காதலில் கூத்து கட்டு 7
காதலில் கூத்து கட்டு 7
காதலில் கூத்து கட்டு 7
பீனிக்ஸ் மால் பிரம்மாண்டமாக அவர்களை வரவேற்றது. ரம்யா ஷாப்பிங் என்று நச்சரித்து திவ்யாவை உடன் அழைத்து வந்திருந்தாள்.
சசிதரனை பிரிந்த பிறகு இந்த பேரங்காடிக்கு வருவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டிருந்தாள் திவ்யா. அவர்கள் காதலின் வசந்த நினைவுகள் மொத்தமாய் இங்கே எங்கும் சிதறிக் கிடப்பதாய் தோன்றியது அவளுக்கு.
முதன் முறை காதல் பகிர்ந்து கொண்ட காஃபி ஷாப், முதல் முத்தம் பரிமாறிக் கொண்ட தியேட்டர், அவன் கைகோர்த்து, தோள் சாய்ந்து கால்கள் சோர வலம் வந்த இடங்கள் ஒவ்வொன்றும் அவளுக்கு இப்போது பார்க்க பார்க்க வேதனை கூட்டுவதாய்.
திவ்யாவின் கனத்த பார்வை அங்கே சுற்றி வர, ரம்யாவின் துறுதுறு பார்வை தேடலோடு அங்கும் இங்குமாய் சுற்றி வந்தது. ‘எங்களை வர சொல்லிட்டு எங்க போய் தொலைஞ்சான் அவன்’ என்ற முணுமுணுப்போடு.
அங்கே எங்கு பார்த்தாலும் அவர்கள் காதலாடிய காட்சி பிழைகள் தோன்றி மறைய, தூர தெரிந்த சசிதரன் உருவத்தை கண்டு நிஜமா? கற்பனையா? என்று சற்றே குழம்பி நின்றாள் திவ்யா.
வசீகரன், ரம்யாவை கையசைத்து அழைக்க, அவள் அவன்புறம் மட்டும் திரும்பும் வழியை காணோம். ‘என்னை தவிர மத்த எல்லா இடத்திலயும் என்னை தேடி தொலைக்கிறா, இவளை எல்லாம்’ என்று சலித்தப்படி அவளின் எண்ணுக்கு குறுஞ்செய்தியைக் கிளுக்கினான்.
‘நேரா பார்த்து தொலை’ என்று வந்த குறுஞ்செய்தியை பார்த்ததும் ரம்யாவிற்கு காதில் புகை வராத குறை தான். நேராய் அவனை பார்த்து கண்களால் எரித்தாள்.
அதை சட்டை செய்யாதவன், மின்படிகட்டு(escalator) பக்கம் சைகை காட்ட, புரிந்தவளாய் திவ்யாவை இழுத்துக் கொண்டு அங்கே நடந்தாள்.
“டேய் வசி, திவியும், ரமியும் வந்துருக்காங்கடா” சசிதரன் அவர்களை கவனித்து சொல்லவும், “யார் வந்தா உனக்கென்ன வா” அவன் சொன்னதை சட்டை செய்யாமல் வசீகரன் மின்படி நோக்கி நடந்தான்.
“டேய், நான் தான் பார்த்தேனே நீ ரமிக்கு சைகை செஞ்சதை, என்னடா நடக்குது இங்க?” சசிதரன் குழப்பத்துடன் கேட்க, “ம்ம் பார்த்தா தெரியல, இங்க மனுசங்க மட்டும் தான் நடக்குறாங்க, பெட்ஸ் எல்லாம் இங்க அலௌட் இல்ல” வசீகரன் வேண்டுமென்றே கடுப்படித்தான்.
“டேய், அறுக்காத டா, உண்மைய சொல்லு இல்ல தொலைச்சுடுவேன்” சசிதரன் மிரட்டவும், பெண்களின் பின்னோடு மின்படியில் இவர்களும் ஏறிக் கொண்டனர்.
“லூசு அண்ணா, உன்னையும் திவியும் மீட் பண்ண வைக்க தான் இந்த பிளான், சொதப்பாம அண்ணிய கன்வின்ஸ் பண்ணி கூட கூட்டிட்டு வர, அதான் உனக்கு டுடே டாஸ்க்” சசிதரன் காதில் அவசரமாக கிசுகிசுத்து விட்டு நிமிர்ந்தவன், “ஹேய் திவ்யா, எப்படி இருக்க? என்ன ஷாப்பிங்கா” இப்போதுதான் அவளை கவனிப்பது போல் கேட்டான்.
திவ்யா பதில் பேசவில்லை. ஏனோ சசிதரனை இங்கே பார்த்தது அவளை உணர்ச்சிவசப்படுத்தி இருந்தது. அவன் மீது கொண்ட கோபம், வெறுப்பெல்லாம் ஒதுங்கி போக, அவனுக்கு மட்டுமேயான நேசமும் காதலும் மேலெழுந்து அவளை பலவீனப்படுத்தியது.
“ஹலோ அண்ணியாரே, நான் யாருன்னு கூட மறந்து போச்சா” வசீகரன் அவள் முன் கையசைக்க, தலையைக் குலுக்கிக் கொண்டவள், “இல்ல வசி, அது, நானும் ரமியும் ஷாப்பிங் வந்தோம்” திவ்யா தயங்கி பதில் தந்தாள்.
“நானும் சசி கூட ஷாப்பிங் தான் வந்தோம், என்ன கோ-இன்ஸிடென்ஸ் இல்ல” அவன் சொல்லி சிரிக்க, ரம்யா,
‘ஐயோ இவனுக்கு ஒழுங்கா பர்ஃபார்ம் பண்ண வரலனு யாராவது சொல்லுங்களேன். பார்க்க சகிக்கல’ முகத்தை கசங்கிக் கொண்டாள்.
மேல்தளம் வந்ததும், “வசி, வேண்டாம்டா ரிஸ்க் எடுக்காத, உன் அண்ணி இந்த மால்ல பெரிய சம்பவம் நடத்திடுவா, இப்படியே கிளம்பலாம் வா” சசிதரன் தம்பியை எச்சரித்தான்.
“இந்த ஜகா வாங்கற சீனே வேணாம். இந்த மால்ல இருந்து வெளியே போகும்போது ஜோடியா தான் வெளிய வர ஓகே” தம்பி அண்ணனுக்கு உத்தரவிட்டான்.
“ரொம்ப கஷ்டம் டா” சசிதரன் நொந்து கொள்ள, வசீகரன் ரம்யாவிற்கு கண்ஜாடை காட்டி விட்டு, “நானும் ரமியும் எஸ்கேப் ஆகுறோம், இதான் உங்களுக்கான சான்ஸ், சொதப்பாம கோல் அடிச்சுட்டு வா” என்று இவன் நழுவிக் கொள்ள, சசிதரன் தலையில் கை வைத்துக் கொண்டான்.
“திவி, எனக்கு பசிக்குது, நான் போய் ஏதாவது வாங்கிட்டு வந்துறேன் நீ பார்த்துட்டு இரு” என்று ரம்யாவும் நழுவிக் கொண்டாள்.
இப்போது சசிதரனும் திவ்யாவும் மட்டும் ஒருவரையொருவர் சங்கடமாக பார்த்து நின்றனர்.
“இதுங்க ரெண்டும் சேர்ந்து நம்மல சேர்த்து வைக்க பிளான் பண்ணுதுங்க போல” வெறுமை சிரிப்போடு சசிதரன் சொல்ல, திவ்யாவும் தலையாட்டி கொண்டாள்.
திவ்யாவிற்கும் இங்கே நடப்பது புரிந்தது. ஆனால் இதை எப்படி எடுத்து கொள்வது என்று தான் புரியவில்லை. இளையவர்களின் தங்களுக்கான முயற்சி அவளை சங்கடம் கொள்ள செய்வதாய்.
“நம்ம டைவர்ஸ் பத்தி வசிகிட்ட சொல்லலையா?” திவ்யா யோசனையாக கேட்க, ‘இல்லை’யென்று தலையசைத்தான் சசிதரன்.
“நாம இப்படி பிரிஞ்சி இருக்கறதுக்கே என்னை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்குறான். இதுல நாம மொத்தமா நம்ம உறவ முறிச்சிக்க போறோம்னு தெரிஞ்சா என்ன செய்வானோ?” தந்தையிடம் இல்லாத தயக்கமும் பயமும் தம்பியிடம் இருந்தது அவனுக்கு.
“இனிமேல் மறைச்சு என்ன ஆக போகுது? சொல்லிடு சசி” என்றவளிடம் பாரமான பெருமூச்சு மட்டுமே வெளிப்பட்டது.
சசிதரனும் தலையாட்டிக் கொண்டான். வெகு நாட்களுக்கு பிறகு மனைவியின் இத்தனை நிதானமான பேச்சு அவனையும் நிதானபடுத்தி இருந்தது.
“நேத்து நம்ம வக்கீல் கிட்ட பேசிட்டேன் மியூச்சுவல் டைவர்ஸ்னா பெருசா பிராப்ளம் இல்லனு சொன்னாரு. நீ எப்ப ப்ரீனு சொல்லு நாம போய் அப்ளே பண்ணிடலாம்” சசிதரன் கடமை தவறாதவனாக பேச, அவள் தலையாட்டி கொண்டாள்.
எத்தனை விசித்திரமானவை வாழ்க்கையின் நிகழ்வுகள்! எந்த இடத்தில் தங்கள் காதலை உணர்வாய் பகிர்ந்து உயிராய் இணைந்தனரோ அந்த இடத்தில் பிரிவை பற்றி சாவகாசமாக பேசுகின்றனர்!
ஒற்றை கையால் கைப்பேசியை இயக்கியப்படி, தன் முன்னால் செல்பவளையும் பார்த்து வந்தவனின் முகத்தில் வினோத பாவம்!
சாவகாசமாக லாலிபாப்பை சுவைத்தபடி, அங்கிருக்கும் ஒவ்வொன்றையும் குறுகுறு பார்வை பார்த்து, துள்ளல் நடையோடு செல்பவளை கடப்பவர்கள் பார்வையும் வசீகரனின் அதே வினோத பாவத்தைக் காட்டி சென்றது.
அதில் கடுப்பானவன், “ஏய் நில்லு” ரம்யாவை நிறுத்த, அவளும் என்னவென்று நின்று திரும்பினாள்.
“லாலிபாப் சாப்பிடுற வயசா உனக்கு முதல்ல அதை தூக்கி போடு” என்று அதட்டினான்.
“லாலிபாப் சாப்பிட கூட வயசு இருக்கா என்ன? பிடிச்சா சாப்பிட வேண்டியது தான” ரம்யா சுலபமாக சொல்ல, வசீகரன் கண்கள் ஒருமுறை விரிந்து சுருங்கியது.
“அதுக்காக இப்படியா? எல்லாரும் உன்ன ஒரு மார்க்கமா பார்த்துட்டு போறாங்க பாரு” வசீகரன் இடம், பொருள் சொல்ல, “இதென்ன வம்பா போச்சு, பார்க்கற எல்லாருக்கும் என்னால லாலிபாப் கொடுக்க முடியாதே, போனா போகுதுன்னு உனக்கு மட்டும் கொடுக்குறேன் இந்தா” என்று தன் கைப்பையில் இருந்து லாலிபாப் ஒன்றை எடுத்து நீட்டினாள்.
“எனக்கு வேணாம்” முகம் கசக்கியவனுக்கு ஏனோ வாயூற தான் செய்தது. தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சுவிங்கத்தை எடுத்து வாயில் இட்டுக் கொண்டான்.
“அதான மலைமாட்டுக்கு தெரியுமா லாலிபாப் டேஸ்ட்” அவள் முணுமுணுத்து வைக்க, “ஏய் யார மலைமாடுன்னு சொல்ற?” வசீகரன் குரல் உயர்த்தினான்.
“மாடு அசை போடுறது போல தான நீயும் அந்த சுவிங்கத்தை மெல்லுற, அதைதான் நானும் சொன்னேன்” என்றவள் தோளை குலுக்கிவிட்டு முன் திரும்பி நடந்தாள்.
‘நான் பப்ளிகாம் மெல்லறது மாடு அசை போடுற மாதிரியா இருக்கு?!’ வசீகரனுக்கே அவளின் பேச்சு சந்தேகத்தை கிளப்பிவிட, வேகமாக தலையைக் குலுக்கிக் கொண்டவன், “ஏய் நான் பப்ளிகாம் போடுற ஸ்டைலுக்காகவே எத்தனை பொண்ணுங்க இம்ப்ரஸ் ஆகி இருக்காங்க தெரியுமா!” அவன் தற்பெருமை பேச, ரம்யா கிளுக்கி சிரித்து விட்டாள்.
“ஆமா எப்படி இன்னைக்கு உன் கேர்ள் ஃபிரண்ட்ஸ் இல்லாம நீ மட்டும் தனியா வந்திருக்க?” அவள் ஆகபெரும் சந்தேகத்தை கேட்க, “அவங்கள எல்லாம் மால்க்கு கூட்டிட்டு வந்தா, நான் போண்டியாக வேண்டியது தான். என் பேங்க் அக்கவுண்ட்ட எம்ட்டி பண்ணிட்டு தான் கிளம்புவாங்க” என்றான்.
இப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்தே நடந்தனர் பேசுவதற்கு தோதாக.
“ஆஹா, திவி மேரேஜ்க்கு சேரி, ஜுவர்ல்ஸ் வாங்க போகும் போது மட்டும் ஒவ்வொருத்தியா இழுத்துட்டு வந்திருந்த, அப்ப உன் பர்ஸ் காலியாகலியா?” ரம்யா விளையாட்டாக கேட்க, எப்போதோ நடந்த முந்தைய நிகழ்வை அவள் நினைவு வைத்து கேட்டதை எண்ணி வியந்தவன் சிரித்து கொண்டான்.
“ஹேய் அவங்க என் காலேஜ் ஃப்ரண்ஸ், அவங்கள ட்ராப் பண்ண போகும் போது அங்க வந்து தலை காட்டிட்டு போனேன் அவ்வளவுதான்” என்றான்.
“உன் காலேஜ் கேர்ள்ஸ் எல்லாரையும் நீதான் ட்ராப் பண்ணுவியோ, பார்ட் டைம் பிஸ்னஸா” ரம்யா கிண்டலாக கேட்டு வைக்க, அவள் தலையை தட்டியவன், “ஏதாவது வேலைக்காக என்கூட வர கேர்ள்ஸ நான் தான பத்திரமா ட்ராப் பண்ணனும். அவங்கள தனியா அனுப்பற அளவுக்கு நம்ம நாடு பாதுக்காப்பானதா இருக்கலையே, சோ இது என்னோட பாலிசி” என்றான் இயல்பாய்.
ரம்யா நின்று அவனை ஆழ பார்த்தாள். “நீங்க பொத்தி பாதுகாக்கற அளவுக்கு பொண்ணுங்க பொக்கிஷம் இல்ல சார், ஆண்களை போல உடலும் உணர்வுகளும் ரத்தமும் சதையும் இருக்கிற மனித பிறவி தான். எங்களுக்கான வாழ்க்கையை எங்களை வாழ விடுங்க போதும்” என்று சொன்னாள்.
அவளை ஆமோதித்து தலையசைத்தவன், “நிச்சயம் அந்த நாள் வரும். காந்தி தாத்தா சொன்னது போல நடு ராத்திரியில ஒரு பொண்ணால பயமில்லாம வெளியே வந்து சேதாரமில்லை வீட்டை அடைய முடியும்! அதுவரைக்கும் என்னை நம்பி வர கேர்ள்ஸ பாதுகாப்பா அவங்க இடம் சேர்க்கறது என்னோட பொறுப்பு. ஆட் ஷூட்டிங் வர மாடல்ஸ் கூட நான் இல்ல தேவா ட்ராப் பண்ணிடுவோம்” என்றான்.
“ம்ம் பாராட்ட வேண்டிய விசயம் தான். உன்கிட்டயும் கொஞ்சூண்டு நல்லவன் ஓட்டிட்டு இருக்கான் போல” என்றவளை முறைத்து வைத்தவன், சுவை தீர்ந்த சுவிங்கத்தை குப்பை தொட்டியில் துப்பிவிட்டு நடந்தான்.
ரம்யாவும் லாலிபாப் தீர்ந்து போன குச்சியை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, கைக்குட்டையால் வாயை துடைத்துக்கொண்டு அவனை தொடர்ந்தாள்.
“ஏதாவது வாங்கனுமா?” வசீகரன் அக்கறையாக கேட்க, ரம்யா இல்லையென்று தலையாட்டினாள். “நிஜமா, எதுவுமே வாங்க வேணாமா?” அவன் நம்பாமல் மீண்டும் கேட்க, “ம்ஹும் எதுவும் வாங்கற ஐடியா இல்ல, திவியும் சசி மாமாவும் பேசி இருப்பாங்கல்ல” என்று கேட்டாள்.
“ம்ம் கண்டிப்பா பேசுவாங்க, கவலைய விடு” என்றான் நம்பிக்கையாய்.
“ம்ம் தேவா அண்ணா எப்படி இருக்காரு. அன்னிக்கு ரொம்ப நல்லா கலகலன்னு பேசினாரு. அவர் ஸிஸ்டருக்கு அலைன்ஸ் பார்க்கறதா அப்ப சொன்னாரு இப்ப மேரேஜ் முடிஞ்சு இருக்குமில்ல” ரம்யா தேவாவை பற்றி ஆர்வமாக விசாரிக்க, வசீகரனுக்கு முகம் வேகாத குறை.
“அவன் உனக்கு அவரு? தேவா அண்ணா வேற, எப்பவாவது என்னை இப்படி உரிமையா பேசி இருப்பியா?” வசீகரன் கோபமாக கேட்க இவள் திருதிருத்தாள்.
“என்ன முழிக்கிற, உங்க வீட்டு சோஃபால இந்த பக்கம் சசி உக்கார்ந்து இருந்தான். அவன்கிட்ட ‘சசிமாமா’னு குழைஞ்சு பேச தெரியுது, அந்த பக்கம் தேவாகிட்ட ‘தேவா அண்ணா’னு கொஞ்சி பேச தெரியுது, நடுவுல நான் இருக்கேன். என்கிட்ட மரியாதைக்கு ஒருவார்த்தை பேசனும்னு கூட தெரியல இல்ல உனக்கு” ஆதங்கமாக அவன் கேட்க, ‘அடாபாவி எப்ப நடந்ததை டா இப்ப கேட்டு தொலைக்கிற’ அவள் இன்னும் விழித்தாள்.
“இதுக்காகவே ஒருநாள் உன்ன வச்சு செய்யனும்னு நினைச்சிருந்தேன். இப்ப தான் மாட்டி இருக்க, சொல்லு நான் உன்ன அப்படி என்ன பண்ணேன்?” அவன் விடாமல் கேள்விகளை அடுக்க, “எனக்கு பிடிச்சா தான பேச முடியும்” அவளும் முறுக்கிக் கொண்டாள்.
“என்ன பிடிக்கல எங்கிட்ட ம்ம்?”
“ரெட்ட பனமரம் ஹைட்டுக்கு வளர்ந்து நிக்கிற! பிடிக்கல”
“என்னாது! நீ குள்ளக் கத்திரிக்கா சைஸ் இருந்துட்டு என்னை ஓட்டறியா? நான் நார்மல் ஹைட் தான். நீதான் வளராம இருக்க”
“என்னோடதும் நார்மல் ஹைட் தான், நீதான் ஓவரா வளர்ந்துட்டு என்னை குள்ளம்னு சொல்ற” அவள் அலட்டாமல் பந்தை அவனிடம் திருப்ப, ”அடிபாவி, குள்ளமா இருக்கறதுக்கு இப்படியொரு பிட்டா” என்று வாயில் கைவைத்துக் கொண்டான்.
“அப்றம் உன் ஹேர் ஸ்டையில் எனக்கு சுத்தமா பிடிக்கல” என்றாள் முகத்தை சுருக்கி.
“உனக்கு ரசனை இல்லனு சொல்லு மரமண்ட, என்னோட இந்த ஹேர் ஸ்டையில்ல எத்தனை பொண்ணுங்க மயங்கி கிடக்காங்க தெரியுமா உனக்கு” என்று கெத்தாக தன் நீள முடியை லாவகமாய் கோதிவிட்டுக் கொண்டான்.
உதட்டை சுழித்துக் கொண்டவள், “என்னோட முடிய விட உன் முடி நீளமா இருக்கு எனக்கு சுத்தமா பிடிக்கல” என்றதும் வசீகரன் பக்கென்று சிரித்துவிட்டான்.
ரம்யாவின் தலைமுடியை விட இவனது நீளம் என்று சொல்ல முடியாது தான். எனினும் சுருள் சுருளாக முதுகு வரை நீண்டும் அவளின் பேச்சை கேட்காமல் முரண்டு பிடிக்கும் முரட்டு கூந்தலை விட, வசீகரனின் மிருதுவான நீளமான தோள் தொட்டு வழியும் கேசம் அவளை வெறுப்படைய தான் செய்தது. வேறு பெண்களின் நீள முடியை பார்த்தாலே இவளுக்குள் பொறாமை பொங்கிவிடும், ஆணொருவனிடம் பார்த்தால் என்ன செய்வாள் அவளும் பாவம் தானே.
“என்னை பிடிக்காம போனதுக்கு இவ்வளோதான் ரீசனா இல்ல இன்னும் இருக்கா?” வசீகரன் அடக்கமுடியாமல் சிரித்தபடி கேட்கவும், “அவ்ளோதான் பே” முன்னே செல்ல எத்தனித்தவளை கைப்பற்றி நிறுத்தினான்.
“எங்க நழுவுற? தேவாவ கூப்பிடற மாதிரி என்னையும் கூப்பிடுற இப்ப” அவன் சொல்ல, “அப்ப உன்ன அண்ணானு கூப்பிடவா” அவள் ஆர்வமாய் கேட்டாள்.
“ஓங்கி விட்டேன் பல்லெல்லாம் கொட்டி போயிடும், ஒழுங்கா மாமானு கூப்பிடு” அவன் மிரட்டலில் இளித்தபடி தன் கரத்தை அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டவள், “சரி அங்கிள் இனிமே அப்படியே கூப்பிடுறேன்” என்று ஓட்டம் எடுத்தவளின் பின்னங்கூந்தலை கொத்தாக பிடித்து நிறுத்தி, “ஓய், நான் உனக்கு அங்கிளா?” என்று அதட்டினான்.
“நீ சொன்னதை தான நான் இங்கிலீஷ்ல சொன்னேன், வலிக்கிது முடிய விடு” அவன் பிடியில் விலக முடியாமல் குதிக்க, அவர்கள் கூத்தை அங்கிருந்தவர்கள் பார்த்து சிரித்தபடி நகர்வதை கவனித்தவள், “எல்லாரும் பார்க்கிறாங்க விடு” கெஞ்சினாள்.
“பார்க்கட்டும் எனக்கென்ன, நீ என்னை ஒழுங்கா கூப்பிட்டா நான் விடுறேன்” என்றான் அவன் பிடிவாதமாய்.
“சரி விடு வசி அங்…”
“ஓய்”
“ம்ம் மாமா, போதுமா விடு”
“சசிமாமா’னு கொஞ்சி கூப்பிடுவல்ல, அப்படி” அவன் அவளிடம் வம்படியாக நிற்க, அவள் சிணுங்கினாள்.
வசீகரனின் அலைபேசி ஒலி எழுப்ப, தன் பிடியை தளர்ந்தி கைப்பேசியை எடுத்தான்.
“சரியான லூசு நீ” ரம்யா அவனை திட்டவும், “ஷூ” அவளை அமைதியாய் இருக்கும் படி சைகை செய்து கைப்பேசியில் பேசினான்.
“சொல்லுங்க அங்கிள்”
“ஆமா என்னாச்சு”
“வாட்! எனக்கு தெரியாது”
மறுமுனை சொன்ன விசயத்தில் அவன் முகம் மொத்தமாக மாறி போனது.
“நான் பார்த்துக்கிறேன் அங்கிள், நீங்க மேல மூவ் பண்ண வேணாம் ப்ளீஸ்” என்று கைப்பேசியை அணைத்தவன் முகம் கோபத்தில் சிவந்தது.
அதே கோபத்துடன் அவன் திரும்பி நடக்க, “என்னாச்சு வசி? ஏதாவது பிரச்சனையா?” அவன் முகமாற்றத்தை கவனித்து ரம்யா கேட்டபடி அவன் வேகநடைக்கு ஈடுகொடுத்து சிறு ஓட்டமாக வந்தாள்.
“நாம அவங்களை சேர்க்க நினைச்சா, ரெண்டு பேரும் டைவர்ஸ் வரைக்கும் போயிருக்காங்க” அவன் குரலில் அத்தனை ஆத்திரம்.
“யார்? இல்ல வசி, திவியால டைவர்ஸ் எல்லாம் பண்ண முடியாது. அவ இப்பவே சசி மாமாவ ரொம்ப மிஸ் பண்றா, எனக்கு தெரியும்” அவர்கள் விவாகரத்து வரை போவார்கள் என்பதை ரம்யாவால் நம்ப முடியவில்லை.
“ரெண்டு பேருக்கும் எக்கசக்க கொழுப்பேறி கிடக்கு, காதல், கல்யாணம் எல்லாம் விளையாட்டா போச்சா? நான் கேக்கறேன்” வசீகரனுக்கு அத்தனை கோபம் வந்தது.
‘ச்ச இவர்களை இணைத்து வைக்கவா அந்தளவு முயற்சி செய்தேன், இப்படி பட்டு போகும் உறவென்றால் அப்போதே விட்டு தொலைத்து இருக்கலாமே’ அவனுள் ஆதங்கம் பொங்கியது.
***
காதல் கூத்து கட்டும்…