காதலில் கூத்து கட்டு 5

IMG-20210202-WA0002-785e107b

காதலில் கூத்து கட்டு 5

காதலில் கூத்து கட்டு 5

‘டன்டனக்கா னக்கா னக்கா’ இரவு‌ சாப்பிடும் வேளையில் ரம்யாவின் கைப்பேசி ஆர்ப்பாட்டமாக இசைக்க, எதிரே சாப்பிட்டு கொண்டிருந்த தந்தையின் கார பார்வையில், அரக்கப்பரக்க கைப்பேசியை எடுத்து அணைத்து வைத்தாள்.

 

“இன்னுமா இந்த ரிங்க்டோன் மாத்தாம இருக்க?” திவ்யா தங்கையிடம் தாழ்ந்த குரலில் கேட்க, “செமயா இருந்ததா அதான் இருக்கட்டும்னு விட்டுட்டேன் திவி” ரம்யா பற்கள் தெரிய சத்தமின்றி இளித்து வைத்தாள்.

 

“என்ன ரிங்க்டோன் வச்சிருக்க ரம்யா? வயசு பொண்ணு வைக்கிற ரிங்டோனா இது, உடனே அதை மாத்து”  திவாகர் குரல் கோபமாக அவளை மோதியது.

 

“இதோ சாப்பிட்டு மாத்திறேன் ப்பா” ரம்யா முணுமுணுக்கவும் மறுபடி கைப்பேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

 

‘டன்டனக்கா னக்கா னக்கா’ 

 

அப்பாவின் உக்கிர பார்வையில் கைப்பேசியை கையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடி வந்து விட்டாள். சாப்பிட்ட கையை கழுவியபடி திரையை பார்க்க புது எண்ணை காட்டியது. 

 

‘யாரா இருக்கும்?’ யோசனையுடன்  காதில் ஒற்ற, “ரம்யா, வசீகரன் ஹியர்” மறுமுனையில் கேட்ட குரலில் திகைத்தவள்,

 

“நீயா? நீ எதுக்கு எனக்கு கால் பண்ற?” முதல் முறையாக அவன் தன்னை அழைத்திருப்பதில் திகைப்பும், அவனிடம் பேச வேண்டிய அவசியமென்ன என்ற எண்ணமும் ஒருங்கே வந்தது அவளுக்கு.

 

“நிச்சயமா உன்கூட கடலை போட இல்ல” அவள் கேள்வி கேட்ட விதத்தில் அவன் பதிலும் அசட்டையாக வந்தது.

 

“கடுப்படிக்காம விசயத்தை சொல்லு”

 

“நான் திவ்யா அண்ணி கூட பேசனும், நாளைக்கு எங்க மீட் பண்ணலாம்னு கேட்டு எனக்கு மெசேஜ் பண்ணு” அவன் உத்தரவு போல சொல்ல,

 

“நீ எதுக்கு என் அக்கா கூட பேசனும், அதெல்லாம் முடியாது” இவள் காட்டமாக மறுத்து பேச,

 

“திவ்யா அண்ணியும் சசி அண்ணாவும் சேரனும்னு எண்ணம் இருந்தா செய், நீ செய்வ. பை” அத்தோடு வசீகரன் இணைப்பை துண்டித்து விட, ரம்யா சற்றே திகைத்து நின்றாள்.

 

“இந்த நேரத்தில யாரு ரமி கால் பண்ணது?” கேள்வியுடன் பைரவி அவளிடம் வந்து நிற்க,

 

“அச்சோ ம்மா, என்னை கொஞ்சமாவது நம்பலாம்மா, நீங்க சந்தேகபடுற அளவு எனக்கெல்லாம் சீன் இல்ல” ரம்யா சலித்து கொள்ள,

 

“நேரங்கெட்ட நேரத்துல யாருகிட்ட பேசறனு கேட்டது குத்தமா தெரியுதா உனக்கு, அதையேன் சந்தேகம்னு எடுத்துக்கிற அக்கறைனு எடுத்துக்கலாம் இல்ல” பைரவி மகளை திருத்தி சொன்னார்.

 

“என்கிட்ட கிலோ கணக்கா காட்டுற அக்கறையில ஒரு நூறு கிராம் திவி மேலயும் காட்டுங்க ம்மா, ஏதோ மனகஷ்டம்னு வந்தவள சும்மா குத்தி காட்டி பேசிக்கிட்டு” புத்தி சொன்ன மகளின் தலையில் கொட்டு வைத்த பைரவி, “நீ என் மாமியார் பாரு வந்துட்டா புத்தி சொல்ல. உன் அருமை அக்கா நாங்க சொன்னதை முன்ன தான் கேட்டாளா? இல்ல இப்ப தான் கேக்கறாளா? நானே ராஜா நானே மந்திரினு அகம்புடிச்சு அழுத்தமா இருக்கறவ கிட்ட என்னதான் பேச சொல்ற?” என்று அங்கலாய்த்தவர், “நீ பேச்ச மாத்தாம ஒழுங்கா போன்ல யார் பேசினதுன்னு சொல்லு” என்று முறைத்து நின்றார்.

 

“வசீகரன் தான் பேசினது” என்றாள் அவரிடம் மறைக்காமல்.

 

“அய்யோ அவனா!” பைரவிக்கு திக்கென்று தான் ஆனது. வசீகரனின் நாகரிக தோற்றமும் பெண்கள் சகவாசமும் இவருக்குள் அவன்மீது நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியதில்லை. 

 

“அவன் எதுக்குடி உன்கிட்ட பேசனும்? அவனும் அவன் தலையும்” பைரவி முகம் போன போக்கில் சிரித்து விட்டவள், “திவி கூட பேசனுமா, நாளைக்கு மீட் பண்ண கேட்டான்” ரம்யா விளக்கம் தர பைரவியின் முகம் குழப்பம் காட்டியது.

 

“மாமாவையும் அக்காவையும் சேர்த்து வைக்க அவன் ஏதோ ட்ரை பண்றான் ம்மா. நல்ல விசயம் தானே” ரம்யா அவனுக்கு பரிந்து பேச, 

 

”அவன் பேசினா மட்டும் கேட்டுட்டு தான் உன் அக்கா வேற வேலை பார்ப்பா பாரு, சேர்த்து வைக்கனும்னு அக்கறை நமக்கு இருந்தென்ன, அவங்களுக்கு சேரனும்னு எண்ணம் இல்லயே” பைரவி கவலையாக சொன்னார்.

 

“அண்ணன், அண்ணிய சேர்த்து வைக்க அந்த வசி முயற்சியாவது பண்றான். நீயும் அப்பாவும் அதுகூட செய்யலையே” ரம்யா குற்றம் சாட்ட,

 

“எங்களுக்கு மட்டும் திவி வாழ்க்கையில அக்கறை இல்லனு நினைக்கிறியா ரமி? எவ்வளவு கேட்டாலும் வாயை திறக்க மாட்டேங்கிறா, ஏதாவது புத்தி சொன்னாலும் எடுத்தெறிஞ்சு பேசுறா? என்ன செய்ய சொல்ற எங்களை?” பைரவியால் அங்கலாய்த்து கொள்ள தான் முடிந்தது.

 

ரம்யா அதற்கு மேல் பேசவில்லை.  இந்த காதல், மோதல், பிரிவு, குடும்ப சண்டை, சச்சரவு இதெல்லாம் அவளின் சிற்றறிவுக்கு எட்டுவதாக இல்லை.

 

“எதுக்கும் நீ அந்த வசி கூட பேச்சு வச்சுக்காத, தள்ளியே இரு புரியுதா” பைரவி அறிவுறுத்த, இவள் அப்பாவி பெண்ணாக தலையசைத்து கொண்டாள். ‘நான் என்னத்துக்கு அந்த மங்குனி மண்டையன்கிட்ட பேச்சு வச்சுக்க போறேன்?’ தோளை குலுக்கிவிட்டு நடந்தாள்.

 

***

 

மடிக்கணினியில் வேலை பார்த்து கொண்டிருந்த திவ்யா, ரம்யா அறைக்குள் வந்ததை கவனித்து, “என்ன ரமி, அப்பாகிட்ட நல்ல டோஸா, தேவையா உனக்கு இதெல்லாம்” நமட்டு சிரிப்புடன் கேட்க, தொப்பென்று அவள் பக்கத்தில் அமர்ந்தவள்,

 

“ப்ச் ப்ச் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சு என்ன பிரயோஜனம்? பிடிச்ச ரிங்க்டோன் கூட வைக்க முடியல, என்ன வாழ்க்கடா இது” ரம்யா அலுத்துக் கொண்ட விதத்தில் திவ்யா சிரித்து விட்டாள்.

 

“ஆமா யாரு அந்த டன்டனக்கா?” போனில் யாரென்று சிரிப்பு மாறாமல் கேட்க, “உன் கொழுந்தன் தான், ஆனா என் மரமண்டைக்கு ஒன்னு மட்டும் புரியல, உன்கிட்ட பேசனும்னு எனக்கு ஏன் போன் பண்ணான்? என் பேரு கூட தெரியாதவனுக்கு என் நம்பர் மட்டும் எங்கிருந்து கிடைச்சது?” ரம்யா கண்களை சுழற்றி தீவிரமாக கேட்டதில் திவ்யா அமைதியானாள்.

 

“ஏதாவது சொல்லு திவி” ரம்யா அவளை பிடித்து உலுக்க, “ஏய் உலுக்காதடி, வசி கால் பண்ணும்போது நான் தான் எடுக்கல, அதான் சசிகிட்ட உன் நம்பர் வாங்கி கால் பண்ணி இருப்பான். இப்ப என்ன பேசனுமா அவனுக்கு?” திவ்யா கேட்க,

 

“நாளைக்கு மீட் பண்ண வர சொல்லி இருக்கான். நீயே நேர்ல அவங்கிட்ட கேட்டுக்கோ போ” ரம்யா சொல்ல, திவ்யா சற்று யோசித்தாள்.

 

வசீகரனை பற்றி இவளுக்கு நன்றாக தெரியும் என்பதை விட, அவனுக்கு இவர்களை பற்றி நன்றாகவே தெரியும். இவர்கள் காதல், மோதல் என அனைத்தையும் அறிந்தவன் அவன் மட்டுமே. இரு குடும்பங்களின் எதிர்ப்புக்கு பின்னும் இவர்கள் காதல் திருமணத்தில் முடிந்ததற்கு வசீகரன் தான் முக்கிய காரணம். ஆனால் இப்போது? கண்களை அழுத்த மூடி திறந்தாள்.

 

“நான் வசிகிட்ட பேசிக்கிறேன், நீ போ ரமி” திவ்யா சொல்ல, “சரி க்கா, நீ  உன் ஈகோவ கொஞ்சம் தள்ளி வச்சிட்டு சசி மாமா கூடவும் பேசு,‌ எல்லா பிரச்சனைக்கும் பிரிவு மட்டுமே தீர்வாகாது” சொல்லிவிட்டு ரம்யா சென்று விட்டாள்.

 

தங்கையின் அறிவுரையில் இவளுக்கு தலை பாரமானது. திவ்யா ஆழ மூச்செடுத்து வசீகரனை அழைத்தாள். 

 

மறுமுனையில், “சொல்லுங்க அண்ணியாரே, இப்ப தான் என் ஞாபகம் வந்ததா உங்களுக்கு?” வசீகரனின் குரல் நக்கலாக ஒலிக்க, “வசி ப்ளீஸ், உன்கிட்ட பேசற மனநிலைல நான் இல்ல புரிஞ்சுக்கோ” திவ்யா பதில் இறங்கி வந்தது.

 

“என்ன உளுத்து போன மனநிலை உன்னோடது? சசிகூட சண்டைனா அவன ஊமை குத்தா நாலு வைக்க வேண்டியது தானே யாரு கேக்க போறா? இப்படிதான் அம்மா வீட்டுல போய் உக்காந்துப்பியா அதுவும் மாச கணக்கா?” அவன் படபடக்க, அவளும் சிரித்து விட்டாள். ஏனோ அந்த சிரிப்பின் முடிவில் கசப்பே எஞ்சியது அவளுக்கு. 

 

“சரி சொல்லு திவ்யா, எப்ப நம்ம வீட்டுக்கு வர போற?” வசீகரனின் நேரடியான கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

 

“அம்மா வீட்டு சாப்பாடு ரொம்ப நாள் ருசிக்காது அண்ணியாரே, அப்புறம் நீயும் உன் தங்கச்சி போல பல்கா வந்தா சசியோட நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாரேன்” அவன் ரம்யாவையும் சேர்த்து வம்பிழுக்க, 

 

“ரமிய கிண்டல்‌ பண்ணாத வசி எனக்கு கோபம் வரும், என்னால அங்க வர முடியாது, என்னோட சுயகௌரவத்தை விட்டு ரோஷங்கெட்டு அங்க வந்து என்னால வாழ முடியாது போதுமா” திவ்யாவின் குரல் உயர்ந்தது.

 

“உங்க காதலுக்கு நடுவுல எப்ப சுயகௌரவம் வந்தது திவ்யா? இல்ல உங்க ஈகோ பிரச்சனையில உங்க காதல் காணாம போச்சா? ரெண்டு பேரும் என் கோபத்தை கிளறாதீங்க, உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனைனா இருந்துட்டு போகட்டும். ஒன்னா இருந்து குடுமிபிடி சண்டை கூட போட்டுக்கோங்க, ஆனா இப்படி பிரிஞ்சு இருந்து உங்க காதலை நீங்களே கேவலப்படுத்திக்காதீங்க” வசீகரன் காரமாக பேச, திவ்யா மனமும் கலங்கியது.

 

“சாரி திவ்யா, உன்கிட்ட இப்படி பேசனும்னு நான் நினைக்கல, பட் நீ செய்யறதும் அப்படி தான் இருக்கு, சசி மேல தப்புனா எங்ககிட்ட சொல்லனும், நான் இல்ல அப்பா அவன்கிட்ட பேசுவோம், தெய்வீக காதல்னு உருகி வழிஞ்சிட்டு இப்படி நீங்க பிரிஞ்சு இருக்கிறது, பச் கொஞ்சம் கூட நல்லால்ல” வசீகரன் அவளுக்கு புரிய வைக்க முயன்றான். ஆனால் அவள் புரிதலுக்கு அப்பாற்பட்டு நின்றாள்.

 

“இது எங்களோட பர்சனல் வசி, இதுல நீ தலையிடறது எனக்கு பிடிக்கல, நீ எங்களுக்கு செஞ்ச உதவி எல்லாம் போதும். இதோட விட்டுடு” அவன் முகத்தில் அறைவதுபோல திவ்யாவின் பதில் வந்தது.

 

வசீகரன் முகம் கருத்து போனது. “இதை நீங்க சேர்ந்திருந்து சொல்லி இருந்தீங்கன்னா நானும் பெருமை பட்டிருப்பேன், பிரிஞ்சு இருக்கிறதுல என்ன மண்ணாங்கட்டி பர்சனல் வேண்டி கிடக்கு” அவன் பொறிய,

 

“வசி ப்ளீஸ், என்னை இப்படியே விட்டுடு, காதலும் போதும் கல்யாணமும் போதும், என் முட்டாள்தனத்தால நான் இழந்தது எல்லாமும் போதும், நீ இதுல தலையிடாத” திவ்யா அவனிடம் விரக்தியாக சொல்ல, வசீகரனுக்கு கோபம் தான் வந்தது. 

 

“அப்புறம், நீ எதுக்கு ரமிக்கு கால் பண்ண வசி? பிரச்சனை சசிக்கும் எனக்கும் மட்டும் தான். இதுல நீ நுழையறதே அவசியமில்லாத வேலை. இதுல ரமிய ஏன் இழுத்து விடுற?” திவ்யா கேட்க,

 

“நீ என் கால் அட்டர்ன் பண்ணி இருந்தா நான் ஏன் உன் தொங்கச்சிக்கு கால் பண்ண போறேன்?” அவன் கடுகடுத்தான்.

 

“ஓகே சாரி. இனிமே ரமிக்கு கால் பண்ணாத, அவ இன்னசன்ட், அவளுக்கு ஃபேமிலி மேட்டர் எதுவும் பெருசா தெரியாது. தெரியவும் வேணாம். நீயும் உன் வேலைய பாரு. பை” வைத்து விட்டாள். 

 

‘அண்ணியாருக்கு தொங்கச்சி மேல ரொம்ப தான் பாசம் போல’ என்று வேடிக்கையாக நினைத்துக் கொண்டான்.

 

ஆனாலும் சசிதரனும், திவ்யாவும் கொஞ்சமும் இறங்கி வராமல் உச்சாணிக் கொம்பில் நிற்பது இவனுக்கு கவலையானது. 

 

இருவருமே அழுத்தமானவர்கள். இதுவரை அவர்களின் பிரச்சனை என்னவென்று இருவருமே மூச்சு விடவில்லை. ‘எந்த பிரச்சனையாவது இருந்துட்டு போகட்டும், அவங்க சேர்ந்தா மட்டும் போதும்’ என்று எண்ணிக் கொண்டவன் அடுத்தென்னவழி என்று யோசிக்க எதுவுமே தோன்றவில்லை.

 

‘ச்சே ஒரு ஐடியாவும் வந்து தொலைய மாட்டேங்குதே’ என்று தலையில் தட்டிக் கொண்டு, ‘யாரிடம் ஐடியா கேட்கலாம்?’ யோசனையோடு கைப்பேசி எண்களை அலச, முன்னேயே தெரிந்தது ரம்யாவின் கைப்பேசி எண்.

 

‘இனிமே ரமிக்கு கால் பண்ணாத வசி’ திவ்யாவின் எச்சரிக்கையை அசட்டை செய்தவன், ரம்யாவிற்கு அழைப்பை விடுத்தான்.

 

அவனின் இந்த அசட்டைதனம் எத்தகைய சிக்கலுக்கு வழிவகுத்திடும் என்பதை அறியாமல்.

 

***

 

காதல் கூத்து கட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!