காதலில் கூத்து கட்டு 34(1) final

காதலில் கூத்து கட்டு 34 (1) final

 

“மாமு” ரம்யா அழைக்க, அவனிடம் பதில் வரவில்லை.

 

அவன் தோளில் தலை சாய்த்து இருந்தவள் நிமிர்ந்து பார்க்க, வசீ மும்முரமாக கைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.

 

“நான் கூப்புறது கூட கவனிக்கல நீ?” அவள் அவனிடம் குறைப்பட்டு கொள்ள,

 

“கொஞ்ச நேரம் ஃப்ரியா விடுடீ, சும்மா எப்பபாரு நைநைன்னு” அவன் சலித்து கொண்டான்.

 

“என் பேச்சை கேக்கறது உனக்கு அவ்வளோ கஷ்டமா இருக்கா போ, இனிமே நான் உன்கிட்ட பேசினா கேளு” என்று முறுக்கியவள், அவன் தொடையில் கைவைத்து ஊன்றி எழுந்து, தம் தம் என்று தரையை மிதித்து நடந்து போனாள்.

 

அவள் அழுத்தி ஊன்றியதில் வலித்த தன் தொடையை தேய்த்து விட்டு கொண்டவன், “ராட்சசி, நாள் முழுக்க வாய் ஓயாம எப்படி தான் உன்னால பேச முடியுதோ, என் காதுல ரத்தம் வராதது மட்டும் தான் பாக்கி” என்று முணுமுணுத்து மறுபடி தன் மொபைலில் பார்வை பதித்தான்.

 

ரமி, “போடா டேய், பொண்டாட்டி ஆசையா பேச வந்தா ரொம்ப தான் அலுத்துக்கிற, உனக்கு என்மேல கொஞ்சம் கூட லவ்வே இல்ல” அறைக்குள் இருந்து அவனிடம் கத்த, வசீ பதில் பேசாமல் சுட்டு விரலால் தன் காதை குடைந்து விட்டு கொண்டான்.

 

அறைக்குள் இருந்து அவனை‌ எட்டி பார்த்து முகம் கடுகடுத்தவள், தன் மேடேறிய வயிற்றை தடவி தந்து, “பாப்பா, நீ அப்பாக்கு கா சொல்லு, அவன் ரொம்ப மோசம், அவன்கூட நானும் பேசமாட்டேன். நீயும் பேசக்கூடாது சரியா” வயிற்று பிள்ளையை கூட்டணி சேர்க்க, வசீகரன் நமட்டு சிரிப்பு சிரித்தானே தவிர அவளை இப்போதும் கண்டுகொள்வதாயில்லை. 

 

அவளை வெறுப்பேற்றி பார்ப்பதில் அவனுக்குள் அத்தனை தித்திப்பு.

 

சற்றுநேரம் இருவருமே முறுக்கி கொண்டிருக்க, வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. வசீகரன் எழுந்து வந்து கதவை திறக்க, அங்கே ஒரு கூட்டமே வந்திருந்தது.

 

பாட்டி சாவித்திரி, அம்மா மேகவாணி, திவ்யா, சசிதரன் இவர்களுடன் தேவாவும் அவன் அம்மா துர்காவும் வந்திருந்தனர்.

 

வசீகரன் வியப்பும் திகைப்புமாக அப்படியே நிற்க, “டேய் தள்ளுடா, வந்தவங்கள வாங்கனு சொல்லாம குறுக்கால மரம் மாறி நின்னுகிட்டு” சாவித்திரி பாட்டி அவனை ஒரு தள்ளு தள்ளிவிட்டு உள்ளே நடந்தார்.

 

“ஏய்ய் எல்லாரும் நில்லுங்க, செருப்பெல்லாம் வெளியே கழட்டி விட்டு கைக்கு சேனிடைசர் போட்டு உள்ள போங்க” என்றான் அவசரமாய்.

 

“அட, புள்ளத்தாச்சிய பார்க்க வரோமில்ல, நாங்க சுத்தபத்தமா தான் வந்து இருக்கோம்” என்று கடுப்படித்த பாட்டி, பேரனுக்காக சேனிடைசரை கைகளில் தேய்த்துக்கொண்டே உள்ளே வந்தார்.

 

திடீரென்று அவர்கள் அனைவரையும் ஒன்றாக பார்த்த ரம்யாவிற்கு மூச்சடைத்தது. மிரட்சியுடன் வசீகரன் முகம் பார்க்க, அவன் இமைகளை மூடி திறந்து நான் இருக்கிறேன் என்றான்.

 

மேகவாணி வசீ, ரமியை வாஞ்சையாக பார்த்தார். இலகுவான லாங் ஸ்கர்ட், தொள தொள டாப்பில் சுவற்றோடு ஒட்டி நின்ற ரம்யாவிடம் வந்தவர், “எப்படி இருக்க ரமி” என்க. வெகு காலத்திற்கு பிறகான அவரின் நல விசாரிப்பில்,‌ “நல்லா இருக்கேன் ஆன்ட்டி” வராத புன்னகையை இழுத்து பிடித்து பதில் சொன்னாள் ரம்யா.

 

“இன்னும் என்ன ஆன்ட்டி நோன்ட்டினு, அத்தை, மாமினு உரிமையா கூப்பிடு” டான் குரலில் சொன்ன பாட்டி, ரம்யாவின் கன்னத்தை ஆதுரமாக வருடி, “ராசாத்தி, எங்க குலம் உன்னால தழைக்கனும்னு விதிச்சிருக்கு, எத்தனை மாசம் ஆச்சு” என்று கேட்க,

 

“அஞ்சு மாசம்” முணுமுணுத்தவள் ஒருவித சங்கடத்தில் தலை தாழ்த்திக் கொண்டாள். 

 

“நல்லதா போச்சு, ரெட்ட மாசம் இல்ல” பாட்டி சொல்ல, அவளுக்கு புரியவில்லை. திருதிருத்து விழித்து நின்றாள்.

 

அனைவரும் அமர தரையில் பாய் விரித்து, குடிக்க தண்ணீர் எடுத்து வந்து வைத்த வசீகரன், ரமியின் தவிப்பை கவனித்து அவளிடம் வந்து நின்று கொண்டான். ரமியின் கரம் அவனது உள்ளங்கையை நாடி அழுத்தமாக பிடித்துக் கொண்டது.

 

“சொல்லாம கொள்ளாம எதுக்கு இப்படி திடுதிப்புனு வந்து நிக்கிறீங்க? இத்தனை நாள் இல்லாம என்ன புதுசா பாசம் பொத்துகிட்டு வந்துடுச்சு உங்களுக்கெல்லாம்?” வசீகரன் காரமாகவே கேட்க, சாவித்திரி பாட்டி அவனிடம் மசிவதாக இல்லை.

 

“இப்ப எதுக்கு இப்படி குதிக்கற, எங்க பேச்சை மீறி நீ கட்டிக்கிட்ட கோபம் எங்களுக்கு இன்னும் இருக்க தான் செய்யுது. ஆனா, பாழும் மனசு கேக்கலையே, நான் கொள்ளு பாட்டி ஆக போறேன்னு சேதி கேட்டதுல இருந்து எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல” படபடத்தவர் அவனை கண்டுக் கொள்ளாமல், “ஏன் மசமசனு நிக்கிறீக, வாணி சுத்தமான விரிப்பு எடுத்து வந்து கிழக்க பார்த்து போடு. துர்கா, அந்த பாத்திர பண்டமெல்லாம் திறந்து அடுக்கி வை, நல்லநேரம் போகுது பாரு” ஒவ்வொருவருக்கும் உத்தரவிட்டார்.

 

வசீகரனும் ரம்யாவும் புரியாமல் பார்த்து நிற்க, “இதென்ன உன் பொண்டாட்டி சின்ன புள்ளயாட்டம் பாவடை, சட்டைய போட்டு நிக்கிறா? திவ்யா, உன் தங்கச்சிக்கு நல்ல சேலையா கட்டி அழைச்சிட்டு வா போ சீக்கிரம்” என்று அவர்களையும் விரட்டினார்.

 

அந்த இடம் அல்லோலப்பட, அவர்கள் அடுக்கி எடுத்து வந்திருந்த பாத்திரங்களை குழப்பமாக பார்த்த வசீகரனுக்கு ஒன்றும் புரிவதாக இல்லை. “டேய் அண்ணா, என்ன இதெல்லாம்” என்றான் சசிதரனிடம்.

 

“எனக்கும் தெரியலடா, பாட்டி, அம்மா தான் உங்களை பார்க்கனும்னு எங்களை விரட்டி இழுத்துட்டு வந்தாங்க” சசிதரன் கைவிரித்து சொல்ல,

 

தேவா, “வசீ, புள்ளதாச்சி பொண்ணுக்கு அஞ்சு மாசம், ஏழு மாசத்துல வாய்க்கு ருசியா ஆக்கி வந்து பூ முடிப்பாங்க, அதான் செய்றாங்க” என்று விளக்கினான். தன் அக்காவிற்கு இவ்விதம் செய்ததை நினைவுப்படுத்தி.

 

“எல்லாரும் வராங்கன்னு முன்னாடியே சொல்லறது என்ன உனக்கு” அவனை  கடிந்து கொண்ட வசீகரன், “எல்லாருக்கும் ஓட்டல்ல சாப்பாடு வாங்கிட்டு வா, அப்படியே ஒரு லிட்டர் பால், கொஞ்சம் ஸ்நேக்ஸ் வாங்கிட்டு வந்துடு” தேவாவிடம் பணத்தை கொடுத்து விரட்டினான்.

 

“அம்மாவும் பாட்டியும் காலைல இருந்து என்னென்னவோ சமச்சு எடுத்துட்டு வந்து இருக்காங்க,‌ இன்னும் எதுக்குடா வெளி சாப்பாடு?” என்று கேட்ட சசிதரனை முறைத்த வசீகரன், “அது எல்லாருக்கும் சரி போகாதுண்ணா” என்றான்.

 

“டேய் பேரனுங்களா உங்க பொண்டாட்டிங்க இன்னைக்குள்ள சீல கட்டிட்டு வந்திடுவாங்களா?” பாட்டி சாற்றிய கதவை பார்த்து நொட்டம் பேச, 

 

“திவி சேலை கட்டி எப்ப பார்த்து இருக்க பாட்டி, அவள போய் ரமி கூட அனுப்பி இருக்க, சீக்கிரம் வந்த மாதிரி தான்” சசிதரனும் பதில் தர, 

 

“வசீ, நல்ல நேரம் போகுது அவங்களை வர சொல்லு போடா” பேரனை விரட்டினார்.

 

கதவை தட்டி விட்டு உள்ளே பார்த்த வசீ, வந்த சிரிப்பை வாய்க்குள் மடித்துக் கொண்டான். அக்காவும் தங்கையும் சேலையை விரித்து பார்த்து எப்படி உடுத்தலாம் என்ற ஆலோசனையில் இருந்தனர் இன்னும்.

 

“அண்ணி, நீங்க போங்க, நான் ரமிய கூட்டிட்டு வரேன்” என்றவன் திவ்யா சென்றதும், கதவை தாழிட்டு ரம்யாவிடம் வந்தான். அவள் கையிலிருந்த சேலையை வாங்கிக் கொண்டவன் அவளுக்கு சேலைக்கட்ட உதவினான். சேலைக்குள்ளே தனித்து தெரிந்த அவளது சற்றே பெருத்த வயிற்றின் மீது மென்மையாய் முத்தம் வைத்தான். 

 

அவள் இப்போதும் ஏதும் பேசாதிருக்க, “ஓய், என்ன?” என்றவன் பார்வை மனைவியின் தாய்மை அழகில் பூரிக்க, ரம்யா இடவலமாக தலையசைத்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

 

அவளின் முதுகை ஆதுரமாக வருடி தந்தவன், “இப்படி அமைதியா இருக்கும்போது எவ்வளோ நல்லா இருக்கடீ, அடிக்கடி உன் வாய்க்கு இப்படி ரெஸ்ட் கொடுத்து விடேன், உன் நச்சரிப்புல இருந்து என் காதும் கொஞ்சம் தப்பிக்கும் இல்ல” அவளை வம்பிக்கிழுத்தான்.

 

“போ மாமு” அவன் நெஞ்சில் பலமின்றி குத்தியவள், “எல்லாரும் எதுக்கு வந்திருக்காங்க மாமு, நம்மள அவங்க கூட கூட்டிட்டு போயிடுவாங்களா?” திருதிருத்த குழந்தையாக அவள் கேட்க,

 

“வான்னா வரத்துக்கும் போன்னா போறத்துக்கும் நாம அவங்க வீட்டு நாய்க்குட்டி இல்ல, அதோட உன்ன நல்லா பார்த்துக்கிறேன் பேர்வழின்னு அம்மாவும் பாட்டியும் உன்ன செல்லம் கொடுத்து கெடுத்து வச்சுடுவாங்க. உன்ன பக்கா சோம்பேறி ஆக்கிடுவாங்க” என்றான் யோசித்து.

 

அவன் சொன்னதில் ரம்யாவின் கண்கள் மின்னின. ஆமாம் இவனின் கெடுபிடிகள் வர வர அதிகமாகிவிட்டன. அவளுக்கு வாந்தி, மயக்கம் இருந்தவரை அவளை தாங்கிக் கொண்டவன், இப்போதெல்லாம் அவளை அதிகம் தான் படுத்தி எடுக்கிறான். 

 

‘ரொம்பநேரம் ஒரே இடத்தில் உட்காராத ரமி’

 

‘நடந்துட்டே மொபைல்ல பாட்டு கேளு, படுத்துக்கிட்டு கேட்டா தூங்கி போற’

 

‘காஃபி, டீல கைய வச்ச, கைய உடச்சுடுவேன். ஒன்லி ஃபிரஷ் ஜூஸ் மட்டும் தான், நேரத்துக்கு குடிக்கனும் ஓகே’

 

‘ஒன் ஹவர்க்கு ஒரு டம்ளர் தண்ணீ குடினு எத்தனை முறை சொல்றது, அதெப்படி மறப்ப’

 

காலையில், மாலையில் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று அவளை நடை பழக்கினான். 

 

இன்னும் அது இதென்று நாள்முழுவதும் அவளை சுறுசுறுப்பாக வைத்து கொள்ள விரட்டி கொண்டே இருப்பான் வேறு.

 

ரம்யா சிடுசிடுத்து சிணுங்கி கொண்டாலும், ‘நம்ம பேபிக்காக தான புஷி’ என்றவன் வார்த்தைகளில் கட்டுண்டு அனைத்தையும் செய்வாள்.

 

அவர்கள் வீட்டிற்கு சென்றால், இப்படி அவளை படுத்தி எடுக்க மாட்டான் என்பதிலேயே அவள் முகத்தில் உற்சாகம் பெருகியது.

 

“ரொம்ப ஓவரா எல்லாம் கற்பனை பண்ணாத, அவங்க எல்லாம் நம்ம குடும்ப வாரிசுகாக தான் வந்து இருக்காங்க இப்போ. உன்ன ஆச மருமகளா எல்லாம் ஏத்துட்டு வரல” என்று வசீ நிதர்சனம் சொன்னான்.

 

உண்மைகள் சுடும் தான்! அவர்களையும் இந்த உண்மை சுடத்தான் செய்தது. இருவரின் முகமும் வாட்டம் காட்டியது.

 

ரம்யா அவன் நெஞ்சோடு முகம் புதைத்து ஒடுங்கிக் கொண்டாள். ‘எனக்கு நீ மட்டும் போதும்’ என்பதாக. வசீகரன் கைகளும் அவளை கட்டிக் கொண்டன. ‘நான் உனக்காக மட்டும்’ என்பதாக.

 

“இப்ப அவங்க என்ன செய்ய வந்து இருக்காங்க மாமு, திவி கிட்ட கேட்டேன், அவ சரியா சொல்லல”

 

“உனக்காக பலகாரம் செஞ்சு எடுத்து வந்து இருக்காங்களாம்”

 

“பலகாரமா?! அப்ப சாப்பிடனுமா? என்ன பலகாரம்? சாப்பிடும் முன்ன நான் மருந்து எடுத்துக்கனுமே மாமு” ரம்யா சொன்னதும் தான் வசீகரனுக்கும் உரைத்தது.

 

“ஆமால்ல, நான் அதை யோசிக்கல பாரு” என்று தலையை தட்டி கொண்டவன், அறைக்கு வெளியே வந்து, “ம்மா, இங்க வா” மேகவாணியை அழைத்தான்.

 

வெகுநாட்களுக்கு பிறகான மகனின் அழைப்பில் மேகவாணி முகம் மகிழ்ச்சியையும் கண்ணீரையும் ஒன்றாக காட்டியது. அவரை கைப்பிடித்து உள்ளே அழைத்து வந்தவன், “ரம்யாக்கு என்ன செஞ்சு எடுத்துட்டு வந்து இருக்கீங்க? அவளுக்கு சில உணவெல்லாம் ஒத்துக்காது” என்று கேட்டான்.

 

மேகவாணி முகம் இளகியது. “டேய் மடையா, உண்டாகி இருக்க பொண்ணுக்கு எது ஆகும், எதெது ஆகாதுன்னு எங்களுக்கு தெரியாதா என்ன? பழம், அஞ்சு வகை சாதம், பால் பாயசம், உளுந்து வடை, அடை, சீடை, கேசரி இதெல்லாம் தான் எடுத்து வந்திருக்கோம் போதுமா, இதுல ஏதாவது ஆகாதது இருக்கா?” என்றார், தங்கள் வீட்டின் வாலு பையன் தன் மனைவியை பொறுபாய் கவனித்து கொள்வதை ரசித்தவராக.

 

வசீகரன் அவர் சொன்ன உணவு வகைகளை மனதிற்குள் கணக்கிட்டு, “கேசரி, ஆயில் ஐட்டம் எல்லாம் டேஸ்ட் பண்ண மட்டும் கொடுங்க ம்மா, அதிகம் வேணாம்” என்றவன், நேராக வெளியே வந்து, குளிர்சாதன பெட்டியில் அவளுக்கான மருந்தை அளந்து சிரஞ்சில் ஏற்றி கொண்டான்.

 

எந்த உணவுக்கு எத்தனை யூனிட் மருந்து என்பது அவனுக்கும் மனப்பாடமாகி இருந்தது. ரம்யாவின் கையில் ஊசி மூலம் மெதுவாக மருந்தை ஏற்றிவிட்டு, “எப்பவும் லன்ச் சாப்பிடற அளவு சாப்பிடு ஓகேவா” என்றதும் அவளும் சமத்தாய் தலையசைத்தாள். 

 

மேகவாணி முகம் வெளுக்க நின்றிருந்தார். இப்படி ஊசி மருந்தை சகஜமாக ஏற்றிக்கொண்டு வாழ முடியும் என்பது பற்றி அவர் இதுவரை கேள்விப்பட்டதும் இல்லை என்பதால் அவருக்குள் அதிர்வு இருக்கவே செய்தது.

 

பூஜை மாடத்தில் விளக்கேற்றி வணங்கிவிட்டு, ரம்யாவை புது விரிப்பில் அமர்த்தி அவளுக்கு குங்குமம் இட்டு, பூச்சூட்டி, கைநிறை வளையல்கள் அணிவித்தனர். ஏனோ ரம்யாவிற்கு இது சீமந்தம் போல தோன்றியது.

 

அவள் முன் தலை வாழை இலை விரித்து, எல்லா உணவுகளையும் பரிமாறிட, முதலில் யார் அவளுக்கு ஊட்டுவது என்று பேச்செழுந்தது.

 

“மாசமான பொண்ணுக்கு அம்மா வீட்டுல இருந்துதான் இப்படி வகைதொகையா ஆக்கி எடுத்து வந்து, அம்மா கையால ஊட்டி விடனும், இங்க நீங்க முறை மாத்தி இல்ல செய்றீங்க” அதுவரை தனக்குள் அரித்து கொண்டிருந்த கேள்வியை துர்கா கேட்டுவிட, ரம்யா, திவ்யா இருவர் முகமும் சுருங்கி போனது.

 

“துர்கா, சம்மந்தி வீட்ல இந்த முறையெல்லாம் தெரியாது. அதோட இப்ப அவங்க ஒட்டாம இருக்காங்க வேற, அதான் நாங்களே முறை செய்ய வந்தோம், எந்த வீட்டுல செஞ்சா என்ன வயித்துப்புள்ளகாரி சந்தோசம் தான முக்கியம்” என்ற மேகவாணி, “திவி, நீ வந்து அம்மா ஸ்தானத்துல இருந்து ரமிக்கு முதல் வாய் ஊட்டிவிடு” என்றழைக்க, திவ்யா தயங்கினாள்.

 

தங்கையின் தாய்மை பூரிப்பை பார்க்க பார்க்க திவ்யாவிற்குள் தன் குழந்தையின் இழப்பு அதிகமாக எழுவதை தவிர்க்க முடிவதில்லை. அலைபாயும் தன் மனநிலையில் ரம்யாவிற்கு முறை செய்ய அவளுக்கு சற்று அச்சமாக இருந்தது. தன்னை போலன்றி தன் தங்கை நல்ல முறையில் பிள்ளை பெற்று வர வேண்டும் என்ற பரிதவிப்பு வேறு அவளை ஒதுங்கிக்கொள்ள செய்தது.

 

“இல்ல அத்த, நீங்களே ஊட்டி விட்டுங்க” என்றாள் சிறு குரலாய்.

 

திவ்யாவின் இந்த மறுப்பு அங்கிருந்த அனைவரையும் திகைக்க வைப்பதாய். 

 

“அதானே, இன்னும் உண்டாகாதவளை முறை செய்ய சொன்னா எப்படி” துர்கா மறுபடி வார்த்தையை விட, “ஆன்ட்டி” சசிதரன் குரல் கண்டனமாக அங்கே ஒலித்தது.

 

சாவித்திரி பாட்டிக்கு, ‘ஏன்டா இந்த துர்காவை அழைத்து வந்தோம்’ என்றாகிவிட்டது. 

 

“என் பொண்டாட்டிக்கு நானே ஊட்டிக்கிறேன், நீங்க நகருங்க” என்ற வசீகரன், ரம்யாவின் அருகில் அமர்ந்து, ஒவ்வொரு உணவையும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஊட்டி விடலானான். அவன் பரிவில் ரம்யாவின் கண்கள் பனித்தன.

 

அனைவரும் அங்கேயே விருந்து உணவை முடித்து ஓய்வாக அமர்ந்தவுடன், சாவித்திரி பாட்டி பேரனிடம் மல்லுக்கு நின்றார்.

 

“இன்னும் என்னடா உனக்கு வீம்பு? வயித்து புள்ளக்காரிய எப்படி நீ தனியா பார்த்துப்ப, அதுவும் தலை பிரசவம் வேற, மரியாதையா சொல்றேன் நம்ம வீட்டுக்கு கிளம்பி வாங்க”

 

வசீ, “இத்தனை நாள் நாங்க தனியா சமாளிக்கல, இனியும் எங்களால சமாளிக்க முடியும். என் பொண்டாட்டி, புள்ளய உங்களைவிட நான் ரொம்ப நல்லாவே பார்த்துக்குவேன், கிளம்புங்க”

 

பாட்டி, “நீ சொன்னா கேக்க மாட்டல்ல, இரு உன் அப்பன வர வைக்கிறேன். குடும்பம், புள்ளங்க பத்தி கொஞ்சமும் நினப்பில்லாம எங்கயோ மண்ணை கிளறிட்டு இருக்கான். அவன் வரட்டும் டா, உன்ன கைய கால கட்டி வீட்டுல கொண்டு போட சொல்றேன்” என்ற பாட்டி, பேரனிடம் ஒரு திருப்பு திருப்பி விட்டு தான் கிளம்பினார்.

 

மற்றவர்கள் ரம்யாவிற்கு பத்திரம் சொல்லி விடைப்பெறவும், புயல் அடித்து ஓய்ந்தது போலிருந்தது அச்சிறுவீடு.

 

சாதாரண உடைக்கு மாறி விட்டு வந்த ரம்யா, வசீகரனுடன் சேர்ந்து வீட்டை சுத்தம் செய்ய உதவ, அவள் முகம் மட்டும் எங்கோ யோசனையில் அலையாடிக் கொண்டிருந்தது.

 

ரமி, “நான் கன்ஸீவ் ஆகி இருக்கறது அம்மா, அப்பாக்கு கூட தெரிஞ்சு இருக்கும் இல்ல மாமு?”

 

வசி, “தெரிஞ்சு தான் இருக்கும்”

 

ரமி, “அம்மாவும் அப்பாவும் என்னை பார்க்க வருவாங்களா?” என்று ஆவலுடன் கேட்க,

 

“உன் அப்பா, அம்மா…! அப்படியே வந்துட்டாலும்” அவன் நக்கலில் இவள் முகம் மொத்தமாக சுருண்டு போனது.

 

“அப்போ, வரவே மாட்டாங்களா?” ஏக்கத்துடன் வினவியவளை தோள் சேர்த்துக் கொண்டவன், “வருவாங்கடீ, வராம எங்க போயிட போறாங்க, என்ன உன் அப்பனுக்கு முசுடு அதிகம் அது குறைய கொஞ்சம் நாளாகும். கண்டிப்பா வருவாங்க நீ ஃபீல் பண்ணாத ஓகே” என்றான் ஆறுதலாய்.

 

ரம்யாவும் புரிந்தது என தலையசைத்துக் கொண்டாள். ஆனாலும் அவள் முகம் முழுதாய் தெளியவில்லை.

 

அவள் கையிலிருந்த மாப்பை வாங்கி தூர வைத்தவன், “ஏன்டீ இப்ப மூஞ்சில வயலின் வாசிக்கற?” என்க. அவள் பதில் சொல்லாமல் அறைக்குள் சென்று முடங்கி கொண்டாள். 

 

“இதான் சாக்குனு வேலைய பாதில விட்டு வர பார்த்தியா” அவளை சீண்டியபடி அவளருகில் அமர்ந்தவன்,‌ “இம்னு சொல்லு உன் அப்பா, அம்மாவை கடத்திட்டு வந்து இங்கயே கட்டி வைச்சுடுறேன்” என்று தீவிரமாக சொல்ல, அவன் சொன்ன பாவனையில் ரம்யா சிரித்து விட்டாள்.

 

“ஆஹா சிரிச்சுட்ட, அப்ப என் மாமியார், மாமனார தட்டி தூக்கிட வேண்டியது தான்” வசீகரன் மேலும் சொல்ல,

 

“ப்ச் ப்ச் அதெல்லாம் வேணாம் மாமு” என்று அவன் சட்டையின் முன் காலரை இடக்கையால் பிடித்து தன் புறம் இழுத்தவள், “அவங்களுக்கு எப்ப வரனும்னு தோனுதோ அப்பவே வரட்டும்” அவன் கழுத்தடிக்குள் தன் முகத்தை சொருகி கொண்டு செல்லம் கொஞ்சினாள்.

 

அவளின் செல்ல சேட்டையில் இவனுக்கு கழுத்தோரம் கூச்சமானது. அவளின் கூந்தல் காட்டிற்குள் தன் நீள் விரல்களை நுழைத்து, அவள் முகம் நிமிர்த்தியவன், “உன்ன புஷின்னு சொல்றது சரியாதான்டி இருக்கு, அப்படியே பூனைக்குட்டி மாதிரியே சேட்டை செய்யற” என்றான் அவளின் சப்பை மூக்கோடு தன் கூர் மூக்கை உரசி.

 

வசீகரனின் தோள்வரை நீண்டு வழிந்த கேசத்தை தன் விரல் நுனியில் சுழற்றி சுழற்றி அவள் விளையாட, அவன் அசையா பார்வை அவள் முகத்தில் பதிந்திருந்தது. வெகு நாட்களுக்கு பின்னான இந்த நெருக்கம் அவர்களை இளக செய்வதாய்.

 

“மாமு”

 

“என்ன வேணும் சொல்லுடி”

 

“ஒரேயொரு உம்மா கொடுடா” கண்கள் குறுக்கி அவள் கேட்டதில் சிரித்து விட்டவன், அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழொற்றி எடுக்கவும்,

 

“ஐயோ லூசு மாமு நீ, ஒரு பொண்ணு உம்மா கேட்டா நெத்தியிலயா தருவ, இங்க தரனும்” அவள் தன் இதழை தொட்டு காட்டி கிளுக்கி சிரித்தாள்.

 

“ஒரு பொண்ணு கேட்டிருந்தா லிப்ஸ்ல தான்டீ கொடுத்து இருப்பேன், கேட்டது நீயாச்சே அதான் அங்க தரல” அவனும் அவளை கலாய்க்க,

 

“யோவ் நான் உன் பொண்டாட்டி டா” ரமி கண்களை உருட்டினாள்.

 

“யாரு இல்லன்னு சொன்னா?” என்றவன் கரம் அவளை இன்னும் தன் புறம் நெருக்கியது. அவள் விழி விரிக்க, “உன் லிப்ஸ் சலிச்சு போச்சுடி எனக்கு” என்று நாக்கை துருத்தி காட்டினான்.

 

“அடாபாவி, முன்ன என்னெலாம் சொன்ன, என் லிப்ஸ் குட்டியா, ஸ்வீட்டா இருக்குனு, முல்லை அரும்பு ஒட்டி வச்ச மாதிரி இருக்குனு எல்லாம் சொல்லிட்டு, இப்ப” அவள் உதட்டை பிதுக்கி அழுகைக்கு தயாராக,

 

“அது அப்போடீ, ஃப்ர்ஸ்ட் டைம் இல்ல, ஒரு வேகத்துல சொல்லி இருப்பேன்” வசீகரன் மறுபடி வெறுப்பேற்றவும், ரம்யா கோபத்துடன் அவனை தன்னிடமிருந்து விலக்கி தள்ள, அதற்குள் அவன் முரட்டு இதழ்கள் அவள் மென் இதழ்களை நலம் விசாரிக்க தொடங்கி இருந்தன. 

 

‘ரம்யா வீக்கா இருக்காங்க, இன்சுலின் குறைபாடு வேற இருக்கு, நீங்க எவ்வளவு கவனமா இருக்கீங்களோ, அந்தளவு அம்மா, குழந்தைக்கு நல்லது’

 

‘டாக்டர், ரம்யாக்கு எந்த பிராப்ளமும் இருக்காது இல்ல’ வசீகரன் பதற்றமாக கேட்க,

 

‘இப்ப என்னால எதுவும் உறுதியா சொல்ல முடியாது வசீகரன், சாதாரண பெண்களுக்கே தலை பிரசவம் சில நேரம் கிரிட்டிகல் ஆகலாம். ரம்யா டைப் ஒன் சுகர் பேஷன்ட், எவ்வளவு தான் அவங்க நார்மல் வாழ்க்கை வாழ முயற்சி செஞ்சாலும், இயற்கையான சுரப்பு வேற, செயற்கை மருந்து வேற தான். அவங்களுக்கு கண்டிப்பா கூடுதல் கவனம் எடுத்துட்டே ஆகனும். நீங்க நம்பிக்கையா இருங்க’

 

மருத்துவர் ரம்யா உடல்நிலை பற்றி சொன்ன எச்சரிக்கை நினைவு வர, 

தன் கைளில் உருகி கிடக்கும் மெழுகுபாவையை தன் மார்போடு சேர்த்து அணைத்து கொண்டான் பரிதவிப்பாக. 

 

‘உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என்னை மன்னிக்கவே மாட்டேன் புஷி, நீயும் பேபியும் நல்லபடியா வேணும் எனக்கு’ வசீகரன் தன் மனதோடு வேண்டிக் கொள்ள, அப்போது ரம்யாவின் வயிற்றுக்குள் ஒருவித அழுத்தம் கூடியது.

 

வயிற்று தசைகள் இழுப்பட்டு விரியும் உணர்வு. உடன் வலியும் ஏற்பட, “மாமு, வயிறு வலிக்குது” என்றாள் முகம் சுருங்க.

 

“ஏய் என்னாச்சு புஷி, எங்க வலிக்குது” பதற்றமாக அவள் வயிற்றில் கை வைத்தவன் முகத்தில், சொல்லில் அடங்காத உணர்வலைகள். அவள் வலியின் காரணம் அவனுக்கு புரிவதாய். 

 

சற்று நிம்மதியானவன், “புஷி, ஒன்னுமில்ல, பேபி மூவ் பண்ணுது, அதான் வலிக்குது போல, சரியாகிடும்” என்றான் அவளை ஆசுவாசப்படுத்தி.

 

“ஆமா மாமு, ரொம்ப உதக்கிறா, வயிறை கிழிச்சுட்டு வந்துடுவா போல ஆ…” முதல்முறை அவர்கள் குழந்தை இத்தனை அசைவை காட்டியதில் அவளால் தாங்க முடியவில்லை. 

 

“சிக்ஸ் மன்த் ஸ்டார்ட் ஆக போகுதில்ல, இனி பேபி நல்லா மூவ் ஆகும்னு டாக்டர் சொன்னாங்க தானடா” என்றவன் அவள் வயிற்றில் குனிந்து, “பேபி, அம்மாக்கு வலிக்குது பாரு, அமைதியா இருங்க, சமத்து பேபி இல்ல” அவன் மென்மையாய் வருடி தந்தும் அடங்காமல் சில நிமிடங்கள் ரம்யாவை படுத்தி எடுத்துவிட்டே அமைதியானது அவர்களின் சுட்டி பிள்ளை.

 

***

 

நடுநிசி உறக்கத்தில் சசிதரன் உறக்கம் கலைய, திவ்யா அமர்ந்திருப்பது அவன் பார்வையில் நிழலாடியது. உறக்கம் தெளியாத கண்களை திறந்து அவளை பார்த்தபடி எழுந்தான்.

 

இருளை வெறித்தபடி அமர்ந்து இருந்தவளின் கன்னங்களில் கண்ணீர் கறைகள்.

 

அவள் தோள்தொட்டு, “தூங்காம என்ன செய்ற திவி?” சசிதரன் கேட்டதும் திரும்பியவள், அவன் தோளில் சரிந்து தேம்பினாள்.

 

“ஹேய் என்னாச்சு”

 

“நம்ம குழந்தை ஞாபகம் வந்துடுச்சு சசி” திவ்யா கலங்கி சொல்ல, அவன் முகம் வாடிபோனது.

 

“முடியல சசி, ரமி தாயாக போற சந்தோசத்தை கூட என்னால முழுசா அனுபவிக்க முடியல, ஏதோ பயமா இருக்கு. எனக்கே என்னை பிடிக்கல” என்று கலங்கியவளை சமாதானம் செய்ய வகையின்றி தவித்தான் அவன்.

 

“என் வயித்துக்குள்ளயே உருவாகி, என் வயித்துக்குள்ளயே இல்லாம போச்சு சசி, என் கருவறையே கல்லறையா மாறி…” திவ்யா பிதற்றிக் கொண்டே போக,

 

“சும்மா உளறாத திவி, முட்டாள்தனமா இருக்கு நீ பேசறதெல்லாம். நமக்கு எந்த குறையும் இல்ல, கண்டிப்பா நமக்கும் குழந்தை பிறக்கும்” சசிதரன் தைரியம் சொன்னான் தனக்கும் சேர்த்து.

 

“எனக்கு குழந்தை வேணும் சசி, மறுபடி என் குழந்தைய தவர விட மாட்டேன். பத்திரமா பாத்துப்பேன்” தன் வெறுமையான வயிற்றை அழுத்தி பிடித்து கொண்டு மொழிந்தாள் திவ்யா.

 

அவள் இப்படி குழம்பி தவிப்பது சசிதரனுக்கு கஷ்டமாக இருந்தது. கருகலைந்த அன்று அவனுக்கும் இத்தனை துடிப்பும் தவிப்பும் இருந்தது தான். இப்போது அந்த வேதனையை கடந்து விட்டிருந்தான். அந்நிகழ்வை எதிர்பாராத விபத்தாக எண்ணி தேற்றிக் கொண்டான்.

 

தகப்பனான அவனால் கடந்துவிட முடிந்தது, தாயான அவளால் கடக்க முடியவில்லை. திவ்யா அந்த இழப்பின் வேதனையில் தேங்கி நிற்பது அவனுக்கு புரிந்தது. இப்போதே இப்படி என்றால் அந்த நாட்களில் எத்தனை துடித்திருப்பாள். அப்போது அவளுக்கு ஆதரவாக இல்லாமல் தானும் கொடு வார்த்தைகள் பேசி அவளை நோகடித்து விட்டோமே, என்று சசிதரன் நொந்து போனான்.

 

அவளது கலங்கிய முகத்தை அழுத்த துடைத்தவன், “அம்மாவா உன் கஷ்டத்தை புரிஞ்சுக்காம நானும் தப்பா பேசி உன்ன… நோகடிச்சுட்டேன், உன்ன தாங்க வேண்டிய நானே தவிக்க வச்சுட்டேன் சாரி திவி” உணர்ந்து அவளிடம் மன்னிப்பை வேண்டியவன் அவள் முகத்தை தன் மார்போடு அழுத்திக் கொண்டான்.

 

வெகுநேரம் இருவரிடமும் பேச்சு இல்லை. உறக்கமும் அவர்களை நெருங்கவில்லை. திவ்யாவின் கலக்கம் மெல்ல மெல்ல குறைய, அவள் தன்னை ஓரளவு மீட்டு கொண்டாள்.

 

“சாரி, உன் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணிட்டேன். நவ் ஐ’ம் ஓகே சசி” சங்கடமாக அவன் அணைப்பில் இருந்து விலக முயல, அவன் அவளை விலக விடவில்லை.

 

“சசி?” அவள் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க,

 

“நீ இப்படியே தூங்கு திவி” என்றவன் வாகாய் அவளை தன்மீது சாய்த்து கொண்டு மெதுவாக தட்டி கொடுத்தான். அவன் மனம் முழுவதும் ஒருவித மசமசப்பு. பரிதவிப்பான உணர்வு கனமாக்கியது.

 

சசிதரன் தான் நேரிலே கண்டானே வசீ, ரமியை அத்தனை பாதுகாப்பாக கவனித்து கொள்வதை. அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதை. திவ்யா கரு கொண்டிருக்கும் போது தான் அவளை இப்படி கவனித்து கொண்டோமா என்று எண்ணி பார்த்தான். நிச்சயமாக இல்லை. பிள்ளைபேறு ஏதோ அவளின் பொறுப்பு மட்டுமே என்ற கருத்தில் இருந்தான் அப்போதெல்லாம்.

 

ஒருவேளை தானும் திவ்யாவை கவனமாக பார்த்து இருந்தால், தங்கள் குழந்தையும் இப்போது இருந்து இருக்கும் என்ற எண்ணமே அவனை உலுக்கி பார்த்தது. அவனுள் குற்றவுணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை அவனால்.

 

“நான் உன்ன சரியா கவனிச்சிருந்தா, உனக்கு அபார்ட் ஆகி இருக்காதில்ல” சசிதரன் வெறுமையாக மொழிய,

 

நிமிர்ந்தவள், “சசி, நான் தான் ஏதோ வருத்தத்தில முட்டாள்தனமா புலம்பினா, நீயும் புலம்புவியா? விடு முடிஞ்சு போனத பேசறதால எந்த பயனும் இல்ல” என்றாள் அவள் தெளிந்து.

 

அவன் ஆழ்ந்த பெருமூச்செடுத்து, “அந்த சமயத்தில உனக்கு ஆறுதலா இல்லாம, நானும் தப்பெல்லாம் உன்மேலன்னு பழி போட்டு உன்ன காயப்படுத்துற மாதிரி வேற பேசி தொலைச்சிட்டேனே” சசிதரன் மேலும் வருந்தி சொல்ல,

 

“பழசை பேச வேணாம்னு இப்ப தான சொன்னேன்” அவனை முறைத்தாள்.

 

“உன்னால கூட தான அதையெல்லாம் மறக்க முடியலன்னு சொன்ன?” சசிதரன் அவளை அசையா பார்வை பார்க்க,

 

“ஆமா, சொன்னேன் தான். அதையும்மீறி எதுக்கு உன்ன தேடி மறுபடி வந்தேன்னு யோசிச்சியா?” அவள் கேள்வியில் இவன் நெற்றி சுருங்கியது.

 

“அதான ஏன் வந்த?” சசிதரன் அப்பாவியாக கேட்டு வைக்க,

 

“என் மக்கு புருஷா, நீ பேசனதால வந்த வேதனைவிட, நான் உன்மேல வச்சிருக்க காதல் பெருசு… அந்த காதல் தான் அப்பவும் இப்பவும் என்னை உன் பின்னாடியே வர வச்சிருக்கு புரிஞ்சதா?” என்று அவன் நெற்றியை முட்டி விட்டாள்.

 

பாறாங்கல்லாக கனந்திருந்த அவன் மனசு இப்போது வெண்பஞ்சு மேகமாய் மிதக்கலானது. 

 

சசிதரன் தன்னவளை வாறி அணைத்துக் கொண்டான் சந்தோசமாய். 

 

“எனக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும் திவி” சசிதரன் உள்ளார்ந்து சொல்லவும், 

 

“அதுதான் எனக்கு தெரியுமே” என்றாள் அவளும்.

 

உனக்கும் எனக்கும் ஒட்டாத விரிசல்களில் எல்லாம்

நம் காதலை ஊற்றி நிரப்பி

ஒட்ட வைத்து கொள்வோம் வா!

 

***