காதலில் கூத்து கட்டு 9

60bf6dcd8b21f28c3a3f292da45a73f0-3f3129e5

காதலில் கூத்து கட்டு 9

சென்னையின் அந்த உயர்தர அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ் பகுதியில் தன் பைக்கை நிறுத்தி விட்டு மின்தூக்கியில் ஏறிக்கொண்டான் வசீகரன். நான்காவது தளத்தில் இரண்டாவது வீடு தான் இவர்களுடையது. மூன்று படுக்கை அறைகள், ஹால், சமையலறை, பால்கனி என்று வசதியாக அமைந்த வீடு. 

 

அழைப்பு மணியை அழுத்தி விட்டு தன் மொபைலை நோண்டியபடி அவன் நிற்க, கதவை திறந்தவரை நிமிர்ந்து பார்த்ததும் அவன் முகம் மாறியது. அவரை கண்டு கொள்ளாமல் ஒதுங்கி உள்ளே நடந்தான்.

 

“டேய் வசீகரா” இளங்கோவனின் வாஞ்சையான அழைப்பில் நின்று திரும்பி, “ம்மா யாருமா இந்தாளு?” வசீகரனின் சுள்ளென்ற கேள்வியில் அவர் முகம் சுருங்கி போக, மகனின் கேள்வியில் மேகவாணி சிரித்து விட்டார். 

 

சாவித்திரி தன் மருமகளையும் பேரனையும் ஒன்றாக முறைத்து வைக்க, சசிதரன் தன் மடிக்கணினியில் இருந்த பார்வையை உயர்த்தி அவர்களை ஆர்வமாய் கவனிக்கலானான்.

 

“டேய் உன் அப்பன் டா நானு, வேணி நீயுமா?” இளங்கோவன் பாவமாக கேட்டதில், “என்னமோ அவன் புதுசா கேக்கறா போல தான், விவரம் தெரியாதப்போ ‘யாருமா இந்த அங்கிள்’னு கேட்டவன் தான, இப்ப இன்னும் கொஞ்சம் விவரமா கேக்குறான்” என்று மேகவாணியும் கணவனுக்கு குட்டு வைத்தார்.

 

இளைய மகன் மற்றும் மனைவியின் குற்றச்சாட்டில், பெரிய மகனையும் அம்மாவையும் இளங்கோ பாவமாய் பார்க்க, அதில் சாவித்ரியும் சசிதரனும் கூட சிரித்துவிட்டனர். வசீகரன் இன்னும் அவரை முறைத்தபடி தான் நின்றிருந்தான்.

 

இளங்கோவன் ஒரு அகழ்வாராய்ச்சியாளர். எனவே அவர்  குடும்பத்துடன் செலவழிக்கும் நாட்களும் வெகு குறைவே. வருடத்தில் இரண்டு மாதங்கள் குடும்பத்துடன் இருந்தாலே பெரிய விசயம். மற்ற நாட்களில் எல்லாம் எங்கோ மூலை முடுக்குகளில் மண்ணை தோண்டி கிளறி கொண்டிருப்பார் அவர். இருந்தும் தன் பணியை பூரண ஈடுபாட்டோடு ஆர்வம் குறையாமல் செய்து வருபவர். மகன்கள் தலையெடுத்த பின்னரும் கூட ஓய்வெடுக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாது ஓடிக் கொண்டிருப்பவர். வரலாற்றின் மீதும், பழங்கால பொருட்களின் தேடல் மீதும் அத்தனை ஆர்வம், மிகுதியான காதல் அவருக்கு.

 

“அப்புறம் பொறுமையா என்னை மொறச்சுக்கோடா, இப்ப சீக்கிரம் போய் ரெஃபிரஷ் ஆகிட்டுவா, இன்னிக்கு எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்னு உனக்காக தான் வெயிட்டிங்” இளங்கோ மகனை திசை திருப்ப முயல, அவன் மாறாத முறைப்புடன், “எப்போ வந்தீங்க, என்கிட்ட சொல்லவே இல்ல” ஏதோ போல தான் விசாரித்தான்.

 

“ஈவ்னிங் தான் வந்தேன் வசீகரா. உனக்கு ஒரு குட்டி சர்பிரைஸ் கொடுக்கலாம்னு தான் சொல்லல” என்றபடி இழுத்தார் அவர்.

 

“எத்தனை நாள் இருப்பீங்க? நாள் கணக்கா? இல்ல வார கணக்கா?” வசீகரன் விடாமல் விசாரணையை தொடர, “டூ வீக்ஸ்ல கிளம்பனும்” இளங்கோவன் பதில் தயங்கி வந்தது. 

 

மேகவாணி, வசீகரன் முதுகில் ஓரடி வைத்து, “உன் விசாரணை எல்லாம் அப்புறம் வச்சுக்கோ டா, அப்பா பசியோட இருக்காரு. சாப்பிட வா” என்று அதட்ட, வலிக்காத முதுகை நெளித்து கொண்டபடி, “ம்மா, இதெல்லாம் நீ கேக்க வேண்டிய கேள்வி மா, வருசத்துல ரெண்டு மாசம் மட்டும் தான் வீட்டுக்கே வராரு, மண்ணை தோண்டுறேன், புதையல் எடுக்குறேன், ஆராய்ச்சி பண்ணி கிழிக்கிறேன்னு கதை விட்டுட்டு இருக்காரு. நீங்களும் அதை நம்பிட்டு இருக்கீங்க” வசீகரனின் வேகமான பேச்சில், அவன் சொல்ல வருவது புரியாமல் மற்றவர்கள் அவனை பார்த்திருக்க,

 

“அதான உண்மை வசீகரா, இல்ல நான் வருசம் ஃபுல்லா உங்களையெல்லாம் விட்டு சும்மா ஊர் சுத்துறேன்னு நினச்சுட்டு இருக்கியா?” இளங்கோவனும் பாவமாக கேட்டார்.

 

“சும்மா எல்லாம் ஊர் சுத்தல” என்று நிறுத்தி அவரை மேலும் கீழும் பார்த்தவன், “எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட். ம்மா, இவரு எங்கேயோ வேற ஃபேமிலிய மெயின்டெயின் பண்றாரு போல, அதான் வருசம் பூரா அங்க இருந்துட்டு எட்டி பார்க்க மட்டும் இங்க வராரு” என்றது தான் தாமதம்,

 

“அடி செருப்பால, யாரை பார்த்துடா சொன்ன, நான் ஸ்ரீ ராமனுக்கே டஃப் கொடுக்கறவன் டா, என்னை பார்த்து…” இளங்கோ மகன் மேல் பாய, வசீகரன் நழுவி ஓட, ஹால் முழுவதும் இருவரும் ஓடி பிடித்து, மகனை கீழே தள்ளி இரண்டு மொத்து வைத்த பிறகே அவர் ஓய்ந்தார்.

 

கீழே வசீகரன் விழுந்து கிடக்க, அவன் மேல் இளங்கோவன் அமர்ந்து அவனை மொத்தி எடுக்க, வசீகரனின் சிரிப்புடன் கூடிய அலறல் சத்தத்தில் அந்த வீடு கலகலத்தது.

 

மூச்சு வாங்க இருவரும் எழுந்து அமர்ந்து கொள்ள, “வாய் கொழுப்பு அதிகமாகிடுச்சு டா உனக்கு” என்றார் மூச்சு வாங்க.

 

“பின்ன ஃபோன் பண்ணா கூட ரீச் ஆகல ப்பா, எனக்கும் கோபம் வருமில்ல” என்றான் வசீகரன் சலுகையாய்.

 

“நான் இருந்த ஏரியா அப்படி வசி, என்ன செய்ய?” என்றார் இளங்கோ சமாதானமாய்.

 

தந்தையும் இளைய மகனும் அச்சில் வார்த்ததைப் போல ஓரே நிறம், ஒரே உயரம், ஒரே ஜாடை. என்ன ஒரே வித்தியாசம், வசீகரன் கேசம் நீண்டு கிடந்தது. இளங்கோவன் தலையில் வழுக்கை எட்டி பார்த்தது. 

 

இருவரில் மூத்தவன் சசிதரன், மேகவாணியின் வார்ப்பு. மைதா நிறம், சராசரி உயரம்,‌‌ மென்மையான குணம் அவனுக்கு. வசீகரனின் அடாவடித்தனம் அவர்கள் குடும்பத்தில் தனி ரகம்.

 

இளங்கோவன் எத்தனை கலகலப்பானவரோ அத்தனை அழுத்தமானவர் கூட. குடும்பத்தில் அவரின் முடிவுக்கோ, வார்த்தைக்கோ மறுப்பிருக்காது. அதிகமாய் உடன் இல்லையானாலும் தன்னாலான குடும்ப பொறுப்புகள் கடமைகளில் இருந்து இதுவரை தவறியவர் இல்லை. சசிதரனின் காதல் விவரம் தெரிந்து, முதலில் ஒத்துவராது என்று மறுத்தவர், பிறகு சசிதரனின் கெஞ்சலிலும் வசீகரனின் நச்சரிப்பிலும் சம்மதம் சொல்லி இருந்தார். இப்போது அவர்கள் பிரிவு தெரிந்தால்!

 

உணவு மேஜையில் குட்டி விருந்து அவர்களுக்காக காத்திருந்தது. வெகு நாட்களுக்கு பிறகு, அனைவரும் ஒன்றாக பேசி, சிரித்து உணவு உண்டது அங்கே அழகான குடும்ப பிணைப்பை ஏற்படுத்தி இருந்தது. திவ்யா‌ இங்கே இல்லை என்பது தெரிந்தும் இளங்கோ அதை பெரிதாக கேட்டுக் கொள்ளவில்லை.

 

இரவு உணவு முடிய ஆண்கள் மூவரும் பால்கனியை தஞ்சமடைந்து இருந்தனர். 

 

“உன்னோட ஆட் ஷூட் எல்லாம் எப்படி போகுது வசி” இளங்கோ விசாரிக்க, “பெருசா சொல்ற மாதிரி இல்ல ப்பா, அப்படி அப்படி போயிட்டு இருக்கு” உதட்டை பிதுக்கி கொண்டவன்,

 

“இனிஷியல் ப்ரோஜக்ட்ஸ் தான் பண்றோம், எதுவும் பெருசா சொல்ற மாதிரி இல்ல. தானா தேடி வரதும் இல்ல. நானும் தேவாவும் தேடி அலைஞ்சு கேட்டு வாங்கி தான் செய்ய வேண்டியதா இருக்கு” என்று பெருமூச்சு விட்டவன், “எங்க டேலன்ட்ட மொத்தமா காட்டுற மாதிரி ஹை பட்ஜட்ல ஒரு புரோஜக்ட் பண்ணனும் ப்பா, எல்லாரையும் திரும்பி பார்க்க வைக்கனும். ஆஃபர்ஸ் தானா தேடி வந்து குவியனும், இதெல்லாம் எப்போ நடக்குமோ” பெரிய கனவுகளாக சொல்லி தலைக் கோதிக் கொண்டான்.

 

அவன் தோளை தட்டி தந்தவர், “சிம்பிளா நாம மாடி ஏறனும்னா கூட முதல் படியில இருந்து தான் ஏற முடியும், எடுத்ததுமே மேல் படியில் காலை தூக்கி வைக்க முடியாதுடா. இப்ப நீ உன்னோட கெரியர்ல முதல் படியில இருக்க, கண்டிப்பா உன்னோட உயரத்தை எட்டிபிடிப்ப, அப்பவரை டல்லடிக்காம முன்னேறுடா” என்று உத்வேகம் சொன்னார். 

 

அப்பாவை கட்டியணைத்துக் கொண்டவன், “தேங்க் யூ ப்பா, செஞ்சுடலாம் விடுங்க” என்றான் அவனும் நம்பிக்கையாய்.

 

“அப்புறம் நீ சொல்லு சசிதரா, எப்படி போகுது லைஃப், என்ன முடிவு செஞ்சிருக்க?” இளங்கோவன் தன்னை இயல்பாக காட்டி கேட்க, சசிதரன் தலை தன்னால் குனிந்தது.

 

இத்தனை நேரம் நிலவிய கலாட்டா பேச்சிற்கு மாறாக, அவர்களிடையே சங்கடமான மௌனம் நிலவியது. அந்த மௌனத்தை கலைத்து சசிதரன் தன்விளக்கம் தரலானான். 

 

“எங்களுக்குள்ள பிரச்சனைனு பெருசா எதுவும் இல்ல ப்பா, பேபி அபார்ஷன் ஆன ஆதங்கத்துல திவ்யாவ ரெண்டு வார்த்தை அதிகமா பேசிட்டேன் தான். அது கோவத்துல வேகத்துல பேசினது. தப்பு தான், அவகிட்ட மன்னிப்பும் கேட்டுட்டேன். ஆனாலும் அதையே பிடிச்சிட்டு தொங்கறா, நான் எவ்வளோ சொல்லியும் கேக்க மாட்டேங்கிறா ப்ச்” சசிதரன் பெருமூச்செறிய,

 

“அப்ப நீ இன்னும் திவ்யாவ சரியா புரிஞ்சிக்கலன்னு அர்த்தம் சசிதரா” என்று இலகுவாக சொன்ன அப்பாவை புரியாமல் பார்த்தான்.

 

“நான் அவளை உண்மையா தான் ப்பா லவ் பண்ணேன், இப்பவும் லவ் பண்றேன் தான். ஆனா அவதான்” 

சசிதரன் முகம் கவலையை பிரதிபலிக்க, அவன் தோளை தட்டி கொடுத்தவர் பொறுமையாக எடுத்துச் சொன்னார். 

 

“இந்த காலத்துல நீங்க காதலிக்கிறீங்க தான் இல்லனு சொல்லல, உருகி மருகி தான் லவ் பண்றீங்க, ஆனா உங்க அந்த காதல்ல ஆசை இருக்கற அளவுக்கு புரிதல் இருக்கறது இல்ல, எதிர்பார்ப்பு இருக்கற அளவுக்கு பக்குவம் இருக்கிறது இல்ல!

 

ஏதோ மனஸ்தாபத்துல உன்ன விட்டு விலகி போற அளவுக்கு முடிவெடுத்த திவ்யாவும் உன்ன புரிஞ்சுக்கிட்டதா தெரியல, அவளோட விலகலை வேடிக்கை பார்த்துட்டு நிக்கிற நீயும் அவளை புரிஞ்சிக்கிட்டதா தெரியல!

 

விட்டுக்கொடுக்காம ஒரு பந்தம் எப்படிடா நிலைச்சு இருக்கும்? உதாரணத்துக்கு என்னை எடுத்துக்க, வருசத்துல ரெண்டு மாசம் கூட உங்க அம்மா கூட நான் இருக்கிறதில்ல, இப்பனு இல்ல கல்யாணம் ஆன நாள்ல இருந்து இப்படித்தான். நான் வாணிக்கு என்னை புரிய வச்சேன், அவளையும் புரிஞ்சிக்க முயற்சி பண்ணேன். குறைஞ்ச நாளா இருந்தாலும் அந்த நாள்ல அவளுக்காக மட்டுமே நான் இருந்தேன். முழுசா அவளுக்கு என்னை கொடுத்தேன். அவளும் என்னை புரிஞ்சிட்டு, நான் கூட இல்லன்னாலும் உங்களை எல்லாம் பார்த்துக்கிறா, ஒருவேளை நாங்க ரெண்டு பேரும் விட்டுக்கொடுக்காம இருந்தா குடும்பம்ன்ற இந்த கட்டமைப்பு இப்ப இருக்குமா?” அவரின் அனுபவம் கற்று தந்த பாடத்தின் சில ஏடுகளை மகனுக்காக ஒப்புவித்தார் இளங்கோவன்.

 

“பெருசா லெச்சர் அடிக்கிறேன்னு நினைக்காத. இதுதான் நிதர்சனம். புரிஞ்சு புத்திசாலிதனமா உன் குடும்பத்தை காப்பாத்திக்க பாரு” 

மகனுக்கு நீண்ட விளக்கம் தந்து நிறுத்தினார்.

 

“நீங்க விட்டு கொடுத்து போக சொல்றீங்க ப்பா, ஆனா திவ்யா, நான் மொத்தமா அவ கால்ல விழனும்னு நினைக்கிறா, விழட்டுமா?” சசிதரன் ஆற்றாமல் கேட்டு விட, 

 

“கால்ல தான விழு, இதுல என்ன இருக்கு உன் பொண்டாட்டி தான” பதில் வசீகரனிடம் இருந்து வந்தது.

 

“டேய் நீ பேசாதடா, உனக்கெல்லாம் புரியாது” சசிதரன் தம்பியிடம் முகம் காட்ட,

 

“என்ன புரியல எனக்கு? திவ்யா இல்லனா செத்து போகனும் போல இருக்குனு‌ புலம்பினவன் தான நீ, இப்ப அப்படி இல்லையா, அவ்வளோ தானா?” வசீகரன் விடாமல் கேட்டான்.

 

“வசீ, எனஃப், இதையே சொல்லி சொல்லி காட்டுவியா, கொஞ்சமாவது புரிஞ்சுக்கோ, எங்களுக்குன்னு பர்சனல் ஸ்பேஸ் இருக்கு, அதுல நீ மூக்க நுழைக்கிறது அநாகரிகம்” முன்பு மனைவி சொன்னதை இப்போது வழிமொழிந்தான் சசிதரன்.

 

“ஆஹான் அப்ப டைவர்ஸ் பண்றது அதிநாகரிகமோ?” எதற்கும் வசீகரன் அலட்டிக் கொள்வதாக இல்லை.

 

“ப்பா அவனை முதல்ல வாய் மூட சொல்லுங்க, அன்னிக்கு மால்ல ரொம்ப பேசி திவ்யாவ டென்ஷன் படுத்திட்டேன். என்னாலயும் எதுவும் சொல்ல முடியல, எங்க விசயத்துல இனி அவனை தலையிட வேணாம்னு சொல்லிடுங்க” சசிதரன் கோபமாக சொல்ல, “சரி நான் இனி உங்க பேச்சுக்கே வரல, எப்படியாவது போங்க” வசீகரனும் முகம் திருப்பிக் கொண்டான்.

 

“கொஞ்சம் கூட இவனுக்கு பொறுமையே இல்ல ப்பா, மால்ல வச்சு அப்படி எகிருறான். திவ்யா பாவம் இவன் கிட்ட கத்திட்டா வேற, அங்க என் தம்பியை விட்டு கொடுக்கவும் என்னால முடியல, பல்ல கடிச்சிட்டு அமைதியா நின்னேன். இதுல ரம்யாவ வேற‌ குறுக்கல இழுத்து ப்ச்” சசிதரன் அன்றைய நிகழ்வில் நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

 

“என்ன வசி இது?” இளங்கோ மகனை கேட்க,

 

“சாரி ப்பா, டைவர்ஸ் வரைக்கும் இவங்க போனதும் என்னால கன்ரோல் பண்ண முடியல அதான் பேசிட்டேன். அப்படியாவது இவங்க சேர்ந்தா போதும்னு நினைச்சேன்” வசீகரன் பதில் எரிச்சலாக வந்தது.

 

“எங்க கிட்ட கூட சொல்லாம டைவர்ஸ் வரைக்கும் போவீங்களா சசிதரா? இதென்ன சின்ன குழந்தைங்க விளையாட்டா?” இளங்கோவன் கோபமாக கண்டிக்கவும், 

 

“சாரி ப்பா, திவ்யா சும்மா சும்மா பிரிஞ்சிடலாம்னு சொல்லிட்டே இருந்தா, அதான் நானும் ஒரு கோவத்துல டைவர்ஸ் பண்ணிடலாம்னு சொல்லிட்டேன்” சசிதரன் விளக்கம் சொன்னான்.

 

‘ஒரு காதல் ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு எத்தனை விளக்கம் சொல்ல வேண்டியதா இருக்கு’ என்ற சலிப்பு அவனிடம். அதோடு இதற்கெல்லாம் திவ்யாவின் பிடிவாதம் தான் காரணம் என்ற கோபமும் வந்தது.

 

“ப்பா இவங்க டைவர்ஸ் அப்ளே பண்ற வரைக்கும் போயிருக்காங்க, வக்கீல் அங்கிள் போன்ல சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கும் தெரியுது” வசீகரன் செவ்வனே அண்ணனை போட்டுக் கொடுக்க, இளங்கோ பெரியவனை ஆழமாக பார்த்தார்.

 

“ப்ச் ப்பா. அது, லாஸ்ட் வீக் மறுபடியும் எங்களுக்குள்ள முட்டிக்கிச்சு அதான் வக்கீல் அங்கிள் கிட்ட பேசிட்டேன், ஒரு வேகத்துல தான். சும்மா பேசினேனே தவிர அப்ளே எதுவும் பண்ணல” அவனுடைய விளக்கம் அவனுக்கே அசட்டுதனமாக தான் தோன்றியது.

 

“டேய் அண்ணா, நீயென்ன லூசா?” வசீகரன் கடுப்பாக கேட்டு விட,

 

“அட போடா, நீ கல்யாணம் பண்ணி பொண்டாட்டி கூட அல்லாடும்போது அப்ப என் நிலைம புரியும் உனக்கு” சசிதரன் தம்பிக்கு அவசர சாபம் ஒன்றை விடுக்க, 

 

“போடாங்க நீயும் உன் சாபமும், உன்ன மாதிரி ஆழம் தெரியாம ரிலேஷன்ஷிப்ல விழ நான் என்ன மடையனா” வசீகரன் காலரை தூக்கி விட்டு கொண்டான்.

 

மகன்கள் பேச்சு காதில் விழுந்தாலும் இளங்கோவன் வேறு யோசனையில் இருந்தார். ஒரு தந்தையாக சசிதரனின் மண வாழ்வில் ஏற்பட்ட சிக்கலை தீர்க்க வேண்டிய கடமை அவருக்கிருந்தது. அதற்காக, தான் செய்ய வேண்டிவை பற்றிய திட்டமிடுதலில் இருந்தார் அவர்.

 

“உன்னால திவ்யா என்னை வறுத்தெடுக்குறாடா, எங்க பிரச்சனையில ரமிய ஏன்டா இழுக்குற, திவ்யா வேணானு சொல்லியும் ரமிகிட்ட பேசி இருக்க வேற?” சசிதரன் தலையில் அடித்து கொள்ள,

 

“அண்ணி பேச வேணாம்னு சொன்னதுக்கு அப்புறம் தான் அவங்க தொங்கச்சி கிட்ட பேசினதே, நான் என்ன அவ்வளோ மோசமானவனா? அவங்க தங்கச்சி கிட்ட பேச வேணாம்னு சொல்ற அளவுக்கு, என்மேல நம்பிக்கை இருக்கலையா” வசீகரனுக்கு உண்மையிலேயே ஆதங்கம் பொங்கியது. 

 

‘ஒரு கண்ணியமான ஆண்மகன் என்னை! அவர்கள் சந்தேகப்படலாமா? தகுமா?’ என்ற ஆத்திரம் அவனுக்கு.

 

“அச்சோ வசீ, உன் மேல நம்பிக்கை இல்லாமல்லாம் சொல்லலடா, ரம்யா நார்மலான பொண்ணில்ல அதான்” சசிதரன் மறுத்து சொல்ல, 

 

“அவளுக்கு என்ன நல்லாதான இருக்கா, பப்ளி பேபி கணக்கா” வசி நெற்றி சுருக்கினான்.

 

“அது, ரமி வந்து டயாபடீஸ் பேஷன்ட். ஏதோ டைப் ஒன் அப்படின்னு திவ்யா சொன்னா, சின்ன வயசுல இருந்தே டிரீட்மென்ட் எடுத்துட்டு வராங்க போல. தினமும் இன்சுலின் எடுத்துக்காம இருக்க முடியாதாம். சோ, ரமிய அவங்க வீட்டுல யாரும் தனியா விட மாட்டாங்க. கொஞ்சம் கேர் எடுத்து தான் பார்த்துபாங்க. அதான் நீ அவளை டென்ஷன் பண்ண வேண்டாம்னு திவ்யா பேசாதனு சொல்லி இருப்பா” சசிதரன் மனைவிக்காக விளக்கம் தர, வசீகரனும் அவன் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு, புரிந்தது என தலையசைத்தான்.

 

“ரம்யாவுக்கு ஓவர் டென்ஷன் ஆனா, இல்ல பிளட்ல சுகர் லெவல் இன்பேலன்ஸ் ஆன கஷ்டம். மயக்கமாயிட்டு விழுந்துவானு திவ்யா சொல்லி இருக்கா. பிக்ஸ் வர கூட சான்ஸஸ் அதிகம்னு சொன்னா, அதனாலேயே ரம்யா மேல திவ்யாவுக்கு தனி பாசம், நீயும் எங்க மேல இருக்க டென்ஷனை அந்த புள்ள மேல ஏத்தி விடாத புரிஞ்சுதா?” சசிதரன் எச்சரிக்க,

 

“இதை முதல்லயே சொல்லி இருக்கனும், சும்மா பேசாத பேசாதனு மட்டும் சொன்னா கோபம் வருமா இல்லயா, ஓகே இனி ரம்யாவ நான் டிஸ்டர்ப் பண்ணல போதுமா விடு” வசீகரன் உறுதி அளித்தான்.

***

 

 யாரை இனி எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்று வசீகரன் உறுதி ஏற்றுக் கொண்டானோ, அவளை தோந்தரவு செய்வதையே தன் முக்கிய வேலையாக வைத்திருந்தான் அவன், அமுதன்.

 

வழக்கம்போல மாலை, கல்லூரி வாசலில், தன் முன்னால் அமுதன் நீட்டிய காகிதத்தை வாங்காமல் அவனை சலிப்பாக பார்த்து முகம் திருப்பி கொண்டாள் ரம்யா.

 

“என்னது இது?” கேள்வி பவித்ராவிடம் இருந்து வந்தது

 

“லவ் லெட்டர்ங்க, உங்க ஃப்ரண்ட்க்கு மட்டும்” தன் அக்மார்க் சிரிப்பை சிதற விட,

 

“அட அப்ரசின்டிகளா, இன்னுமா இந்த லவ் லெட்டர தூக்கிட்டு சுத்தறீங்க, நீயெல்லாம் அப்டேட் ஆகவே மாட்டியா” தவமணி கிண்டலாக கேட்க,

 

“ஏங்க இது சென்டிமென்ட்ங்க, லவ்லெட்டர் எழுதாத லவ் எப்பவுமே அரைகுறை தானுங்களே” அமுதன் அழகாகவே வழிந்து வைத்தான்.

 

“அய்யோ இப்படி வழியுறானே! ரமி அந்த லவ் லெட்டர வாங்கி தான் பாரேன்டீ” பவித்ரா காதில் கிசுகிசுக்க, ரம்யா மறுப்பாய் வேகமாக தலையாட்ட,

 

‘இது வேலைக்காகாது’ என்று தவமணி அவன் கடிதத்தை பிடுங்கி பிரித்து பார்த்தவள் கண்கள் விரிந்தன.

 

“ஏய் ப்ளட்ல லெட்டர் எழுதி இருக்கான் பா” தவமணியின் ஆச்சர்ய குரலில் மற்ற இரு பெண்களின் பார்வையும் அந்த கடிதத்தை எட்டி பார்த்தன.

 

‘ஐ லவ் யூ டன்டனக்கா’ என்று இரத்தத்தால் எழுதி கீழே, ‘ஏ’, ‘ஆர்’ என்ற ஆங்கில எழுத்துக்கள் நடுவே இதயம் வரையப்பட்டிருந்தது.

 

“அதென்ன ஏ, ஆர்?” பவித்ரா விவரம் கேட்க, “அது அமுதன் லவ்ஸ் ரம்யாங்க” அவன் வெட்கமாய் சொல்லவும் ரம்யாவிற்கு சுறுசுறுவென்று ஏறியது.

 

அந்த கடிதத்தை பிடுங்கியவள் நாசியில் வைத்து முகர்ந்து பார்க்க, அமுதன் முகம் சுருங்கி போனது.

 

“என்னை சந்தேகபடாத ரம்யா, அது என்னோட ஓன் ப்ளட். ஓ பாஸிட்டிவ் வேற. ரேர் குரூப் தெரியுமா?” அவன் சொல்ல, இவள் கண்கள் கனன்றன.

 

“டேய், கோழி ப்ளட்ல எழுதிட்டு, ஓ குரூப்னு வேற புழுகுறீயா” ரம்யா குரல் உயர்த்த, அமுதன் திருதிருத்தான்.

 

“அட நன்னாரி பயலே” என்று அவனை கேவலமாக பார்த்த தவமணி, பவித்ரா இருவரும், “அதெப்படி ரமி ஸ்மெல் பார்த்தே கோழி ப்ளட்னு கண்டுபிடிச்ச?” இவளிடம் வாய்பிளந்தனர். 

 

“நானெல்லாம் யாரு? அதெல்லாம் அசால்டா கண்டுபிடிப்போம் இல்ல” ரம்யா கெத்தாய் தோள் குலுக்கி சொல்லவும்,

 

அமுதன் பதறி, “நோ ரம்யா, இதோ என் விரல் ரத்தத்துல தான் எழுதினேன், என்னை சந்தேகபடாத பிளீஸ்” தன் விரல் கட்டை காட்டி பாவமாக சொல்ல, ரம்யா அவன் விரல் கட்டை பிடித்து இழுத்திருந்தாள். அது அவள் கையோடு வந்திருந்தது. அவன் விரல் எந்த சின்ன காயமும் இன்றி இருக்க, அவன் இதை எதிர்பாராது கையை மறைத்துக் கொண்டான்.

 

“டேய் கொல்மாலு கோவாலு, ஒழுங்கா உன் கைய காட்டிடு” தவமணி காண்டாகி எச்சரிக்கவும்,

 

“அட பிஸ்கோத்து, உனக்காக போய் ரமிக்கிட்ட பேசினேன் பாரு, மரியாதையா ஓடி போயிடு இல்ல” பவித்ராவும் கோபத்தில் உறுமினாள்.

 

அப்போதும் நகராமல் வழிச்சலோடு சிரித்து வைத்தவன், “சும்மா விளையாட்டுக்கு தான் செஞ்சேன். வேற எதுவும் இல்ல, ஏன்ங்க ரத்தத்துல எழுதினா தான் லவ் பண்றதா அர்த்தமா, நீ சொல்லு ரம்யா” என்று கெஞ்சல் பார்வை தந்தான்.

 

“டேய் கோழி பயலே, உன்ன எண்ணெயில போட்டு பொறிச்சு எடுக்கறத்துக்குள்ள தப்பிச்சு போயிடு. இல்ல” ரம்யா பற்களை நறநறத்தாள்.

 

“நோ வைலன்ஸ் பேபி ஜஸ்ட் கூல், நான் உன்கூட விளையாடாம வேற யார் கூட விளையாடுவேன் சொல்லு” அமுதன் அசராமல் வாயளக்க, மூன்று பெண்களும் ஒன்றாக கொதிநிலைக்கு சென்றிருந்தனர். அவனை எரிப்பது போல முறைத்து வைத்தனர்.

 

“அய்யோ அது கோழி பிளட் இல்லங்க, இப்பவும் உன் கெஸ்ஸிங் தப்புதான் டன்டனக்கா, அது கோழி பிளட் இல்ல, ஆட்டோட பிளட்!” அமுதன் மேலும் அப்பாவியாக முகத்தை வைத்து சொல்ல, 

 

“ஏய், நீ கிளம்பு, உன் சின்னதனமான விளையாட்டுக்கெல்லாம் ரம்யா ஆளில்ல, மறுபடியும் அவளை டிஸ்டர்ப் பண்ண, போலிஸ்ல சொல்லிடுவோம் ஜாக்கிரதை” பவித்ரா அவனை அடிக்குரலில் மிரட்டினாள்.

 

ரம்யா தலையை பிடித்து கொண்டு, தவமணியின் தோளில் சாய்ந்து கொள்ள, அவள் நிலை உணர்ந்த தோழியர் இருவரும் பதறினர்.

 

“பவி ஆட்டோ பிடி சீக்கிரம்” என்ற தவமணி, “ரமி ஆர் யூ ஓகே டா” அவளை தாங்கிக் கொண்டாள்.

 

“அச்சோ ரம்யா பேபி என்னாச்சு?” அமுதன் அவளை நெருங்கி கேட்க, அவனை தள்ளி விட்ட தவமணி, “எல்லாம் உன்னால தான்.‌ போய் தொலைடா” என்று பவித்ரா அழைத்து வந்த ஆட்டோவில் ரம்யாவை ஏற்றிவிட்டு தானும் ஏறி கொண்டாள்.

 

“ரமி, என்னடி பண்ணுது உனக்கு” பவித்ரா பதற்றமாக கேட்க, சற்றே தலை நிமிர்த்திய ரம்யா, ஒற்றை கண் சிமிட்டி விட்டு நேராக அமர்ந்து கொள்ள, “பிசாசு நடிப்புனு சொல்லி இருக்கலாம் இல்ல, பயந்துட்டோம்” பவித்ராவும் தவமணியும் அவளை இரு பக்கமும் பிடித்து உலுக்க, “ஹே அவன் அறுவையில இருந்து எஸ்ஸாக தான் சும்மா பிட்ட போட்டேன்” ரம்யாவின் விளக்கம் செல்லுபடி ஆகாமல் ஓடும் ஆட்டோ ரணகலமானது.

 

ஆட்டோ ஓட்டி வந்த பெண் ஓட்டுனரும் அவர்கள் கலாட்டாவில் சிரித்தப்படியே வண்டியை செலுத்தினார்.

 

***

 

காதல் கூத்து கட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!