காதலில் கூத்து கட்டு 30(1)

IMG-20210202-WA0002-632c25c2

காதலில் கூத்து கட்டு 30(1)

“நீ நினைக்கிற மாதிரி அன்னைக்கு நைட் ஒன்னுமே நடக்கல திவி” சசிதரன் நொந்து போய் சொல்லவும்,

 

“என்ன நடக்கல?” திவ்யா அடக்கிய ஆத்திரமாக புருவங்களை நெறித்து காட்டினாள்.

 

“ப்ளீஸ் திவி, நான் சொல்றதை ஆத்திரபடாம கொஞ்சம் பொறுமையா கேளு” என்க, அவள் பதில் பேசாது அமைதியாக அவனை கவனித்தாள்.

 

“மிதிலா கேரக்டர் பத்தி கம்பெனியில நம்ம எல்லாருக்கும் நல்லாவே தெரியும் தான, ரொம்ப ஈஸியா பிடிச்சவங்க கூட மிங்கிள் ஆகிடுவா, அவளுக்கு என்மேல இன்டிரஸ்ட் இருக்கறது எனக்கு முன்னவே தெரியும். ஆனா நான் தான் கண்டுக்கல”

 

“ஓஹோ” அவள் ‘ஓஹோ’வில் அப்பட்டமான நக்கல் தெறித்தது. அதை கவனித்தும் கவனிக்காதவன் போல சசிதரன் தொடர்ந்தான்.

 

“நீ என்மேல ரொம்ப கோபமா இருந்த, உன்ன நெருங்க கூட விடாம மாச கணக்கா என்னை காயப்போட்ட, நானும் உன்மேல செம காண்டுல இருந்தேன். அதான் உன்ன வெறுப்பேத்த மிதிலா கூட பழகற மாதிரி நடந்துக்கிட்டேன். அவகூட நான் பார்ட்டி, ஓட்டல்னு சுத்தறது பார்த்து நீ எனக்காக இறங்கி வருவேன்னு நினச்சேன்”

 

“நீயும் உன் பிளானும்” என்றவள் பற்கள் அரைப்பட்டன.

 

“அன்னிக்கு நைட்…!” சசிதரன் தயங்கி நிறுத்த, திவ்யா எதுவும் பேசவில்லை அவனை அசையாது பார்த்து இருந்தாள்.

 

“அன்னிக்கு ஈவ்னிங் உனக்கும் எனக்கும் செம சண்ட, அந்த கோவத்துல நைட் பார்ட்டியில அதிகமா டிரிங்க்ஸ் எடுத்துக்கிட்டேன், அங்க என் கன்ட்ரோல் ஃபுல்லா லூசாகிடுச்சு, அப்பதான் மிதிலா என்னை அவ ரூம்க்கு அழைச்சிட்டு போயிருப்பா போல”

 

அவள் கண்கள் இடுங்க முகம் சிவப்பேறியது. அதை நினத்து பார்க்க கூட மனது கனத்தது இமைகளை இறுக மூடிக் கொண்டாள்.

 

“ஹே எங்களுக்குள்ள எதுவுமே நடக்கல, நான் போதையில மட்டயாயிட்டேன் அவ்வளோ தான் அங்க நடந்தது. நான் தூக்கம் தெளிஞ்சு எழும்போது நல்லா விடிஞ்சு இருந்துச்சு, நான் கீழே கார்ப்பெட்ல தான் கிடந்தேன். மிதிலா பெட்ல படுத்து இருந்தா, நான் அவகிட்ட சாரி சொல்லிட்டு வந்துட்டேன், அதுக்குள்ள எல்லாரும் எங்க ரெண்டு பேரை பத்தி தப்பா உன்கிட்ட வத்தி வச்சுட்டாங்க, நான் தப்பு நடக்கலன்னு சொல்லியும் நீ நம்ப தயாரா இல்ல, வீட்ட விட்டு என்னைவிட்டு போயிட்ட”

 

சொல்லி முடித்த சசிதரன் முகத்தில் இதையெல்லாம் அவள் நம்ப வேண்டுமே என்ற தவிப்பு.

 

திவ்யா இருகைகளாலும் நெற்றியை பற்றி கொண்டாள். அந்த நாட்கள் எத்தனை கொடுமையானவை. சசி தனக்கு துரோகம் செய்து விட்டான் என்று உள்ளுக்குள் எத்தனை அடிப்பட்டு போனாள். அவனின் தவறிய நடத்தையை வெளியே சொல்லவும் முடியாமல் உள்ளுக்குள் புழுகி போயிருந்தாள்.

 

அவள் ஏதும் பேசாமல் இருப்பது, சசிதரனை உறுத்தியது. “உனக்கு இன்னும் டவுட்டா இருந்தா மிதிலாகிட்ட கூட கேட்டு பாரு திவி” அவன் பாவமாக சொல்ல, இவள் நிமிர்ந்தாள்.

 

“நான் என்னனு கேக்கனும் அவகிட்ட, என் புருஷன் கூட நீ எப்படி இருந்தனு கேக்க சொல்றியா? சொல்லுடா சொல்லு?” திவ்யா ஆவேசமாக அவனை பிடித்து உலுக்க,

 

அவள் கைகளை தட்டி விட்டவன், “நான் தான் எந்த தப்பும் நடக்கலன்னு விவரமா சொல்றேனே, இதுக்கும் மேல நீ என்னை நம்பலன்னா என்னால எதுவும் செய்ய முடியாது திவி” சசிதரன் பேச்சை முடித்து கொண்டான். இதற்கு மேல் அவளுக்கு எப்படி புரிய வைப்பது தெரியவில்லை அவனுக்கு.

 

அவன் விளக்கத்தால் மட்டும் திவ்யாவின் மனம் ஆறுவதாக இல்லை. “நீ செஞ்ச இதே தப்ப நான் செஞ்சிருந்தா நீ என்னை மன்னிச்சு இருப்பியா?” அவளின் கேள்வி அவனை தாக்க தான் செய்தது. இருந்தும் அசராமல் நின்றான்.

 

“எந்த சூழ்நிலையிலும் என் திவி எனக்கு துரோகம் செய்ய மாட்டான்ற நம்பிக்கை எனக்கு இருக்கு, என்ன, அவளுக்கு தான் அந்த நம்பிக்கை என்மேல இல்லாம போச்சு” சசிதரன் பதில் வெறுமையாக வந்தது.

 

அவள் பார்வை தங்களை நோக்கி வந்த அந்த முதிய ஜோடியின் பக்கம் திரும்பியது. அவர்கள் அங்கிருந்து எழுந்து ஒருவர் கையை ஒருவர் பற்றி தளர்ந்து நடந்து வந்து இவர்களை கவனித்து நின்றனர்.

 

அந்த பெரியவர்களும், இவர்கள் வாதங்களை கவனித்திருக்க வேண்டும். “என்னப்பா புருஷன், பொண்டாட்டி சண்டயா?” பெரியவர் சிரித்தபடி கேட்க, சசிதரன் பதில் தரவில்லை. இறுக்கமாக நின்றிருந்தான். திவ்யா விழி தாழ்த்திக் கொண்டாள்.

 

“சண்ட இல்லாம சுவாரஸ்யம் ஏதுப்பா, நல்லாவே சண்ட போடுங்க, அதோட நேரத்துக்கு சமாதானமும் ஆகிடுங்க சரியா” என்றவர், தன் மனைவியின் முகம் பார்த்து மெல்ல சிரிக்க, “பார்க்க எங்க பேத்தி மாதிரியே இருக்கம்மா நீயும், அவளும் கல்யாணம் ஆகி போயி ஒரு மாசம் ஓடி போச்சு” அந்த பாட்டியின் குரல் வாஞ்சையோடு ஆரம்பித்து இறங்கி ஒலித்தது.

 

யாரென்றே தெரியாத அந்த பெரியவர்கள் தங்களுக்கிடையே வந்து பேசுவதில் பிடித்தமில்லை என்று முகத்தில் காட்டிய சசிதரன், “எங்க பிரச்சனைய நாங்க பார்த்துக்கிறோம் நீங்க கிளம்புங்க” என்றான்.

 

அதற்கு அவனை முறைத்த திவ்யா, “அவன் சொல்றதை தப்பா எடுத்துக்காதீங்க, ஏதோ டென்ஷன்ல இப்படி பேசிட்டான்” அந்த பெரியவர்களிடம் சமாதானம் பேசினாள்.

 

“பரவால்ல மா விடு, எங்க காலத்துல நாங்க போடாத சண்டையவா நீங்க போட போறீங்க, இதோ இவகூட நான் சேர்ந்து வாழ்ந்ததை விட, பிரிஞ்சு வாழ்ந்தது தான் அதிகம். இப்ப எண்ணி பார்த்தா உப்புசப்பில்லாததுக்கு எல்லாம் பிரச்சனை பண்ணி எங்க வாழ்க்கைய நாங்களே கெடுத்துக்கிட்டோம்னு இருக்கு!” என்று பெருமூச்செறிந்தவர், 

 

“இப்ப புரிஞ்சு என்ன புண்ணியம், தொலைச்ச சந்தோசத்தை மீட்டு அனுபவிக்க முடியுமா என்ன? முடியாதே! இப்போதைக்கு இவ கையை புடிச்சு நடக்கிறது தான் எனக்கு கிடைச்ச பெரிய வரமா தோனுது. நீங்களும் எங்களை போல அவதி படாதீங்க, கோபதாபத்தை எல்லாம் ஓரங்கட்டி வச்சுட்டு காலகாலத்துல வாழ்க்கைய வாழ்ந்து பார்த்துடுங்க. அப்புறம் நமக்காக காலம் நிக்காதில்ல” என்ற பெரியவர் பேச்சை நிறுத்தும்‌ வழியை காணோம், அவரின் மனைவி தான் அவரை சிறு குரலில் ஏதோ கடிந்தபடி இழுத்து சென்றார்.

 

சசிதரன், திவ்யா பார்வை அவர்கள் பின்னோடே நிலைத்து நின்றது சில நொடிகள்.

 

“நீயும் உன் கோவத்தை விடாம இழுத்து பிடிச்சி வச்சிருந்தா, இவங்களை போல தான் வயசாகி நாம புலம்ப வேண்டி இருக்கும். நல்லா யோசிச்சு முடிவெடு. இதுக்கும் மேல ரொம்ப நாள் என்னால காத்திருக்க முடியாது” சசிதரன் அழுத்தமாக சொல்ல, திவ்யா திகைத்து நின்றாள். அந்த பெரியவர்கள் சொன்னது அவளுக்குள்‌ மீண்டும் ஒருமுறை ஒலித்தது. தன்னையும் சசியையும் அவர்களிடத்தில் வைத்து பார்க்கவே மனது பதறிவிட்டது அவளுக்கு.

 

அவள் பதில் பேசாது நிற்கவும், சசிதரன் தன் மொபைல் எடுத்து எண்களை தேடி எடுக்க, அதை கவனித்தவள்,‌ “யாருக்கு பேசுற சசி?” கேட்டாள். 

 

“மிதிலாவுக்கு தான். நீயே அவகிட்ட பேசிக்க அப்ப தான் உனக்கு முழுசா சந்தேகம் போகும்” என்றவன் மொபைலை உடனே பிடிங்கி அணைத்து விட்டாள்.

 

“எவளோ ஒருத்தி சொல்லி தான் நான் உன்ன நம்பனும்ற அவசியம் இல்ல. நீ சொன்னதை நான் நம்புறேன் சசி. நீ தப்பு செஞ்சிருந்தா என் முன்னால நேரா பேசுற துணிவு உனக்கு இருந்து இருக்காது” என்றாள் தெளிவாய்.

 

அவன் புருவங்கள் உயர்ந்து, முகம் மிருதுவாக மலர்ந்தது. “ஹேய் திவி, அப்ப நீ என்கிட்ட வந்துட்டியா! உன் குழப்பம் எல்லாம் தீர்ந்துடுச்சா!” அவன் உள்ளே உற்சாக உணர்வலைகள். என்ன பேச தோன்றவில்லை. திவ்யாவை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

 

“தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ சோ மச்  டியர், ஓ மை காட். என்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டடி” அவன் ஆசுவாச மூச்சோடு படபடக்க, திவ்யா நிதானமாகவே இருந்தாள்.

 

அவளின் அமைதியை உணர்ந்தவன், “என்னாச்சு திவி, இன்னும் என்னடா குழப்பம் உனக்கு” வாஞ்சையாக வினவ, அவன் முகம் பார்த்து நிமிர்ந்தவள், இடவலமாக தலையசைத்து அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

 

இனி எல்லாம் நலமாக வேண்டும் என்ற வேண்டுதல் இருவருக்குள்ளும். 

 

நலமாகுமா!?

 

***

 

தன் கம்பெனி மெயில்களை சரிப்பார்த்து, பதில் அளித்துவிட்டு சோம்பல் முறித்தபடி நிமிர்ந்து அமர்ந்தான் வசீகரன்.‌ 

 

அவனெதிரில் சுவரில் சாய்ந்து கால்களை நீட்டி அமர்ந்தபடி, வாயில் லாலிபாப்பை அதக்கிக் கொண்டு கண்களை புத்தகத்தில் மேயவிட்டு இருந்தாள் ரம்யா.

 

“லீவ் நாள்ல கூட விழுந்து விழுந்து படிக்கிற அளவுக்கு நீ பெரிய படிப்ஸ் இல்லனு எனக்கு நல்லாவே தெரியும்டி, ஓவரா சீன் போடாத” வசி அவளை வம்பிழுக்கிழுக்க, ரமி கண்களை மட்டும் உயர்த்தி கருமணிகளை உருட்டி விட்டு, மீண்டும் புத்தகத்தில் கவனமானாள்.

 

‘அசரவே மாட்டேங்கிறாளே! இவளை’ என்று கடுகடுத்தபடி எழுந்தவன் அவள் வாயிலிருந்த லாலிபாப்பை பிடிங்கிக் கொள்ள,

 

“டேய் என் லாலிபாப்ப கொடுடா” ரம்யா கோபம் வந்து கத்தினாள்.

 

“உனக்கு தாலிகட்டி தொட்ட புருஷன டேய், போடுவியாடி நீ” வசி மிடுக்காக கடிந்து கொண்டான்.

 

“ஆங்” என்று விழித்தவள், “டையலாக்க மாத்தி சொல்றடா மடையா, அது, தொட்டு தாலிகட்டின புருஷன்னு வரும்” ரமி நெற்றியில் தட்டி திருத்தி சொல்ல,

 

“நீதான்டி மாத்தி சொல்ற, நான் உன்ன தாலிகட்டினதுக்கு அப்புறம் தான தொட்டேன், அதுவும் ஆறு மாசம் கேப் விட்டு” வசி நமட்டு சிரிப்போடு விளக்கம் சொன்ன விதத்தில் ரம்யாவிற்கு வெட்கம் வேறு வந்து தொலைத்தது.

 

‘ரமி பீ ஸ்ட்ராங், அவன் வேணும்னே வம்புக்கு இழுக்குறான். நீ கெத்த விடாத’ என்று தன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்றவள், “நீயும் உன் புத்தியும், முதல்ல என் லாலிபாப் கொடுறா” அவன் கையிலிருந்து பறிக்க முயல, வசீகரன் அலட்டாமல் தன் கையை உயர தூக்கி கொண்டான்.

 

அவனின் உயரத்திற்கு மேலே கையை தூக்கி இருக்க, இவள் எக்கி எக்கி பார்த்தும் இவளுக்கு எட்டுவதாக இல்லை.

 

“ம்ம் மாமு என் லாலிபாப் கொடுக்க போறியா இல்லயா” என்று சிணுங்களோடு மிரட்டியவளின் வெகு நாளைக்கு பிறகான ‘மாமு’ என்ற விளிப்பில் அவன் முகத்தின் கொண்டாட்டம் கூடியது.

 

ரம்யா அருகிருந்த நாற்காலி மீது ஏறி அவன் கையிலிருந்த லாலிபாப்பை பறிக்க முயல, வசீகரன் சட்டென அதை தன் வாயிலிட்டு கொண்டான்.

 

“ச்சீ அது என்னோட எச்சி” அவள் நாற்காலி மீது நின்றபடி முகம் சுளிக்க, 

 

“ஆமா இதுக்கு முன்ன உன்னோட எச்சிய நானும், என்னோட எச்சிய நீயும் சாப்பிட்டதில்ல பாரு” என்றவன் பார்வையில் குறும்பு கூத்தாடியது.

 

“ச்சே அசிங்கமா பேசாதடா” என்று முகம் திருப்பி கொண்டாள். அவனின் வரைமுறையற்ற பேச்சிலும், உரிமை பார்வையிலும் அவள் முகத்தில் குறுகுறுப்பு பரவுவதை தடுக்க முடியவில்லை அவளால். திணறி நின்றாள்.

 

அதேநேரம் அவன் வன்கரங்கள் அவளை மென்மையாக வளைத்திழுக்க, அவள் இதய துடிப்பின் தாளம் தப்புவதாய்.

 

அவள் நாற்காலி மேல் நின்றிருக்க, அவன் தலை அவள் கழுத்தருகே தெரிய, அவனின் அடர் கேசத்திற்குள் நுழைந்து கலைக்க துறுதுறுத்த தன் கைவிரல்களை அழுத்த மூடிக் கொண்டாள். 

 

“வசீ, தூர நகர்ந்து போ” அவனை விலக்கி தள்ள முயல, அவன் விலகவில்லை, இன்னும் நெருங்கினான்.

 

எப்போதும் அவனுக்குள் முயல்குட்டி போல மொத்தமாக அடங்கி கொள்பவள், இப்போதோ அவனைவிட உயரமான இடத்தில் நின்றிருக்க, அவளின் கூந்தலெனும் குட்டி சுருள் காட்டிற்குள் தன் நீள் விரள்களை நுழைத்து, அவள் முகத்தை தனக்காக தாழ இழுத்து, “இந்த லாலிபாப் என்னடி இவ்வளோ டேஸ்ட்டா இருக்கு, நீ சாப்பிட்டதாலயா?” அவன் கிசுகிசு குரல் அவளை கிறங்க வைப்பதாய்.

 

“அதெல்லாம் ஒன்னுல்ல, என் லாலிபாப்ப பிடுங்கி சாப்பிட்டு என்னையே கிண்டல் பண்ணாத” அவனிடம் அவள் சிடுசிடுக்க, அவன் ரசனையாய் கண்கள் மின்ன புன்னகைத்தான்.

 

“உன் முகந்தான் சிடுசிடுக்குது, உன் குட்டி கண்ணு ரெண்டும் கிறங்குது பாருடி” என்று.

 

அவன் அவளை வீழ்த்தி தன் வசமாக்கிக் கொண்டிருந்தான். அவன் பெயரை போலவே அவளை வசீகரித்தவன்.

 

“ஒத்த லாலிபாப்க்கு தான இத்தனை மொரண்டு பிடிக்கிற, வா நாம ரெண்டு பேருமே சேர்ந்து இதை சாப்பிடலாம்” வசீகரனின் வம்பில் ரம்யா விழிகள் தெறித்துவிடும் போல விரிந்தன.

 

தன்னவளின் மிரட்சியை ரசித்து, சற்றே தன் பாதங்களை உயர்த்தி அவளின் அரும்பிதழை நெருங்க, அவளின் இமைகள் வேகமாய் கதவடைத்துக் கொண்டன.

 

ரம்யா, “நீ மட்டும் என்னை டிஸ்டர்ப் பண்ணலாமா? இது தப்பில்லயா?” அவளின் படபட கேள்வி, அவனின் இச்சை உணர்வுகளை வடிய செய்வதாய்.

 

வசீகரன் சட்டென அவள் மீதிருந்த கைகளை உருவிக்கொள்ள, கிட்டத்தட்ட அவன் மீது சாய்ந்து நின்றிருந்தவள் பொத்தென கீழே விழுந்தாள்.

 

“ஆ… அச்சோ, கிராதகா, என்னை ஏன்டா தள்ளி விட்ட?” விழுத்த அதிர்ச்சியில் முகம் சுருக்கி, ஏற்பட்ட வலியில் உதடுகள் பிதுங்க அவனிடம் பொரிந்தாள்.

 

“நான் கையை மட்டும் தான் எடுத்தேன். உனக்கு பேலன்ஸ் பண்ணி நிக்க முடியலன்னு சொல்லு” அவன் அவளிடம் கடுகடுத்தான்.

 

“என் லாலிபாப்ப பிடிங்கிட்டு, என் படிப்பையும் டிஸ்டர்ப் பண்ணிட்டு, என்னை கீழயும் தள்ளி விட்டுட்டு இப்ப, என்னையே குத்தம் சொல்ற இல்ல நீ, போடா டேய் போடா போடா” ரமி எழாமலே அவனை ஏசினாள்.

 

சலிப்பாக குனிந்து தன் வாயிலிருந்து லாலிபாப்பை எடுத்து அவள் வாயிற்குள் திணித்து விட்டவன், “நீ நெருங்கி இருந்தாலும் படுத்துற, விலகி போனாலும் என்னை படுத்தறடீ, உன்ன வச்சிட்டு என்ன செய்யறதுனே புரியல எனக்கு” என்றவன் கோபமாக அங்கிருந்து சென்று விட்டான். 

 

வசீகரனுக்கு கோபம் கோபமாக வந்தது, ஆனால் அந்த கோபம் அவள் மீதா? அல்லது தன் மீதா? என்று தான் பிரித்தறிய முடியவில்லை. 

 

‘டிஸ்டர்ப்’ இந்த வார்த்தையை எந்த நேரத்தில் அவளிடம் சொல்லி தொலைத்தானோ, அந்த நிமிடத்தில் இருந்தே அந்த வார்த்தையை வெறுத்து விட்டான். அவளுக்கு புரிய வைக்கவென்று ஏதோ சொல்லி, அது ஏதோவாகி, இப்போது அதுவே திருப்பி வந்து பூமராங் போல அவனை தாக்குகிறது. நெற்றியை அழுத்த பிடித்துக்கொண்டு தன்னைத்தானே நொந்து கொண்டான்.

 

அவன் கோபமாக பேசி சென்றதில் ரம்யாவிற்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. இமைகளை அழுத்த மூடி திறந்து கண்ணீரை தடுக்க முயன்றாள்.

 

‘நான் அதிகமாகவே அவனை படுத்துகிறேனோ’ என்று எண்ணி அவளுக்கு வேதனையாக, எழுந்து வசியை தேடி சென்றாள்.

 

சன்னல் கம்பிகளை இறுக பிடித்தபடி, தூர கட்டிடங்களை வெறித்து நின்றிருந்தான் வசீகரன். அவனை அப்படி பார்த்து ரம்யாவிற்கு என்னவோ போலானது. 

 

‘எப்போதும் எதையும் அலட்டி கொள்ளாமல் துறுதுறுவென இருப்பவன், இப்போது இப்படி கடினப்பட்டு நிற்பது தன்னால் தானா?!’ ரமிக்கு கவலையானது.

 

அவனிடம் வந்தவள் தயங்கி, “சாரி மாமு” என்று அவன் தோள் தொட, வசீகரன் திருப்பவில்லை.

 

“நீ அன்னிக்கு என்னென்னவோ பேசி என்னை ஹர்ட் பண்ணிட்ட மாமு, அதான் நானும் அதை சீரியஸா எடுத்துக்கிட்டேன்” அவள் சொல்ல இவனிடம் எந்த அசைவும் இல்லை.

 

“அது… நீ அப்போ அவ்வளோ சீரியஸா சொல்லிட்டு, இப்போ நெருங்கி வரும் போது நான் அக்ஸப்ட் பண்ணிட்டா, நீ அதையும் நான் உன்ன டிஸ்டிராக்ட் பண்ணதா சொல்லிடுவியோன்னு தான் விலகி போனேன் மாமு” என்றவளை அதிர்ந்து திரும்பி பார்த்தான். அவனுக்கு அடிவாங்கிய உணர்வு. ‘ஏன் இப்படி?!’ என்பதாய் அவளை தளர்ந்து பார்த்தான்.

 

ரம்யா, “எனக்கு உன்மேல எப்பவுமே கோபம் இல்ல மாமு. நான் தான் சொன்னல்ல எனக்கு உன்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும்னு. நீ கோபபட்டா, திட்டினா, சண்டை போட்டா கூட எனக்கு உன்ன பிடிக்கும் தான் மாமு” ரம்யா அவனுக்கான தன் மனதை வெளிப்படையாக சொல்லவும், அவனுக்குள் ஏதோ உடைபடும் உணர்வு. அந்த உணர்வின் அழுத்ததில் அவன் கண்கள் கூட கலங்க பார்க்க, காரணம் புரியவில்லை அவனுக்கு. எதையும் இலகுவாக கையாள்பவன் அவன். இவ்விதம் உணர்ச்சிவசப்படுவது அவனுக்கு அசௌகரியமாக தோன்றியது.

 

தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், “சாரி நான் தான் சொல்லனும்டீ, கீழ விழுந்திட்டியே அடி ஏதாவது பட்டுச்சா? எங்காவது வலிக்கதா?” வசீகரன் பேச்சை மாற்ற, 

 

“சேர் மேல இருந்து தான விழுந்தேன் காயமெல்லாம் படல மாமு, விழுந்த வேகத்துல இடுப்புல தான் வலி புடிச்சிகிச்சு போல, ரொம்ப வலிக்குது” என்று இடுப்பை பிடித்து கொண்டு நெளிந்தவளை, படுக்க சொன்னவன், வலி எடுத்த பகுதியில் உடனடி வலிநிவாரணி மருந்தை ஸ்ப்ரே செய்தான். அவளுக்கும் வலி குறைந்தது போல இருந்தது. சின்னதாய் புன்னகைத்தாள். வசீகரன் முகத்தில் அவளின் புன்னகைக்கு பிரதிபலிப்பு இருக்கவில்லை.

 

“நீ உம்முனு இருந்தா சகிக்கல மாமு, எப்பவும் போல சிரிச்சுட்டே இரேன், நான் இனிமே உன்ன கஷ்டபடுத்தவே மாட்டேன். நீ என்ன சொன்னாலும் சமத்தா செய்வேன்” என்று சமாதானம் சொல்லி, அவன் உம்மென்ற வாயை சிரிப்பது போல இருபுறமும் இழுத்து விட்டாள். 

 

அவளை இமை அசையாது பார்த்து இருந்தவன், அவளின் இரு கைகளையும் தன் கைகளில் பற்றி தன் உதட்டில் வைத்து அழுத்தம் தந்து தன் மார்போடு பொத்திக் கொண்டான்.

 

ரம்யா அவன் செய்கைகளை வித்தியாசமாக பார்த்து இருந்தாள்.

 

“என்னாச்சு மாமு?”

 

இந்த திருமண வாழ்வின் சிக்கலான எதார்த்தத்தை எப்படி கையாள்வது என்று அவனுக்கு தெரியவில்லை. வழக்கத்திற்கு மாறாக தன் அறிவும் மனமும் வெவ்வேறு புறம் நழுவி செல்வதை தடுக்க முடியாது திணறினான். 

 

நினைப்பதை நினைத்தபடி துணிந்து முடிக்கும் வழக்கம் கொண்டவனுக்கு, இவ்வித திணறலும் தவிப்பும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதில் ரம்யாவும் புரிந்து கொள்ளாமல் அவஸ்தைப்படுத்துகிறாளே என்று அலுப்பானது அவனுக்கு. அதேநேரம் அவளின் சேட்டைகளில் இளகி உருகும் தன்னையும் இழுத்து பிடிக்க முடியாமல் திண்டாடினான். அதையே அவளிடம் சொல்ல முயன்றான். 

 

“கல்யாணம் ரொம்ப ஈஸியான விசயம்னு நினச்சுட்டேன் புஷி, என்னால உன்ன பார்த்துக்க முடியும்ற நம்பிக்கை, உன்னோட சந்தோசமா வாழ முடியும்ற எண்ணத்தோட தான் துணிஞ்சு உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்ப தோனுது கல்யாணம் அவ்வளோ ஈஸியான விசயம் இல்லனு!  ஆழந்தெரியாம இந்த ரிலேஷிப்ல விழுந்துட்டேனோனு தோனுது” வசீகரன் பேசப்பேச ரம்யாவிற்குள் இனம் புரியாத பயம் பரவியது. அவளின் பொன் முகம் வெளுத்து போவதாய்.

 

“நாம சேர்ந்து இருக்கிறது, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடந்துக்கிறது மட்டும் போதாது போல, நான் அவசரப்பட்டுட்டேனோனு இப்ப யோசிக்கிறேன்டீ” வசீகரன் தயங்கி சொல்லவும், ரம்யாவின் உடல் நடுங்கி, கண்கள் குளமாகி, இட கண்ணில் கண்ணீர் கரை தாண்டி வழியலானது.

 

“ஹேய், என்னாச்சு புஷி? இப்ப எதுக்குடி அழற?” என்றவன் அவள் விழி ஈரத்தை துடைத்து, அவள் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டான்.

 

“நீ… நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது… தப்புனு ஃபீல் பண்றியா மாமு…? நான்… உன்ன… அவ்ளோ… கஷ்டப்படுத்துறேனா…?” அதீத மன உளைச்சலில் அவளுக்கு மூச்சு முட்டி பேச்சு திக்கியது.

 

வசீகரன் பயந்தே போனான். இதுவரை ரம்யாவை அவன் இப்படி மூச்சு திணறி பார்த்தது இல்லை. பதறிப்போனான்.

 

“புஷி, உனக்கு என்ன பண்ணுது? ஏன் இப்படி மூச்சு வாங்கிற? வா கிளம்பு ஹாஸ்பிடல் போலாம்” அவன் அவளை பற்றி தூக்க முயல, அவள் மறுத்து தலையாட்டினாள்.

 

“எனக்கு… ஒன்னுல்ல… அதிகமா எமோஷ்னல் ஆனா… மூச்சு திணரும்… சரி… சரியாயிடும்” அவனுக்கு சமாதானம் சொன்னாள்.

 

“இப்ப எதுக்காக நீ எமோஷ்னல் ஆகுறடீ, நான் தான் உன்கூடவே இருக்கேன்ல” அவனுக்கு அவளை தவிர எல்லாமே மறந்துபோய்விட்டது போலானது.

 

ரம்யாவிற்கும் அதே கேள்வி தான். நிதானமாக யோசிக்க முயன்றாள். அவளுக்கு புரிந்தது. 

 

‘வசீகரன் தன்னை வெறுக்கிறானோ? மறுக்கிறானோ?’ என்ற பயம் அவளை இத்தனை பாதித்திருக்கிறது. 

 

‘என்ன பைத்தியகாரதனமான பயம் எனக்கு!’ என்று தன்னை சமன்படுத்தி கொள்ள முயன்றவளின் கண்களில் கண்ணீர் இன்னும் பெருகி தான் வழிந்தது.

 

தன் வாழ்வில் முதல்முறை என்ன செய்வது என்று புரியாமல் ஸ்தம்பித்து செயலற்று தன்னவள் தவிப்பை வலியோடு பார்த்து இருந்தான் வசீகரன்.

***

 

காதல் கூத்து கட்டும்…