காதலில் கூத்து கட்டு 26

IMG-20210202-WA0002-27542db5

காதலில் கூத்து கட்டு 26

 

அஷ்வந்த் காரை நிறுத்திவிட்டு ஒரு நொடி கண்ணாடியில் தன் முகம் பார்த்து, தலையை கோதிவிட்டு சரி செய்து திருப்திப்பட்டு கொண்டு இறங்கி வந்தான்.  

 

நேற்றைய தன் மிரட்டலுக்கு திவ்யாவின் எதிர்வினை எதுவாக இருக்கும் என்று வேலையிடத்தில் இன்று அவளை ஆர்வமாக கவனித்தவனுக்கு, திவ்யாவின் சிவந்த கண்கள், சோர்ந்து களையிழந்த முகத்தை பார்த்து கொண்டாட்டமானது. தன் மிரட்டலுக்கு அவள் பயந்து விட்டாள். சீக்கிரம் தனக்கு பணிந்து விடுவாள் என்று குரூரமாக சந்தோசப்பட்டு கொண்டான்.

 

அதே உற்சாக மனநிலையில் சீட்டி அடித்தபடி துள்ளல் நடையோடு வந்த அஷ்வந்த் அவள் வீட்டின் அழைப்பு மணியை அடித்து விட்டு நிற்க, திவ்யா தான் கதவை திறந்தாள். அவன் வரவை அசட்டை செய்து அவள் உள்ளே சென்றுவிட, அஷ்வந்த் முகம் கடுகடுத்தது.

 

‘கொஞ்சமாவது கண்டுக்கிறாளா பாரு, அவ்வளோ திமிரு, இருடி உன்ன என்கிட்ட கதற வைக்கிறேன்’ உதட்டோர சுழிப்புடன் உள்ளே வந்தவன் முகம் சட்டென அதிர்ச்சிக்கு மாறியது, ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்த புதியவனை பார்த்ததும்.

 

சசிதரன் அவனை பார்த்து, “ஹலோ ஏன் அங்கேயே நின்னிட்டீங்க, உள்ள வாங்க பாஸ், உக்காருங்க” என்ற அவனின் இயல்பான வரவேற்பு வேறு அஷ்வந்தை திகைக்க வைத்தது.

 

‘யாருடா நீ? எனக்கு முன்னாடியே வந்து உக்கார்ந்து இருக்க!’ என்று மனதிற்குள் பொருமியபடி அமர்ந்தவன் பார்வை,‌ சற்று தள்ளி நின்றிருந்த பெண்களிடம் அதே கேள்வியை கேட்டது.

 

அஷ்வந்த் பார்வை சென்ற திக்கை கவனித்த சசிதரன், “திவி, சார்க்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வா” என்ற அவன் உரிமை குரலில் அஷ்வந்திற்கு கிலி பிடித்துக் கொண்டது.

 

‘அய்யோ இவன் அவளோட புருசனா! என்னை பத்தி போட்டு கொடுத்திருப்பாளோ?’ தொண்டை காய்ந்து போக, எச்சிலை கூட்டி விழுங்கி கொண்டான்.

 

திவ்யா அவனுக்கு பரிமாறிய பழச்சாறு தொட்டைக்குள் சிக்கி அடைப்பது போலிருக்க, ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு இப்போது இழுத்துக் கொள்ள முடியாத அவதியில் உட்கார்ந்து இருந்தான் அஷ்வந்த்.

 

அவனின் வெளிரிய முகத்தை நிதானமாக கவனித்திருந்த சசிதரன் அதே நிதானத்துடனே பேச்சை தொடங்கினான்.

 

“திவி உங்களை பத்தி எல்லாம் சொன்னா அஷ்வந்த்” என்று சசிதரன் நேராக சொல்லவும் அவனுக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது.

 

“தனியா இருக்க பொண்ணுங்கள பார்த்தாலே உங்களுக்கெல்லாம் குறுகுறுக்கும் போல மேன்?” சசிதரன் ஒருமாதிரி கேட்கவும், அஷ்வந்திற்கு எழுந்து தப்பித்து ஓடி விடலாமா என்று தோன்றி விட்டது.

 

“ஒரு பொண்ணொட பலவீனத்துல அடிச்சு அவளை உங்க தேவைக்கு யூஸ் பண்ணிக்கனும்ற இந்த கேவலமான மைன்ட் செட் இருக்குல்ல… அதுவொரு செயின் கனெக்ஷன் மாதிரி! எங்க வீட்டு பொண்ண நீ டார்ச்சர் பண்ணிட்டு இருக்க அதே நேரத்தில உங்க வீட்டு பொண்ண வேறொருத்தன் டார்ச்சர் பண்ணிட்டு இருப்பான்” என்ற சசிதரனின் அமைதியான முகம் அழுத்தமான கோபத்தை காட்ட, அஷ்வந்த் அதிர்ந்து எழுந்து விட்டான்.

 

“எதுக்கு இப்ப எழுந்து ஓட ட்ரை பண்ற உக்காருடா” சசிதரன் அதட்டலில் சட்டென உட்கார்ந்தும் கொண்டான். வசமாக மாட்டிக் கொண்ட உணர்வு அவனுக்கு.

 

திவ்யாவும் கயல்விழியும் அமைதியாக அவர்களை கவனித்தபடி நின்றிருந்தனர். கயல்விழிக்கு அவன் பிரச்சனை தீர்ந்தால் போதும் என்றிருந்தது. திவ்யா மனதில் அஷ்வந்த் பிரச்சனை ஒன்றுமில்லாது போய்விட, சசிதரன் மீதான எண்ணங்களே அவளை அழுத்திக் கொண்டிருந்தது நேற்றிரவு அவனிடம் பேசியதிலிருந்து! இன்று நேராக அவன் வந்து நின்றதை இன்னும் முழுதாக நம்பமுடியாமல் கணவன் மீதே பார்வை பதித்து இருந்தாள் அவள்.

 

“இதையே இன்னொரு ஆங்கில்ல யோசிச்சு பாருங்க பாஸ். எங்க வீட்டு பொண்ணுங்க கிட்ட நீங்க கண்ணியமா நடந்துக்கிட்டீங்கன்னா, அதேநேரத்தில உங்க வீட்டு பொண்ணுங்களையும் மத்தவங்க கண்ணியமா நடத்துவாங்க”

 

அஷ்வந்தின் மனைவி, தங்கை முகம் கேளாமல் மனதில் வந்து போனது. தலையை தாழ்த்தி கொண்டான்.

 

“இப்ப கூட நீ செஞ்ச காரியத்துக்கு கம்ளைன்ட் கொடுத்தா உன் ஜாப் என்னாகும்? உன் குடும்ப மானம் என்னாகும்? இதையெல்லாம் நீ யோசிச்சு‌ இருக்கனும். இல்ல, திவ்யாக்கு கம்ளைன்ட் கொடுக்கிற அளவுக்கெல்லாம் தைரியம் வராதுன்னு நினைச்சிட்டீயோ? தப்பு பாஸ், அவ உன் மண்டைய உடைக்க கூட யோசிக்க‌ மாட்டா, சோ இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ” 

 

மிரட்டலையும் அறிவுரையும் கலந்துகட்டி சசிதரன் சொல்ல, அஷ்வந்த் தொண்டையை சரி செய்து கொண்டான்.

 

“சசாரி, நீங்க… பிரிஞ்சு இருக்கீங்கனு தான் நான்…” அவன் திக்கி திணற,

 

“பார்த்தீயா அஷ்வந்த், நீ செஞ்சதை உன்னால வார்த்தையா கூட சொல்ல முடியல” என்றவன், “ஆமா நாங்க உடலால பிரிஞ்சி தான் இருக்கோம். உணர்வுகளால இல்ல. எப்பவும் அவ என்னோட திவி தான், நான் அவளோட சசி தான்!” சசிதரன் அழுத்தம் திருத்தமாக சொல்லவும், திவ்யாவின் இமையோரங்களில் ஈரத்தடங்கள்.

 

“நாங்க ரெண்டு பேரும் உயிருக்குயிரா லவ் பண்ணி, எங்க காதலை மறுத்த ரெண்டு குடும்பத்தையும் கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ப்ச் ஒரு சின்ன மிஸ்அன்டர்ஸ்டேன்டிங் அதான் இப்படி முட்டிட்டு நிக்கிறோம்! நாங்க மட்டுமில்ல இப்ப ஐடி ஃபீல்ட்ல இருக்க நிறைய ஜோடிக்கு இப்படி ஃபேமிலி பிராப்ளம் வந்து தொலையுது. ஏன்னா இந்த ஃபீல்ட்ல எல்லாமே ஓவரா கிடைக்குதில்ல, காசு, சுதந்திரம், கொண்டாட்டம், ஸ்டெர்ஸ், ஹெல்த் ஹிஷுஸ் இன்னும் நினைச்சது எல்லாம் ஈஸியா தெரிய, லைஃப் கூட ஈஸியா வீணா போகுது… எனிவே உனக்கு நான் தேங்க்ஸ் சொல்லனும் அஷ்வந்த்! நேத்து உன்னால தான் என் திவி என்கிட்ட பேசினா, என்னால ஒரு வருசம் செய்ய முடியாததை நீ ஒரே மிரட்டல்ல செஞ்சுட்ட” சசிதரன் புன்னகையோடு சொல்லவும், அஷ்வந்திற்கு காதில் புகை வராத குறை தான்.

 

‘ச்சே கடைசியில நான் தான் ஜோக்கரா’ அவனுக்கு ஏதாவது சுவரில் தலையை மோதிக் கொள்ளலாம் போல இருந்தது. 

 

“சாரி, நான் இனிமே உங்க திவ்யாவ டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், கிளம்புறேன்” அங்கிருந்து போனால் போதுமென்ற வேகத்துடன் அஷ்வந்த் எழுந்துக் கொண்டான்.

 

“ஒன் மினிட் அஷ்வந்த், திவி உங்களுக்கு ஏதோ கொடுக்கனும்னு சொன்னா வாங்கிட்டு போங்க” சசிதரன் சொல்லிவிட்டு திவ்யாவிடம் திரும்ப, வேகமாக அவர்களிடம் வந்தவள், அஷ்வந்த் கன்னத்தில் ஆவேசமாக ஓரறை விட்டாள்.

 

“இது என்கிட்ட நீ சீப்பா பிஹேவ் பண்ணத்துக்காக” திவ்யா பற்களை கடித்தபடி வார்த்தைகளை துப்பிவிட்டு நகர்ந்து கொள்ள, அஷ்வந்த் தன் இயலாமை எண்ணி தானே நொந்து கொண்டு, அடியை வாங்கிக் கொண்டு அவமானத்துடன் திரும்பி சென்றான்.

 

“வாவ் சசி அண்ணா கலக்கிட்டீங்க, நான் கூட என்னடா அவன உக்கார வச்சு ஜூஸ் எல்லாம் கொடுத்து பொறுமையா பேசறீங்களேன்னு கடுப்பாயிட்டேன். பட் அவனுக்கு அழுத்தமா புரிய வச்சிட்டீங்க நீங்க எப்பவும் திவ்யாகாக இருப்பீங்கன்னு, சூப்பர்ண்ணா” கயல்விழி உற்சாகம் பொங்க சசிதரனை பாராட்ட, அவன் சன்ன புன்னகையுடன் நகர்ந்து விட்டான்.

 

அவர்கள் தங்கி இருந்தது இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு என்பதால், அன்றிரவு சசிதரன் திவ்யாவின் அறையில் தங்கிக் கொள்ளும்படி ஆனது. வீம்புக்கு உடனே அங்கிருந்து சென்று விடவும் அவன் முயலவில்லை. அஷ்வந்த் மேலும் ஏதாவது தொந்தரவு செய்ய வாய்ப்பிருப்பதால் அங்கேயே தங்கிக் கொண்டான்.

 

மூவருக்கும் இரவு உணவு அமைதியாக கழிந்தது. கயல்விழி தான் அங்கே விடாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். திவ்யா, சசிதரன் இருவருமே அவளிடம் தலையசைப்பை மட்டுமே தந்து மௌனியாக‌ இருக்க, அதற்குமேல் பொறுக்காமல் கயல்விழி தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டு விட்டாள்.

 

இரவு ஏறிக்கொண்டிருந்தது. பெங்களூருவின் சீதோஷ்ண நிலை மனதையும் இதமாக்குவதாய் அமைந்திக்க, திவ்யா தயக்கமாக அறைக்குள் வந்தாள். கட்டிலில் சாய்ந்த வாக்கில் படுத்துக்கொண்டு மொபைலில் ஆழ்ந்திருந்தவன் பார்வை உயர்ந்து அவளிடம் தேங்கியது. 

 

எத்தனை மாதங்களுக்கு பிறகு இருவருக்குமான தனிமை இது. 

 

நேற்று அவள் முழுவதும் உடைந்து போன நொடியில் தான் தாங்க முடியாமல் சசிதரனை அழைத்து இருந்தாள். அப்போதும் அஷ்வந்த் தரும் தொல்லையை பற்றி சொன்னால், தன்னை‌ தான் கணவன் குற்றம் சொல்வான் என்பதும் அவளுக்கு புரிந்து இருந்தது.

 

‘உன்ன யாரு கொழுப்பெடுத்து போய் பெங்களூர் போக சொன்னது?’

 

‘நீ அடக்க ஒடுக்கமா‌ இருந்தா அவன் ஏன் உன்ன சீண்ட போறான்?’

 

‘வீக் என்ட் பார்ட்டில போய் கூத்தடிச்சி இருக்க, அதான் என்னையும் வெட்டிவிட பிளான் பண்ணி இருக்க இல்ல?’

 

இவ்வகையான கேள்விகள் அவனிடம் வரும், வந்தாலும் பரவாயில்லை என்று துணிந்தே அவனிடம் தன் நிலையை சொன்னாள்.

 

ஆனால், ‘இதையெல்லாம் முதல்லயே என்கிட்ட சொல்லனும்னு உனக்கு தோனல இல்ல திவி?’ அவன் முதல் கேள்விக்கு இவளிடம் பதிலின்றி போக, இவளிடம் திகைப்பே மிஞ்சியது.

 

அஷ்வந்த் முதலில் பிரச்சனை செய்யும் போதே சசியிடம் சொல்லி இருந்தால் இத்தனை மோசமாகி இருக்காது தான். அப்போது கணவனின் உதவியை நாட இவளுக்கு தன்மானம் இடம் தரவில்லை. 

 

‘பரவால்ல, இப்பவாவது என்கிட்ட சொல்லனும்னு தோனுச்சே விடு, நாளைக்கு நான் அங்க வரேன் நேர்ல பேசிக்கலாம்’ என்றதோடு இணைப்பை துண்டித்து விட்டிருந்தான். திவ்யா தான் மறுமுனை தூண்டிக்கப்பட்ட பின்பும், செல்போன் திரையையே வெறித்தபடி வெகுநேரம் அமர்ந்து இருந்தாள்.

 

தான் இதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவளுக்கே விளங்கவில்லை. அவனை நேரில் பார்த்தபோதும் கூட அவள் அதே விளங்காத பாவத்தில் தான் இருந்தாள்.

 

“நான் ரூம் ஷேர் பண்றதுல உனக்கு ஏதாவது பிராப்ளமா திவி?” கதவருகே நின்றபடியே பலத்த யோசனையில் இருந்தவளை சசிதரன் கேள்வி கலைத்தது. இல்லையென்று தலையசைத்தவள் கதவடைத்துவிட்டு கட்டிலின் மறுமுனையில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

 

ஒரே நேரத்தில் ஆயிரம் குரல்கள் ஒலிப்பது போல், அவளது மனம் ஒரே சமயத்தில் எதைஎதையோ தெளிவற்று சொல்லி அவளை திணறடித்தது.

 

“நான் ஒன் வீக் லீவ் எடுத்து இருக்கேன். இங்க தான் இருப்பேன் உனக்கு ஓகே வா?” சசிதரன் அவளின் பதில் என்னவாக வருமென்று யூகித்தே கேட்டான்.

 

‘உன் புத்திய காட்டற இல்ல, நான் உன்கிட்ட உதவின்னு கேட்டதை உனக்கேத்த மாதிரி யூஸ் பண்ணிக்க பார்க்கிற இல்ல?’ என்று கொதித்து வெடித்து கிளம்பும் அவள் பதிலுக்காக அவன் காத்திருக்க, 

 

“இப்ப முக்கியமான ப்ராஜக்ட் போயிட்டு இருக்கு. ஃபோர் டேஸ்ல அதை ஃபினிஷ் பண்ணியாகனும், அதுவரைக்கும் என்னால லீவ் எடுக்க முடியாது” என்றவளை புருவங்கள் சுருங்க பார்த்தான். தன் மனையாளிடம் புதுவித வியக்கதக்க மாற்றங்கள் வந்திருப்பதை அவனால் உணர முடிந்தது.

 

“உன்ன நான் லீவ் எடுக்க சொல்லல திவி, நீ ரெகுலரா ஆஃபிஸ் போ, அஷ்வந்த் அடங்காம மறுபடி தொல்லை பண்றானா பாரு, அவனுக்கு வேற பாடம் கத்துக்கொடுக்கலாம்” சசிதரன் தீவிரமாக சொல்லவும் அவனை பார்த்து திவ்யாவின் இதழ்கள் விரிந்தன.

 

சசிதரன், “என்ன?” என்று கேட்க,

 

இடவலமாக தலையசைத்தவள், “இப்ப நீயும் வசி மாதிரி பேசற, அதான்” அவள் புன்னகைக்குள் இதழ் மடித்து கொள்ள, சசிதரனும் அவளை ஆமோதித்து புன்னகைத்தான். அதோடு அவனிடம் வெற்று பெருமூச்சும் கிளம்பியது.

 

“எப்பவும் நான் பிரச்சனைனு சொன்னா உடனே வசீய தான அனுப்பவ, அவனும் தெலுங்கு பட ஹீரோ ரேஜ்க்கு ‘என் அண்ணிடா’ன்னு அவனுங்க மூஞ்ச பேத்துட்டு வருவான். இப்ப என்ன புதுசா, நீயே நேரா களமிறங்கி இருக்க? இதுல அந்த நாதாறி அஷ்வந்த் கிட்ட தேங்க்ஸ் வேற சொல்ற” அவள் குரலில் அவளின்‌ பேச்சில் பழைய திவ்யா மீண்டிருந்தாள். அதை அசையாத பார்வையோடு உள்வாங்கி கொண்டிருந்தான் சசிதரன். 

 

அவன் தொலைத்தது இவளை தானே! தேடி தேடி கிடைக்காமல் தோற்றதும் இவளிடம் தானே! காதல் நாட்களில் உயிர்ப்போடு இருந்தவளை, திருமண பிணைப்பில் உயிராக கலந்தவளை, எங்கோ எப்போதோ இவனே குத்தி கிழித்து உயிரற்று போக செய்திருந்தான். அவனே அறியாமல். அவனுக்கே தெரியாமல்.

 

“ஹேய் என்னாச்சு சசி?” அவன் வாடிய முகம் பார்த்து அவள் குழம்ப, “ஹக் பண்ணிக்கவா திவி ப்ளீஸ்” என்றவன் அவள் அனுமதிக்கு காத்திருக்க இயலாது தன்னவளை சேர்த்தணைத்துக் கொண்டான்.

 

ஆறுதல் நாடும் அணைப்பு!

 

தன் கணவனின் இந்த புதுவித பரிமாணம் அவளை திகைக்க வைப்பதாய்.

 

“இப்பெல்லாம் என்னையே எனக்கு சுத்தமா பிடிக்கல, உனக்கு நான் நல்ல புருஷனா இல்லனு நீ என்னை விட்டு போயிட்ட, வசிக்கு நான் நல்ல அண்ணனாவும் இல்லனு அவனும் என்னை விட்டு போயிட்டான்!” சசிதரன் கலங்கி மொழிய, 

 

அதிர்ந்து அவனை நிமிர்த்தியவள், “என்ன சொல்ற, வசி கூட உனக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டாள். ஒட்டி பிறந்தவர்களை போல் சுற்றி கொண்டிருக்கும் அண்ணன் தம்பிக்கிடையே பிரிவா? அவளால் நிச்சயம் நம்ப முடியவில்லை.

 

“உனக்கு தெரியாத மாதிரி கேக்காத, அவனுக்கும் ரமிக்கும் கல்யாணம் ஆனது தான் பிரச்சனையே” சசிதரன் விலகி நேராக அமர்ந்து பதில் சொன்னான்.

 

“அவங்க மேரேஜ் பண்ணிட்டது எனக்கும் ஷாக் தான். இப்ப வரைக்கும் ரமி, வசி லவ் பண்ணி இருப்பாங்கனு என்னால நம்பவே முடியல. லவ் இல்லாம எப்படி கல்யாணம் பண்ணிட்டாங்க, அதுக்கு மேல யோசிக்கவும் முடியல! எல்லாத்துக்கும் மேல, வசியோட முரட்டுதனத்துக்கும் ரமியோட குழந்தைதனத்துக்கும் எப்படி சரிபட்டு வரும்னு அதுவேற மனச கொடஞ்சுட்டே இருக்கு, என்னோட மண்ட காயறது தான் மிச்சம், இதுல நீ என்ன பிரச்சனைய பத்தி சொல்ற?” திவ்யா படபடவென கேட்டாள்.

 

“வசிக்கு லவ்வும் இல்ல ஒன்னுமில்ல. உனக்கு தான் தெரியுமே, பொண்ணுங்கனா அவன் அதிகமா கேர் எடுத்துப்பான்னு” சசிதரன் விளக்க வரவும்,

 

“ஆமாமா பொண்ணுங்களும் உன் தம்பி மேல ரொம்ப கேரிங் தான் அதுவும் எனக்கு தெரியுமே” திவ்யா குறுக்கே சொல்லி கேலியாக இழுத்தாள்.

 

“அதனால தான் ரமி கிட்ட அவனை பேச கூடாதுன்னு நீ சொன்னியா?” பழையதாய் போன கேள்வியை இன்று அவன்‌ கேட்க,

 

“ச்சே ச்சே என்மேல இருக்க கோவத்துல அவன் ரமிய ஹர்ட் பண்ணிட கூடாதில்ல. அதான் பேசாதன்னு சொல்லி வச்சேன். நம்ம பிரச்சனை தெரியாம அவன் ரமிய இழுக்கிறது எனக்கு அப்ப பிடிக்கல” திவ்யாவும் குழப்பி அடிக்காமல் நேராக பதில் தந்தாள்.

 

“ம்ம் நீ அதை அவன்கிட்ட சரியா சொல்லி இருக்கனும். ஆர்டர் போட்டா கேக்கறவனா அவன்? தங்கச்சி கூட பேச வேணாம்னு சொல்ற அளவு நீ அவனை நம்பலனு கோவம் அவனுக்கு” அன்றைக்கு வசீகரனின் கோபம் இப்போதும் அவன்‌ நினைவில் வந்து போனது.

 

“அப்ப நான் இருந்த மனநிலை அப்படி, எதுலயும் நிதானம், பொறுமை இருக்கல எனக்கு” அந்த சூழலை இப்போது ஓரளவு கடந்துவிட்டேன் என்பதில் அவளுக்குள் ஓர்‌ ஆசுவாசம்.

 

அன்றைக்கும் இன்றைக்கும் எதுவும் மாறவில்லை. ஆனால் காலம் மாறியிருந்தது. அன்று பச்சை இரத்தம் கசிந்த காயங்கள் இன்று வடுக்களாக மட்டும். காலம் மருந்தாகி இருந்தது.

 

“அன்னிக்கு நான் தான் ரமி ஹெல்த் கன்டிஷன் பத்தி நீ சொன்னதை அவன்கிட்ட சொல்லி அவனை சமாதானப்படுத்தினேன்”

 

“ஓஹோ”

 

“அதுல அவனுக்கு அப்பவே ரமி மேல ஒரு சாஃப்ட் கார்னர் வந்திருந்தது. இதுக்கு நடுவுல எந்த லூசு ரமி, வசி லவ் பண்றாங்கன்னு கிளப்பி விட்டதுன்னு தெரியல, அதையும் நம்பி உன் அப்பன் ரமிக்கு பார்த்தானே ஒரு மாப்பிள… வசீ அந்த நவீன் பத்தி சொல்லும்போது எனக்கே கோபம் வந்துச்சு, ச்சே ஆத்திரம் வந்தா பெத்த பொண்ணு வாழ்க்கை கூடவா ரெண்டாம்பட்சம் ஆகிடும்? நீ அதே வீட்ல இருந்தும் இதையெல்லாம் கண்டுகலயே திவி” அவள் மீதும் தன் வருத்தத்தை பதிவு செய்தான்.

 

திவ்யாவிற்கும் அதில் வருத்தம் தான். “தப்பு தான் சசி, அப்பா என்னை எதுவும் பேசவே அனுமதிக்கல, ‘எப்ப என்னை மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டியோ அப்பவே இந்த வீட்டுல உரிமைய இழந்துட்ட’னு என்னை ரொம்ப ஹர்ட் பண்ணி பேசிட்டாரு. அதோட ரமி ஹெல்த் கன்டிஷனுக்கு டாக்டர் ஃபேமிலி நல்ல சாய்ஸ்னு அம்மாவும் சொல்லவும், நானும் அமைதியாகிட்டேன். அப்ப எனக்குள்ளயே நான் குழம்பி போயிருந்தேன் சசி. எதையும் தெளிவா அனுகுற நிலையில நான் இருக்கல. இப்ப அதெல்லாம் நினைச்சா, ரமி விசயத்துல நான் ரொம்ப சுயநலமா நடந்துக்கிட்டேன்னு குற்றவுணர்ச்சியா இருக்கு” திவ்யா வருந்தி பேச,

 

“இனி இந்த குற்ற உணர்ச்சியால யாருக்கு புண்ணியம்? விடு. பட் நீ அன்னிக்கு ரமிக்காக நின்னிருந்தா வசி ஒதுங்கி போய் இருப்பான். இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருக்க மாட்டான்”

 

“என்ன?”

 

“ரமிய கல்யாணம் பண்ணிக்கிறதா முடிவெடுத்து வசீ என்கிட்ட சொன்னதும் நான் அதை மறுத்தேன். காதல், ஆசை எதுவும் இல்லாம, ரமிகாகா மட்டும் அவன் இப்படியொரு முடிவு எடுக்கும்போது என்னால எப்படி சம்மதிக்க முடியும்? அதுவும் ஒரு நோயாளி பொண்ணோட காலம் முழுக்க அவன் வாழ்க்கைய என்னால யோசிக்கவும் முடியல”

 

“ஏய் நிறுத்து, என்ன சொன்ன நோயாளி பொண்ணா? ரமிய நீயும் அப்படித்தான் நினச்சிட்டு இருக்கியா?” திவ்யா கண்டனமாக கேட்க, சசிதரன் மறுப்பாக தலையசைத்தான்.

 

“ரமி மேல எனக்கும் பாசம் இருக்கு தான் திவி, அதுக்காக என் தம்பி வாழ்க்கைய பணயம் வைக்க எனக்கு மனசு வரல. அவன் லைஃப்ல ஃபுல் என்ஜாய்மென்டா வாழனும்னு நினைப்பான், ஆட் பிலிம் மேக்கிங் ஃபில்ட் அவன் தேர்ந்தெடுத்ததுக்கும் அது தான் காரணம். புதுபுதுசா கிரேட்டிவிட்டியா வொர்க் பண்ணலாம். இன்கம் அதிகம். வொர்க் டென்சன் ஏத்திக்காம இருக்கலாம். லைஃப் ஜாலியா ரன் பண்ணலாம்னு அத்தனை பிளானோட இருக்கிறவன் எப்படி தினம் தினம் மருந்து, ஊசின்னு இருக்கிற பொண்ணோட சந்தோசமா வாழ முடியும்?”

 

தன் தங்கையை பற்றி சசிதரன் அப்படி சொல்ல திவ்யாவிற்கு அழுகை வந்துவிட்டது.

 

“நீ அக்காவா உன் தங்கச்சி பத்தி யோசிக்கிற, நான் ஒரு அண்ணனா என் தம்பி வாழ்க்கைய பத்தி யோசிச்சேன். அதான் அவன் என்ன சொல்லியும் அவங்க கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கல. வசீயும் என் பேச்சை கேக்கல அவன் முடிவுலயே இருந்தான். எப்படியாவது அவனோட முடிவ மாத்தனும்னு தான், அவனுக்கு சேன்ஷன் ஆகி இருக்க லோன்க்கு ஷூரிட்டி சைன் பண்ண முடியாதுன்னு பிளாக்மெயில் பண்ணேன்…”

 

“வாட்? அறிவிருக்கா உனக்கு, அந்த லோன்க்காக வசி எவ்வளோ அலைஞ்சான்னு தெரிஞ்சும்… இப்படி பேசி இருக்கியே” திவ்யா கணவனை கடிந்தாள்.

 

“அவனுக்கும் அந்த நினப்பு தான் போல, அடுத்து அவன் பேசல, வீட்டை விட்டு போயிட்டான். இப்ப வரைக்கும் என்கிட்ட பேசவே இல்ல” சசிதரன் ஆற்றாமையின் வேதனையோடு சொன்னான்.

 

இரவு எந்நேரம் ஆனாலும், தூங்கும் அண்ணனை எழுப்பி கூட அன்றைக்கு நடந்தவைகளை பகிர்ந்து கொள்ளாமல் தூங்க முடியாத வசீகரனா, மாத கணக்கில் அண்ணனிடம் பேசாமல் தவிர்த்து இருக்கிறான். திவ்யா யோசனை ஓடியது. அதேநேரம் இக்கட்டான சூழ்நிலையில் தானும் தன் தங்கைக்கு துணை நிற்கவில்லை என்ற உண்மை அவளை சுடுவதாய்.

 

“நான் அவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்காம ரமி, வசீ கூட போயிட்டானு தெரிஞ்சதும் அப்ப கோபத்துல நானும் அவகூட பேசாம விட்டுட்டேன். எப்படியும் நீ அவங்களுக்கு சப்போட்டா இருப்பன்னு தைரியமா இருந்தேன் சசி. நீயும் இல்லாம அவங்க தனியா…! சசி, அவங்க நல்லா இருக்காங்கல்ல. ரமிக்கு ஏதும் பிரச்சனை இல்லயே?” திவ்யா பதறி கேட்க, அவன் இதமாய் புன்னகைத்தான்.

 

“ம்ம் நல்லா இருக்காங்க, தனியா வாடகை வீடு எடுத்து தங்கி இருக்காங்க. ரமி காலேஜ் போயிட்டு இருக்கா, வசீயோட கிளிக்கர்ஸும் இப்ப நல்லாவே முன்னேறி போயிட்டு இருக்கு” சசிதரன் விவரம் சொல்ல, “என்ன? வாடகை வீட்டுலயா? அய்யோ தனியா எப்படி சமாளிக்கிறாங்க ரெண்டு பேரும்? ரமி குழந்தை சசி, அவளுக்கு எதுவுமே தெரியாது” காலங்கடந்து தங்கைக்காக திவ்யா உள்ளம் பதைபதைத்தது.

 

சசிதரன் அவளை ஆழமாக பார்த்தான். தான் இப்போது ஏதாவது சொன்னால் அவள் மனது கஷ்டப்படும் என்பது தெரியும். அவள் தங்கைக்கு செய்த தவறை தான் நானும் தம்பிக்கு செய்திருக்கிறேன் என்று எண்ணி பெருமூச்செறிந்தான்.

 

“நீ கவலைபடற அளவுக்கெல்லாம் ஒன்னுமில்ல, வசி, ரமிய அப்படி தாங்குறானாம். ரமியும் வசிய அப்படி கவனிச்சிக்கிறாளாம்… தேவா வந்து அம்மாகிட்ட கதை கதையா சொல்லிட்டு போவான்” சசிதரன் சொல்லவும்,

 

“ஓஹோ, தேவா சும்மா எல்லாம் வந்து சொல்ல மாட்டான். வசீ தான் அத்தை அவங்களை நினச்சு கஷ்டபட கூடாதுன்னு தேவாவ அப்பப்ப பேச சொல்லி இருப்பான்” என்று திவ்யா கொழுந்தனை சரியாக கணித்து கொள்ள, சசிதரனும் ஆமோதித்து தலையசைத்தான்.

 

“அவன் எப்பவும் அப்படித்தான் எல்லா விசயத்தையும் சரியா யோசிச்சு செய்வான். என்ன, அவன் கல்யாண விசயத்தையும் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு இருக்கலாம்” இன்னும் சசிதரனுக்கு மனம் ஆறவில்லை.

 

“யோவ், ரமிய கல்யாணம் பண்ணிக்க வசி கொடுத்து வச்சிருக்கனும். சும்மா சும்மா இப்படியே பேசினா நல்லால்ல சொல்லிட்டேன்” திவ்யா கணவனை எச்சரிக்க, சசிதரன் இருகைகளையும் தூக்கி சமாதானம் என்றான். அவளிடம் வாக்குவாதத்தை நீட்டிக் கொள்ளும் எண்ணமில்லை அவனுக்கு.

 

அடுத்து என்ன பேச, இருவருக்கும் இடையே மௌனம் குடிக்கொண்டது. துளி உறக்கமற்று கடந்திருந்த நேற்றைய இரவின் தாக்கத்தில் திவ்யாவின் கண்கள் இப்போது உறக்கத்தில் சோர்ந்தன.

 

“குட் நைட் சசி” என்றவள் விளக்கணைத்து போர்வைக்குள் புகுந்து இமைகள் மூடிக் கொண்டாள்.

 

சசிதரன் விடி விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் விழித்தபடி இருந்தான்.

 

“இன்னும் உனக்கு என்மேல கோபம் போகலையா திவி?”

 

சசிதரன் கேள்வியில் திவ்யா போர்வை விலக்கி அவனை நிமிர்ந்து பார்த்தாள். “நீ செஞ்ச மத்த எல்லாத்தையும் நான் மறந்தாலும், எனக்கு நீ செஞ்ச துரோகத்தை மட்டும் என்னால…” அவளின் தொண்டை அடைக்க, “மறக்க முடியாது சசி” என்றாள்.

 

அவன் மேலும் அதை பற்றி பேசி, இப்போது இருக்கும் இதமான நிலையை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

 

எனவே, “குட் நைட் திவி” என்று விட்டு எதிர்புறம் திரும்பி படுத்து கண்களை மூடிக் கொண்டான்.

 

திவ்யாவின் மனம் கனத்து போனது. ‘அந்த ஒரு நாள் மட்டும் தங்கள் வாழ்வில் வராமலே போயிருக்கலாம்’ என்று வேதனையோடு எண்ணிக் கொண்டாள்.

 

சசிதரனும்‌ அதே எண்ணத்தில் தான் பெருமூச்செறிந்தான். அன்றைக்கு தான் செய்த வைத்த பைத்தியக்காரத்தனத்தை நினைத்து ஆயிரத்து பத்தாவது முறையாக தன்னையே நொந்து கொள்ள தான் முடிந்தது அவனால்.

 

***

 

காதல் கூத்து கட்டும்…