காதலில் கூத்து கட்டு 8

images (23)-b3e72b50

காதலில் கூத்து கட்டு 8

காதலில் கூத்து கட்டு 8

 

“நாம இப்படி பிரிஞ்சு நிப்போம்னு முன்னையே தெரிஞ்சு இருந்தா உன்ன லவ் பண்ணி இருக்கவே மாட்டேன்” திவ்யா வெறுமையாக சொல்லவும்,

 

“எனக்கு மட்டும் உன்ன பிரியனும்னு ஆசையா திவி, நீதான் பிடி கொடுக்காம பிடிவாதமா இருக்க” சசிதரன் தன்நிலை சொன்னான்.

 

“வேணா, முன்ன மாதிரி இப்பவும் உணர்ச்சிவசப்பட்டு உன்கூட வந்துட்டு மறுபடி அவதிபட நான் தயாரா இல்ல” திவ்யா மறுக்கவும்,

 

“நான் என்னவோ உன்ன கொடும படுத்தின மாதிரி பேசாத திவி, எப்பவும் சுயநலமா நீ இருந்துட்டு என்னை பழி சொல்லாத” அவள் மாற்றி மாற்றி பேசுவது சசிதரனுக்கு கோபம் கிளப்பியது.

 

“நான் எதுவும் பேசல‌ விடு” இந்த பேச்சு எப்படி போகும் என்பது புரிந்ததால் திவ்யா முடித்துக் கொண்டாள்.

 

“அறிவிருக்கா உங்களுக்கு, என்ன வேலை செஞ்சிருக்கீங்க ரெண்டு பேரும்?” திடீரென அவர்களை மோதிய கோப குரலில் திகைத்து திரும்பினர். அங்கே ருத்ரமூர்த்தியாக வசீகரன் நின்றிருந்தான்.

 

“என்னடா வசி?” சசிதரன் கேட்க,

 

வசீகரன், “பேசாதடா நீ, டைவர்ஸ் அப்ளே பண்ற அளவுக்கு போயிட்டீங்கல்ல, பிரிஞ்சு தான் போகனும்னா என்ன நொல்லைக்கு லவ் பண்ணனும்? கல்யாணம் செஞ்சுக்கனும்?” அடிக்குரலில் சீறினான்.

 

“வசி இது எங்களோட பர்சனல் முடிவு, நீ தலையிடாத” திவ்யா சொல்ல,

 

“எப்படியாவது எங்க மேரேஜ்ஜ நடத்தி வைனு என்கிட்ட கெஞ்சும் போது உங்க பர்சனல்ல நான் எப்படி வந்தேன் மேடம்? அப்ப சொல்ல வேண்டியது தான இது எங்க காதல், எங்க பர்சனல் நாங்க பார்த்துக்கிறோம் நீ தலையிடாதனு” வசீகரன் கடித்த பற்களின் இடுக்கில் வார்த்தைகளை தெறிக்க விட்டான்.

 

“டேய் வீட்ல போய் பேசிக்கலாம் வாடா” சசிதரன் அங்கிருந்து அவனை அழைத்து செல்ல முயல, அவன் கையை உதறியவன், “என்னதான் லவ் பண்ணி தொலைச்சீங்க, ரெண்டு வருசம் கூட தாக்கு பிடிக்க முடியாத அளவுக்கு உளுத்துபோன காதலா உங்களோடது, இந்த ஒன்னுமத்த உறவுக்காகவா அத்தனை பண்ணோம்” வசீகரனின் ஆத்திரம் அடங்குவதாக இல்லை.

 

“வார்த்தையை அளந்து பேசு வசி, நீ எங்களுக்கு உதவி செஞ்ச தான் நாங்க மறுக்கல, அதை சொல்லிக்காட்டி எங்களுக்கு நடுவுல நீ வரது கொஞ்சம் கூட நாகரிகம் இல்ல” திவ்யாவிற்கும் கோபமானது.

 

“வசி இங்க பிரச்சனை வேணாம், கூட்டம் சேர்ந்திடும், வாங்க முதல்ல இங்கிருந்து கிளம்பலாம்” சூழ்நிலை புரிந்து ரம்யா சொல்லவும்,

 

வசீகரன், “நீ குறுக்க பேசாத, நான் கேப்பேன், இவங்க பதில் சொல்லி தான் ஆகனும். கல்யாண பந்தத்தை முறிச்சிக்கறது அவ்வளவு சுலபமா போயிடுச்சா உங்களுக்கு?” மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காமல் அடிக்குரலில் தான் அவர்களிடம் சீறிக் கொண்டிருந்தான்.

 

“வசி திஸ் இஸ் யுவர் லிமிட், எங்க வாழ்க்கைய பார்த்துக்க எங்களுக்கு தெரியும் நீ எதுவும் எங்களுக்கு செய்ய வேணாம். ரமிய இதுல இழுக்காதனு சொல்லியும் அவளையும் இழுத்து விட்டு இருக்க” திவ்யாவும் அவனுக்கு இணையாக பேசினாள்.

 

“திவி, அவன் தான் பேசுறான்னா நீயுமா, அவன் நமக்காக தான் பேசுறான் விடு வா” சசிதரன் மனைவியின் கையை பிடித்து அங்கிருந்து இழுத்து செல்ல, அவர்களை வசீகரனும் ரம்யாவும் தொடர்ந்தனர். வசீகரன் கோபமாய். ரம்யா தவிப்பாய்.

 

அவர்கள் கார் பார்க்கிங்க் இடத்திற்கு வரவும், வசீகரன் காரை திறந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொள்ள, “நாங்க உங்க கூட வரல, கிளம்புறோம்” திவ்யா ரம்யாவுடன் திரும்ப, “ரம்யா வந்து கார்ல ஏறு” வசீகரனின் அழுத்தமான குரல் அவர்களை நிறுத்தியது. அவனுக்கு அண்ணியிடம் உத்தரவிட உரிமையில்லை. எனவே சிறு பெண்ணென ரம்யாவிடம் தன் உத்தரவை இட்டான்.

 

ரம்யா தயங்கி நிற்க, “ரமி கிளம்பு, அவன் பேச்சை கேட்க வேண்டிய அவசியமில்ல நமக்கு” திவ்யா தங்கையின் கைப்பற்றி இழுக்க, “ரம்யா நான் உன்ன கார்ல ஏற சொன்னேன்” வசீகரன் குரல் இன்னும் அழுத்தமாக தடுத்தது.

 

இருவருக்கும் நடுவே ரம்யா திருதிருத்தாள். ‘டேய் என்னை ஏன்டா மிரட்டுற? மீ‌ பாவம் அப்பாவி’ ரம்யா தனக்குள் நொந்து கொண்டாள்.

 

“இது கொஞ்சம் கூட நல்லால்ல வசி, என் தங்கச்சிய எந்த உரிமையில நீ மிரட்டற, எனக்கும் உன் அண்ணனுக்குமே ஒன்னுமில்லனு ஆகிடுச்சு, இனி நமக்குள்ள எந்த ஒட்டும் உறவும் இல்ல போயிடு” திவ்யாவும் குரல் உயர்த்தினாள்.

 

வசீகரன் காரில் இருந்து வேகமாக வெளியே வந்து அவர்கள் முன் நின்றான். “டேய் உன்கூட பெரிய தொல்லையா போச்சு டா, பிரிய போற நாங்களே கவலைபடல, நீ ஏன்டா ஓவர் ரியாக்ட் பண்ற” சசிதரன் நொந்து கொண்டான். வெளியிடத்தில் பிரச்சனை ஆவதில் அவனுக்கு உடன்பாடில்லை.

 

“நீதான் டா புரிஞ்சிக்காம பேசற, லவ் பிரேக்அப் பண்ணிக்கிட்டா அது உங்களுக்கு மட்டுமான விசயம், உங்க கல்யாணத்தை முறிச்சிக்கிறது, ரெண்டு குடும்பம் சம்பந்தப்பட்ட விசயம். அவ்வளோ யோசிக்கிற அறிவு கூட இல்லையா உனக்கு” வசீகரன் ஏச,

 

“ஆமா அப்படியே நம்ம குடும்பம் பின்னி பிணஞ்சு இருக்கு பாரு, இப்ப உடைஞ்சு போக, காமெடி பண்ணாத வசி” திவ்யா வெறுப்பாக பதில் தந்தாள்.

 

“அச்சோ அக்கா, சசி மாமாவ உன்னால இன்னும் மறக்க முடியல இல்ல, அவரை நினைச்சு நீ அழறத‌ நானே பார்த்து இருக்கேன். அப்புறம் எதுக்கு டைவர்ஸ்? அப்படியென்ன பிடிவாதம் உங்களுக்குள்ள” ரம்யாவும் தாளாமல் கேட்டு விட்டாள்.

 

“அதெல்லாம் உனக்கு புரியாது ரமி, இவன் பேச்சை கேட்டு நீயும் குழப்பிக்காத, வா போலாம்” திவ்யா தங்கையின் கைப்பற்றி இழுத்து செல்ல, ரம்யா நகராது அங்கேயே நின்றாள்.

 

திவ்யா திரும்ப, ரம்யாவை நகர விடாமல் அவளின் மறுகையை வசீகரன் பிடித்து இருந்தான். அவர்கள் இருவரின் இழுப்புக்கு இடையில் இவள் தவித்து நின்றாள்.

 

‘டேய் மடயா, என் கைய விடுறா’ ரம்யா அவனிடம் காட்டமாக வாயசைக்க, “வசி, ரமி கையை விடு, எவ்வளோ தைரியம் இருந்தா என் முன்னாடியே அவ கையை பிடிப்ப” திவ்யாவிற்கு சுறுசுறுவென கோபம் ஏறியது.

 

 “நான் சொல்லித்தான் ரம்யா உங்கள இங்க கூட்டிட்டு வந்தது. எனக்கு பதில் சொல்லாம நீங்க இங்கிருந்து போக முடியாது” என்றவன் ரம்யாவை இழுத்து தன்புறம் நிற்க வைத்துக் கொண்டான்.

 

திவ்யா இப்போது தங்கை மீது அனல் பார்வை வீச, ”அய்யோ அக்கா முறைக்கிறா, டேய் வளர்ந்து கெட்டவனே என்னடா, பணயமா புடிச்சு வச்சிருக்க மாதிரி என்னை புடிச்சு வச்சிருக்க, ஓவரா போற நீ” பற்களை கடித்தப்படி படபடத்தாள்.

 

“உன் அக்கா பேச கூட நிக்க மாட்டேங்கிறாளே, நான் வேற என்ன செய்ய? இப்ப பாரு உன்ன விட்டு போக முடியாம எப்படி தவிக்கிறான்னு” வசீகரன் இவளுக்கு பதில் தர, தலையில் அடித்துக் கொண்டவள், “நல்லா வருவ டா நீ” என்றாள் முறைப்புடன்.

 

திவ்யா, “நான் என்ன பதில் சொல்லனும்‌” அவன் முன் கைகள் கட்டி அழுத்தமாக நின்று கொண்டாள்.

 

“பார்த்தியா உன் அக்காவுக்கு உன் மேல எம்புட்டு பாசம்னு” வசீகரன் சொல்ல, அதற்கும் அவனை முறைத்து வைத்தவள், “நீ உன் பஞ்சாயத்தை நடத்து” என்றாள் பற்களை நறநறத்தபடி.

 

“பேசி தீர்க்க முடியாத பிரச்சனைனு ஏதாவது இருக்கா அண்ணி, வெளிப்படையா பேசுங்க, அப்ப தான ஒருத்தர் ஒருத்தர் புரிஞ்சிக்க முடியும்” வசீகரன் இப்போது நிதானத்திற்கு வந்திருந்தான்.

 

திவ்யா அதே அழுத்தமாக நிற்க, “டேய் அண்ணா, உங்களுக்கு நடுவுல பேச எனக்கு உரிமையில்லனு சொல்லுடா, நான் விலகிக்கிறேன்” என்று வசீகரன் கேட்க,

 

“உனகில்லாத உரிமை வேற யாருக்கும் இல்லடா, பட், நாங்களும் எவ்வளவோ பேச டிரை பண்ணிட்டோம், எங்க பேச்சு ரெண்டு பேருக்கும் பிரச்சனையா தான் முடியுது” சசிதரன் நொந்தபடி சொன்னான்.

 

தங்களுக்கான தனிப்பட்ட விசயத்தில் வசீகரன் நுழைவது, கேள்வி கேட்பது திவ்யாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவன் அக்கறையை எரிச்சலாக உணர்ந்தாள். அதிலும் அவனுடன் ரம்யா நிற்பது அவளின் எரிச்சலை மேலும் அதிகப்படுத்தியது.

 

“உன் அண்ணன் வாழ்க்கையில நீ தலையிடு காலைவிடு ஐ டோன்ட் கேர், பட் என்னோட முடிவுல, என் வாழ்க்கையில தலையிட உனக்கு எந்த உரிமையும் இல்ல வசி” திவ்யா ஆத்திரமாக பேச,

 

“அக்கா, ஏன் எடுத்தெறிஞ்சு பேசற, அவன் உங்க வாழ்க்கைக்காக தான இவ்வளோ செய்யறான். அண்ணனோட வாழ்க்கைக்காக இப்ப யாரு இவ்வளவு யோசிப்பாங்க” ரம்யா மனம் கேளாது வசீகரனுக்கு பரிந்து வந்தாள்.

 

“அவனை பத்தி உனக்கு எதுவுமே தெரியாது. அவனுக்கு நீ சப்போட் பண்ற வேலை எல்லாம் வச்சுக்காத” தங்கையை கடிந்தவள்,

 

“வசீ நீயும் ரமிகிட்ட பேசற வேலை வச்சுக்காத, நான் முதல்லயே வார்ன் பண்ணேன் நீ கேக்கல, மறுபடியும் நீ ரமிகிட்ட பேசறதை பார்த்தா எனக்கு கெட்ட கோபம் வரும்” வசீகரனையும் கடிந்து கொண்டாள்.

 

ரம்யாவிடம் பேசாதே என்று திவ்யா மறுபடி மறுபடி சொல்லவது, வசீகரனின் ரோசத்தை உரசி போனது.

 

“ஏன் பேசக்கூடாது. உன் தங்கச்சி என்ன இந்த உலகத்திலயே இல்லாத பேரழகியா? என்ன மீனிங்கல என்னை பேச கூடாதுன்னு சொல்றீங்க, என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?” சமாதானம் செய்ய வந்தவனே கோபத்தை தொட்டிருந்தான்.

 

“என் விசயத்துல அவளை இழுக்கறது எனக்கு பிடிக்கல”

 

“என்னமோ நான் அவ கைய புடிச்சு இழுத்து மாதிரி பேசுறீங்க”

 

“ஆமா இப்ப தான என் முன்னால கைய புடிச்சு இழுத்த”

 

“ஆமா இழுத்தேன், அதுக்கென்ன இப்போ”

 

“வசி உன் பேச்சே சரியில்ல, உன் மத்த கேர்ள் ஃபிரண்ட்ஸ் மாதிரி ரமி இல்ல. அவளை விட்ரு”

 

வசீகரன் புருவம் சுருக்கினான். “என் கேர்ள் ஃபிரண்ட்ஸ் மாதிரி ரமி இல்லனா என்ன அர்த்தம்?” என்று இழுத்தவன், “ஆல்ரெடி ரமியும் என் கேர்ள் ஃபிரன்ட் தான். என்ன சொல்றீங்க அதுக்கு” வசீகரன் சொல்ல, “டேய்ய்ய்” ரம்யாவின் குரல் அதிர்ச்சியாக ஒலித்தது.

 

திவ்யா, சசிதரன் முகங்கள் திகைப்பை வெளிப்படுத்த, அவர்களை விட அதிகமாக ரம்யா அதிர்ந்து அவனை பார்த்தாள். ‘அடேய், உன்கூட ஓரளவு பேசினதே இன்னைக்கு தான டா, நான் உங்க ஆட்டத்திலயே இல்லையேடா,‌என்னை வச்சு என்னடா ரீல் சுத்தறே’.

 

“சும்மா சொல்லாத வசி, உன்னபத்தியும் எனக்கு தெரியும். ரமி பத்தியும் எனக்கு தெரியும்” திவ்யா சொல்ல,

 

“ஆமா உன் புருசனயே ஒழுங்கா தெரிஞ்சுக்க முடியல, என்னையும் இவளையும் முழுசா புரிஞ்சிக்கிட்டீங்களாக்கும்” வசீகரன் நக்கலடித்தான்.

 

“டேய் மண்டைய உடைச்சுடுவேன். அவங்களுக்கு தான பிரச்சனை நீ என்ன என்னை வச்சு காய் நகர்த்துற கொன்னுடுவேன்” ரம்யா பொறுக்கமுடியாமல் அவர்கள் குறுக்கே வந்தாள்.

 

“உன்ன பேச்சுல இழுத்தது உன் அக்கா தான் நான் இல்ல” வசீகரன் தோள் குலுக்கினான்.

 

“அவன் உன்ன கேர்ள் ஃபிரன்ட்னு சொல்றான். நீயும் இளிச்சிட்டு நிக்கற” திவ்யா திட்ட,

 

“உன் கண்ணு நொல்லயா க்கா, நான் அவனை முறச்சிட்டு நின்னேன். இளிச்சிட்டு நிக்கல”

 

“நீ பேசாத ரமி, நான் உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல”

 

“எதை?!” ரம்யா குழம்ப,

 

திவ்யா, “போயும் போயும் நீ இவனோட பழகறதை” வசீகரனை கை காட்ட,

 

“என்னது?!” ரம்யா தலையை குலுக்கிக் கொண்டாள்.

 

வசீகரன், “ஏன் ஏன் ஏன், நீங்க என் அண்ணனோட பழகும்போது உங்க அருமை தங்கச்சி என்கூட பழக கூடாதா?” ஏட்டிக்குப் போட்டி வார்த்தை தான். ஆனாலும் அதன் அர்த்தத்தின் அளவை புரிந்து கொள்ளாமல் பேசி இருந்தான்.

 

“வசீ என்ன பேச்சு இது, நான் தான் சொன்னேன் இல்ல, இவளோட பேச ஆரம்பிச்சாவே பிரச்சனையில தான் முடியும்னு, நீ வா போலாம்” சசிதரன் மண்டை சூடாகி தம்பியை இழுத்து வர, 

 

வசீகரன், “ரம்யா நீயும் வா. நான் உன்ன டிராப் பண்றேன்” என்று அவளை அழுத்தமாக பிடித்து காரின் முன்புறம் ஏற்றினான். அவன் பிடியின் வலியில் ரம்யாவின் முகம் சுருங்கி போனது.

 

திவ்யா அவர்களை பார்த்து கொதித்து நிற்க, சசிதரன் குழம்பி நின்றான். “உங்களுக்கு தனியா சொல்லுனுமா? வந்து ஏறுங்க” வசீகரன் சிடுசிடுக்க, திவ்யா இம்முறை மறுக்கவில்லை. அமைதியாக காரின் பின்புறம் இருவரும் ஏறிக் கொள்ள கார் வேகமெடுத்தது.

 

யாரும் எதுவும் பேசவில்லை. நால்வரும் நான்கு வித மனநிலையில் உழன்று இருந்தனர். பெண்களை அவர்கள் வீட்டின் முன் இறக்கி விட்டே வசீகரன் சென்றான்.

 

தன் அலுவலகத்தில் இறங்கி கொண்ட வசீகரன், “அவசரப்பட்டு டைவர்ஸ் அப்ளே பண்ணாதீங்க, கொஞ்சம் பொறுமையா யோசிக்க டைம் எடுத்துக்கங்க” என்று சொல்ல, சசிதரன் தலையசைத்து விட்டு காரில் சென்று விட்டான்.

 

தன் அறைக்கு வந்த திவ்யா, மெத்தையில் பொத்தென்று விழுந்து முகம் பொதித்து அழ ஆரம்பித்து விட்டாள். அவளை அப்படி பார்த்த ரம்யாவிற்கு இம்முறை கோபம் தான் வந்தது.

 

“இப்போ எதுக்காக அழற திவி? சசி மாமாவ மறக்க முடியாம இப்படி அழறவ எப்படி டைவர்ஸ் வரைக்கும் போன? எனக்கு சுத்தமா புரியல, நீயே தெளிவில்லாத நேரத்துல என்ன பைத்தியக்காரத்தனமா முடிவு இது?”

 

“நான் சொன்னாலும் உனக்கு புரியாது ரமி” தேம்பலினூடே திவ்யா சொல்ல, சின்னவளுக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.

 

“நல்லா அழுது தீர்த்துட்டு, என்கிட்ட உன் மனபாரத்தை சொல்லனும்னு தோனுச்சுனா வந்து சொல்லு. எனக்கு புரியுதோ இல்லையோ. உன் மன அழுத்தமாவது கொஞ்சம் குறையும்” என்று சொன்னவள் தன் தமக்கையை கவலையுடன் பார்த்து விட்டு நகர்ந்தாள்.

 

***

 

காதல் கூத்து கட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!