காதலில் கூத்து கட்டு 28(2)

IMG-20210202-WA0002-c3b51cd0

காதலில் கூத்து கட்டு 28(2)

 

வசீகரன் எதிலும் துணிச்சலும் உறுதியும் உடையவன் தான் என்றாலும் அவனுக்கு அவசரபுத்தியும் அதிகம். முன்பின் வினைகளை பற்றி அவன் எப்போதுமே அதிகம் அலட்டிக் கொண்டவன் இல்லை. அதனால் தான் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிக்கும் துணிவு இருந்தது அவனிடம். அப்படியே ஏதேனும் பிரச்சனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற உறுதி கொண்ட செயல் வீரன் தான்.

 

அவனின் அந்த தீரம் தான், காதல், ஆசை என்ற எந்த பற்றும் இல்லாத போதிலும் ரம்யாவை திருமணம் செய்யும் முடிவை எடுக்க வைத்தது. குடும்பம் எதிர்த்தும் தங்கள் வாழ்க்கையை தனித்து வாழும் திடத்தை தந்தது.

 

முன்பு ரமியிடம் அவனுக்கு பெரிதாக ஈர்ப்பு இருந்திருக்கவில்லை தான். எப்போது எங்கே அவள் இவனில் பதிந்தாள் என்றும் தெரியவில்லை. அவளை எப்போது ரசிக்க ஆரம்பித்தான் என்றும் புரியவில்லை. ஏதோவொரு நொடியில் அவளை நெருங்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. அவளை தன்னவளாக மாற்றிக்கொள்ளும் ஆசையும் தோன்றி விட்டது. தன் ஆசையை ஆற போடும் பொறுமை எல்லாம் அவனுக்கு இருக்கவில்லை. தங்கள் இன்ப வாழ்வை தொடங்கிவிட்டான்.

 

அதன்பிறகு தான் அவனுக்கு புரிந்தது, ரம்யா படிக்கும் பெண்ணென்று. அவள் மனதை அவன் அலைபாய செய்து விட்டான் என்று. தான் அவசரப்பட்டதை புரிந்து கொண்டான். அவளிடம் இருந்து சற்று தள்ளி இருக்க முயன்றும், பல நேரங்களில் அவனால் முடியாமல் போனது அவஸ்தையான பரிதாபம்.

 

அதேநேரம், அடுத்தடுத்த தொடர் வாய்ப்புகள் கிளிக்கர்ஸ் நிறுவனத்தில் வந்து குவிந்தபடி இருந்தன. ஒன்றிரண்டு வாய்ப்பிற்காக காந்திருந்து வேலை செய்தது போக, இப்போது வந்து குவியும் வாய்ப்புகளில் தேர்ந்தெடுத்து வேலை செய்யும் நிலையில் இருந்தனர் அவர்கள்.

 

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் விளம்பரங்கள் தொடர, அவர்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஆட்களும் அதிகமாயினர். இரவு பகல் பாராமல் அவர்கள் வேலைகள் தொடர, வசீகரன் வீட்டில் இருக்கும் நேரத்தையும் ரம்யாவுடன் செல்வழிக்கும் நேரத்தையும் வெகுவாக குறைந்து கொண்டான். ரம்யா புரிந்து கொள்வாள் என்று அவனே நினைத்துக் கொண்டான். மறுபுறம் தன் தொழிலில் முழு நேரத்தையும் செலவிடுவது அவனுக்கு உற்சாகமாகவே இருந்தது.

 

ஆனால்…

 

தன்னவன் உடனற்ற பொழுதுகள் ரம்யாவை அதிகம் வெதும்ப செய்திருந்தன. 

 

இதுவரை வீட்டில் இருவரும் ஒவ்வொரு வேலையையும் பகிர்ந்து செய்து இருக்க, இப்போது அவள் மட்டும் தனித்து விடப்பட்ட உணர்வு.

 

எங்கும் எதிலும் அவன் நினைவுகளே முன் நின்று அவளை இம்சித்தன. வசீகரன் தன்னில் இத்தனை தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறானா? என்று வியந்து கொண்டாள் அவள். அவன் நிலையை ஓரளவு புரிந்து கொண்டு, நாள் கணக்கு, வார கணக்கு என காத்திருந்தவளுக்கு மாத கணக்கிலான அவன் பிரிவு வாட்டியது. தன்னில் தளர்ந்து போனாள் ரம்யா.

 

விடிந்தும் விடியாத விடியற்காலை பொழுதில், வசீகரன் குளித்து கொண்டிருக்க தயக்கமாக குளியலறையில் நுழைந்தவளை நெற்றி சுருக்கி பார்த்தான். 

 

“என்ன புஷி சீக்கிரம் முழிச்சி இருக்க”

அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் ரம்யா அமைதியாக வந்து நின்றாள். 

 

“சரி சரி வந்தது வந்த கொஞ்சம் முதுகு தேய்ச்சு விட்டு போ” அவன் சோப்பு கட்டியை நீட்ட, மறுக்காது அதை வாங்கிக் கொண்டவள் அவன் சொன்னதை செய்தாள். மனைவியின் உரிமையான பணிவிடையில் அவன் உள்ளம் குளிர்ந்து சிலிர்த்தது. 

 

“ஏய் அழுத்தி தேய்டி, பஞ்சு மிட்டாய் மாதிரி கையை வச்சுட்டு சாஃப்டா தேய்க்கிற, கூசுதடி” வசீகரன் உடலை நெளித்துக் கொண்டு சொல்ல, அவள் அழுத்தி தேய்த்தாள்.

 

ரமியின் அதிசயமான அமைதியை இப்போது தான் உணர்ந்தவன், “என்னடா இன்னைக்கு இவ்வளோ அமைதியா இருக்க, எனக்கு ஏதாவது ஆப்பு வச்சிருக்கியா?” இவன் வேண்டும் என்றே  வம்பிழுக்க, அதன் பிறகும் நீண்ட அவளின் அமைதி, ஏதோ சரியில்லை என்று தோன்ற செய்தது.

 

அவளிடம் திரும்பியவன் அவளின் வாடி வதங்கிய முகத்தை கவனித்து, “என்னாச்சு ரமி,‌ என்கிட்ட சொன்னா தான எனக்கு தெரியும்” பரிவாய் கேட்டான்.

 

அவன் ஈர மார்பில் நெற்றி முட்டிக் கொண்டவள், “உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் மாமு, நீ இல்லாம முடியலடா என்னால” என்றாள் உடையும் குரலில்.

 

தன்னவளின் தனக்கான தேடலில் அவனுள்ளே சுகமான பூகம்பங்கள் தோன்றி நிலைகுலைய செய்தன. அவளை தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான். 

 

தன்னவனின் அணைப்பில் அடங்கி போனவளின் மனகுமுறல் அடங்க மறுத்தது. “நான் உனக்கு அவ்வளோ சீக்கிரம் புளிச்சு போயிட்டேனா?” அவள் கேள்வி கமறலுடன் கசிந்தது.

 

“ச்சீ என்ன பேச்சு இது? நீயென்ன தயிரா? மோரா? புளிச்சு போக என் தே…னடைடீ நீ” என்றவன் சிரித்தபடி சொல்ல,

 

“கேலி பண்ற போ மாமு” அவன் மார்பில் குத்தியவள், “தினமும் நைட் நான் தூங்கினதுக்கு அப்புறம் வர, காலையில நான் எழுபோதே ரெடியாகிட்டு ஒரு பை சொல்லிட்டு போயிற” அவன் தன்னை தவிர்ப்பதை சுட்டி காட்டினாள்.

 

“வேலை அப்படி, இந்த புரோஜக்ட் முடியறவரைக்கும் ஹெவி வொர்க் இருக்கும் அதான்” அவள் கலைந்த‌ கூந்தலை வருடி அவன் தன் நிலையை கூறினான்.

 

“போ பொல்லாத வேலை, என்கூட நீ சேர்ந்து சாப்பிட்டு எத்தனை நாளாச்சு தெரியுமா? நானே சமைச்சு நானே சாப்பிட தொண்டைக்குள்ள இறங்கவே மாட்டேங்கிது” அவள் மூக்கை சுருக்கி சிணுங்க,

 

“நீ செஞ்சது எப்படிடீ சாப்பிடுற மாதிரி இருக்கும். அதான்” அவன் கேலி பேசி அவள் சுருங்கிய மூக்கை பிடித்து ஆட்டி விட்டான்.

 

“உனக்கு எப்பவுமே நான்னா கிண்டல் தான் போ” என்று சிறு பிள்ளையாய் உதடு பிதுக்க, அந்த அதரங்களை தனதாக்கி கொள்ள விழையும் ஆசையை எழுந்த வேகத்தில் அடக்கி கொண்டு அவளை விட்டு பார்வையை அகற்றி, திணறி நின்றிருந்தான்.

 

“என்கூட பேச கூட உனக்கு நேரமில்லல, நான் பேச கூட மறந்து போயிட்டேன் தெரியுமா?”

 

“ஏய் வாயாடி இதை நம்பனுமா? டெய்லி தான் காலேஜ் போறல்ல, உன் ஃபிரன்ட்ஸ் கூட வாயளக்காமயா இருந்து இருப்ப” 

 

“நான் ஒன்னும் அவ்வளோ வாயாடி எல்லாம் இல்ல. உன்கூட வந்த அப்புறம் தான் ஏட்டிக்குப்போட்டியா பேசறேன். மத்தபடி அமைதி பொண்ணு தான் கேட்டு பாரு”

 

“ஊரார் சொல்லுவாங்கடி நீ அமைதி பொண்ணுனு நான் எப்படி சொல்ல முடியும்? இந்த வாய் என்ன ஆட்டம் ஆடும்னு எனக்கு மட்டும் தானடி தெரியும்” என்றவன் அவளின் கீழுதட்டை இரு விரலால் பிடித்து இழுத்து விட்டான்.

 

கண்களை நிமிர்த்தி அவன் முகத்தை ஏக்கமாய் ஏறிட்டவள், “நீ என்னோட இல்லாம இவ்வளோ பெரிய உலகத்துல நான் மட்டும் தனிச்சு போயிட்ட மாதிரி தோனுது மாமு” என்றவளை தன்னோட அள்ளி தன் உயரத்திற்கு தூக்கி கட்டிக் கொண்டான். அவளின் கட்டற்ற காதலில் இவன் கட்டுப்பாடுகள் எல்லாம் கலைந்து போவதாய்.

 

“என்னை உனக்கு இன்னும் அதிகமா பிடிக்காம போயிடுச்சா மாமு? அதான் என்னை விட்டு விலகி போறீயா?” மூச்சு முட்டும் அவன் அணைப்பினூடே முனகலாய் கேட்டது அவள் குரல்.

 

சட்டென அவளை தன்னிடமிருந்து விலக்கியவன், “உன்ன எனக்கு பிடிக்காதாடீ! அவ்வளோ தான் நீ என்னை புரிஞ்சுகிட்டதா? உன்ன பிடிக்காம தான் உனக்காக எல்லாத்தையும் விட்டு வந்திருக்கேனா, சொல்லுடீ?” ஆதங்கமாக படபடத்தவன், அவள் முகம் முழுவதும் ஆவேச முத்தங்களை இட்டு தீர்த்தான்.

 

“எனக்கு உன்ன எவ்வளவு பிடிக்கும்னு இன்னுமாடீ உனக்கு புரியல” என்றவளை மீண்டும் இழுத்தணைத்து அவளின் கழுத்தடியில் இதழ் புதைத்து, மேலெழுந்து அவள் அரும்பிதழில் தேங்கிட, உணர்வுகள் ஊற்றாய் பெருக்கெடுப்பதாய்.

 

அவளிடம் சிறு மறுப்பை எதிர்பார்த்து சற்று தயங்கி தாமதித்தவன், அவள் அவனுள் உருகி கிறங்க, அவளுக்கான தன் தாபத்தை மொத்தமாக தீர்த்துக் கொள்ள விழைந்தான்.

 

நான் உருகும் பனிமலை என்று

தெரிந்தே பெண்ணே,

ஏன் என்னை தீமூட்டி தகிக்கிறாய்!

 

வசி குளித்து வந்து தன் செல்பேசியை பார்க்க, பதினைந்து விடுப்பட்ட அழைப்புகள் காட்டின. 

 

“ச்சே” என்று தலையில் அடித்துக் கொண்டு மறுமுனையில் அழைப்பை விடுத்து, “இன்னும் டிவன்டி மினிட்ஸ்ல அங்க இருப்பேன், கொஞ்சம் லேட்டாகிடுச்சு, ஓகே டன் வந்து பார்க்கிறேன்” அவசரமாய் பேசி, வேகவேகமாக தயாரானான்.

 

அவன் அவசரகதியை பார்த்து புன்னகைத்து கொண்டவள், துண்டை எடுத்து அவன் ஈர சிகையை எக்கி துவட்டி விட, அவளுக்காக தலைத்தாழ்தியவன் முகம் இளகியது. 

 

ரமி கையிலிருந்த துண்டை பிடுங்கி அவளின் ஈரம் சொட்டும் கூந்தலில் சுற்றி விட்டவன், நெற்றியில் அழுத்த இதழொற்றி, “ரொம்ப படுத்தறடீ என்னை” என்றான்.

 

கண்கள் சிவந்து முகம் வெளுத்து சோர்வும் குழைவும் அப்பட்டமாய் தெரிய நின்றவளை, “இன்னைக்கு காலேஜ் போக வேணா வீட்லயே ரெஸ்ட் எடுத்துக்கோ, ஏதாவது சிம்பிளா செஞ்சு சாப்பிட்டு தூங்குடி, நீ கால் பண்ணா என்னால எடுக்க முடியாது, மெஸெஜ் பண்ணி விடு ஃபிரீ டைம்ல ரிப்லே பண்றேன்” என்று மென்மையாய் சொல்லி அவளிதழில் அழுத்தமாக இதழொற்றி நிமிர்ந்தவன், தலையை குலுக்கிக் கொண்டு, மொபைல், பைக் சாவி, தோள் பையை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியேறினான்.

 

கதவை தாழிட்டு படுக்கையில் விழுந்தவள் இன்னும் தெளியாத பித்தத்தில் கிறங்கி சோர்ந்து உறங்கியும் போனாள்.

 

வேலைக்கு வந்த பிறகும் கூட எதிலும் மனதை செலுத்த முடியவில்லை அவனால். தன்னவளின் தனக்கான ஆசையும் காதலும் மட்டுமே அவனை ஆட்டி படைத்தது.

 

“ஏன் இவ்வளோ டிஸ்டர்பா இருக்க வசி, எனிதிங் ராங்?” கேட்ட நண்பனுக்கு அவனிடம் பதிலில்லை, தலையை மட்டுமே அசைத்தான்.

 

அன்று திட்டமிட்ட வேலைகளில் பாதியை கூட முடிக்க முடியவில்லை அவனால். மீண்டும் மீண்டும் ரமியின் நினைவே எழுந்து அவனை திக்குமுக்காட செய்தது ஒருபுறம். நிதர்சனம் அறைந்து அவனை குற்றம் சாட்டியது மறுபுறம்.

 

படிப்பு, வீடு என்று இருந்த சிறு பெண்ணை காதலென்று ஒரு பொய்யில், சொந்த வீட்டில் சிறை வைக்கப்பட்டு, கட்டாய திருமணம் வரை சென்று, சூழ்நிலை கைதியாக இருவரும் மணமுடித்துக் கொண்டு, எந்த வசதியும் இன்றி அவளை கஷ்டபடுத்தியது மட்டுமின்றி, அவளின் படிப்பை கூட கவனம் கொள்ளாது அவளிடம் தன் ஆசையை தேவையை நிறைவேற்றிக் கொண்டதை இப்போது எண்ணிப்பார்க்க, அவனுக்கே அவனின் ஒவ்வொரு செயலும் அசிங்கமாக தோன்றியது.

 

படிக்கும் வயதில் அவளின் மனதை கெடுத்து தன் மீது பித்தாக்கி வைத்திருப்பதில் இவனுக்கு கர்வம் தோன்றவில்லை. குற்றவுணர்வு தான் எழுந்தது.

 

அதற்கு மேல் தாமதிக்க முடியாமல் மாலையே வீட்டிற்கு கிளம்பி விட்டான். எப்படியும் ரமியிடம் பேசி ஆக வேண்டும். இந்த பிரச்சனை இன்றே முடிந்தால் தான் அவனால் முழுமையாக பணியில் கவனம் செலுத்த முடியும்.

 

மாலை ஐந்து மணிக்கே வந்து நின்ற தன் கணவனை பார்த்தும் ரமியின் முகம் வியந்து மலர்ந்தது. ஓடி வந்தவள் தயக்கம் மறந்து அவனை கட்டிக்கொண்டாள்.

 

“இன்னிக்கு சீக்கிரமே வந்துட்ட மாமு” என்று புது பூவாய் சிரித்தவளை ஆதுரமாய் பார்த்து புன்னகைத்தான். காலைக்கு இப்போது அவள் முகம் தெளிந்து தெரிவதில் அவனுக்கு நிம்மதி வந்தது.

 

“நாம ரெண்டு பேரும் சேர்ந்து காஃபி குடிக்கலாம், சீக்கிரம் போய் ஃபிரஷ் ஆகிட்டு வா” என்று சமையலறைக்கு குதித்து ஓடினாள்.

 

தன்னை ஒட்டியே அமர்ந்து காஃபி குடித்தபடி வளவளத்து கொண்டிருந்தவளை அமைதியாக பார்த்தபடி குளம்பியை பருகி முடித்து அவள் புறம் திரும்பி நேராய் அமர்ந்து கொண்டான்.

 

“நான் சொல்றதை கவனமா கேளு புஷி, புரிஞ்சிக்க ட்ரை பண்ணு ஓகே” அவன் நிதானமாக சொல்ல,

 

“நான் உன் தோள் மேல சாஞ்சுட்டே கேக்கவா” அவள் வீட்டு கிள்ளையாய் அவன் தோள் தொற்றிக் கொள்ள, அதை மறுக்க மனம் வராமல், “ப்ச் நான் சீரியசா பேசுறேன்டீ” என்றான்.

 

“அப்ப நானும் சீரியசா கேட்டுக்கறேன் பேசு மாமு” என்றாள் சமத்தாய்.

 

“நீ இப்படி இருக்கறது சரியில்ல ரமி, இப்ப உனக்கு படிப்பு இம்பார்டன்ட், எனக்கு ஜாப் இன்பார்ட்டென்ட்” அவன் விளக்க முற்பட,

 

“ஆமா, அதால தான் நான் படிக்கிறேன், நீ வேலைக்கு போற” அவள் சுலபமாக முடித்து விட்டாள்.

 

“ம்ம், சரிதான். உன் கவனம் படிப்புல இருந்தும் என் கவனம் வேலையில இருந்தும் சிதற கூடாது”

 

“ம்ம்”

 

“காலையில மாதிரி நாம நம்ம கன்ட்ரோல் மிஸ் பண்ணிட்டா, லைஃப்லயும் சறுக்கிடுவோம் புஷி” வசீகரன் தயங்கி சொல்ல,

 

“நான் ஃப்ர்ஸ்ட் டைமே இதெல்லாம் தப்புனு சொன்னேன். நீதான் புருச பொண்டாட்டிக்குள்ள இது தப்பில்லனு சொன்ன, இப்ப மறுபடி தப்புனு சொல்றியா” அவள் விவரமறியா குழந்தை போல கேள்வி தொடுத்தாள்.

 

“நான் இப்பவும் தப்புனு சொல்ல வரல, இப்ப அதெல்லாம் அவசியமில்லனு சொல்ல வரேன். நாம நம்ம ஃபேமிலிய எதிர்த்து வந்து இந்த ஓட்ட வீட்டுக்குள்ள எவ்வளோ கஷ்டப்படுறோம், நாம அவங்க முன்னாடி இன்னும் நல்லா வாழ்ந்து காட்டனும்” வசீகரன் தீவிரமாக சொல்ல,

 

“நாம எங்கே கஷ்டப்படுறோம் மாமு? இந்த வீடு குட்டியா இருந்தாலும் பெருசா வசதி எதுவும் இல்லன்னாலும் நிறைய நிறைய நிறை…ய சந்தோசத்தை இங்க அனுபவிச்சுட்டு தானே இருக்கோம். இதைவிட வேற என்ன வேணும்?” அந்த வீட்டின் ஒவ்வொரு இடங்களும் அவர்கள் வாழ்வின் சந்தோச தருணங்களை, நிகழ்வுகளை ஏந்தி நிற்பதாக தோன்றியது அவளுக்கு.

 

“வேணும் ரமி, நிறைய வேணும்,  இங்கேயே இதோட நின்னுட கூடாது. தேங்கிட முடியாது. வளர்ந்து காட்டனும். வாழ்ந்து காட்டனும். அதுக்கு நீயும் ஹெல்ப்புல்லா இருக்கனும்” அவன் அழுத்தமாக பேசினான்.

 

“எதுக்கு வீணா மத்தவங்களுக்காக நாம வாழனும்? நமக்காக வாழலாம் மாமு” அவள் எப்போதும் போல விளையாட்டாக பேச இவனுக்கு விறுவிறுவென்று கோபம் ஏறியது.

 

“இப்படியே விட்டா உனக்கு எல்லாமே நல்லா தான்டீ இருக்கும்! முன்ன பின்ன யோசிக்காம முட்டாள்தனமா உன்ன காதலிக்கிறேன்னு ஒரு பொய்ய சொல்லி தொலைச்சேன் பாரு அதால தான்டீ இப்ப இங்க வந்து நிக்கிறேன்! என்னைக்கு நான் சொன்ன பொய் திரும்பி நம்ம கல்யாணத்துல வந்து நின்னுச்சோ அதுதான் எனக்கு விழுந்த முதல் அடி! இப்படி ஒரு ஓட்ட வீட்டுல தங்கற நிலை வந்துச்சோ அப்ப விழுந்தது என்னோட அடுத்த அடி!  நம்ம ரெண்டு பேரு நிலைம தெரிஞ்சு இருந்தும் உன்கூட சேர்ந்து வாழ ஆசைப்பட்டேன் பாரு அதான் நான் பண்ணதுலேயே பெரிய முட்டாள்தனம்! ச்சே” அவன் ஆத்திரமும் ஆதங்கமுமாக பேசிக் கொண்டே போக, அதில் அதிர்ந்து அவள் எப்போதோ அவனைவிட்டு விலகி அமர்ந்து விட்டிருந்தாள்.

 

அவள் விலகலை அவனும் உணர்ந்து தான் இருந்தான். மறுபடி அவளை இழுத்து தன்னுள் அடக்கிக்கொள்ள ஆசை தான் அவனுக்கும். ஆனால் அப்படி நடந்தால் காலை போல தான் இப்போதைய நிகழ்வும் முடியும். இப்போது இந்த அற்ப உணர்வுகளுக்கு மயங்கினால் அவன் வளமான எதிர்காலம் கைவிட்டு நழுவிவிடும் என்ற எச்சரிக்கையே அவனை கட்டுப்படுத்தியது.

 

“ஏன் மாத்தி மாத்தி சொல்ற மாமு, காலையில தான என்ன பிடிக்கும்னு சொன்ன!” அவள் முகம் வெளுத்து பாவமாய் கேட்டாள்.

 

“இப்பவும் பிடிக்கும் தான் யாரு இல்லனு சொன்னது? அதுக்காக உன்கூட ஒட்டிட்டே இருக்க முடியுமா?” என்றுமில்லாத கடுமை அவன் முகத்தில்.

 

“இப்ப நான் என்ன செய்யனும் மாமு?” அவள் மலங்க மலங்க விழித்து கேட்க,

 

“பெருசா ஒன்னும் இல்ல, தேவையில்லாத ஆசையெல்லாம் மனசுல வளர்த்துக்காம உன் படிப்புல முழு கவனமும் செலுத்து, என்னையும் டிஸ்டர்ப் பண்ணாம என் வேலைய செய்ய விடு” காரமாகவே சொன்னான். ‘இவள் ஏன் இத்தனை முதிர்ச்சியற்ற பெண்ணாய்‌ இருந்து தொலைக்கிறாள்?!’ என்று அவன் மனம் சலித்து கொண்டது.

 

“சரி நான் நல்லா படிக்கிறேன், இனி உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” என்று சிறு குரலாக சொன்னவள் எழுந்துக் கொண்டாள்.

 

“புரிஞ்சுகிட்டா சரி, இவ்வளோ நேரம் நான் தொண்ட தண்ணீ வத்த பேசினதை நாளைக்கே மறந்துட்டு வந்து என்னை டார்ச்சர் பண்ணாத ஓகே?” இவள் தலை கவிழ்ந்து மௌனமாய் தலையசைத்தாள்.

 

சற்று பொறுத்து, “சாரி” சிறுகுரலாய் ஒலித்தது அவளின் மன்னிப்பு. 

 

எதற்காக அவள் மன்னிப்பு கேட்கிறாள் என்பது‌ அவளுக்கும் புரியவில்லை. அவனுக்கும் புரியவில்லை.

 

“சரி போய் ரெடியாகிட்டு வா, ஹாஸ்பிடல் போலாம்” அவன் சொல்ல இவள் பதறினாள்.

 

“ஐயோ எதுக்கு? உனக்கு ஏதாவது அடிபட்டுடுச்சா?” பதற்றமாக அவன் தலை முதல் கால் வரை அலசியது அவள் பார்வை.

 

“அதெல்லாம் ஒன்னுமில்லடி, மார்னிங் நமக்குள்ள நடந்ததுல்ல… தப்பி தவறி பேபி ஃபார்ம் ஆகிட போகுது, அதுக்காக தான் ஒரு இன்ஜக்ஷன் மட்டும் போட்டுட்டு வந்துடலாம் பயமில்லாம இருக்கும். லேடி டாக்டர் கிட்ட நான் அப்பாய்ன்மென்ட் வாங்கிட்டேன் நாம கிளம்பலாம்” அவன் சாதாரணமாக சொல்ல, அவளுக்கு தான் உள்ளுக்குள் ஏதோ உடைந்து சரிவதை போன்ற உணர்வு!

 

மறுத்து பேசவில்லை அவனுடன் அமைதியாக சென்றாள். மருத்துவர் ஏற்றிய ஊசியை சற்றும் சொரனையற்று போட்டுக் கொண்டாள். மருத்துவர் சொன்ன அறிவுரைகள் அவள் காதில் விழுந்தும் கருத்தில் சேரவில்லை.

 

வரும் வழியில் ஓட்டலில் இரவு உணவு முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். படுக்கையில் இருவரும் உறக்கமின்றி கிடக்க, ரம்யாவின் இந்த நீண்ட மௌனத்தை அதற்கு மேல் வசீகரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

 

“நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இப்படி அமைதியா இருக்க?” வசீகரன் அடி குரலில் கேட்க,

 

“நீ பேசினதெல்லாம் தான் திருப்பி திருப்பி யோசிச்சு பார்க்கிறேன். எனக்கு எதுவுமே புரிய மாட்டுங்கிது” அவள் பாவமாய் சொல்லவும் எழுந்தவன் தன் தலையில் அடித்து கொண்டான்.

 

“வேணா வேணா உன்ன நீயே அடிச்சுக்காத மாமு” அவள் தடுக்க,

 

“அப்ப நீ வந்து அடிக்கிறேங்கிறியா?” அவன் முறைத்து கேட்டான்.

 

“இல்லல… நான் உன்ன… எப்படியோ கஷ்டப்படுத்தறேன்னு சொன்னது மட்டும் புரியுது”

 

“நீ என்னை கஷ்டப்படுத்தறனு நான் சொல்லவே இல்ல”

 

“இனிமே நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொன்னல்ல பண்ண மாட்டேன், அவ்வளோதான”

 

அவளின் தெளிவில் அழுத்த தலைக்கோதிக் கொண்டவன், “குட் நைட்” திரும்பி படுத்துக் கொண்டான். அவனுக்கு தலையில் வின் வின் என்ற வலி தெறித்தது.

 

சிறிதும் உறக்கமற்று நேரம் கழிந்தது. ஏதோ குருட்டு தனமான வேகத்தில் ரம்யாவிடம் அதிகமாக பேசிவிட்டது அவனை குடைந்து கொண்டிருந்தது.

 

‘நீதான நெருங்கி வந்து முதல்ல என்னை டிஸ்டர்ப் பண்ண? இப்ப மட்டும் என்னை தப்பு சொல்ற?’ ரம்யாவின் மெலிதான கேள்வியில் திடுக்கிட்டு திரும்பினான் வசீகரன். 

 

‘நீ பேட் பாய், என்னை யூஸ் பண்ணிக்கிறல்ல, நான் பாவமில்ல’ வீரிய மருந்தின் அரைகுறை மயக்கத்தில் உளறிக் கொண்டிருந்தாள் அவள்.

 

‘உன் டிரீம் கேர்ள் மாதிரி நான் ரொம்ப அழகாவும் இல்ல, ஸ்மார்ட்டாவும் இல்ல, அதால தான உனக்கு என்னை பிடிக்காம போச்சு, மாமு… எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் தெரியுமா!’ என்று உளறிக் கொண்டிருந்தவளை, அதற்கு மேல் தாங்காது அள்ளி எடுத்து அணைத்து கொண்டான். 

 

முதல்முறை தன்னை தானே வெறுத்துக் கொண்டான் அவன். அவள் கலையாத உறக்கத்தில் அமிழ்ந்து போயிருந்தாள்.

 

ஊடலற்ற காதல் 

உவகையற்று போகுமாம்! 

உன் ஊடலில் என் காதல் செதுக்கிடு!

 

அவஸ்தைகள் அற்ற காதல் 

அலுப்பு தட்டி போகுமாம்!

என் அவஸ்தைக்கு மாற்றாய் உன் காதல் தந்திடு!

 

***

 

காதல் கூத்து கட்டும்…

 

(திவ்யா, சசி பார்ட், நெக்ஸ்ட் எபில வரும். அடுத்த பதிவு வெள்ளி அன்று. நன்றிகள் ஃப்ரண்ஸ்)