காதலில் கூத்து கட்டு 6

IMG-20210202-WA0002-24e98d4c

 

காதலில் கூத்து கட்டு 6

 

சிக்மண்ட் பிராய்டின் மனித மூளை இயக்கம் பற்றிய விளக்கத்தை படித்து மூளையில் பதிய வைத்து கொண்டு இருந்தவளை கலைத்தது கைப்பேசி வைப்பரேட் ஒலி. பார்வையை மட்டும் நிமிர்த்தி பார்த்தாள். திரையில் வசீகரன் எண்கள் தெரிந்தன. 

 

‘மறுபடியும் இவனா? எடுக்கலாமா? வேணாமா?’ என்ற யோசனையின் முடிவில் ‘திவி பத்தி ஏதாவது சொல்ல கால் பண்ணி இருப்பானோ?’ என்று எடுத்து பேசலானாள்.

 

“ஹலோ, எதுக்கு மறுபடி மறுபடி எனக்கு கால் பண்ணிட்டு இருக்க நீ?” படிக்கும் நேரத்தில் குறுக்கிட்டதால் அவள் படபடக்க,

 

“உன் அக்காவ பத்தி என் அண்ணாவ பத்தி பேசனும் உன்கிட்ட பேசாம வேற யார்கிட்ட பேச சொல்ற?” அவள் படபட பேச்சில் இவனும் கடுகடுத்தான்.

 

“அய்யோ அறிவுஜீவி! நீயும் நானும் பேசி என்ன ஆக போகுது இது அவங்க லைஃப் அவங்க தான் பேசி முடிவு பண்ணனும்” ரம்யா பெரியதனமாக சொல்ல,

 

“அதான் பேசிக்க மாட்டேங்கிறாங்களே? சொன்னாலும் கேட்டு தொலைய மாட்டேங்கிறாங்க, எப்படியாவது போய் தொலைங்கனு விடவும் மனசு வரல” வசீகரனின் ஆதங்கமான பேச்சில் இவளுக்கும் மனம் இறங்கியது.

 

“அப்ப அவங்களை பேச வைக்கனும், சந்திக்க வைக்கனும் அதுக்கு ஏதாவது ஐடியா பண்ணு” இவள் தனக்கு தோன்றிய சுலப வழியை சொல்ல, “முன்ன ஒரே கம்பனியில வேலை பார்த்தாங்க, இப்ப திவ்யா வேற கம்பனி மாறியாச்சு, அப்புறம் எப்படி அவங்கள மீட் பண்ண வைக்கிறது?” வசீகரன் நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

 

“அவங்க பேவரேட் பிளேஸ் அதுமாதிரி எங்கேயாவது அழைச்சிட்டு போனா கூட மைன்ட் சேன்ஜ் ஆக வாய்ப்பு இருக்கு” ரம்யா அவசர ஆலோசனைச் சொல்ல, வசீகரன் நிமிர்ந்து அமர்ந்தான்.

 

“அட இது நல்ல ஐடியா தான், பரவால்ல உனக்கும் கொஞ்சம் மூளை இருக்கு” அவன் பாராட்டில் கேலியை கவனித்தவள், “ம்ம் இங்க கொஞ்சமாவது இருக்கு, அங்க அது கூட இல்ல” வெடுக்கென பதிலடி தர, “ஓய் என்ன வாய் நீளுது, சுண்டக்கா மாதிரி இருந்துட்டு என்னயவே ஓட்டறயா” அவன் அதட்டினான்.

 

“சுண்டக்கா அது இதுன்னு சொன்ன எனக்கு கெட்ட கோபம் வரும்,‌ உன்கிட்ட எல்லாம் பேசறேன் பாரு என் புத்திய சொல்லனும்” அவள் முறுக்கி கொண்டாள்.

 

“என்ன? என்ன என்ன? என்கிட்ட பேசினா தான் என்ன? அப்படியே உன்ன முழுங்கிட போறேனா? திவ்யாவும் உன் கூட பேசாதனு சொல்றா, நீயும் என்னோட பேசறது பாவம்‌ மாதிரி சொல்ற? என்ன நினச்சுகிட்டிருக்க என்னை பத்தி?” வசீகரனின் உயர்ந்த கோபத்தில் ரம்யா திகைத்து தான் போனாள்.

 

“நீயே ஃபோன் பண்ணிட்டு இப்ப நீயே எதுக்கு திட்டற, நான் ஃபோனை வைக்கிறேன் போ” அவள் உர்ரென்று இணைப்பை துண்டிக்க முயல, “கால் மட்டும் கட் பண்ண மவளே, உன்ன சித்தெறும்பு மாதிரி நசுக்கி போட்ருவேன் பார்த்துக்க” வசீகரன் எச்சரிக்க, “என்ன என்னை மிரட்டற? நீ ரொம்ப மோசம், கெட்டவன், ஐ ஹேட் யூ” அவளும் கோபத்தில் கத்தினாள்.

 

மறுமுனையில் வசீகரன் பதில் பேசவில்லை. அமைதியாகி விட்டான். இவளும் பேசவில்லை அமைதியாக இருந்தாள். இருவரின் வேக மூச்சு காற்றின் சத்தம் மட்டுமே அங்கே பெரிதாக கேட்டது.

 

“ஆமா நான் மோசமானவன் தான். கெட்டவன் தான். உனக்கு என்னை பிடிக்கலன்றதுனால எனக்கு எந்த லாஸ்ஸும் இல்ல. இன்ஃபேக்ட் எனக்கும் உன்ன சுத்தமா பிடிக்காது” வசீகரன் காட்டமாக அழுத்தி சொல்ல, 

 

“அச்சோ நீ என்னை பிடிக்கலனு சொன்னதும் என் குட்டி ஹார்ட் அப்படியே வெடிச்சு போச்சு பாரு! போ போ உனக்கெல்லாம் அவ்வளோ சீன் கிடையாது. உன்ன மாதிரி ஒருத்தனுக்கு என்னைய பிடிக்காம இருக்கறது ரொம்ப ரொம்ப சந்தோஷ பட வேண்டிய விசயம்” ரம்யாவும் விடாமல் பதில் வீசினாள்.

 

“போதும், நம்மள பத்தி பேச நான் உனக்கு கால் பண்ணல, சசி, திவ்யாகாக தான் கால் பண்ணேன். என்னவோ நீ ஹெல்ப் பண்ணுவன்னு தோனுச்சு. நீயும் உன் அப்பா, அம்மா மாதிரி வறட்டு கௌரவத்தை பிடிச்சிட்டு தொங்கறவனா இனி பேசல, நானே பார்த்துக்கிறேன்”  அவன் அவள் பெற்றோரை குறை பேச, “எங்க அப்பா, அம்மா பத்தி பேசாத, அவங்க கூட அக்கா பத்தின கவலைல தான் இருக்காங்க” ரம்யா தன் பெற்றோருக்கு பரிந்து வந்தாள். 

 

“அப்படி அக்கறை இருக்கறவங்க, மருமகனை நேர்ல கூப்பிட்டு என்ன பிரச்சனைனு கேட்டு பேசி சமாதானம் செஞ்சு இருக்கனும். செஞ்சாங்களா? செய்யல, செய்யவும் மாட்டாங்க! ஏன்னா பொண்ணோட வாழ்க்கைய விட வீண் பிடிவாதம் தான் அவங்களுக்கு முக்கியம்” அவன் ஆத்திரமாக பேச, “இப்ப என்னை என்ன செய்ய சொல்ற?” முதல்முறை அவன் பேச்சை கேட்க முன் வந்தாள்.

 

“சண்டே நீ ப்ரீ தானே?”

 

“ம்ம்”

 

ஒரு குறிப்பிட்ட பேரங்காடியின் பெயரை சொல்லி, “அங்க திவ்யா அண்ணிய கூட்டிட்டு நீ வர, நானும் சசிய இழுத்துட்டு வரேன் ஓகே” அவன் திட்டத்தை சொல்ல, “நான் ஏன் அங்கெல்லாம் வரனும், அக்காவ மட்டும் அனுப்பி வைக்கிறேனே” அவள் பதில் இறங்கி வந்தது.

 

“புரியாம பேசாத, உன் அக்கா வீம்புக்கு வராம இருந்துட்டா? நீதான் ஏதாவது சொல்லி இழுத்துட்டு வரனும். சரியா?” 

 

“ம்ம் சரி” அவள் பதிலும் சிறுகுரலாகவே வந்தது.

 

“இதை மட்டும் சொதப்பாம செய் போதும்” என்றதோடு இணைப்பை துண்டித்து விட்டான். 

 

ரம்யாவிற்கு புரிந்தும் புரியாத நிலை. எப்படியும் திவ்யா பிரச்சனை தீர்ந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டாள்.

 

இவர்கள் இங்கே யார் இருவரை சந்திக்க, பேச வைக்க திட்டம் வகுத்து கொண்டிருந்தனரோ, அந்த இருவரும் மறுநாள் மாலை சந்தித்துக் கொண்டனர்.

 

***

 

திவ்யா தன் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு திரும்பி பார்க்க, தன் பைக்கின் மேல் சாய்ந்து நின்றபடி அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான் சசிதரன்.

 

பழக்கதோஷம் காரணமோ இருவரின் பார்வையும் மற்றவரின் தோற்றத்தில் பதிந்து மீண்டது.

 

கணவனின் மடிப்பு கலையாத சட்டையும், வழவழ கன்னங்களும் நேர்த்தியான தோற்றமும் இவள் நெஞ்சை பிசைவதாய்.

 

‘நாலு மாசம் பொண்டாட்டிய பிரிஞ்சு இருக்கற வருத்தம் கொஞ்சமாவது இருக்கா பாரு இவனுக்கு. நாலு நாள் தாடி கூட வைக்கல, கல்நெஞ்சக்காரன்’ கணவனை மனதிற்குள் வறுத்தெடுத்தாள்.

 

மனைவியின் ஜீன்ஸ், டாப் உடையும் மேக்கப் மிளிரும் முகமும் முதுகு வரை வெட்டிவிட்ட விரிந்த கூந்தலும் சசிதரனின் கண்களை சுருக்கியது.

 

‘ராட்சசி, எனக்கு பிடிக்காத டிரஸ், மேக்கப் போட்டுட்டு, நீளமா அழகா இருந்த முடிய கூட வெட்டிவிட்டுருக்கா, நான் கூட இல்லாம இதெல்லாம் மட்டும் உனக்கு சந்தோசம் கொடுத்திடுமா?’ உள்ளுக்குள் கறுவி கொண்டான்.

 

அவனிடம் வந்தவள், “எதுவா இருந்தாலும் ஃபோன்ல பேச வேண்டியது தான, எதுக்கு நேர்ல வர சொன்ன?” வழக்கமான சிடுசிடுப்போடு கேட்க,

 

“ஃபோன்ல பேச முடியாத விசயம்னு தான் நேர்ல வர சொன்னேன் வா” என்று அங்கிருந்த உயர்தர உணவகத்திற்குள் அழைத்து சென்றான். 

 

தன் முன் நடந்தவளின் இளைத்த உடல் தோற்றம் அவனை இரக்கம் கொள்ள தான் செய்தது. கரு கலைப்பின் பிறகு உடலளவில் மிகவும் சோர்ந்து போய் தான் இருந்தாள். அதனுடன் தொடர்ந்த சண்டை சச்சரவுகள் வேறு. இப்போது நான்கு மாத நீண்ட பிரிவு… தங்கள் பிரிவின் வேதனையை அவள் காட்டிக்கொள்ளாவிடினும் அவளின் இளைத்த உடல் அவனுக்கு காட்டி கொடுத்துவிட, அவனுக்குள் உற்சாக ஊற்று.

 

தன்னவள் பிரிவாற்றாமையில் பசலை கொண்டு தவிக்கிறாள்! இன்னும் தங்கள் காதல் முழுவதும் பட்டு போகவில்லை என்ற உற்சாகம் வழிந்தது அவனுக்குள்.

 

கதவு பொருத்தப்பட்ட தனிமையான உணவு மேஜையை தேர்ந்தெடுத்து இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர். அவளுக்கு பிடித்தமான ஹாட் சாக்லேட், அவனுக்கு ஹாட் காஃபி சொல்லிவிட்டு சர்வர் நகரும் வரை அங்கே அமைதி நிலவியது. புயலுக்கு முன்னான அமைதியோ!

 

“நீ ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா திவி? முன்னைக்கு இப்ப ரொம்ப இளைச்சு தெரியற” சசிதரன் அக்கறையாக கேட்க, இவள் உதட்டை இழுத்து வைத்து கடுப்பாக சிரித்து வைத்தாள்.

 

“என்மேல ரொம்ப அக்கறை இருக்க மாதிரி எல்லாம் சும்மா சீன் போட வேணாம். நான் டயர்ட்ல இருக்கேன் அதான் லீனா தெரியறேன் போதுமா” வேண்டுமென்றே தன் மெலிவை அவனிடம் திரித்து கூறினாள்.

 

“என்னது டயர்ட்டா” சசிதரன் முகம் போன போக்கில் அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது. “ஒ ஓ உன்ன பிரிஞ்ச ஏக்கத்துல மெலிஞ்சுட்டேன்னு நினச்சுட்டியோ” கேலியாக கேட்டு இதழ் மடித்து அவள் சிரித்து வைக்க, அவனுக்கு கோபம் வந்துவிட்டது.

 

“உனக்கெல்லாம் கொஞ்சமும்‌ ஃபீலிங்க்ஸே இல்லையாடி, நான் முழுசா‌‌ உனக்கு இல்லாம‌ போகும் போது தான் என் அருமை உனக்கு தெரியும்” ஆதங்கமாக பேசினான்.

 

“நிச்சயமா இருக்காது மிஸ்டர் சசிதரன், நீ எனக்கு இருட்டுல மட்டும் தான் புருசனா இருந்திருக்க, வெளிச்சத்துல டிவி, செல்ஃபோன், லேப்டாப் மாதிரி நானும் வெறும் திங்க்ஸா மட்டும்‌ தான் உனக்கு தெரிஞ்சு இருக்கேன்.‌ இதுல எப்படி நான் உன்ன மிஸ் பண்ணுவேன் சொல்லு?” அவள் ஆத்திரமாக பேசும்போதே‌ கண்களில் நீர் கோர்த்துக் கொண்டன.

 

“ச்சீ பொம்பளையா டீ‌‌ நீ? எவ்வளோ சீப்பா பேசற ச்சே” 

 

“நீ என்கிட்ட நடந்துக்கிட்ட முறைய தான் சொல்றேன். அது உனக்கு அவ்வளவு சீப்பா தெரிஞ்சா, நீ எவ்வளோ சீப்பா என்ன நடத்தி இருக்கனு புரிஞ்சுக்கோ” 

 

“ஏய், உன்ன நான் மனசார காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டவன் டி, ஐடி ஜாப் ஷெடியூல் எப்படி‌ இருக்கும்னு உனக்கு தெரியுமில்ல. அதனால உன்கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ண முடியாம‌ போயிருக்கலாம். அதுக்காக நீ என்னை இவ்வளோ சீப்பா நினைப்பியா!” என்றான் தன்னை விளக்கிவிடும் வேகத்துடன்.

 

“இப்ப புரியுதா சசி, விளக்கம் சொல்ற அளவுக்கு தான் நீ என்கூட வாழ்ந்து இருக்கனு” 

 

“ஆமா மொத்த குறையும் சேர்த்து என்மேலயே சொல்லு, கல்யாணம் ஆன நாள்ல இருந்து ஒருநாள், ஒருவேளை எனக்கு நீ சமைச்சு‌ பரிமாறி இருப்பியா? இல்ல நம்ம வீட்டு கிட்சன் பக்கம் எட்டியாவது பார்த்து இருப்பியா நீ”

 

“சும்மா என்னை குறை சொல்லனும்னு பேசாத, எனக்கு சமைக்க வராதுன்னு நல்லா தெரிஞ்சு தான கல்யாணம் பண்ணிகிட்ட, இப்ப அதை சொல்லி காட்டற இல்ல” 

 

“மாசம் ரெண்டு முறை ஷாப்பிங்னு நாள்பூரா திரிஞ்சு என் பர்ஸ காலி பண்ணியே அப்ப நான் பார்த்துக்கலையா?”

 

“அதிசயமா ஒருநாள் கூட்டிட்டு போயிட்டு அதையே வருசம் பூரா சொல்லிட்டு திரி, வீக்லி பார்ட்டிஸ்‌ல மிஸ் பண்ணாம கலந்து தண்ணீ அடிக்க மறக்கமாட்ட, நான் வெளியே போகனும்னு‌ சொன்னதை மட்டும் கரைக்டா மறந்துடுவ”

 

“சோசியல்‌ டிரிங்க்ஸ் எடுத்துக்கறது நார்மல் தானே, அதுக்காக என்னை மொடா குடிக்காரன்‌‌ மாதிரி பேசுவியா?”

 

“மொடா குடிக்காரனே மேலு நீ குடிச்சிட்டு என்ன ஆட்டம் போடுவனு எனக்கு தெரியாது”

 

“நீ மட்டும் எனக்குனு டைம் ஸ்பென்ட் பண்ணி இருக்கியா? இல்லல. சும்மா என்னை மட்டும் பேசாத…”

 

ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம்‌ குறைகளை பட்டியலிட்டு சண்டையிட, அங்கே சமாதானம் தலைத்தெறிக்க ஓடி இருந்தது.

 

“எனஃப் சசி, போதும் இதுக்குமேல உன்கூட சண்ட போட எனக்கு தெம்பில்ல. நிறுத்திக்க” திவ்யா மூச்சு வாங்க நிறுத்த, சசிதரன் கோப முகத்துடன் பற்களை நறநறத்துக் கொண்டான்.

 

“வக்கீல்கிட்ட பேசறத்துக்கு முன்ன, கடைசி வாய்ப்பா உன்கிட்ட பேசலாம்னு வந்தேன். ம்ஹும் இனி நமக்குள்ள எதுவும் இல்ல. எல்லாமே ஓவர்” கசப்பாக சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்.

 

திவ்யாவின் சிவந்த முகத்தில் இப்போது கண்ணீர் தடங்கள்! இவ்வளவே தானா எங்கள் காதல்! இதற்காக தானா இத்தனை போராட்டம்! அவளின் மனமும் கசந்து வழிவதாய்.

 

***

 

கல்லூரி முடிந்து மாலை, லாலிபாப்பை வாயிலிட்டு சுவைத்தபடி சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றி நடந்து வந்தவள் முன்பு அமுதன் வந்து நின்றான்.

 

“ஹாய் லாலிபாப்” என்றான் கண்களில் குறும்பு மின்ன.

 

மாறாக அவனை பார்த்ததும் ரம்யாவிற்கு திகுதிகுவென எரிந்தது. “ஹலோ யார் நீ?” வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டாள்.

 

அவன் அதிர்ந்து, “வாட்? என்னை அதுக்குள்ள மறந்துட்டியா? ம்ஹும் பொய் சொல்லாத டன்டனக்கா, நீயே மறக்கனும்னு நினைச்சாலும் உன்னால என்னை மறக்க முடியாது” அவன் அசராமல் வசனம் பேசினான்.

 

“அதான் தெரியலனு சொல்லிட்டேன் இல்ல, கிளம்பு” ரம்யா செல்ல முயல, அமுதன் குறுக்கே தடுத்தான்.

 

“என்னை அவாய்ட் பண்ணாத லாலிபாப், என்னால தாங்க முடியாது” அவன் மேலும் உருக, அவனை கவனித்தப்படி, பவித்ராவும் தவமணியும் அங்கே வந்தனர்.

 

“ரமி, யாரிது?” பவித்ராவின் கேள்விக்கு, “இது ஜஸ்ட் லவ்வர்ஸ்‌ பிராப்ளம், நீங்க போங்க” முந்திக்கொண்டு அமுதன் பதில் தர, “ஏய், யார லவ்வருன்னு சொல்ற? பல்ல தட்டி கைல கொடுத்துடுவேன் ராஸ்கல்” ரம்யா கொந்தளித்தாள்.

 

“ஏய், யார் மேன் நீ? எங்க ஃபிரன்ட் கிட்ட வம்பிழுக்குறியா?” தவமணியும் அவனிடம் குரல் உயர்த்த, “அய்யோ வம்பெல்லாம் இழுக்கலங்க, நிஜமா உங்க ஃபிரன்ட நான் ரொம்ப ரொம்ப லவ் பண்றேங்க” அமுதன் அவசரமாக சொன்னான்.

 

“மறுபடியும் லவ்வு கிவ்வுன்ன மூக்கை உடைச்சுடுவேன், இவன் சரியான ரீல் பார்ட்டி தவா, இவன் சொல்ற எதையும் நம்பாத” ரம்யா குரலுயர்த்தினாள்.

 

“ரமி எல்லாரும் இங்கேயே பார்க்குறாங்க, நீ அமைதியா இரு நாங்க பேசிக்கிறோம்” பவித்ரா அவளை அமைதிப்படுத்திவிட்டு, “அவ தான் உன்ன பிடிக்கலனு சொல்றா இல்ல, ஏன் மறுபடியும் வந்து டென்ஷன் படுத்தற?” பவித்ரா கேட்க,

 

“உங்க ஃபிரன்ட்டுக்கு என்னை நிஜமா பிடிக்கும்ங்க, நான் பொய் சொல்லிட்டேன்னு தான் அவங்க கோபம்” ரம்யாவை பார்த்தபடி பதில் சொன்னான்.

 

“பொண்ணுங்கன்னா உனக்கு அவ்வளோ ஈஸியா போச்சா, ரெண்டு வருசம் உன் பின்னாடி சுத்தறேன்னு பொய் சொன்னா உன் பின்னாடியே வந்திடுவாங்கன்ற நினப்பா?” தவமணியும் கோபமாக ஏசினாள்.

 

“அய்யோ இல்லங்க, ரம்யாவ ஃப்ர்ஸ்ட் இம்ப்ரஸ் பண்ணனும்னு தான் அப்படியொரு பொய் சொன்னேன். மத்தபடி என் லவ் உண்மைதாங்க” அமுதன் பதில் கெஞ்சலாக வந்தது.

 

“வசிய பார்த்ததும் பிச்சிகிட்டு ஓடிட்டு இப்ப வந்து டையலாக் விடுறியா?” ரம்யாவும்  கோபமாக கேட்க,

 

“அது, உன்னோட சொந்தக்காரன்னு சொன்னதும் கொஞ்சமா ஜெர்க்காயிட்டேன் அதான், பிரச்சனை வேணாம்னு கழன்டுகிட்டேன். பட் மை லவ் இஸ் ட்ரூ” மூன்று பெண்களுக்கும் ஈடு கொடுத்து பேசி தன் காதலை மையப்படுத்தினான்.

 

“இங்க பாரு நீ பொய் சொன்னியோ, உண்மை சொல்றீயோ ஐ டோன்ட் கேர், எனக்கு உன்ன பிடிக்கல. என்னை டிஸ்டர்ப் பண்ணாம‌ போயிடு” ரம்யா முடிவாக எச்சரித்தாள்.

 

“கோபத்துல பேசாத ரம்யா, இப்ப கூட உன் மொபைல் ரிங்டோன் மாத்தாம தான இருக்க, நான் உன்ன டன்டனக்கானு கூப்பிட்டதால தான” அமுதன் அவளை மடக்க, இரு தோழிகளின் பார்வையும் அவளை சந்தேகமாக பார்த்தது.

 

“ஏய் அந்த அரைவேக்காடு சொல்லுதுன்னு நீங்களும் என்னை டவுட்டா லுக் விடாதீங்க, எனக்கு பிடிச்சது அதான் வச்சிருக்கேன். எவனுக்காகவோ எனக்கு பிடிச்சதை நான் மாத்திக்க தயாராயில்ல” ரம்யா மறுத்து சொல்ல,

 

“ப்ளீஸ் லாலிபாப், என்னை யாரோன்னு சொல்லாத, என்னால தாங்க முடியாது” அமுதனின் கனிந்த பேச்சில் மற்ற இரு பெண்களும் குழம்பி தான் போயினர்.

 

ரம்யா மேலும் பேச்சை வளர்க்க விருப்பமின்றி, அவனை விரட்ட நினைத்து தன் கைப்பேசியை எடுத்தவள், “ஹலோ வசீ, கொஞ்சம் என் காலேஜ் வரை வரீயா?” அவள் பேசியதும், அமுதன் முகம் மாறியது.

 

‘என்னது மறுபடியும் அவனா?’ என்று சற்றே மிரண்டவன், “நான் இப்ப கிளம்புறேன், பை, என்னை மறந்துடாத லாலிபாப்” என்று அங்கிருந்து நழுவலானான்.

 

“டேய் நில்லுடா இப்ப எங்க ஓடுற, லாலிபாப்னு கூப்பிட்ட கல்லெடுத்து மண்டய உடச்சுடுவேன் ஈடியட்” ரம்யா படபடவென பொறிய அவன் மறைந்து விட்டிருந்தான்.

 

“ஹே போதும் ரமி, இப்படி எல்கேஜி பாப்பா மாதிரி வாயில லாலிபாப் வச்சிருந்தா அவன் கூப்பிடத்தான் செய்வான்” என்று பவித்ரா அவள் வாயிலிருந்த லாலிபாப்பை பிடுங்கி வீசி விட்டாள். 

 

“அய்யோ என் லாலிபாப் போச்சே” என்று ரம்யா பதறிட, மண்ணில் அவள் லாலிபாப் பரிதாபமாக கிடந்தது.

 

“அது போனா போது விடு ரமீ, நிஜமா வசி கூடவா பேசின? நீங்க ராசி ஆகிட்டீங்களா சொல்லவே இல்ல” தவமணி உற்சாகமாய் கேட்க,

 

“நீ வேற தவா, மோபைல் ஆன் பண்ணாமையே பேசறேன். அதையும் நம்பி அந்த பக்கி ஓடுது, இவனை எல்லாம் தெருநாய் மாதிரி கல்லெடுத்து அடிச்சு விரட்டனும்” ரம்யா கடுகடுத்தாள்.

 

“சும்மா அவனை திட்டாத ரமி, எனக்கென்னவோ அவன் உன் லவ் பண்றான் போல தான் தோனுது” பவித்ரா, அமுதனுக்கு பரிந்து வர,

 

“ம்ம் ஆள் பாக்கவும் நல்லா தான் இருக்கான். உன்மேல அவ்வளோ உருகுறான், நீ மட்டும் எத்தனை நாள் முரட்டு சிங்கிளா இருப்ப” தவமணியும் ஆமோதித்து பேசினாள்.

 

“உங்க ரெண்டு பேருக்கும் மூளை குழம்பி போச்சா, அவன் சினிமா பார்த்துட்டு வந்து இங்க பர்ஃபார்மன்ஸ் பண்றான். அதை நீங்களும் நம்புறீங்களே” ரம்யா தோழியரையும் கடிந்து கொண்டாள்.

 

“இல்ல ரமி, உனக்கும் பிடிச்சிருந்தா…” பவித்ரா இழுக்க, “பார்க்க அழகா இருந்தா, உருக்கமா பேசினா உடனே லவ் பண்ணலாமா, காதல் என்ன அவ்வளோ சீப்பான விசயமா?” ரம்யா ஆதங்கமாக கேட்க,

 

“ஹேய் ரிலாக்ஸ் ரமி, சும்மா தான் சொன்னோம், ஏன் இவ்வளோ டென்ஷன் ஆகுற” தவமணி அவள் தோளோடு கைசேர்த்துக் கொண்டாள்.

 

“எனக்கு புரியல பவி, ஏன் எங்க சுத்தினாலும் இதே வேர்ட் கேட்டு தொலைக்குது, இரிடேட் ஆகுது. அதுவும் இப்ப திவி தவிக்கறதை பார்க்க பார்க்க அந்த காதல் வார்த்தை மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு” ரம்யா கசந்து சொல்ல, தோழியர் இருபுறமும் அவளை ஆறுதலாக அணைத்து கொண்டனர்.

 

“எல்லாம் சரியாகிடும் ஃபீல் பண்ணாத ரமி”

 

“நம்ம கூல் பேபி, ஃபீல் பண்ணலாமா, சிரி பேபி”

 

“அமுதன் ரைமிங்க்ல எல்லாம் கலக்குறான் தான் பட், டைமிங்க்ல ரொம்ப சொதப்புறான் இல்ல” அவர்கள் ஆராய்ந்து சொல்ல, ஆமோதித்து தலையசைத்து ரம்யாவும் சிரித்து விட்டாள்.

 

***

 

காதல் கூத்து கட்டும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!