காதலில் கூத்து கட்டு 21

காதலில் கூத்து கட்டு 21

 

கல்லூரி தொடங்கியதும் ரம்யாவின் நாட்கள் இயல்பாக நகர தொடங்கின. ஓரளவு வீட்டு வேலைகளையும் பழகிக் கொண்டாள். ஆனாலும் இந்த சமையல் மட்டும் அவளிடம் ஆட்டம் காட்டியது. சமையலறை பாடம் கொஞ்சம் கடினமாகவே இருந்தது சின்னவளுக்கு.

 

விடுமுறை நாட்களில் எப்போதும் அவளுக்கு சமையலறை பாடங்கள் தான். இப்போது காலை உணவுக்கு தேங்காய் சட்னி அரைப்பதற்கு தேவையானவற்றையும் அளவையும் வசீகரன் சொல்லிக் கொண்டிருந்தான்.

 

“இருக்கறதுலயே ரொம்ப சிம்பிளான ரெசிபி இந்த தேங்காய் சட்னி தான் நாலு பொருள் போட்டு அரைச்சு, தாளிச்சு, உப்பு போட்டா முடிஞ்சது இதையும் சொதப்பி வைக்காத புஷி” அவன் சொல்லவும் இவள் வேகமாக தலையாட்டி அவன் சொன்னதுபோல செய்தாள்.

 

“குட், நான் தோசை ஊத்துறேன் நீ தாளிச்சிடு” என்று வசீகரன் தோசை ஊற்றவும், அவன் கைப்பேசி அழைக்கவும் சரியாக இருந்தது.

 

“தோசை வெந்ததும் திருப்பி மட்டும் போடு புஷி, நான் வந்துர்றேன்” என்று சொல்லிவிட்டு கைப்பேசியோடு வெளியே நகர்ந்தான். 

 

எதிர்முனை பேச்சை கேட்டு தாடை இறுகிட, “அதுக்கு மேல உங்க இஷ்டம்” என்று வைத்தவனுக்கு மனது சமன்பட மறுத்தது. கைக்கு வந்த ஆர்டர் நழுவி போனதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

அதே வேகத்தில் சமையலறைக்குள் நுழைய, ரம்யா திருதிருவென நின்றிருந்தாள். தோசை கல்லில் தோசையையும் காணவில்லை. “தோசை எங்க ரமி சாப்பிட்டியா?” வசி கேட்க, மறுப்பாக தலையசைத்தவள் கீழே கைக்காட்டினாள்.

 

வெந்தும் வேகாமல் பிய்ந்தும் பிய்யாமலும் தரையில் விழுந்து கிடந்தது அவன் சுட்டு சென்ற தோசை.

 

“ஏய் என்னடி பண்ணி தொலைச்ச?”

 

“நீ சொன்ன மாதிரிதான் தோசையை திருப்ப ட்ரை பண்ணேனா, அது கீழ விழுந்துடுச்சு மாமு” ரம்யா பாவமாக சொல்ல இவனுக்கு சுறுசுறுவென்று கோபம் ஏறியது.

 

“ஒரு தோசைய கூட உன்னால ஒழுங்கா திருப்ப முடியாதா? தினம் தினம் உங்கூட எனக்கு இதே தலைவலியா போச்சுடீ”

 

“நான் எடுக்க பார்த்தேன் தோசை தான் வரல” அவள் காரணம் சொல்ல,

 

“நீ பேசாத, உன்ன கட்டிட்டு ஒரு வாய் சாப்பாடு நிம்மதியா சாப்பிட முடியுதா? என்னை சொல்லனும், நான் தான வான்டடா மாட்டிக்கிட்டு இப்ப அவதிப்படுறேன் ப்ச்” படபடவென அவளிடம் பொறிந்தவன், அதே வேகத்தில் வீட்டைவிட்டு வெளியேறி விட்டான்.

 

வசீகரனின் முதல் கோபத்தை பார்த்து ரம்யா உறைந்து நின்று விட்டிருந்தாள். அவள் பூமுகம் மொத்தமாக விழுந்து போனது. 

 

வசீகரன் நேராக அலுவகத்திற்கு வந்து, அங்கிருந்த வேலைகளை இழுத்துப் போட்டு கவனிக்க, ”என்னடா இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட? லீவ் நாள் அதுவுமா” என்று கேட்டதற்கு மேல் தேவாவும் அவன் இறுகிய முகம் பார்த்து அதிகமாக கிளறவில்லை.

 

தன் வேலைகளில் மூழ்கி போனவனுக்கு இரண்டு மணி நேரத்திற்கு பிறகே சோர்வு தட்டியது. காலையில் உண்ணாதது தான் காரணம் என்பதை உணரும்போதே ரம்யாவும் சாப்பிடாதது நினைவுவர வசி தலையில் அடித்துக் கொண்டான். தேவாவிடம் சொல்லிவிட்டு வீட்டை நோக்கி பறந்தான்.

 

வீட்டில் வசீகரன் அடித்து சாற்றி சென்ற கதவு தாழிடாமல் அப்படியே இருந்தது. சமையலறையிலும் போட்டது போட்டபடி இருக்க, படுக்கை அறையில் கவிழ்ந்து படுத்திருந்த ரம்யா, யூடியூபில் சமையல் செய்யும் முறைகளை உறங்கி வழிந்தபடி பார்த்து கொண்டிருந்தாள்.

 

“என்ன செய்ற?” என்றவன் குரலில் துள்ளி எழுந்தவள், “எப்படி தோசை சுடனும்னு யூடியூப்ல கத்துக்குறேன்” என்றாள் சின்ன குரலாக.

 

“தோசை சுட பெட்ரூம்லயா கத்துக்குவ, கிச்சன் ரூம் போய் தான கத்துட்டு இருக்கனும்”

 

“ஒரு தோசை வேஸ்ட் ஆனதுக்கே என்னை பட்டினியா விட்டு போயிட்ட, நான் ஊத்த தெரியாம ஊத்தி மாவு வீணா போச்சுனா என்ன பண்ணுவியோ, அதான் இதுலயே கத்துக்கிறேன்” ரம்யா உம்மென்று சொல்லவும் அவனுக்கு இளகியது.

 

“நீ பார்த்து கத்துக்கிட்டு சமைச்சிட்டாலும்! எனக்கும் பசி தான், வா சாப்பிடலாம்” அவன் முன்னே சென்று அடுப்பை தீ மூட்ட, அவள் தயங்கி வந்து ஓரமாக தள்ளி நின்று கொண்டாள். வசீகரன் பேசி சென்றதில் அவளுக்கு அவன்மீது அத்தனை கோபம், ஆனாலும் கூப்பாடு போடும் வயிற்றை அடக்க முடியாமல் அங்கே வந்து நின்றாள்.

 

“ஒதுங்கி நின்னா எப்படி? இப்ப நீதான் தோசை சுடனும் வா” வசீகரன் அழைக்க,

 

“நானா?!” ரம்யா நொந்து போய் கேட்டாள்.

 

“நீயேதான். நான் இல்லனா இப்படி பட்டினி கிடக்காம, உன் வயித்துக்கு சாப்பிடற அளவுக்காவது நீ சமைக்க கத்துக்கனும்” என்று அவளை இழுத்து அடுப்பு முன் நிறுத்தினான். 

 

“எனக்கு தான் சரியா சுட வரலையே, மொத்தா வருது இல்ல பிஞ்சு போது, ரௌவுன்டா கூட வரல” தன் சொதப்பல்களை அவளே ஒப்புவித்தாள்.

 

“இப்ப கொள்ள பசில இருக்கேன்டீ நீ எப்படி தந்தாலும் எனக்கு ஓகே, செய்” என்றவன் அவள் மேலும் தயங்கி நிற்கவும் அவள் கையை பிடித்து தானே தோசை வார்த்தான். வட்டமாக மெலிதாக அருமையாக வந்திருந்தது தோசை. தோசை கிழியாமல் திருப்பி எடுக்கும் லாவகத்தையும் அவளின் கைப்பற்றியே செய்து காட்டினான். 

 

மூன்று தோசைகள் ஆனபிறகு, இனி தானே செய்வதாக கூறி ரம்யா தோசை வார்த்தாள். அவனளவுக்கு வரவில்லையானாலும் ஓரளவுக்கு வந்தது. முட்டை, முக்கோணம், அறுங்கோணம் வடிவங்கள் வந்தனவே தவிர அந்த வட்ட வடிவம் மட்டும் வரவே காணோம்!

 

“எனக்கு ஏன் ரௌன்ட் ஷேப் மட்டும் வரவே இல்ல வசி” அவள் பாவமாக கேட்க, “அதான் இத்தனை ஷேப் வந்திருக்கே, வராத ஷேப்ப பத்தி ஏன் கவலைபடுற விடு, முதல்ல வா சாப்பிடலாம்” என்றான். பசியின் தாக்கத்தில் இருவருமே சாப்பிட அமர்ந்தனர்.

 

முதல் வாய் வைக்கும் போதே இருவரின் முகங்களும் மாறியது. ‘அய்ய, நல்லாவே இல்ல’ என்று வெளிவர துடித்த வார்த்தைகளை ரம்யா அப்படியே விழுங்கிக் கொண்டாள். வசீகரனிடம் மறுபடி வாங்கிக் கட்டிக் கொள்ள தைரியம் இல்லை அவளுக்கு.

 

ஏறிய கடுப்புடன் அவளை முறைத்த வசீகரன், “ஒரு வேலையும் உறுப்படியா செய்ய மாட்டல்ல” திட்டவும், ‘நான் என்ன பண்ணேன்?’ என்பதாக அவள் உதடுகள் பிதுங்க விழித்து வைத்தாள்.

 

“முழிக்காத, சட்னிக்கு உப்பு போட்டியாடீ?”

 

“நீ போட சொல்லவே இல்லயே” 

 

“நான் சொல்லல?”

 

“ம்ஹூம் இல்ல!”

 

“நீ கவனிக்கலன்னு சொல்லு மடச்சீ”

 

“போ நீ என்னை திட்டிட்டே இருக்க… நீ ரொம்ப மோசம், நான் ரொம்ப பாவம்” அவள் மூக்கு விடைக்க உதடு பிதுங்கியது.

 

“நீ இல்லடி நான் தான் பாவம், இப்ப அழுத மவளே கடிச்சு வச்சுடுவேன், போய் உப்பு எடுத்துட்டு வா ஓடு” அவன் விரட்டலில் உப்பும் கையுமாக அவன் முன் நின்றாள்.

 

அவள் முகம் வாடி தோய்ந்து போயிருந்தது. சென்ற மாதம் வரை சமையலறை நிழலில் கூட ஒதுங்காதவளை, இப்போது அதிகம் விரட்டி தான் வேலை வாங்குவதாக தோன்ற, மனம் இறங்கியவன் ரம்யாவின் கரம் பற்றி தன் அருகே அமர்த்திக் கொண்டான். அவளும் உம்மென்று அமர்ந்துக் கொண்டாள்.

 

சரியான அளவு உப்பு சேர்த்து சாப்பிட, இருவருக்குமே வயிறு நிறைந்தது. வழக்கத்துக்கு மாறாக ஒற்றை வார்த்தையும் பேசாமல் உண்டவள் மீது இதமாக படிந்தது அவன் பார்வை. படிக்கும் வயதில் குடும்ப சுமை, அவளும் பாவம் தானே என்று அவளுக்காக அவன் மனம் வாதாடியது. 

 

ரம்யா உண்ட பாத்திரங்கள் அனைத்தையும் எடுத்து வைக்க, வசீகரனும் சேர்ந்து இருவரும் கழுவி அடுக்கினார்கள். அப்போதும் அவள் எதுவும் பேசவில்லை.

 

“என்ன மேடமுக்கு கோபம் வந்துடுச்சோ, பேச மாட்டீங்களோ?” வசீகரன் பேச்சிற்கு இழுக்க, ரம்யா முகத்தை திருப்பி கொண்டு நடந்தாள்.

 

“ஓய், ஓவரா பண்ணாதடி, காலைல கொஞ்சம் ஒர்க் டென்ஷன். அதான் உன்மேல காட்டிட்டேன். சாரி” வசீகரன் கைகள் உயர்த்தி அவளிடம் சரணடைய, மிடுக்காக திரும்பியவள், “அப்ப என்னை வெளிய கூட்டிட்டு போய் ஐஸ்கிரீம் வாங்கி தா, அப்ப தான் உன்கூட பேசுவேன்” என்று சட்டமாக நின்றாள்.

 

“வாயாடி, இல்லனா மட்டும் இந்த வாய் அடங்கி இருக்குமாக்கும்” என்று அவள் தலையில் தட்டியவன், “வாங்கி தரேன் கிளம்பு, ஆனா ஒரு ஐஸ்கிரீம் தான்” வசீகரன் சொல்ல, துள்ளிக்குதித்து கிளம்பினாள் ரம்யா. அவளின் அலப்பறையில் அவனுக்குள்ளும் இறுக்கம் குறைந்து இதம் தருவதாய்.

 

***

 

ரம்யாவிற்கு கல்லூரியிலும் வசீகரனுக்கு தொழிலிலும் என நாட்கள் விரைந்தன. சமையலிலும் ஓரளவு தேறி இருந்தாள் ரம்யா. இருவரும் வீடு, சமையல் என பகிர்ந்து செய்வதால் பெரிய சுமையாக தெரியவில்லை.

 

வங்கி கடன் உதவியில் முதல்கட்ட தொகை வந்திருக்க, ஸ்டூடியோ அமைப்பதற்கான வேலைகள் தொடங்கி இருந்தன. இடம், உட்கட்டமைப்பு, தேவையான பொருட்கள், ஆட்கள் என தேவா, வசீகரனுக்கு அடுத்தடுத்த வேலைகள் வரிசையில் நின்றன. இடையிடையே விளம்பர படப்பிடிப்புகள் வேறு. வெற்றியின் அடுத்தடுத்த படிகளில் முழுமூச்சக முன்னேறிக் கொண்டிருந்தனர் அவர்கள்.

 

அட்ரா ரா நாக்க மூக்கா நாக்க மூக்கா நாக்க மூக்கா நாக்க மூக்கா,

அட்ரா ரா நாக்க மூக்கா நாக்க மூக்கா நாக்க மூக்கா நாக்க மூக்கா… 

 

மாலையில் வசீகரன் சோர்வாக வீட்டை நெருங்கும் போதே பாடல் சத்தம் வாசல் வரை கேட்டது. அழைப்பொலியை அழுத்திவிட்டு நிற்க, பாட்டுக்கேற்றபடி ஆட்டம் போட்டு கொண்டே கதவை திறந்தாள் ரமி. அவளை ஒரு மார்க்கமாக பார்த்தபடி உள்ளே நுழைய தொலைக்காட்சியில் தான் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. அசட்டையாக தலையசைத்து நகர்ந்தவனின் கைப்பிடித்து நிறுத்தியவள், “வா மாமு, நீயும் ஆடு” என்றாள் குத்தாட்டம் போட்ட படியே.

 

“எனக்கு ரொம்ப டயர்டா இருக்குடி, இப்ப முடியாது” அவன் சோர்ந்த முகமாக மறுக்க, “ஒரு ஃபைவ் மினிட்ஸ் டேன்ஸ்‌ ஆடி‌ பாரு, உன் டையர்ட் எல்லாம் ஓடி போயிடும்” என்றாள் ரம்யா விடாமல். 

 

“ப்ச்” என்று அலுத்துக் கொண்டவன், சமையலறை நொக்கி செல்ல, “அப்ப நீ டேன்ஸ் ஆட வரலையா? போ” என்று தலையை சிலுப்பியவள், பாட்டின் வேகத்துக்கு தாம்தூம் என குதிக்க ஆரம்பித்தாள்.

 

தண்ணீர் பருகிவிட்டு திரும்பியவனுக்கு அவள் குதியாட்டம் போடுவதை பார்க்க சிரிப்பு தான் வந்தது. அவனுக்கும் ஆட்டம் என்றால் மிகவும் பிடிக்கும் தான் ஆனால் இவள் ஆட்டம் போல அல்ல என்று எண்ணி நெற்றியில் அடித்து கொண்டான். 

 

அதே நேரம், பாடல் மாறி ஒலிக்க, அதற்கேற்ற படி சற்றே உடலசைவோடு முன்னே வந்த வசீகரன், அவளை தள்ளி விட்டு, “டேன்ஸ்னா என்னை பார்த்து கத்துக்கோ மடச்சீ” தோரணையாக சொல்லி விட்டு தன் ஆட்டத்தை ஆரம்பித்தான்.

 

தட்டலாட்டம் தாங்க

தர்லாங்க சாங்க

உள்ளார வந்தானா

பொல்லாத வேங்க…

திமிராம வாங்க

பல்பாயிடு வீங்க

மொறப்போடு நிப்பானா

முட்டாம போங்க

கெத்தா நடந்து வரான்

கேட்டை எல்லாம் கடந்து வரான்…

 

பாட்டின் தாளத்திற்கு ஏற்ற லாவகமான வேக அசைவுகளோடு ஆட்டம் போட்டு, ரமியை விழி விரிய வைத்தான் அவன்.

 

“ஏய்ய் எனக்கும் கத்து கொடு மாமு” என்று ரம்யா கெஞ்சவும், வசீகரன் இடவலமாக தலையசைத்து ஆட்டத்தின் வேகத்தை கூட்டவும், அவனை பார்த்து பார்த்து கை கால்களை நீட்டி மடித்து உடலைசைத்து ஆட முயன்றும் அவனை போல ஆட வராததில் கடுப்பாகி அவனை தள்ளிவிட்டு பாட்டை நிறுத்தி விட்டாள்.

 

“ஏன்டீ” அவன் அவளிடம் சலிப்பை காட்ட, “நீ மட்டும் நல்லா ஆடுற, எனக்கும் சொல்லிக்கொடு இல்ல பாட்டு கட்” என்றாள் கறாராக.

 

அவனும், “சரி வந்து தொலை” என்று பாடலை மாற்றி ஒலிக்க விட்டு, “நீ எதுவும் பண்ண வேணாம். பாடிய லூசா மட்டும் விடு ஓகே வா” என்று அவள் கரம் பிடித்து தன்புறம் இழுத்து சேர்த்து ஆட தொடங்கினான்.

 

காதலிக்க பெண்ணொருத்தி 

பார்த்து விட்டேனே

என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே

யாரு அந்த யாரு அந்த

ஆரவாரப்பூ

என் சட்டையின் மேல்

குத்தி வைத்த பட்டு ரோஜா பூ…

 

அவளின் கரம் சுழற்றி இடை வளைத்து மிதமான அசைவுகளுடன் லாவகமாக ஆடியவனை விழி விரிய மூச்சடைக்க பார்த்திருந்தாள் ரம்யா. 

 

மன்மதனின் தாய்மொழி நான்!

மீசையில்லா மின்மினி நான்!

தித்திடும் தீக்குச்சி நான்! 

தென்றலுக்கு தங்கச்சி நான்!

 

ஆடும் வேகத்தில் அவளை சுழற்றி விட்டு பிடிக்க முடியாமல் வசீகரன் கை நழுவ விட, இரண்டடி தள்ளி தொம்மென்று விழுந்தாள். 

 

“ம்மா… அடாபாவி உன்ன நம்பி உனக்கு கை கொடுத்தேன் பாரு என்னை சொல்லனும்” விழுந்த வலியில் உதட்டை பிதுக்கி அழ ஆரம்பித்தவளை தூக்கி விட்டவன், “ஹேய்ய் சாரி புஷி, கை நழுவி போச்சு” அவன் சமாதானம் சொல்லவும், 

 

“இல்ல எனக்கு டேன்ஸ்‌ சொல்லி தர உனக்கு பிடிக்கல அதான் வேணுமுன்னே தள்ளிவிட்ட” என்று அவன் கையை உதறியவள், “போடா இனி உன்கிட்ட டான்ஸ்‌ சொல்லி தர கேட்டா, என்னை செருப்பால அடி” என்று முறுக்கி கொண்டாள்.

 

“அதெல்லாம் இல்லடி, தவறி தான் கை நழுவிடுச்சு, என்னோட பேர்ஸ்‌ ஸ்லிம்மா இருப்பாங்க, என் கைநழுவி இருந்தாலும் அவங்க சமாளிச்சு நின்னு ஆடி இருப்பாங்க ஆனா நீ?” வசீகரன் ஏதோ விளக்கம் தர, அவளின் முகம் புசுபுசுவென்று ஊதி சிவந்தது.

 

“நான் குண்டுன்னு சொல்லி காட்டுறல்ல”

 

“நான் எப்போடி அப்படி சொன்னேன்”

 

“இப்ப சொன்னீயே உன் பேர்ஸ் எல்லாம் ஸ்லிம்னு அப்போ நான் குண்டுன்னு சொல்லாம சொல்லி காட்டுற தான?”

 

“நான் சாதாரணமா தான்டி சொன்னேன்”

 

“அந்த ஸ்லீம்மா இருக்கறதுல ஒருத்திய லவ் பண்ணி கட்டிக்க வேண்டியது தான, எதுக்கு என்னை தாலி கட்டி இங்க கூட்டிட்டு வந்து வச்சுருக்க”

 

அவள் பேசபேச இவனுக்கும் கோபம் ஏறியது. “எல்லாம் என் தலையெழுத்துடீ, நாள் பூரா அலைஞ்சு திரிஞ்சு வீட்டுக்கு வந்தா ஒருவாய் காஃபி கொடுத்தியா நீ, இதுல டேன்ஸ் வேற, இப்ப சண்டைக்கு வேற இழுக்குற ச்சே” என்று வெறுத்து சொன்னவன் அறைக்குள் புகுந்து கதவடைத்துக் கொண்டான். உடை மாற்றிக் கொண்டு முகம் கழுவி வர, மேசை மேல் அவனுக்கான காஃபி ஆவி பறக்க இருந்தது.

 

அதை பார்த்ததும் சிடுசிடுத்திருந்த வசீகரன் முகம் மென்மை பூசிக் கொள்ள, “ஹே புஷி தேங்க்ஸ்டி” என்றான். 

 

“நான் இன்னும் கோவமா தான் இருக்கேன்” அவள் அடுப்படியில் இருந்தபடியே சிடுசிடுத்தாள்.

 

‘கோவத்துல காஃபில சர்க்கரைக்கு பதிலா வேற எதையாவது கலந்து வச்சுட்டாளோ!’ என்று சந்தேகமாய் ஒரு மிடறு பருகியவனின் முகம் அஷ்ட கோணலாகியது.

 

“உனக்கு எத்தனை வாட்டி சொல்றது, காஃபில எனக்கு ஹாஃப் சுகர் இருந்தா போதும்னு இப்படியா வண்டி சர்க்கரைய கொட்டி வைப்ப?” சமையலறை வெளியே நின்று அவன் குற்றம் சொல்ல, 

 

“அய்யோ” என்று தலையில் அடித்துக் கொண்டவள், “காஃபி மாத்தி வச்சுட்டேன் மாமு, இந்தா இதான் உன்னோடது” என்று வேறு கோப்பையை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.

 

இடவலமாக தலை அசைத்தவன், “நீயும் இவ்வளோ சுகர் போட்டு குடிக்கறது தப்பு டீ, கொஞ்சமாவது ஹெல்த்கேர் பண்ணு” அவன் அக்கறையாக அறிவுரை சொல்லவும், முகம் சுருக்கி யோசித்தவள் தன் கையிலிருந்த அவன் காஃபியை ஒரு மிடறு குடித்து பார்த்து முகத்தை சுளித்துக் கொண்டாள்.

 

“ச்சீ கசக்குது, என்னால இவ்வளோ கசப்பா எல்லாம் காஃபி குடிக்கவே முடியாது நீயே குடி” என்று அவன் கையில் திணித்து விட்டு தன்னுடைய காஃபியை வாங்கிக் கொண்டு, எதிரிலிருந்த சேரில் ஒற்றை கால் மடக்கி அமர்ந்து, “ம்ம்… இது காஃபி” ரசித்து பருகினாள்.

 

தன் கையிலிருந்த காஃபியையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன், “ஏய் இதென்னடி நீ குடிச்ச காஃபிய நான் குடிக்கனுமா?” வசி கடுப்பாக கேட்க,

 

“நீ குடிச்சதை நான் குடிக்கிறேனில்ல” ரம்யா சட்டம் பேசினாள்.

 

“உன்ன நான் குடிக்க சொன்னேனா?”

 

“அதுக்கு இந்த காஃபியை வேஸ்ட் பண்ணனுமா, போடா இன்னைக்கு ஒருநாள் மட்டும் தானே எனக்கு பரவால்ல, நீ அதை சிங்க்ல ஊத்திட்டு வேற போட்டுக்கோ போ” என்றாள்.

 

“ப்ச் ஒரு காஃபிக்கு கூட இங்க இத்தனை அக்கபோரு” என்று நொந்தபடி சிங்கில் கொட்ட போனவன் சற்று தாமதித்து, ‘எனக்கு ஏத்த மாதிரி போட்டுருக்காளானு பாக்கலாம்’ என்று குடித்து பார்க்க வாயருகே எடுத்து வந்தவன் தயங்கி, தாமதித்து, வேண்டாம், பார்க்கலாம் என்று குழம்பி, கொஞ்சமாய் குடித்து பார்த்தான். அவன் ஒற்றை புருவம் ஏறி இறங்க, முகம் மலர்ந்தது.

 

‘புஷி அவ்வளோ ஒன்னும்‌ மக்கு இல்ல போல, எனக்கு பிடிச்ச மாதிரியே போட்டு இருக்கா’ எண்ணம் எழ, இப்போது காஃபியை கொட்ட மனம் வரவில்லை. வெளியே வந்து அவள் முன் அமர்ந்து ருசித்து பருகலானான்.

 

“இவ்வளோ சீக்கிரம் காஃபி போட்டுட்டியா மாமு?” ரம்யா கேட்க,

 

“இல்லடி, இதுவே எனக்கு ஓகே, காஃபி கலக்குறதுல நீ தேறிட்ட டீ” என்று பாராட்டினான்.

 

அதில் அழகாய் புன்னகைத்தவள், “அது நான் குடிச்சது ஆச்சே” என்று இழுத்தாள்.

 

“இன்னைக்கு ஒரு நாள் தானே நானும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என்று வசீகரன் பருகவும், திகைத்த பார்வையை தந்தவள், “டேய் இருடா, நான் இன்னிக்கி பல்லு விளக்க மறந்துட்டேனே” என்று ரம்யா சொல்லவும், அவன் முகம் மாறி பாவமாய் விழித்தான். அவள் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்து கொண்டிருந்தாள்.

 

அவளின் கேலி புரிந்து காஃபியை முழுவதுமாக பருகி முடித்தவன், இன்னும் சிரித்து கொண்டிருந்தவள் தலையில் தட்டிவிட்டு, “பரவால்லடீ நீ இன்னைக்கு மட்டும் தான பல்லு விளக்க மறந்துட்ட, நான் சுமார் ஆறு மாசமா மறந்துட்டேன்” என்று கண்சிமிட்டி அவள் டம்ளரையும் வாங்கிக் கொண்டு சென்று கழுவ தொடங்கினான்.

 

“உவேக் போடா டெர்டி பாய்” என்று அவள் முகம் சுருக்க, அவனின் சத்தமான சிரிப்பு சத்தம் அவளை உசுப்பேற்றியது. 

 

“நீயும் பொய் தானே சொன்ன மாமு” என்று அவனிடம் சென்று மல்லுக்கு நின்றவளை பார்த்து, அவன் சிரிப்பு சத்தம் கூடியதே தவிர குறையவே இல்லை. இன்றைய முழுநாளின் சோர்வும் களைப்பும் அவனுக்கு பறந்து போயிருந்தது.

 

நட்பின் தவமா

காதலின் வரமா

பெயரில்லா உறவிது

இனிமை கூட்டுதே

 

***

 

காதல் கூத்து கட்டும்…