காதலில் கூத்து கட்டு 4(1)

images (28)-97757d62

காதலில் கூத்து கட்டு 4(1)

 

“லவ் யூ திவி” மனைவியின் காது மடல்களை உரசி கிரக்கமாய் வழிந்தது அவன் குரல். “லவ் யூ ட்டூ சசி” இரவின் மீதியில் கணவனின் மார்பில் ஒன்றிக் கொண்டாள் திவ்யா.

 

சசிதரன் கரங்கள் அணைப்பை இறுக்கி தன் காதலானவளை தன்னுள் புதைத்துக் கொள்ள முயன்றன. காமம் தீர்ந்த பிறகும் தீராத காதல் இதயத்தில் இதம் சேர்ப்பதாய்.

 

திவ்யா சின்னதாய் சிணுங்கி விலக முயல, “ம்ஹும் இப்படியே இரு” சசிதரன் கொஞ்சல் குரல் உத்தரவாக வர, அவள் முகத்தை நிமிர்த்தி, அந்த மங்கிய விளக்கொளியில் தன்னவன் முகம் பார்த்தாள். 

 

அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி கொண்டவன், “ஏன் திவி நீ இவ்வளோ அழகா இருக்க, என்னால உன்ன விட்டு ஒரு இன்ச் கூட விலக முடியல” கணவனின் குழைவில் பெண்ணாய் இவளுக்கும் கர்வமானது. கணவனின் முழுமையான அன்பில் நிறைந்து போகும் பெண்மையின் கர்வம் அது. சசிதரனின் இந்த பாராட்டிற்காகவே தன் அழகில், தோற்றத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்பவள் அவள். 

 

“சசி”

 

“ம்ம்”

 

“நாம எப்போ தனியா போக போறோம்? நானும் கேட்டுட்டே இருக்கேன், நீயும் கண்டுக்கவே மாட்டேங்கிற” திவ்யா கேட்க,

 

“நாம தனியா போகனும்னு இப்ப என்ன அவசியம் திவி, இங்க மாம், டேட், வசி யாரும் நம்ம பிரைவசில நுழையிறதில்ல. மாம் நமக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்றாங்க, வேறென்ன ப்ராப்ளம் உனக்கு?” தன் குடும்பத்தை விட்டு தனித்து செல்லும் எண்ணமில்லை சசிதரனுக்கு.

 

“உன் பாட்டி தான் பிராப்ளம், கல்யாணம் ஆனதுல இருந்து ‘இந்த மாசமும் தலைக்கு ஊத்திட்டியா? நாள் தள்ளி போகலையா’னு கேட்டு இம்சை பண்றாங்க” திவ்யா சலிப்பாக சொல்ல,

 

“பாட்டிக்கு அவங்க கொள்ளு பேரனை சீக்கிரம் பார்க்கனும்னு ஆசை. அதான் அப்படி கேட்டு இருப்பாங்க. நாம ட்டூ இயர்ஸ் பேபி வேணாம்னு பேசி இருக்கோம்னு சொல்லு புரிஞ்சிப்பாங்க” சசிதரன் எப்போதும் போல மனைவியை சமாதானப்படுத்தினான்.

 

“நீ வேற சசி, நான் அதை சொன்னதுக்கு அப்புறம் தான் என்னை புடிபுடினு புடிக்கிறாங்க, கல்யாணம் முடிஞ்சதும் குழந்தை பெத்துக்கனுமாம். இப்படி தள்ளி போடறது நல்லது இல்லையாம், பொண்ணுக்கு தாய்மை தான் அழகாம் இன்னும் நிறைய அட்வைஸ் பண்ணியே கொல்றாங்க பா” திவ்யா படபடவென  சொல்ல, சசிதரன் சற்று நிதானித்து யோசித்தான்.

 

“திவிமா, அதான் ஒன் இயர் முடிஞ்சது இல்ல, இனி எதுக்கு நாம தள்ளி போடனும் குழந்தை பெத்துக்கலாமே” அவன் ஆசையாக கேட்க, இவளுக்கு கோபம் தான் வந்தது.

 

அவனிடம் இருந்து விலகிக் கொண்டவள், “நீதான ட்டூ இயர்ஸ் அப்புறம் பேபி பத்தி யோசிக்கலாம் அதுக்கு முன்ன வேணாம்னு சொன்ன, இப்ப இப்படி மாத்தி பேசுற, இந்த இயர் எனக்கு ப்ரோமோஷன் இருக்குனு உனக்கு நல்லாவே தெரியும். நான் கேரியர் ஆனா என் கெரியர் என்ன ஆகுறது?” தன் நிலை சொல்லி அவள் படபடவென பொறிந்தாள்.

 

அவளின் விலகலும் பேச்சும் இவனுக்கும் கோபமூட்டியது. “குழந்தை ஒரு குடும்பத்தோட புது சந்தோசம், அந்த சந்தோசத்தை நம்ம குடும்பமும் அனுபவிக்கனும்னு சொன்னேன். உனக்கு நம்ம ஃபேமிலிய விட ப்ரோமோஷன் பெருசா இருக்கு. நம்ம குழந்தைய விட உன் கெரியர் பெருசா தெரியுது இல்ல” அவனும் படபடத்தான்.

 

“ஆமான்னு சொன்னா என்ன சொல்லுவ! பேபி ஃபார்ம் ஆனா அப்பாவா உங்களுக்கு சந்தோசம் மட்டும் தான். அம்மாவா எனக்கு பொறுப்பும் கடமையும் ரெண்டு மடங்காகும். என் உடம்பும் மனசும் நிறைய மாற்றங்களை சந்திக்கனும். கைக்குழந்தை வச்சிட்டு வேலையில கவனம் செலுத்த முடியாது. இன்னும் நிறைய… என்னோட ப்ரஃபஷன்ல ஓரளவு உயரத்தை எட்டனும்னு நினைக்கிறேன். அதுக்கு இந்த வருசம் எனக்கு ரொம்ப இம்பார்ட்டட்” திவ்யா தன்நிலையை விளக்கினாள். 

 

“இங்க வேலைக்கு போற பொண்ணுங்க யாரும் குழந்தை பெத்துக்கறது இல்ல பாரு, நீ மட்டும் தான் பெத்துக்க போற இல்ல! உனக்கு நம்ம குழந்தை அவ்வளவு சுமையா தெரிஞ்சா, நீ என் குழந்தைய பெத்து கொடுத்தா மட்டும் போதும். அம்மாவும் பாட்டியும் பாப்பாவ பார்த்துப்பாங்க, நீ உன் கெரியரை பார்த்துக்கோ” சசிதரன் பதில் சிடுசிடுப்பாக வந்தது.

 

“என்னை பார்த்தா உனக்கு குழந்தை பெத்து போடற மிஷின் மாதிரி தெரியுதா? நான் பெத்து கொடுத்தா அவங்க வளர்த்துப்பாங்களாம். ஏன் எனக்கு என் குழந்தைய வளர்க்க தெரியாதா? என்னோட சிச்சுவேஷனை விளக்கிட்டேன் அப்புறமும் நீ கம்பல் பண்றது நல்லா இல்ல சொல்லிட்டேன்” அவனுக்கு தன்னை புரிய வைத்து விடும் வேகத்தில் அவள் வாதம் செய்ய,

 

“எதுக்கும் ஒத்துக்கமாட்டேன்னு அடம்புடிச்சா எப்படி? எனக்கு புரிஞ்சு போச்சு, குழந்தை பெத்துக்கிட்டா உன் அழகு ஸ்பாயில் ஆகிடும், ஷேப் மாறிடும்னு பேபி வேணாம்னு தள்ளி போட பார்க்கற அதான?” சசிதரன் அவளை குற்றம் சாட்டினான்.

 

“என்னை பார்த்தா அவ்வளோ சீப்பா தெரியறேனா? நீ என்னைபத்தி புரிஞ்சிக்கிட்டது இவ்வளோதானா சசி? பேபி இப்ப வேணாம்னு நீ சொன்னா நான் அதுக்கு தலையாட்டனும், நீ பேபி வேணும்னு சொன்னா உடனே அதுக்கும் தலையாட்டனும் அப்பதான் நான் உனக்கு நல்ல பொண்டாட்டி. இல்லனா என்னை தப்பு சொல்லுவ, குறை சொல்லுவ, என்னோட விருப்பமும் கனவும் உனக்கு முக்கியம் இல்ல. நீயும் சராசரி ஆண் தான்னு நிரூபிக்கிற இல்ல?” 

 

“ஆமா நான் அப்படித்தான், என்னடி பண்ணுவ?”

 

“டி போட்டு பேசினா எனக்கு‌ பிடிக்காது சசி, என் கோபத்தை கிளறாத, ச்செ போயும் போயும் உன்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாரு” என்று திரும்பி‌ படுத்துக் கொண்டாள்.

 

“இப்ப என்னை கல்யாணம் பண்ணி உனக்கு என்ன குறை வச்சிட்டேன்? பேமிலியோட ஒத்து போக தெரியல உனக்கு. எதுலயும் நீ தனிச்சு இருக்கனும் எதுக்கும் ஒத்து போக கூடாது. என்ன சுயநல புத்தியோ உன்னோடது” சசிதரனும் எதிர்ப்புறம் திரும்பி படுத்துக் கொண்டான்.

 

இருவருக்குள்ளும் கொதிப்பும் தவிப்பும் கூடியது. சற்றுமுன் மனதில் தேங்கி இருந்த இதம் வடிந்து போனது.

 

காலை குளித்து விட்டு வந்து பார்க்க, சசிதரன் உடை அயர்ன் செய்யாமல் அப்படியே கிடந்தன. “திவீ, என் டிரஸ்ஸ இன்னும் அயர்ன் பண்ணலையா?” 

 

“எனக்கும் வேலைக்கு நேரமாச்சு கிளம்பனும் டைம் இல்ல” 

 

“இவ்வளோ நாள் என் டிரஸ் அயர்ன் பண்ணி வைக்க டைம் இருந்தது இல்ல” 

 

“அரக்கப்பரக்க செய்வேன், நீதான் சொல்லிட்டியே நான் யாரோடவும் ஒத்து போகாதவனு, இப்ப உன்னோட மட்டும் ஏன் ஒத்து போகனும்” திவ்யாவின் பதிலில் சசிதரன் பற்களை நறநறத்துக் கொண்டான். “திமிரேறி கிடக்கடீ நீ, அப்புறம் கவனிச்சுக்கிறேன் உன்ன” காலை நேர அவசரத்தில் வேகமாக தயாரானான்.

 

திவ்யா தயாராகி வாசல் வந்தபோது இன்று அவளுக்காக சசிதரன் காத்திருக்கவில்லை. அவளை விட்டு தனியாகவே சென்று விட்டிருந்தான். அவளுக்கு புரிந்தது. அவன் உடையை அயர்ன் செய்யாததற்கு பழி வாங்குகிறான் என்று. ஆட்டோவை பிடித்து நிறுவனம் வந்து சேர அவளுக்கு நேரம் தாமதமாகி இருந்தது. 

 

கணவனும் மனைவியும் ஐடி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து தான் பணிபுரிகின்றனர். வேலையிடத்தில் ஏற்பட்ட பழக்கமே அவர்களுக்குள் காதலாக மலர்ந்து திருமண உறவில் கனிந்து, இப்போது ஊடலில் கசந்து நிற்கிறது.

 

இவர்களிடையே தினம் தினம் நீண்ட சண்டைகள், திவ்யாவை தவிர்த்து சசிதரன் மட்டும் பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் நிலைக்கு வந்திருந்தன.  கணவனின் இந்த போக்கு திவ்யாவை கவலைக் கொள்ள செய்தது. அவனின் குத்தல் பேச்சு ஏட்டிக்குப் போட்டி சண்டை, வாக்குவாதம் என வறட்சியாக கழியும் நாட்கள் அவளை வெகுவாகவே பாதிக்க, தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்தாள். பிள்ளைபேற்றுக்கு சம்மதம் சொன்னாள். சசிதரனுக்கு அத்தனை சந்தோசம். ஊடலுக்கு பின்னான நெருக்கம் அதிகம் இன்பம் தருமாம். அவர்களும் இன்பத்தில் மூழ்கினர்.

 

இரண்டு மாதங்களில் திவ்யா கருக்கொண்டிருப்பது உறுதியாக, குடும்பம் மொத்தமாக அவளை கொண்டாடி தீர்த்தது. திவ்யாவிற்கும் சந்தோசம் தான் தனது பெருக்காத வயிற்றை இதமாக வருடி பூரித்து கொண்டாள்.

 

ஆனால் அந்த சந்தோசம் இரண்டு வாரங்களை தாண்டவில்லை. வேலையிடத்தில் பொறுக்க முடியாதளவு வயிற்றுவலியுடன் உதிரப்போக்கும் ஏற்பட துடிதுடித்து போனாள். அவளின் கரு கலைந்திருந்தது.

 

“இந்த காரணம் தான் என்று சொல்ல முடியாமல் எழுபது சதவீதம் பெண்களின் முதல் கரு ஆறு வாரங்களில் கலைந்து போகிறது. மாறிவரும் சூழ்நிலை மாற்றம், துரித உணவுகளின் பயன்பாடு…” என பல சமாதானங்கள் கூறினார் மகப்பேறு மருத்துவர். ஆனால் எந்த சமாதானங்களும் சசிதரனை அடையவில்லை. திவ்யா வேண்டுமென்றே கருவை கலைத்து விட்டாளோ என்ற சந்தேகம் தான் அவனை உக்கிரமாக்கியது.

 

மருத்துவமனையில் இருந்து வீடு வந்து ஓய்வில் இருந்தவளிடம் அவன் கேட்ட முதல் கேள்வி அதுதான். “என் குழந்தையை கருவிலேயே கொன்னுட்ட இல்ல நீ” கணவனின் குற்றச்சாட்டில் திவ்யா முழுவதுமாக உடைந்து போனாள். உடலின் வேதனையும் மனச்சோர்வும் அவளை பலவீனப்படுத்தி இருக்க, கணவனின் ஆறுதலை நாடியவளுக்கு அவனின் குற்றச்சாட்டு மனதை வலிக்க செய்தது.

 

“என்ன உளற சசி, நம்ம குழந்தைய நானே எப்படி…” திவ்யா முதல்முறை உடைந்து அழுது விட்டாள். எதையும் எதிர்த்து வாதாடுபவள் தன் தைரியத்தை இழந்து கலங்கி விட்டாள்.

 

“உன் ப்ரோமோஷன், கெரியருக்காக நீ வேணும்னு தான் நம்ம பேபிய ஏதோ செஞ்சிருக்க” கண்ணில் பார்க்காத பிள்ளைப்பாசம் சசிதரன் கண்களை மறைத்திருக்க,

 

“உனக்கு நான் வேணும், ஆனா என் குடும்பத்தோட ஒட்ட மாட்ட, உனக்கு என்னோட கூடியிருக்க சுகம் வேணும் ஆனா பிள்ளை பெத்துக்கமாட்ட, ச்சீ என்ன கேவலமான ஜென்மம்டீ நீ” சசிதரனின் சரமாரியான பழிச்சொற்களை தாங்கமாட்டாமல் திவ்யா கத்திவிட்டாள்.

 

“இல்ல இல்ல இல்ல… நான் அப்படிபட்டவ இல்ல… என்னை இவ்வளோ கேவலமா நினைச்சு தான் என்கூட இருந்தியா? ஐ ஹேட் யூ போ வெளியே போ, என் கண்முன்னே நிக்காத போயிடு போயிடு” கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் அவன்மீது வீசி ஏறிந்தாள். உடல், மன ரீதியான அழுத்தங்கள் அவளை அதிகம் கலவரப்படுத்தி இருந்தது. 

 

அன்றைக்கு பிறகு திவ்யாவின் பேச்சு குறைந்து போனது. தன்னுள் ஒடுங்கி கொண்டாள். அறைக்குள்ளேயே முடங்கி கொண்டாள். மனைவியின் அமைதியும் ஒடுக்கமும் சசிதரனையும் கவலைக்கொள்ள செய்ய, தான் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டதை நினைத்து வருந்தலானான்.

 

“நீ ஏன் இப்படி இருக்க திவிமா, வெளிய வா ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடந்து முகமெல்லாம் கூட கருத்து போயிட்ட பாரு” அவன் இதமான பேச்சுக்கு அவளிடம் பதிலில்லை.

 

“சாரி திவி, அன்னிக்கு பேபி போன வருத்தத்துல ஏதேதோ பேசிட்டேன், நான் வேணும்னு பேசல கோபத்துல வந்துடுச்சு, நான் பேசின எல்லாமே தப்பு தான் மன்னிச்சுடு திவி” மனைவிக்காக அவனும் இறங்கி வந்தான்.

 

அவளின் வறண்ட கண்கள் அவன் முகம் பார்த்து நிமிர்ந்தன. “மனசுல இல்லாம வாயில எப்படி வரும்? நான் கொலகாரி தான், எனக்கு உன் பேமிலிய பிடிக்கல தான், இப்ப உன்னயும் எனக்கு பிடிக்கல” திவ்யா நிதானமாக சோர்வாக சொல்ல, சசிதரனுக்குள் ஏதோ உடைபடும் உணர்வு.

 

“ஹேய் அப்படி எல்லாம் பேசாத திவி, நீ முதல்ல வெளிய வா, எப்பவும் போல வேலைக்கு போ, நார்மலாகு எல்லாம் சரியாபோகும்” அந்த நம்பிக்கையில் தான் சசிதரனும் சொன்னான். எல்லாம் சரியாகும் என்ற அதே நம்பிக்கையில் தான் திவ்யாவும் தன் வேலையில் கவனம் செலுத்த முயன்றாள்.

 

ஆனால் அவர்களுக்குள் ஏதும் சரியாகவில்லை. சசிதரன் நெருங்கும் போதெல்லாம் இவள் விலகி கொண்டாள். சில நாட்கள் பொறுத்து பார்த்தவன், அதன்பிறகு பொறுக்க முடியாமல் கேள்வி கேட்க, “இனி உன்னோட என்னால சேர்ந்து வாழ முடியாது சசி, நீ பேசின வார்த்தை ஒவ்வொன்னும் எனக்கு இங்க குத்துது” தன் நெஞ்சை குத்தி கலங்கி சொன்னாள்.

 

“அதான் ஏதோ கோபத்துல பேசிட்டேன்னு சொன்னேனில்ல, மன்னிப்பும் கேட்டாச்சு இன்னும் என்ன தான் செய்ய சொல்ற?” அவன் குரலும் வேகமெடுத்தது.

 

“நீயா பேசிட்டு நீயா வந்து மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியா போயிடுமா? நீ பேசின பேச்சு உள்ளுக்குள்ள வலிச்சிட்டே இருக்கே, அந்த வலியை நான் செய்ய? உன்கிட்ட இவ்வளோ கேவலமான பேச்சு வாங்கியும் உன்கூட இருந்தா எனக்கு பேரே வேற, அசிங்கமா இருக்கு எனக்கு” அவளின் கலங்கிய பேச்சில் இவனுக்கு ஆதங்கம் கூடியது.

 

“ஏதோ வாய் தவறி பேச்சு வந்தா அதையே பிடிச்சு தொங்கனுமா?” 

 

“என்னோட உணர்வுகளை கேவலப்படுத்திட்டு நீ கூப்பிட்டதும் வரனுமா? அதுக்கு நான் செத்து போவேன்” அவளின் பதிலில் சசிதரன் அவளை அறைந்திருந்திருந்தான்.

 

வலியில் எரிந்த கன்னத்தை அழுத்திக் கொண்டவள் அதே வேகத்தில் அவன் கன்னத்திலும் பதில் அறை விட்டிருந்தாள். அவளிடம் இந்த எதிர் தாக்குதலை எதிர் பார்க்காதவன் முதலில் அதிர்ந்து பின் முகம் கடுகடுத்தான்.

 

“எவ்வளோ திமிர் இருந்தா என்னையே அடிப்ப?” அவன் கோபமாக வர,

 

“உனக்கு என்னை அடிக்கிற அளவுக்கு திமிர் இருந்தா அதே அளவு திமிர் எனக்கும் இருக்கு, கை ஓங்கற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத” என்றவளின் நிமிர்வில் அவன் அசந்து தான் போனான். ஆனாலும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. பெரிதாகியது. பேச்சுக்கள் நீண்டன. தொடர்ந்த சண்டையில் திவ்யா வீட்டைவிட்டு வெளியேறி இருந்தாள். 

 

நினைவுகளின் தாக்கத்தில் திவ்யா தன் அறையிலும், சசிதரன் தன் அலுவலக அறையிலும் பிரிவின் வேதனையில் உழன்று இருந்தனர்.

 

பக்குவமற்ற காதலும், புரிதலற்ற நேசமும் அவர்களுக்கிடையே ஊசலாடிக் கொண்டிருந்தது.

 

***