காதலில் கூத்து கட்டு 4(2)

images (27)-89de4269

காதலில் கூத்து கட்டு 4(2)

 

“இங்க இருந்து நடந்து வந்து சோஃபா நுனியில இப்படி ஸ்டைலா உக்கார்ந்து சின்னதா ஒரு ஸ்மைல் அவ்வளவுதான் ஓகேவா” என்ற வசீகரன் ஒற்றை கையால் கேசத்தை கோதிவிட்டு கால் மாற்றி நளினமாக நடந்து வந்து ஒய்யாரமாக அமர்ந்து கவர்ச்சி புன்னகை செய்து காட்டி, அவள் செய்ய வேண்டியதை விளக்கி சொல்லி நடித்துக் காட்ட, அந்த ஆண்மகனின் நளின நடை ரூபிணிக்கு சிரிப்பை வரவழைத்தது சிரித்தும் விட்டாள். 

 

அதை கவனித்து, “உனக்கு சிரிப்பு மூட்ட நான் நடிச்சு காட்டல, நீ சரியா பண்ணனும்னு தான் நடந்து காட்டினேன், ம்ம் கமான்” வசி துரிதபடுத்த, “நான் இப்படி நடந்து வந்து ஸ்மைல் பண்ணா மட்டும் போதுமா வசி, எதுவும் பேச தேவையில்லையா?” ரூபிணி சந்தேகம் எழுப்பினாள்.

 

“ஸ்கிரின்ல அந்த சோஃபா கம்பெனி லோகோவோட நேம் சேர்த்து நாங்க விஷுவல் பண்ணிப்போம், நீ சொன்னதை மட்டும் நடிச்சு கொடுமா” தேவா குறுக்கே வந்து பதில் சொல்ல, அவளும் ஒய்யாரமாய் நடந்து வந்து சோஃபா நுனியில் அமர்ந்து புன்னகைத்து காட்டினாள்.

 

“டன் ரூபி, ஸ்மைல் மட்டும் இன்னும் அட்ராக்டிவா டிரை பண்ணு” என்று சில திருத்தங்களை கூறிய வசி கேமராவில் கண்களை பதித்து, “ரெடி ஓகே ஆக்டிங்” என்றான்.

 

‘கிரீன் ஸ்டூடியோ’ எனப்படும்  பின்புறத்தில் பச்சை நிற திரை அமைக்கப்பட்டு அந்த விளம்பரப்படம் எடுக்கப்பட்டது.

 

அவன் சொன்னது போலவே ரூபிணி நடந்து வந்து சோஃபா நுனியில் லாவகமாக அமர்ந்து இதமான புன்னகை தந்தாள். 

 

“ஓகே சூப்பர்” என்று கை உயர்த்தியவன், வேறு வேறு கோணங்கள் மாற்றி புகைப்படங்கள் பலவும் எடுத்துக் கொண்டு, அதோடு படப்பிடிப்பை முடித்துக் கொண்டான். தன் நண்பன் தேவாவுடன் அமர்ந்து தான் எடுத்த காட்சிகளை உன்னிப்பாக கவனித்து சரிப்பார்க்கலானான்.

 

‘கிளிக்கர்ஸ்’ என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு வசீகரனும் தேவாவும் இணைந்து தொடங்கப்பட்ட சிறிய அளவிலான விளம்பர நிறுவனம் அது. ஓரளவு புதுமையையும் உழைப்பையும் சேர்த்து முயற்சித்தால் நல்ல லாபம் தரும் தொழிலும் கூட.

 

இப்போது சிறிய அளவிலான பட்ஜெட் விளம்பரங்கள் மட்டுமே இவர்களுக்கு கிடைத்து வருகிறது. பெரிய அளவிலான விளம்பரங்களுக்கு இவர்களும் முயற்சி செய்து‌ கொண்டு தான் இருக்கின்றனர். துறுதுறுப்பும் சுறுசுறுப்பும் கொண்ட‌ இந்த இளைஞர்களின் திறமையும் முயற்சியும் வெற்றிக்கான வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறன. 

 

“பர்ஃபெக்ட் வசி, ஸ்டூடியோல கொடுத்து எடிட் பண்ணி, ஃபினிஷிங் வொர்க் பண்ணா முடிஞ்சது” என்று தேவாவும் வசீகரனும் கையடித்துக் கொண்டனர்.

 

ரூபிணியின் பார்வை மட்டும் வசீகரனிடமே லயித்து இருந்தது. பெயருக்கேற்றாற் போன்ற அவனின் வசீகர தோற்றத்திற்கும், கணினி திரையில் கண்கள் அலைப்பாய தன் முகத்தில் வழியும் நீண்ட கேசத்தை கோதிவிடும் அவன் லாவகத்திலும், இந்த விளம்பரப்படம் சரியாக வர வேண்டுமே என்ற படபடப்பு தெறித்திடும் அவன் வேகத்திற்கும் ரசிகை அவள்.

 

“வசீ என்னை டிராப் பண்ண வா” ரூபிணி அழைக்க,

 

“எனக்கு வொர்க் இருக்கு ரூபி, நீ வேணா தேவா கூட கிளம்பு” வசீகரன் சொல்லவும், தேவா, ரூபிணியை கண்களை விரித்து பார்த்து பெரிதாக இளித்து வைத்தான்.

 

அதில் சற்றே மிரண்டவள், “இந்த ஜுராசிக்பார்க் கூட எல்லாம் என்னால போக முடியாது. நீ டிராப் பண்ண வர போறியா‌ இல்லயா?” என்று வசீகரன் முகத்தைப் பற்றி தன்புறம் திருப்பிக் கேட்டாள்.

 

“டிஸ்டர்ப் பண்ணாத ரூபி, ஆட்டோ பிடிச்சு கிளம்பு போ” என்றான் வசி அவள் கைகளை தட்டி விட்டு.

 

“போடா, எப்பவும் என்னை கழட்டி விடுறதுலயே இருக்க, நாலு மாசமா உன்ன சுத்தி சுத்தி வரேனே கொஞ்சமாவது கண்டுக்க மாட்டியா” ரூபிணி சிணுங்கியபடி அவனருகில் அமர்ந்து கொள்ள, 

 

“டேய் கண்டுட்டு தான் தொலையேன் டா, உனக்கு மட்டும் எங்கேயோ மச்சம் இருக்குடா, உன்கூட தான் நானும் சுத்தறேன்.என்னை மட்டும் எவளும் கண்டுக்க மாட்டேங்கிறா” தேவா வராத கண்ணீரை துடைத்து கொண்டு புகைச்சலுடன் புலம்பினான்.

 

“டேய் கருவாப்பையலே கொஞ்சமாவது பார்க்கற மாதிரி இருந்தா தானே கண்டுக்குவாங்க” ரூபிணி அவனிடம் முகம் சுருக்க, “உன்ன போல வெள்ளை பன்னி மாதிரி இருக்கறதுக்கு, நான் கருவாபயலாவே இருந்துக்கிறேன் போ” தேவா அசராமல் காலரை தூக்கி விட்டு சொல்ல,

 

“யார் யாரு? நா நான் வெள்ளை பன்னியா? என்னை பார்த்தா உனக்கு பிக் மாதிரியா தெரியுது, ரசனை கெட்ட ஜென்மம்” என்று படபடத்தவள், “என்ன வசீ நீயும் சிரிச்சிட்டு இருக்க?” அவனையும் உலுக்கி வைத்தாள்.

 

“நான் என்ன செய்யட்டும் ரூபி, அவனோட கலர் வச்சு‌ நீ கிண்டல் பண்ண, உன் கலர் வச்சு அவன் கிண்டல் பண்றான் சரியா போச்சு” வசீகரன் நமட்டு சிரிப்புடன் கை விரித்து காட்டினான்.

 

“போடா, நீயும் உன் ஃப்ரண்டுக்கு தான் சப்போட் பண்ற” ரூபிணி முகம் சுருக்கி கொள்ள,

 

“சரி ஓகே உனக்கு நான் என்ன‌ செய்யனும் சொல்லு” வசீகரன் கேட்டதும் அவள் தாமதிக்காமல், “என்னை லவ் பண்ணி தொலையேன்டா” என்றாள் கண்களை சுருக்கி கெஞ்சலாய்.

 

“லவ்வா இழவு” என்று தலையிலடித்துக் கொண்டவன், “லவ்ல சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிற சசிய பார்த்த அப்புறமுமா எனக்கு லவ் பண்ண தோனும் ஆள விடு” வசீகரன் கையெடுத்து கும்பிட,

 

“அப்ப சரி லவ் பண்ண வேணாம், இப்போதைக்கு ரிலேஷன்ஷிப்ல மட்டும் இருக்கலாம்” ரூபிணி சாதாரணமாக சொல்ல, அதைக் கேட்ட தேவாவிற்கு தான் விக்கிக் கொண்டது.

 

“க்க் க்க் க்க்”

 

அவனை முறைத்து விட்டு திரும்பியவள், “நீ சொல்லு வசி, உனக்கு ஓகே தான” என்று கேட்க, “அதுக்கு வேற எவனையாவது பாரு” என்றான் கடுப்புடன்.

 

“ஏன்டா எதுக்குமே ஒத்து வர மாட்டேங்கிற” ரூபிணி அலுத்துக்கொள்ள, அவளை சுற்றி வந்து நின்ற தேவா, “ரூபி ரூபி நான் நீ சொன்ன எல்லாத்துக்கும் ஒத்து வருவேன், கொஞ்சம் என்னையும் கன்சிடர் பண்ணேன்” என்று கெஞ்சி நிற்க,

 

“அடச்சீ அப்பால போ சாத்தானே” என்று அவனை தள்ளி விட்டவள், “இப்ப என்ன தான் உன் பிரச்சனை வசி” அவனெதிரில் வந்து நின்றாள்.

 

“இப்ப என் மைன்ட் ஃபுல்லா என்னோட தொழில்ல தான் இருக்கு ரூபி, இந்த ஃபீல்ட்ல நான் எப்படி நிலைச்சு நிக்கனும்ற தாட் மட்டும் தான் எனக்கு. இப்போதைக்கு என் பர்சனல் லைஃப் பத்தி எதையும் யோசிக்கறதா இல்ல போதுமா” என்றான்.

 

“ஓகே அப்ப நான் வெயிட் பண்றேன், உன் ஃபீல்ட்ல நிலைச்சதுக்கு அப்புறம் என்னை அப்ரோச் பண்ணுவ தான?” ரூபிணி விடாமல் கேட்க,

 

“அது அப்போ பார்த்துக்கலாம், இப்ப கிளம்பு, உன்ன டிராப் பண்ணிட்டு என் வேலைய கவனிக்கனும்” தன் வண்டி சாவியை எடுத்து கொண்ட வசீகரன், “தேவா பார்த்துக்க வந்திறேன்” என்று விடைபெற்று அவளுடன் கிளம்பினான்.

 

***

 

காதல் கூத்து கட்டும்…