காதலில் கூத்து கட்டு 25(1)(2)

IMG-20210202-WA0002-05535013

காதலில் கூத்து கட்டு 25(1)(2)

காதலில் கூத்து கட்டு 25(1)

 

கணவன், பெற்றோரின் அலைக்கழிப்புகள் இல்லாது, புது இடம், இதமான சூழல், புது நண்பர்கள், பொழுதுபோக்கு என ஆசுவாசமாக ஆறு மாதங்கள் கடந்திருந்தது திவ்யாவிற்கு.

 

அழுகை, வேதனை, கவலை, தோல்வி என்ற எதிர்மறை எண்ணங்களை பின்னுக்கு தள்ளி ஓரளவு தன் இயல்பை மீட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா. அவளின் எண்ணங்களில் அலைப்பாடு குறைந்திருக்க, அவளின் முகத்தில் தெளிவும் பேச்சில் நிதானமும் மீண்டிருந்தது.

 

கடந்ததை எண்ணி தவிக்காமல் வருவதை எண்ணி குழம்பாமல் நடப்பதை சீரமைத்துக் கொள்ள முயன்று தன் நாட்களை வேலை, வீடு, பொழுதுபோக்கு என கட்டுபாடுகளின்றி கழித்துக் கொண்டிருந்தாள்.

 

வார இறுதி நாட்களுக்கான பார்ட்டி அந்த நட்சத்திர ஓட்டலில் உற்சாகமாக களைக்கட்டிக் கொண்டிருந்தது. வழக்கமான ஆண், பெண் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களோடு அந்த இரவு ஆர்பாட்டமாக நகர, 

திவ்யாவும் தோழி கயல்விழியுடன் இசைக்கேற்றபடி சிறு உடல் அசைவுகளுடன் ஆடிக் கொண்டிருந்தாள். 

 

அங்கே ஆண், பெண் ஜோடியாக நடனம் பயின்றவர்களை பார்க்க, அவளும் சசிதரனும் சேர்ந்து ஆடி களித்த நினைவுகள் வந்து போனது. அவன் நினைவுகள் இப்போதெல்லாம் அவள் நெஞ்சை அழுத்துவதில்லை. இதழ் நனைத்த மென் சிரிப்போடு சசியுடன் ஆட்டம் போட்ட நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டாள் திவ்யா. 

 

உதிர்ந்த சருகுகள் துளிர்ப்பது காதலில் மட்டுமே சாத்தியம் போல!

 

கடைசியாக சசிதரன் தன்னிடம் பேசியது அவ்வப்போது அவள் நினைவில் வந்து போகும். 

 

‘உனக்கு எவ்வளவு திமிர் இருத்தா வீடு தேடி வந்த என்னையும் எங்க குடும்பத்தையும் அவமானப்படுத்தி இருப்ப… நான் உனக்காக வரதால தான நீ இப்படி ஆடுற, இனி வர மாட்டேன் டீ, எனக்கு நீ வேணாம். எப்படியாவது போய் தொலை ச்செ’ 

 

வீட்டில் இரு குடும்பத்திற்கும் பிரச்சனை நடந்த அன்றிரவு கைபேசியில் கத்திவிட்டு வைத்தவன் தான், அதன் பிறகு அவனும் அழைக்கவில்லை. இவளும் அழைக்கவில்லை. 

 

இப்போதெல்லாம் திவ்யாவின் மனதில் வெறுமை இருந்தாலும் முன்னை போல கலக்கமும் குழப்பமும் இல்லை. ஏதோவொரு வகையில் தெளிவாகி இருந்தாள்.

 

தன் தோளில் முரட்டு கரம் படிய திடுக்கிட்டு திரும்பிய திவ்யா, அருகே அஷ்வந்தை பார்த்து, நெற்றி சுருங்க, அவன் கையை தன் தோளில் இருந்து விலக்கிவிட்டு கயல்விழியிடம் நகர்ந்து நின்றாள்.

 

“என்ன அஷ்வந்த்?” திவ்யா சாதாரணமாக கேட்க,

 

“கமான் திவ்யா, லெட்ஸ் டேன்ஸ்” அவன் அழைத்தபடி அவளின் கைப்பற்ற, மாறாத முகத்துடனே கையை விலக்கிக் கொண்டவள், “நாட் இன்ட்ரெஸ்டட், யூ கேரி ஆன்” என்று திவ்யா நகர முயல, அஷ்வந்த் குறுக்கே வந்து நின்றான்.

 

“இன்ட்ரெஸ்ட் தான நான் வர வைக்கிறேன், வா என்கூட” அவன் விடாப்பிடியாக அழைக்க,

 

“ஒழுங்கா பிஹேப் பண்ணு அஷ்வந்த், வழிய விடு” திவ்யா அவனை கண்டித்தாள்.

 

“என்னடீ நானும் பார்த்துட்டே இருக்கேன். ஓவரா தான் சீன் போடுற, அழகா இருக்கேன்ற திமிரா?” அவன் போதையில் அவளிடம் கத்த,

 

“நீ இப்ப நார்மலா இல்ல, நாளைக்கு பேசிக்கலாம்” திவ்யா சொல்லவும்,

 

“ஏய் இந்த நூல் அறுக்குற வேலையெல்லாம் என்கிட்ட வேணா, நீ இங்க வந்துதுல இருந்து‌ நான் உனக்கு ரூட்‌ விடுறேன்னு உனக்கு தெரியாது? அதெப்படி என்னை உன் பின்னாடி அலையவிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி இருந்துக்கிறது. என்னடி உங்க பொண்ணுங்க சைக்காலஜி?”

 

“டி போட்டா எனக்கு பிடிக்காது அஷ்வந்த், மரியாதையா பேச கத்துக்க, உன்ன யாரு என் பின்னாடி அலைய சொன்னது மேன்? நான் மேரீட்னு தெரியாது உனக்கு ஈடியட்”

 

“மேரீட்னா, புருஷன் கூடவா இருக்க? அவனை அத்துவிட்டு இங்க தனியா தான கூத்தடிச்சிட்டு இருக்க, அதை என்கூட சேர்ந்து கூத்தடி வா, என்ன குறைஞ்சு போக போற நீ”

 

“ச்சீ உன்ன இவ்வளோ கேவலமா நான் நினைக்கல, நீ நினைக்கிற மாதிரி பொண்ணு நானில்ல, இப்படி நீ என்னை டிஸ்டர்ப் பண்ணா நடக்கறதே வேற” திவ்யா எச்சரித்து திரும்பவும், அஷ்வந்த் அவளின் கைப்பற்றி வேகமாக சுழற்றி இழுக்கவும், அவன் மீது மோதி தடுமாறி நின்றாள். அவன் பரிகாசமாக சிரிக்க, இவளுக்கு வந்த கோபத்தில் அவனை ஓங்கி அறைந்து விட்டு வேகமாக வெளியேறிவிட்டாள்.

 

“என்ன திவி, பொசுக்குனு அவனை அறைஞ்சிட்ட?” கயல்விழி மிரண்டு கேட்க,

 

“பின்ன, என் கைய புடிச்சி இழுத்தா நான் சும்மா நின்னுட்டு இருப்பேனா, முதல்லயே அவன் வாங்கி இருக்க வேண்டியது, இத்தனை நாள் போனா போகுதுன்னு விட்டு வச்சிருந்தேன், இன்னைக்கு வாங்கி கட்டிக்கிட்டான்” திவ்யா கோபமாக சொன்னாள்.

 

“இருந்தாலும் அஷ்வந்த் நம்ம டீம் லீடர், ஏதாவது பெருசா பிரச்சனை பண்ண போறான்” கயல்விழி பயம் கொள்ள,

 

“எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் விடு” என்று தைரியமாக சொல்லிவிட்டு உறங்கி போன திவ்யாவிற்கு அடுத்த நாளில் இருந்து அவளின் நிம்மதி பறிபோனது.

 

பணி இடத்தில் அவளையும் அஷ்வந்தையும் இணைத்து பலவித கீழ்த்தரமான, வக்கிரமான வதந்திகள் உலாவந்தன. ஒவ்வொன்றும் காதில் விழுந்தும் அதை மறுத்தும் ஓய்ந்து போனாள் அவள்.

 

“இதெல்லாம் உன்னோட வேலை தான்னு எனக்கு நல்லாவே தெரியும் அஷ்வந்த், ச்சே இந்த பொழப்பு பார்க்க உனக்கு கேவலமா இல்ல?” கொதித்து போய் அவன் கேபினில் அவனிடம் கத்தி விட்டாள்.

 

“நான் ஏன் கேவலபடனும்? எனக்கு அப்படியே குளுகுளுன்னு இருக்கு, இவனுங்க சொல்றதெல்லாம் எப்ப நமக்குள்ள நிஜமா நடக்கும்னு இருக்கு” அஷ்வந்த் வழிந்து பேச, இவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

 

“உன்ன தைரியமா எதிர்த்து நின்னா, அந்த பொண்ணோட நடத்தையும் ஒழுக்கத்தையும் தாக்கி பேசி, அவளை விழ வைக்கிறது தான, உன்னபோல ஆம்பளங்களோட கோழைத்தனமா மனப்போக்கு, இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன்” திவ்யா அவனை எதிர்த்து பேசினாள்.

 

“அப்படியா! உன்ன அசர வைக்க என்னால முடியும் பார்க்கறயா?” அவன் சவால் விட,

 

“வீணா உன் பேரை கெடுத்துக்காத, அவ்வளோ தான் சொல்லுவேன்” திவ்யா அசறவில்லை.

 

“உனக்கெதுக்கு இத்தனை‌ வீம்பு, நான் கொடுக்கறது நல்ல ஆஃபர் நீ‌ வேணா யோசிச்சு பாரு” அஷ்வந்த் விடுவதாகவும் இல்லை.

 

“நான் அசிங்கத்தை மிதிச்சிட்டேன்னு எவனோ என்மேல பழி போட்டா, அதுக்காக வருத்தப்பட்டு சாக்கடையில குதிக்கிற புத்தி எனக்கில்ல, இனி என்னை டிஸ்டர்ப் பண்ணாம இருக்கறது தான் உனக்கு நல்லது, சொல்லிட்டேன்” எச்சரித்து விட்டு சென்றவளை ஆழமாக பார்த்தபடி, தன் சுழல் நாற்காலியை அரைவட்டமாக சுழல விட்டான்.

 

திவ்யாவின் பேரழகு அவனை முதலில் ஈர்த்தது என்றால், அவள் தனித்திருக்கும் நிலை அவளை அடைய தூண்டியது. அவளின் நாகரீக உடையையும், அனைவரிடமும் அவள் இலகுவாக பழகும் விதத்தையும் பார்த்து அவளை தன்புறம் இழுப்பது சுலபம் என்று எண்ணி இவன் முயற்சிக்க, திவ்யா அவனுக்கு அசைந்து கொடுப்பதாக இல்லை. அவளுக்காக அவன் காத்திருந்த ஆறு மாதங்கள் அவனுக்கே அதிகப்படியாக தான் தோன்றின. இனியும் பொறுக்க முடியாமல் தான் பார்ட்டியில் அவளை வலுக்கட்டாயமாக பற்றி இழுத்து கன்னம் பழுக்க அறை வாங்கி அவமானப்பட்டு நின்றான். 

 

அதற்கு மேலும் அவன் ஆத்திரம் கூடியதே தவிர குறையவில்லை. அவளையும் தன்னையும் இணைத்து வதந்திகளை பரப்பிவிட்டான். அதற்கும் அவள் மசியவில்லை என்றானதும் அடுத்தென்ன என்று அவனின் யோசனை ஓடியது… அப்படியும் இப்படியும் அரை வட்டமாக சுழன்ற நாற்காலி நின்றது. அவன் முடிவெடுத்துவிட்டான்.

 

***

 

ஒரு அடுப்பில் உப்புமாவிற்கான கலவை கொதித்து சலசலக்க, மறு அடுப்பில் தக்காளி தாளிப்பு வதங்க, பக்கத்தில் ரைஸ் குக்கர் சாதம் வெந்து விட்டதற்கான சமிக்ஞை செய்ய, வசீகரன் வேகமாக மிக்சியில் தேங்காய் சட்னி அரைத்து வைத்து விட்டு, கடாயில் கொதித்திருந்த கலவையில் ரவையை மெதுவாக தூவியபடி அடிபிடிக்காமல் கிளறி விட்டான்.

 

அவன் ஒற்றை ஆளாக சமையலறையில் சுழன்று கொண்டிருக்க, ரம்யா படுக்கையில் சுருண்டு படுத்து கிடந்தாள்.

 

தட்டில் உப்புமாவும் சட்னியும் பரிமாறி எடுத்து கொண்டு ரம்யாவிடம் வந்த வசீகரன் அவள் இன்னும் எழாமல் இருப்பதை பார்த்து, “ரமி, எழுந்திடு, உனக்கு பிடிச்ச, உப்புமாவும் தேங்கா சட்னி தான் டிஃபன், சாப்பிடு வா” அவன் அழைக்க,

 

“ம்ஹூம்” அவள் எழாமல் ஓய்ந்த குரலில் மறுத்து முனகினாள்.

 

தலையசைத்து கொண்டவன் தட்டையும் தண்ணீர் தம்ளரையும் படுக்கையின் அருகில் கீழே வைத்து விட்டு, அவளருகில் அமர்ந்து அவளை தட்டி எழுப்பினான்.

 

“எழுடி” 

 

“ப்ச் பசிக்கல மாமு” அவள் பதில் பலகீனமாக வந்தது.

 

மாதாந்திர சுழற்சி வயிற்று வலியில் எழ முடியாமல் துவண்டிருந்தாள் அவள்.

 

“கொஞ்சமா சாப்பிட்டு படுத்துக்கோடி” 

 

அவளின் வலிக்கு என்ன செய்வது என்று இவனுக்கு புரியவில்லை. முன் மாதங்களில் இந்த நாட்களில் சோர்வாக ஓய்ந்து இருப்பாள் தான். முன்பு வயிற்றுவலி என்றாலும் கூட இவ்வளவு துவண்டு போனதில்லை. ஆனால் நேற்றிரவிலிருந்து அவள் படும் அவஸ்தையில் இவன் தான் அரண்டு போனான்.

 

வசீகரன் அவளை தூக்கி எழுப்பி அமர வைத்து அவளின் முகத்தில் கலைந்து புரண்டிருந்த மயிரிழைகளை ஒதுக்கிவிட்டு, “ரொம்ப வலியா இருந்தா ஹாஸ்பிடல் போலாமா புஷி” என்று வினவ,

 

“வேணா மாமு, அந்த டாக்டர் ‘இந்த டைம்ல இப்படி தான் வலிக்கும்’னு சொல்லுவாங்க” என்று முகம் சுருக்கியவளின் பதிலில் அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. 

 

அவளின் நெற்றியோடு நெற்றி முட்டியவன், “அப்படி எல்லாம் எந்த டாக்டரும் சொல்ல மாட்டாங்க, வலி குறைய டேப்லெட் கொடுப்பாங்கடி” ஏதோ சின்ன குழந்தைக்கு சொல்வது போல விளக்கம் வேறு தந்தான். 

 

“அவங்க தர டேப்லெட் என்கிட்டயே இருக்கு மாமு” என்றவள் நேராக அமர இயலாமல் அவன் மீது சாய்ந்து கொள்ள, அவளை மார்போடு தாங்கி அணைவாக பற்றி கொண்டான்.

 

“நைட் அந்த டேப்லெட் போட்டும் கூட உனக்கு வலி குறையல இல்ல, இத்தனை மாசமும் இப்படி நீ வலில துடிச்சது இல்லயேடீ, இப்ப என்னாச்சு உனக்கு?” அவனுக்கு கவலையானது.

 

“அது அப்படித்தான், ஒரு ஒரு மாசம் வலி படுத்தி எடுக்கும்” என்றவளுக்கு சுருக்கென்ற தோன்ற, கண்களை இறுக மூடி அவன் மார்போடு முகம் புதைத்துக் கொள்ள, அவனும் தன் அணைப்பை இறுக்கினான். 

 

நேரம் வேறு ஓடிக்கொண்டிருக்கிறது.

 

“புஷி, இன்னைக்கு ஷூட்டிங் இருக்குடி, இல்லனா கூட உன்கூடவே இருப்பேன்” வசி தவிப்பாக சொல்ல, “எனக்கு ஒன்னுல்ல மாமு, வலி அதுவா குறைஞ்சு போயிடும், நீ கிளம்பு” என்று ரமி விலகி அமர்ந்து கொண்டாள். 

 

ஒரே இரவில் களைத்து சிறுத்து போயிருந்த அவள் முகத்தை கவலையாக பார்த்தவன் ஏதோ சொல்ல வர, அவன் அலைபேசி ரீங்காரமிட்டது. பெருமூச்சோடு எடுத்து பேசினான். மறுமுனையில் தேவாவுடன் ஷூட்டிங் ஏற்பாடுகள் பற்றிய பேச்சுகள் நீண்டன. ரம்யா அமர்ந்திருக்க முடியாமல் மீண்டும் படுக்கையில் சறிய, அவளை ஒற்றை கையால் தடுத்து அணைத்து தன் தோள் சேர்த்துக் கொண்டபடி பேச்சை தொடர்ந்தான் வசீகரன்.

 

“ஓகே தேவா, நான் வர இன்னும் ஒன் ஹவர் ஆகும், நீ பார்த்துக்க”

 

“…”

 

“டேய் லேட் பண்ண மாட்டேன் டா. கண்டிப்பா வந்திடுவேன்” என்று தேவாவிடம் அழுத்தி சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டு,  தன்மேல் சாய்ந்து கிடந்தவளை பெருமூச்சோடு பார்த்தான்.

 

ரம்யா அவனை கவனிக்கும் நிலையில் இல்லை. வலியின் வேதனையில் எங்காவது முடங்கி கொண்டால் போதும் என்ற நிலையில் இருந்தாள்.

 

முதலில் அவளை தெளிவிக்க முயன்றவன், அவள் முகம் நிமிர்த்தி, அவளின் இட கன்னக் குழியில் தன் இதழை அழுந்த புதைத்து மீட்டெடுக்க, சொருகி இருந்த இமைகள் திறந்துக்கொள்ள ரம்யா துள்ளி விலகிக் கொண்டாள்.

 

அவன் ஒற்றை கன்னத்து முத்தம், அவளின் சோர்வையும் வலியையும் வேப்பிலை அடித்து விரட்டி இருக்க, அவனை பதற்றமாக முறைத்து வைத்தாள்.

 

வசீகரன் அவளின் முக பாவனையில் இதழ் மடித்து சிரிக்க, “ஏன்டா என்னை இப்படி பயமுறுத்தி வைக்கிற?” ரமி பாவமாக கேட்டு வைத்தாள்.

 

“ஹா ஹா இந்த உலகத்திலயே முத்ததுக்கு பயப்படறவ நீதான்டி” என்று சிரித்தபடி அவளை தூக்கி நிறுத்தியவன், “போய் பிரஷ் பண்ணிட்டு சீக்கிரம் வா, உப்புமா இப்பவே ஆறி போச்சு போ” அவள் அடுத்து வாய் வளர்க்கும் முன்பு குளியலறைக்குள் தள்ளி விட்டு வந்தான்.

 

“மதியத்துக்கு தக்காளி சாதம் கிளறி வச்சிருக்கேன், போட்டு சாப்பிடு, ஃபிரிட்ஜ்ல லெமன் ஜூஸ் இருக்கு, எடுத்து குடி ரிலாக்ஸா இருக்கும்” வசீகரன் சொல்லிக் கொண்டே தன் பொருட்களை எடுத்து வைத்தபடி தயாராக, ரம்யா பிடித்த உப்புமாவை பிடிக்காமல் உண்டு கொண்டிருந்தாள்.

 

“உனக்கு தான் உப்புமா சுத்தமா பிடிக்காதில்ல, இதையேன் செஞ்ச? இப்ப நீ என்ன சாப்பிடுவ?” அவனுக்கு உப்புமா மீதிருக்கும் வெறுப்பு தெரிந்து வினவ,

 

“என் புஷிக்காக தான் செஞ்சேன், நீ கொஞ்சமாவது சாப்பிடுவ இல்ல” என்று வசீ அவளிடம் மாத்திரையை எடுத்து நீட்ட, மறுக்காமல் அதை வாங்கி வாயிலிட்டுக் கொண்டாள்.

 

“நான் உனக்கு வேறெதாவது டிஃபன் செய்யட்டுமா மாமு?” ரமி மனம் தாங்காமல் கேட்க, “இல்லடி, நான் டொமேட்டோ ரைஸ் சாப்பிட்டுக்கிறேன் விடு” என்று தனக்கான உணவை எடுத்து வந்து அவளருகில் அமர்ந்து நேரத்தை பார்த்தபடி வேக வேகமாக உண்டான்.

 

“சாரி மாமு. என்னால தான உனக்கு லேட்டாச்சு” ரமி வருத்தமாக சொல்ல, “நமக்குள்ள என்னடி சாரி எல்லாம், எனக்கு உடம்பு முடியலனு நீ பார்த்தது இல்லயா” அவளின் மூக்கை இடது கையால் பிடித்து ஆட்டி விட்டு எழுந்து சென்றான்.

 

“நீ ஒன்னும் என்னை போல நோஞ்சான் இல்ல, அடிக்கடி ஏதாவது எனக்கு தான் உடம்புக்கு வந்து தோலைக்குது” ரமி தன்னை தானே நொந்துக் கொள்ள, “பரவால்லடி இப்ப தான் உனக்கான மருந்து என்கிட்ட ஸ்டாக் அதிகமாவே இருக்கே” வசீகரன் சமையலறையில் கைகழுவியபடியே பதில் கொடுத்தான்.

 

“என்ன மருந்து? என்ன உளற நீ?” அவளின் மழுங்கிய முளைக்கு ஏதும் விளங்குவதாக இல்லை.

 

தன் பையை தோளில் மாட்டியபடி, “உம்மா தான்” அவளிடம் இதழ் குவித்து சீண்டல் சிரிப்போடு சொல்ல, அவளருகில் இருந்த சீப்பு அவனை தாக்க பறந்து வந்தது. வசீ ஒதுக்கிக் கொண்டான்.

 

“போடா, இவ்வளோ நாள் குட் பாயா இருந்த, இப்ப எல்லாம் பேட் பாயா பிஹேவ் பண்ற” ரமி கடுகடுத்தாள்.

 

“ஆஹான் பொண்டாட்டிய கிஸ் பண்றது பேட் பிஹேவியரா, நல்லா தான் சைக்காலஜி படிக்கிற நீ” வசீ அவளை வாரினான்.

 

“நான் படிக்கிற பொண்ணுனு தெரியுதில்ல, என்கிட்ட இப்படி தப்பு தப்பா பேசாதடா, அது தப்பு”

 

“எது தப்பு? கொஞ்ச நேரம் முன்ன எழுந்துக்க கூட முடியாம சுருண்டு படுத்திருந்தவளை, இப்ப இவ்வளோ வாயடிக்க வச்சிருக்கு, என் கிஸ் எவ்வளோ ஸ்டாராங் பார்த்தியா?” அவளை வேண்டும் என்றே சீண்டிவிட்டான். ரம்யா ஓய்ந்து கிடப்பதை பார்க்க அவனுக்கு பிடிக்கவில்லை. அவளின் படபட பட்டாசு பேச்சையும் சேட்டைகளையும் தான் வெகுவாக ரசித்தான்.

 

“உனக்கு என்னை கிஸ் பண்ண ஏதாவது சாக்கு வேணும். அன்னிக்கு ஒரு சாக்கு. இன்னிக்கு ஒரு சாக்கு” ரமி உர்ரென்று சொல்ல, வண்டி சாவியை எடுத்துக் கொண்டு அவள் முன் வந்து நின்றவன், “உன்ன கிஸ் பண்ண எனக்கு சாக்கு எதுக்குடி?” ஒற்றை புருவம் உயர்த்தி, அவளை நெருங்கிட, அவள் முகம் மிரட்சி காட்டியது. 

 

ரம்யாவின் உச்சி வகிட்டில் இதமாய் இதழொற்றிய வசீகரன், “ரெஸ்ட் எடுத்துக்கோ, வலி அதிகமானா எனக்கு கால் பண்ணு, நானும் சீக்கிரம் வர டிரை பண்றேன். டேக் கேர் பை” என்று  விடைபெற்று சென்று விட்டான். ரம்யா தான் அவன் புது நெருக்கத்தில் திணறி திண்டாடி போனாள்.

 

படுக்கையில் விழுந்தவளுக்கு வயிற்று வலி சற்று மட்டுபட்டிருக்க, வசீகரன் சேட்டைகள் அவளை குடைந்தன. அவன் தங்கள் உறவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல முயல்வது புரிந்தது தான், இருந்தாலும் அவளின் மனதிற்குள் ஒருவித பரிதவிப்பு.

 

இத்தனை நாட்கள், கிட்ட தட்ட ஆறு மாதங்கள், இருவருக்குமிடையே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இதமான நகர்ந்த உறவில், சட்டென ஏற்பட்ட அதிரடி மாற்றம் அவளை திகைக்க செய்வதாய். சற்று மிரள செய்வதாய்.

 

ஒருவேளை பெற்றவர்கள் முன்னிருந்து திருமணம் நடந்திருந்தால் இந்த பரிதவிப்பு இருந்திருக்காதோ? 

 

ஒருவேளை தங்களுக்குள் நிஜமாகவே காதல் வந்து பின் மணந்திருந்திருந்தால் இந்த தடுமாற்றம் இருந்திருக்காதோ? ரம்யா யோசித்து யோசித்து குழப்பிக் கொண்டாள்.

 

உண்மையில் புது பெண்ணிற்குரிய தவிப்பும் பயமும் படபடப்பும் இப்போதுதான் அவளை ஆக்கரமிக்க தொடங்கி இருந்தது. 

 

அதை புரிந்துக் கொள்ள முடியாமல் ரம்யா தடுமாற, அவளை தெளிவிக்க வேண்டியவனோ, தன் தொழில்முறை படப்பிடிப்பில் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருந்தான்.

 

***

 

காதலில் கூத்து கட்டு 25(2)

 

காலங்கள் மாறினால் என்ன? வாழ்க்கை முறை மாறினால் தான் என்ன? ஆணுக்கு பெண் நிகரென்று தோள் தட்டிக் கொண்டாலும் தான் என்ன? மதிகெட்ட ஆணின் தந்திரத்தில், தைரியமான பெண்ணும் சிக்கி வீழ்ந்து போகும் நிகழ்வுகளுக்கு எங்குமே பஞ்சம் இருப்பதில்லை. என்றுமே பஞ்சம் இருப்பதும் இல்லை என்பது மறுக்கமுடியாத கசப்பான உண்மை.

 

மனிதன் ஈடு இணையற்ற வளர்ச்சியை எட்டி பிடிக்கும் இருபதாம் நூற்றாண்டில் கூட, ஆணின் துணையற்ற எந்தவொரு பெண்ணின் பாதுகாப்பிற்கும் உத்திரவாதம் கொடுக்க முடிவதில்லை. 

 

அத்தனை பாதுகாப்பற்ற நிலையில் தான் சிக்கி திகைத்திருந்தாள் திவ்யா!

 

திவ்யா துணிச்சலான பெண் தான், எதையும் யாரையும் எதிர்க்கும் தைரியமும் அவளுக்கு இருந்தது தான். ஆனால் அஷ்வந்த் அவள் தங்கி இருக்கும் வீட்டிற்குள் வந்து அவளுக்கு கெடு வைத்து செல்லவும் மிரண்டு தான் போயிந்தாள்.

 

வேலை இடத்தில் அவன் தொந்தரவை சமாளிப்பது என்பது வேறு. இரு பெண்கள் மட்டும் தங்கி இருக்கும் பிளாட்டிற்கு வந்து அவளை பணிய வைக்க மிரட்டுபவன் மேல் எழுந்த கோபத்தையும் ஆவேசத்தையும் பொறுத்து கொண்டு நின்ற தன்நிலையை எண்ணி அவளுக்கே பற்றிக் கொண்டு வந்தது.

 

திவ்யாவை விட கயல்விழி அதிகமாக பயந்து போயிருந்தாள். திவ்யா அளவிற்கு அவளிடம் தைரியம் இருக்கவில்லை. இவ்வளவு நேரம் கலங்கி புலம்பிய கயல்விழி இப்போது தான் உறங்கி இருந்தாள். 

 

திவ்யாவிற்கு உறக்கம் வரவில்லை. உறங்கும் எண்ணமும் இல்லை. அஷ்வந்த் பேசி சென்றவையே அவளை கொதிக்க செய்து கொண்டிருந்தது.

 

“என்னை பத்தி ரொம்ப ஈசியா நினைச்சுட்ட திவ்யா, எனக்கு ஒன்னு தேவைனா நான் எந்த லெவலுக்கும் போவேன்”

 

“இப்ப பாரு, உனக்காக உன் வீட்டுக்கே வந்திருக்கேன். நாளைக்கும் வருவேன்! தினமும் வருவேன். உன்னால என்ன செய்ய முடியும்?”

 

“போலிஸ்க்கு போவியா போ, நானும் நீயும் ரொம்ப நாளா ரிலேஷன்ஷிப்ல இருக்கோம். இப்ப நமக்குள்ள சின்ன ஊடல், அதான் கோபமாக இருக்கனு கதை கட்டி விடுவேன். அதுக்கு சாட்சி சொல்ல நம்ம ஆஃபிஸ்ல இருந்து ஒவ்வொருத்தனும் வந்து நிப்பான், புரியுதா?”

 

“ஓவர் சீன் போடாம ஒழுங்கா எனக்கு ஒத்து போயிடு திவ்யா, அது உனக்கும் நல்லது எனக்கும் நல்லது. ஓகே, சீ யூ டுமாரோ” 

 

அவன் இத்தனை பேசி சென்றும் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஆத்திரம் திவ்யாவிற்கு.

 

இதுவே சென்னையாக இருந்தால், அவனது திமிர்தனத்தை மொத்தமாக முடக்கி இருப்பாள். என்ன இருந்தாலும் அவள் சொந்த ஊர் போல் வருமா? அவளின் குரலுக்கு சொந்தங்கள், நண்பர்கள் ஓடி வந்து நின்றிருப்பார்கள். இவனை உண்டு இல்லை என்று ஆக்கி இருப்பார்கள்! ஆனால், இங்கே யாரிடம் உதவி கேட்க? 

 

தனித்துவிட்ட உணர்வும் பாதுகாப்பின்மையும் அவளை துவள செய்வதாய்.

 

தன் கைபேசி திரையில் சசிதரன் எண்களை அழுத்தியும் அழித்தும் நிலை கொள்ளாமல் தவிப்போடு தன்னுடனே போராடிக் கொண்டிருந்தாள் அவள்.

 

தங்களுக்குள் எத்தனை பெரிய பிரச்சனை இருந்தாலும் தனக்காக சசி வருவான் என்ற நம்பிக்கை இருந்தது அவளுக்கு. ஆனாலும் ஒருவித தயக்கம்! தவிப்பு!

 

தன் தயக்கத்தை உதறி அவள் அவன் எண்ணுக்கு அழைப்பு விடுத்த போது நள்ளிரவு மணி இரண்டை தாண்டி இருந்தது. 

 

முதல் அழைப்பு முழுவதுமாக ஒலித்து அடங்கி போக, மறுமுனை எடுக்கப்படவில்லை.

 

மறுபடி தயங்கி தயங்கி தான் அடுத்த அழைப்பு விடுத்தாள். அதுவும் எடுக்கப்படவில்லை.

 

அவள் மனம் சோர்ந்து போனது. மொபைலை தூக்கி வீசிவிட்டு, தலையணையில் முகம் புதைத்து தேம்பி அழுது விட்டாள். தனக்காக யாரும் இல்லையா? தன்மீது யாருக்கும் அக்கறை இல்லையா? என்ற பலகீனமான உணர்வு எழ, மனம் வெதும்பி உடைந்து போனது.

 

சில நிமிடங்களில் அவளின் அலைபேசி சிணுங்கி, அவளின் கதறலை நிறுத்தியது! தயக்கமாக மொபைலை எட்டி எடுத்து திரையை பார்த்தாள். சசிதரன் பெயர் ஒளிர்ந்தது.

 

அவளின் தொண்டைக்குழியில் ஏதோ அடைத்து கொண்ட உணர்வு! கண்கள் குளமாகி கன்னங்களில் வழிந்தோட, அவன் அழைப்பை ஏற்று காதில் ஒற்றினாள்.

 

“ஆர் யூ ஓகே திவி?” மறுமுனையில் சசிதரனின் பதற்றமான கேள்வியில், உடைத்தழுது விட்டாள்.

 

நட்ட நடு இரவில் அழைத்து இப்படி தேம்பி தெம்பி அழுதால், அவன் என்ன என்று தான் நினைத்து கொள்வான்?

 

“முதல்ல என்னனு சொல்லிட்டு அப்புறம் அழுது தொல” சசிதரன் குரலுயர்த்த, 

 

“சசசி…” அடுத்த வார்த்தை வரவில்லை திவ்யாவிற்கு.

 

கிட்டத்தட்ட ஒரு வருடமாக இருவரின் இடையே பெரிதாகி இருந்த விரிசல், அந்த நொடியில் காணாமல் போனதை என்னவென்று சொல்ல!

 

இந்த காதல் மட்டும் எப்படி சில விந்தைகளையும் பல விசித்திரங்களையும் சத்தமில்லாமல் அரங்கேற்றிவிடுகிறது? 

 

***

 

காதல் கூத்து கட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!