IMG-20210202-WA0002-db56e34f

காதலில் கூத்து கட்டு 3

காதலில் கூத்து கட்டு 3

வசீகரன், ரம்யா இருவரும் சசிதரனுக்காக காபிஷாப்பில் காத்து இருந்தனர். இருவரும் பெரிதாக ஏதும் பேசிக்கொள்ளவில்லை. பேசிக் கொள்ளும் அளவு இதுவரை அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டிருக்கவுமில்லை.

அந்த காபிஷாப்பின் உட்புறத்தை பார்வையால் சுற்றி வந்தவள் பார்வை எதிரில் அமர்ந்திருந்த வசீகரனிடம் நின்றது. அவன் சாவகாசமாக தன் கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.

‘ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போலே இருப்பானே’ இந்த பாடல் வரிகளின் வர்ணனைக்கு பொருந்துவது போன்ற தோற்றம் அவனுக்கு. ஆனாலும் அவளுக்கு ரசிக்கவில்லை.

இவளின் ஐந்தடி இரண்டு அங்குளம் உயரத்திற்கு அவனின் ஆறடி தொடும் வளர்ந்து கெட்ட உயரமும், இவளின் சற்றே மங்களான நிறத்திற்கு, அவனின் தூக்கலான பளபளத்த நிறமும், அதிலும் அவனுடைய தோள் வரை தொட்டு நீளமாக வழியும் கேசம் வேறு! ரம்யாவிற்கு எப்போதும் அலர்ஜி! குடும்ப விஷேசங்களில் அவனை பார்க்க நேர்ந்தாலும் இரண்டடி தள்ளியே நின்று கொள்வாள்.

‘என்ன தான் ஆட் பிலிம் எடுப்பவனாக இருந்தாலும் இப்படியா முடியை வளர்த்து வச்சிருப்பான், என்ன ஸ்டைலோ மண்ணாங்கட்டியோ?’ என்று வழக்கம் போல சலித்து கொண்டாள். அவரவரின் தோற்றம் அவரவர் விருப்பம் என்ற போதும் இவளின் மனக்குரல் மட்டும் சலித்து கொண்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக வசீகரனின் கேரக்டர் மீது இவளுக்குள் பெரிய கேள்வி குறி வேறு?

சசிதரன், திவ்யா திருமண பட்டு எடுக்க இரு குடும்பங்களும் வந்த போது வசீகரனும் வந்திருந்தான் உடன் அழகான மாடல் பெண்ணோடு. ரம்யாவும் முதலில் அவர்களை காதலர்கள் போல என எண்ணிக் கொள்ள, திருமண நகை எடுக்கும் போது வேறொரு பெண்ணோடு கைக்கோர்த்து வந்து நின்றான்!

உளவியலில் ஈடுபாடு கொண்ட ரம்யாவிற்கு மற்றவர்களை உற்று நோக்குவது, அவர்களின் குணநலன்களை கணிப்பது போன்றவை பிடித்தமான விசயம். ஆனால் எதிரில் இருக்கும் இந்த பனங்காய் மண்டையனை மட்டும் இவளால் கணிக்க முடிந்ததில்லை.

“சசி, திவிக்கு நடுவுல என்ன பிரச்சனைனு உனக்காவது தெரியுமா?” வசீகரன் கேட்க, ‘தெரியாது’ என்று தலையசைத்தாள்.

“ஏன் உன் அக்கா உன்கிட்ட எதுவும் சொல்லலையா?” அவன் கேள்வி மீண்டும் வர,

“உன் அண்ணன் உன்கிட்ட எதுவும் சொன்னாரா, இல்லல அப்படித்தான் இங்கேயும்” ரம்யாவின் பதில் சுர்ரென்று வந்தது.

“ஏன் இப்படி சிடுசிடுக்கிற? பொறுமையா

 உனக்கு பேச வராதா?” அவனும் சிடுசிடுத்தான்.

“உன் கேள்வி எப்படி வருதோ என் பதிலும் அப்படித்தான் வரும்” ரம்யா அழுத்தி உரைக்கவும்,

“நாம ரெண்டு பேரும் இப்படி முட்டிக்கிட்டா, அவங்க ரெண்டு பேரையும் எப்படி சேர்த்து வைக்கிறது?” வசீகரன் அலுத்துக் கொள்ளவும், சசிதரன் அங்கே வரவும் சரியாக இருந்தது.

“ஹே கைய்ஸ், நீங்க ரெண்டு பேரும் கான்ட்டக்ட்ல தான் இருக்கீங்களா? சொல்லவே இல்ல” சசிதரன் இருவரையும் சற்று ஆச்சரியத்துடனே கேட்க,

“இல்ல சசி மாமா, இன்னைக்கு தான் நாங்க” ரம்யா மறுத்து சொல்லும் போதே குறுக்கிட்ட வசீகரன், “நீ என்கிட்ட எல்லாத்தையும் சொல்றீயா சசி? நாங்க உன்கிட்ட சொல்றதுக்கு” என்றான் கோபமாக.

அவன் கோபத்தை கண்டு கொள்ளாமல் “ஹாய் ரமி, எப்படி இருக்கமா?” மச்சினியை நலம் விசாரித்தப்படி தம்பியின் அருகில் அமர்ந்து கொண்டான் சசிதரன்.

“எப்பவும் போல நல்லா இருக்கேன் சசி மாமா, நீங்களும் நல்லா இருக்கீங்க தானே?” ரம்யா இயல்பான கீச்சு குரலில் பேச, “ம்ம் இருக்கேன் ரமி” சசிதரன் குரல் உணர்ச்சியற்று கரைந்தது..

“திவியும் அங்க நல்லாயில்ல மாமா, எப்பவும் அழுதிட்டே இருக்கா, அதிகமா கோபப்படுறா, ரூம்ல இருக்க திங்க்ஸ் எல்லாம் கூட போட்டு உடைச்சிட்டா, இப்படியே போனா அவளோட மென்டல் ஹெல்த்க்கு நல்லதில்ல” தன் அக்காவின் நிலையை அவளுக்கு உரியவனிடம் விளக்க முற்பட்டாள்.

“நீ வேற மா, அவ இப்படியெல்லாம் பண்ணா நான் வந்து அவ கால்ல விழுவேன்னு எதிர்பார்க்குறா… அவ முன்ன போல இல்ல ரமி, ரொம்ப மாறிட்டா, எதுக்கெடுத்தாலும் பிடிவாதம், தான்ற ஈகோ அதிகமாயிடுச்சு அவளுக்கு” சசிதரன் படபடவென தன் காதல் மனைவி மீது குற்றப்பத்திரிக்கை வாசிக்க,

“உங்களோட இந்த பிரிவுக்கு திவி மட்டும் தான் காரணம்னு சொல்றீங்களா மாமா?” ரம்யாவின் கேள்விக்கு  பதிலில்லை அவனிடம்.

“இந்த வாழ்க்கை நீங்க ரெண்டு பேரும் தேர்ந்தெடுத்தது, அவ்வளோ இஷ்டப்பட்டு சேர்ந்து இப்ப ஏன் இப்படி கஷ்டப்பட்டு பிரிஞ்சு இருக்கீங்க” ரம்யா கேட்க,

“எனக்கு மட்டும் அவளை பிரியனும்னு ஆசையா என்ன? ஆனா இப்ப வேற வழி‌ இல்ல. நாங்க இனிமே சேர்ந்து வாழவும் முடியாது” சசிதரன் விட்டத்தியாக சொல்ல,

“சும்மா சொன்னதையே சொல்லிட்டு இருக்காதடா உங்களுக்குள்ள அப்படியென்ன பெரிய பிரச்சனை? சொன்னா தான ஏதாவது யோசிக்க முடியும்” வசீகரன் கேட்டான்.

“ஆமா மாமா, தீர்வு இல்லாத பிரச்சனைன்னு எதுவும் கிடையாது. வெளிபடையா பேசினாலே பாதிக்கு மேல பிராப்ளம் சால்வ் ஆகிடும்” ரம்யாவும் சமாதானம் சொல்ல,

“என்கிட்ட எதுக்கு சண்டை போட்டு பிரிஞ்சு போனானு உன் அக்காவ கேட்க வேண்டியது தானே ரமி, அவ எப்படி சொல்லுவா தப்பெல்லாம் அவமேல இருக்குல்ல” சசிதரனின் வார்த்தைகள் வேகம் பிடித்தன.

“அக்கா மேலயே தப்பிருந்தா  நீங்க அவளை மன்னிக்க மாட்டீங்களா? அவ சண்டை போட்டு‌ போனா, நீங்க அவளை சமாதானம் செய்ய மாட்டீங்களா? இவ்வளோ தான் உங்க காதலா” ரம்யா மேலும் கேட்க,

“அவளை நான் மன்னிக்கலனு உனக்கு தெரியுமா ரமி? எத்தனை முறை அவளுக்காக இறங்கி வந்திருக்கேன் தெரியுமா? எவ்வளோ விட்டு கொடுத்து போயிருக்கேன் தெரியுமா? இப்பவும் நான் அவகிட்ட அடங்கி போனா‌ காலம் முழுக்க அடிமையா தான் இருக்கனும். அப்படியொரு காதலும் வேணாம், வாழ்க்கையும் வேணாம்” சசிதரன் படபடத்து விட்டு எழுந்து செல்ல, “சசி நில்லு, சசீ” வசீகரன் அழைத்தும் நில்லாமல் சென்று விட்டான்.

‘நாம்’ என்ற சொல் எங்கே? எப்போது? ‘நான்’ என்று மாறுகிறதோ அங்கே! அப்போது! சுயநலமும் பிடிவாதமும் தலைத்தூக்கி கொள்கிறது. அன்பும் காதலும் அமிழ்ந்து போகிறது.

“அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கிற பிராப்ளம் ஈகோ தான் போல. உனக்காக நான் இறங்கி வர மாட்டேன், எனக்காக நீதான் இறங்கி வரனும்ற தாட்ல ரெண்டு பேரும் போட்டி போட்டுட்டு நிக்கிறாங்க, இனிமே அவங்களா புரிஞ்சிக்கிட்டா தான் உண்டு நாம என்ன எடுத்து சொன்னாலும் அதை காதுல வாங்க மாட்டாங்க” ரம்யா சொல்லிவிட்டு எழுந்து கொள்ள,

“பெரிய நூத்து கிழவி மாதிரி பேசுற நீ” என்று வசீகரனும் எழுந்துக் கொண்டான்.

“என்னை பார்த்தா உனக்கு கிழவி மாதிரி தெரியுதா?” அவள் முறைத்து நிற்க, “பார்க்க பப்ளி பேபி போல தான் இருக்க, அதால தான் அந்த அமுதன் உனக்கு நூல் விட்டான் போல” வசீகரன் சிரித்து விட்டு நடக்க,

“அவனை பத்தி மட்டும் பேசாத, பொண்ணுங்கள ஃபிளர்ட் பண்றதை எல்லாம் ஒரு வேலையா வச்சு அலைஞ்சிட்டு இருக்கான் பொறுக்கி ராஸ்கல்” ரம்யாவின் உள்ளம் கொதித்தது.

“அவன மாதிரி சீப் கேரக்டர் கிட்ட விழுந்து போற மாதிரி பொண்ணுங்க ஏன் இவ்வளோ பலவீனமா இருக்காங்கன்றது தான் என்னோட கேள்வி” அவளிடம் வாதிட்டபடி தன் பைக்கில் அமர்ந்து கொண்டான்.

“ஆண்கள் உங்களைவிட பெண்கள் நாங்க எப்பவும் ஸ்ட்ராங்கானவங்க தான், எங்களை பலவீனப்படுத்தியே ஆகனும்னு கங்கனம் கட்டிட்டு அலையறது நீங்க தான்” ரம்யா அவனை முறைத்து நின்று படபடக்க,

“எங்களுக்கு அந்த சான்ஸ் ஏன் தரீங்கன்றது தான் என்னோட கேள்வி” அவன் இருகைகளையும் குறுக்கே கட்டி கொண்டு கேட்டான்.

நெற்றி சுருங்க அவனை பார்த்தவள், “அறியாமை தான் வேறென்ன சொல்ல, மீடியா, பொழுதுபோக்குனு எல்லாமே காதல் ஏதோ கம்ப சூத்திரம் போல, பிரமிப்பான விசயம் போல மாயையை இங்க உருவாக்கி வச்சிருக்கு. அப்படி ஏதுவுமில்ல காதல் இயல்பான மனித உணர்வு, குறிப்பிட்ட வயசுல அதற்கான தாக்கம் எல்லாருக்கும் வந்து போகும்ற எதார்த்தத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலே, ஸ்கூல் பசங்க எல்லாம் இப்படி சிக்கி, எதிர்காலத்தை தொலைக்கிறதை தவிர்க்கலாம்” நீளமாக சொல்லி முடித்தாள் அவள்.

அவளை மெச்சுதலாக பார்த்த வசீகரன், “பரவால்ல நல்லா தான் பேசுற, நீ இவ்வளோ பேசுவேனு நான் எதிர்பார்க்கல” என்றான். 

ரம்யா மேலும் அவனிடம் பேச்சை வளர்க்க விரும்பவில்லை இப்போதே ஒருமணிநேரம் தாமதமாகி இருந்தது. சீக்கிரம் வீட்டிற்கு சென்றால் போதும் என்று அமைதியாக அவன் வண்டியின் பின்னே அமர்ந்துக் கொண்டாள்.  

ரம்யா மறுத்தும் அவளின் வீட்டு வாசலில் இறக்கி விட்டு தான் விடைப்பெற்றான் வசீகரன்.  

அவள் வீட்டினுள் நுழையும்போதே அப்பாவின் அழுத்தமான குரல் கேட்டது.

“சொல்லு திவ்யா, இப்ப நாங்க என்ன தான் செய்யட்டும்?” திவாகரன் இழுத்து பிடித்த நிதானத்துடன் மகளை கேட்டு கொண்டிருந்தார்.

”நான் இந்த வீட்டுல தங்கலாமா, வேணாமானு சொன்னா மட்டும் போதும்ப்பா, இனி அவன்கூட சேர்ந்து வாழ… முடியாது” திவ்யா முரட்டு பிடிவாதத்துடன் பதில் பேச,

“நீயே உன் வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கிட்ட, இப்ப நீயே அதை முறிச்சிக்கிற முடிவுக்கும் வந்துட்ட? உன்ன பெத்தவங்களா உன் வாழ்க்கையில எந்த முடிவையும் எடுக்கற உரிமைய கூட எங்களுக்கு தரமாட்ட அதான?” அவரின் அடக்கப்பட்ட ஆத்திரம் அவர் குரலிலும் தெறித்தது.

திவ்யாவிடம் பதிலில்லை. அவளின் தவறு அவளுக்கும் புரிந்தது தான். ஆனாலும் அதை ஒத்துக்கொள்ள அவளின் வீம்பு தடுத்தது.

“இதுக்குமேல நான் சொல்லவும் ஒன்னுமில்ல. உனக்கு விருப்பம் இருந்தா இங்க இருக்கலாம். இல்லையா, அதுவும் உன் இஷ்டம்” திவாகரனும் மகளிடம் தன் வீம்பை விட்டுக் கொடுக்காமல் கோபமாக பேசிவிட்டு திரும்பினார்.

அங்கே நின்றிருந்த ரம்யாவை கவனித்து நேரத்தை பார்த்துவிட்டு, “காலேஜ் எப்ப முடிஞ்சது நீ இப்ப வீட்டுக்கு வர ம்ம்?” சின்ன மகளிடம் உறுமினார்.

“ஃப்ரண்ஸ் கூட காஃபி ஷாப் போயிருந்தேன் பா, அதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” ரம்யா முணுமுணு குரலில் காரணம் சொல்ல,

“காலேஜ் முடிஞ்சதும் வீட்டுக்கு வராம காஃபி ஷாப்ல என்ன வெட்டி பேச்சு உனக்கு? உனக்கும் காதல், கன்றாவினு எவன் பின்னாலயாவது போகனும்னு நினைப்பிருந்தா, இதோ உன் அக்காவ பார்த்து அடங்கி இருக்க பாரு” எச்சரித்து விட்டு சென்றார்.

ரம்யாவிற்கு புசுபுசுவென கோபம் ஏற, “ஏன் மா, உன் புருஷன் இப்படி கடிச்சு கொதறிட்டு போறாரு, பெத்த பொண்ணு மேல இத்துனூண்டு நம்பிக்கையாவது வைக்க சொல்லு அவரை” என்று அம்மாவிடம் குதித்தாள். அதுவும் தாழ்ந்த குரலில் தான். இதுவும் அப்பாவிற்கு கேட்டு விட்டால் ரணகளம் ஆகுமே என்ற பயமும் இருக்கத்தான் செய்தது.

“இவ பண்ணி வந்திருக்க வேலைக்கு அவரு முதல்லயே டென்ஷன்ல இருக்காரு. நீ வேற குதிக்காத ரமி, போய் ஃபிரஷ் ஆகிட்டு வா” என்றவர், மூத்த மகளிடம் இன்னும் கோபம் குறையாமல் ஒரு கண்டன பார்வையோடு நகர்ந்து கொண்டார்.

திவ்யாவிற்கு இப்போது ஆறுதல் தேவையாக இருந்தது. ‘நான் இருக்கிறேன் உனக்காக’ என்று அரவணைத்துக் கொள்ள கைகள் தேவையாக இருந்தன. ஆனால் அம்மா, அப்பா, கணவனிடம் அந்த தேறுதல் கிடைக்கப் போவதில்லை என்ற நிதர்சனம் அவள் மனதை துவள செய்தது.

ரம்யா அவளின் தோள் தொட்டு அருகில் அமர்ந்து கொள்ள, திவ்யா கலங்கிய கண்களை மறைத்து தங்கையை நிமிர்ந்து பார்த்தாள்.

“அப்பா கோவத்தை எல்லாம் பெருசா எடுத்துக்காத திவி, அவர் இப்ப மட்டுமில்ல எப்பவுமே அப்படித்தான். இது உங்களுக்கான லைஃப். எந்த முடிவா இருந்தாலும் நீயும் சசி மாமாவும் பேசி முடிவெடுங்க” அவள் தேறுதல் சொல்ல,

“ப்ச் இனி நாங்க பேச எதுவுமே இல்ல ரமி” என்று விரக்தியாக சொன்ன திவ்யா, தங்கையையும் தவிர்த்துவிட்டு தன் அறைக்குள் கதைவடைத்துக் கொண்டாள்.

மூடிய கதவை சில நொடிகள் வெறித்து நின்றவள், ‘பேசினா பிரச்சனை தீரும்னு நான் சொல்றேன், பேச எதுவும் இல்லனு இவ சொல்லிட்டு போறா, வாழ்க்கை முழுக்க பேச வேண்டியது எல்லாத்தையும் ஃபோன்லயே பேசி தீர்த்துட்டதால வந்த வினையா இது’ என்று யோசனை ஓட, “என்ன கர்மம் டா காதல் இது!?” தலையடித்துக் கொண்டாள்.  

***

காதல் கூத்து கட்டும்…

 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!