் சாய்த்து தட்டி கொடுக்க, அவளும் ஆறுதல் நாடுபவளாக அவனோடு ஒன்றிக் கொண்டாள். 

 

“உன்ன ஸ்டாராங் கேர்ள்னு நினைச்சேன் ரமி, இப்படி அழுதா எப்படி?”

 

“நீயும் தான உன் அம்மா, அப்பா, வீட்டையெல்லாம் பிரிஞ்சு வந்திருக்க, அவங்களும் ரொம்ப கோபமா இருக்காங்கல்ல, நீயும் அவங்களை மிஸ் பண்றல்ல, உனக்கும் கஷ்டமா இருக்கும் இல்ல” என்று அவன் மன வேதனைக்காகவும் சேர்த்து அழுதவளை, தன்னோடு சேர்த்து இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

 

“அவங்க கோபம் குறையட்டும், கொஞ்ச நாள் பொறுமையா இருக்கலாம், எல்லாரும் நம்மள புரிஞ்சு ஏத்துக்குவாங்க, நம்புடீ” அவன் தேறுதல் வார்த்தைகளில் அவளை மீட்க முயன்றான்.

 

சற்று நேரத்திற்கு பிறகு அவளின் தேம்பல் மட்டுபட, அவனிடமிருந்து மெல்ல விலகி கொண்டாள். ரம்யாவின் விலகல் வசீகரனை தவிக்கச் செய்தது.

 

போறுக்காதவனாக, “ஏய் வாடி” அவன் கெஞ்சலோடு கை விரிக்க, “ம்ஹும்” தலை அசைத்து அவனை நம்பாத பார்வை பார்த்தாள் ரம்யா. 

 

“ஹலோ உனக்கெல்லாம் அவ்ளோ சீன் கிடையாது, நல்லா பொசு பொசுன்னு கட்டிபிடிக்க பஞ்சு மூட்ட மாதிரி இருக்க, அதான்” என்றவனை அவள் தலையணை எடுத்து மொத்தி எடுக்க, “ஏய் ஏய் புஷி, சும்மா டீ” அவன் அலறவும் அவன்மீது தலையணையை வீசிவிட்டு, “இதையே கட்டிபிடிச்சு தூங்கு போடா” என்று திரும்பி படுத்துக் கொண்டாள். 

 

இவனுக்கு ஏமாற்றமாகியது. அவளை இழுத்து தன் மார்போடு சேர்த்து கொள்ள தோன்றியது. ஆனால் அவள் தன்னை தவறாக எண்ணிவிட்டால் என்று தயங்கினான். படுத்தவனுக்கு தூக்கமும் வந்து தொலைய மறுத்தது.

 

ரம்யாவிற்கும் உறக்கம் வரவில்லை. அவள் உடல் நலம் குன்றி அவதிப்பட்ட போதெல்லாம் பைரவி அவளை தாங்கி கவனித்து கொண்ட நிகழ்வுகள் எல்லாம் அவள் மூடிய இமைகளில் காட்சியாக, அப்படி அன்பை வாரி தந்தவரின்‌ இன்றைய வெறுப்பைக் கக்கிய பார்வையும் தோன்ற மறுபடி உடைந்து போனாள். ரம்யாவை பார்த்ததும் பைரவி முகத்தில் சிறிதேனும் கனிவு தோன்றி மறைந்திருந்தால் சின்னவள் சற்றேனும் தேற்றிக் கொண்டிருப்பாளோ என்னவோ?

 

அவள் முதுகு அழுகையில் குலுங்க, வசீகரன் அவளை தன்புறம் திருப்பி கலங்கி இருந்தவளை தன் மார்புக்குள் சேர்த்துக் கொண்டான். அவன் கைகளுக்குள் அடங்க மறுத்து திமிறியவள் அவன் அழுத்தத்தில் அடங்கி தேம்பினாள். 

 

“ஏன்டீ இப்படி ஒன்னொன்னா நினச்சு நினச்சு அழற? எனக்கு பயமா இருக்கு புஷி” என்றான்.

 

“எனக்கு ஒன்னுமில்ல மாமு, அம்மாவோட அந்த பார்வை என்ன குத்தி கிழிக்கற மாதிரி இருக்கு, அவங்க என்மேல வச்ச பாசம், நம்பிக்கை எல்லாம் எங்க போச்சு? நாம என்ன தப்பு செஞ்சோம் ஏன் எல்லாரும் நம்ம வெறுக்குறாங்க?” என்று புலம்பி தேம்பியவளை தட்டிக் கொடுத்தவன் மனமும் கனத்தது.

 

“யாரும் நம்ம வெறுக்கல புஷி, அவங்களை மீறி நாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம்ற கோபம் தான், வேற ஒன்னுமில்ல” என்றவன், “நீ கொஞ்சம் தெளிவா யோசிச்சாலே இதெல்லாம் உனக்கே புரியும். நான் உன்ன செல்லம் கொடுத்து ரொம்ப கெடுக்குறேன் போல, இப்பெல்லாம் ரொம்ப சைல்டிஷ்ஷா பிஹேவ் பண்ற, மேரேஜ்க்கு முன்ன இருந்த ரமி எங்கோ தொலைஞ்சு போயிட்டா போல, ஏன்? யோசிச்சி பாரு”

 

வசீகரன் சொல்வதை அவளாலும் உணர முடிந்தது. இப்போதெல்லாம் தெளிவில்லாத மனநிலையில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறாள். சில நாட்களில் அவள் வாழ்வில் அடுத்தடுத்த அதிரடியான மாற்றங்கள், உளைச்சல்கள் அவளை மந்தமாக்கி இருப்பதை ஓரளவு அவளால் உணர முடிந்தது. தன்னை மீட்டெடுக்க நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள முடிவெடுத்துக் கொண்டாள்.

 

வசீகரனின் ஆறுதலான அணைப்பு தந்த இதத்தில் அவளின் மன சஞ்சலம் மெதுவாக அமிழ, மெல்ல உறக்கம் ஆட்கொண்டது. 

 

“யாருடீ கட்டி பிடிக்கிறதை காமத்தில சேர்த்தது? ப்ச்” என்று வசீகரன் தன் அணைப்பை தளர்த்தி கேட்க, “ம்ம் கட்டிபிடி வைத்தியம்” என்று அரை தூக்கத்தில் முனகினாள் அவள்.

 

காதலில்லை காமமில்லை உன்னிடத்தில்

ஆசையில்லை வேசமில்லை என்னிடத்தில்

 

***

 

காதல் கூத்து கட்டும்…