காதலில் கூத்து கட்டு epilogue 35(2)

IMG-20210202-WA0002-62d3dea7

நான்கு வருடங்களுக்கு பிறகு,

 

அந்த மருத்துவ அறையில் பத்து முதல் இருபது வயதிற்கு உட்பட்ட சில குழந்தைகள் அமர்ந்து இருந்தனர். அவர்கள் அனைவருமே முதல் வகை சக்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்.

 

சற்று குள்ளமாய், சற்று பூசிய உடலமைப்போடு, சுருள் முடியும், குழந்தை முகத்துடன் அவர்கள் முன்பு வந்து நின்றாள் அவள். நேர்த்தியாக அவள் அணிந்திருந்த சுடிதார் அவளின் உயரத்தை சற்று உயர்த்தி காட்டியது.

 

“ஹாய் எவ்ரி ஒன், ஐ’ம் ரம்யா வசீகரன், சைக்கோலாஜிஸ்ட்” இழையோடிய விரிந்த புன்னகையுடன் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

 

அந்த குழந்தைகளிடம் எந்த பிரதிபலிப்பும் இருக்கவில்லை. வாழ்வின் விளிம்பில் இருப்பவர்களை போல அவர்கள் நம்பிக்கை இழந்து காணப்பட்டனர்.

 

அடுத்து ரம்யா, “நானும் உங்களை போல தான் டைப் ஒன் டையபடீஸ் பேஷன்ட்…” என்றதும் அங்கிருந்த வாடி தோய்ந்த முகங்களில் ஒரு திகைப்பின் சாயல்.

 

ரம்யா தொடர்ந்தாள். “நான் ஏழாவது படிக்கும் போது தான் எனக்கு இன்சுலீன் குறைபாடு ஏற்பட்டது தெரிஞ்சது, அப்புறம் உங்க எல்லாரையும் போல தான், ஹாஸ்பிடல், இன்ஜக்ஷன், டேப்ளட்ஸ், டீரீட்மென்ட்னு ரொம்ப நொந்து போயிட்டேன்… ஆனா அப்புறம் கொஞ்ச கொஞ்சமா என் வாழ்க்கை முறையை, உணவு முறையை மாத்திக்கிட்டேன். டாக்டர் சொல்ற மாதிரி தினமும் தவறாம இன்சுலின் எடுத்துக்கிட்டேன். இப்பவும் எடுத்துட்டு தான் இருக்கேன்” என்று நிறுத்தினாள்.

 

அவர்கள் தான் சொல்வதை ஆர்வமாக‌ கேட்பது  அவளுக்கு தெரிந்தது.

 

“என்னோட அப்பா, அம்மா எனக்கு எல்லாவிதத்திலும் சப்போட்டா இருந்தாங்க. உங்களோட பேரன்ட்ஸ் உங்களை எப்படி அன்பா, பரிவா‌ பார்த்துக்கிறாங்களோ அப்படி தான் என் பேரன்ட்ஸும் என்னை கவனிச்சுக்கிட்டாங்க. டாக்டர்ஸ் சொல்ற இன்ஸ்டிரக்ஷன் எல்லாம் ஃபாலோ பண்ண கத்து தந்தாங்க. நானும் சமத்து பொண்ணா அதெல்லாம் ஃபாலோ பண்ணேன். இப்பவும் ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்கேன்”

 

அந்த குழந்தைகள் பார்வையில் ஒருவித நம்பிக்கை துளிர்த்தது.

 

“சாதாரண மனிஷங்களை விட ஒரு சின்ன விசயம் நமக்கு குறைவா இருக்கு. இயற்கையா சுரக்க வேண்டிய இன்சுலின் நமக்கு தட்டுபாடு ஆகியிருக்கு. மருத்துவ வளர்ச்சியால இன்சுலினை நாம செயற்கையா எடுத்துட்டு இருக்கோம். அவ்வளவு தான் வித்தியாசம். இதனால நம்ம நார்மல் லைஃப்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

 

உதாரணமா உங்க முன்னாடி இதோ நானே இருக்கேன். நான் தினமும் இன்சுலின் எடுத்துட்டு தான் வரேன். ஸ்கூல், காலேஜ் எல்லாம் படிச்சு முடிச்சு எனக்கு பிடிச்ச துறையை தேர்ந்தெடுத்து பயிற்சி செஞ்சு ஒரு சைக்கோலாஜிஸ்ட்டா உங்க முன்னாடி நின்னுட்டு இருக்கேன். என்னை அன்பா நேசிக்கிற கணவர், விடாம வாலுத்தனம் செய்யற மகன்னு நிறைவான குடும்ப வாழ்க்கையும் வாழ்ந்திட்டு இருக்கேன்”

 

அனைவரின் கண்களிலும் வெளிச்சம் பரவின.

 

“என்னால என்னோட வாழ்க்கையை வாழ முடியும் போது உங்களால உங்க வாழ்க்கையை வாழ முடியாதா என்ன? நிச்சயமா முடியும். அதுக்கு கொஞ்சம் முயற்சியும் வாழ்ந்து பார்க்கனும்கிற திடமான எண்ணமும் நிறைய நிறைய நேர்மறை நம்பிக்கைகள் மட்டும் இருந்தா போதும்… இங்க சாதாரண மக்களைவிட அற்புதமான வாழ்க்கை உங்க ஒவ்வொருத்தருக்கும் கிடைக்கும். ஏன் அப்படி சொல்றேன்னா, சுலபமா கிடைக்கிற எதுவும் அத்தனை இனிமையையும் சுவாரஸ்யத்தையும் தருவதில்ல. நாம ஒவ்வொரு நாளும் போராடி வாழுறோம். நமக்கான சந்தோஷங்களும் வெற்றிகளும் ரெண்டு மடங்கு சுவாரஸ்யத்தை கொடுக்கும்” என்று குரலில் ஏற்ற இறக்கங்களோடு சினேக பாவத்தில் பேசி நிறுத்தியவள், 

 

“இப்ப சொல்லுங்க நீங்க உங்க நம்பிக்கையை விடலாமா?” என்று கேட்க,

 

“விட மாட்டோம்”

 

“நீங்களும் உங்க வாழ்க்கைய வாழ்ந்து காட்டுவீங்களா?”

 

“நிச்சயமா வாழ்ந்து காட்டுவோம்” அங்கே உற்சாக குரல்கள் எழுந்தன. ரம்யா நிறைவோடு அவர்களிடம் விடைப்பெற்று வந்தாள்.

 

அவளிடம் வந்த மருத்துவர், “குட் ஜாப் ரம்யா, உங்க ஒரே ஸ்பீச்ல பேஷன்ட்ஸ் இவ்வளவு உற்சாகமாவாங்கன்னு நாங்க எதிர்பார்க்கல” அவளை பாராட்டினார்.

 

“தேங்க்ஸ் சார், குழந்தைங்களுக்கு வாழ முடியும்ன்ற நம்பிக்கையை கொடுத்தா போதும் சார், அவங்க முயற்சி செஞ்சு மீண்டு வந்திடுவாங்க, நானும் வாழ்ந்து காட்டனும்ற உத்வேகத்தில தான் உங்க முன்னாடி நின்னுட்டு இருக்கேன்” என்று சொல்லி அவரிடம் விடைப்பெற்று வெளியே வந்தாள்.

 

வாயிலின் அருகே பைக்குடன் வசீகரன் அவளுக்காக காத்து நின்றிருந்தான். மொபைலை நோண்டி கொண்டிருந்தவன் அவளின் அருகாமை உணர்ந்து நிமிர்ந்து புன்னகைத்தான்.

 

அவனை வித்தியாசமாக பார்த்து, “என்ன மாமு பைக் எடுத்துட்டு வந்து இருக்க கார் எங்க?” என்றாள்.

 

“ஏன் மேடம் பைக்ல வர மாட்டீங்களோ?” என்று கிண்டலாக கேட்டவன், அவள் முறைக்கவும், “ஸ்மிருதிய ட்ராப் பண்ண கார் அனுப்பி இருக்கேன், சோ பைக்ல வந்தேன்” என்று வண்டியை உயிர்ப்பித்து சாலையில் வேகமெடுத்தான்.

 

முன்பு ஸ்மிருதியை அவனின் ட்ரீம் கேர்ள்ளாக நினைத்து தன்னை குழப்பிக் கொண்ட பைத்தியகாரத்தனத்தை எண்ணி நெற்றியில் தட்டிக் கொண்டாள் ரம்யா.

 

“அதுக்குள்ள ஷூட்டிங் முடிஞ்சதா மாமு?” ரம்யா கேட்க, “சீக்கிரம் முடிஞ்சிடுச்சு அதான் உனக்காக நானே வந்தேன்” என்றவன் வேக காற்றில் அலையாடிய தன் நீள கேசத்தை இடது கையால் கோதிவிட்ட தோரணையிலே அவளை வசீகரித்தான்.

 

“நான் உன்ன சைட் அடிக்கிறேன் மாமு, சும்மா சொல்ல கூடாது செமயா இருக்கடா”

 

“ஆஹான்”

 

“நீ என்னை எப்பவாவது இப்படி சைட் அடிச்சு இருக்கியா?”

 

“சைட்டா? உன்னயா? ப்ச் ப்ச் சான்சே இல்ல” என்றவனுக்கு முதுகிலேயே ஒரு குத்து விழுந்தது. 

 

“ஏய், வலிக்குது டீ பிசாசு” என்று நெளிந்தபடி பைக்கை நிறுத்தினான் வசீகரன். ரம்யா அவன் முன்னால் புசுபுசுவென்று முகம் சிவக்க நின்றிருந்தாள்.

 

“இனிமே ஒழுங்கா ஹெல்மேட் போட்டு பைக் ஓட்டுற, இல்லனா உன் மண்டய உடச்சுடுவேன்” அவள் ஆவேசமாக சொல்லிவிட்டு முன்னால் வேகமாக நடந்தாள்.

 

 சசிதரன், திவ்யா இருக்கும் கட்டிடத்தின் லைனிலேயே தங்களுக்கான ஒரு ஃபிளாட்டை வாங்கி இருந்தனர் வசீகரனும் ரம்யாவும். தள்ளி தான் இருந்தனர், குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கவில்லை.

 

தொடர்ந்த வொர்க் ஃப்ரம் ஹோம் வேலைகள் சசி, திவிக்கு அடுத்தடுத்த இரு பெண் குழந்தைகளுக்கு வரவாக தந்திருந்திருக்க, செழியனுடன் சேர்ந்து எப்போதும் அவர்கள் வீட்டில் ஆர்பாட்டம் தான்.

 

வீட்டின் முன் வரும்போதே கூச்சல் சத்தம் வசீ, ரமிக்கு நன்றாகவே கேட்டது. சசிதரன் கதவை திறந்து அவர்களை வரவேற்க, “ரமிம்மா, வசீப்பா” என்று இரண்டு பெண் பிள்ளைகளும் அவர்கள் முன் வந்தனர்.

 

“இன்னைக்கு என்ன பஞ்சாயத்து வாண்டுங்களா?” வசீகரன் சிரிப்போடவே கேட்டபடி அமர்ந்து கொள்ள,

 

“செழி எங்க முடிய பிடிச்சு இழுத்துட்டான்” பிரீதி, கீர்த்தி ஒன்றாக புகார் வாசித்தனர்.

 

“ப்பா, முதல்ல அவங்க ரெண்டு பேரு தான் என் முடிய பிடிச்சு இழுத்தாங்க” என்று கோபமாக வந்து சொன்னான் செழியன்.

 

நான்கு வயது செழியன், மூன்று வயது பிரீதி, இரண்டு வயது கீர்த்தி மூவரும் தலை கலைந்து உடை கசங்கி சண்டையிட்டு மூச்சு வாங்க அவன்முன் நின்றிருந்தனர்.

 

“வசீப்பா, செழிய லாங்க் ஹேர் வச்சிக்க வேணாம்னு சொல்லு, கேர்ள்ஸ்‌தான லாங்க் ஹேர் வச்சுப்பாங்க. செழி பாய் தான” பிரீதி அழுத்தமான மழலை மாறா குரலில் குறைபடவும்,

 

“எங்கப்பா மாதிரி நான் லாங் ஹேர் வச்சிருக்கேன். உனக்கென்ன” என்றான் செழியன்.

 

பிரீதி, கீர்த்தி முகங்கள் சுருங்கி விட, “அவனுக்கும் உனக்கும் லாங்ஹேர் வேணாம் வசீப்பா நல்லாவே இல்ல” பிரீதி சொல்லவும், இரு குழந்தைகளையும் அள்ளி மடியில் அமர்த்தி கொண்டவன், “என் பட்டு குட்டிங்க சொல்லி நான் கேக்காம இருப்பேனா, நாளைக்கே நானும் செழியும் ஹேர் கட் பண்ணிட்டு வந்துவோம் ஓகாவா” என்றதும் குழந்தைகள் உற்சாகமாகினர்.

 

“ப்பா” செழி சத்தமிட,

 

“செழி, நீ பிக் பாய் ஆகிட்ட இல்ல, தங்கச்சிங்கள நீதான அடம்பிடிக்காம பார்த்துக்கனும்” வசீகரன் மகனிடம் சொல்ல, “ஆமா, நான் பிக் பாய் தான்” என்றான் அவனும் மிடுக்காக.

 

“கொழுப்ப பார்த்தியா ரமி, நானும் சசியும் பாட்டியும் மாத்தி‌ மாத்தி இவ்வளோ நேரம் சமாதானம் சொல்றோம் மூனுத்துல ஒன்னு கூட கேக்கல, வசீ சொன்னதும் மண்டய மண்டய ஆட்டுதுங்க பாரு” திவ்யா அலுத்து போய் சொல்ல,

 

“திவிக்கா, குரங்கெல்லாம் குரங்காட்டி கொம்புக்கு தான் ஆடும்னு சும்மாவா சொன்னாங்க” ரம்யா வேண்டுமென்றே நக்கல் குரலில் சொன்னாள்.

 

அதைகேட்ட வசீகரன், “நிஜந்தான் அண்ணி, நான் பழக்கி வச்ச முதல் குரங்கு உங்க தொங்கச்சி தான், அதையும் சொல்ல சொல்லுங்க அண்ணி” என்றதும் திவ்யா சிரித்துவிட, ரம்யா முகம் கொதிகொதித்தது.

 

“டேய், குழந்தைங்களை விட நீங்க தான்டா அதிகம் முட்டிக்கிறீங்க” என்று சிரித்தபடி அலுத்துக் கொண்ட சசிதரன் குரல் தாழ்த்தி, “என்ன முட்டிக்கிட்டாலும் ஒருநாள்ல சமாதானம் ஆகிறீங்களேடா, அந்த வித்தைய மட்டும் சொல்லி கொடுடா எனக்கு. நான் பாவம் இல்ல” தம்பியிடம் கெஞ்சினான்.

 

“அதெல்லாம் மேஜிக் ண்ணா, உனக்கு சொன்னாலும் புரியாது” வசீகரன் நமட்டு சிரிப்போடு அண்ணனின் காதில் கிசுகிசுக்க, “அட போடா” என்றான் சசிதரன்.

 

இரவு, வசீகரன் அறைக்குள் நுழையும் போது, ரம்யா மீது கை, காலை போட்டபடி அவளோடு ஒட்டிக்கொண்டு படுத்து உறங்கி இருந்தான் செழியன்.

 

“இந்த பழக்கம் வேணாம்னு எத்தனை முறை சொல்றது இவங்ககிட்ட” என்று முணுமுணுத்து வசீகரன் இருவரையும் விலக்கி விட, செழியன் அரை தூக்கத்தில் சிணுங்கினான்.

 

“தள்ளி நேரா படு செழி” எனவும், “நீ போய் தள்ளி படு ப்பா, எங்களை டிஸ்டர்ப் பண்ணாத போ” என்று சின்னவன் அவன் அம்மாவை ஒட்டிக்கொண்டு உறங்க, வசீகரன் தன் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

 

அவன் நொந்துபோய் மனைவியின் முகம்‌‌ பார்க்க, அவள் கண்கள் இறுக மூடி இதழ் மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டிருப்பது தெரிய, இவனிதழிலும் குறும்பு நகை விரிந்தது.

 

“புஷி” என்று ரகசியமாய் அவளை அழைக்க,

 

“புஷி தூங்கிட்டா” என்றாள் ரமி கண்கள் திறக்காமல்.

 

“கொழுப்புடி உனக்கு” என்றவன், “உனக்காக ஒன்னு வச்சிருக்கேன் வேணாமா?” என்று ஆசைகாட்டினான்.

 

ரமி ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்க்க, “ம்மா, அவரு ஒத்த லாலிபாப் வாங்கி வந்து சீன் போடுறாரு. என் ஸ்கூல் பேக்ல அஞ்சு லாலிபாப் இருக்கு அப்புறம் உனக்கு தரேன்” என்றான் செழியன் குறுக்கே புகுந்து.

 

“டேய், நீ இன்னும் தூங்கலையா டா” வசீகரன் கடுப்பாகி கேட்க, “தூங்கிட்டு இருந்தவனை நீதான ப்பா எழுப்பி விட்ட” செழியும் அப்படியே படபடத்தான். இப்போது அடக்கமாட்டாமல் ரம்யா வாய்விட்டே சிரித்து விட்டாள்.

 

அமைதியாக கழிந்த சில கணங்கள் கழித்து, “தூங்கிட்டியாடி” வசீகரனின் பொறுமை இழந்த குரலில் அவனிடம் திரும்பியவள், “ஏன் மாமு, செழி முன்னாடி மானத்த வாங்கறீங்க, நீங்க பண்ற கூத்த யார் கிட்டயாவது சொல்லி வைக்க போறான்” ரம்யா எழுந்தமர்ந்து நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

 

“கூத்து நான் பண்றேனா இல்ல, நீயும் உன் புள்ளயும் பண்றீங்களா, செழி கூட சேர்ந்து இப்பெல்லாம் நீ ரொம்ப கெட்டு‌ போயிட்டடி” என்றவன் அவளிடம் கை நீட்டினான். அவன் உள்ளங்கையில் ஒற்றை லாலிபாப் இருந்தது.

 

அதை கண்கள் மிக்க, முகம் ஜொலிக்க வாங்கி கொண்டவள், “செழி உங்களை பத்தி சரியா தான் சொல்லி‌ இருக்கான்” என்றாள் சிரித்தபடி.

 

இரவு நிலவை மேகம் மறைக்க, சில்லென்ற காற்று வீச, ஊசி தூறலை சிந்தி சில்லிட்ட வானிலையை பால்கனியில் ரசித்தபடி, வசீயின் தோளில் சாய்ந்தபடி லாலிபாப்பை சுவைத்துக் கொண்டிருந்தாள் ரமி.

 

“கிளைமேட் செமயா இருக்கு மாமு”

 

“ம்ம்” என்று தலையசைத்தவன், “உன்ன எப்ப சைட் அடிப்பேன்னு கேட்டல்ல புஷி” அவன் கேட்க, ரமி நிமிர்ந்து ஆர்வமாக அவன் முகம் பார்த்தாள்.

 

அவள் முகத்தையே அசையாமல் பார்த்தவன் அவள் வாயில் அதக்கி இருந்த லாலிபாப்பை உருவி, “நீ இப்படி லாலிபாப் சாப்பிடும்போது, உன்ன அப்படியே சாப்பிடனும் போல இருக்கும் எனக்கு” என்றவன் அவள் உதட்டில் ஒட்டியிருந்த தித்திப்பை தன் உதட்டோடு ஒட்டிக்கொண்டு குறும்போடு கண் சிமிட்ட, அவள் வெட்கத்தோடு அவன் மார்போடு முகம் புதைத்துக் கொண்டாள்.

 

“என்னடி அதிசமா வெட்கமெல்லாம் படுற” அவன் கேலி செய்ய, “நீதான் மாமு என்னை என்னென்னவோ செய்ய வைக்கிற” என்றவள் அவன் நெஞ்சோடு இன்னும் ஒட்டிக் கொண்டாள். 

 

வெளியே தூறல் பெரிதாகி சடசடவென மழை கொட்ட தொடங்கியது.

 

“மாமு, பாட்டி கேட்டுட்டே இருக்காங்க, நாம இன்னொரு குழந்தை பெத்துக்கலாமா?” ரமி திணறலுடன் கேட்டதும் வசீ உடனே மறுப்பாக தலையசைத்தான்.

 

“நீ மறுபடியும் வாழ்வா சாவானு அவஸ்தைப்படறதை என்னால பார்க்க முடியாது புஷி” வசீகரனின் உறுதியான குரல் அவளுக்கு ஏதோ போலானது.

 

“முன்னவிட இப்ப நான் ஹெல்தியா இருக்கேன் மாமு” ரமி மிடுக்காக சொல்லவும், அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன், “நமக்கு செழி மட்டும் போதும்னு தான் நான் அப்பவே ஆப்ரேஷன் பண்ணிக்கிட்டேன், உன்கிட்ட சொன்னா வருத்தபடுவன்னு தான் சொல்லல, சாரிடி” என்றவனை அவள் அதிர்ந்து பார்த்தாள்.

 

“எனக்கு தெரியாம எப்ப மாமு?” அவள் முகம் வெளிரி கேட்க, “நீ உங்கம்மா வீட்ல இருந்தப்ப” என்றவன், “செழி பொறந்தப்போ உனக்கு ஏதாவது ஆகி இருந்தா, நான் என்னை மன்னிச்சு இருக்கவே மாட்டேன், மறுபடி அந்த ரிஸ்க் எடுக்க கூடாதுன்னு தான்” வசீகரன் விளக்கவும் அவள் கண்கள் கலங்கி கண்ணீர் கசிந்து வழிந்தது.

 

“ஏய் ஏன் அழற இப்ப?” அவன் கண்டிக்க, ரம்யா அவன் மேல் சாய்ந்து உடைந்தழுது விட்டாள். அவள் தலையை வருடி விட்டவன், “புஷி, நீ வளரவே மாட்டியா? சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டு” எனவும், நிமிரந்தவள் புறங்கையால் கண்களை துடைத்துவிட்டு மூக்கை உறிஞ்சியபடி, “போடா, எவ்வளோ பெரிய விசயம், என்கிட்ட நீ சொல்லவே இல்ல. உன் பேச்சு கா” என்று உதடு பிதுங்கினாள்.

 

“உன்னைவிட எனக்கு வேறெதுவும் பெருசா தெரியலடி” என்று காதலாய் மொழிந்தவன் மார்பில் இருகைகளாலும் ஆவேசமாய் குத்தினாள் அவள்.

 

“ஏய் ராட்சசி, வலிக்குதுடி” அவள் கைகளை தடுத்து பிடித்து தன்னோடு இழுத்தணைத்துக் கொண்டான்.

 

வானில் அடைமழை மெல்ல மெல்ல குறைந்து இப்போது சாரல் மழை மட்டும் வீசுவதாய்.

 

“என்னை காதலிச்சு, ஆசைப்பட்டெல்லாம் கல்யாணம் பண்ணிக்கல, அப்புறம் ஏன் மாமு? இவ்வளோ செய்ற எனக்காக” ரம்யா அவனுள் அடங்கி போய் முணுமுணுத்தாள்.

 

“அப்ப உனக்கும், என்மேல ஆசை, காதல், கத்திரிக்கானு எதுவும் இல்லடி, அப்பவும் நான் சொன்ன ஒத்த வார்த்தைய நம்பி என்கூட வந்தியே… நீ என்மேல அந்த நம்பிக்கை வச்ச உனக்காக நான் எதுவேணாலும் செய்வேன்” என்றவனின் இறுகிய அணைப்பில் அவள் எலும்புகள் உடையும் சத்தத்தை உணர்ந்தாள் அவள்.

 

“மாமு வலிக்குது, கட்டிபிடிச்சே என்னை கொன்னுடுவ போல” என்று சிணுங்கியவளை சிரித்தபடி விடுவித்தான். 

 

“சும்மா டைட் ஹக் பண்ணதுக்கே கத்துற, நீ புள்ள பெத்துக்க போறீயா போடி” கிண்டலாக அவள் நெற்றியை நேட்டினான்.

 

“அப்ப, எனக்கு வேறவழி தெரியல, நீ கூப்பிட்ட நான் வந்துட்டேன். அதுக்காகவா இதெல்லாம் செய்ற?” ரம்யா விடாமல் கேட்க, “எதுவோ, நீ உன் பேமிலிய விட்டு என்னை நம்பி வந்தல்ல, அதுதான் முக்கியம், அப்படியொரு சிச்சுவேஷன் வராம இருந்தா நான் உன்ன மிஸ் பண்ணி இருப்பேன்டி” என்றான் ஆதுரமாய்.

 

“அட போடா, நான் மிஸ்ஸாகி இருந்தா, உன் டிரீம் கேர்ள் உன் மிஸ்ஸஸ் ஆகி இருப்பா, உனக்கு என்கிட்ட தான் சிக்கிக்கனும்னு தலைவிதி போல அனுபவி” என்றவள் காதை பிடித்து திருகியவன், “இந்த வாய் கொழுப்பு மட்டும் உனக்கு தீரவே தீராதாடி” என்றவன் அவளுக்கான பிரத்யேக தண்டனைகளை வழங்க, ரம்யா திணறி திக்குமுக்காடி விலகி மூச்சு வாங்கினாள்.

 

வசீகரன் “இப்படித்தான் உன் பக்கத்துல எப்பவுமே என் கன்ரோல் மிஸ் பண்ணிறேன். அதான் அத்தனை அவசரமா போய் ஆப்ரேஷன் பண்ணிட்டு வந்தேன் புரியுதா” மேலும் விளக்கம் தர, முகம் திருப்பி கொண்டவள், “ஆனாலும் நீ என்கிட்ட சொல்லாதது தப்பு தான்” என்று எழுந்துக் கொண்டாள்.

 

“ஓய், என் தப்புக்கு நான் கொடுத்தமாதிரியே தண்டனை கொடுத்துடு சரியா போச்சு” என்று குறும்போடு கண்சிமிட்டியவனை முறைக்க முயன்றவளால் அவன் நேசத்தின் ஆழத்தில் புதைந்து கொள்ள மட்டுமே முடிந்தது.

 

ஆதி காதல்

நமக்காக

கூத்து கட்டி 

கொஞ்சம்

கொண்டாடி

தீர்க்கட்டுமே!

 

***

 

(முற்றும்) 

 

(ஃபைனல் எபியில் கதை நிறைவு பெறாத உணர்வை தந்ததாக நிறைய வாசகர்கள் கேட்டதின் பேரில் இந்த பதிவை பதிவிடுகிறேன். தொடர்ந்து கதையை படித்து லைக்ஸ், கமென்ட்ஸ், விமர்சனங்கள் அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 🙏🙏🙏)